பாம்பு சட்டை - சினிமா விமர்சனம்

31-03-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘சதுரங்க வேட்டை’ படத்தின் மிகப் பெரிய வெற்றிக்குப் பிறகு நடிகர் மனோபாலா தயாரித்திருக்கும் படம் இது. இந்தப் படத்தில் பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ், பானு, சார்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்.  
K.G. வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியின் வெற்றியாளரான அஜீஷ் அசோக் இசையமைப்பளாராக அறிமுகமாகியிருக்கிறார். கவிப் பேரரசு வைரமுத்து,  யுகபாரதி,  விவேகா,  கார்க்கி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். படத் தொகுப்பை ராஜா சேதுபதி மேற்கொண்டுள்ளார். பாண்டியராஜ் கலையமைப்பில், பிருந்தா நடனம் அமைத்துள்ளார். பில்லா ஜகன் சண்டை பயிற்சியை மேற்கொண்டுள்ளார். புதுமுக இயக்குநரான ஆடம் தாசன் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் ஷங்கரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். 

பாபி சிம்ஹா அம்மா, அப்பா இல்லாதவர். கடைசியாக சொந்த அண்ணனையும் இழந்தவர். தற்போது அவரது அண்ணியுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். அவரது அண்ணனும், அண்ணியும் காதல் திருமணம் செய்து கொண்டதால் அண்ணியின் பெற்றோரும் அவரை ஏற்றுக் கொள்ளாததால், வேறு வழியில்லாமல் இருவரும் ஒரே வீட்டில் இருக்கிறார்கள்.
குறைவான படிப்பினால் சிம்ஹாவுக்கு வேலை கிடைப்பதே பெரும்பாடாய் இருக்கிறது. கிடைத்தாலும் சிம்ஹா அதில் நிலைப்பதில்லை. கடைசியாக ‘மொட்டை’ ராஜேந்திரனிடம் வேலை கேட்டு வருகிறார். நீண்ட காமெடியான நேர்முகத் தேர்வுக்கு பின்பு, வேலைக்கு தேர்வாகிறார் சிம்ஹா. அது தண்ணி கேன் போடும் வேலை.
தண்ணி கேனை போடும் இடத்தில் வேலை செய்யும் கீர்த்தி சுரேஷை பார்த்தவுடன் லவ்வாகிறார் சிம்ஹா. கீர்த்திக்கு லவ் என்றாலே கோபம் வருகிறது. அவரது அப்பாவான சார்லி சாக்கடையை சுத்தம் செய்யும் வேலையைச் செய்கிறார். இதனால் தனக்குள் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையால் கீர்த்தி சுரேஷ், சிம்ஹாவின் காதலை ஏற்க மறுக்கிறார்.
ஆனாலும் விடாப்பிடியாய் சிம்ஹா நிறைய டிராமாக்களையெல்லாம் செய்து கீர்த்தியை காதல் வலையில் வீழ்த்துகிறார். இதே நேரம் சார்லி தன் மகள் போகுமிடத்தில் நன்றாக இருக்க வேண்டுமே என்பதற்காக ஊரே அவல் போல மெல்லும் சிம்ஹா மற்றும் அவரது அண்ணிக்கான தொடர்பு பற்றிப் பேச கோபப்பட்டு போகிறார் சிம்ஹா.
அண்ணிக்கு மறுபடியும் ஒரு திருமணத்தை நடத்தி வைத்துவிட்டால் தான் கல்யாணம் செய்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று நினைக்கிறார். அண்ணியான பானுவுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை ஒரு கடன் சிக்கலில் மாட்டியிருக்கிறார். அதற்கு 5 லட்சம் ரூபாய் தேவையாய் இருக்கிறது என்று அவரது அம்மா சொல்ல.. அந்தக் கடனுக்காக அலைகிறார் சிம்ஹா.
இதற்காக கள்ள நோட்டு பிஸினஸ் செய்யும் குரு சோமசுந்தரத்திடம் கடன் கேட்கிறார். அவரோ கள்ள நோட்டுத் தொழிலில் இறங்க சிம்ஹாவை அழைக்கிறார். முதலில் மறுக்கும் சிம்ஹா, பின்பு தனது பிரச்சினைகளினால் தூண்டப்பட்டு களத்தில் குதிக்கிறார்.
தனது காதலி கீர்த்தி சுரேஷ் மற்றும் அண்ணி பானு கொடுத்த நல்ல ரூபாய் நோட்டுக்களுடன் கள்ள நோட்டுக் கும்பலை சந்திக்க வந்த நேரத்தில் போலீஸ் ரெய்டு வர.. தப்பித்து ஓடும் அவசரத்தில் பணத்தை இழக்கிறார் சிம்ஹா. இதனால் பல பிரச்சினைகள் எழுகிறது.
ஒரு பக்கம் காதலி கீர்த்தி சுரேஷ் கல்யாணத்துக்காக காத்திருக்க.. இன்னொரு பக்கம் அவரது அண்ணி பானுவும் தனக்கு கல்யாணம் ஆக வேண்டுமே என்று எதிர்பார்ப்புடன் இருக்க.. இனி சிம்ஹா என்ன செய்யப் போகிறார் என்பதுதான் கதை..!
பாபி சிம்ஹாவுக்கு தனித்துவம் தரும்படியான கதை இது. மொத்தப் படத்தையும் தூக்கி சுமக்க வேண்டிய வேலை அவருக்கு. அதை அவர் சரியாகவே செய்திருக்கிறார். அப்பாவியாய் பேசி மொட்டை ராஜேந்திரனிடம் வேலை வாங்கும் காட்சி முதல், இறுதிவரையிலும் அவரது நடிப்பு எந்தக் காட்சியிலும் சோடை போகவில்லை.
மொட்டை ராஜேந்திரனிடம் நடிக்கும் காமெடி.. கீர்த்தி சுரேஷிடம் காட்டும் கெத்தும், காதலும், சார்லியிடம் காட்டும் கோபம்.. குரு சோமசுந்தரத்திடம் காட்டும் கையாலாகதத்தனம்.. கடைசியில் வில்லன் கே.ராஜனை அவரது பாணியிலேயே போட்டுத் தள்ளிவிட்டு பொசுங்கி நிற்கும் காட்சியில் ஒரு சாதாரண பொதுஜனத்தால் என்ன செய்ய முடியும் என்பதைத்தான் செய்து காட்டியிருக்கிறார் பாபி சிம்ஹா.
முகமும், மேக்கப்பும், உடையும், தோரணையும் நாயகனுக்கு தேவைதான். ஆனால் கதையின் நாயகர்களுக்கு அது தேவையில்லை என்பதை இந்தப் படத்தின் ஹீரோ உணர்த்தியிருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் மெல்லிய மேக்கப்பில் பார்க்கவே அழகாக இருக்கிறார். நிறைவாக நடித்திருக்கிறார். அவருடைய காதல் எதிர்ப்பிற்கு அவர் காரணம் சொல்லும் காட்சியிலும், காதலை மறுதலிக்கும் காட்சிகளிலும் கோபம் வராத அளவுக்கு இருக்கிறது அவரது நடிப்பு.
இவர்களையும் தாண்டிவிட்டார் நடிகர் சார்லி. ஒரு சோற்றுப் பருக்கையைக்கூட கீழே சிந்தக் கூடாது என்று அவர் சொல்லும் உதாரணம் விகடனில் தம்பி பாரதி தம்பி எழுதியதுதான் என்றாலும், படத்தின் ஹைலைட்டான வசனம் அதுதான்.
அதேபோல் தன்னுடைய சாக்கடையை சுத்தம் செய்யும் வேலையைக்கூட கேவலமாக நினைக்காமல் அதையும் ஒரு தொண்டாகவே நினைத்து செய்து வரும்வேளையில் பானுவுக்காக புதைக்குழிக்குள் இறங்கி வேலை பார்த்து சம்பாதித்து அதையும் சிம்ஹாவும் கொடுக்க நினைக்கும் கேரக்டர் ஸ்கெட்ச்சில் எங்கயோ போய்விட்டார் சார்லி. இயக்குநருக்கு இதற்காக ஒரு ஸ்பெஷல் நன்றி.
தயாரிப்பாளர் கே.ராஜனும், குரு சோமசுந்தரமும் வில்லன்களாக அசத்தியிருக்கிறார்கள். சோமசுந்தரம் தூண்டிலை போட்டு மீனை பிடிப்பதுபோல செண்டிமெண்ட் வசனங்களை பேசி சிம்ஹாவுக்கு தூண்டில் போடுவதும்.. அந்த தூண்டிலில் புழுவை மாட்டும் வேலையை கே.ராஜன் செய்வதும் கனகச்சிதம்.. அண்ணியாக நடித்திருக்கும் தாமிரபரணி பானுவும் தனக்குரிய காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
வசனங்கள் படத்திற்கு மிகப் பெரிய பலம் என்றாலும், ஒளிப்பதிவும், இசையும்கூட பலம் சேர்த்திருக்கின்றன. பாடல் காட்சிகளில் கீர்த்தியின் அழகை இன்னும் கொஞ்சம் அதிகமாக்கிக் காட்டியிருப்பதால் ஒளிப்பதிவாளருக்கு ஒரு ஜே போடலாம்..!
“தவறு செய்பவர்கள் கண்டிப்பாக அதன் பலனை அந்தப் பிறவியிலேயே கண்டிப்பாக அனுபவிப்பார்கள். அதில் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடெல்லாம் இல்லை..” என்பதை அழுத்தந்திருத்தமாக சொல்கிறார் இயக்குநர் ஆடம்தாசன்.
அதேபோல் “சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாத நற்குணம் வாய்ந்த ஏழை மக்கள் பிழைப்புக்காக தவறான வழியை மேற்கொள்ள மாட்டார்கள்.. அந்த எண்ணம்கூட அவர்களுக்கு வராது..” என்றும் சொல்லி மேன்மேக்களை உயர்த்தியே பேசியிருக்கிறார்.
“கொள்ளையடித்து வில்லன் கொடுக்கும் காசில் சாப்பிட்டு கல்யாணம் செய்து பிள்ளை பெற்றால் அந்தப் பிள்ளையையும் அந்தப் பாவம் தொடுமே..?” என்கிறார் சிம்ஹா. இப்படி செண்டிமெண்ட்டலாக படம் பார்ப்பவர்களை ஆங்காங்கே நெகிழ வைத்திருக்கிறார் இயக்குநர்.
கண் பார்வையில்லாத ஆள் டிரெயினில் பாடிக் கொண்டே வர அவனது மகன் சின்னப் பையன் ஒரு ஆளிடம் பிக்பாக்கெட் அடித்துவிட.. அந்தப் பையனை அடித்து, அந்த பர்ஸை வாங்கி இழந்தவரிடமே மன்னிப்பு கேட்டு திருப்பிக் கொடுக்கும் காட்சியை வைத்திருக்கும்விதம் அழகானது. ரசனையானது. அந்த ஒரு காட்சியே பாபி சிம்ஹாவின் ஊசலாடும் மனதை திசை திருப்புகிறது என்பதை சிம்பாலிக்காக காட்டியிருக்கிறார் இயக்குநர். வெல்டன் இயக்குநரே..!
இருந்தாலும், ஒரே வீட்டில்.. அதுவும் குடிசை வீடு.. அண்ணியும், கொழுந்தனும் வாழ்வது என்பது கிராமப்புறத்தில்கூட பார்க்க முடியாத்து. பானு படித்தவராக இருக்கிறார். அவருக்குத் தெரியாத வழியா..? அவருக்கில்லாத நண்பிகளா..? அவருடைய பெற்றோரே நன்கு படித்த, வசதி வாய்ப்புள்ளவர்களாக இருக்கிறார்கள். பானுவுக்கு போவதற்கு வழியா இருக்காது..? இந்த ஒரு லாஜிக் மீறலான கேள்வியொன்றுதான் இந்தப் படத்தை கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறது.
இயக்குநர் பானுவுக்கான கேரக்டர் ஸ்கெட்ச்சை மாற்றியிருக்கலாம். ஏழைப் பெண்ணாகக்கூட காட்டியிருக்கலாம். எதிரெதிர் வீட்டில் குடியிருப்பதாகக்கூட சொல்லியிருக்கலாம். ஒன்றும் தவறில்லையே..?! ஏனோ தோணவில்லை போலிருக்கிறது.. இதுவொன்றுதான் படத்திலிருக்கும் ஒரேயொரு குறை.
மற்றபடி இந்த ‘பாம்பு’ தனது ‘சட்டை’யை கச்சிதமாக உரித்துக் காட்டியிருக்கிறது எனலாம்..!

0 comments: