மாநகரம் - சினிமா விமர்சனம்

12-03-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘மாயா’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தை தொடர்ந்து பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள புதிய படம் ‘மாநகரம்.’
இந்தப் படத்தில் ஸ்ரீ, சந்தீப் கிஷன் ஹீரோக்களாகவும், ரெஜினா கேஸண்ட்ரா நாயகியாகவும் நடித்துள்ளனர். மற்றும் சார்லி, மதுசூதனன், முனீஷ்காந்த், ரேகா சுரேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – செல்வகுமார், சண்டை பயிற்சி – அன்பறிவு, இசை – ஜாவித், பாடல்கள் – லலிதானந்த், ஆண்டனி பாஸ், படத் தொகுப்பு – பிலோமின் ராஜ், கலை இயக்கம் – சதீஷ்குமார், உடைகள் – பிரவின், தயாரிப்பு நிர்வாகம் – நிர்மல் கண்ணன், தயாரிப்பு – பொட்டன்சியல் ஸ்டுடியோஸ், எழுத்து, இயக்கம் – லோகேஷ் கனகராஜ்.

விதியானது ஒரு சாதாரண மனிதனை, சென்னை மாநகரத்தின் துணையோடு எப்படியெல்லாம் அலைக்கழிக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு.
ஸ்ரீ, சந்திப் கிஷன், சார்லி, முனீஸ்காந்த் ஆகிய நான்கு பேரின் வாழ்க்கையில் இரண்டு நாட்களில் நடைபெறும் கண்ணாமூச்சி ஆட்டம்தான் இந்த ‘மாநகரம்’ படமே..!
திருச்சியில் சென்னைக்கு வேலைக்காக வருகிறார் ஸ்ரீ. காலையில் ஒரு நிறுவனத்தில் வேலைக்காக சென்று பணி உறுதி ஆணையைப் பெற்று வருகிறார். அவர் தங்கப் போகும் அறையின் நண்பனை போனில் பிடிக்க முடியாமல் இரவுவரையிலும் தடுமாறி வருகிறார். அதே நிறுவனத்தில் வேலைக்காக வந்த இன்னொரு நண்பனுடன், அன்றைய இரவில் டாஸ்மாக் கடைக்கு வந்திருக்கிறார்.
அதே நிறுவனத்தில் ஹெச்ஆர் ஹெட்டாக வேலை செய்யும் ரெஜினா கேஸண்ட்ராவை கல்லூரி காலத்தில் இருந்தே காதலித்து வருகிறார் சந்தீப் கிஷன். கொஞ்சம் முன் கோபக்காரர். கணிணி பொறியியல் படித்தும் வேலைக்கு போகாமல் நண்பர்களுடன் ஊரைச் சுற்றி வருகிறார். “உன்னை எப்படி காதலிப்பது…?” என்று கேட்டு ரெஜினா இப்போதுவரையிலும் இவரது அப்ளிகேஷனை பெண்டிங்கில் வைத்திருக்கிறார்.
ரெஜினாவை பார்க்க அடிக்கடி அவரது அலுவலகத்திற்கு சந்தீப் கிஷன் சென்றுவருவதை பார்க்கும் லோக்கல் ரவுடி ஒருவன் கும்பலாக வந்து ரெஜினாவை தொடர்வதை கைவிடும்படி எச்சரிக்கிறான். அவனை அடித்து மூக்கை உடைத்து அனுப்பி வைக்கிறார் சந்தீப்.
அன்றைய இரவில் தனது நண்பர்களுடன் டாஸ்மாக் கடைக்கு வரும் சந்தீப், தனது காதல் நிறைவேறாத சோகத்தை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
சார்லி தனது மகனின் ஆஸ்துமா நோயின் சிகிச்சைக்காக சென்னை வந்து குடியேறுகிறார். கால் டாக்சி ஓட்டுநர். பிகேபி என்னும் மதுசூதனனின் நிறுவனத்தில் ஒரு காரை வாடகைக்கு எடுத்து ஓட்ட நினைத்திருக்கிறார்.
இந்த நேரத்தில் காலையில் சந்தீப்பிடம் மூக்குடைபட்டவன் சந்தீப்பை அடிக்க ஆட்களை வரவழைக்கிறான். அவர்கள் டாஸ்மாக் வாசலில் காத்திருந்து ஆள் தெரியாமல் சந்தீப்புக்கு பதிலாக ஸ்ரீயை அடித்து உதைத்து அவருடைய சர்டிபிகேட்டுகள் இருந்த பையை பிடுங்கிக் கொண்டு ஓடி விடுகிறார்கள்.
மறுநாள் ஒரு வழியாக தனது நண்பனை தொடர்பு கொண்டு பேசிவிட்டு வேலை கொடுக்கும் நிறுவனத்திடமே சென்று இது குறித்து பேச நினைக்கிறார் ஸ்ரீ. அதற்காக பேருந்தில் செல்லும்போது ஏற்படும் இன்னொரு குளறுபடியால், போலீஸ் ஸ்டேஷன் வாசல்படியை மிதிக்கிறார் ஸ்ரீ.
ஒரு வழியாக போலீஸ் ஸ்டேஷனில் இருந்து மீண்டு நிறுவனத்துக்குச் சென்று விஷயத்தைச் சொல்ல அதற்குள்ளாக அவருக்குள் ஏற்படும் சோதனைகள், வேதனைகள், அயர்ச்சிகள் அனைத்தும் அவரை சென்னையைவிட்டே ஓடிவிட வேண்டும் என்று நினைக்க வைக்கிறது.
இருந்தாலும் தனது காதலியின் ஏற்பாட்டில்தான் தனக்கு வேலை கிடைக்கவிருக்கிறது என்று தெரிந்து, வேலைக்கு உத்தரவாதம் வாங்கினாலும் சர்டிபிகேட்டுகளை சமர்ப்பிக்க வாய்தா வாங்கிக் கொண்டு வருகிறார்.
சூது, வாது தெரியாமல் திருட்டுத் தொழிலுக்குள் அடியெடுத்து வைக்கும் முனீஸ்காந்த் முதல் முயற்சியிலேயே ஆள் கடத்தல் தொழிலில் ஈடுபடுகிறார். தூக்க வேண்டிய பையனை விட்டுவிட்டு, தவறுதலாக பிகேபியின் பையனை தூக்கி வந்துவிடுகிறார்.
பி.கே.பி. சென்னையில் மிக பெரிய ரவுடி கும்பலின் தலைவர் என்பதால் முனீஸ் டீமின்  தலைவன் முதலில் பயந்தாலும், பின்பு துணிந்து பேரம் பேசுகிறான். தனது மகனை மீட்க பெரும் பணத்துடன் மதுசூதனனும் களத்தில் இறங்குகிறார். வாழ்வா, சாவா போராட்டத்தில் இருக்கிறார்கள் முனீஸ்காந்தின் டீம்.
சந்தீப் கிஷன் செய்யும் ரவுடித்தனத்தால் அவர் கைதாகும் சூழல் இருந்தும் அவருடைய சித்தப்பாதான் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருப்பதால் தப்பித்தவர்.. ஊரைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இருந்தும் தனது காதலியான ரெஜினாவைவிட்டுவிட்டுப் போக அவருக்கு மனசில்லை.
இப்படி இந்த நான்கு பேருக்கும் ஒரு இரவில் ஏற்படும் பிரச்சினைகளை மையக் கருத்தாக வைத்து சங்கிலி தொடர்போல திரைக்கதை அமைத்து கச்சிதமான இயக்கத்தால் படத்தை வெற்றி படமாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
ஸ்ரீ அப்பாவித்தனமான நடிப்பையும், நடுவில் வெறுப்படைந்த நிலையில் ஊர் திரும்ப முனையும் கோபத்தையும் ஒருசேர காண்பித்திருக்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் கோபப்பட்டும், அதே கோபத்தை ரெஜினாவிடம் காண்பித்தும் விலகிப் போக நினைப்பவரை, ரெஜினாவின் ஒரு நிமிட கண்ணீர் கரைக்கின்ற காட்சி மிக யதார்த்தம்.
நல்லவனா கெட்டவனா என்பதையே ஊகிக்க முடியாத அளவுக்கு இருக்கும் நண்பனை வைத்துக் கொண்டு சென்னையில் எதையும் செய்துவிட முடியாது என்பதையும் நமக்குக் காட்டுகிறார் ஸ்ரீ.
முன் கோபத்தினால் ஏற்படும் முன், பின் விளைவுகளை பற்றி யோசிக்காமல் போட்டுத் தள்ளும் வேடத்தை ஏற்றிருக்கும் சந்தீப் கிஷன் அந்த கேரக்டரை நிறையவே தாங்கியிருக்கிறார். தன் காதலைச் சொல்லும் இடத்தில் மட்டும்தான் எரிச்சலான ஒரு மனநிலையை கொடுத்தாலும்.. தன்னுடைய முரட்டுத்தனம் தனக்கானது மட்டுமே என்பதை இறுதிவரையிலும் காண்பித்திருக்கிறார்.
ரெஜினாவுக்கு மீண்டும் ஒரு பெயர் சொல்லும் படம். சந்தீப்புக்கு அட்வைஸ் செய்தும் உருப்படாமல் இருக்கிறானே என்கிற கவலையை வெளிக்காட்டாமல் எதிர்ப்பு காட்டும் நடிப்பு.. பையனை வீட்டில் விட்டுவிட்டு வந்தால் காதலை பற்றி யோசிப்பதாகச் சொல்லும் காட்சியில் அக்மார்க் காதலிகளை உணர்த்தியிருக்கிறார்.
சார்லியின் பண்பட்ட நடிப்புக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு இந்தப் படம். என்னவொரு டைமிங் டெலிவரி.. வசன உச்சரிப்பில் பழைய நடிகர்களிடத்தில் நிறையவே பாடம் கற்க வேண்டிய சூழல் இருக்கிறது. தன்னுடைய முதல் டிரிப்பிலேயே சிக்கல் வந்துவிடக் கூடாது என்று நினைத்து தயக்கத்துடன் ஸ்ரீயை அமர்த்தும் விதமும், தன் மகன் மருத்துவமனையில் இருப்பதை தெரிந்தும் பதட்டப்படாமல் கஸ்டமரை வீட்டில் விட வேண்டும் என்று பக்குவமாக போனில் சொல்லும் காட்சியே போதும் சார்லி என்னும் நடிகனுக்கு..!  பாராட்டுக்கள்ண்ணே..!
கை தட்டலை அள்ளிக் குவித்திருப்பவர் முனீஸ்காந்துதான். என்னவொரு அப்பாவித்தனமான நடிப்பு…? அவ்வப்போது இறங்கிக் கொண்டே போகும் பேண்ட்டை இழுத்துவிட்டுக் கொண்டே அவர் நடக்கும் ஸ்டைலான நடையிலேயே நமக்கு சிரிப்பு தானாகவே வருகிறது.
மதுசூதனனிடம் போனிலேயே மன்னிப்பு கேட்கும் காட்சியிலும், ஆள் மாற்றி தூக்கி வந்த்தை அப்பாவியாய் நியாயப்படுத்தும் காட்சியிலும்.. இறுதியில் பணப்பையை ஏற்காமல் மறுதலித்துவிட்டு அதே நடையில் நடந்து செல்லும் காட்சியில் ‘ஐ லவ் யூ செல்லம்’ என்று கொஞ்சவே வைத்திருக்கிறார் முனீஸ்காந்த். வெல்டன் ஸார். மதுசூதனின் மகனாக நடித்திருக்கும் அந்தச் சிறுவனைகூட மிக அழகாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.
செல்வகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பலம். பெரும்பாலான காட்சிகள் இரவு நேரத்திலேயே நடந்திருப்பதால் மிகவும் சிரமப்பட்டு படமாக்கியிருப்பது தெரிகிறது. ஒளிப்பதிவாளரின் திறமைக்கு இந்தப் படம் ஒரு சான்றாகவே இடம் பிடித்திருக்கிறது.
படத் தொகுப்பாளர் பிலோமின் ராஜின் அறிமுக பணிக்கு ஒரு ஷொட்டு. பேருந்து காட்சி.. சண்டை காட்சிகள்.. கிளைமாக்ஸ் காட்சிகளில் படத் தொகுப்பாளரின் உதவியால் இன்னும் அதிகமான திரில்லிங்கை சந்திக்க நேர்ந்திருக்கிறது.
நல்லவேளையாக பாடல் காட்சிகள் படத்தின் கதையையும் சேர்த்தே சொல்லியிருப்பதால் படத்திற்கு அதுவும் ஒரு திரைக்கதையாக பயன்பட்டுவிட்டது. ஜாவித் ரியாஷின் இசையில் ‘ஏண்டி உன்னை பிடிக்குது’ மயக்கும் மெலடி. டைட்டில் பாடலும் சென்னையின் பெருமையை பேசுகிறது. அதிலும் அந்த அனுமேஷனில் பின்னியிருக்காங்க..! பின்னணி இசைக்காகவும் இன்னொரு ஷொட்டு இசையமைப்பாளருக்கு.
‘முண்டாசுப்பட்டி’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படங்களை போல நீண்ட இடைவெளிக்கு பிறகு காட்சிக்கு காட்சி கைதட்டலுடன் ரசிக்க வைத்தது இந்தப் படம்தான் என்று உறுதியாகச் சொல்லலாம்.
திரைக்கதையில் கொஞ்சமும் குழப்பம் இல்லாமல் வரிசைக்கிரமமாக அடுக்கி வைத்திருக்கும் சீட்டுக் கட்டுக்கள்போல காட்சிகளை அமைத்திருக்கும் படைப்புத் திறமையை பெரிதும் பாராட்டுகிறோம். அதேபோல் இவர்களுக்கான காட்சிகள்கூட யதார்த்த வாழ்வியலை மையமாக கொண்டே.. அதிலும் மக்களை எளிதில் தொட்டுவிடும் கதையாகவும் தேர்ந்தெடுத்திருப்பதுதான் இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம்.
ஹீரோயிஸ படமாக இது இருக்கவே கூடாது என்பதை இயக்குநர் நன்கு தெளிவாக உணர்ந்து திரைக்கதை அமைத்திருப்பதால் இந்தப் படம் தப்பியது என்றே சொல்லலாம்.
இரண்டே  நாட்களில் நடக்கிற கதை. ஆனால் எந்த இடத்திலும் சுவாரஸ்யம் குறையாமல் திரைக்கதையை நகர்த்தி சென்றிருக்கிறார். மூன்று கேரக்டர்களும் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது. ஒருவருக்கொருவர் தொடர்பில்லை என்றாலும், அந்த சிச்சுவேஷன் இறுதிவரையிலும் தொடர்வது.. அடியாட்களை கொண்டு வந்து அடிக்க வைப்பது எதிர்பாராத விஷயம்.
இதேபோல் ரெஜினா மின்னல் வேகத்தில் திரும்பவும் ஓடி வந்து சந்தீப்பின் பேக்கை தூக்கிக் கொண்டு செல்லும் காட்சியில் காதலையும் அழுத்தமாகப் பதிய வைத்திருக்கிறார் இயக்குநர்.
பேருந்தில் நடக்கும் அந்த குற்றச் செயலை நினைத்து பார்க்கவே இல்லை. சந்தீப் ரெஜினாவை தரிசிக்கத்தான் காத்திருக்கிறார் என்று நினைக்கும்படியான திரைக்கதையில் திடீரென்று இந்த கதை வர.. அப்போதே ரசிகர்களை கவர்ந்திழுக்கிறது திரைக்கதை.
கையில் காயம்பட்டவன் தானாக வந்து மாட்டுவது.. மதுசூதனின் அண்ட் கோ-வின் செல்போன் டிரேஸ் கண்டுபிடிப்பு.. ஒவ்வொருவரையாக அழைத்து வந்து சுளுக்கெடுப்பது.. காவல்துறையின் உள்ளடி வேலை.. இன்ஸ்பெக்டர் பம்பர் பரிசை பெற தனது கிரிமினல் வேலையைக் காட்டுவது.. சந்தீப்பின் எதிர்பாராத கிளைமாக்ஸ் எண்ட்ரி. இதைத் தொடர்ந்து நடக்கும் பரபரப்பு சம்பவங்கள் என்று இறுதியில் சீட்டின் நுனிக்கே கொண்டு வந்துவிட்டார் இயக்குநர்.
இறுதியில் விதியின் விளையாட்டு கோரமாக இருக்கின்ற கிளைமாக்ஸ் காட்சியில்கூட இன்ஸ்பெக்டர், ஏட்டு இருவரின் நடிப்பிலும் ஒரு சஸ்பென்ஸ், திரில்லரை வரவழைத்திருக்கிறது இயக்குநரின் இயக்கத் திறமை.
அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்கவே முடியாத அளவுக்கு காட்சிகளை  அமைத்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.  காதல், செண்டிமெண்ட், நகைச்சுவை, ஆக்சன் என்று அனைத்தையுமே மிக்ஸ் செய்து ஒரு ஜூகல்பந்தியை சமர்ப்பித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
சந்தேகமேயில்லாமல் இந்தாண்டின் சிறந்த படங்களுக்கான போட்டியில் முதல் இடத்தில் இப்போது இருப்பது இந்தப் படம்தான்.
‘அவசியம் பார்த்தே தீர வேண்டிய படம்’ என்கிற லிஸ்ட்டில் இந்தப் படம் இடம் பிடித்திருப்பதே இந்தப் படத்தின் வெற்றிக்கு உதாரணம்.
வருங்கால இயக்குநர்கள் திரைக்கதை, இயக்கம் பற்றி கற்றுக் கொள்ள வேண்டிய படம் இது..!
மிஸ் பண்ணிராதீங்க..!

0 comments: