03-02-2018
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
வி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வி.பாலாஜி சுப்ரமணியன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
படத்தில் சண்முகப் பாண்டியன் ஹீரோவாகவும், மீனாட்சி நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், சமுத்திரக்கனி, வேல ராமமூர்த்தி, ‘மைம்’ கோபி, இயக்குநர் மாரிமுத்து, தயாரிப்பாளர் தேனப்பன், பால சரவணன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு, இயக்கம் – பி.ஜி.முத்தையா, இசை – சந்தோஷ் தயாநிதி, படத் தொகுப்பு – K.L.பிரவீன், கலை – விதேஷ், சண்டை பயிற்சி – ‘ஸ்டன்’னர் சாம், நடனம் – சுரேஷ், காஸ்ட்யூம்ஸ் – K.செல்வம்.
சிறிய வயதிலேயே மலேசியா போய் செட்டிலான துரை என்னும் சண்முகப்பாண்டியன் வளர்ந்து வாலிபனான பிறகு தன் சொந்த ஊருக்கு வருகிறார். அவரது தந்தை ரத்தினவேலு என்னும் சமுத்திரக்கனியை யார் கொலை செய்தது.. ஏன் கொன்றார்கள் என்பதைக் கண்டுபிடிக்கவும், தந்தை முன் நின்று நடத்திய ஜல்லிக்கட்டை மீண்டும் உயிர்ப்பிக்கவும் பார்க்கிறார் சண்முகப்பாண்டியன்.
அதே ஊரைச் சேர்ந்த ஆதிக்க சாதியைச் சார்ந்த குருமூர்த்தி என்னும் வேலா ராமமூர்த்தியும், ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்த மலைச்சாமி என்னும் ‘மைம்’ கோபியும் அந்த ஊரில் ஜல்லிக்கட்டை நடத்த விடாமல் தடை செய்திருக்கின்றனர்.
இந்த நிலைமையில் ஜல்லிக்கட்டு நடத்த கலெக்டரிடம் அனுமதி கேட்கிறார் சண்முகப்பாண்டியன். ஊரில் அனைவரிடமும் கையெழுத்து வாங்கிக் கொண்டு வந்தால் அனுமதிப்பதாகக் கலெக்டர் சொல்லி விடுகிறார். சண்முகப்பாண்டியன் கையெழுத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
இதைப் பார்த்து வேலா ராமமூர்த்தி தனியாகவும், அனுமதி பெறாமல் ‘மைம்’ கோபி தனியாகவும் இதேபோல் ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி செய்கின்றனர்.
இந்நிலையில் அரசாங்கம் ஒரேடியாக ஜல்லிக்கட்டிற்குத் தடை விதித்துவிட, இளைஞர்களோடு இளைஞராய் சண்முகப்பாண்டியனும் ஜல்லிக்கட்டு தடைக்குப் போராடுகிறார். தடையும் விலகுகிறது. இப்போது மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டியை ஊரில் நடத்தப் போவது யார் என்ற கேள்வி எழுகிறது..!
வேலா ராமமூர்த்தியையும், ‘மைம்’ கோபியையும் மீறி, சண்முகப்பாண்டியன் ஜல்லிக்கட்டு நடத்தினாரா இல்லையா என்பதும், சமுத்திரக்கனியைக் கொன்றவரைக் கண்டுபிடித்தாரா என்பதும்தான் படத்தின் மீதிக் கதை.
எந்த ஆர்ப்பாட்டமும் ஹீரோயிசமும் இல்லாமல் கதையின் நாயகனாகவே அறிமுகமாகிறார் சண்முகப்பாண்டியன். வேஷ்டிச் சட்டையில் கம்பீரமாய் மதுரை வீரன் கணக்காய்தான் வலம் வருகிறார். கடைசி வரையிலுமே கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து, தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் நடித்திருப்பதற்காக அவரைப் பாராட்டலாம்.
தனது முதல் படமான சகாப்தம் போலின்றி, இப்படி கவனமாகக் கதையைத் தேர்ந்தெடுத்தால், திரையில் ஒரு ரவுண்ட் வர சண்முகப்பாண்டியனுக்கு வாய்ப்பு பிரகாசமாய் உள்ளது.
சண்முகப்பாண்டியனின் மாமா மகள் மீனாட்சியாக நாயகி தனம் நடித்துள்ளார். ஜல்லிக்கட்டு, சாதிப் பிரச்சனை எனப் போகும் மையக் கதைக்குப் பெரிதாக உதவவில்லை என்றாலும், கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
‘பட்டையார்’ என்னும் இயக்குநர் மாரிமுத்து நாயகியின் தந்தையாகவும், சமுத்திரக்கனியின் மச்சானாகவும் படம் நெடுகேவும் வருகிறார். ‘குரங்கு பொம்மை’யைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் தேனப்பனுக்குக் குறிப்பிடும்படியான ‘பெருமாள்’ என்னும் கதாபாத்திரம் கிடைத்துள்ளது.
மூன்று மாதங்களில் விளையக் கூடிய விதையைத் தன் ஊருக்குள் வராமல் பார்த்துக் கொள்கிறார் சமுத்திரக்கனி. ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டவர்களையும் ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க வைக்கிறார். அதனால் முறுக்கிக் கொண்டே இருக்கும் வேலா ராமமூர்த்தியின் பகையைச் சம்பாதிக்கிறார் சமுத்திரக்கனி. வேலா ராமமூர்த்தி, வழக்கம் போல் தன் உடல் மொழியில் ஓவர் மிடுக்கு காட்டி மிரட்டியுள்ளர். படத்தின் கலகலப்பிற்குக் கோதண்டமாக என்னும் பாலசரவணன் உதவியுள்ளார்.
2008-ல், இயக்குநர் சசியின் ‘பூ’ படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிய P.G.முத்தையா, இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மண் மனம் மாறாமல் ஒளிப்பதிவும் செய்துள்ளார். 2017-ல் நடந்த ஜல்லிக்கட்டிற்கான போராட்டத்தை அழகாகக் கதையில் இணைத்து அசத்தியுள்ளார் முத்தையா. ஜல்லிக்கட்டு காட்சிகளை எல்லாம் பிரமாதமாய்க் காட்டியுள்ளார். சந்தோஷ் தயாநிதியின் பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது.
விளையாட்டு என்பது அனைவருக்குமானது… அனைத்துச் சாதிக்குமானது என ஓங்கிச் சத்தமாகச் சொல்லியுள்ளார் முத்தையா. அதற்காக அவருக்கு ஒரு சபாஷ். விளையாட்டிலேயே ஒருவருக்கு ஒருவர், பிரிந்து நின்றால் வருகிறவன் போகிறவன் எல்லாம் உள்ளே புகுந்து நாட்டாமைத்தனம்தான் செய்வான் என சமுத்திரக்கனியின் கதாபாத்திரம் மூலம் புரிய வைக்கிறார் முத்தையா.
சண்முகப்பாண்டியனைக் கதைக்குத் தகுந்தாற்போல் உபயோகித்து, படத்தைச் சுவாரசியம் குறையாமல் கொண்டு சென்றுள்ளார். இன்னொரு ‘சகாப்தமா’ என்று சந்தேகம் கொள்ளாமல் ஒரு முறை தாராளமாகப் பார்க்கலாம்.
|
Tweet |
0 comments:
Post a Comment