எங்கிட்ட மோதாதே - சினிமா விமர்சனம்

27-03-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்தை ஈரோஸ் இண்டர்நேஷனல் மற்றும் ஆர்.வி.பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.
நட்டி நட்ராஜ், ராஜாஜி, ராதாரவி, விஜய் முருகன், சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர் மற்றும் பலர் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – கணேஷ் சந்த்ரா, இசை – நடராஜன் சங்கரன், படத் தொகுப்பு – அத்தியப்பன் சிவா, கலை – கே.ஆறுச்சாமி, பாடல்கள் – யுகபாரதி, நடனம் – சிவசங்கர், சண்டை பயிற்சி – மிராக்கிள் மைக்கேல், தயாரிப்பு மேற்பார்வை – கே.வி.சுப்ரமணி, தயாரிப்பு நிர்வாகம் – எம்.வி.ரமேஷ், பி.ஆர்.ஓ. – ரியாஸ் கே.அஹ்மத், டிசைனஸ் – விஜய். எழுத்து – இயக்கம் – ராமு செல்லப்பா.
முந்தைய இரண்டு தலைமுறையில் இருந்த கலைஞர்களின் ரசிகர் மன்றங்கள் இந்தக் கால ரசிகர் மன்றங்களை போல நடிகர்களாலேயே நடத்தப்படாதவை. எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோரின் ரசிகர்கள் உள்ளத்தளவில் அவரவர் தலைவர்களை தங்களது குடும்பத் தலைவர்களாகவே பாவித்து அவர்களைக் கொண்டாடி வந்தார்கள்.
இவர்களுக்குப் பின்னர் கோடம்பாக்கத்தில் கோலோச்சிய ரஜினியும், கமலும் இதேபோல தத்தமது ரசிகர்களை தங்களது அன்பிற்குக் கட்டுப்பட்டவர்களாகவே வைத்திருந்தனர். இப்போதைய நடிகர்களை போல சொந்தக் காசை கொடுத்து ரசிகர் மன்றத்தை நடத்தவில்லை. அந்தந்த ரசிகர்களே தங்களுடைய சொந்தப் பணத்தில் குடும்பத்தை பற்றியே கவலைப்படாமல் மன்றமே கதி என்று அலைந்து, திரிந்தது தனிக் கதை.
அப்படியொரு கதையைத்தான் இந்தப் படத்தில் சுவையான அளவில் தொட்டுக் காண்பித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ராமு செல்லப்பா.

கதை 1987-ம் ஆண்டில் துவங்குகிறது. நட்டி நட்ராஜும், ராஜாஜியும் நாகர்கோவிலில் விளம்பரங்களுக்கு படம் வரையும் வேலையைச் செய்து வருகிறார்கள். அப்போது ரிலீஸான ‘வாழ்க்கை’ படத்தில் நடிகர் திலகம் சிவாஜியின் விளம்பரம் வரைந்தது தொடர்பாக கம்பெனியின் உரிமையாளருக்கும் இவர்களுக்கும் பிரச்சினை வர.. சட்டென்று பேச்சுவார்த்தை முறிந்து தனிக்குடித்தனம் என்று கிளம்புகிறார்கள்.
ஆனால் நாகர்கோவிலில் அல்ல. நட்டி நட்ராஜின் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு குடி வருகிறார்கள். அங்கேயே இருக்கும் சினிமா தியேட்டர்களில் கட்அவுட் வரைந்தும், ஓவியம் வரைந்தும், சுவர் விளம்பரங்களை வரைந்தும் பிழைக்க முடிவெடுக்கிறார்கள்.
ராஜாஜி தனது அம்மா, மற்றும் தங்கை சஞ்சிதாஷெட்டியை திருநெல்வேலிக்கு அழைத்து வருகிறார். நட்டி நட்ராஜ் சமையல் வேலை செய்யும் தனது தாத்தாவுடன் தங்கிக் கொள்கிறார்.
பார்வதி நாயரை பார்த்தவுடன் லவ்வாகிறார் ராஜாஜி. அதேபோல் ராஜாஜியின் தங்கை சஞ்சிதாவை காதலிக்கிறார் நட்டி நட்ராஜ். இவர்களின் காதல் தொய்வில்லாமல் போய்க் கொண்டிருக்கும்போது வாழ்க்கை போராட்டம் துவங்குகிறது.
திருநெல்வேலி மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவரான ராதாரவிக்கு சொந்தமான தியேட்டரில் கேண்டீனை குத்தகைக்கு எடுத்து நடத்துகிறார் விஜய்முருகன். கொஞ்சம் அடாவடி பேர்வழி. ராதாரவி கண் ஜாடை காட்ட.. இவர் செய்து முடிப்பார்.
ராதாரவியின் தியேட்டரில் ‘நாயகன்’, ‘மனிதன்’ படத்தின் ரிலீஸின்போது ஏற்படும் மோதலில் விஜய்முருகனின் கேண்டீன் அடித்து நொறுக்கப்படுகிறது. தியேட்டரில் தீ விபத்தும் ஏற்படுகிறது. இதனால் கோப்ப்படும் விஜய்முருகன் ராதாரவியை தூண்டிவிட்டு மாவட்டத்தில் இருக்கும் எந்த்த் தியேட்டரிலும் ரஜினி, கமல் படங்களை ரிலீஸ் செய்யக் கூடாது என்று முடிவெடுக்க வைக்கிறார்.
அதற்குள்ளாக தீவிர ரஜினி ரசிகராக இருக்கும் நட்டி நட்ராஜ் திருநெல்வேலி மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்திற்கு தலைவராகவே ஆகிறார். அதேபோல் ராஜாஜியும் கமல்ஹாசன் நற்பணி மன்றத்தில் சேர்கிறார். இருவருக்குள்ளும் லேசான போட்டியும், பொறாமையும் எட்டிப் பார்க்க.. இதற்கு மொத்தமாக உலை வைக்கிறது நட்ராஜ், சஞ்சிதா இருவரின் காதல்.
இதைத் தொடர்ந்து நட்ராஜ்-ராஜாஜி நட்பு உடைகிறது. தொடர்ந்து தியேட்டரில் கட்அவுட் வைக்கும் கலாச்சாரத்திற்கு ராதாரவி அண்ட் கோ தடையுத்தரவு போடுகிறது.. இதை எதிர்க்கும் நட்டி நட்ராஜை கொலை செய்யவும் திட்டம் தீட்டுகிறது ராதாரவி கும்பல்.. இறுதியில் என்ன ஆகிறது என்பதுதான் படமே..!
நட்டி நட்ராஜுன் உடல் வாகுக்கும், நடிப்புத் திறனுக்கும் ஏற்ற கதை. தனக்கு எது வருமோ அதை மட்டுமே செய்வது சாலச் சிறந்தது என்பதை இந்தப் படத்திலும் நிரூபித்திருக்கிறார். மிக எளிமையான இயக்கத்தில் தன்னால் முடிந்த அளவுக்கு நடிப்பைக் காட்டியிருக்கிறார். இவருடைய டைமிங்சென்ஸ் வசன உச்சரிப்புகூட அசத்தல்..
உதாரணம்.. சஞ்சிதாவை கல்யாணம் செய்யப் போவதாக நட்ராஜ் சொல்ல.. “முடிஞ்சா செஞ்சுக்க…” என்று ராஜாஜி சொல்ல.. “அதுனாலதாண்டா சொல்றேன்…” என்று அப்பாவியாய் நட்ராஜ் சொல்கின்ற காட்சி ரசனையானது.
நம்முடைய கேப்டனை போலவே ராதாரவியிடம் திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் இருக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கையைச் சொல்லி இதில் ரசிகர்கள் நினைத்தால் என்னென்ன மாற்றங்களை செய்ய முடியும் என்பதை அவர் எடுத்துக் கொடுக்கும் பாங்கும், உடனேயே ராதாரவி காட்டும் ரீஆக்சனும் அபாரம்..!
ராதாரவி எந்த வேடமேற்றாலும் அதனை நிறைவாகச் செய்வார். இவரைத் தவிர வேறு யாரும் இதைச் செய்ய முடியாதே என்கிற தோற்றத்தை உருவாக்கிவிடுவார். இதிலும் அதையே செய்திருக்கிறார். தன்னுடைய அரசியல் பாதையில் குறுக்கிடும் நபர்களை என்னத்த செய்தாவது அகற்றிவிட வேண்டும் என்று அவர் துடிப்பதும், தேர்தலில் நிற்கும்போது சில சமரசங்கள் செய்தாக வேண்டும் என்கிற உண்மையை சட்டென்று உணர்ந்து நட்ராஜிடம் சமாதானத்துக்கு இறங்குவதும் நல்லதொரு எடுத்துக்காட்டு நடிப்பு.
ராஜாஜி இப்போதுதான் தேறியிருக்கிறார். இன்னும் நிறைய படங்களில் நடித்தால் தெளிவு வரும். சஞ்சிதா ஷெட்டி முதல்முறையாக கிராமத்து வேடத்தில் பாவாடை, தாவணியில் கலக்குகிறார். சுசிலீக்ஸ் சர்ச்சைகளுக்குப் பிறகு தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவராக மாறிப் போயிருக்கிறார் சஞ்சிதா ஷெட்டி. மாடர்ன் கேர்ள் வேடம்தான் இவருக்கு மிகப் பொருத்தம் என்பதை இந்தப் படமும் நிரூபித்திருக்கிறது.
எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அழகியாகவே தெரியாத பார்வதி நாயரை எப்படித்தான் ஹீரோயினாக நடிக்க வைக்க முடிகிறதோ தெரியவில்லை. முடியலை..! நன்றாகத்தான் நடித்திருக்கிறார். ஆனால் குளோஸப் காட்சிகளில்தான் பார்க்கவே முடியவில்லை.
இவர்களையும் தாண்டி விஜய்முருகன் தனது அழுத்தமான நடிப்பை இதில் பதிவு செய்திருக்கிறார். இவருக்கும் நமது பாராட்டுக்கள்..!
கணேஷ் சந்த்ராவின் ஒளிப்பதிவில் குறையில்லை. இன்னும் கொஞ்சம் வித்தை காட்டியிருந்தால் நன்றாகவே இருந்திருக்கும். நடராஜன் சங்கரனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். ஆனால் வரிகள் மிக எளிதாக காதுகளில் புகுந்தன என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும்.
இயக்குநர் ராமு செல்லப்பாவின் சொந்த ஊரே நெல்லைதான் என்பதால் அந்த வட்டார மொழியை கச்சிதமாக கொண்டு வந்து பேச வைத்திருக்கிறார். 1988 காலத்து கதை என்பதால் அதற்காக மெனக்கெட்டு தற்போதைய சூழலே இல்லாத இடங்களிலெல்லாம் கஷ்டப்பட்டு படப்படிப்பு நடித்தியிருக்கிறார். இதற்காக கலை இயக்குநருக்கு நமது ஸ்பெஷல் பாராட்டுக்கள்..!
அந்தந்த ரசிகர்களின் மனநிலையை அப்படியே பிரதிபலிக்கும்விதமாக பல வசனங்களும், காட்சியமைப்புகளும் இருப்பதால் இப்போது மத்திய வயதைத் தொடும் தமிழகத்து ஆண்கள், இந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்தால் நிச்சயமாக ஒரு நிமிடமாவது தங்களுடைய கடந்த கால வாழ்க்கையை நினைத்துப் பார்ப்பார்கள் என்பது உறுதி.
கலைஞர்களின் ரசிகர் மன்றத்தினரின் பொற்காலம் 1980-1995 காலக்கட்டம் மட்டுமே என்பது திரையுலகத்தினருக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் அப்போதைய திரைப்படங்களும் மக்களை மகிழ்விப்பவையாக மட்டுமே இருந்தன. இப்போது ரசிகர்களின் ஆரவாரமும், எழுச்சியும், சந்தோஷமும் இருக்கிறது. இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் அதில் உண்மைத்தன்மை இல்லை என்பது வருத்தமான விஷயம்.
அப்போதும் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் மற்றும் மாலை போடுவது.. சூடம் காட்டுவது.. முதல் காட்சியை ரசிகர் மன்றத்தினர் கைப்பற்றி அதிக விலைக்கு விற்று படத்தைப் பார்த்துவிடுவது.. அந்தப் படத்தில் தங்களது தெய்வமான நடிகர் அணிந்திருக்கும் உடை போலவோ, மேக்கப் போன்றோ தங்களையும் மாற்றிக் கொண்டு அலப்பறை செய்த அந்த ரசிகர்களெல்லாம் இன்றைக்கு எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை.
ஆனால் அவர்களின் தடயங்கள் இன்னமும் தமிழ்ச் சினிமாவில் அப்படியேதான் இருக்கின்றன. அதனை மறுபடியும் தட்டியெழுப்பி நினைக்க வைத்திருக்கிறது இந்த ‘எங்கிட்ட மோதாதே’ திரைப்படம்..! இதுதான் இத்திரைப்படம் பெற்றிருக்கும் உண்மையான வெற்றி..!
‘எங்கிட்ட மோதாதே’யை கொண்டாட்டமாக பார்க்கலாம்..!

0 comments: