கன்னா பின்னா - சினிமா விமர்சனம்

20-03-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மெஹெக் புரொடக்சன்ஸ் சார்பில் ரூபேஷ்.P  மற்றும்  எஸ்.எஸ்.பிக் சினிமாஸ் சார்பில்  E.சிவசுப்பிரமணியன் & K.R. சீனிவாஸ்  இணைந்து தயாரித்துள்ள படம் ‘கன்னா பின்னா’.
இந்தப் படத்தின் இயக்குநர் தியா.. ‘நாளைய இயக்குனர்’ குறும்பட போட்டியில் கலந்து கொண்டவர். இந்தப் படத்தை இயக்கியுள்ளதோடு, கதையின் நாயகனாகவும்  நடித்திருக்கிறார். நாயகியாக ‘வன்மம்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த அஞ்சலி ராவ் நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு – ஜெரால்டு ராஜமாணிக்கம், இசை – ரோஷன் சேதுராமன், பாடல்கள் – ஸ்ரீதர் ராமசாமி, படத் தொகுப்பு – வெஸ்லி, நடனம் – நந்தா, சண்டை பயிற்சி – ஜேசு, தயாரிப்பு நிர்வாகம் – நாகராஜன்.
படத்தின் பெயரைப் போலவே படத்தின் கதையும், திரைக்கதையும் கன்னா பின்னாவென்றுதான் இருக்கிறது.

ஒரு இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், பெண் இயக்குநர் என்று மூன்று பேர் கூட்டணி அமைத்து திரையுலகில் கால் பதிக்க சில வருடங்களாக முயன்று வருகிறார்கள்.
அன்றைக்கு பார்த்து அந்தப் பெண் இயக்குநர் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லப் போகிறார். “அதிரடி, ஆக்சன் கதையெல்லாம் வேண்டாம். தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் கூட்டம் கன்னா பின்னாவென்று வயிறு குலுங்க சிரிக்க வேண்டும். அது போன்ற ஒரு கதை வேண்டும்..” என்கிறார் தயாரிப்பாளர்.
அந்தப் பெண் இயக்குநரும் தன்னிடம் ‘கன்னா பின்னா’ என்ற தலைப்பிலேயே ஒரு காமெடி கதையிருப்பதாக பொய் சொல்ல… தயாரிப்பாளரும் அதை நம்பி அந்தக் கதையை இன்னும் மெருகேற்றி கொண்டு வரும்படி சொல்லி, 5 லட்சம் ரூபாயை அட்வான்ஸாகவும் கொடுக்கிறார்.
இதனை தனது இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் தோஸ்துகளிடம் சொல்லும் பெண் இயக்குநர் இதன் பின்பு கதையைத் தேடுகிறார். யாரிடமிருந்தாவது கதையை சுடலாம் என்று திட்டம் தீட்டுகிறார்கள். இதற்கான தேடலின்போது இவர்களது கண்ணில் சிக்குகிறார் ஹீரோவான தயா.
பஸ் ஸ்டாப்பில் நிற்கும் பெண்களிடம் வலியப் போய் சாக்லெட்டை கொடுத்து தன்னைக் காதலிக்க வரும்படி அழைக்கும் அளவுக்கு ஒரு கோயிங்சாமியாக இருக்கிறார் ஹீரோ. இவருடைய ஆக்ட்டிவிட்டீஸை பார்க்கும் இந்த படைப்பாளிகள் கூட்டம், ஹீரோ தியாவை பாலோ செய்தால் சுவாரஸ்யமான கதை கிடைக்கும். அதையே படமாக்கலாம் என்று நினைத்து அவரை பின் தொடர்கிறார்கள்.
இனி கதை ஹீரோவின் பார்வையிலேயே நகர்கிறது. ஹீரோவின் அத்தை மகள் கல்யாணத்திற்குக் காத்திருக்க.. தனக்கு அந்தப் பெண் வேண்டாம். தான் அவளைவிட அழகான பெண்ணை காதலித்துக் கல்யாணம் செய்யப் போவதாகச் சொல்லி மறுக்கிறார் ஹீரோ.
அவருடைய எதிர்வீட்டுக்கு ஹீரோயின் அஞ்சலி ராவ் குடி வருகிறார். வந்த முதல் நாளில் இருந்தே ஹீரோவை பார்த்தபடியே இருக்கும் அஞ்சலி வித்தியாசமாக ஹீரோவை சைட் அடிக்கிறார். ஹீரோவிடம் நெருங்கிப் பழக முயல்கிறார். ஹீரோ தன்னுடைய செயல்பாடுகள் இத்தனை மந்தமாக இருப்பதற்குக் காரணமாக தன்னுடைய சிறு வயது வாழ்க்கையை பிளாஷ்பேக்கில் சொல்கிறார்.
தனக்கு பெண் தேடும் படலத்தை தானே முனைந்து செயல்படுத்துகிறார். புரோக்கர் மூலமாக பெண் தேடும்போது அது பலான வீட்டுக்கெல்லாம் போக ஹீரோவுக்கு சங்கடமாகிறது. ஒரு பெண்ணை பார்க்க திருச்சிக்கு போன இடத்தில் ஒரு கொலை சம்பவத்தில் சிக்கிவிட.. ஹீரோவுக்கு மேலும் சிக்கலாகிறது..!
அப்புறம் எப்படித்தான் அவர் கல்யாணம் செய்தார்..? கடைசியாக அவருக்கு பெண் கிடைத்ததா என்பதெல்லாம் படம் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்தான்.
ஆர்வக் கோளாறில் படம் எடுத்தால்கூட அதையும் திறமையானவர்களை முன் வைத்து தயாரித்தால் படம் சிறிது செய்கூலி சேதாரத்தோடு தப்பித்துக் கொள்ளும். இப்படி எல்லாமே தனக்குத் தெரியும் என்கிற மமனதையோடு படம் எடுத்தால் என்னதான் கடைசியில் மிஞ்சும்..?
கதை, திரைக்கதை, இயக்கம் மூன்றுமே மகா சொதப்பலாகிவிட்டது. இப்போதெல்லாம் என்ன மாதிரியான படங்கள் வந்து கொண்டிருக்கின்றன என்கிற அடிப்படை புரிதல்கூட இல்லாமல் இயக்குநர் இந்தக் கதையை தேர்வு செய்து அதனை தைரியமாக படமாக்கி திரைக்கு வந்து கொண்டிருக்கிறார். இந்த அசட்டு தைரியத்தை என்னவென்று சொல்வது..?
ஹீரோ தியா காட்டியதெல்லாம் நடிப்பு என்றால் எப்படி..? வேறு நடிகர்களை வைத்துக்கூட எடுத்திருந்தால் ஒரு கவன ஈர்ப்பாவது கிடைத்திருக்குமே..? ஹீரோயின் அஞ்சலி ராவுக்கு ஒரு வேலையும் இல்லை. நடிப்பைக் காட்டக்கூட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.
பெண் இயக்குநரை அறிமுகப்படுத்தும் முதல் காட்சியிலேயே அவருடைய ஆண் நண்பரும் இசையமைப்பாளருமான அந்த நண்பர் காலால் எட்டி உதைத்து எழுப்பி விடுகிறார். இதற்கெல்லாம் கேரக்டர் ஸ்கெட்ச் வேண்டாமா இயக்குநரே..? அவர்கள் மூவருக்குள்ளும் என்னதான் உறவு..? இப்படியுமா இருப்பார்கள்..? இருக்க முடியும்..?
திருச்சி கொலை சம்பவத்தில் சிக்கியவர்களும், நண்பர்களும் அடிதடிகளுக்கெல்லாம் அஞ்சாதவர்களாக ஆஜானுபாகுவாக காட்சியளித்து… அவர்களை வைத்தே காமெடி செய்வதெல்லாம் எப்படி..? சிரிப்பு வர வேண்டுமே..?
இன்றைக்கு கிராமத்தில்கூட பேஸ்புக், டிவிட்டர் என்ற பெயர்கள் பரவலாக புழங்கிவரும் நேரத்தில் சென்னையில் இருந்து கொண்டு அதெல்லாம் தெரியாமல்.. பேஸ்புக்கில் அக்கவுண்ட் ஓப்பன் செய்ய ஒரு சின்னப் பையனிடம் போய் மாட்டிக் கொண்டு அவனுக்கு படியளப்பதுமான திரைக்கதை.. ‘உஷ்.. அப்பாடா.. போதும்டா சாமிகளா.. ஆளை விடுங்கடா சாமி‘ என்று கதற வைக்கிறது..!
இந்தப் படத்தில் ஒரேயொரு சுவாரஸ்யம் ஹீரோவின் அப்பா வீட்டில் நடத்தும் அடல்ட்ஸ் ஒன்லி திருவிளையாடல்தான். பலான பத்திரிகையை கக்கூஸில் வைத்துப் படிப்பது.. பேப்பரை கிழித்துப் போட்டுவிட்டு மாட்டிக் கொள்வது.. இதேபோல் வயதான பின்பும் வாலிபம் குறையாமல் பிட்டு பட டிவிடிக்களை வாங்கி வைப்பது.. அதனை மகன் எடுத்துப் பார்ப்பது.. மகன் பார்த்துவிட்டது தெரிந்து அப்பா, தன் மனைவியிடம் மறைக்காமல் அதனை ஒப்பிப்பது.. “இனிமேல் அதை வாங்காதீங்க..” என்று மனைவி திட்டுவது.. இப்படி போகும் இந்த ‘ஏ’-த்தனமான காட்சிகளில் ரகளையும் அதிகமாகவே உள்ளது. அதிலும் ஹீரோவின் அம்மாவாக நடித்திருப்பவர் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நடிப்பைக் கொட்டியிருக்கிறார். இவர் ஒருவர்தான் படத்தில் பாராட்டுக்குரியவர்.
ஒளிப்பதிவு என்ற பெயரில் செய்திருக்கும் வேலை என்ன என்பதை ஒளிப்பதிவாளர்தான் சொல்ல வேண்டும். ரோஷன் சேதுராமனின் இசையில் ‘லிங்கிரி மிட்டாய்’ என்ற பாடல் மட்டுமே கேட்கும்படியிருந்தது. இன்னும் கூடுதலாக ‘ஏ டுமாக்கி டம்மாக்கி கன்னா பின்னா’ என்றும், ‘மாட்டிக்கிச்சு சூப்பர் பிகரு, இவன் மச்சம்கூட ஈஸ்ட்மென் கலரு’ என்கிற அர்த்தம் பொதிந்த தமிழ்ப் பாடல்களும்கூட உண்டு.
எவ்வளவு யோசித்தும் ‘இந்தப் படம் ஒரு நல்ல படம்.. பார்க்கக் கூடிய படம்.. பார்க்க வேண்டிய படம்’ என்று சொல்வதற்கு ஒரு காட்சியோ, விஷயமோ இந்தப் படத்திலிருந்து கிடைக்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தி.
‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் தன்னுடைய குறும்படத்திற்காக பாராட்டை பெற்றிருக்கும் ஹீரோ கம் இயக்குநரான தியா, அடுத்து பெயர் சொல்லும் அளவுக்கு ஒரு நல்ல படத்தை கொடுப்பார் என்று நம்புகிறோம்..!

0 comments: