நிசப்தம் - சினிமா விமர்சனம்

14-03-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மிராக்கிள் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஏஞ்சலின் டாவென்சி தயாரித்துள்ளார். அஜய், அபிநயா, பேபி சாதன்யா, கிஷோர், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், ருது, ஹம்சா, பழனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – எஸ்.ஜே.ஸ்டார், இசை – ஷான் –ஜாஸீல், கலை – ஜான் பிரிட்டோ, பாடல்கள் – நா.முத்துக்குமார், நடனம் – சங்கர், சிறப்பு சப்தம் – சி.சேது, ஒலி – யுவராஜ், டிசைன்ஸ் – ஷபீர், மக்கள் தொடர்பு – யுவராஜ், நிர்வாகத் தயாரிப்பு – ஜி.சங்கர், பி.ஜெ.அனில்குமார், இணை தயாரிப்பாளர்கள் – கிருபா ஆனே பீட்டர், ஜெயரதி லாரன்ஸ், பிராச்சி சுக்லா, வளர்நாதன், பெருமாள், தயாரிப்பு – ஏஞ்சலீன் டாவின்சி, எழுத்து, இயக்கம் – மைக்கேல் அருண்.
2013-ம் ஆண்டு வெளிவந்த ‘Hope’ என்கிற கொரிய திரைப்படத்தின் காப்பிதான் இந்தப் படம்.
எத்தனை, எத்தனை தண்டனைகள் வழங்கினாலும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு அளவில்லாமலேயே இருக்கிறது. அக்குற்றத்தினை செய்பவர்களும் பெண்களால் பிரசவிக்கப்பட்டு பெண்களாலேயே வளர்க்கப்பட்டும் அவர்களால் எப்படி இதனைச் செய்ய முடிகிறது என்பதுதான் புரியாத புதிராகவே இருக்கிறது.
மனநலம் சார்ந்த பிரச்சினையில் இருப்பவர்களைத் தவிர மற்றவர்களால் குழந்தைகளை குழந்தைகளாகவே கொண்டாட முடியும். இப்படியிருக்கும் சூழலில் இவர்களாலும் எப்படி தங்களது பாலியல் தேவைக்காக குழந்தைகளை தொட முடிகிறது என்பதை நினைக்கும்போது வேதனையாகத்தான் இருக்கிறது.
பெங்களூரில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கியதாகச் சொன்னாலும், படத்தின் திரைக்கதை, வசனம், காட்சியமைப்புகள் அனைத்துமே அந்த ‘Hope’ என்கிற கொரிய திரைப்படத்தின் அப்பட்டமான காப்பி என்பதுதான் உண்மை.

அஜய், அபிநயா காதல் திருமணம் செய்து கொண்ட கலப்புத் திருமண தம்பதிகள். இவர்களது ஒரே மகள் பூமி. வயது 8. 3-ம் வகுப்பு படித்து வருகிறாள். அபிநயா வீட்டுக்கு அருகிலேயே ஒரு டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர் நடத்தி வருகிறார்.
அஜய் கார் வொர்க் ஷாப்பில் மெக்கானிக்காக பணியாற்றுகிறார். இவருடைய நெருங்கிய நண்பரான பழனியும் அதே வொர்க் ஷாப்பில் சூப்பர்வைசராகப் பணியாற்றுகிறார். இவரும், இவருடைய மனைவியும்கூட அஜய்க்கும் அபிநயாவுக்கும் மிக மிக நெருக்கமானவர்கள்.
ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்துக்கே உரித்தான சந்தோஷத்துடன் போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கையை ஒரு நாள் காலை பொழுது வாரிச் சுருட்டுகிறது. மழை பெய்து கொண்டிருக்கும் காலையில் பள்ளிக்குச் செல்கிறார் பூமி. வழியில் அவளிடத்தில் உதவி கேட்கும் ஒரு குடிகாரன் பூமியை தூக்கிச் சென்று சிதைக்கிறான்.
அந்த்க் கொடுமையிலும் புத்திசாலித்தனமாக தன்னை சீரழித்தவனின் செல்போனிலேயே அவசர போலீஸுக்கு போன் செய்து விஷயத்தைச் சொல்கிறாள் பூமி.
பிஞ்சுக் குழந்தை இத்தனையையும் தாங்கிக் கொண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர.. பதைபதைக்கிறார்கள் பெற்றோர்கள் அஜய்யும், அபிநயாவும். மீடியாக்களுக்குச் சொல்லாமலேயே விசாரிக்கத் துவங்குகிறார்கள் போலீஸார். துணை கமிஷனர் கிஷோர் இந்த விஷயத்தை தானே ஹேண்டில் செய்கிறார்.
மருத்துவமனையில் பூமியின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருக்கிறது. அவள் மிகவும் பயந்து போயிருக்கிறாள். யாரையும் பார்க்கவே தயங்குகிறார். பேசவும் மறுக்கிறாள். மனநல மருத்துவரின் உதவியால் மெல்ல, மெல்ல அவளிடத்தில் பேச்சு கொடுத்து பேச வைக்கிறார்கள்.
குற்றவாளியின் புகைப்படத்தை காட்டி அவளது சுட்டிக் காட்டுதலால் குற்றவாளியை கைது செய்கிறார்கள். இப்போது ஒட்டு மொத்த மீடியாக்களும் பூமியிருக்கும் மருத்துவமனை அவர்களது பெற்றோர்களை சுற்றிச் சுற்றி வர.. இருந்த நிம்மதியும் பறி போகிறது இருவருக்கும்.
குற்றவாளியோ தான் பெரிய குடிகாரன் என்றும், குடித்த பின் தான் என்ன செய்தேன் என்பது தனக்கே தெரியாது என்பது போலவும் கோர்ட்டில் வாதாட துவங்குகிறான். இதனால் சிறிய தண்டனையோடு அவன் தப்பிவிடும் வாய்ப்பு ஏற்பட்டுவிடுகிறது.
அதே நேரம் எந்தச் சூழலிலும் பூமிக்கு இது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்று நினைக்கிறார்கள் பெற்றோர்கள். இது குறித்து சரியான விழிப்புணர்வை காட்ட நினைக்கிறார் மனநல மருத்துவரான ருது. ஆனால் பூமி கோர்ட்டிற்கு வந்து சாட்சி சொன்னால்தான் அந்தக் குற்றவாளிக்கு தகுந்த தண்டனையை வாங்கித் தர முடியும் என்கிறார் கிஷோர்.
முடிவு என்னாகிறது என்பதுதான் இந்தப் படம்.
தென்கொரியாவிலும் இதே போல் ஒரு சம்பவம் நடக்க அதனை மையமாக வைத்துதான் ஒரிஜினல் கொரிய படத்தை இயக்கியிருக்கிறார் அதன் இயக்குநர். அதன் பாதிப்பு உலகம் முழுவதிலுமே இருப்பதால் இன்றைய சூழலில் இந்தப் படம் இந்தியாவிற்கும் அவசியம் தேவையாய் இருக்கிறது.
பாலியல் வறட்சிகள் மிகுந்த தேசமாக இந்தியா இருப்பதும் இதற்கு ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் குழந்தைகள் மீது கை வைப்பதற்கு என்ன காரணம் என்றுதான் யாருக்கும் சொல்லத் தெரியவில்லை. இது மிருகத்தனமான செயல். இப்படியான குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு தூக்குத் தண்டனைதான் கொடுக்கப்பட வேண்டும் என்கின்றனர் இன்றைய சமூகத்தின் பிரதிநிதிகள்.
படம் ஒட்டு மொத்தமாகப் பார்க்கப் போனால்.. ஒரு பாலியல் குற்றத்தை எந்தவித்த்தில் பெற்றோர்களும், மீடியாக்களும், காவல்துறையினரும், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் உறவினர்களும், நண்பர்களும் அணுக வேண்டும் என்பதை தெள்ளத் தெளிவாகச் சொல்லித் தருகிறது இந்தப் படம்.
ஆதியாக நடித்திருக்கும் அஜய் தன்னால் முடிந்த அளவுக்கான நடிப்பை காண்பித்திருக்கிறார். மூர்க்கத்தனமான கொடூரத்தால் சிறுகுடல், பெருங்குடல் பாதிக்கப்பட்டு மலக் குடல் செயலிழந்துவிட்டது. இதனால் அதனை அகற்றிவிட்டு செயற்கையான ஒன்று பொருத்த வேண்டும். அதன் பின்பு எப்போதும் கழிவு அகற்றல் பையை கையில் பிடித்தபடியே இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லும்போது ரசிகர்களின் மனதில் இடியை விதைத்தது போன்ற உணர்வு எழும்பியது மறக்க முடியாதது.. அந்த அளவுக்கு அந்தக் காட்சியில் அழுத்தமான இயக்கமும், கூடவே ஆதியின் உடைந்து போன நடிப்பும் ஒரு சேர இருக்கிறது.
தன்னை நெருங்கி வரக்கூட அனுமதிக்காமல் இருக்கிறாள் என்பதை புரிந்து அவர் படும் துயரமும், மகளை சந்தோஷப்படுத்த கடைசிவரையிலும் தன்னுடைய தொழிலைகூட விட்டுவிட்டு பொம்மை வேடமணிந்து அவர் படும் கஷ்டமும் எந்தப் பெற்றோருக்கும் இந்தக் கொடுமை நடந்துவிடக் கூடாது என்பதையே பிரார்த்திக்க வைத்திருக்கிறது.
தாய் ஆதிராவாக நடித்திருக்கும் அபிநயா நடிப்பில் மிளிர்கிறார். ஒரு அம்மாவாக தன்னுடைய தவிப்பை பல காட்சிகளில் உணர்த்தியிருக்கிறார். தன் வயிற்றில் அடுத்த கருவும் உருவாகியிருப்பதை சொல்லாமல் தவிர்த்தவர் பின்பு மருத்துவனையில் சொல்ல வேண்டி வந்து கலங்குகின்ற காட்சியில் உருக வைத்திருக்கிறார்.
மனநல மருத்துவராக நடித்திருக்கும் ருது ஒரு கட்டத்தில் படத்தை தன்னுடைய சொந்தக் கதையாலும், தன்னுடைய சிகிச்சை முறையினாலும் படத்தை நகர்த்த பெரிதும் உதவியிருக்கிறார். இனிமேல் நாம் செய்வது எல்லாமே நம்முடைய குழந்தையின் கடந்த காலத்தை மீட்டு அவளிடத்தில் கொடுப்பது மட்டும்தான் என்று யதார்த்தமாக மருத்துவ ரீதியான முறையில் சிந்தித்து செயல்படும் அவரது நடிப்பே படத்தைக் காப்பாற்றியிருக்கிறது.
பூமியாக நடித்திருக்கும் பேபி சாதன்யாவை இப்படியொரு கேரக்டரில் நடிக்க அனுமதித்த அவரது பெற்றோருக்கு முதற்கண் நமது நன்றிகள் உரித்தாகட்டும். தன்னுடைய சின்னச் சின்ன ஆக்சன்களில்கூட பெண் குழந்தை இல்லாதவர்களுக்கு இப்படியொரு குழந்தை நமக்கு இருக்க்க் கூடாதா என்கிற ஏக்கத்தை உருவாக்கியிருக்கிறார் சாதன்யா.
மருத்துவமனையில் தன்னுடைய பயம், விருப்பு, வெறுப்பு, அதிர்ச்சி, அயர்ச்சி என்று அனைத்தையுமே தன்னுடைய ஒற்றைக் கண் பார்வையிலேயே விளக்கும் காட்சியில் அசர வைத்திருக்கிறார்.  அப்பாவைக்கூட பார்க்க பயப்படும் சூழல் அவர் காட்டும் ஆக்சனில் தெரிகிறபோது பார்வையாளர்களுக்கே ஒரு கோபத்தை நிச்சயமாக உண்டு பண்ணும்.
“கையைப் பிடிச்சு கூட்டிட்டுப் போய்விட்டேன். ஒரு உதவிதானப்பா செஞ்சேன். அது தப்பா…?” என்று சாதன்யா கேட்கும் கேள்வி பொளேரன்று நம்ம தலையில் அடிக்கும் இடி. அந்தக் கேள்விக்கு நமது கண்ணீரை மட்டுமே நாம் காணிக்கையாக்கும் சூழல்தான் உள்ளது.
ஒளிப்பதிவாளர் எஸ்.ஜே.ஸ்டாரின் பணி மெச்சத்தகுந்தது. படம் பாதிக்கும் மேல் சோகக் காவியத்தைச் சொல்லும் கதை என்பதால் அதற்கேற்றாற்போல் நம் மனதில் எண்ணமறிந்து படமாக்குதல் போலிருக்கிறது கேமிராவின் பணி.
ஷான் ஜாஸீலின் இசையில் ஒரேயொரு பாடலிலேயே அஜய், அபிநயாவின் சந்திப்பையும், காதலையும், கல்யாணத்தையும், வாழ்க்கையும் கொண்டு போய் முடிச்சுப் போட்டு சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.
இந்தக் கதையின் உண்மையான ஆசிரியர்களான கொரிய மூலப் படத்தின் திரைக்கதை ஆசிரியர்கள் Jo Joong-hoon மற்றும் Kim Ji-hye இருவருக்கும் நமது நன்றிகள். அதேபோல் மிகச் சிறப்பான முறையில் கொரிய படத்தை படமாக்கி அதனை தமிழாக்கம் செய்யத் தூண்டியிருக்கும் இயக்குநர் Lee Joon-ik-க்கும் நமது நன்றிகள் உரித்தாகட்டும்..!
ஒவ்வொரு பெற்றோர்களும் பார்க்க வேண்டிய படம் இது. பெண் குழந்தைகளை பத்திரப்படுத்தி வைக்க வேண்டியவிதத்தில் பெற்றோர்கள்தான் அவர்களைக் காப்பாற்ற வேண்டும்.  பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தப்பட்ட சிறுவர், சிறுமிகளை நாம் அணுக வேண்டிய விதத்தை இந்தப் படம் சுட்டிக் காட்டியிருக்கிறது.  
‘குட் டச்’ ‘பேட் டச்’ எது என்பது பற்றி நாம் குழந்தைகளுக்கு இப்போது சொல்லிக் கொடுக்கத்தான் வேண்டும். காலச் சூழல் மாறும்போது மனிதர்களும் மாறிக் கொண்டே வருகிறார்கள். எப்போது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தூங்கிக் கொண்டிருக்கும் மிருக உணர்வு எழுந்திருக்கும் என்பது யாருக்கும் தெரியாது.
அது எழும் சூழலுக்கு ஆட்படும் அளவுக்கு நாம் நமது குழந்தைகளை கொண்டு போகவும் கூடாது. எது வந்தாலும் அதனை தைரியமாக எதிர் கொள்ளும் மனப்பக்குவத்தை சிறு வயதில் இருந்தே நாம் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து அதற்கேற்றாற்போல் பழக்கப்படுத்த வேண்டும்.
முழுக்க, முழுக்க சிறப்பாக மேக்கிங் செய்யப்பட்ட படம் என்று சொல்ல முடியாது. ஆனால் மனதில் உட்கார வைத்திருக்கிறார் இயக்குநர் என்பது மட்டும் உண்மை. அபிநயாவிற்கு டப்பிங் வாய்ஸ் மிக்ஸ் ஆகவே இல்லை. படத் தொகுப்பில் எப்படி இதனை கோட்டைவிட்டார்கள் என்றே தெரியவில்லை. அதேபோல் பல காட்சிகளில் வசனத்தை வெளிப்படுத்திய முறை படு செயற்கையாக இருக்கிறது என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.
திரைக்கதையில் எந்த இடத்தில் கதை பிறண்டு போகாதபடியும், மையக்கதையில் இருந்து நழுவாதபடியும் வைத்திருக்கிறார் இயக்குநர். இது கொரிய படத்தின் அதே திரைக்கதைதான் என்றாலும், படமாக்கலில்  இந்தியத் தன்மையுடன் படத்தை பார்க்க வைக்கும் அளவுக்கு திறமையாகத்தான் இயக்கியிருக்கிறார் இயக்குநர். இதற்காகவே இயக்குநர் மைக்கேல் அருணுக்கும் நமது பாராட்டுக்கள்.
இந்தப் படம் மூலமாக நமக்கு எழும் ஒரேயொரு வருத்தமான செய்தி என்னவெனில், இப்படியொரு அந்நிய மொழி படத்தை காப்பி செய்யும்போது அதுவும் நல்ல படமாக செய்திருக்கும்போது… முறைப்படி அனுமதி வாங்கியே செய்திருக்கலாமே இயக்குநரே..? அப்படி செய்திருந்தால் உங்கள் மீதான மரியாதை, மீடியா உலகத்தில் இன்னமும் அதிகமாக இருந்திருக்குமே இயக்குநர் ஸார்..! ஏன் செய்யவில்லை..?!
எத்தனையோ அர்த்தமற்ற, ஆபாச குப்பைகளுக்கு மத்தியில் நிச்சயமாக நமக்காகவே எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை நாம் ஆதரவளித்தே தீர வேண்டும்..! ஆதரவளிப்போம்..!
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் அவசியம் பார்க்க வேண்டிய படம் ‘நிசப்தம்’..!

0 comments: