04-03-2017
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
‘ரெதான் – தி சினிமா பீப்பல்’ நிறுவனத்தின் சார்பில் இந்தெர் குமார் தயாரித்து இருக்கும் இந்த ‘குற்றம் 23’ படத்தில் அருண் விஜய் ஹீரோவாகவும், மகிமா நம்பியார் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.
மற்றும் தம்பி ராமையா, அரவிந்த் ஆகாஷ், வம்சி கிருஷ்ணா, அபிநயா, கல்யாணி நடராஜன், விஜயகுமார், அமித் ராகவ், சஞ்சய் அஸ்ரானி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் கே.எம்.பாஸ்கரன், படத் தொகுப்பாளர் புவன் ஸ்ரீனிவாசன், பாடலாசிரியர் விவேகா மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஹீரா அறிவழகன் என பல முன்னணி தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர்.
தமிழ்ச் சினிமாவில் சமீப காலமாக மருத்துவத் துறையில் நடைபெறும் முறைகேடுகள் பற்றிய கதைகளடங்கிய திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ‘என்னை அறிந்தால்’, ‘சலீம்’, ‘தீக்குளிக்கும் பச்சை மரம்’, ‘தனி ஒருவன்’, ‘யாக்கை’ வரிசையில் இந்தப் படமும் மருத்துவ உலகத்தின் இன்னொரு இருண்ட பக்கத்தைக் காட்டுகிறது.
வில்லிவாக்கம் செயிண்ட் தாமஸ் சர்ச்சிற்கு தனியார் தொலைக்காட்சி சேனலின் உரிமையாளரின் மனைவியான மிஷா கோஷல் கலக்கத்துடன் வருகிறார். அங்கிருந்த பாதரிடம் பாவ மன்னிப்பு கேட்கிறார். எதற்காக பாவ மன்னிப்பு என்று பாதர் கேட்கும்போது அடையாளம் தெரியாத நபர்களால் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார் பாதர். கூடவே மிஷா கோஷல் என்ன ஆனார் என்பதும் தெரியாமல் போகிறது.
மிஷா கோஷல் காணாமல் போன வழக்கினை போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றும் வெற்றிமாறன் என்னும் அருண் விஜய்யிடம் ஒப்படைக்கிறார் கமிஷனர் விஜயகுமார். அதோடு அன்றைய தினத்தில் மர்மமான முறையில் இறந்து போன பாதர் வழக்கையும் சேர்த்தே விசாரிக்கிறார் அருண்விஜய்.
கொலை நடைபெற்ற அன்று சர்ச்சுக்கு வந்து சென்ற ‘தென்றல்’ என்னும் மகிமா நம்பியாரிடம் கொலை பற்றி விசாரிக்கிறார் அருண் விஜய். விசாரணையே பிடிக்காத தோரணையில் பேசுகிறார் மகிமா. ஆனாலும் தகவல்களை பாதி, பாதியாக மட்டுமே சொல்கிறார்.
தொடர்ந்து பெருங்குடியில் இருக்கும் குப்பைக் கூளங்களுக்கிடையில் மிஷா கோஷலின் அழுகிய உடல் கிடைக்கிறது. போஸ்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அவர் 2 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரிய வருகிறது.
அருண் விஜய்யின் அண்ணன் மனைவியான அபிநயாவிற்கு திருமணமாகி 5 ஆண்டுகளாகியும் இன்னமும் குழந்தை இல்லை. இதனை ஒரு குறையாக அவ்வப்போது அவருடைய மாமியார் குற்றம் சொல்லிக் காட்ட… இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார் அபிநயா.
மருத்துவர்களின் ஆலோசனைப்படி குழந்தை பெற முடிவெடுத்து வரம் மருத்துவமனைக்கு வருகிறார்கள். அங்கே செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள ஒத்துக் கொள்கிறார்கள். அதன்படி அபிநயா கருவுறுகிறார்.
அதே நேரம் மாநில அமைச்சர் ஒருவரின் மருமகள் தன்னுடைய வளைகாப்பு தினத்தன்றே தற்கொலை செய்து கொள்கிறார். இந்த வழக்கும் சென்னையில் பிரபலமாகிறது.
இடையில் மகிமாவை தாக்க வந்த ரவுடிகளை அருண் விஜய் அடித்து விரட்டுகிறார். இந்த நேரத்தில் மகிமாவின் தைரியமான பேச்சில் கவரப்பட்டு அவரை காதலிக்கவே துவங்குகிறார் அருண் விஜய். இதை ஒரு கட்டத்தில் மகிமாவின் தந்தையிடமே சொல்ல மகிமாவும் இதனை ஏற்றுக் கொள்கிறார்.
இப்போது மகிமா முன்பு சொல்லாத பல விஷயங்களை அருண் விஜய்யிடம் சொல்கிறார். தான் சர்ச்சுக்கு அந்த நேரத்தில் சென்றபோது பார்ச்சூன் கார் ஒன்று இருந்ததாகவும், இன்னொரு காரும் இருந்து அதில் 4 பேர் வந்ததாகவும் சொல்கிறார். அவர்களை மீண்டும் தான் பார்த்தால் அடையாளம் காட்டுவேன் என்றும் சொல்கிறார் மகிமா.
இந்த நேரத்தில் அருண் விஜய்யின் அண்ணி அபிநயா எந்தக் காரணமும் இல்லாமல் தற்கொலை செய்து கொள்கிறார். இதற்கு பிறகு தன்னுடைய பிறந்த வீட்டில் அபிநயா 50 லட்சம் ரூபாய் கேட்ட தகவல் அருண் விஜய்க்கு தெரிய வர அவரும், அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சியாகிறார்கள். தொடர்ச்சியாக இன்னொரு தொழில் அதிபரின் கர்ப்பிணி மனைவியும் இதேபோல் தற்கொலை செய்து கொள்கிறார்.
சர்ச் பாதரின் மரணம், மிஷா கோஷலின் கொலை, மற்ற மூவரின் தற்கொலைகள் இவை அனைத்திற்கும் நெருங்கிய தொடர்பு ஏதோ ஒன்று இருப்பதை அறிகிறார் அருண் விஜய். இதனை கண்டுபிடிக்க முழு மூச்சுடன் இறங்குகிறார். ஜெயித்தாரா..? இல்லையா..? என்பதுதான் படத்தின் சுவாரஸ்யமான திரைக்கதை.
கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் எழுதிய ஒரு கதையின் கான்செப்ட்டை மட்டுமே எடுத்துக் கொண்டு, சினிமாவுக்கு ஏற்றபடி திரைக்கதை அமைத்து படத்தை இதனை வெற்றிப் படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் அறிவழகன்.
‘ஈரம்’, ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’ ஆகிய படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கியிருக்கும் நான்காவது படம் இது.
எந்தத் துறையாக இருந்தாலும் பணம் சம்பாதிப்பது மட்டுமே தொழிலதிபர்களின் வேலை என்பது அடிப்படை குணமாக இருந்தாலும் இப்போதெல்லாம் தனியார் மருத்துவமனைகளும் மக்களிடமிருந்து பணத்தைக் கொள்ளையடிக்கும் முகமூடி போடாத திருடர்களாக மாறிவிட்டார்கள்.
‘செண்டிமெண்ட்டல் இடியட்ஸ்’ என்று சொல்லப்படும் இந்திய சமூகத்தில் குழந்தை பிறப்பு என்பது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை சொல்லாமலேயே தெரிந்து கொள்ளலாம்.
ஒரு பெண் திருமணமாகியும் குழந்தையில்லாமல் இருந்தால் இந்தச் சமூகம் எப்படியெல்லாம் அவரை பேசும், நடத்தும் என்பது இந்திய தொலைக்காட்சி சீரியல்களில் இப்போதும் லைம்லைட்டான கதைக் களன்கள்..
அத்தகைய விஷயத்தைத் தங்களது பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்கு கையில் எடுத்துக் கொண்டுள்ள மருத்துவ உலகம்.. இந்தியா போன்ற நாடுகளில்தான் இப்படி தில்லுமுல்லு வேலைகளை அதிகம் செய்து வருகிறது.
செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பிறப்பு என்பது இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாகவே நடந்து வருகிறது. நேரடியான முறையில் கரு உண்டாக வாய்ப்பில்லையெனில் ஆண், பெண் இருவரின் கரு முட்டைகளையும் சேகரித்து அதனை பரிசோதனை நிலையத்தில் வைத்து ஒன்றாக்கி.. அதைக் கருவாக்கி பின்பு மீண்டும் அதனை பெண்ணின் கருப்பையில் செலுத்தி கருவை தக்க வைத்துக் கொள்வார்கள். இதுதான் இப்போது அதிகமான இடங்களில் பின்பற்றப்படுகிறது.
இந்த முறையிலும் ஆண்களுக்கு போதிய சக்தியில்லை என்றால்தான் மற்றவர்களின் உயிரணுவை பெண்ணின் கரு முட்டையுடன் சேர்த்து வைத்து கருவை உருவாக்குகிறார்கள். இது பெரும்பாலும் வெளிநாடுகளில்தான் நடந்து வருகிறது. இந்தியாவில் அதிகமாக இல்லை. உயிரணுவை தானமாக கொடுத்தவரின் பெயர்களை எந்தக் காரணத்தை முன்னிட்டும் மருத்துவனைகள் இரு தரப்பினருடமும் சொல்லக் கூடாது என்பது இந்திய மருத்துவ கவுன்சிலின் விதி.
இதனை மையமாக வைத்துதான் சுவாரஸ்யமான முறையில் கதையையும், திரைக்கதையையும் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் அறிவழகன். கூடவே தனியார் மருத்துவமனைகள் எப்படி இந்த குழந்தையின்மை விஷயத்தை வைத்து பெரும் பணம் பார்க்கின்றன என்பதையும் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறார்.
குழந்தைகள் நலன் மருத்துமனையில்தான் எப்போதும் கூட்டத்துக்கு குறையே இருக்காது. குழந்தைகளுக்கு ஒரு சின்ன பிரச்சினையென்றால்கூட பெற்றோர்கள் தாங்குவதில்லை. உடனேயே அதனை சரி செய்யத்தான் நினைக்கிறார்கள். இதனால்தான் அந்த மருத்துவமனைகள் மற்றவைகளைவிடவும் எப்போதும் ஹவுஸ்புல்லாகவே காணப்படுகின்றன.
குழந்தைகள் இப்படியென்றால் அதன் மூல காரணியான கருவுக்கு எத்தனை முக்கியத்துவம் இருக்கும்..? அந்த முக்கியத்துவத்தை முன் நிறுத்திதான் பல மருத்துவர்கள் குழந்தை பேறுக்காக பலவித வழிகளில் சிகிச்சை செய்வதாகச் சொல்லி பெரும் பணம் சம்பாதித்து வருகிறார்கள்.
அதில் ஒரு சிலர் மட்டுமே செய்யும் ஒரு தவறினால் எத்தனை அப்பாவி பெண்கள் பலியாக நேரிடுகிறது என்பதை இந்தப் படத்தில் தற்கொலை செய்து கொண்ட 3 பெண்களின் கதையும் பேசுகிறது.
முதல் ஷாட்டிலேயே இந்தப் படம் கொஞ்சம் வித்தியாசமான படம் என்பதை உணர்த்திவிட்டது. படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் திரைக்கதையில் வேகம் குறையவே இல்லை.
அருண் விஜய்யின் விசாரணை கோணம் மிகச் சரியாகவும், திட்டமிட்டும் போய்க் கொண்டிருக்கும் வேளையில் அவருடயை காதல் பிரச்சினை வர.. ஆனாலும் அதையும் மட்டுப்படுத்தி விசாரணையை மட்டுமே பிரதானப்படுத்தி கொண்டு போயிருக்கிறார் இயக்குநர்.
மகிமாவின் நடிப்பு, நடத்தை, வசனம், கோபம் அனைத்தையும் எதிர்கொண்டு அவரை நைச்சியமாக விசாரணை வளையத்திற்குள் தானாகவே கொண்டு வரும் அருண் விஜய்யின் நடிப்பு, முதல் சில காட்சிகளிலேயே ரசிகர்களுக்குப் பிடித்துப்போகிறது.
போலீஸ் அதிகாரிகளுக்கே உரித்தான உடலமைப்பு, கம்பீரம்.. பேச்சு.. அதிரடி செயல்.. சண்டை காட்சிகளில் காட்டும் புயல் வேகம்.. எல்லாமும் சேர்ந்து அருண் விஜய்க்கு இந்தப் படம் நிச்சயம் பெயர் சொல்லும் படமாக இருக்கப் போகிறது என்பது மட்டும் உறுதி.
மகிமாவின் வீட்டுக்கு வில்லன்கள் வந்துவிட்ட செய்தியறிந்து ஓடி வரும் அந்தப் பதட்டம்.. அதைத் தொடர்ந்த காட்சிகள்.. கடைசியில் தனது வீட்டில் நேர்ந்திருக்கும் கொடுமை.. இதை மிக அழகாக யதார்த்தமாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர். இந்தக் காட்சியில் மகிமா, அருண் விஜய் இருவருமே ரசிகர்களையும் சேர்த்தே பதட்டமாக்கிவிட்டார்கள்.
தன்னுடைய குடும்பத்தில் நடந்த துயரத்திற்கு பின்பு ஒரு வெறியோடு வழக்கை விசாரிக்க துவங்கும் அருண் விஜய்க்கு நீலிமா ராணி சம்பந்தப்பட்ட விஷயம் அல்வா போல் கிடைத்து அந்தக் காட்சிகள் அனைத்துமே இடைவேளைக்கு பின்பு படத்தில் லயித்து அமர வைத்த காட்சிகள்..!
தமிழ்ச் சினிமாவில் அருண் விஜய்க்கு ஏன் ஒரு மிகப் பெரிய இடம் இதுவரையிலும் கிடைக்கவில்லை என்பது தெரியவில்லை. ஆனால் அத்தனைக்கும் தகுதியானவர் அவர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை..
அழகு, நடிப்பு, வெகுளித்தனம், கோபம், பாசம், நட்பு என்று அனைத்தையும் கலந்து கட்டி கொடுத்திருக்கிறார் மகிமா. ‘தென்றல்’ என்று பெயரை வைத்துக் கொண்டு புயல் வேகத்தில் வசனம் பேசி நடித்திருக்கிறார் மகிமா.
சில்வாவையும், அரவிந்தையும் தெருவில் பார்த்துவிட்டு பதட்டத்துடன் இருக்கும் அந்த சில காட்சிகளில் நம்மையும் சேர்ந்தே பதட்டமாக்குகிறார் மகிமா. பாடல் காட்சிகளில் அழகுடனும், தேர்ந்த உடை வடிவமைப்பில் நேர்த்தியான நடிகையாகவும் தெரிகிறார்.
அருண் விஜய்க்கு உதவிகரமாக வரும் சப்-இன்ஸ்பெக்டர் தம்பி ராமையாவின் கேரக்டர் துவக்கத்தில் என்னடா இது என்று சொன்னாலும் கடைசியில் சபாஷ் போட வைத்துவிட்டார். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணங்களை போலீஸ் பாணியில் அவர் கதை எழுதும்விதம் மனித உரிமைப் போராளிகளைகூட நிச்சயமாக கை தட்ட வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வில்லன்களாக அரவிந்தும், வம்சி கிருஷ்ணாவும் அலப்பறை செய்திருக்கிறார்கள். வம்சியின் இந்த நிலைமைக்குக் காரணம் அவருடைய சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட துயரம் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். அதற்கு வம்சி சொல்லும் ஒரு காரணமும் ஏற்புடையதே..!
அபிநயா தன்னுடைய குறைபாடே தெரியாத அளவுக்கு உதட்டசைவை இயக்கி நடித்திருக்கிறார். ஒரு காட்சியில் என்னமோ போல் இருக்கும் அவரிடம் சமையலறையில் அருண் விஜய் வந்து பேசும் காட்சியில்தான் மொத்த படத்தின் டிவிஸ்ட்டும் இருக்கிறது. அதனை அழகாக உள்வாங்கி நடித்திருக்கிறார் அபிநயா. அவருடைய சோக முடிவுதான் படம் பார்த்த ரசிகர்களை படத்தின் பெயரை வெளியில் பேசவும் வைத்திருக்கிறது.
அருண் விஜய்யின் அண்ணனாக அமித் பார்கவ் தன்னுடைய பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார். கல்யாணி நடராஜன் இந்தப் படத்தில் மிக முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். செய்த தவறை தவறு என்பதே தெரியாத அளவுக்கு மூளைச் சலவை செய்யும்விதமாக பேசும் மருத்துவர் வேடத்தை செவ்வனே செய்திருக்கிறார்.
ஒரு காட்சி என்றாலும் சஞ்சய் அஷ்ரானியின் மருத்துவ முறைகேடுகள் பற்றிய வாக்குமூலம்தான் படத்தின் முடிச்சு அவிழும் இடம். ஒரு தந்திரசாலி எப்படி இருப்பானோ அதற்கு அவரே ஒரு உதாரணம் போல நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை.
ஒளிப்பதிவாளர் கே.எம்.பாஸ்கரின் கேமிராவுக்கு மிகப் பெரிய பாராட்டு. முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் கேமிராமேன்தான் இயக்குநருக்கு மிகப் பெரிய உதவிக்கரமாக இருந்திருக்கிறார். அறிவழகனின் முந்தைய மூன்று படங்களிலுமே ஒளிப்பதிவுக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இதிலும் அப்படியே..!
பாடல்கள் பரவாயில்லை ரகம் என்றாலும் இந்தப் படத்தில் பாடல்களே இல்லாமல்தான் வந்திருக்க வேண்டும். அப்போது இதைவிடவும் அதிகமாக படத்தை ரசித்திருக்கலாம். விஷால் சந்திரசேகரின் பின்னணி இசைக்காக அவரை பாராட்டத்தான் வேண்டும். லொகேஷன் ஒலிகளை சேர்ப்பித்த ஒலிக் கலைஞரும் பாராட்டப்பட வேண்டியவர்.
கலை இயக்கம், உடை வடிவமைப்பு, சி.ஜி. கலைஞர்கள் என்று இந்தப் படத்தில் பங்கு கொண்ட அத்தனை தொழில் நுட்பக் கலைஞர்களும் பாராட்டு மழையில் நனைய வேண்டியவர்கள். அந்த அளவுக்கு ஒரு படத்தின் அனைத்துப் பிரிவுகளும் ஒருங்கிணைந்து ஒரு படத்தை வெற்றிப் படமாக்கியிருக்கிறார்கள்.
இத்தனைக்கும் மூல காரணமான இயக்குநர் அறிவழகன் இளைய இயக்குநர்களில் மீண்டும் தன்னுடைய இருப்பிடத்தை இந்தப் படத்தின் மூலமாக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.
இந்தப் படத்தை ஹீரோயிஸ படமாக அல்லாமல் போலீஸ் டிபார்ட்மெண்ட்டின் தேடுதல் வேட்டையைக் காட்டும் ‘அஞ்சான்’ படம் போல கொண்டு போயிருந்தால் நிச்சயமாக இன்னும் நன்றாகவே இருந்திருக்கும்.
குழந்தையின்மை என்பதுகூட கடவுள் அல்லது இயற்கையின் விருப்பம்தானே தவிர, அது அந்த நபர் அல்லது அந்தப் பெண்ணின் குற்றமல்ல. இயற்கையிலேயே அப்படியொரு குறைபாடெனில் அதற்கு யாரையும் குறை சொல்லாமல் அதற்கு மாற்று வழியை கையாண்டு அதில் திருப்தி அடைவதுதான் பகுத்தறிவு.
குழந்தையில்லை என்பதை குற்றமாகச் சொல்லி எத்தனையோ குடும்பங்கள் பிரிந்திருக்கின்றன. பல பெண்கள் தற்கொலை செய்து இறந்து போயுள்ளனர். இந்த 21-ம் நூற்றாண்டிலும் அந்த அவலம் தொடர்வது வருத்தத்திற்குரியது. இப்போதுள்ள மருத்துவ முன்னேற்றத்தில் இதற்கு பரிகாரம் காண பல வழிகள் இருக்கின்றன.
ஆனால் இந்த வழிகளிலேயே முறைகேடுகள் செய்து பணம் சம்பாதிக்கவும் சில திருடர்கள் நினைக்கிறார்கள். அது பற்றிய ஒரு விழிப்புணர்வைத்தான் இந்தப் படம் நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறது.
இனிமேல் செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பெற நினைப்பவர்கள் நிச்சயமாக ஒரு முறைக்கு பல முறை தாங்கள் செல்லவிருக்கும் மருத்துவமனை பற்றி நன்கு யோசித்து, தரத்தில் சமரசம் செய்து கொள்ளாமல் தங்களது பிரச்சனைக்கு தீர்வு காண்பார்கள் என்பது மட்டும் நிச்சயம்.
இப்படியொரு சமூக விழிப்புணர்வுமிக்க திரைப்படத்தைக் கொடுக்க முன் வந்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும், நடித்த நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நமது பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!
|
Tweet |
0 comments:
Post a Comment