மொட்ட சிவா கெட்ட சிவா - சினிமா விமர்சனம்

11-03-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பல வெற்றி படங்களை தயாரித்த ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் பட நிறுவனம் பிரம்மாண்டமான செலவில் தயாரித்துள்ள படம் இது. சூப்பர் குட் பிலிம்ஸின் 88-வது தயாரிப்பு இது.
இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாகவும் நிக்கி கல்ரானி நாயகியாகவும் நடித்துள்ளனர். ஒரு முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார். மற்றும் சதீஷ், தம்பி ராமையா, மனோபாலா, கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – சர்வேஸ் முராரி, வசனம் – ஜான் மகேந்திரன், இசை – அம்ரிஷ், கலை – செல்வகுமார், படத் தொகுப்பு – பிரவீன்.கே.எல்., சண்டை பயிற்சி – கணேஷ், திரைக்கதை, இயக்கம் – சாய் ரமணி, தயாரிப்பு – ஆர்.பி.செளத்ரி.
தெலுங்கில் கல்யாண் ராம் நடித்து சூப்பர் ஹிட்டான ‘பட்டாஸ்’ என்கிற படத்தின் ரீமேக்குதான் இந்தப் படம்.
இதுவரையிலும் பேய்களை மட்டுமே வைத்து குடும்பம் நடத்திக் கொண்டிருந்த ராகவா லாரன்ஸ், இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக ‘சிங்கம்’ சூர்யாவுக்கு போட்டியாக போலீஸ் வேடத்தில் களமிறங்கியிருக்கிறார்.

தமிழகத்தின் மிகப் பெரிய பணக்காரரான ஜி.கே., தமிழக அரசியலை தீர்மானிக்கும் அளவுக்கு சக்தி படைத்தவராக இருக்கிறார். னக்கு ஒத்துவரவில்லையென்றபோது வீட்டு வசதித் துறை அமைச்சரையே ஒரேயொரு போன் மூலமாகவே வீட்டுக்கு அனுப்புகிறார். இப்பேர்ப்பட்ட ஜி.கே.வுக்கும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரான சத்யராஜுக்கும் ஏழாம் பொருத்தம்.
போலீஸ் என்றாலே தனக்குப் பிடிக்காது என்று சொல்லிக் கொள்ளும் ஜி.கே. போலீஸை தனது அடியாள்போலவே நடத்துகிறார். அவருடைய அடாவடியால் பாதிக்கப்பட்டவர்களில் போலீஸாரும் அடக்கம் என்றாலும் யாரும் அவர் மீது கை வைக்க முடியாதபடி அரசியல் தொடர்பும், குண்டர்கள் ராஜ்ஜியமும் தொடர்கிறது.
இந்த நேரத்தில் மத்திய அமைச்சர் ஒருவரை தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றுகிறார் ஹீரோவான ராகவா லாரன்ஸ். இப்போது இவர் போலீஸ் எஸ்.பி. அமைச்சரை காப்பாற்றியதற்காக தனக்கு சென்னையில் போஸ்டிங் வேண்டும் என்று அதே மந்திரியிடமே கோரிக்கை வைத்து சென்னைக்கு மாற்றலாகி வருகிறார்.
வந்தவுடனேயே தி.நகரில் இணை கமிஷனராக போஸ்டிங்.. கமிஷனர் என்கிற மரியாதைகூட இல்லாமல் சத்யராஜிடம் சவுண்டு விடுகிறார் ராகவா லாரன்ஸ். தி.நகர். ஸ்டேஷனில் பதவியேற்றவுடனேயே தான் இந்தப் பதவிக்கு எதற்காக வந்தோம் என்பதை தனது சரகத்துக்குட்பட்ட அனைத்து போலீஸாரிடமும் தெளிவாகச் சொல்லிவிடுகிறார்.
“அள்ளிக்கோ.. தட்டிக்கோ…” என்பதுதான் தனது பாலிஸி என்றும், “முடிந்தவரையிலும் இங்கே போஸ்டிங் இருக்கின்றவரையிலும் சம்பாதித்துக் கொள்ள வேண்டியதுதான்…” என்கிறார். இதற்கு இன்ஸ்பெக்டரம்மா கோவை சரளாவும், சப் இன்ஸ்பெக்டர் சதீஷும், ஏட்டு சாம்ஸும் உடந்தையாகிறார்கள்.
இதே நேரம் எந்நேரமும் பாவாடை தாவணியில் மைக்கை கையில் பிடித்துக் கொண்டு சன் டிவி ரிப்போர்ட்டராக வலம் வரும் நிக்கி கல்ரானியை பார்த்தவுடன் லவ்வாகிறார் லாரன்ஸ். தனது தங்கையை நல்லதொரு போலீஸ்காரரின் கையில்தான் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கும் நிக்கி கல்ரானியின் அக்காவான தேவதர்ஷிணிக்கு தேவையான அனைத்தையும் வாங்கிக் கொடுத்து அவரது மனதில் இடம் பிடிக்கிறார் ராகவா லாரன்ஸ்.
இன்னொரு பக்கம் ஜி.கே. தனது தம்பியான வம்சி கிருஷ்ணாவை கட்சியில் இறக்கி அவருக்கு ஒரு அரசியல் அதிகாரப் பதவியைப் பெற்றுக் கொடுக்க விரும்புகிறார். இந்த நேரத்தில் ராகவா லாரன்ஸுக்கு மிகவும் தெரிந்த காது கேளாத, வாய் பேசாத பெண்ணை வம்சி கிருஷ்ணாவும், அவரது அடியாட்களும் பாலியல் பலாத்காரம் செய்து விடுகிறார்கள்.
இதுவரையிலும் ஜி.கே.வுக்கு ஆதரவாக பல சட்டவிரோத செயல்களை செய்து வந்த ராகவா லாரன்ஸை இந்தச் சம்பவம் உலுக்கியெடுக்கிறது. சிறு வயதில் தனது தங்கைக்காக தான் காத்திருந்த தருணம் அப்போது அவரை வாட்டியெடுக்க மனம் மாறுகிறார்.
அதே நேரம் ராகவா லாரன்ஸ், சத்யராஜின் மகன்தான் என்று ஜி.கே. சத்யராஜிடம் சொல்ல.. சத்யராஜ் அதிர்ச்சியாகிறார். 20 ஆண்டுகளுக்கு முன்பாக மனைவி இரண்டாவது பிள்ளையை வயிற்றில் சுமர்ந்திருந்த நேரத்தில் கடமைதான் முக்கியம் என்று சத்யராஜ் டூட்டிக்கு சென்றுவிட்டதால் மனைவியை இழந்துவிட்டார். இந்தக் கோபத்தில் மகனும் அவரைவிட்டு ஓடிவிட்டதால் பெரும் சோகத்தில் இருந்தவர்.. இப்போது தனது மகனை பார்த்த சந்தோஷத்தில் திளைக்கிறார்.
ராகவா லாரன்ஸிடம் போலீஸ் டிபார்ட்மெண்ட் பற்றியும், தன்னுடைய கடமையுணர்ச்சியால்தான் அவரது அம்மா இறந்து போனார் என்றும், அந்தக் குற்றவுணர்ச்சி இன்னமும் தன்னை வாட்டியெடுப்பதையும் சென்டிமெண்ட்டாக பேச.. ராகவா லாரன்ஸ் மனம் மாறி அப்பாவுடன் இணைகிறார்.
அதோடு ஜி.கே.வின் தம்பியை இந்த பாலியல் வழக்கில் கைது செய்து தண்டனை வாங்கித் தருவேன் என்று சவால் விடுகிறார் ராகவா லாரன்ஸ். “முடிந்தால் செய்து பார்…” என்கிறார் ஜி.கே. ஹீரோ ராகவா லாரன்ஸ், வில்லனின் இந்த சவாலை ஏற்று அதனைச் செய்து காட்டினாரா என்பதுதான் இடைவேளைக்கு பின்னான திரைக்கதை.
கரம் மசாலா கலந்த தெலுங்கு படத்தை பார்த்த உணர்வைத்தான் படம் தருகிறது. கமர்ஷியல் படத்திற்குண்டான அனைத்து வகை பட்சணங்களையும் வைத்து ஒரு முனியாண்டி விலாஸ் விருந்தையே கொடுத்திருக்கிறார் இயக்குநர் சாய் ரமணி.
படம் முழுக்க, முழுக்க ஹீரோ ராகவா லாரன்ஸையே சுற்றி சுற்றி வருகிறது. மனிதரின் கையும், காலும் ரப்பராட்டம் வளைந்து கொடுப்பதை பார்த்தால் தெலுங்கில் ஏன் இந்த மனிதருக்கு இன்னமும் மவுசு கூடிக் கொண்டே போகிறது என்பது தெரிகிறது.
நடனத்தில் ஹீரோயின் நிக்கி கல்ரானியே லாரன்ஸுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறுகிறார். ஆஸ்தான நாயகியான ராய் லட்சுமி ஒரு பாட்டுக்கு ஆடிக் கொடுத்து தனது திறமையை வெளிக்காட்டியிருக்கிறார். சண்டை காட்சிகளில் தொழில் நுட்பத்தின் உதவியால் பரபரப்பான காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள்.  
ராகவா லாரன்ஸுக்கு இது இரண்டுமே கை வந்த கலை என்றாலும், நடிப்பு என்று பார்த்தால்தான் ஏமாற்றமாகிறது. அதையும் கொஞ்சம் அதிகமாகக் கற்றுக் கொண்டு வந்தாரென்றால் நன்றாகவே இருக்கும்.
போலீஸ் என்றாலே வேகம் இருக்கும். அதே நேரம் விவேகமும் இருக்க வேண்டும். இப்படி காட்டுக் கத்துக் கத்தி சிங்கம் சூர்யாவை போலவே நடித்தால் எவ்வளவுதான் தாங்குவது..? கொஞ்சம் குறைத்திருக்கலாம் இயக்குநரே..!
நிக்கி கல்ரானியை போன்று ஒரு பத்திரிகையாளரை இந்தப் பத்திரிகாவுலகமே இதுவரையிலும் கண்டதில்லை. வரும் காட்சிகளிலெல்லாம்  அவரது முகத்தைவிட அவரது தொப்புளே பிரதானமாக காட்டப்படுகிறது. முந்தைய லாரன்ஸின் படங்களில் ராய் லட்சுமியை திகட்ட திகட்ட காட்டியிருந்தார். இந்த முறை நிக்கி கல்ரானி..! பரவாயில்லாமல் நடித்திருக்கிறார். அவருக்கு ஏதாவது அழுத்தமான காட்சி கொடுத்திருந்தால்தானே இவரது நடிப்பைப் பற்றிச் சொல்ல முடியும்..!?
நடிப்பென்று பார்த்தால் வில்லனாக நடித்திருக்கும் அசுதோஷ் ராணாவை பாராட்டியே தீர வேண்டும். மிகச் சிறப்பான நடிப்பு. ஆனால் கடைசியில் உயிருக்கு பயப்படும் கோழையாக இவரைக் காட்டிவிட பொசுக்கென்று போய்விட்டது இவரது கேரக்டர் ஸ்கெட்ச்.
சத்யராஜ் படத்தில் இருக்கிறார். போலீஸின் வீரத்தை பற்றி ராகவா லாரன்ஸுக்கு எடுத்துச் சொல்லும் காட்சியில் மட்டுமே நடித்திருக்கிறார். அவருக்கு தோதான ஒரேயொரு காட்சியாக வில்லனை நக்கல்விடும் காட்சியில் பழைய சத்யராஜை எதிர்பார்த்து காத்திருந்தோம்.. அது மிஸ்ஸிங்..! ஏனுங்க கவுண்டரே இப்படி..?
அடக்கமாக வாசித்திருக்கும் கோவை சரளா.. கிச்சுகிச்சு மூட்ட முனைந்திருக்கும் சதீஷ், சாம்ஸ் கோஷ்டி.. மற்றும் மனோபாலா, தம்பி ராமையா, விடிவி கணேஷ் ஆகியோர் ஒத்தடம் கொடுக்கும் வேலையை மட்டும் கச்சிதமாக செய்திருக்கின்றனர்.
சர்வேஸ் முராரியின் ஒளிப்பதிவு படத்தில் பாராட்டக்கூடிய விஷயத்தில் முதன்மையாக இருக்கிறது. பாடல் காட்சிகள் என்றில்லை.. படம் முழுவதிலுமே இவருடைய கை வண்ணத்தால் படம் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட காட்சியமைப்புக்குள் சிக்கியிருக்கிறது. பாடல் காட்சிகளில் விளையாடித் தீர்த்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். அந்த விளையாட்டுக்கு ஈடு கொடுத்து சுழன்றிருக்கிறது இவருடைய கேமிரா. வெல்டன்.
அடுத்து பாராட்டுக்குரியவர் கலை இயக்குநரும், உடை வடிவமைப்பாளரும். வண்ணமயமான காட்சிகளை திரையில் கொண்டு வந்ததில் கலை இயக்குநரும், உடை வடிவமைப்பாளரும் பெரும் சிரத்தையெடுத்து உழைத்திருப்பது தெரிகிறது. பாராட்டுக்கள் வாழ்த்துகள். நடனக் காட்சிகளில் இரண்டு ஹீரோயின்களுக்கும் கைக்குட்டை சைஸ் உடைகளையே கொடுத்திருந்தாலும் அதையும் அழகான கலர்களில் தேர்வு செய்து பிட் செய்திருக்கும் வித்தைக்கு ஒரு ஷொட்டு..!
புதுமுக இசையமைப்பாளர் அம்ரிஷுக்கும் ஒரு பாராட்டு. படத்தில் ஐந்து பாடல்களுமே அதிரடியானவை. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று இருப்பவர்களை எழுந்து நின்று ஆட வைக்கும் இசையைத்தான் தருவித்திருக்கிறார் அம்ரீஷ். ‘ஹரஹர மஹாதேவகி’ பாடலை வேறு கணீர் குரலோன் யாரிடமாவது பாடக் கொடுத்திருக்கலாம். சுசித்ரா ஓகேதான்.. அம்ரீஷ்தான் சிக்கலை கொடுத்திருக்கிறார். பாடல் வரிகளே கேட்கவில்லை.
‘காக்கி சட்டை பயரு’, ‘மொட்டை பையன்’ பாடல் காட்சிகளில் ஸ்டெப்புகளை அநியாயத்திற்கு போட்டு வளைத்திருப்பதால் பாடலும் மின்னல் வேகத்தில் காதுகளில் துளைத்து அடுத்த காதின் வழியே வெளியே போய்விட்டது என்பதை பதிவு செய்ய விரும்புகிறோம்.
பழம் பெருமை வாய்ந்த பாடல்களை தயவு செய்து யாரும் ரீமிக்ஸ் செய்து இப்படி கொலை செய்யாதீர்கள் என்பதை தமிழ் திரைப்பட ரசிகர்கள் சார்பில் மீண்டும், மீண்டும் கெஞ்சி கேட்டுக் கொள்கிறோம்.
‘குடியிருந்த கோவில்’ படத்தின் ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு’ பாடல் இந்தப் படத்தின் கதைக்கும், திரைக்கதைக்கும், தேவையில்லாதது. ஆனால் ஏன் இப்படி படுகொலை செய்தார்கள் என்று புரியவில்லை.
நல்ல கான சாரீரம் உள்ளவரிடத்திலாவது பாடலை பாட கொடுத்திருக்கலாமே..? இப்போதும் எத்தனையோ மேடை கச்சேரிகளில் டி.எம்.எஸ். மற்றும் சுசீலா குரலில் அச்சு அசலாக பாடுபவர்கள் நிறைய இருக்கிறார்களே..! அப்படி பாட வைத்திருந்தாலாவது ஒரு ஒற்றுமையும், கவன ஈர்ப்பும் கிடைத்திருக்குமே..? இப்போதைய இரண்டு குரல்களுமே நம்மிடத்தில் காலம் காலமாக புதைந்து கிடந்த இந்தப் பாடலை, சட்டென நம்மிடமிருந்து அன்னியமாக்கிவிட்டதால் கோபம்தான் எழுந்தது.
பழைய பாடலில்கூட எல்.விஜயலட்சுமியை கண்ணியமாக ஆட வைத்திருந்தனர். ஆனால் இதில்.. இப்படியா..? நல்லவேளை எம்.ஜி.ஆரும், எம்.எஸ்.வி.யும், ஆலங்குடி சோமுவும், டி.எம்.எஸ்ஸும் உயிருடன் இல்லை. அவர்கள் தப்பித்துவிட்டார்கள்.
சத்யராஜுக்கு ராகவா லாரன்ஸ் தன் மகன் என்று இடைவேளையின்போது ஜி.கே. சொல்லித்தான் தெரிகிறது. அதுவரையிலும் ராகவா லாரன்ஸ் செய்யும் தவறுகளை சத்யராஜ் ஏன் பொறுத்துக் கொண்டு அமைதியாய் இருக்கிறார் என்றுதான் தெரியவில்லை. அது அவரது அதிகாரத்துக்குட்பட்ட விஷயமாச்சே..?!
படத்தில் குறிப்பிடத்தக்க ஒரேயொரு நல்ல விஷயம்.. ஜி.கே.வுக்காக போராடும் மாணவர்களை அவரது அம்மாமார்களை வரவழைத்து அவர்கள் மூலமாக அடித்து விரட்டுவது.. இது ஓவரான கற்பனை திறன் என்றாலும் புதிய முயற்சி என்பதற்காகவே பாராட்டலாம்.
இப்போதுதான் திகட்ட திகட்ட போலீஸாரிடம் பல்வேறு மாணவ அமைப்பினரும் ‘லத்தி சார்ஜ்’ என்ற கொடூரத்தின் மூலம் மாட்டடி வாங்கியிருக்கிறார்கள். இந்த நேரத்தில் படம் முழுக்க போலீஸை பாராட்டி பேசுவது போல காட்சிகளை வைத்தால் அதனை ரசிகர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்பதை இயக்குநர் யோசித்தாரா என்று தெரியவில்லை. போலீஸ் இப்போதும் மாணவர்களுக்கு முழு எதிரிகள்தான்..! ஹீரோவும், இயக்குநரும் இதனை புரிந்து கொண்டால் நலம்.
ராகவா லாரன்ஸ் நைச்சியமாக வழக்கம்போல பத்திரிகையாளர்களை கிண்டல் செய்யும் வேலையை இதிலும் தொடர்ந்திருக்கிறார். தான் விரும்பும் செய்திதான் பத்திரிகைகளில் வர வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்தவிதத்திலும் நியாயமில்லை ஸாரே..?! அதற்காக தனக்கு வாய்ப்பிருக்கும் மீடியாவில் வைத்து கிண்டல் செய்வது பரஸ்பரம் இரு தரப்பினரின் நட்புணர்வையும் பாதிக்கும் என்பதை லாரன்ஸ் புரிந்து கொள்ள வேண்டும்.
எல்லாம் இருந்தும் கதை என்ற ஒன்றில் இத்தனை குளறுபடிகளையும் வைத்துக் கொண்டு வேகமான திரைக்கதையையும், நொந்து போகாத இயக்கத்தையும் செய்திருந்தாலும் இதையும் மீறி படம் நன்றாக இருக்கிறது என்று சொல்ல… வேறு சிலவும் தேவை இயக்குநரே..!
ஆனால், “ஒரு கமர்ஷியல் படத்திற்குண்டான அனைத்து அம்சங்களும் எங்களது படத்தில் உண்டு. எந்த லாஜிக்கும் பார்க்காமல் படத்தைப் பார்த்தோமோ.. ரசித்தோமோ.. போனோமான்னு இருக்கணும்” என்பதே இந்த இயக்குநரின் உத்தரவாக இருக்கிறது..!
மசாலா பட பிரியர்களுக்கு நிச்சயமாக பிடிக்கும்..!

2 comments:

Sindhai said...
This comment has been removed by the author.
Sindhai said...

‘குடியிருந்த கோவில்’ படத்தின் ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு’ பாடலில் எம் ஜி ஆருடன் ஆடுவது ராஜஸ்ரீ இல்லைண்ணா ...அது L.விஜயலட்சுமி

https://en.wikipedia.org/wiki/L._Vijayalakshmi