08-02-2018
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இந்தப் படத்தை லதா புரொடெக்சன்ஸ் சார்பில் எம்.லதா தயாரித்துள்ளார்.
படத்தில் சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ், அதுல்யா ரவி, ரோஷிணி, சிங்கம் புலி, பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – வி.இசட்.துரை, படத் தொகுப்பு – ஆர்.சுதர்சன், இசை – சாம் டி.ராஜ், ஒளிப்பதிவு – ரத்தீஷ் கண்ணன், ஐ.ஜே.பிரகாஷ், வசனம் – ஜெயமோகன், கலை இயக்கம் – ஆறுசாமி, நடன இயக்கம் – விஜி. சாண்டி, பாடல்கள் – மோகன்ராஜ், அருண் பாரதி, நிர்வாகத் தயாரிப்பு – வி.கார்த்திக், மக்கள் தொடர்பு – நிகில், டிஸைன்ஸ் – ஜோஸப் ஜாஸன்.
ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வரும் நாயகி அதுல்யாவும், நாயகன் சாம் ஜோன்ஸும் காதலர்கள். திடீரென்று இருவருக்கும் ஏற்பட்ட ஒரு சிறு பிரச்சினையால் அவர்களது காதல் பிரேக்கப் ஆகிறது. ஆனால் இதனை சாம் ஜோன்ஸால் ஏற்க முடியவில்லை. காதலியை மறக்க முடியாமல் தவிக்கிறார்.
எல்லோரும் காதல் கை கூடினால்தான் பார்ட்டி கொடுப்பார்கள். நாம் வித்தியாசமாக காதல் பிரேக்கப் ஆனதற்காக பார்ட்டி கொடுக்கலாம் என்று நினைக்கும் ஹீரோ தனது நெருங்கிய நண்பர்களை அழைத்து பார்ட்டி கொடுக்கிறார். அன்றைக்கும் தனது காதலியை மறக்க முடியாமல் தவித்து புலம்பி அழுதுத் தீர்க்கிறார்.
அந்த பார்ட்டி புகைப்படங்களையெல்லாம் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு தனது கோபத்தைத் தீர்த்துக் கொள்கிறார் ஹீரோ. இதையும் பார்க்கும் காதலி ஹீரோவுடனானது நட்பை முற்றிலுமாக துண்டித்துக் கொள்கிறார். இதனால் மேலும் எரிச்சலாகிறார் ஹீரோ.
நாயகனின் நெருங்கிய நண்பர் சமுத்திரக்கனி. கல்லூரி பேராசிரியர். தன்னம்பிக்கை வகுப்புகள் எடுக்கும் அளவுக்கு புத்திசாலி. இவரிடம் வந்து அழுது புலம்புகிறார் ஹீரோ. முடிந்தவரையிலும் அட்வைஸ் செய்து பார்த்து ஓய்ந்து போகிறார் சமுத்திரக்கனி.
இதே நேரம் காதல் தோல்வியால் தற்கொலையிலிருந்து சமுத்திரக்கனியால் காப்பாற்றப்பட்ட ரோஷிணி சமுத்திரக்கனியால் ஈர்க்கப்படுகிறார். சமுத்திரக்கனியின் வீட்டிலேயே அவருடனேயே தானும் தங்கிக் கொள்வதாக ரோஷிணி கேட்க சமுத்திரக்கனியும் இதற்கு ஒத்துக் கொள்கிறார்.
காதலும், காதலியும் காணாமல் போனதால் கடுப்பாகும் ஹீரோ காதலியை கொலை செய்யும் அளவுக்கு யோசிக்கிறார். அவளை கொலை செய்தால்தான் தனது ஆத்திரம் அடங்கும் என்கிறார். ஆறுதலும், யோசனையும் சொல்லி அழுத்துப் போன சமுத்திரக்கனி முள்ளை முள்ளால் எடுப்பதுபோல வேறொரு கோணத்தில் இந்தப் பிரச்சினையை அணுகுகிறார்.
காதலியைக் கொலை செய்தால் அதன் பின் விளைவுகள் என்னவாக இருக்கும்..? கொலை நடந்த பின்பு போலீஸ் எப்படி நம்மை தேடிப் பிடிக்கும்..? அவர்களது தேடுதல் வேட்டை எப்படிப்பட்டதாக இருக்கும்..? அவர்களிடத்தில் சிக்காமல் நாயகியை கொலை செய்வது எப்படி என்று சிக்கலான ஆனால் கிறுக்குத்தனமான ஒரு ஐடியாவை சொல்கிறார் சமுத்திரக்கனி.
இதனை ஏற்றுக் கொள்ளும் ஹீரோ கடைசியாக சிக்கல்களை நீக்க முடியாமல் கொலைத் திட்டத்தில் இருந்து விலகிவிடுவார் என்று சமுத்திரக்கனி நினைக்கிறார்.
ஆனால் நாயகியை கொலை செய்வதற்கான திட்டத்தைத் தீட்ட தீட்ட.. பிரச்சினை வேறு வேறு பக்கங்களில் போய்க் கொண்டேயிருக்கிறது. அதைத் தடுத்து நிறுத்த முடியாமல் தவிக்கிறார் சமுத்திரக்கனி.
கடைசியில் என்னதான் நடந்தது..? கொலை செய்தார்களா இல்லையா..? போலீஸிடம் சிக்கினார்களா இல்லையா..? என்பதுதான் இந்த காதல் அண்ட் கிரைம் அண்ட் திரில்லர் கலந்த படத்தின் திரைக்கதை.
காதல் கதையில் துவங்கி குற்றம், கொலை, துப்புத் துலக்கல் என்று ஷெர்லாக் கோம்ஸ் கதையாக மாறியது ஒன்றுதான் படத்தின் புதுமை. மற்றபடி காதலிகளின் துரோகம்.. காதலர்களின் ஏமாற்றம்.. கோபம்.. பழி வாங்கத் துடிக்கும் ரணம்.. சமாளிக்கும் நட்புகள்.. ஏத்திவிடும் நண்பர்கள்.. என்று வழக்கமான காதல் தோல்வி படங்களின் அரிச்சுவடியைத்தான் படத்தின் முற்பாதியில் வைத்திருக்கிறார்கள்.
பிற்பாதி முழுவதும் நாயகன், நாயகியை கொலை செய்துவிட்டதுபோலவும் அதனை கண்டுபிடிக்க அதே சமத்திரக்கனியும், ஹீரோ சாம் ஜோன்ஸும் போலீஸாக வந்து நிற்பது போன்ற புதுமையான காட்சிகளாக இருக்கின்றன. இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட பின்பு சி.பி.ஐ. அதிகாரிகளாகவும் இதே சமுத்திரக்கனியும், ஹீரோவும் வருவது இன்னுமொரு புதுமை. .
அம்மை நோய்க்கு வேப்பிலை அடித்து விரட்டுவதைவிட்டுவிட்டு அலோபதி மருத்துவம் கொடுத்து சிகிச்சையளிப்பதுபோல இந்தப் படத்தின் வசனகர்த்தாவான இந்தியாவின் இந்துத்துவ சமூக மரபில் தோய்த்தெடுத்த நல்முத்தாம், எழுத்துச் சிற்பி, எழுத்து வித்தகர், தலை சிறந்த எழுத்தாளர்.. வித்தக எழுத்தர்.. நீண்ட எழுத்துக்களில் நமக்கும் முன்னோடியான எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருக்கும் சில, பல வசனங்கள்தான் படத்தின் கதைக்கும், திரைக்கதைக்கும் பாலமாக இருந்து உதவியிருக்கிறது.
இவ்வளவு பெரிய எழுத்தாளர் இப்படி இறங்கி வந்து அடிப்பார் என்று துளியும் எதிர்பார்க்கவில்லை. “கஸ்கா முஸ்கா பண்ணலாமா..?” என்று “டாடி மம்மி வீட்டில் இல்லை.. கசமுசா பண்ணலாமா..?” என்பதுபோல எழுதியிருப்பதை பார்த்தால் அண்ணன் ஜெயமோகனுக்கு ஏன் இந்த நிலைமை என்று வருத்தப்படவும் வேண்டியிருக்கிறது.
ஒரு ரீலில் பெண்களை படு காத்திரமாக ஹீரோ தி்ட்டித் தீர்ப்பதும், அடுத்த ரீலில் சமுத்திரக்கனி மூலமாக “பொம்பளைங்கன்னா என்னங்கடா நினைச்சீங்க..?” என்று பெண்களுக்கு வக்காலத்து வாங்குவதுமாக வசனங்களை வைத்திருப்பதால், இயக்குநர் தப்பித்தாரோ இல்லையோ.. ஜெயமோகன் தப்பித்துவிட்டார்.
ஐயர் மீன் மார்க்கெட்டில் கால் வைத்தாலும் முகத்தைச் சுழிக்காமல்தான் போக வேண்டும் என்பதுபோல இரட்டை அர்த்த வசனங்களுக்கும் அண்ணன் ஜெயமோகன் இந்தப் படத்தில் பச்சைக் கொடி காட்டியிருப்பது, அவரது எதிரிகளுக்கு மிகப் பெரிய பிரசாதமாக அமைந்திருக்கிறது. வரும் காலங்களில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் இதை எப்படி சமாளிக்கப் போகிறது என்று தெரியவில்லை. எப்படியும் ஜெயமோகனது வரலாற்றுக் குறிப்புகளில் இந்தப் படம் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது என்று அடித்துச் சொல்லலாம்.
அறிமுக நடிகரான சாம் ஜோன்ஸ் ஏமாற்றப்பட்ட காதலனாக படம் முழுவதும் குமுறிக் கொண்டேயிருக்கிறார். அந்த கோபங்களும், தாபங்களும் அவரது தற்போதைய வயதுக்கேற்றதாக இருப்பதால் மிக எளிதாக தனது உணர்வுகளையும், நடிப்பையும் மிகையில்லாமல் காண்பித்துவிட்டார். அடுத்தடுத்த படங்களில் வேறு வேறுவிதமான நடிப்பைக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
நாயகியான அதுல்யா ரவி சத்தியமாக இப்படியொரு போல்டான கேரக்டரில் நடிப்பார் என்று எதிர்பார்க்கவே இல்லை. சென்ற வருடம்தான் தனது நடிப்பு கேரியரை மலையாளத்திலும், தமிழிலும் துவக்கியவர். இரண்டாவது படத்திலேயே இத்தனை வெயிட்டான கேரக்டரில் நடிக்க எப்படி ஒத்துக் கொண்டார் என்று தெரியவில்லை. ஆனாலும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே எத்தனை கிளாமராக தெரிந்தாரோ அது போலவே படம் முழுவதிலும் வலம் வந்திருக்கிறார். நாயகனைவிடவும் அதிகமாக சிகரெட் பிடித்திருக்கிறார். நாயகியின் குணாதிசயம் இப்படித்தான் என்று இயக்குநர் சொல்லிவிட்டதால் இதற்கு மேல் நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை.
சமுத்திரக்கனி எப்போதும்போல அட்வைஸ் ஆறுமுகமாகவே இந்தப் படத்திலும் வலம் வருகிறார். ரோஷிணி அவரைவிட்டுப் பிரியும்போது உள்ளுக்குள் இருக்கும் காதலை விட்டுக் கொடுக்காமல் பேசிவிட்டு சமாளிக்கும் காட்சியில்தான் உண்மையிலேயே நடித்திருக்கிறார். வெல்டன் பிரதர்..
ரோஷிணி என்னும் புதுமுகம் அதுல்யாவைவிடவும் அழகு. செமத்தியாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். இறுதியில் யதார்த்த வாழ்க்கையை உணர்ந்து ஜஸ்ட் லைக் தேட்டாக சமுத்திரக்கனியின் உறவுக்கு குட்பை சொல்லிவிட்டுப் போகும் காட்சியில் இன்றைய யுவதிகளின் ஒரு பிரதிநிதியாய் அவரைப் பார்க்க முடிகிறது.
இடையிடையே பன்ச் டயலாக் பேசவும், டபுள் மீனிங்கை கொட்டவும் பால சரவணன் பயன்பட்டிருக்கிறார். சிங்கம் புலியும் கொஞ்சம் சிரிக்க வைக்க முயன்றிருக்கிறார்.
ஐ.ஜே.பிரகாஷ் மற்றும் எம். ரதீஷ் கண்ணாவின் ஒளிப்பதிவில் படமே கலர் டோனில் தெறிக்கிறது. பாடல் காட்சிகள் மற்றும் ஹீரோயின்களின் அழகை மட்டுமே கேமிரா கோணங்களின் மூலமாகவும் கவர்ச்சியாகவும், ஈர்ப்பாகவும் படமாக்கியிருக்கிறார்கள். இயக்குநர் என்ன சொல்ல நினைத்தாரோ அதை கேமிராக்கள் செய்திருக்கின்றன எனலாம்.
சாம்.டி.ராஜின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்தான். பாடல்களைவிடவும் பாடல் காட்சிகளை மிக அழகாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர். பின்னணி இசையும் படத்திற்கு கொஞ்சம் உதவியிருக்கிறது.
இன்றைய இளைஞர்களும், இளைஞிகளும் காதல், நட்பு இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்வதையும், காதல் செய்வது எதற்காக என்கிற ஐடியாவே இல்லாமல் சினிமாத்தனமாகவே அனைத்தையும் அணுகுவதையும் இயக்குநர் சொல்லியிருக்கிறார். ஆனால் இதற்காக கொலை செய்வதுவரையிலும் நாயகன் யோசிப்பது ரொம்பவே டூ மச்சுதான்..!
தற்கொலை செய்து கொள்வது தவறானது என்பதை சொல்ல வந்த இயக்குநர் கடைசியாக அதைத்தான் செய்து காட்டுகிறார். இத்தனை தூரம் கொலை செய்ய முஸ்தீபுகளை செய்துவிட்டு கடைசி காட்சியில் அப்படியொரு கோழைத்தனமான முடிவையெடுக்க நாயகனுக்கு எப்படி தோன்றியது என்பதை இயக்குநர் நியாயமாக படத்தில் சொல்லவில்லை.
போலீஸ் விசாரணை, சி.பி.ஐ. விசாரணை ஆகிய காட்சிகள் முன் பின் காட்சிகளாகவும், இவர்களது காதல் காட்சிகள், காதல் தோல்விக்கான காரணங்கள் ஆகியவை மாறி, மாறி வருவதாலும் படத்தின் ஒரு தன்மையோடு ரசிகனால் ஒன்ற முடியவில்லை என்பது இந்தப் படத்திற்குக் கிடைத்த பெரும் ஏமாற்றம்..!
காதல் படமாகவே இதனை எடுத்திருக்கலாம். அல்லது காதல் தோல்விக்கு காதலன் தேடும் நியாயப் போராட்டமாகவே உருவாக்கியிருக்கலாம். இரண்டுமில்லாமல் படத்தை முடித்திருப்பது படத்திற்கு மிகப் பெரிய மைனஸாகிவிட்டது..!
மொத்தத்தில் ‘ஏமாலி’ பெருத்த ‘ஏமாளி’யாகிவிட்டார்..!
|
Tweet |
0 comments:
Post a Comment