வாங்க வாங்க - சினிமா விமர்சனம்

23-03-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

Friends Combines சார்பில் அக்மல் ஆர்.வி.தம்பி இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் அப்புக்குட்டி, பவர் ஸ்டார் சீனிவாசன், நிவேதிதா, மதுசந்தா, ஸ்ரேயாஸ்ரீ, கராத்தே ராஜா, ஹனிபா, ராஜேஷ் மோகன், பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – சிபின் சிவன், பகவதி பாலா, இசை – ராஜேஷ் மோகன், இணை தயாரிப்பு – சுப்ரமணியன், ஜாபர் சாதிக், எழுத்து, இயக்கம் – என்.பி.இஸ்மாயில்.
தமிழ்ச் சினிமாவின் தற்போதைய டிரெண்ட் சமூக வலைத்தளங்களை மையப்படுத்தி எடுக்கப்படும் கதைகள்தான்.. அந்த வரிசையில் லேட்டஸ்ட் வரவு இந்த ‘வாங்க வாங்க’ திரைப்படம்.

சினிமா இயக்குநராக கனவு கண்டு பல தயாரிப்பாளர்களிடத்திலும் கதை சொல்லிச் சொல்லி மாய்ந்து போயிருக்கும் இணை இயக்குநரான அப்புக்குட்டி, கடைசியாக பவர் ஸ்டார் சீனிவாசனிடம் கதை சொல்ல வருகிறார்.
சீனிவாசனும் ஆர்வத்துடன் கதையைக் கேட்கத் துவங்க.. அப்புக்குட்டி தனது கதையைச் சொல்கிறார். இதிலிருந்து படத்தின் கதையும் விரிகிறது.
நிவேதிதாவும், மதுசந்தாவும் நெருங்கிய தோழிகள். ஒரு பங்களா வீட்டில் தனியாக இருக்கிறார்கள். இதில் நிவேதிதா பணத்துக்காக எதையும் செய்யத் தயங்காதவர். இருவருமே பேஸ்புக்கில் தீவிரமாக இருப்பவர்கள். இதில் மதுசந்தாவின் பேஸ்புக் நண்பர் கராத்தே ராஜா.
இந்த கராத்தே ராஜா ஹவாலா உண்டியல் பணத்தை கை மாற்றிவிடும் வேலையை கச்சிதமாக செய்து வருபவர். அண்ணாச்சி என்று சொல்லும் ஒரு நபருக்காக இந்த வேலையை பல வருடங்களாக செய்து வருகிறார்.
ஒரு பெரிய தொகையை கை மாற்றும் நேரத்தில் ஒரு நாள் இடைவெளியிருக்க தனது பேஸ்புக் தோழியான மதுசந்தாவை பார்க்க திருப்பூர் வருகிறார் கராத்தே ராஜா. தனது வீட்டில் அவரை வரவேற்கும் மதுசந்தா பேஸ்புக்கில் முகம் பார்க்காமலேயே பழகிவிட்டதால் கராத்தே ராஜாவுடன் நெருங்கிப் பழக தயங்குகிறார். ஆனால் கராத்தே ராஜாவோ அந்த வீட்டில் அன்றைய இரவு தங்கியிருந்து மது சந்தாவுடன் உறவு வைத்துக் கொள்ள நினைக்கிறார்.
ஏகப்பட்ட தயக்கத்துக்கு பிறகு இதனை ஏற்றுக் கொள்கிறார் மதுசந்தா. ஆனால், அன்றைய இரவில் அவர்களது அறையில் ஒரு பேய் நடமாடுவதை பார்க்கும் கராத்தே ராஜா திகைப்படைகிறார். இரண்டு தோழிகளும் சேர்ந்தே கலங்குகிறார்கள்.
இன்னும் ஒரு நாள் இருந்து இந்தப் பேயை தான் விரட்டிவிடுவதாக சொல்கிறார் கராத்தே ராஜா. இதனால் மேலும் ஒரு நாள் தங்குகிறார் ராஜா. இந்த நேரத்தில் மதுசந்தாவைவிட்டுவிட்டு நிவேதிதாவை தான் காதலிப்பதாகச் சொல்லி அவளை உறவுக்கு அழைக்கிறார் கராத்தே ராஜா. இதனை நிவேதிதாவும் ஏற்றுக் கொள்ள அன்றைய இரவுக்காக இருவருமே காத்திருக்கிறார்கள்.
அன்றைய இரவிலும் அந்த பேய் இவர்களை டிஸ்டர்ப் செய்ய.. அந்தப் பேயைத் துரத்திக் கொண்டு ஓடுகிறார் கராத்தே ராஜா. ஆனால் அவர் திரும்பி வரவேயில்லை. அவர் வராத காரணத்தினால் அவர் கொண்டு வந்த பையில் இருந்த பணத்தை அப்படியே அபேஸ் செய்ய நினைக்கிறார் நிவேதிதா. இதனை மதுசந்தா தடுக்க நினைத்தும் நிவேதிதா கேட்காமல் இருக்கிறார்.
ராஜாவை தொடர்பு கொள்ள முடியாததால் அவரைத் தேடி அண்ணாச்சியின் அடியாட்களான ஹனிபாவும், ராஜேஷ் மோகனும் அங்கே வருகிறார்கள். இன்னொரு பக்கம் அந்த வீட்டில் பேய் இருக்கிறதா இல்லையா என்பதே சஸ்பென்ஸாகவும் இருக்கிறது. முடிவு என்ன என்பதுதான் படத்தின் கதை..!
படத்தில் மூன்று கதைகள்.. ஒன்றுக்கொன்று தொடர்புடையவைதான். ஆனால் அதனை இணைத்தவிதம் பாராட்டுக்குரியது. இடைவேளைக்கு பின்பான காட்சிகளில் இருக்கும் வேகத்தை, முதல் பகுதியிலும் செய்திருந்தால் படம் செம விறுவிறுப்பு என்று சொல்லியிருக்கலாம்.
படத்தின் ஹைலைட்டே ஹீரோ மற்றும் ஸ்ரேயாஸ்ரீயின் காதல் போர்ஷன்தான். ஸ்ரேயாஸ்ரீயும் அவரது அப்பாவும்தான் படத்தைத் தாங்கியிருக்கிறார்கள். காதலை நம்பி தன்னை இழந்து.. தன் வயிற்றில் கருவை சுமந்த பின்பு “யார் நீ” என்று காதலனின் வார்த்தையைக் கேட்டதும் நம்பி ஏமாந்த உணர்வை காட்டும் காட்சியில் ஸ்ரேயாஸ்ரீயும், அவரது தந்தையும் நடிப்பைக் கொட்டியிருக்கிறார்கள். அற்புதமான இயக்கம்.
அதிலும் இரவு நேரத்தில் மகளை விட்டுவிட்டு தான் மட்டும் தற்கொலை செய்ய நினைத்து வெளியேறி கதவைப் பூட்டப் போகும் தந்தையின் காதில் குழந்தையின் அழுகுரல் கேட்க பட்டென்று கதவைத் திறந்து பார்க்கும் காட்சி ஓராயிரம் பாசத்தைக் காட்டுகிறது. இயக்குநரின் இயக்கத் திறமைக்கு இதுவொரு சிறந்த எடுத்துக்காட்டு..!
அப்புக்குட்டி கதை சொல்லுமிடத்தில் இடைச்செருகல் செய்யும் காட்சியை கச்சிதமாக படத் தொகுப்பு செய்து தொகுத்திருக்கிறார்கள். கதையைச் சொல்லிவிட்டு அட்வான்ஸை வாங்கிக் கொண்டு அப்புக்குட்டி வெளியேறிய பின்புதான் இந்த ஒரிஜினல் படத்தின் கிளைமாக்ஸே நடக்கிறது. அப்படியொரு சுவாரஸ்யமான திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர்.
நிவேதிதா பணத்தாசையில் பேசும் வசனங்களும், அதனை மறுத்து மதுசந்தாவும், ஸ்ரேயாஸ்ரீயும் பேசும் வசனங்களும் அவரவர் கேரக்டர் ஸ்கெட்ச்சுகளை நியாயப்படுத்துகின்றன.
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் என ஒட்டுமொத்த வேலையையும் செய்துள்ள இயக்குநர் என்.பி.இஸ்மாயிலுக்கு, ஒரு நல்ல சமூக கருத்தினை, ‘வாங்க வாங்க’ என்று அழைத்து சொன்னதற்காக முதலில் பாராட்டு தெரிவிக்க வேண்டும்.
சிபின் சிவன் மற்றும் பகவதி பாலாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்ப்பது போலத்தான் இருக்கிறது. மலைப் பிரதேச காட்சிகளில் கேமிராவின் பங்களிப்புதான் அதிகம். அதேபோல் ராஜேஷ் மோகனின் இசையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. பாடல்கள் தெள்ளத் தெளிவான தமிழ் வார்த்தைகளை அழகாக உச்சரிக்கும்வகையிலான இசையில், கணீர் குரலில் கேட்டே புரிந்து கொள்ளும் அளவுக்கு இருப்பது பாராட்டுக்குரியது. அதிலும் குறிப்பாக ‘அப்பனும் நீதான்’ பாடலும், பாடல் காட்சியும் சுட்டெரிக்கும் வெயிலையும் குளிர வைப்பது போன்ற மனநிலையைக் கொடுத்தது..! 
பெற்றோர்களுக்குத் தெரியாமல், யாரோ முன் பின் தெரியாத ஒருவனை.. பேஸ்புக்கால் மட்டுமே பார்த்து, பேச மட்டுமே செய்துவிட்டு அவரை சட்டென முழுமையாக நம்பும் குணம் இந்தப் பெண்களுக்கு எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. இதுபோல் தினத்துக்கு 2 வழக்குகளாவது மக்கள் மன்றத்திற்கு வந்து கொண்டுதான் இருக்கிறது. எத்தனை, எத்தனை பிரச்சினைகளையோ மீடியாக்கள் வெளிக்காட்டினாலும் பெண்கள் இன்னமும் திருந்தியபாடில்லை.
ஒரு கருத்து சொல்லும் படமாக இருந்தாலும், இதிலும் திரில்லர் மற்றும் சஸ்பென்ஸை வைத்து குடும்பக் கதையையும் இணைத்து திரைக்கதை எழுதி ஜமாய்த்திருக்கிறார் இயக்குநர்.
சின்ன பட்ஜெட் என்பதால் சிற்சில தவறுகள் இருக்கின்றன. முற்பாதியில் இயக்கத்தில் பல குளறுபடிகள் இருந்தாலும், அதையெல்லாம் நிவர்த்தி செய்வது போல படத்தின் பிற்பாதியில் சேர்த்து வைத்து அடித்திருக்கிறார் இயக்குநர்.
கிளைமாக்ஸ் சண்டை காட்சியில்கூட பணத்தாசை பிடித்த பெண்களையும், கொலைகார ஆண்களையும் காட்டி.. சாதாரண நட்பு எப்படியொரு கொடூரத்தை நிகழ்த்துகிறது என்பதை புரிந்து கொள்ளும்படி சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
சின்ன பட்ஜெட் படம்.. சென்னையிலேயே ஒரேயொரு தியேட்டர்தான். அதிலும் காலை காட்சிதான் கிடைத்திருக்கிறது.. தமிழகமெங்கும் 20 தியேட்டர்களுக்குள்தான் இந்தப் படம் ரிலிஸாகியிருக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்.
திரைக்கு வராமல் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் திறமைசாலிகளையும் கொஞ்சம் இப்படியும் ஊக்குவிக்கலாமே..!

0 comments: