ஸ்ரீதேவி - ஜெயப்பிரதாவின் 25 ஆண்டு கால பனிப்போரும், நட்பும்..!

01-03-2018

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் புகைப்படத்திற்குப் பின்னால் 25 வருட கால ஒரு கசப்பான கதையும் இருக்கிறது.



1977-ல் ‘பதினாறு வயதினிலே’ வெளியாகி மாபெரும் வெற்றியைத் தொட்ட பின்பு இதே படத்தை அடுத்தாண்டிலேயே ஹிந்தியில் ‘Solva Sawan’ என்ற பெயரில் ரீமேக் செய்தார் இயக்குநர் இமயம் பாரதிராஜா. ஹிந்தியிலும் ஸ்ரீதேவியையே ஹீரோயினாக்கினார். கமல் வேடத்தில் அமோல் பலேகர் நடித்திருந்தார். படம் படு தோல்வி.

1979-ம் ஆண்டில் ‘Sargam’ என்கிற ஹிந்திப் படத்தில் ரிஷிகபூருக்கு ஜோடியாய் நடித்ததன் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகமானார் ஜெயப்பிரதா. படம் சூப்பர் ஹிட். ஓவர் நைட்டில் ஜெயப்பிரதா பாலிவுட்டுக்கு ராணியாகி கண் மை விளம்பரம், லக்ஸ் சோப் விளம்பரம் என்று அனைத்திலும் 5 வருட காலத்திற்கு ஒப்பந்தம் செய்யும் அளவுக்கு போய்விட்டார்.

ஸ்ரீதேவி 1983-ம் ஆண்டில் மீண்டும் ஹிந்தியில் கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் நடித்தார். அதுதான் ‘ஹிம்மத்தவாலா’. ஜிதேந்திரா ஹீரோவாக நடித்திருந்த இந்தப் படம் ஜித்துவுக்கும் சேர்த்தே ஒரு மிகப் பெரிய வாய்ப்பை கொடுக்கும் அளவுக்கு சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதன் மூலமாய் பாலிவுட் இப்போது ஸ்ரீதேவியின் பக்கமாய் திரும்பியது.

இருவருக்கும் திரைப்படங்கள் கிடைக்கும் வாய்ப்பு பெருக, பெருக இருவருக்குள்ளும் போட்டி, பொறாமைகளும் இருந்து கொண்டேயிருந்தன. இருவருக்குமே இள வயது வேறு. ஸ்ரீதேவியைவிடவும் ஜெயப்பிரதாவுக்கு 1 வயதுதான் அதிகம். இருவருமே அழகிலும், நடிப்பிலும், நடனத்திலும் சளைத்தவர்கள் இல்லை. ஒரேயொரு வித்தியாசம்தான். உயரம்.. ஜெயப்பிரதா, ஸ்ரீதேவியைவிடவும் கொஞ்சம் குள்ளம். அவ்வளவுதான்..!

அப்போதைய ஹிட் நடிகர்களாக இருந்த ஜிதேந்திரா, ராஜேஷ் கண்ணா படங்களில் மாறி மாறி ஸ்ரீதேவியும், ஜெயப்பிரதாவுமே நடித்தார்கள். ஜிதேந்திராவுடன் ஸ்ரீதேவி 18 படங்களிலும், ஜெயப்பிரதா 9 படங்களிலும் நடித்திருக்கிறார்கள்.

அப்போதைய வழக்கமான மீடியாக்களின் சிண்டு முடியும் வேலையில் சிக்கிக் கொண்டார்கள் இருவருமே. “உங்கள் இருவரில் யார் சிறந்த டான்ஸர்” என்று ஒரு பத்திரிகையில் கேட்க “இதிலென்ன சந்தேகம்.. நான்தான்...” என்று இருவருமே சொல்லி வைத்தாற்போல் சொல்லிவிட பற்றிக் கொண்டது ‘ஈகோ’ பிரச்சினை.

‘கேமிரா முன்பாக நிற்கும்போது அழகாக இருக்கும் ஒரே பெண் ஜெயப்பிரதாதான்’ என்று சத்யஜித்ரே அந்த நேரத்தில்தான் ஒரு பத்திரிகை பேட்டியில் சொல்லியிருக்க.. இதுவும் ஜெயப்பிரதாவுக்கு ‘கிக்’கை ஏற்றிவிட்டது.

‘நான் இயல்பாகவே அழகுதான். ஆனால் ஸ்ரீதேவி ஆபரேஷன் செய்துதான் அழகாகியிருக்கிறார்’ என்று ஒரு போடு போட்டார் ஜெயப்பிரதா. அதுவரைக்குமாச்சும் ‘ஹாய்.. ஹாய்..’ என்று செட்டில் பேசி்க் கொண்டிருந்த இருவருக்கும் இடையேயான பேச்சு அத்தோடு நின்று போனது.

அந்தக் காலக்கட்டத்தில் இருவரும் நிறைய படங்களில் சேர்ந்து நடித்தார்கள். ஆனால் பேசிக் கொள்ள மாட்டார்கள்.
நடிக்கும்போது நேருக்கு நேராய் பார்த்து வசனமெல்லாம் பேசுவார்கள். அக்கா, தங்கை என்றால் பாசத்தோடு கட்டிப் பிடித்துக் கொள்வார்கள். அதெல்லாம் ‘ஷாட் ஓகே’ என்று இயக்குநர் சொல்வதோடு முடிந்தது. அடுத்த நொடி ஆளுக்கொரு பக்கமாக போய் உட்கார்ந்து கொள்வார்கள்.
உடன் நடித்த நடிகர்கள் இதனை பத்திரிகைகளுக்கு பாஸ் செய்துவிட.. பத்திரிகைகள் வேண்டுமென்றே படத்தின் பிரமோஷனுக்கு உதவி செய்கிறோம் என்று சொல்லி இருவரையும் ஒன்றாக புகைப்படம் எடுக்க செட்டுக்கு வருவார்கள்.

புகைப்படம் என்றவுடன் ஒருவர் கையுடன் ஒருவர் கோர்த்துப் பிடித்து நிற்பார்கள். புகைப்படம் எடுத்தவுடன் அத்துக் கொண்டு ஆளுக்கொரு பக்கமாய் போய் அமர்வார்கள். இது அப்படியே ஒண்ணுவிடாமல் பத்திரிகைகளில் பதிவாகின.

அப்போதைய ‘பிலிம்பேர்’, ‘ஸ்கிரீன்’ போன்ற சினிமா பத்திரிகைகளுக்கு பக்கம், பக்கமாய் செய்திகளை வாரி வழங்கியவர்கள் இவர்கள் இருவரும்தான்..!

‘Maqsad’ படத்தின் படப்பிடிப்பின்போது அந்தப் படத்தின் ஹீரோக்களான ராஜேஷ் கண்ணாவும், ஜிதேந்திராவும் இவர்கள் இருவரையும் எப்படியாவது பேச வைத்துவிட வேண்டும் என்று நினைத்து நைச்சியமாக இருவரையும் தனித்தனியே பேசி மேக்கப் ரூமூக்குள் அழைத்து வந்து அமர வைத்துவிட்டு வெளியில் கதவை மூடிவிட்டு போய்விட்டார்களாம்..

அரை மணி நேரம் கழித்து வந்து பார்த்தால் அதே போல் எதிரெதிரே அமர்ந்தபடியே ஒரு வார்த்தைகூட பேசாமல் இருந்தார்களாம்.. இந்தக் கதையை ‘ஐயோடா சாமி’ என்று தலையில் அடித்துக் கொண்டு இப்போதும் சிரித்தபடியே சொல்கிறார் ஜிதேந்திரா.

1990-களில் பாலிவுட்டில் ஜெயப்பிரதாவைவிடவும், ஸ்ரீதேவிக்கான இயக்குநர்கள் கூட்டம் கூடி அவர்கள் ஸ்ரீதேவியை மொய்த்துக் கொண்டிருக்க தெலுங்கில் ஸ்ரீதேவிவிட்ட இடத்தை பிடிப்பதற்காக ஜெயப்பிரதா மீண்டும் ஹைதராபாத்துக்கே திரும்பிவிட்டார்.

அதோடு என்டிஆரின் கட்சியிலும் சேர்ந்து அரசியலிலும் குதித்துவிட. பாலிவுட்டில் ஸ்ரீதேவி கொடி கட்டிக் கொண்டிருந்தார்.

மாதுரி தீட்சித், பத்மினி கோலாப்பூரி, மீனாட்சி சேஷாத்திரி என்று பலரும் ஸ்ரீதேவி இடத்தை நிரப்ப தொடர்ந்து வந்ததால் அவர்களுடன் போட்டி போடுவதற்கே நேரமில்லாமல் போய் ஜெயப்பிரதாவை மறந்துவிட்டார் ஸ்ரீதேவி.

அதற்குள்ளாக அவரது தந்தை மற்றும் தாய் இருவரின் மரணமும் திரையுலகத்தில் இருந்து அவரை மெல்ல மெல்ல விலக்கி மெளனச் சாமியாராக்கிவிட்டது.

இந்தப் பக்கம் ஜெயப்பிரதாவும் தனது சொந்த வாழ்க்கையில் தப்பான முடிவை எடுத்து தயாரிப்பாளர் ஸ்ரீகாந்த் நகாதாவை கல்யாணம் செய்து கொண்டு அந்த அக்கப்போரில் இருந்ததால் அதிகம் டச் இல்லாமல் விட்டுப் போனது.

ஆனாலும் ஸ்ரீதேவியின் அப்பா, அம்மா இருவரின் மரணத்தின்போதும் ஜெயப்பிரதா ஓடோடி சென்று அஞ்சலி செலுத்துவிட்டு வந்தார். இதைப் பற்றி ஸ்ரீதேவியே “ஜெயப்பிரதா கண்களில் கண்ணீரோடு என் வீட்டில் நின்றிருந்ததை பார்த்தேன்...” என்று சொல்லியிருந்தார்.

இதற்கு பின்பு போனி கபூருடனான திருமணம், குழந்தைகள் என்று குடும்ப வாழ்க்கையில் ஸ்ரீதேவி பிஸியாகிவிட.. அந்தப் பக்கம் ஜெயப்பிரதா தன் திருமண வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு அமர்சிங்கின் வழிகாட்டுதலில் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்து தேசிய அரசியலில் காலெடியெடுத்து வைத்திருந்தார்.

ஒரு நல்ல சுப முகூர்த்த நாளில் ஜெயப்பிரதாவின் அரசியல் குருவான அமர்சிங், தனது பிறந்த நாள் விழாவில் ஸ்ரீதேவியையும், ஜெயப்பிரதாவையும் சந்திக்க வைத்து இருவருக்குமான 20 ஆண்டு கால மனக்கசப்பை நீக்கி பேச வைத்தார்.

முதலில் அரை மணி நேரமாக பேசியவர்கள் பின்பு மெல்ல, மெல்ல பேசத் துவங்கினார்கள். பத்திரிகைகள் பிளாஷ் அடித்தவுடன் “இனிமேல் உங்க பாச்சா எங்ககிட்ட பலிக்காது. நாங்கள் ஒருவரையொருவர் இப்போது முழுமையாகப் புரிந்து கொண்டோம். வம்பிழுக்க வேறு ஆளை பாருங்க..” என்று லக்னோ விமான நிலையத்தில் ஜெயப்பிரதாவின் தோளில் கை போட்டபடியே சொன்னார் ஸ்ரீதேவி.

கடந்த சில ஆண்டுகளில்தான் இருவரும் ஒருவரையொருவர் வெளிப்படையாக பாராட்டி பேசினார்கள். பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார்கள். ஜெயப்பிரதாவின் குடும்ப விழாக்களில் பங்கேற்க ஹைதராபாத்திற்கே வந்து சென்றார் ஸ்ரீதேவி.

இப்படி நட்பாக இருந்து வந்த இந்த நேரத்தில் நடந்திருக்கும் ஸ்ரீதேவியின் மரணம் நிசமாகவே ஜெயப்பிரதாவைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறது போலும்..!

நான் பார்த்த அஞ்சலி பேட்டிகளில் அதிர்ச்சியான முகமாக தென்பட்டது ஜெயப்பிரதாவின் அஞ்சலிதான்..!

ஜெயப்பிரதாவுக்கென்று இருந்த ஒரேயொரு போட்டியாளரும், நண்பியும்தான் இப்போது இல்லையே..!?

இருக்காதா பின்ன..?

0 comments: