சொல்லி விடவா - சினிமா விமர்சனம்

13-02-2018

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் நடிகர் அர்ஜூனின் இளைய மகளான நிவேதிதா அர்ஜுன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
படத்தில் சந்தன் குமார் என்கிற புதுமுகம் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். நாயகியாக அர்ஜூனின் மூத்த மகளான ஐஸ்வர்யா அர்ஜுன் நடித்துள்ளார். மேலும், கே.விஸ்வநாத், சுகாசினி மணிரத்னம், பிரகாஷ்ராஜ், மொட்டை ராஜேந்திரன், சதீஷ், யோகிபாபு, மனோபாலா இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் அர்ஜுனும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – எச்.சி.வேணுகோபால், இசை – ஜாஸி கிப்ட், படத் தொகுப்பு – கே.கே., பாடல்கள் – மதன் கார்க்கி, விவேகா, பா.விஜய், நடனம் – சின்னி பிரகாஷ், கணேஷ் ஆச்சார்யா, பூனம், பிரியங்கா, சண்டை இயக்கம் – கிக்காஸ் காளி, மக்கள் தொடர்பு –நிகில், எழுத்து, இயக்கம் – அர்ஜூன்.

அறிமுக நாயகனான சந்தன் குமாருடன் தனது மகள் ஐஸ்வர்யாவை நடிக்க வைத்து, தானே இயக்கி தயாரித்து வெளியிட்டிருக்கிறார் ஆக்சன் கிங் அர்ஜூன்.
சிறு வயதிலேயே ஒரு விபத்தில் பெற்றோரை இழந்த ஐஸ்வர்யா, தனது தாத்தா கே.விஸ்வநாத்தின் அரவணைப்பில் வளர்ந்தவர். இப்போது புகழ் பெற்ற ஒரு தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகப் பணியாற்றி வருகிறார்.
இவருடைய குடும்ப நண்பரான சுஹாசினி மிகப் பெரிய தொழிலதிபர். இவருடைய கணவரும் ஐஸ்வர்யாவின் பெற்றோர் இறந்த அதே விபத்தில் பலியானார் என்பதால் குடும்ப நண்பர் என்ற முறையில் மிக நெருங்கிய பழக்கத்தில் ஐஸ்வர்யாவுடன் பழகி வருகிறார். சுஹாசினியின் ஒரே மகன் மிகப் பெரிய தொழிலதிபர். அவருக்கு ஐஸ்வர்யாவை திருமணம் செய்துவைக்க சுஹாசினி நினைக்கிறார். இதனை ஐஸ்வர்யா தாத்தாவுக்காக ஏற்றுக் கொள்கிறார்.
இந்த நேரத்தில் நாயகன் சந்தனுடன் சில இடங்களில் ஐஸ்வர்யாவுக்கு மோதல் ஏற்படுகிறது. இருவரும் வேறு வேறு தொலைக்காட்சிகளில் பணியாற்றி வருவதால் அந்த ஈகோவும் சேர்ந்து கொள்ள.. பகையுணர்வுடனேயே பழகி வருகின்றனர்.
ஐஸ்வர்யாவை கட்டாயப்படுத்தி சுஹாசினியின் மகனுடன் நிச்சயத்தார்த்தம் செய்து விடுகின்றனர். இந்த நேரத்தில் கார்கில் யுத்தம் துவங்குகிறது. அந்த யுத்தத்தை காவரேஜ் செய்ய சொல்லி வைத்தாற்போல் இரண்டு டிவிக்காரர்களும் தங்களது ஆட்களை அனுப்ப முடிவு செய்கிறார்கள்.
இதன்படி ஐஸ்வர்யாவும், சந்தன் குமாரும் தத்தமது குழுவினருடன் கார்கில் பயணப்படுகிறார்கள். ஆனால் உடன் அழைத்துச் சென்றவர்களை ‘கார்கில் போகிறோம்’ என்று சொல்லாமல் அழைத்துச் சென்றதால், உண்மை தெரிந்தவுடன் அவர்களெல்லாம் பாதியிலியே திரும்பிச் சென்றுவிடுகிறார்கள்.
இப்போது ஐஸ்வர்யாவும், சந்தன் குமார் இருவர் மட்டுமே கார்கில் களத்திற்குள் கால் வைக்கிறார்கள். இதனுடன் சந்தனின் கேமிராவும் பேருந்தில் உடைந்துவிட்டதால் இருக்கின்ற ஒரேயொரு கேமிராவை வைத்துதான் இரண்டு டிவிக்களுக்கும் நியூஸ் காவரேஜ் செய்ய வேண்டிய கட்டாயம்.
இந்தப் போர்க்களத்தில் இருவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுகிறார்கள். ஒருவரையொருவர் புரிந்து கொள்கிறார்கள். இருவரின் அலைவரிசையும் ஒன்றாக இருப்பதை தெரிந்து கொள்கிறார்கள். கார்கில் போர் நின்றவுடன் இருவரும் திரும்பி சென்னைக்கு வருகிறார்கள்.
சென்னைக்கு வந்தவுடன் ஐஸ்வர்யாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. ஆனால் இருவருக்குக்குள்ளும் ஒருவரையொருவர் காதலிக்கும் உணர்வுகள் இருப்பதால் அவர்களுக்குள் தடுமாற்றம் ஏற்படுகிறது. ஆனால் எதுவுமே சொல்லாமலேயே இருக்கிறார்கள். முடிவு என்னவாகிறது என்பதுதான் இந்த ‘சொல்லி விடவா’ படத்தின் திரைக்கதை.
புதுமுகம் சந்தன் குமார் தோற்றப் பொலிவாக ஹீரோவாக இருக்கிறார். சொல்லிக் கொடுத்ததை பேசி நடித்திருக்கிறார். ஏதாவது ஸ்பெஷலாட்டி இல்லையேல் இங்கே பிழைக்க முடியாது என்பது இயக்குநர் நிச்சயமாக அவரிடத்தில் சொல்லியிருப்பார்.
இந்தக் கேரக்டருக்கு வஞ்சகம் செய்யாமல் நடித்திருக்கிறார். அர்ஜூனின் சிறப்பான இயக்கத்தினால் காமெடிகூட இவருக்கு செட்டாகும் அளவுக்கு டைமிங்சென்ஸில் வசனங்களை உதிர்த்திருக்கிறார். வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
ஐஸ்வர்யா அர்ஜூனை 15 அல்லது 16 வயதிலேயே பீல்டுக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். இவ்வளவு தாமதமாக வந்திருப்பதுதான் பிரச்சினை. பிரமாதமாக நடனமாடுகிறார். குளோஸப் காட்சிகளில் அத்தனை அழகாய் தெரிகிறார். அட்சர சுத்தமாக நடிக்கவும் செய்திருக்கிறார்.
தாத்தாவுடனான அவருடைய பாசப் பேச்சுக்கள் அனைத்துமே மிக ரசனையானவை. அத்தனை அழகாய் பாந்தமாய் வசனங்களை உதிர்த்திருக்கிறார். “மாத்திரை சாப்பிட்டியா..?” என்று அக்கறையாய் விசாரித்து உரிமையோடு தாத்தாவை “வா.. போ..” என்றெல்லாம் சொல்லி அழைக்கும் அந்த பேத்தி-தாத்தா உறவை மிக அழகாக வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் அர்ஜூன். படத்திலேயே மிகவும் பிடித்தது இந்தக் காட்சிகள்தான்.!
அதிலும் இரண்டு முறைகள் இடம் பெற்றிருக்கும் கேள்வி கேட்கும் காட்சிகள் ரொம்பவே ஷார்ப்னஸ். குடும்பங்களில், தலைமுறை இடைவெளி உள்ள இடங்களில் இது போன்று பேச வேண்டியவிதத்தில் பேசினால்தான் காரியம் கைகூடும் என்பதற்கு இந்த கேள்வி-பதில் சீஸன் சுட்டிக் காட்டுகிறது. படம் பார்க்க வந்த ரசிகர்களும் இதனை தாராளமாகப் பின்பற்றலாம்..!
அர்ஜூன் படம் என்று சொன்ன பிறகு தேச பக்தி இல்லாமலா போகும்..? கார்கில் போரை பற்றி எடுத்துச் சொல்லி மறந்து போயிருக்கும் இந்தியர்களுக்கும், தெரியாமல் பிறந்திருக்கும் புதிய இளைஞர்களுக்கும் வகுப்பு எடுத்துச் சொல்லிக் கொடுக்கிறார்.
ஆனால் போர்க்களக் காட்சிகள்தான் கொஞ்சம் சுவையில்லாமலும், சுவாரஸ்யமில்லாமலும் இருக்கின்றன. இது போன்ற போர்க்களக் காட்சிகளை படமாக எடுத்தால் பணத்தைத் தண்ணீராகத்தான் செலவு செய்தாக வேண்டும். இல்லையேல் வேலைக்கு ஆகாது. இதனை அர்ஜூன் இப்போது புரிந்து கொண்டிருப்பார் என்று நினைக்கிறோம்.
கே.விஸ்வநாத் இந்தத் தள்ளாத வயதிலும் தாத்தா கேரக்டரில் அசத்தியிருக்கிறார். சுஹாசினிக்கு ஒரு வலுவான கதாபாத்திரம். கிளைமாக்ஸில் ஹீரோயின் ஒன்று நினைத்திருக்க.. அவர் ஒரு கதையைச் சொல்லும்போது ‘அட’ என்று திரைக்கதையிலும் ஜே போட வைத்திருக்கிறார் இயக்குநர். இந்த இடத்தில் சுஹாசினின் பண்பட்ட நடிப்பு யதார்த்தமாக இருப்பதால் முற்றிலும் கவர்ந்திழுக்கிறது..!
உத்திரப்பிரதேசத்தில் இருந்து ராணுவத்தில் வந்து சேர்ந்து இப்போதுவரையிலும் டீ ஆற்றிக் கொடுக்கும் அந்த வயதான வீரரும், போர்க்களத்தில் பணியாற்றிய நடிகர், நடிகையரும் கவர்ந்திழுப்பதை போலவே நடித்திருக்கிறார்கள்.
அர்ஜூனும் தனது பங்குக்கு தனது மானசீக குருவான அனுமான் புகழ் பாடி ஒரு பாடல் காட்சியில் தோன்றி ஆடி, நடித்திருக்கிறார்.
கார்கிலுக்கு பயணமாகும் அந்த ரயில் பயணக் காட்சிகளை மிகவும் சுவையாகவும், ரசனையாகவும் மேக்கிங் செய்திருக்கிறார் இயக்குநர் அர்ஜூன்.  
எச்.சி.வேணுகோபாலின் ஒளிப்பதிவில் கார்கில் இடங்களை அழகுற படமாக்கியிருக்கிறார்கள். போர்க்களக் காட்சிகளை தொழில் நுட்பத்தின் உதவியுடன் கொஞ்சம் மிரட்டலாக வழங்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். பாடல் காட்சிகளிலும், சில பல காட்சிகளும் ஐஸ்வர்யாவின் அழகை அட்டகாசமாக பதிவாக்கியிருக்கிறது கேமிரா. இதற்காக அவருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
ஜாஸி கிப்டின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஆட வைக்கும் ரகமும்கூட.. பிற்பாதியில் கார்கில் போர்க் களக் காட்சிகளுக்காக பின்னணி இசையில் அடித்துத் தூள் பறத்தியிருக்கிறார் ஜாஸி.
பிளாஷ்பேக் வகையில் படத்தின் கதையைச் சொல்லியிருப்பதால் படத்தின் முடிவான காட்சிக்கு, மரியாதை தரும்வகையில் படத்தை நிறைவு செய்திருக்கிறார் இயக்குநர்.
காதல், மோதல், குடும்பம், கொஞ்சம் நகைச்சுவை, கூடவே தேச பக்தி, கடவுள் பக்தி எல்லாவற்றையும் ஒன்றாக வைத்து ஒரு ஜூகல் பந்தியே செய்திருக்கிறார் இயக்குநர் அர்ஜூன்.
கடைசிவரையிலும் காதலை இருவருமே சொல்லாமலேயே நேரத்தை ஓட்டுவதால்தான் படத்தின் தலைப்பை ‘சொல்லி விடவா’ என்று வைத்திருக்கிறார்கள்..! இதைத் தெரிந்து கொள்ளவும் கிளைமாக்ஸ்வரைக்கும் காத்திருக்க வேண்டியிருக்கிறது..!
கார்கில் போரை தவிர்த்துவிட்டு காதலை மட்டுமே மையமாக வைத்து படமாக்கியிருந்தால், படம் இதைவிடவும் படம் இருந்திருக்கும்..!
இப்போது ஒரு முறை பார்க்கலாம் என்கிற கிளப்பில் இந்தப் படம் இடம் பிடித்திருக்கிறது..!

0 comments: