புரூஸ்லீ - சினிமா விமர்சனம்

18-03-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்தை கெனன்யா பிலிம்ஸ் சார்பில் ஜெ.செல்வகுமாரும், ஜெ.ரவிச்சந்திரனும் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாகவும், கீர்த்தி கர்பனந்தா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும், பால சரவணன், முனீஸ்காந்த், ஆனந்த்ராஜ், மன்சூரலிகான், நான் கடவுள் ராஜேந்திரன், ஷாதிகா, விஜயமுத்து, ஷண்முகம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – பி.வி.சங்கர், இசை – ஜி.வி.பிரகாஷ்குமார், பாடல்கள் – அருண்ராஜா காமராஜ், கானா வினோத், வைரசந்திரன், மணிகண்டன், படத் தொகுப்பு – பிரதீப் ஈ.ராகவ், மனோஜ் ஜியான், கலை இயக்கம் – உமேஷ் ஜெ.குமார், சண்டை பயிற்சி – அன்பறிவ், உடைகள் – ஜாய் கிறிஸில்டா, நடனம் – பிருந்தா, பாபா பாஸ்கர், ராதிகா, ஒப்பனை – சபரி கிரிசன், ஸ்டில்ஸ் –  ஆர்.எஸ்.ராஜா, விஷுவல் எபெக்ட்ஸ் – உனிபி, தயாரிப்பு நிர்வாகம் – பாலகுமார், தயாரிப்பு - கெனன்யா பிலிம்ஸ், லிங்கா பைரவி கிரியேஷன்ஸ். எழுத்து, இயக்கம் – பிரசாந்த் பாண்டிராஜ்.
இயக்குநர் பாண்டிராஜின் பிரதம சீடரான பிரசாந்த் பாண்டிராஜின் முதல் இயக்கத்தில் வெளியாகும் படைப்பு என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டு செய்திருந்தது இந்தப் படம்.


‘புருஸ்லீ’ என்ற அடை மொழியுடன் வலம் வந்து கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷுக்கு கீர்த்தி என்னும் காதலியும், பால சரவணன் என்ற நண்பனும் உண்டு. இந்த பால சரவணனுக்கு ஷாதிகா என்றொரு காதலியும் உண்டு.
பெயரில் புரூஸ்லீ இருந்தாலும் உள்ளத்தளவில் மிகப் பெரிய பயந்தாங்கொள்ளியாக இருக்கிறார் பிரகாஷ். ‘போலீஸ்’ என்றாலே பதறியடித்து ஓடும் குணமுள்ளவர்.
சென்னையில் பெரிய தாதாவாக இருக்கும் முனீஸ்காந்தை தேடி வருகிறார் உள்ளூர் அமைச்சரான மன்சூரலிகான். தனக்குப் போட்டியாக கட்சியில் இருக்கும் ஒருவரை போட்டுத் தள்ள அட்வான்ஸ் பணத்தைக் கொடுக்கிறார். ஆனால் எதிரணியினரிடம் இதைவிட அதிகமாக வாங்கியிருக்கும் முனீஸ்காந்த், மன்சூரலிகானை சுட்டுக் கொலை செய்கிறார்.
இதனை தற்செயலாக ஜி.வி.பிரகாஷ், கீர்த்தி, பாலசரவணன் கோஷ்டி பார்த்துவிடுகின்றனர். அதோடு தங்களிடமிருக்கும் கேமிராவிலும் அதைப் படமாக்கிவிடுகின்றனர். மறுநாள் மன்சூரலிகானின் மகனிடம் சென்று கேமிராவை ஒப்படைக்க நினைத்து அங்கே செல்கிறார்கள். ஆனால் அங்கே போன பின்புதான் இந்தக் கொலையில், மன்சூரலிகானின் மகனுக்கும் தொடர்பு இருப்பது இவர்களுக்கு தெரிய வருகிறது. அங்கிருந்தும் தப்பிக்கிறார்கள்.
கீர்த்தி தனக்குத் தெரிந்த ஒரு வக்கீலிடம் இதைச் சொல்லலாம் என்று நினைத்து கோர்ட்டு வர.. அப்போது கோர்ட்டில் முனீஸ்காந்த் ஒரு கொலை வழக்கிற்காக காத்திருக்கிறார். எப்போதோ நடந்த அந்த கொலை வழக்கில் இருந்து விடுதலையாகிறார் முனீஸ்காந்த்.
அப்போது அந்த இடத்தில் நடக்கும் குழப்பத்தில் நீதிபதியொருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறக்கிறார். இதனைச் செய்வது முனீஸ்காந்த் என்று இப்போதும் கீர்த்தியின் கையில் இருக்கும் கேமிராவில் பதிவாகிறது.
தேடி வந்த வக்கீலும் முனீஸ்காந்தின் ஆளாக இருக்க பயந்து போய் போலீஸ் கமிஷனருக்கு கூரியர் அனுப்புகிறார்கள். ஆனால் போலீஸ் கமிஷனரை இதனை அப்படியே கொண்டு சென்று முனீஸ்காந்திடம் ஒப்படைக்க.. முனீஸ்காந்த் இவர்களை யார் என்று கண்டறிகிறார்.
இதன் பின் இவர்கள் முனீஸ்காந்திடமிருந்து தப்பித்தார்களா..? முனீஸ்காந்த் சட்டத்தின் முன் மாட்டினாரா என்பதுதான் படத்தின் மீதமான கதை..!
ஜி.வி.பிரகாஷின் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், விளம்பரமும் இல்லாமல் வெளிவந்து தமிழகத்தில் மட்டும் 10 கோடி ரூபாயை தியேட்டரிலேயே வசூல் செய்திருந்தது. அதனை மனதில் வைத்து அது போலவே கொஞ்சமும் லாஜிக்கே இல்லாமல், எதைப் பற்றியும் யோசிக்காமல் படமெடுத்திருக்கிறார்கள்.
‘துருவங்கள் 16’, ‘அதே கண்கள்’, ‘குற்றம்-23’, ‘மாநகரம்’ என்று மாதத்திற்கு ஒரு திரைப்படம் வெளியாகி தமிழ்த் திரை ரசிகர்களின் சினிமா ஆர்வத்தை திசை திருப்பி வரும்போது, 10 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருக்க வேண்டிய திரைக்கதையில் இப்படியொரு படத்தை எடுக்க இயக்குநருக்கு எப்படி மனம் வந்தது என்று தெரியவில்லை.
ஜி.வி.பிரகாஷுக்கு ஏற்ற கேரக்டர்தான். ஆனால் கேரக்டர் ஸ்கெட்ச்சில் அழுத்தமில்லை. ஒரு காட்சியில் காதலிதான் முக்கியம் என்று டூயட்டெல்லாம் பாடுகிறார். இன்னொரு காட்சியில் காதலியைவிடவும் தனது பயமே தனக்கு முக்கியம் என்கிறார். காதலியை காப்பாற்றக்கூட வர முடியாது என்கிறார். இப்படி சற்றே குழப்பமான திரைக்கதையில் இருப்பதால் அவரை கடைசிவரையிலும் ரசிக்கவே முடியவில்லை என்பது சோகமான விஷயம்.
கீர்த்தி கர்பனந்தாவுக்கு நடிப்பு நன்றாகவே வருகிறது. இன்னும் 4, 5 படங்களில் நடித்தால் தமிழில் ஒரு ரவுண்டு வரலாம். டப்பிங் என்றாலும் லிப்ஸ் மூவ்மெண்ட்ஸ்ஸின் ஒரு சின்ன இடறல்கூட இல்லாமல் இருப்பது இவருக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் எனலாம். பாடல் காட்சிகளில் நெருக்கத்தைக் கூட்டியிருக்கிறார். இதனால் ஜி.வி.பிரகாஷுக்குத்தான் கொண்டாட்டமாக இருந்திருக்கும்..!
முனீஸ்காந்தின் நடிப்பை பார்த்தால் அவர் நிஜமாகவே வலிமையான தாதாவா அல்லது காமெடி தாதாவா என்று சந்தேகமே வருகிறது. மன்சூரலிகானின் மேடை பேச்சு கணீர். அப்படியே இன்றைய தமிழகத்தின் நிலைமையை பிரதிபலிப்பது போலவே உள்ளது.
படத்தை தாங்கியிருப்பதே பால சரவணன்தான். தனது சிறப்பான நடிப்பினால் அனைத்து காட்சிகளிலும் வசனத்தை அழகாக, டைமிங்காக உச்சரித்து சில இடங்களில் சிரிப்பை வரவழைத்திருக்கிறார். இருந்தாலும் பல காட்சிகளில் கடுப்பே மேலோங்கி நிற்கிறது. அவ்வளவு மோசமான திரைக்கதை.
பி.வி.ஷங்கரின் ஒளிப்பதிவு குறிப்பிடத்தக்க ஒன்று. இதேபோல் படத் தொகுப்பும் சற்றும் நெருடல் இல்லாமல் இருக்கிறது. குறிப்பாக சண்டை காட்சிகளில் மற்றும் கிளைமாக்ஸில். கீர்த்தியின் வசன உச்சரிப்புக்களில் நுட்பமாக செயல்பட்டிருப்பது தெரிகிறது. ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல் வரிகள் தெளிவாகவே கேட்கின்றன. மற்றபடி இசையைக் காணவில்லை.
தொழில் நுட்பம் சிறப்பாக இருக்கும் அளவுக்கு படத்தில் கதை, திரைக்கதை, வசனம் சிறப்பாக இல்லை என்பதுதான் படத்தின் மிகப் பெரிய குறை. இந்தப் படத்திலும் சில இடங்களில் இரட்டை அர்த்த வசனங்களை புகுத்தியிருக்கிறார்கள். ஆனால் எதிலும் சிரிப்பு வரவில்லை. அலுப்பும், சலிப்பும்தான் வருகிறது.
இயக்கம் மட்டுமே சிறப்பு. அதைக் குறைவில்லாமல் செய்த இயக்குநர் எழுத்தில் சிறப்பாக்க மேலும் சில நாட்கள் கடுமையாக உழைத்திருக்கலாமே..? ஓய்வில்லாமல் கிட்டத்தட்ட தற்போதைய நிலையில் கையில் 7 படங்களை வைத்திருக்கும் ஜி.வி.பிரகாஷுக்கு ஒரு படத்தின் தோல்வி என்பதே அடுத்தடுத்து வரும் படங்களை பெருமளவில் பாதிக்கும்.
முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ்குமாரின் கதை தேர்வு இந்த முறை தோல்வியடைந்திருக்கிறது என்பதுதான் உண்மை.

0 comments: