கடுகு - சினிமா விமர்சனம்

25-03-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ரஃப் நோட் புரொடெக்சன்ஸ் சார்பில் பாரத் சீனி இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இதில் ராஜகுமாரன், பாரத் இருவரும் மிக முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். மேலும் ராதிகா பிரஷிதா, சுபிக்சா, ஏ.வெங்கடேஷ், தயா வெங்கட், சக்தி, ஷான்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – எஸ்.டி.விஜய்மில்டன், இசை – எஸ்.என்.அருணகிரி, பின்னணி இசை – அனூப் சீலின், பாடல்கள் – மதன் கார்க்கி, படத் தொகுப்பு – ஜான் ஆபிரஹாம், கலை இயக்கம் – ஆர்.ஜனார்த்தன்ன், சண்டை பயிற்சி – சுப்ரீம் சுந்தர், உடைகள் – சீனு, நடனம் – ஸ்ரீதர், மேக்கப் – மோகன், ஸ்டில்ஸ் – அஜய் ரமேஷ், தயாரிப்பு நிர்வாகம் – அண்ணாமலை, செல்வா, தயாரிப்பு – பாரத் சீனி, விநியோகம் – 2டி எண்ட்டெர்டெயின்மெண்ட், எழுத்து, இயக்கம் – எஸ்.டி.விஜய்மில்டன்.
“கெட்டவங்களவிட மோசமானவங்க யாருன்னா.. கெட்டது நடக்கும்போது அதைத் தடுக்காத நல்லவங்கதான்…” என்கிற உண்மையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது இந்தப் படம்.

அடிப்படையில் கேமிராமேனான விஜய்மில்டன் ‘கோலிசோடா’வை இயக்கிக் காண்பித்தபோது தமிழகமே அந்தப் படத்தைக் கொண்டாடித் தீர்த்தது. அந்தாண்டின் மிகச் சிறந்த படமாக அனைத்து விருதுகளையும் அந்த ஒரு படமே வென்றது.
அடுத்து அவர் இயக்கிய ‘10 எண்றதுக்குள்ள’ படம் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டதால்.. அடுத்த படத்தை வெற்றிப் படமாக்க  வேண்டுமே என்றெண்ணி மிக, மிக கவனமாக தன்னுடைய பழைய பார்முக்கு விஜய்மில்டன் திரும்பிவிட்டார் என்பதை அறிவிக்கும்விதமாக இந்த ‘கடுகு’ படத்தை இயக்கி அளித்திருக்கிறார்.
படம் முழுவதிலும் தரங்கம்பாடியை சுற்றியே வலம் வருகிறது. புலி வேஷம் போடும் கலைஞனான மத்திய வயதை எட்டியிருக்கும் ராஜகுமாரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏ.வெங்கடேஷுடன் அவருக்கு உதவியாக அவருடைய வீட்டிலும், போலீஸ் ஸ்டேஷனிலும் பணி செய்கிறார். அவ்வப்போது யாராவது புலி வேஷம் போட கூப்பிட்டால் போய் ஆடிவிட்டு வருவார்.
சூது, வாது தெரியாத தன்மையான மனிதர். அப்பழுக்கில்லாதவர் என்றே சொல்லலாம். அனைத்து உயிர்களுக்கும் அன்பை போதிப்பதே தன் லட்சியம் என்பதை வெளியில் சொல்லத் தெரியாமல், ஆனால் அதன்படியே வாழ்பவர்.
இன்ஸ்பெக்டரான ஏ.வெங்கடேஷுக்கு சென்னையில் இருந்து தரங்கம்பாடிக்கு டிரான்ஸ்பர் போடுகிறார்கள். தனக்கு சமையல் வேலைக்கு ஆள் வேண்டுமே என்றெண்ணி ராஜகுமாரனையும் அழைத்துக் கொண்டு தரங்கம்பாடிக்கு வருகிறார் வெங்கடேஷ்.
இங்கே வெங்கடேஷின் வீட்டில் அவருக்காக சமைத்து சாப்பாடு எடுத்துக் கொண்டு வருவதோடு, ஸ்டேஷனில் அனைவருக்கும் காபி, டீ போட்டுக் கொடுக்கும் வேலையையும் முகச் சுழிப்பே இல்லாமல் செய்து வருகிறார் ராஜகுமாரன்.
அதே தரங்கம்பாடியில் மிகப் பெரிய பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்தவர் பரத். இளைஞர். இன்னமும் திருமணமாகாதவர். எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாதவர். ஆனால் போலீஸுக்கு மாதாமாதம் படியளந்து, அவர்களுக்கு வேண்டும் என்கிற அனைத்து வசதிகளையும் செய்து தருபவர்.
அந்த ஊரில் ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் ராதிகா பிரஷிதா. இவருக்கு ஆதரவு கொடுத்திருக்கும் ஒரு அம்மாவும், அவரது பள்ளிக்குச் செல்லும் மகளும்தான் இவருக்கான உறவுகள்.
பரத் எப்படியாவது அரசியலில் நுழைந்து பெரிய ஆளாக வேண்டும் என்ற நினைப்பில் இருக்கிறார். இந்த நேரத்தில் லோக்கல் அமைச்சர் ஒரு நாள் அந்த ஊருக்கு வரவிருப்பதாகத் தகவல் வர.. அவரை தன்னுடைய வீட்டிலேயே தங்க வைக்க ஏற்பாடு செய்கிறார் பரத்.
வரும் அமைச்சரோ குடிப் பழக்கத்துடன் பெண் மோகம் கொண்டு அலைபவராகவும் இருக்கிறார். ராதிகா வேலை பார்க்கும் பள்ளியில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் பரத். இதே நிகழ்ச்சியில் புலி வேஷம் போட்டு ஆடுகிறார் ராஜகுமாரன்.
பள்ளிக்கு வரும் அமைச்சர் எதிர்பாராதவிதமாக கீர்த்தி என்னும் அந்த மாணவியை பார்த்தவுடன் மோகம் கொண்டு அந்த இடத்திலேயே அவளை அடைய நினைக்கிறார். இதனை தெரிந்து கொண்ட பரத், கடைசி நிமிடத்தில் தனக்கு எம்.எல்.ஏ. சீட்டு வாங்கித் தரவிருக்கிறாரே என்பதற்காக கீர்த்தியை காப்பாற்றாமல் விட்டுவிடுகிறார்.
ஆனால் கீர்த்தியைத் தேடி வரும் ராதிகா இந்த அலங்கோலத்தைத் தடுத்து கீர்த்தியைக் காப்பாற்றுகிறாள். இதன் பின்பு கீர்த்தியின் நடவடிக்கைகள் முற்றிலும் மாறுகின்றன. சரியாகச் சாப்பிட மறுக்கிறாள். எப்போதும் பயந்த உணர்வோடு இருக்கிறாள்.
அவளது இந்த நிலைமை ராஜகுமாரனை பயமுறுத்துகிறது. இதற்கான காரணத்தை அவர் அறிய முற்பட இந்த ரகசியங்களெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக அவருக்குத் தெரிகிறது. இதன் பின்பு சாதாரண அடையாள அட்டைகூட இல்லாத அந்த புலி வேஷம் போடும் பாண்டி என்னும் பிரஜை என்ன செய்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
கடுகு மிகச் சிறியதுதான். ஆனால் எண்ணெய்யில் போட்டவுடன் தன்னுடைய உடல் அளவுக்காவது கொஞ்சம் பொறுமலை காட்டும். அருகில் இருப்பவர்களின் உடம்பில் படும் அளவுக்கு தன்னுடைய வீரத்தைக் காட்டும். அதனால்தான் இந்தப் படத்திற்கு மிகப் பொருத்தமாக ‘கடுகு’ என்கிற பெயரை சூட்டியிருக்கிறார் இயக்குநர்.
ஒரு சாதாரண நபரால் ஒரு அநியாயத்தை எதிர்த்து தன்னந்தனியே நின்று ஜெயிக்க முடியுமா என்பதை யதார்த்தமான சூழலில் படமாக்கிக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் விஜய் மில்டன்.
எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும் என்பதை கண்டறிய முடியாது என்பதை போல எந்தவொரு நடிகனுக்குள்ளும் வேறொரு குணாதிசயத்தைக் காட்டும் ஒரு திறமை இருக்கும் என்பதை போல நடிகர் ராஜகுமாரனுக்கு இந்தப் படம் புதிய பரிமாணத்தைக் காட்டுகிறது.
அவர் நடித்த முந்தைய படம் கமர்ஷியலாக இருந்தாலும், அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் படம் முழுவதும் நடித்திருக்கிறார் என்றுகூட சொல்ல முடியாது.. வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
“யாருக்கும் தெரியாது என்கிறதுக்காக நம்ம மனசுக்குப் பிடிக்காமல் ஒரு கெட்டதை செய்யக் கூடாதுங்களே…” என்கிற விளக்கவுரையோடு திரையில் அறிமுகமாகும் ராஜகுமாரன், படம் முழுவதும் வியாபித்திருக்கிறார். அவர் வரும் காட்சிகளிலெல்லாம் தன்னுடைய கேரக்டர் ஸ்கெட்ச் கொஞ்சமும் கெட்டுவிடாமல் இயல்பு மாறாமல், மென்மையாக நடித்திருக்கிறார்.
பேஸ்புக் சாட்டிங்கை தற்செயலாக கற்றுக் கொண்டு யாரோ ஒரு பெண் தன்னிடம் பேசுவதை நினைத்து பெருமைப்படுவதும்.. அவளைப் பார்க்க ரயில் நிலையத்திற்கு ஓடி வந்து ரயிலில் அந்தப் பெண்ணின் கதையைக் கேட்டு இவர் படும் சங்கடமும், துயரமும் ஒருங்கே அவரது முகத்தில் தெரிகிறது.
தன்னை கிண்டல் செய்கிறார்கள். அடித்து அவமரியாதை செய்கிறார்கள் என்று தெரிந்தும் எதுவும் செய்ய முடியாத நிலையில் அவர் படும் துயரம்தான் அவருடைய கேரக்டருக்கு கனம் சேர்த்திருக்கிறது.
கீர்த்தியின் நிலையைப் பார்த்து பரிதாபப்பட்டு “பாவம் ஸார் அந்தப் பொண்ணு.. பச்ச மண்ணு.. அதைப் போய் இப்படி செஞ்சுட்டாங்களே..?” என்று போகிற இடமெல்லாம் அப்பாவியாய் கேட்பதையும், கிளைமாக்ஸில் பொறுத்தது போதும் பொங்கியெழு என்கிற மனோகரா ஸ்டைலில் இதே கேள்வியை ஆக்ரோஷமாக கேட்பதிலும் ராஜகுமாரன் காணாமல் போய் புலி பாண்டியே கண்ணுக்குத் தெரிகிறார். ஒரு நல்ல இயக்குநரின் கை பட்டால் மண்ணும் சிற்பமாகும் என்பதற்கு ராஜகுமாரன் மிகச் சிறந்த உதாரணம்.
நடிகர் பரத்திற்கு மிகப் பெரிய பாராட்டு. முதலில் இது மாதிரியான கேரக்டரில் நடிப்பதற்கு ஒரு தைரியம் வேண்டும். ஹீரோ வேஷம் போட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இப்படியொரு வில்லத்தனம் கலந்த கேரக்டர் என்றால் பலரும் யோசிக்கத்தான் செய்வார்கள். ஆனால் தனக்கு கேரக்டரே முக்கியம் என்றெண்ணி இதில் நடித்திருக்கிறார் பரத்.
முதல் அறிமுக்க் காட்சியில்கூட இவரது கேரக்டரை கணிக்க முடியாமல்.. ராஜகுமாரனை வைத்து ஜிம் பாய்களுக்கு டெமோ செய்து காட்டும் காட்சியிலும், அடுத்து பாரத் சீனியிடம் ஓடிப் போயிரு என்று மிரட்டும் காட்சிக்கும் பின்புதான் அவரது ஒரிஜினலாட்டி குணமே தெரிகிறது.
அமைச்சரின் பிடியிலிருந்து கீர்த்தியை விடுவிப்பார் என்று எதிர்பார்த்த தருணத்தில் வெறும் ஒற்றை தலையசைப்பில் அந்த அக்கிரமத்திற்கு தானும் உடந்தை என்பதைச் சுட்டிக் காட்டும்போது, இந்த நாட்டில் அரசியல் களம் எத்தனை ஆபத்தானது என்பதை உணர்த்துகிறார் இயக்குநர்.
அரசியல், அதிகாரம், பதவி, பணம், பெயர், புகழ் இதனை பெறுவதற்காக அப்பாவிகள் எத்தனை பேர் அழிக்கப்படுகிறார்கள் என்பதை நாம் தினம், தினம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதில் ஒன்றுதான் இந்த கீர்த்தி கேரக்டர்..!
பாரத் சீனி புதுமுக நடிகர். இந்தப் படத்தின் தயாரிப்பாளர். ரவுடி என்பதையே சுற்றி வளைத்து சொல்லி அறிமுகமாகிறார். கடைசிவரையிலும் ராஜகுமாரனுக்கு துணையாய் நின்று ஒரு அநியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க உதவியிருக்கிறார்.
இரண்டு முறை காதலைச் சொல்ல வாய்ப்பு கிடைத்தும் அது தற்செயலாக பரத்தின் காதலுக்கு துணையாக மாறுவதெல்லாம் சுவையான திரைக்கதை. பரத்தின் கைப்பிடிக்குள் சுபிக்சா இருக்கிறார் என்று தெரிந்தும் அவரது வீடு இருக்கும் தெருவுக்குள் போலீஸுடன் வர சங்கடப்படுவதும்.. அவர்களிடமிருந்து தப்பித்து சுபிக்சாவிடம் வந்து தான் யார் என்பதை குறிப்பால் உணர்த்திவிட்டுப் போகும் அந்த ஒரு காட்சி கைதட்டல் பெற்றது என்பது உண்மை.
‘குற்றம் கடிதல்’ படத்தில் பார்த்த அதே ராதிகாவை இதிலும் பார்க்க முடிகிறது. தன்னுடைய சொந்தக் கதையைச் சொல்லியழும் அவலத்தில் இருப்பவர்.. தன் மீதும் ஒருவர் இரக்கம் காட்டுகிறார் என்றவுடன் பட்டென்று ராஜகுமாரன் மீது அவர் காட்டும் கரிசனமும், நட்பும், காதலும்.. இயல்பானவை. அவருடைய கண்களே சில காட்சிகளில் பல விஷயங்களைச் சொல்கின்றன. அவருக்கு நேர்ந்த கொடுமையை கடைசிவரையிலும் சஸ்பென்ஸாக வைத்திருந்து வெடிக்கும் காட்சியில் அதன் அழுத்தத்தை பார்வையாளர்கள் மீது திணித்திருக்கிறார். நல்ல குணச்சித்திர நடிகையொருவர் தமிழ்ச் சினிமாவுக்குக் கிடைத்திருக்கிறார் என்றே சொல்லலாம்.
கீர்த்தி, மற்றும் கீர்த்தியின் அம்மாவாக நடித்தவர், போலீஸ் ஏட்டுவாக நடித்தவர் என்று அனைவருமே கதையை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். பரத்தின் பாட்டியாக வருபவர் கடைசியில் உண்மை தெரிந்து, தனது பாரம்பரியமான குடும்பத்தின் பெயர் கெட்டுவிட்டதே எண்றெண்ணி கதறி அழுவதை இந்தப் படம் சுட்டிக் காட்டிய மிகச் சிறந்த குறியீடாக கருதலாம்..!
அமைச்சராக நடித்திருக்கும் தயா வெங்கட்டிற்கு இது முக்கியமான படம். அவருடைய கண் காட்டும் காமப் பார்வையையும், வேஷ்டி அவிழ்ந்து மாட்டிக் கொள்ள.. டிரவுசருடன் நிற்கும் அவமானத்தில் இருவரையும் மாறி, மாறி பார்க்கும் வெட்கம் கலந்த பார்வையும்.. அந்த ஒரு காட்சியின் கொடூரத்தை உணர்த்தியிருக்கிறது.
எப்போதும் போல ஒளிப்பதிவை கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போலத்தான் செய்திருக்கிறார் விஜய் மில்டன். தரங்கம்பாடியின் உள் அழகையும், வெளி அழகையும் அவர் பதிவாக்கியிருக்கும் விதமும், சில காட்சிகளுக்கு வைத்திருக்கும் கேமிரா கோணங்களும் அவருடைய ஒளிப்பதிவு திறமையை பறை சாற்றுகிறது.
சண்டை பயிற்சியாளர் சுப்ரீம் சுந்தரின் சிறப்பான சண்டை பயிற்சியில்தான் கிளைமாக்ஸ் காட்சி தூள் பறக்கிறது. கற்ற தொழில் என்றாவது ஒரு நாள், எதற்காகவாவது உதவும் என்பதை ராஜகுமாரன் அந்த சண்டை காட்சியில் காட்டியிருக்கிறார்.
அருணகிரியின் இசையில் இரண்டே இரண்டு பாடல்கள். இரண்டும் முத்தானவை. முழு பாடலும் காதில் கேட்கும் அளவுக்கு இனிமையாக உள்ளன. பாடலுக்கான காட்சிகள் கதையை நகர்த்த உதவியிருப்பதால் அவற்றையும் ரசிக்கவே முடிந்தது.
ஜான் ஆபிரஹாமின் படத் தொகுப்பும், கலை இயக்கம் செய்திருக்கும் ஜனார்த்தனனுக்கும் ஒரு ஷொட்டு. படத் தொகுப்பாளரின் பணியால்தான் கிளைமாக்ஸ் சண்டை காட்சி அற்புதமாக வந்திருக்கிறது.
ராஜகுமாரன், பாரத் சீனி, ராதிகா சம்பந்தப்பட்ட முகநூல் காட்சிகளெல்லாம் இயல்பான நகைச்சுவையை கொடுத்திருக்கிறது. இதேபோல் திடீரென ஏற்பட்ட டிவிஸ்ட்டால் இன்னொரு ஹீரோயினான சுபிக்சா, பரத்தை காதலிக்க துவங்குவதும்.. அவர்களுடைய மெஸேஜ் சாட்டிங்குகளும் ரசிக்க வைத்திருக்கின்றன.
ராதிகாவின் வாழ்க்கைக் கதையை அனிமேஷனில் காட்டியிருப்பது சிறப்பு. பள்ளிக்கூட நிகழ்ச்சியில் குழந்தைகளை மையப்படுத்தி அவர்கள் கேட்கும் நகைச்சுவையான, ஆனால் உண்மையான கேள்விகளை வெளிப்படுத்தியிருக்கும் பாங்கு பாராட்டத்தக்கது.
படத்தின் இன்னொரு பலம் வசனங்கள்தான். அனைத்திலும் அனல் பறக்கின்றன. “புளூபிலிமில் நடிக்கிற நடிகைகளை தேடிப் பிடித்து ஆட்டோகிராப் வாங்குறீங்க. ஆனால் உங்க பக்கத்து வீட்ல இருக்குற தப்பே செய்யாத பெண்ணை பார்த்து தப்பா பேசுறீங்களே..? என்னதாண்டா உங்க பிரச்சினை…?” என்று ராஜகுமாரன் கேட்பது இந்தியாவில் இருக்கும் அனைத்து மக்களிடமும்தான்..! பதில்தான் கிடைக்காது..!
ஒரு அமைச்சர் நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம். சட்டத்திற்கு புறம்பாக அனைத்து அதிகார அமைப்புகளையும் திசை திருப்பலாம்.. ஒரு நேர்மையான அதிகாரி நினைத்தால்கூட அது இந்தியாவில் நடக்காது என்பதை அழுத்தம் திருத்தமாக அமைச்சர் தயா வெங்கட் மூலமாகவும், இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் மூலமாகவும் உணர்த்தியிருக்கிறார் இயக்குநர் விஜய் மில்டன்.
“இந்த நேரத்தில் நீங்களாக இருந்தால், உங்களது பிள்ளைகளுக்கு இந்தக் கொடுமை நிகழ்ந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்..?” என்று ராஜகுமாரன் நம்மிடம் கேட்கிறார். இதற்கான பதிலை நம்மை நாமே கேட்டு விழித்துக் கொள்ளும்படி இந்தப் படத்தின் மூலம் உணர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
சமீப காலமாக பாலியல் சீண்டல்கள் எந்த வயது பெண்களாக இருந்தாலும் அவர்களை தொடர்ந்து வரும் மிகப் பெரிய ஆபத்தாகவே சுற்றிக் கொண்டிருக்கிறது. இது பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு இருந்தால்தான் இந்தக் கொடூரங்கள் கொஞ்சமேனும் குறையும்..
படத்தின் கிளைமாக்ஸில் ஏற்படும் அந்த டிவிஸ்ட்டில்கூட ராஜகுமாரன் தனது இயல்பான குணத்தைவிட்டுவிடாமல் பரத்திடம் கெஞ்சி கேட்பதும், பரத் அதற்கான தார்மீகமான பதிலை அடுத்தக் காட்சியில் செய்து காண்பிப்பதும் நியாயமானதே.
அரசியல் அதிகாரத்தின் மூலமாக எந்தவொரு நியாயமும் கிடைக்கவில்லையெனில் ஒரு சாமான்யனின் கோபம் இப்படித்தான் வெளிப்படும் என்பதாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் விஜய் மில்டன்.
நியாயமான அவரது இந்தக் கோபத்திற்கு நமது சல்யூட்..!
கடுகு – அவசியம் பார்க்க வேண்டிய படம்..!  

0 comments: