09-02-2018
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
ஜெ.சா.புரொடெக்சன்ஸ் மற்றும் மகாலிங்கம் புரொடெக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன.
படத்தில் ராம் சரவணா, ராஜ் சூர்யா, ரெமோனா ஸ்டெப்னி, பி.டி.அரசகுமார், ஷர்மிளா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – விஜய் கிரண், இசை – தன்ராஜ் மாணிக்கம், சேகர் சாய்பரத், நவீன் ஷங்கர், படத் தொகுப்பு – வடிவேல் – விமல்ராஜ், வசனம் – பித்தாக் புகழேந்தி, பாடல்கள் – மதன் கார்க்கி, ஞானகரவேல், ரேஷ்மன் குமார், ஷ்ரிராவன், இணை தயாரிப்பு – பூமா கஜேந்திரன், எஸ்.சரஸ்வதி சரண்ராஜ், என்.கே.ராஜேந்திர பிரசாத், நிர்வாகத் தயாரிப்பு – ஏ.பி.பிரகலாதன், கர்ணன் மகாலிங்கம், வி.ராஜேஸ்வரி, கதை, திரைக்கதை, இயக்கம் – வெற்றி மகாலிங்கம், தயாரிப்பு – ஏ.ஜமால் சாஹிப், ஏ.ஜாபர் சாதிக்.
தமிழ்ச் சினிமாவின் தற்போதைய இளைய சூப்பர் ஸ்டார்களான ‘தல’ அஜித் மற்றும் ‘தளபதி’ விஜய் ரசிகர்களிடையே ஏற்படும் மோதல், காதல் பற்றிய படம் இது.
அஜீத்தும், விஜய்யும் ஒருவருக்கொருவர் நட்பாக இருந்தாலும், இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும் அவர்களது ரசிகர்களோ இணையத்திலும், நேரிலும், தியேட்டர் வாசல்களிலும் கடுமையாக மோதிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு புத்திமதி சொல்வதற்காகவே இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் வெற்றி மகாலிங்கம்.
சென்னையில் அப்பா, அம்மாவுடன் வசிக்கும் வெட்டி ஆபீஸரான ராம் சரவணா தீவிரமான அஜீத்தின் ரசிகர். தான் மட்டுமில்லாமல் தனது தாய், தந்தையையும் அஜீத்தின் ரசிகர்களாக மாற்றிவிட்டவர்.
வீட்டுக்கு ஒரே பி்ள்ளை என்பதால் கேட்கும்போதெல்லாம் கேட்கின்ற காசைக் கொடுத்து கெடுத்து வைத்திருக்கிறார்கள் பெற்றோர்கள். மது அருந்துவதும், சிகரெட் பிடிப்பதும், தல அஜீத் புகழ் பாடுவதும் மட்டுமே இந்த ராம் சரவணாவின் முழு நேரத் தொழில்.
திடீரென்று நண்பர்களிடையே ஒரு மோதல் ஏற்படுகிறது. யார் வெட்டி ஆபீஸர் என்று..! அஜீத்திற்கு ரசிகனாக இருந்தாலும் இப்போதே தெருவுக்கு ஒரு பெண்ணை உஷார்படுத்தி வைத்திருப்பதாக ராமின் நண்பர்கள் சொல்கிறார்கள். இதுவரையிலும் ராமுக்கு ஒரு காதலிகூட கிடைக்காமல் இருப்பதைக் குத்திக் காட்டி கேலியும், கிண்டலும் செய்கிறார்கள்.
இதனால் கோபப்படும் ராம் தனது அடுத்த வேலையே காதலிப்பதுதான் என்று முடிவெடுக்கிறார். மதுரையில் இருந்து சென்னையில் இருக்கும் தனது சித்தி வீட்டிற்கு வந்து படித்துக் கொண்டிருக்கும் ஹீரோயின் ஸ்டெப்னியை பார்த்தவுடன் காதலாகிறார் ராம்.
அவரை விரட்டி விரட்டி பின்னாலேயே திரிபவர் தனது காதல் வலையில் விழ வைக்கிறார். காதலியான ஸ்டெப்னியோ தீவிரமான விஜய்யின் ரசிகை. தனது காதல் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக தானும் விஜய்யின் ரசிகன்தான் என்று சொல்லி தனது காதலை வாழ வைக்கிறார் ராம்.
ஸ்டெப்னியின் அண்ணனான ராஜ் சூர்யா மதுரையில் இருக்கும் விஜய் ரசிகர் மன்றத்தின் தலைவர். போதாக்குறைக்கு பேஸ்புக்கில் ஏற்கெனவே ராமுடன் சண்டையிட்டவர். நேரில் பார்த்தால் வெட்டுவோம்.. குத்துவோம்.. என்று இருவருமே கொலை வெறியோடு இருப்பவர்கள்.
இது ராமிற்கு தெரியாத நிலையில் ராஜ் சூர்யா சென்னைக்கு வருகிறார். வந்த இடத்தில் விஜய்யை வாழ்த்தி சில போஸ்டர்களை ஒட்டுகிறார். இதை தற்செயலாக பார்த்துவிடுகிறார் ராம். அந்த இடத்திலேயே ராமுக்கும், ராஜ் சூர்யாவுக்கும் இடையில் மற்போர் நடைபெறுகிறது.
கடைசியாக லோக்கல் கவுன்சிலரும், போலீஸாரும் சேர்ந்து பிரச்சினையை இப்போதைக்கு முடித்து வைக்கிறார்கள். ஆனால் இந்த மோதலினால் தனது பரம எதிரியான ராஜ் சூர்யாவின் தங்கைதான் தான் காதலிக்கும் பெண் என்பதை ராம் தெரிந்து கொள்கிறார். அதேபோல் தன்னைக் காதலிக்க வேண்டும் என்பதற்காகவே தளபதி விஜய்யின் ரசிகன் என்று ராம் தன்னிடம் பொய் சொன்னதாக ஸ்டெப்னியும் புரிந்து கொள்கிறார்.
அண்ணனும், தங்கையும் கோபத்தோடு மதுரைக்கே கிளம்பிப் போகிறார்கள். காதலியின் பிரிவாற்றாமை ஹீரோவை வருத்தத்தில் ஆழ்த்துகிறது. தாங்க முடியாத சோகத்தில் மூழ்குபவர் மதுரைக்கே சென்று காதலியையும், அவளது அண்ணனையும் சந்திக்க நினைத்து மதுரைக்கு ஓடி வருகிறார்.
மதுரையில் ராம் தனது காதலியை சந்தித்தாரா..? அவரது காதல் கை கூடியதா..? என்னதான் நடந்தது என்பதுதான் படத்தின் பிற்பாதி கதை.
ராம் சரவணா, ராஜ் சூர்யா இருவருமே புதுமுகங்கள் என்றாலும் நன்றாகவே நடிக்க வைக்கப்பட்டுள்ளனர். ராம் சரவணாதான் மெயின் ஹீரோவாக அதிகமான காட்சிகளில் நடித்துள்ளார். நன்றாகவே நடித்துள்ளார். நடனமாடியுள்ளார். வசனங்களை கடித்து உதறாமல், இயல்பாகவே பேசி நடித்திருக்கிறார்.
அவருடைய பெற்றோர்களிடத்தில் அவர் ஒவ்வொரு முறையும் பேசும்போதெல்லாம் பாசமான மகனாகவும், செல்லமான பிள்ளையாகவும் மட்டுமே தெரிகிறார். காசு, பணம் உள்ள வீடு என்பதால் இவர் வேலைக்குப் போய் சம்பாதித்தே ஆக வேண்டிய நிலைமை இல்லாததாலும் இவருடைய வெட்டி ஆபீஸர் போஸ்ட் கதைக்கு கேடு விளைவிக்கவில்லை.
காதல் காட்சிகளில்தான் இன்னும் கொஞ்சம் மெச்சூரிட்டி தேவைப்படுகிறது. ஹீரோயினோடு ஒப்பிட்டால் தம்பி போல தெரிகிறார். அஜீத்திற்காக உயிரையும், உடலையும்விட துடிக்கும் உண்மை ரசிகன் என்றாலும் அதை நிரூபிக்க ஒரு காட்சிகூட இல்லையென்பதால் வேறு வழியில்லாமல் வசனத்தின் மூலமாகவே ஏற்க வேண்டியிருக்கிறது.
ராஜ் சூர்யாவுக்கு அழுத்தமான கேரக்டர். கூரிய பார்வை. மிடுக்கான தோற்றத்தில் கவர்ச்சிகரமாகவே இருக்கிறார். இவரும் முயன்றால் தனி ஹீரோவாகவே வரலாம்.
ஹீரோயின் ஸ்டெப்னி புதுமுகம். அழகு ராணிதான். கேமிராவுக்கேற்ற முகம். முதலில் தன்னை சைட் அடிக்கிறான் என்பதை புரிந்து கொண்டு ஹீரோவை விரட்டுவதும் பின்பு மெல்ல, மெல்ல மற்ற பெண்கள் போலவே காதலில் விழும்போதும் ரசிக்கத்தான் வைக்கிறார்.
இதே போன்று ராம் விஜய்யின் ரசிகர் இ்ல்லை என்பது தெரிந்தவுடன் அதே கோபத்தில் தனது காதலைத் தூக்கியெறிந்துவிட்டு போகும் காட்சியிலும் தனது நடிப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் ஸ்டெப்னி.
ராமின் அம்மாவாக நடித்திருக்கும் ஷர்மிளாவும், அப்பாவாக நடித்திருக்கும் பி.டி.அரசகுமாரும் அன்னியோன்ய தம்பதிகளாக அருகருகே நிற்கக்கூட இல்லாதவர்களாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அழகு அம்மா கேரக்டரில் ஷர்மிளா வெகு இயல்பாக ஸ்கோர் செய்கிறார்.
ஒளிப்பதிவாளர் விஜய் கிரணின் ஒளிப்பதிவில் குறையில்லை. பாடல் காட்சிகளை அழகாகவும், கச்சிதமாகவும் படமாக்கியிருக்கிறார். சாலிகிராமத்தில் நடைபெறும் தெருச் சண்டை காட்சியை மிக யதார்த்தமாக படமாக்கியிருக்கிறார்.
தன்ராஜ் மாணிக்கம், நவீன் ஷங்கர், சேகர் சபரிநாத் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. ‘ஒரே வானம் ஒரு தலதான்’, ‘நான் தளபதி பேனு’ பாடல்கள் ஆட்டமாட வைக்கின்றன. ‘ஓ செம பிகரு’, ‘பேபி மே’ பாடல்கள் மெலோடியாக காதலுக்கு பரிந்துரை செய்திருக்கின்றன. கேட்கும் அளவில்தான்..!
நடிகர்கள் இருவரும் பிரச்சினையில்லாமல் இருந்தாலும் ரசிகர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்வதெல்லாம் தவறான விஷயம் என்பதை கிளைமாக்ஸில் சொல்கிறார் இயக்குநர். இரண்டு தரப்பு ரசிகர்களும் இணைந்தால் என்னென்ன செய்யலாம் என்பதற்கு ஒரு அடையாளத்தோடு சொல்லி படத்தை சீக்கிரமாகவே சப்பென்று முடித்துவிட்டார் இயக்குநர்.
ஆனால் அழுத்தமில்லாத திரைக்கதையில் உருவாகியிருப்பதால் படம் ஒட்டு மொத்தமாய் கவரவில்லை என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும்.
போதாக்குறைக்கு சின்ன பட்ஜெட் என்பதாலும் பெரிய பட்ஜெட் படங்களின் லாபியினால் தியேட்டர்கள் கிடைக்காமல் கஷ்டப்பட்டுப் போனதிலும் இந்தப் படத்தின் முக்கியத்துவம் தல, தளபதி ரசிகர்களையே போய்ச் சேராதது, இந்தப் படக் குழுவினருக்குக் கிடைத்த துரதிருஷ்டம்தான்..!
இப்போது இந்த ‘விசிறி’க்கே விசிறி தேவை..!
|
Tweet |
0 comments:
Post a Comment