கட்டப்பாவ காணோம் - சினிமா விமர்சனம்

18-03-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்தை ‘விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட்’ நிறுவனத்தின் சார்பில் மதுசூதனன் கார்த்திக், சிவகுமார், வெங்கடேஷ், மற்றும் லலித் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தினி  தமிழரசன், காளி வெங்கட், மைம் கோபி, யோகி பாபு, திருமுருகன், ஜெயக்குமார், லிவிங்ஸ்டன், சித்ரா லட்சுமணன், ‘டாடி’ சரவணன், பேபி மோனிக்கா மற்றும் சேது ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளராக ஆனந்த் ஜீவா, இசையமைப்பாளராக சந்தோஷ் தயாநிதி, படத் தொகுப்பாளராக சதீஷ் சூர்யா, கலை இயக்குநராக எம்.லட்சுமிதேவ், பாடலாசிரியர்களாக முத்தமிழ் மற்றும் உமா தேவி ஆகியோர் பணியாற்றி இருப்பது மேலும் சிறப்பு. 
அறிமுக இயக்குநர் மணி சேயோன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ‘ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் பிரபல விநியோகஸ்தரான சரவணன் இந்தப் படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.

பிறந்ததில் இருந்தே ‘பேட் லக்’ பேபி என்று தனது தந்தையாலேயே இப்போதுவரையிலும் அழைக்கப்படுபவர் பாண்டியன் என்னும் சிபிராஜ். இவர் பிறந்தவுடன் தாய் இறந்துவிட.. அப்பா நடத்திய அனைத்து தொழில்களும் நசிந்துபோகிறது. இந்தத் தொடர் தோல்விகளால் துவண்டு போய் தன்னுடைய ஜாதகத்திற்கு பலன் கேட்கபோன அப்பா சித்ரா லட்சுமணன், இப்போது அவரே ஜோதிடக் கலையில் வல்லுநராகியிருக்கிறார்.
தன்னுடைய தங்கையின் நண்பியான மீனா என்னும் ஐஸ்வர்யா ராஜேஷை பார்த்தவுடன் காதலிக்கத் துவங்குகிறார் சிபிராஜ். ஐஸ்வர்யாவும் ஒரு சில பிகு ஆக்சன்களுக்கு பிறகு காதலுக்கு ஒத்துக் கொள்கிறார். ஆனால் சித்ரா லட்சுமணன் இதனை ஒத்துக் கொள்ள மறுக்கிறார். ஐஸ்வர்யாவின் ஜாதகத்தில் கோளாறு இருப்பதாகவும், இருவருக்கும் ஜாதகம் ஒத்து வரவில்லை என்றும் சொல்கிறார்.
இதனால் கோபமடையும் ஐஸ்வர்யாவின் ஆலோசனைப்படி இருவரும் ரிஜிஸ்தர் கல்யாணம் செய்து கொண்டு தனிக்குடித்தனம் செல்கிறார்கள். பின்பு, இருவருமே வேலைக்குச் செல்ல முயல்கிறார்கள். சிபிராஜுக்கு வேலை கிடைக்கிறது. ஐஸ்வர்யாவுக்கு கிடைக்கவில்லை.
இந்த நேரத்தில் வஞ்சரம் என்னும் பெரும் ரவுடியான மைம் கோபியின் வீட்டில் கட்டப்பா என்னும் வாஸ்து மீன் வளர்க்கப்பட்டு வருகிறது. தன்னுடைய மனைவியைவிடவும் அந்தக் கட்டப்பா மீன் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார் மைம் கோபி.
அந்த வீட்டில் பெயிண்ட் அடிக்க வந்த யோகி பாபு, தனது நண்பனுடன் ஒரு நள்ளிரவில் அந்த வீட்டுக்குள் புகுந்து திருட முயல்கிறார். ஆனால் வீட்டில் பணம், நகையை கொள்ளையடிக்க முடியாத்தால் வாஸ்து மீனை தூக்கிச் செல்கிறார்.
அந்த வாஸ்து மீன் அங்கே, இங்கே என்று போக்குவரத்தில் பயணமாகி கடைசியாக சிபிராஜின் நண்பியான சாந்தினியின் உதவியோடு சிபிராஜின் வீட்டுக்கு பரிசாக கிடைக்கிறது.
அந்த வாஸ்து மீன் வந்த நேரம் தனக்கு வேலை போய்விட்டதாகச் சொல்லும் சிபிராஜ் வாஸ்து மீனை தூக்கிப் போட முடிவெடுக்கிறார். ஆனால் ஐஸ்வர்யா அதைத் தடுத்து வாஸ்து மீனிடம் எதையாவது மனதார உண்மையாக வேண்டிக் கொண்டால், அது நிச்சயமாக நடக்கும் என்று சமாதானப்படுத்துகிறார்.
அதே நேரம் அதற்கு முந்தைய நாள் இரவில் சிபிராஜும், ஐஸ்வர்யாவும் வீடு திரும்பும்போது வழியில் ஒருவர் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடுவதை பார்த்து பதறிப் போய் அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்து சேர்க்கிறார்கள்.
அந்த நபர் 4 கோடி ரூபாயை பதுக்கி வைத்திருப்பதாகவும், அதனை சிபிராஜ்தான் எடுத்திருக்கிறார் என்றும் சொல்லி சிபிராஜின் வீட்டுக்கு வரும் ரவுடிகளான திருமுருகன், காளி வெங்கட் கோஷ்டி அடாவடித்தனம் செய்கிறது.
இப்போது போலீஸுக்கு போனால் அந்த ஆளை கொலை செய்துவிட்டு 4 கோடி ரூபாயை சிபிராஜே கையாடல் செய்துவிட்டதாக கதையை மாற்றிவிடுவேன் என்று திருமுருகன் மிரட்ட.. வேறு வழியில்லாமல் அவர்களை வீட்டில் தங்க வைக்கிறார் சிபிராஜ்.
இன்னொரு பக்கம் தன் வீட்டில் இருந்து களவாடப்பட்ட வாஸ்து மீனை கண்டுபிடிக்க பெரும் பிரயத்தனம் செய்கிறார் மைம் கோபி. இதற்காக டாடி சரவணனை களமிறக்குகிறார். இவர் ஒரு பக்கம் தேடிக் கொண்டே வர.. அது சிபிராஜிடம் வந்து நிற்கிறது. அதே நேரம் அவரோ 4 கோடி ரூபாய் பணச் சிக்கலில் தவித்துக் கொண்டிருக்கிறார்.
கடைசியில் என்ன ஆனது என்பதுதான் படமே..!
மிக எளிமையான கதை..! ரொம்ப மெனக்கெடல் எல்லாம் இல்லாமல் அடுத்தடுத்த திரைக்கதைகள் என்னவாக இருக்கும் என்பதையும், கிளைமாக்ஸ் என்ன என்பதையும் யூகிக்க முடிந்த அளவுக்குத்தான் திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார் இயக்குநர்.
அதனால் என்ன..? படம் நெடுகிலும் வழிந்தோடும் நகைச்சுவையும், சிறப்பான இயக்கமும், சோடை போகாத நடிகர்களின் நடிப்பும் படத்தை இறுதிவரையிலும் பார்க்க வைக்கிறது.
சிபிராஜுக்கு பெரிதாக நடிப்பைக் கொட்டும் அளவுக்கான காட்சிகளெல்லாம் இல்லை. அதனால் அவரும் அலட்டிக் கொள்ளாமல்தான் நடித்திருக்கிறார். சில இடங்களில் நகைச்சுவை மிளிர வசனங்களை உச்சரித்திருக்கிறார். இதுவே அவரது அடுத்தக் கட்ட வளர்ச்சியைக் காட்டுகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ் படத்துக்குப் படம் மிளிர்கிறார். சற்றே பூசிய உடலுடன் இருந்தாலும் தேஜஸ் கூடியிருக்கிறது. ரொமான்ஸ் காட்சிகளில் சிபிராஜைவிடவும் வாங்கிய காசுக்கு வஞ்சகமில்லாமல் உருகியிருக்கிறார். சிபிராஜுடன் சண்டையிடும் காட்சிகளிலெல்லாம் அந்த மனைவி கேரக்டருக்கு பலம் சேர்த்திருக்கிறார். அடுத்தக் கட்ட வளர்ச்சியாக படத்தில் மதுவருந்தும் காட்சியில்கூட தயக்கமில்லாமல் நடித்திருக்கிறார். இந்தக் காட்சியெல்லாம் தேவையா இயக்குநரே..?!
காளி வெங்கட்டின் பெர்பார்மென்ஸ் இந்தப் படத்தில் பல படிகள் உயர்ந்திருக்கின்றன. டைமிங்கான டயலாக் டெலிவரிகள் குபீர் சிரிப்புகளை உதிர வைத்திருக்கின்றன. அந்த வீட்டில் காளி வெங்கட் அண்ட் கோ அடிக்கும் லூட்டியே இடைவேளைக்கு பின்பு படத்தை கலகலப்பாக வைத்திருக்கின்றன. பேபி மோனிக்காவின் நடிப்பு குறிப்பிடத்தக்க ஒன்று.
மைம் கோபியின் வாஸ்து மீன் பரபரப்பு கதைக்குத் தேவையென்றாலும் இந்த அளவுக்கு மொக்கையான ஒரு ஆக்சனையும், கேட்டவுடன் 5 கோடியை அலாக்காகத் தூக்கிக் கொடுக்கும் அப்பாவித்தனத்தையும் பார்த்தால் அவரை தாதா என்றே நம்ப முடியவில்லை.
அதேபோல் டாடி சரவணன் வாஸ்து மீனை தேடியலையும் காட்சிகளும், கண்டுபிடிக்கும் காட்சிகளும் அதிகம் அலைச்சலில்லாமல் திரைக்கதைக்கு உதவி செய்யும் பொருட்டு ஆங்காங்கே இணைக்கப்பட்டிருப்பது பலவீனமான திரைக்கதைதான் என்றாலும் இயக்கத்தினாலும், நடிப்பினாலும் அதனை மறக்கடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.
சாந்தினிக்கு இரண்டு, மூன்று காட்சிகள்தான் என்றாலும் அதிகம் வேலையில்லை. நல்ல படம் என்று சொல்லியிருக்க வேண்டிய இந்தப் படத்தில், தேவையில்லாமல் இரட்டை அர்த்த வசனங்களை புகுத்தியிருப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை. இதனை மட்டும் முற்றிலுமாக தவிர்த்திருக்கலாம். ஆனால், குழந்தைகள் சட்டென்று உணர முடியாத அளவுக்கு வைத்திருப்பது மட்டுமே ஒரேயொரு ஆறுதல்..!
ஆனந்த் ஜீவாவின் ஒளிப்பதிவினால் படத்திற்கு மிகப் பெரிய லாபம் கிடைக்கவில்லை. அதையெல்லாம் கவனிக்கவே நேரமில்லாத அளவுக்கு திரைக்கதையும், நகைச்சுவையும், வசனங்களும் இருந்த்தால் அது தேவையற்றதாகவே இருந்த்து. சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். இப்போதெல்லாம் முணுமுணுக்க வைக்கும் பாடல்களை போட எந்த இசையமைப்பாளருக்கு திறமையிருக்கிறது..?
சின்ன கதை.. குழப்பமில்லாத திரைக்கதை.. சிறப்பான இயக்கம்.. தெறிவான நடிப்பு.. தேர்ச்சியான படத் தொகுப்பு.. என்று பலவகைகளிலும் இந்தப் படம் இரண்டு மணி நேர பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தருகிறது என்பது மட்டும் உண்மை.!

0 comments: