வைகை எக்ஸ்பிரஸ் - சினிமா விமர்சனம்

26-03-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்தை மக்கள் பாசறை நிறுவனத்தின் சார்பில் ஆர்.கே. தயாரித்து, நடித்து வழங்கியிருக்கிறார்.
இந்தப் படத்தில் ஆர்.கே, நீத்து சந்திரா, இனியா, நாசர், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, சுமன், ரமேஷ் கண்ணா, சித்திக், ஜான் விஜய், சுஜா வருணி, கோமல் ஷர்மா, சிங்கமுத்து, அனுமோகன், அனுப் சந்திரன், அர்ச்சனா, இவர்களுடன் இயக்குனர் R.K. செல்வமணி என்று பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது.
இயக்குநர் – ஷாஜி கைலாஷ், இசை – S.S.தமண், ஒளிப்பதிவு – சஞ்சிவ் சங்கர், வசனம் – V. பிரபாகர், படத் தொகுப்பு – டான் மேக்ஸ், சண்டை பயிற்சி – கனல் கண்ணன், மக்கள் தொடர்பு – ஆ. ஜான், தயாரிப்பு – மக்கள் பாசறை.
நடிகரும், தயாரிப்பாளரும் மிகப் பெரும் தொழிலதிபருமான ராதாகிருஷ்ணன் என்னும் ஆர்.கே. பல ஆண்டுகளாக திரையுலகத்தில் அறிமுகமானவராகத்தான் இருக்கிறார்.
இதற்கு முன்னர் பல படங்களில் சில காட்சிகளில் நடித்து வந்தவர், 'அவன் இவன்', 'ஜில்லா' போன்ற படங்களில் கவனத்தை ஈர்க்கும்வகையிலான கேரக்டர்களில் நடித்திருந்தார்.
'என் வழி தனி வழி' படத்தில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். அந்தப் படத்தை மலையாள சினிமாவின் கமர்ஷியல் இயக்குநர்களில் ஒருவரான ஷாஜி கைலாஷ் இயக்கியிருந்தார். மீண்டும் அவரது இயக்கத்திலேயே இந்தப் படத்தில் நடித்து, தயாரித்து, வெளியிட்டிருக்கிறார் ஆர்.கே.
பரபரப்பான திரைக்கதை அமைந்த படங்களெனில் மலையாள சினிமாவில் இன்னும்கூட ஜோஷி, கே.மது, ஷாஜி கைலாஷை மிஞ்ச புதிய இயக்குநர்களால் முடியவில்லை. மக்களின் ரசனை அறிந்த இந்த அனுபவமிக்க இயக்குநர்களால் இப்போதுகூட புதியவர்களுடன் போட்டி போட்டு படத்தை இயக்கித் தர முடிகிறது.
அப்படிப்பட்டவர்களில் ஒருவரான ஷாஜி கைலாஷின் திரைக்கதை, இயக்கம் என்றால் சும்மாவா..?

ஒரு நாள் இரவு வேளையில் சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏ.சி. பெட்டியில் சினிமா நடிகையான இனியா, அவரது அக்காவான அர்ச்சனா, அக்காவின் கணவர்..  இந்த மூவரும் ஒரு கூபேயில் பயணிக்கிறார்கள். இவர்களுடன் அதே கூபேயில் துப்பாக்கி சுடும் வீராங்கனையான நீத்து சந்திராவும் பயணிக்கிறார்.
இன்னொரு கூபேயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் விஜய்யும், கன்னித்தீவு கார்மேகம் என்ற எழுத்தாளரான மனோபாலாவும் பயணிக்கிறார்கள்.
இன்னொரு கூபேயில் துளசி மணி என்னும் நடனப் பெண் தனியே பயணிக்கிறார்.
அடுத்த கூபேயில் மருத்துவரான சுஜா வாருணி தனது 3 ஆண் டாக்டர் பயணிகளுடன் பயணிக்கிறார்.
இன்னொரு கூபேயில் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகன் மற்றும் மனைவியுடன் சிங்கமுத்து பயணிக்கிறார். இதே கூபேயில் கோமல் ஷர்மாவும் செல்கிறார்.
இவர்களுடன் டிக்கெட்டே எடுக்காமல் தீவிரவாதி என்று சந்தேகிக்கப்படும் ஆர்.கே.செல்வமணியும் செல்கிறார்.
கூடவே, சீட்டு விளையாட்டில் பெரும் விருப்பம் கொண்ட டிடிஆர் எம்.எஸ்.பாஸ்கரும், கம்பார்ட்மெண்ட்டின் அட்டெண்டரான அனூப் சந்திரனும் பயணிக்கின்றனர்.
இந்த ஒட்டு மொத்தக் குழுவும் மதுரைக்கு வேறு வேறு காரணங்களினால் சென்று கொண்டிருக்க திண்டுக்கல் அருகில் 2 மணி நேரம் வண்டி நின்றிருக்கும் நேரத்தில் ரயிலில் பயணம் செய்த 3 இளம் பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள்.
இந்தக் குற்றத்தைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு RATs எனப்படும் Railway Anti-Criminal Task Force பிரிவிடம் ஒப்படைக்கப்படுகிறது. அந்தப் பிரிவில் கமிஷனராக இருக்கும் சர்புதீன் என்னும் ஆர்.கே. இந்தக் கொலை வழக்கை விசாரிக்கத் துவங்குகிறார்.
ரயில்வே ஸ்டேஷனின் சிசிடிவி கேமிராவை சோதனையிட்டதன் பலனாக தீவிரவாதி என்று சந்தேகிக்கப்படும் ஆர்.கே.செல்வமணி சிக்குகிறார். அவரிடம் விசாரணை செய்ய.. அவருக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
உடனேயே தனது விசாரணையின் திசையை மாற்றுகிறார் ஆர்.கே. ரயிலில் பயணித்தவர்கள் அனைவரையும் விட்டுவிடாமல் விசாரிக்கிறார் ஆர்.கே. அவருடைய புலன் விசாரணையில் புதிய புதிய தகவல்கள் கிடைத்துக் கொண்டேயிருக்க.. கதையும், திரைக்கதையும் விரிந்து கொண்டே செல்கிறது.
டிரெயினின் வேகத்தைவிடவும் வேகமாக செல்லும் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதையில்தான் படத்தின் முடிவும், கொலை செய்த குற்றவாளிகள் யார் என்பதும் தெரிய வரும்.. அவைகளை படத்தைத் தியேட்டரில் பார்த்து தெரிந்து கொள்ளலாமே..?
2007-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘நதியா கொலையான ராத்திரி’ என்கிற மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்குதான் இந்தப் படம். இந்த மலையாள மூலத்தை மலையாள இயக்குநர் கே.மது இயக்கியிருந்தார். ஆனால் தமிழ் ரீமேக்கை ஷாஜி கைலாஷ் இயக்கிக் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ஆர்.கே. மத்திய வயதை எட்டியவர். இளைஞரோ, கண் கவரும் வாலிபரோ இல்லை என்பதால் அவருக்கு எது வருமோ.. எந்தக் கேரக்டர் ஒத்து வருமோ அது மாதிரியான கதையை தேர்வு செய்து கச்சிதமாக படமாக்கி அதில் நடித்திருக்கிறார். இது ஒன்றுக்காகவே இவரை வெகுவாகப் பாராட்ட வேண்டும்.
படத்தின் திரைக்கதைக்கேற்பவே இவருடைய ஆக்சன் காட்சிகளும், நடிப்புத் திறனும் இருப்பதால் அது தேவையே இல்லாத ஒன்றாகவே இருக்கிறது. இருப்பினும் சண்டை காட்சிகளில் அனல் பறக்கிறது. தொழில் நுட்ப உதவியுடன் நடைபெறும் அனைத்து சேஸிங் காட்சிகளிலும் மெய் மறக்கச் செய்யும் அளவுக்கு சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார்கள்.
இந்த சண்டை காட்சிகளுக்காக உடலை வருத்தி, வளைத்து, நெளித்து தனியாக ஒரு டிரெயினிங்கும் எடுத்து வந்திருக்கிறார் ஆர்.கே. அதற்கேற்ற பலன் திரையில் தெரிகிறது.
காதல் காட்சிகள் எதுவுமில்லாமல், காமெடி காட்சிகள்கூட இவரை மையப்படுத்தி இல்லாமல் இருப்பதால்தான் படத்தில் கமிஷனர் வேடத்திற்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார் ஆர்.கே.
நீத்து சந்திரா முதல்முறையாக இரு வேடங்களில் நடித்துள்ளார். ஆக்ரோஷமான அக்கா வேடத்தைவிடவும் அமைதியான தங்கை வேடத்தில் ஜொலிக்கிறார். நடிப்பிலும், அழகிலும் கவர்கிறார். கிடைத்த இரண்டு, மூன்று காட்சிகளில்தான் நடிப்புக்கான ஸ்கோப் இருப்பதால் அதையும் குறையில்லாமல் செய்திருக்கிறார் நீத்து.
இனியாவுக்கு பெரிய வாய்ப்புகள் இல்லையென்றாலும், அவருடைய அக்காவாக நடித்திருக்கும் அர்ச்சனாவுக்கு மிகப் பெரிய ‘வாய்’ப்பு எனலாம்.. பேசிப் பேசியே தீர்க்கிறார் அனைவரையும்.. இதுவரையிலும் சின்னத்திரையில் கொடி கட்டிப் பறந்த அர்ச்சனா இனி வெள்ளித்திரையிலும் மின்னலாம். அதற்கான முழு தகுதி அவருக்கு உண்டு என்பதை இந்தப் படத்தில் அவரது நடிப்புத் திறமை எடுத்துக் காட்டுகிறது.
எம்.எஸ்.பாஸ்கர் வழக்கம்போல் தனி ராஜ்யமே நடத்தியிருக்கிறார். சீட்டுக் கட்டு பிரியராக அது தொடர்பான வசனங்களை ஒவ்வொரு இடத்திலும் இழுத்துவிடுவதும்.. கொலை நடந்த பிறகு தான் சிக்கலில் மாட்டிக் கொண்ட பின்பு அதில் இருந்து தப்பிக்க அவர் பேசும் பேச்சுக்களும், அந்த நேரத்தில் நம்மையும் ரிலாக்ஸ் செய்கின்றன.
அனூப் சந்திரன் என்னும் மலையாள நடிகர் ஒரு சில காட்சிகளில் மட்டும் வந்தாலும் அனைவரையும் கவர்ந்திழுத்திருக்கிறார். முகத்தில் நவரசத்தையும் கலந்து கொடுத்திருக்கிறார். ஒரே ஷாட்டில் குரோதம், பாசம், அன்பு, விரோதம் என்று அனைத்தையும் கலந்து கட்டி அடித்து ஆடியிருக்கிறார். இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் பாராட்டுக்குரியது.
“முருகா”, “முருகா” என்றபடியே சுற்றித் திரியும் நாசரும் பல இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார். தனது இத்தனை வருட கால நடிப்பு அனுபவத்தை வைத்து இவர் பேசியிருக்கும் டைமிங் வசனங்கள் அனைத்தும் முத்தானவை. படத்தின் திரைக்கதையை நகர்த்த பெரிதும் உதவியிருக்கிறது நாசரின் கேரக்டர்.
மத்திய அமைச்சர் சுமன், இன்ஸ்பெக்டர் ஜான் விஜய், அவ்வப்போது கடித்து வைக்கும் எழுத்தாளர் மனோபாலா, நீத்துவின் மாமாவாக வரும் சித்திக், டாக்டராக நடித்திருக்கும் சுஜா வாருணி, துளசி மணியாக நடித்திருக்கும் நடிகை என்று படத்தில் இடம் பெற்றிருக்கும் அனைவருமே குறிப்பிடத்தக்க அளவில் நடித்திருக்கிறார்கள். அதற்கான வாய்ப்பும் சம அளவில் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
சஞ்சீவ் சங்கரின் ஒளிப்பதிவில் குறைவில்லை. அனைவரையும் அத்தனை அழகாக காட்டியிருக்கிறார்கள். டான் பாஸ்கோவின் படத் தொகுப்பும் படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பலம். இடையிடையே ரயிலின் வேகத்தையும் காட்டிக் கொண்டு கூபே, கூபேயாக நடைபெறும் கதையையும், ஆர்.கே.வின் விசாரணை போகும் பாதையையும் டச் விடாமல் இணைத்திருப்பதற்கு மிகப் பெரிய திறமை வேண்டும். அது எடிட்டர் டான் பாஸ்கோவிடம் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
எஸ்.எஸ்.தமணின் பின்னணி இசை காதைக் கிழித்திருப்பது மட்டும்தான் படத்தின் நெருடலான விஷயம். கொஞ்சம் ஒலியைக் குறைத்து மெளனத்தைக்கூட சில இடங்களில் நிரப்பியிருக்கலாம். நன்றாகத்தான் இருந்திருக்கும்..! படத்தின் வசனங்கள்கூட பல இடங்களில் படத்தை கவனிக்க வைத்தும் திரைக்கதையில் டெம்போவையும் ஏற்ற உதவியிருக்கிறது. இதற்காக வசனகர்த்தா ஆர்.பிரபாகருக்கு பெரிய பாராட்டுக்கள்..!
என்ன இருந்தும்.. ஒரு போலீஸ் கமிஷனர் வழக்கை விசாரிக்கிறார் என்றாலும் ஆர்.கே. படம் முழுவதிலும் ஒரே மாதிரியான கோபத்திலும், ஆத்திரத்திலுமே வசனங்களை உதிர்ப்பது கொஞ்ச நேரத்திலேயே சலிப்பாகிறது. காதல் வேண்டாம். நடனம் வேண்டாம்.. காமெடி வேண்டாம்.. ஆனால் அவரது இறுக்கமான மன நிலையை தாண்டி அவரது கேரக்டர் ஸ்கெட்ச்சை அமைத்திருக்கலாம். ‘சி.பி.ஐ. டைரி குறிப்பு’ ஹீரோ மம்முட்டியை போல..!
முடிவில் யாராலும் ஊகிக்க முடியாத ஒரு விஷயத்தைத் தொடும் திரைக்கதைதான் படத்தின் மிகப் பெரிய பலமே..! இதனால் கிளைமாக்ஸில் சீட்டின் நுனிக்கு வந்து காத்திருக்கும் சூழலை கொண்டு வந்த இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.
ஒரு செமத்தியான திரில்லர் மூவியை பார்க்க விரும்புவர்கள் அவசியம் இந்தப் படத்தைப் பார்க்கலாம்..!

0 comments: