கேணி - சினிமா விமர்சனம்

26-02-2018

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஃப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் சஜீவ் பீ.கே, ஆன் சஜீவ் இருவரும் இந்தப் படத்தை ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் தயாரித்துள்ளனர்.
பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகைகள் ஜெயப்பிரதா, ரேவதி, ரேகா, அனு ஹாசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் பார்த்திபன் மற்றும் நாசர் நடிக்க, இவர்களுடன் ஜாய் மேத்யூ, பார்வதி நம்பியார், எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – நெளஷாத் ஷெரிப், இசை – எம்.ஜெயச்சந்திரன், பின்னணி இசை – சாம் சி.எஸ்., படத் தொகுப்பு – ராஜா முகம்மது, வசனம் – தாஸ் ராம்பாலா, பாடல்கள் – பழனிபாரதி, நடனம் – தினேஷ், கதை, திரைக்கதை, இயக்கம் – எம்.ஏ.நிஷாத், தயாரிப்பு – சஜீவ் பீ.கே., ஆன் சஜீவ். 
முழுக்க முழுக்க கேரளா – தமிழ்நாடு எல்லையில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு, தற்போது இந்த தேசத்தில் முக்கிய பிரச்சனையாக இருக்கக் கூடிய தண்ணீர்த் தட்டுப்பாடு குறித்து பேசுகிற படம் இது.

மூன்று தனியார் டிவி சேனல்களில் மக்களுக்காக உழைத்த ஒரு தனி மனித ஆளுமையைத் தேடியலைகிறார்கள். அப்படியொரு கதையை நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மூன்று பேர் தேடுகிறார்கள். அவர்களிடத்தில் அந்தக் கதையின் நாயகி யார் என்பது மூன்று நபர்களால் ஒருவருக்கொருவர் யாரென்று தெரியாமலேயே சொல்லப்படுகிறது.
இந்த மூன்று நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும் அந்தக் குறிப்பிட்ட நபரைப் பார்த்து அவரைப் பற்றிய செய்திகளை அறிந்து அதனை செய்தியாக்குவதற்காக சென்னையில் இருந்து கிளம்பி வருகிறார்கள். இவர்கள் மூவருக்குமே அவர்கள் தேடி வருவது ஒரே ஆளைத்தான் என்பது தெரியாது என்பதுதான் இதில் விசேஷமே..!
இவர்கள் தேடி வரும் அந்த ஆளுமை இந்திரா. சாதாரண குடும்பப் பெண்மணி. அவருக்கு ஒரு சோகமான பின்னணி கதை உண்டு.
இந்திரா என்னும் ஜெயப்பிரதாவின் கணவர் ஜான் மேத்யூ கேரளாவில் கனிம வளத் துறையில் உயரதிகாரியாக இருக்கிறார். அங்கே அரசியல்வாதிகள் கேட்டதை போல ஒரு முறைகேட்டை செய்ய மறுத்ததினால் அவருடைய அலுவலக  பெண் ஊழியராலேயே பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி ஜெயிலுக்குப் போகிறார்.
ஜாமீனில் வெளிவந்த அவருக்கு மேலும் சோதனைகள் தொடர்கின்றன. அவரைச் சந்திக்க வந்த அவருடைய குடும்ப நண்பர் தேடப்படும் மாவோயிஸ்ட் என்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்தமைக்காக திரும்பவும் கைது செய்யப்பட்டு அவசரக் காலச் சட்டத்தின் கீழ் சிறையில் வைக்கப்படுகிறார்.
இந்த வழக்கில் ஜாமீன் கிடைப்பது கஷ்டம் என்பதால் தனது மனைவி ஜெயப்பிரதாவை தமிழக எல்லையில் இருக்கும் புளியன் மலை என்ற தனது சொந்தக் கிராமத்திற்கு போகச் சொல்கிறார் ஜான் மேத்யூ. ஆனால் போக மறுக்கிறார் ஜெயப்பிரதா.
இதே நேரம் மாவோயிஸ்ட் என்கிற பெயரில் ஒரு இளைஞனும் கைது செய்யப்படுகிறான். அவனது மனைவியான பார்வதி நம்பியாரின் அழகில் மயங்கிய அந்த ஊர் இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு வந்து ஜொள்ளுவிடுகிறார். பேரனின் மனைவியைக் காப்பாற நினைக்கிறார் அந்த இளைஞனின் தாத்தா.
இந்த இரண்டு வழக்குகளுக்கும் ஒரே வக்கீல்தான் என்பதால் ஜெயப்பிரதாவும், பார்வதி நம்பியாரும் சந்திக்கிறார்கள். ஜெயப்பிரதா தனது கணவரை சிறையில் சந்தித்தபோது அவர் திடீரென்று மாரடைப்பால் காலமாகிறார். இனிமேலும் இந்த ஊரில் இருப்பது தேவையில்லாதது என்பதால் தன் கணவர் விருப்பப்படியே அவரது சொந்த ஊரான புளியன் மலைக்குச் செல்ல நினைக்கிறார் ஜெயப்பிரதா.
அந்த நேரத்தில் தனது பேத்தியையும் உடன் அழைத்துச் செல்லும்படி தாத்தா கேட்டுக் கொள்ள பார்வதியையும் அழைத்துக் கொண்டு புளியன் மலைக்கு வருகிறார் ஜெயப்பிரதா.
அங்கே அவரது வீடு இருக்கும் பகுதி தமிழகத்திலும், அவருக்குச் சொந்தமான வற்றாத தண்ணீரைக் கொண்டிருக்கும் கேணி கேரளப் பகுதியிலும் இருக்கிறது.
அந்த ஊரில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம். தண்ணீர் அதிகமாக குடிக்காததால் அந்த ஊரில் இருக்கும் சின்னப் பிள்ளைகளுக்கு உடம்பெல்லாம் எரியும் ஒருவிதமான நோய் ஏற்பட்டிருக்கிறது. அதே ஊரிலேயே வசிக்கும் அனுஹாசனின் பையனுக்கும் அந்த நோய் பீடிக்கிறது. இதனால் அவஸ்தைப்படும் அனுஹாசன் அந்த தண்ணீர்ப் பிரச்சினையோடு தனது மகனின் நோய்ப் பிரச்சினையையும் தீர்க்க படாதபாடுபடுகிறார்.
வற்றாத தண்ணீர் ஜெயப்பிரதாவின் கிணற்றில் இருப்பதால் அங்கே தண்ணீர் எடுக்க முயலும் கிராமத்து மக்களை கேரளத்து அரசியல்வாதிகள் தடுக்கிறார்கள். ஜெயப்பிரதாவுக்கே தண்ணீர் இல்லை என்கிறார்கள். ஊர்ப் பெரியவரான சக்திவேல் என்னும் பார்த்திபனின் உதவியோடு அப்போதைக்கு அந்தப் பிரச்சினையை சமாளிக்கிறார் ஜெயப்பிரதா.
இதற்கிடையில் குமரி மாவட்ட கலெக்டரான ரேவதியை சந்தித்து தனது நிலையை எடுத்துச் சொல்கிறார் ஜெயப்பிரதா. ஆனால் ரேவதியோ அந்தக் கிணறு இருக்கும் பகுதி கேரளாவுக்கு போய்விட்டதால் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்கிறார். கேரளப் பகுதி கலெக்டரோ, “ஒரு சொட்டுத் தண்ணீரைகூட தமிழகத்துப் பகுதி மக்களுக்குத் தர முடியாது…” என்கிறார்.
இதனால் வேறு வழியில்லாமல் நீதிமன்றத்திற்குச் செல்கிறார் ஜெயப்பிரதா. கேரளத்து நீதிமன்றமோ “ஜெயப்பிரதா தண்ணீரை எடுக்கலாம். ஆனால் அதனை கேரளப் பகுதியில்தான் பயன்படுத்த வேண்டு்ம்…” என்று வினோதமான தீர்ப்பை வழங்குகிறது. இதனால் கிணற்றின் அருகேயே குடிசை போட்டு அதில் தண்ணீரை புழங்கி வருகிறார் ஜெயப்பிரதா.
இன்னொரு பக்கம் புளியன் மலை கிராமத்து மக்களை அங்கேயிருந்து விரட்டியடித்து அந்த இடத்தில் பேக்டரி கட்ட தமிழகத்து அமைச்சர் திட்டமிடுகிறார். இதற்காக சட்டமன்ற உறுப்பினருடன் சேர்ந்து திட்டம் தீட்டுகிறார். ஆனால் ஊர்ப் பஞ்சாயத்து தலைவரான பார்த்திபன் இதை எதிர்க்கிறார்.
இன்னொரு பக்கம் கேரளத்து அரசியல்வாதிகளும் அந்தக் கிணற்றை மூடிவிட்டு அந்த இடத்தை ஜெயப்பிரதாவிடமிருந்து கைப்பற்ற இன்னொரு பக்கம் திட்டம் தீட்டுகிறார்கள்.
புளியன் மலை கிராமத்து மக்களோட அரசு அதிகாரம், அதிகாரத் தரகர்கள், ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோரத சதித்திட்டம் தெரியாமல் தண்ணீரைத் தேடி நாயாய், பேயாய் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
ஜெயப்பிரதாவோ எப்படியாவது தனது கிணற்றில் இருந்து ஊர் மக்களுக்கு தண்ணீரைக் கொடுத்துவிட வேண்டும் என்று போராடி வருகிறார்.
முடிவு என்ன ஆகிறது என்பதுதான் இந்தக் கேணி படத்தின் திரைக்கதை.
1952-ம் ஆண்டு மொழி வாரி மாகாணங்கள் பிரிப்பின் அடிப்படையில் சென்னை ராஜதாணியின் கீழ் இருந்த ஆந்திரா, கர்நாடகா, கேரளா பகுதிகள் தனித்தனி மாநிலங்களாக உருவெடுத்தன.
இருந்தாலும் இவற்றின் எல்லை பிரச்சினைகள் தீர்க்க முடியாதபடியிருந்தன. தமிழக கேரள எல்லையில் குமுளி அருகேயிருந்த வண்டி பெரியாறு, தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழகம் கேட்டது. இந்தப் பகுதியில்தான் இடுக்கி மாவட்டமும், முல்லை பெரியாறு அணையும் இருந்தது. முல்லை பெரியாறு அணைதான் தென் தமிழகத்தை வாழ வைத்துக் கொண்டிருந்த அணைக்கட்டு. முல்லை பெரியாறு அணையின் தண்ணீரால் அதிகமாக செழித்துக் கொண்டிருந்தது தமிழகம்தான். இந்த உரிமையோடு இந்தப் பகுதிகள் கேட்கப்பட்டன.
ஆனால் அப்போதைய மத்திய அரசின் ஓர வஞ்சனையால் தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் கேரளத்துடன் இணைக்கப்பட்டதால் தேக்கடிகூட தமிழகத்தின் கையைவிட்டுப் போய்விட்டது. இந்த இணைப்பை அப்போதைய தமிழகத்து தலைவர்கள் புரிந்து கொண்டு செயல்படுத்தியிருந்தால், இந்நேரம் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை இருக்கவே இருக்காது..!
இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகம் கைப்பற்றினாலும் இதன் கூடவே இருந்த நெய்யாற்றின்கரை பகுதிகள் கேரளாவுடன் இணைக்கப்பட்டன. கோவை அருகில் இருக்கும் ஊட்டி, கூடலூரை கூட மலையாளிகள் கேட்டார்கள். ஆனால் அந்தப் பகுதி மக்களின் கடும் எதிர்ப்பால் மட்டுமே அது தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.
இதேபோல் ஆந்திராவுடனான எல்லை பிரச்சினையில் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானத்தின் கடுமையான போராட்டத்தின் விளைவாகத்தான் சித்தூர் மாவட்டம் நம் கையைவிட்டுப் போனாலும் திருத்தணி தமிழகத்தோடு சேர்க்கப்பட்டது.
இப்படி மாகாணப் பிரிப்பிலேயே தமிழகம் வஞ்சிக்கப்பட்டது என்பது உண்மை. அந்த உண்மைக் கதையில் கொஞ்சம் கற்பனையைக் கலந்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.
இந்தியாவின் பேரழகியான ஜெயப்பிரதா இந்திரா என்னும் மையக் கதாபாத்திரத்தைத் தாங்கி நடித்திருக்கிறார். என்றாலும், படத்தில் நாயகி போல் நடித்திருப்பது அனுஹாசன்தான்.
அவர்களது குடும்பத்திற்கே உரித்தான நடிப்பும், அந்தக் குரலும் அவருக்கு மிகப் பெரிய பலமாக அமைந்திருக்கிறது. தாமதமாக ஓட்டி வரும் தண்ணீர் லாரிக்காரனை பார்த்து சவுண்டுவிடும் அந்த உதார் ராணி ஸ்டைலில் கலக்குகிறார் அனுஹாசன்.
தனது மகனுக்காக தண்ணீரைத் தேடியலையும் காட்சியில் அவர் காட்டியிருக்கும் நடிப்பில் சிறிதும் குறைவில்லை. ஒரு மத்திய தர வயதுடைய தாய் எப்படியிருப்பாரோ அதை அப்படியே கண் முன்னே காட்டியிருக்கிறார் அனுஹாசன். இன்னமும் சிறப்பான முறையில் இயக்கம் செய்திருந்தால் அனுஹாசனின் நடிப்பு மேலும் வெளிப்பட்டிருக்கும்.
ஜெயப்பிரதாவுக்கு அமைதியான வேடம். ஒரேயொரு காட்சியில் மட்டுமே அமைச்சரிடம் கோபாவேசமாக பேசுகிறார். மற்றபடி அவருடைய பேச்சும், நடத்தையும், ஆக்சன்களும் சாந்த சொரூபியாகவே இருக்கின்றன. வயது ஒரு அழகியை எப்படி ஈவிரக்கமில்லாமல் அழித்திருக்கிறது என்பதற்கு ஜெயப்பிரதாவின் இந்த அழகே சாட்சி..!
நக்கல் மன்னன் பார்த்திபன் அந்த ஊர்ப் பஞ்சாயத்து தலைவராக வருகிறார். சில சில பன்ச் டயலாக்குகளையும், பாண்டி என்று தமிழகத்து மக்களை கிண்டல் செய்யும் கேரளத்தவர்களை வார்த்தைகளால் துவம்சம் செய்திருக்கிறார். டீக்கடை நாயரை ஊரைவிட்டு காலி செய்யச் சொல்லுமிடத்தில் நாயர்களின் வரலாற்றையே சொல்லி கம்பீரமான இந்தியனாகிறார் பார்த்திபன்.
பார்வதி நம்பியாருக்கு சின்ன வேடம்தான். சில வசனங்கள்தான் என்பதால் குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றுமில்லை. கலெக்டர் ரேவதி, அமைச்சர் தலைவாசல் விஜய்யுடன் பேசும்போது மட்டும் மிளிர்கிறார். நீதிபதியான ரேகா மிக இயல்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். ரேகா பேசும் சில வசனங்களால் கோர்ட் நடைமுறைகள் மிக எளிய முறையில் விளக்கப்பட்டிருக்கின்றன.
ஜெயப்பிரதாவின் கணவராக நடித்திருக்கும் ஜான் மேத்யூ, டீக்கடை நாயர், அவரது கடையில் அலப்பறை செய்து கொண்டிருக்கும் சாம்ஸ்.. இந்த அக்கப்போரில் அவ்வப்போது கலந்து கொள்ளும் ‘பிளாக்’ பாண்டி என்று பலரும் படத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள். டீக்கடை காட்சிகளை கொஞ்சம் நறுக்கியிருந்தால் தேவலை.
நீதிமன்றக் காட்சிகளில் நாசர் பேசும் பல வசனங்களும், எதிர் வழக்கறிஞரின் வாதங்களும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. ‘தண்ணீர், தாகம் இது இரண்டுமே மனிதர்களின் இயற்கையான பிரச்சினை. இதனை தேசம், மாநிலமாய் பார்க்காமல் தீர்த்து வைக்க வேண்டியது மனிதப் பண்பு’ என்று நாசர் சொல்லுமிடத்தில் வசனகர்த்தாவுக்கு ஒரு சபாஷ் போடலாம்..!
பட்டப் பகலிலேயே இளநீரில் கட்டிங்கை கலந்து குடித்துவிட்டு அலப்பறை செய்யும் எம்.எஸ்.பாஸ்கர், கேரளாவில் இருந்து வரும்போது  கள்ளு ஒரு பாட்டிலை கொண்டு வரும்படி கேட்பதெல்லாம் டூ மச்சாக இல்லையா..? தமிழகத்து டிவிக்காரங்களையே அமோகமாக வாரிவிட்டிருக்கிறார் இயக்குநர்..!
கேணியின் பாதுகாப்புக்காக வந்திருக்கும் இடத்தில் தமிழகத்து போலீஸ்காரரின் பாட்டில் பார்ட்டிக்கு கேரளத்து போலீஸ்காரர் காட்டும் ரியாக்ஷனும் நடிப்பும் சற்றே காமெடியை வரவழைத்திருக்கிறது. இதற்கு மட்டும் கேரள போலீஸ்காரர் தண்ணீர் எடுக்க சம்மதிப்பதுபோல காட்சியமைத்திருப்பது இயக்குநரின் தைரியத்தைக் காட்டுகிறது.
முழுக்க, முழுக்க கேரளாவிலேயே ஷூட் செய்திருப்பதால் காட்சிகள் திரையில் தோன்றும் அழகுக்கு குறைவில்லாமல்தான் இருக்கிறது. ஒளிப்பதிவாளர் நெளஷத்தின் கழுகுப் பார்வையில் வறண்ட பாலைவனப் பகுதியையும் இன்னொரு பக்கம் செழுமையாக இருக்கும் பகுதியையும் ஒரு சேர காட்டியிருக்கிறார்கள்.
50-களை கடந்த நடிகர், நடிகையரே அதிகம் பேர் படத்தில் நடித்திருப்பதால் அவர்களின் அழகுக்குப் பங்கம் வராதவகையில் குளோஸப் காட்சிகளை அமைத்து அவர்களையும் காப்பாற்றி நம்மையும் காப்பாற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். இதற்காக அவருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றிகள்..!
‘தளபதி’ படத்திற்கு பிறகு ‘கானக் குரலோன்’ கே.ஜே.ஜேசுதாஸும், ‘பாடும் நிலா’ எஸ்.பி.பியும் “அய்யா சாமி நாமளொண்ணே சாமி” என்ற பாடலை படத்தின் விளம்பரத்திற்காக பாடிக் கொடுத்திருக்கிறார்கள். பாடலும், பாடல் காட்சியும் அருமை. நடனம் அதைவிட அழகு..!
‘கலையும் மேகமே’, ‘வெந்திடும் பூமி’ என்று மேலும் இரண்டு பாடல்களையும் அழகாக மெட்டமைத்து இசைத்திருக்கிறார் ஜெயச்சந்திரன். பாடல்கள் தரும் சோகத்தைவிடவும் காட்சிகள் தரும் சோகம்தான் அதிகமாக இருந்திருக்க வேண்டும். அது இங்கே மிஸ்ஸிங்..!
மூன்று தொலைக்காட்சியினரும் தேடி வரும் அளவுக்கு இந்திரா என்னும் அந்தக் கேரக்டர் மிகப் பெரிய சேவையைச் செய்திருக்க வேண்டும். ஆனால் படத்தில் காட்டப்பட்டது அந்த அளவுக்கு இல்லை என்பதுதான் சோகமான விஷயம்.
படம் முழுவதும் மெதுவாக, அமைதியாக, சாந்த சொரூபியாகவே அலைந்து திரியும் இந்திராவுக்கு உதவி செய்ய அந்த ஊர் ஆண்கள்கூட போகவில்லை. அவராகவே பத்திரப் பதிவு அலுவலகம், கலெக்டர் அலுவலகம், கோர்ட் என்று அனைத்திற்கும் நாயாய் அலைகிறார். ஆனால் அவருடைய இந்த நடிப்பு எதுவும் படம் பார்க்கும் ரசிகனிடத்தில் ஒரு பரிதாப உணர்வையோ, போராட்ட காட்சியையோ உருவாக்கவில்லை என்பது மட்டும் திண்ணம்.
மந்திரியின் காரை வழிமறித்து தங்களது ஊருக்கு தண்ணீர் கேட்கிறார்கள் மக்கள். அந்த நேரத்தில் மட்டுமே பொங்கி எழுந்த கண்ணாம்பாவாக பேசுகிறார் இந்திரா. இந்த ஒரு காட்சியே இவருக்கான பெருமைக்கு போதுமானதா என்பதை இயக்குநர் யோசித்திருக்க வேண்டும்..!
இந்திராவின் கேரக்டர் ஸ்கெட்ச்சை இன்னமும் வலுவானதாக மாற்றியிருந்தால் படம் இன்னமும் ஈர்ப்பாக இருந்திருக்கும்..! அவரது முன் கதைச் சுருக்கம்கூட தேவையில்லாதது. கணவர், ஜெயில் என்கிற விஷயமே இல்லாமல் முழுக்க, முழுக்க கேணியைச் சுற்றியே கதை பின்னப்பட்டிருந்தால் படம் இதைவிட சிறப்பானதாக இருந்திருக்கும்..!
சாதாரணமாக இப்போதும் கேரளத்து நாயர்கள் தமிழகத்துக்குள் வந்து டீக்கடை வைத்தும், வேலை பார்த்தும், தமிழகத்து பெண்களும், ஆண்களும் கேரளத்து தோட்டங்களில் கூலி வேலைக்குப் போய்விட்டு இரவில் தமிழகத்தில் இருக்கும் தங்களது வீட்டுக்குள் வருவதுமாக இருக்கும்போது “தண்ணீர் மட்டும் அள்ளக் கூடாது…” என்று சொல்ல முடியுமா..? இந்த மிகப் பெரிய லாஜிக் எல்லை மீறலை இயக்குநர் ஏன் கவனத்தில் கொள்ளாமல் விட்டுவிட்டார் என்று தெரியவில்லை..! அதிலும் நீதிமன்றத்தில் அப்படியொரு கேணத்தனமான தீர்ப்பு வரும் என்று யாருமே நம்பிவிட மாட்டார்கள்.
ஆனால் இயக்குநர் இப்போது தமிழகம், மற்றும் கேரளாவில் நடைபெற்றுவரும் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையை மறைமுகமாக வைத்து இந்தப் படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார் என்றால் இது நிச்சயமாக பாராட்டத்தக்கதுதான்.
இ்ப்போது முல்லை பெரியாறு அணை கேரளாவின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அது முன்பு சென்னை ராஜதானியாக இருந்தபோது தமிழகத்துக்குள் இருந்த பகுதிதான். இப்போது பிரிந்தாலும் அதில் தண்ணீர் கேட்க தமிழகத்து முழு உரிமையுண்டு என்று இயக்குநர் சொல்கிறார் என்றால் நிச்சயமாக நாம் இதனை இரு கரம் கூப்பி வரவேற்போம்..!

0 comments: