Showing posts with label சுப்பிரமணியபுரம். Show all posts
Showing posts with label சுப்பிரமணியபுரம். Show all posts

இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-03-10-2009

03-10-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


இட்லி


நான் எழுதியிருந்த கேவலமாகிப் போன தமிழக அரசின் திரைப்பட விருதுகள் பதிவில் இடம் பெற்ற திரைப்படங்களைப் பற்றிய அலசலில் புதிய விஷயம் ஒன்றும் தாமதமாகக் கிடைத்தது.


அதாகப்பட்டது என்னவெனில் பரிசுகளை வென்றுள்ள திரைப்படங்களில் 98 சதவிகித திரைப்படங்களின் டிவி ரைட்ஸ்கள் கலைஞர் டிவியிடம்தான் உள்ளனவாம். திரைப்படங்களை மிகக் குறைந்த விலைக்கு வாங்கியதால் அவர்களுக்கு பரிவு காட்டும் பொருட்டு இந்த ஏற்பாடு என்கிறது சேம்பர் வட்டாரம்.




'பூ' பார்வதியையும், 'பொம்மலாட்டம்' ருக்மணியையும் தாண்டி த்ரிஷாவுக்கு கொடுத்ததன் மர்மம் என்ன என்று விசாரித்தால், திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரபலமான திரை நட்சத்திரங்கள் வந்தால்தான் மார்க்கெட்டிங் செய்ய முடியும் என்று நிகழ்ச்சியை ஒளிபரப்ப காத்திருக்கும் கலைஞர் டிவியின் மார்க்கெட்டிங் டீமின் புலம்பலும் ஒரு காரணம் என்கிறார்கள்.

யாருக்காக யாரால் ஆட்சி செய்யப்படுகிறது என்பதே புரியவில்லை.

தோசை


ஜீ தமிழ்த் தொலைக்காட்சியும், சன் தொலைக்காட்சியும் ஒரே நாளில் அரை மணி நேர வித்தியாசத்தில் 'சுப்பிரமணியபுரம்' திரைப்படத்தை ஒளிபரப்பியதில் இருக்கும் மர்மங்களும் இதைப் போலவே பல கதைகளை உள்ளடக்கியதாக உள்ளது.




முதல் முறையாக ஜீ தமிழ்த் தொலைக்காட்சிக்கு விளம்பரங்கள் கொட்டத் துவங்கியது 'சுப்பிரமணியபுரம்' திரைப்படத்திற்குத்தான்.. முதலிலேயே விளம்பரங்களை அவர்களிடம்விட்டால் பின்பு நமக்கு கொஞ்சமாவது துண்டு விழுகுமே என்று யோசித்த சன் தரப்புதான் மிகுந்த திட்டமிட்டு, தங்களது வியாபாரத்தை முன் நிறுத்தி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிட்டது.


தங்களுடைய சன் நெட்வொர்க் டிஜிட்டல் ஒளிபரப்பில் ஜீ தமிழ்த் தொலைக்காட்சியை ஒளிபரப்பும் வசதியைத் தருவதாகச் சொல்லி ஆசை காட்டியும், "இல்லைன்னா அன்னிக்கு மட்டும் உங்க கனெக்ஷனுக்கு டெக்னிக்கல் பிராப்ளம் வந்தாலும் வரலாம்" என்று செல்லமான மிரட்டலும் வந்தபடியால்தான் ஜீ தரப்பு இணங்கி வந்திருக்கிறது.


அவர்களுக்கும் வேலையாகணும்ல்ல.. வெறும் கேபிளில் வருவதைவிட சன் நெட்வொர்க்கில் வருவதால் கூடுதல் பார்வையாளர்களும், அதனால் எதிர்காலத்தில் கூடுதல் விளம்பர வருவாயும் கிடைக்குமே என்கிற வியாபாரத்தினால் ஜீ பெரிய மனதுடன் விட்டுக் கொடுத்திருக்கிறது.


சுமார் 85 லட்சத்துக்கு வாங்கியிருந்த 'சுப்பிரமணியபுரம்' திரைப்படத்தை ஒரு கோடி லாபம் வைத்து சன் தரப்புக்கு விற்றுவிட்டது ஜீ. கூடுதலாக ஏற்கெனவே செய்து வந்த விளம்பரத்தினால், அன்றைக்கு மட்டும் சும்மா ஓட்டிக் கொள்ள பெர்மிஷனும் வாங்கி ஓட்டியாகி விட்டது. அன்றைக்கு நிஜமாகவே வர வேண்டிய விளம்பர கல்லாவில் சுமார் 20 லட்சம் மட்டுமே குறைவாம்.. மற்றபடி ஜீ தமிழுக்கும் காசுதான்..



இன்னொரு விஷயமும் சேனல்கள் வட்டாரத்தில் உலா வருகிறது.. சமீபத்தில் வந்து தமிழகத்தைக் கலக்கிய 'நாடோடிகள்' திரைப்படமும் சன் தரப்பிடம் போய்விட்டதாம். அதுவும் ஜீ சேனலால் 2-க்கு வாங்கப்பட்டு கூடுதலாக 1 பெரிய நோட்டு லாபம் வைத்து சன்னின் கைக்கு போயே போய்விட்டது என்கிறார்கள்.

மிக விரைவில் சன் தொலைக்காட்சியில் 'சம்போ சிவசம்போ'வை காணலாம்.


பொங்கல்


உலக நாயகன், ஆழ்வார்பேட்டை ஆண்டவன், ஆஸ்கார் நாயகன், காதல் இளவரசன், கலைஞானி, அண்ணன் கமலஹாசனின் 50 ஆண்டு திரையுலக வாழ்க்கைக்கு முதற்கண் எனது வாழ்த்துக்கள்..


அண்ணனின் திரையுலக வாழ்க்கையை ஒட்டி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற விழா மிகப் பிரம்மாண்டமாக நடந்தது என்றாலும் என்னைப் போன்ற அவரது ஆரம்பக் காலத் தோழர்களுக்கு ஒரு விஷயம் குறையாகவே பட்டது.


அண்ணனுடன் ஜோடி போட்ட நடிகைகள் பலரும் மேடைக்கு வந்து அண்ணன் பற்றி தங்களது கருத்துக்களை தெரிவித்தார்கள்.

மீனா, ரேவதி, லிசி, நிரோஷா, ஊர்வசி, ராதிகா, கவுதமி, ஜெயசித்ரா, ரோகிணி, சரண்யா, ஷோபனா, தபு என்று பட்டியல் நீண்டாலும் என்னைப் போன்ற அவருடைய ஆதிகாலத்துப் படத்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சிலர் வராதது ஆச்சரியத்தை அளித்தது.


"ராதா, அம்பிகா சகோதரிகள் ஏன் வரவில்லை?" என்று கேட்டதற்கு "அழைப்பிதழ் கொடுத்தாச்சு.. கூப்பிட்டாச்சு.. சொல்லியாச்சு.. வரலை.." என்கிறது மீடியா வட்டாரம். மனோரமா ஆச்சிக்கு காலில் அடிபட்டிருப்பதால் வீட்டிலேயே பெட்ரெஸ்ட்டில் இருக்கிறார். ஸோ, அவரும் இல்லை.

இவர்களும் இல்லாமல் இன்னும் இரண்டு பேரை கமலஹாசனின் ரசிகர்கள் கூட்டம் எதிர்பார்த்து காத்திருந்து ஏமாற்றமடைந்தது.
அண்ணன் கமலஹாசனுடன் அதிகமாக ஜோடி போட்டு நடித்தவர்கள் வராமல் ஆப்சென்ட்டான அந்த இரண்டு பேர்தான். ஒருவர் ஸ்ரீப்ரியா, இன்னொருவர் ஸ்ரீதேவி.

ஸ்ரீப்ரியாவைப் பொறுத்தமட்டில் கமல் மீது மட்டுமில்லாமல் ரஜினி மீதும் காண்டுவில்தான் இருக்கிறார் என்கிறார்கள். எவ்வளவோ நெருங்கிய நண்பர்கள்போல் பழகியும் இரண்டு பெரிசுகளும் 16 வருடங்களுக்கு முன்பாக தனது திருமணத்திற்கே வராமல் ஏமாற்றிய கோபம் இன்னமும் ஆறாமல் அப்படியேதான் இருக்கிறார் ஸ்ரீப்ரியா.


அடுத்தது நம்ம ஸ்ரீதேவி அக்கா. ஸ்ரீப்ரியாவுக்கு கொஞ்சமும் சளைக்காமல் ஈகோ பார்க்கக் கூடியவர். ராணி எலிசபெத் அம்மையார் தலைமையில் நடந்த 'மருதநாயகம்' துவக்க விழாவில் தன்னை அழைத்து வெளியில் கூட்டத்தோடு கூட்டமாக அமர வைத்த கோபத்தில், அப்போதே எழுந்து வெளியேற முயன்றார். பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதிக்க முடியாது என்று சொல்ல வேறு வழியில்லாமல் அமர்ந்திருந்துவிட்டு கிளம்பியவர்தான். சமீபத்தில் விஜயகுமார் வீட்டுக் கல்யாணத்தில் கமலஹாசனை தூரத்தில் பார்த்தவுடனேயே நழுவிக் கொண்டாராம் ஸ்ரீதேவி.

இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்து, பத்திரிகை அனுப்பி, போனில் செய்தி சொல்லி.. வருவதை உறுதிப்படுத்த பல முறை முயன்றும் ம்ஹும்.. "நோ ரெஸ்பான்ஸ்" என்கிறார்கள் பத்திரிகையுலக நண்பர்கள்.

மரியாதை இருக்குமெனில் கமலேதான் தங்களை அழைக்க வேண்டும் என்று இருவருமே எதிர்பார்த்தார்களாம். நம்ம அண்ணன்தான் இந்த விஷயத்துல அவங்களுக்கே அண்ணனாச்சே. "எல்லாரையும்போல கூப்பிடுங்க.. போதும்.. வந்தா வரட்டும்.." என்று சொல்லிவிட்டாராம்.


வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விழாவில் இந்த இரண்டு முக்கிய ஹீரோயின்களும் வராமல் போக.. எனக்கென்னவோ இளையராஜாவின் இனிமையான இசை, டான்ஸ், பைட் இல்லாத கமலஹாசனின் அந்தக் காலத்துப் படத்தைப் பார்த்ததுபோல் சப்பென்று இருந்தது.


வடை


மீண்டும், மீண்டும் முயற்சிக்கும் விக்கிரமாதித்தனை போல பல முறை வலை விரித்து கடைசியில் புவனேஸ்வரியை பிடித்து உள்ளே வைத்துவிட்டது காவல்துறை.


அவர் விபச்சாரம்தான் செய்கிறார் என்றாலும், அதற்கு அழைப்பு கொடுத்தது போலீஸ் நண்பர்தான். அந்த நண்பர் அழைக்காவிட்டால் அவர் பேசாமல் இருக்கப் போகிறார். காவல்துறைக்கு என்ன வந்தது..?

புவனேஸ்வரி குற்றவாளி என்றால், அவரை விருந்துக்கு அழைத்த அந்த போலீஸ் நண்பரும் குற்றவாளிதான்.. ஏற்பாடு செய்த போலீஸும்தான் குற்றவாளி.

இதென்ன பெரிய பயங்கரவாத குற்றமா? பொறி வைத்துப் பிடிப்பதற்கு..? ஏற்கெனவே ஒரு முறை பிடித்து அவரது சினிமா வாழ்க்கையை குதறிப் போட்டது போலீஸ். அப்போதும் இதே பாணியில் யாரோ ஒருவரை பயன்படுத்தித்தான் கைது செய்தது. அந்த ஆளே போர்ஜரி.. இருவரும் படுத்திருந்ததற்கு ஆதாரம் இல்லையென்று கோர்ட் விடுவித்தது.

இப்போது என்னடான்னா போலீஸ் ஒரு கடைல காண்டம் வாங்கிக் கொடுத்துச்சாம். அதை செல்போன்ல படம் எடுத்திருக்காங்களாம். அதே காண்டத்தைத்தான் புவனேஸ்வரி வீட்டு பெட்ரூம்ல எடுத்திருக்காங்களாம். அதை பயன்படுத்த வாங்கினவரே சொல்றாராம்.. நான் படுக்கக் கூப்பிட்டேன். அவர் வர்றேன்னாருன்னு.. இது கோர்ட்டுல செல்லுமாம்..

படுக்க வர்றேன்னு சொன்னவரைவிடவும், கூப்பிட்டவுனுக்கு என்ன தண்டனையான்னு கேட்டா... அது சும்மா ஒரு ஏற்பாடாம்..


அட போங்கய்யா.. நீங்களும் உங்க இ.பி.கோ.வும்..!


பாவம் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா. ரஞ்சிதா கோவிச்சுக்கிட்டு போனதால "யாரை வேண்ணாலும் அந்த வேஷத்துக்கு போடுவேன்"னு சொல்லி புவனேஸ்வரியை கொண்டாந்தார்.. அதுவும் கலைஞர் டிவிக்கு. இப்ப நிலைமை இப்படி ஆயிருச்சு..

இனி 'தெக்கத்திப் பொண்ணு' கதை என்னாகுமாம்..?


சட்னி


உள்ளூர்ல குத்துப் பாட்டு ஆடினது போதும். ஹாயா வெளிநாட்டுல போய் நடுரோட்டுல ஒரு ஆட்டம் போடலாம் வாங்க..

நம்ம ஊர் பத்மலஷ்மி முதல் முறையா கர்ப்பமா இருக்கிறதுதான் இப்போதைய லேட்டஸ்ட் சூப்பர்ஹிட் கிசுகிசு. இதுல என்ன கிக் இருக்குங்கிறீங்களா?

நம்ம பரபரப்பு எழுத்தாளர் சாலமன்ருஷ்டியுடனான மூணு வருஷ குடும்ப வாழ்க்கையில் இருந்து அம்மணி இப்பத்தான்.. ஆறு மாசத்துக்கு முன்னாடிதான் டைவர்ஸாகி வெளில வந்தாங்க. இப்பத்தான் நிம்மதியா இருக்காங்களாம்.

வயது 39 ஆச்சுன்னாலும், ஏதோ இப்பவாவது குழந்தை பெத்துக்குறாங்களே.. விட்டுட்டுப் போவியான்னு கேக்குறீங்களா?
அதுவும் கரெக்ட்டுதான்.. ஆனா பாருங்க.. தன்னுடைய இந்த கர்ப்பத்துக்குக் காரணமான அந்த ஆண்மகன் யாருன்னு பத்மா சொல்ல மாட்டேங்குறாங்க. அதான் பரபரப்புக்குக் காரணம்.

அநேகமா அது அவரோட நெருங்கிய உறவினரான ஒரு வக்கீலாத்தான் இருக்கணும் என்கிறது இணையதளச் செய்திகள்.


இந்த டைப் வாழ்க்கை நல்லாயிருக்கே..


சாம்பார்

முன்னொரு காலத்துல நம்ம பக்கத்து ஸ்டேட்ல ஒரு பெரிய நடிகரோட வீட்ல நள்ளிரவு நேரத்துல துப்பாக்கி வெடிச்சது.

நடிகரோட சேர்ந்து தண்ணியடிச்சிட்டிருந்த ஒரு தயாரிப்பாளருக்கு தொடைல, இடுப்புல எல்லாம் துப்பாக்கி கண்டு பாய்ஞ்சு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் காப்பாத்தினாங்க. கேட்டாக்கா தன்னோட படம் ஓடாத கோபத்துல நடிகர்தான் சுட்டாருன்னு போலீஸ் சொல்லுச்சு.


நடிகரும் சமர்த்துப் பிள்ளையை மனநிலை பாதிப்பாயிருச்சுன்னு ஆஸ்பத்திரில போய் அட்மிட் ஆகித் தப்பிச்சாரு. கூடவே மூணே மாசத்துல ஆதாரம் இல்லைன்னு கோர்ட்ல கேஸ் படுத்திருச்சு. இது நம்ம நாட்டுல..
ஆனா மத்த நாட்டுல எல்லாம் இப்படியா?

ரோமன் போலன்ஸ்க்கி. திரைப்பட ரசிகர்களால் மறக்க முடியாத 'தி பியானியஸ்ட்' திரைப்படத்தின் இயக்குநர். இந்தப் படத்திற்காக 2002-ம் ஆண்டின் ஆஸ்கார் விருதையும் வாங்கியவர் இவர்.

அமெரிக்க லாஸ்ஏஞ்செல்ஸ் நகரில் 977-ம் வருஷம் ஒரு 13 வயசுப் பொண்ணோட உறவு வைச்சுக்கிட்டதா குற்றம்சாட்டப்பட்டு அப்பவே கைதாகி 42 நாட்கள் சிறையில் இருந்தார். வழக்கு விசாரணையில் இருக்கும்போதே அங்கேயிருந்து தப்பிச்சவர் போலந்து, பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்று இத்தனை வருஷமா இங்கிட்டும், அங்கிட்டுமா பொழப்பை ஓட்டிட்டாரு.



பாருங்க. இந்த வயசான காலத்துல எப்பவோ செஞ்ச தப்பு விடாம துரத்திப் பிடிச்சிருக்கு.

சமீபத்துல சுவிட்சர்லாந்து வந்த அவரை அமெரிக்க அரசோட வேண்டுகோளை ஏற்று அந்த நாட்டு போலீஸ் கபால்ன்னு புடிச்சு ஜெயில்ல வைச்சிருக்கு.. மனுஷன் 76-வது வயசுல ஜெயில்ல கிடக்குறாராம்..
இன்னும் அமெரிக்காவுக்கு கொண்டு போகலையாம்.

ஆனால் எப்பவோ நடந்த தப்புக்கு இப்ப கைது பண்றது நல்லாயில்லைன்னு ஹாலிவுட் பிரபலங்கள் மீட்டிங் வைச்சு பேட்டி கொடுத்திட்டிருந்தாலும், அமெரிக்க சட்டப்படி இந்த வழக்கில் இருந்து போலன்ஸ்கி தப்பிப்பது ரொம்ப கஷ்டமாம்..

என்ன செய்றது? விதி வலியது என்பது மறுக்க முடியாத உண்மை.


மிளகா சட்னி


ஆடுன காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள்.. அதைப் போல பல நடிகைகள் கல்யாணமாகிப் போன ஜோர்லேயே திரும்பி வந்து "நடிப்பு என்னை விட மாட்டேங்குது.." என்பார்கள். அந்த லிஸ்ட்டில் கூடிய சீக்கிரம் நம்ம மந்த்ராவும் வந்திருவார் என்கிறார்கள்.



அம்மணி தெலுங்கில் உதவி இயக்குநர் ஒருவரைக் கல்யாணம் செய்து குடும்பஸ்தியாக பிரமோஷனாகி, தனது கணவரான உதவி இயக்குநரை, தனது சொந்தக் காசையெல்லாம் போட்டு இயக்குநரா பிரமோஷன் பண்ணினாங்க. ஆனா அந்தப் படம் அட்டர்பிளாப்பாக.. மறுபடியும் வேலை தேடினாத்தான் பொழைப்பை ஓட்ட முடியும்ன்ற நிலைமையாம்.

இன்னொரு படம் ஆரம்பிக்கலாம்னு முயற்சிகள் செஞ்சப்பதான் அவரது கேரியரையே பகீராக்குற மாதிரி ஒரு வதந்தி போன மாசம் முழுக்க டோலிவுட்ல பரவி அவர் பேரு ஏகத்துக்கும் ரிப்பேராகிப் போய்க் கிடக்குதாம். "நான் அப்படி சொல்லலை.. சொல்லாததை ரிப்போர்ட்டர் தானா சொல்லிக்கிட்டிருக்காரு"ன்னு அம்மணி கிளிசரின் போடாம அழுது முடிச்சிருக்காங்க..


அழுது முடிச்சாலும் அரிதாரம் பூசிக்குற முடிவுல மாற்றமில்லையாம். அதுனால முதல் காரியமா பழைய மந்த்ராவா வர்றதுக்கான வேலைகளையெல்லாம் ஜிம்முல பழியா கிடந்து செஞ்சுக்கிட்டிருக்கிறதா கேள்வி..
வரட்டும்..

அக்கா, அண்ணி கேரக்டர்கூட கொடுத்து காப்பாத்த கோடம்பாக்கம் எப்பவுமே ரெடிதான்..


துவையல்


அக்கட தேசத்தில் நாயுடுகாருவுடன் டூ விட்டுக் கொண்டு இத்தாலிக்காரம்மா கட்சில சேர்றதுக்காக காத்துக்கிட்டிருக்கும் நமது முன்னாள் சிரிப்பழகி நடிகையோட வீட்ல கட்சி தாவுறது விஷயமா புயல் காத்து வீசுதாம்..


"கிட்டத்தட்ட ஒரு வருஷமா ஊர், ஊரா போயி 'அந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடாதீங்க'ன்னு தொண்டை கிழிய கத்தி என் பொழைப்பையே கெடுத்திட்டு வீட்ல உக்காந்திருக்கேன்.. நீ எப்படி அந்தக் கட்சில சேரலாம்..?"னு அம்மணியின் வூட்டுக்காரர் கத்துறாராம்..


ஆனாக்க.. அம்மணியோ ரொம்பவே கூலா "நான் என் பொழைப்பை பார்க்குறேன்.. நீ உன் பொழைப்பை பாரு"ன்னு கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டாங்களாம்..


பாவம் வூட்டுக்காரரு.. மெல்லவும் முடியாம, துப்பவும் முடியாம தவிச்சுக்கிட்டிருக்காரு..

ஆப்பம்


சினிமாக்காரங்க மட்டும்தான் குத்தாட்டம் போடுவாங்களா..? நாங்களும் போடுவோம்ல..

பணியாரம்

முருகா.. மன்னிச்சுக்கப்பா.. ஏதோ ஆர்வக் கோளாறுல பிள்ளைக பண்ணிட்டாங்க..

தேன்குழல்



என்னதான் ஆட்டமா ஆடுனாலும், ஏதோ ஒரு இடத்துல தலையை குனிஞ்சுதாங்க ஆகணும்..


போதும்ப்பா.. 'இட்லி-வடை' போட்டு ரொம்ப நாளாச்சேன்னு எழுத ஆரம்பிச்சா, ஒரே சினிமாவா வந்து குவிஞ்சிருச்சு.. அதுனால இது 'சினிமா ஸ்பெஷல்'ன்னு நினைச்சுக்குங்கோ..


அடுத்த வாரம் சந்திப்போம்..


நன்றி


வணக்கம்.

அசத்தல் ‘சுப்பிரமணியபுரம்!’

09-08-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



இந்த ஒரு திரைப்படம் என்னை ரொம்பவே அலைக்கழித்துவிட்டது. கிட்டத்தட்ட 8 முறை பல்வேறு தியேட்டர்களுக்கு படையெடுத்தும், டிக்கெட் கிடைக்காமல் வெறுத்துப் போய் திரும்பிய அனுபவத்துடன், நேற்று பெரும்பிரயத்தனம் செய்துதான் பார்க்க முடிந்தது.

தமிழுக்கும், மதுரைக்கும் எவ்வளவு தொடர்பிருக்கிறதோ அதே அளவு அரசியலுக்கும் மதுரைக்கும் தொடர்பு உண்டு.

அரசியலுக்கும் நேர்மைக்கும் எவ்வளவு தொடர்பிருக்கிறதோ அதே அளவு அநீதிக்கும், அரசியலுக்கும் தொடர்புண்டு.

அரசியல்வாதிகளுக்கும், மக்களுக்கும் எவ்வளவு நேரடி தொடர்புண்டோ, அதைவிட அதிக அளவு அரசியல்வாதிகளுக்கும், அவர்தம் தொண்டர்களுக்கும் உண்டு.

அரசியல் தொண்டர்களுக்கும், ரவுடியிஸத்திற்கும் எந்த அளவுக்குத் தொடர்புண்டோ, அதே அளவு அவர்களை உருவாக்கிய அரசியலுக்கும் உண்டு.

அப்படியொரு அரசியல் கண்ணாமூச்சியை தத்ரூபமாகக் காட்டியிருக்கிறது 'சுப்பிரமணியபுரம்!'

மதுரையின் வைகையாற்றில் வெட்டி வீழ்த்தப்பட்டு வீசப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை ஏராளம்.

காணாமல் போனவர்கள் பட்டியலில் இருக்கும் தென் மாவட்ட இளைஞர்களில் பலர் வைகை ஆற்றின் மண்ணில் புதையுண்டு கிடப்பதை அந்த ஆறே சொல்லக் கூடும்..

புகழ் பெற்ற ‘மாஞ்சா வெட்டு’ என்ற பெயரை கேள்விப்படாத மதுரையின் அல்லக்கை இளைஞர்களும், அரசியல்வாதிகளும் இருக்க முடியாது.

கரிமேடு, நரிமேடு, அஹிம்சாபுரம், பெத்தானியபுரம், சிம்மக்கல், பரமேஸ்வரி தியேட்டர் பகுதி, பழைய தேவி தியேட்டர் இருந்த பகுதி என்று மதுரையின் கீழ்த்தட்டு மக்கள் அதிகம் வசிக்கும் எப்பகுதியிலும் தெருவுக்குத் தெரு இத்திரைப்படத்தின் நாயகர்களான அழகனும், பரமனையும் இப்போதும் நீங்கள் பார்க்கலாம்.

அரசியல் என்ற சாக்கடையில் சிக்கும் அப்பாவிகளின் வாழ்க்கை என்னாகும் என்பதிலும், முகமூடி அரசியல்வாதிகளின் கையில் அப்பாவி இளைஞர்கள் தஞ்சாவூர் பொம்மையாக பொம்மலாட்டம் ஆடும் திருக்காட்சிகளை ஏற்கெனவே ‘சத்யா’ திரைப்படத்தில் பார்த்திருக்கிறோம். இப்போது இன்னும் கொஞ்சம் இப்படத்தின் மூலமாகவும்.

மழை கொட்டுகின்ற ஒரு பொழுதில் மதுரை, மத்திய சிறைச்சாலையில் இருந்து சிறை தண்டனை முடிந்து வெளியில் வரும் ஒருவர் கத்திக்குத்துக்கு ஆளாவதில் துவங்கும் திரைப்படம், அதே நபர் கொல்லப்படுவதுடன் முடிவுறுவது ஒரு அருமையான துன்பவியல் நாடகம்.

திரைப்படம் என்பதை நடந்தது போல் சொல்வது, அல்லது இப்படியெல்லாம் நடக்க முடியுமா என்பது போல் சொல்வது என்று இரண்டாகப் பிரித்துப் பார்க்கலாம். அதில் இது முதல் வகை. சொல்ல வந்ததை சொல்லிய விதத்தில் இயக்குநர் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார்.

பாத்திரப் படைப்புகளில் அதிக அக்கறையெடுத்து வில்லனான கனகு, அவருடைய அண்ணன் சோமசுந்தரம், கதாநாயகியின் தந்தையான மூத்த அண்ணன், இவர்களது மனைவிகள், மொக்கைச்சாமி என்னும் கோவில் கமிட்டித் தலைவர், பரமனையும், அழகரையும் ஜாமீன் எடுத்து அதன் மூலம் தனது நீண்ட நாள் பகையைத் தீர்த்துக் கொள்ளும் நபர் என்று படம் முழுக்கவே தமிழ் திரையுலகிற்கு முற்றிலும் புதியவர்கள்.

இந்தப் புதியவர்களை வைத்துக் கொண்டு தமிழ்ச் சினிமாவின் மிக முக்கியமான ஒரு திரைப்படத்தை வழங்கியதற்காக சசிகுமாருக்கு தமிழ்ச் சினிமாவுலகம் என்றென்றும் நன்றிக் கடன்பட்டிருக்கும்.

வேலைவெட்டியில்லாமல் கூட்டாளிகளுடன் சேர்ந்து சுற்றிக் கொண்டு, சத்யன் சவுண்ட் சர்வீஸில் பொழுதைக் கழிக்கும் அந்த ஐவருக்கும் எதிர்வீட்டு அரசியல்வாதி சோமுதான் காட்பாதர். அவருக்கு ஒன்று என்றால் இவர்களுக்கு கொதிக்கிறது.. இவர்களுக்கு ஒன்று என்றால் அப்போதுவரை அவரும் பறக்கிறார்.

விசுவாசத்திற்கு எல்லை ஏது? நன்றிக்கு உச்சபட்சம் ஏது? யாராலும் சொல்ல முடியாது.. அதே போல் காதலுக்கும் முடிவு ஏது? அதையும் சொல்ல முடியாது. இயக்குநர் இந்த மூன்றையும் ஒரு சேர உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.

காட்பாதரின் மகளையே காதலிக்கும் அளவுக்குத் துணிச்சல்கார அழகன். தனது காதலை உயிர் நண்பன் பரமனிடம் சொல்கிற காட்சியில் இருப்பதெல்லாம் இளைஞரணியின் துடிப்புகள்தான். திரையரங்கில் விசில் சப்தம் காதைப் பிளக்கிறதே..

அதிலும் நாயகி பார்வையாலேயே தனது உள்ளத்தைச் சொன்னபடியே உலா வருவது கொள்ளை அழகு. கதிரின் கேமிராவிற்குள் அந்த கண்களை மட்டுமே வைத்து ஒரு காதலை செதுக்கியிருக்கிறார் இயக்குநர்.

அரசியல்வாதி சோமுவிற்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காத கோபத்தில் இப்போது மாவட்டச் செயலாளராக இருப்பவரை கொலை செய்யச் சொல்கிற இடத்தில் கனகுவாக நடித்த நண்பர், தோழர் சமுத்திரக்கனியின் நடிப்பு ஒரு மிகைப்படுத்தப்பட்ட இயக்கம் என்று சொல்லலாம். இயக்குநரையும் மீறி கனகுவாக அங்கே வாழ்ந்திருக்கிறார் கனி.
“ஒண்ணுக்குள்ள ஒண்ணா தாயா புள்ளையா இருக்குறோம்.. உங்களுக்கு ஒண்ணுன்னா அது எங்களுக்கும்தான். அதே மாதிரிதான் எங்களுக்கு ஒண்ணுன்னா அது உங்களுக்கும்தான்...” என்று வசீகரப்படுத்தி பேசுவதிலும், “என் சொத்து, பத்தை வித்தாவது உங்களைக் காப்பாத்திர மாட்டேனா?” என்று குரல் உடைந்த நிலையில் கனகுவாக கேட்கின்ற இடத்திலும் சமுத்திரகனி தேர்ந்த நடிகராக பரிணாமம் எடுத்துவிட்டார்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக தமிழகத்தையே உலுக்கிய தமிழக முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணனின் கொலையை நினைவுபடுத்தும் விதத்தில், அதேபோன்று மாவட்டச் செயலாளரின் கொலைக் காட்சியை எடுத்த தைரியத்திற்காக இயக்குநருக்கு ஒரு ஸ்பெஷல் சபாஷ் போடலாம்.

சிறைக்குள் வந்தும் ஜாமீன் எடுக்க யாரும் வரவில்லை என்பது தெரிந்து தங்களை ஏமாற்றியதை நினைத்து பொருமுவதும், அங்கேயே கிடைக்கும் நட்பின் மூலம் வெளியே வந்து உடனேயே கனகுவை போட்டுத் தள்ள முடிவெடுப்பதும் அந்த இளைஞர்களின் ஆவேச புத்தியை மட்டுமே காட்டுகிறது. இந்த அளவிற்கு எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற மனநிலையில் இருக்கும் அவர்களை அரசியல் தன்வசப்படுத்தியதில் ஆச்சரியமில்லை.

ஜாமீன் எடுத்தவரின் மீது தங்களுக்கிருக்கும் விசுவாசத்திற்காக ஒரு கொலை.. அந்தக் கொலைக்கு பதிலாக தங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலிலிருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தல். பின்பு அவர்களையே சீட்டாட்ட கிளப்பிற்கு சென்று கொன்றுவிட்டு ஓடுவது என்று பிற்பாதியில் வேகமான திரைக்கதை தூள் பறத்திவிட்டது.

இந்தக் கொலைக்காக அவர்கள் எடுக்கும் இடம்கூட அவர்களின் மனநிலையை அடையாளம் காட்டுகிறது. ஒரு எழவு விழுந்த வீட்டில் பிணத்திற்கு கொள்ளி வைத்துவிட்டு மொட்டையடித்த நிலையில் ஒதுக்குப்புறமாக ஒதுங்கியவரின் மேல் பாய்ந்து வீசுகின்ற ‘மாஞ்சா வெட்டு’ திகில்தான்.

தங்கள் மீது வன்மம் வைத்துவிட்டார்கள் என்பதை உணர்ந்து போலீஸை வைத்து கனகு சமாளித்தும் முடியாமல் போய் கடைசியில் அழகன் தனது அண்ணன் மகள் மீதே கை வத்திருக்கிறான் என்பது தெரிந்து அழித்தே தீருவோம் என்று செயல்படுத்தியது நிச்சயம் திருப்பம்தான். அதிலும் அதைச் செயல்படுத்திய விதமும் அருமை.

தனது உயிர் நண்பன் கொல்லப்பட்டதை அறிந்து கனகுவை மருத்துவமனை வாசலிலேயே ஆட்டோவில் இழுத்துச் சென்று ஆட்டை அறுப்பது போல் அறுத்து தலையைத் துண்டித்து அழகனின் உடல் சிதைந்த இடத்தில் வீசிவிட்டு ரத்தக்கறை படிந்த உடையுடன் அமரும் பரமனின் ஆளுமை ஏற்பதா, வேண்டாமா? சரியா? தவறா? என்றுகூட சொல்ல முடியாத நிலைமைக்குக் கொண்டு சென்றது.

முடிவு நான் ஓரளவு யூகித்ததுதான். ‘மலையூம் மம்பட்டியான்’ படத்தில் பார்த்த 'முதல் அதிர்ச்சி' இத்திரைப்படத்திலும் தொடர்கிறது. நம்பிக்கை துரோகம். காசி செய்வது எதற்கு என்ற கேள்விக்கான பதிலை திரைப்படத்தை கூர்ந்து கவனித்திருந்தால் மட்டுமே புரியும்படியாக வைத்திருப்பது ஒன்றுதான் இத்திரைப்படத்தில் நான் பார்த்த சிறிய சங்கடம்.

முதலிலேயே ஜாதி பாசத்தில் காசி, மொக்கைச்சாமியை ஆதரிப்பதாக பரமன் கேட்பதிலேயே ஒரு முடிச்சும், மாவட்டச் செயலாளரை கொலை செய்ய உடனிடிருந்து கட்டைக் கால் கொடுக்கும் காசி, இவர்கள் உள்ளே போக அவன் வெளியே இருக்கும் நிலை இரண்டாவது முடிச்சு.. ஜாமீன் எடுத்தவருக்காகச் செய்யப்பட்ட கொலைக்குப் பின் அவர் தரும் பணத்தினை வாங்க ஆலாய் பறக்கும் காசியின் குணம் மூன்றாம் முடிச்சு.. மூன்றையும் முடிச்சுப் போட்டுப் பார்த்தால் காசியின் நம்பிக்கை துரோகத்திற்கான தூண்டுதல் எது என்பது புரியும்.

காசிக்கான தண்டனை 28 ஆண்டுகளுக்குப் பின்பும் கிடைக்கிறது என்கிறபோது அதன் மறுபெயர் விசுவாசம். நட்பு. அந்த நட்பை பணம், மற்றும் ஜாதிக்காக புறக்கணித்ததால் காசிக்கு கிடைத்த இந்தத் தண்டனையும் இயல்பானதுதான்.

கத்தியெடுத்தவன் கத்தியினால்தான் சாவான் என்பது விதிக்கப்படாத விதி. அது நடந்தே தீரும். எப்பேர்ப்பட்டவனையும் பதம் பார்க்கும் கத்திக்கு, அதைப் பயன்படுத்துபவன் முக்கியமல்ல.. எப்படி செயல்படுகிறோம் என்பதுதான் முக்கியம்.

விசுவாசம் என்னும் முடிவுறாத முற்றுப்புள்ளியைக் கையில் எடுத்துக் கொண்டு இயக்குநர் ஆடியிருக்கும் இந்த ஆட்டத்தின் சிறப்பிற்கு அவருக்கு உதவியது அவருடைய பலமான, சுவையான திரைக்கதைதான்.

* * * * *
மாதத்திற்கு நான்கு படங்கள் ரிலீஸ் என்றால் அதில் 2 படங்களில் அரிவாள் நிச்சயமாகத் தூக்கப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது வித்தியாசப்படுத்திதான் வெற்றியை ருசிக்க வேண்டும் என்பதற்காகவே நம்மை பின்னோக்கி அழைத்துச் சென்றுள்ளார் இயக்குநர். கால வித்தியாசத்தில் காட்சிகளை காண்பது என்பது நமக்கொரு பரவசம். இதற்காக இயக்குநர் மிக மிக மெனக்கெட்டிருக்கிறார் என்பது தெளிவு.


முதலில் நினைவிற்கு வருவது ஸ்டெப் கட்டிங்.. அடுக்கடுக்கான அலைகளைப் போன்ற தலையுடன் அழகனையும், கனகுவையும் பார்க்கின்றபோது எனது அண்ணன் அதே 1980-களில் மணிக்கணக்காக கண்ணாடி முன் சீப்பும், கையுமாக நின்றிருந்தது எனக்கு நினைவுக்கு வருகிறது. பெல்பாட்டம் பேண்ட், வட்ட வடிவ பட்டையான பெல்ட், இறுகப் பிடித்த சட்டை என அக்கால இளைஞர்களின் முன்னோடியான மைக் மோகனை நினைவுபடுத்தி மதுரையில் அலப்பறையை கொடுத்த குஞ்சுகளின் நினைவுகள் தவறாமல் வருகின்றன.

இயக்குநரின் சிரத்தை சிறிய அளவில் என்றில்லை.. ஓரிடத்தில்கூட தவறில்லாமல் தனது கவனத்தைச் செலுத்தியிருக்கிறார். ‘வெள்ளை நிற பாண்டியன் போக்குவரத்துக் கழகப் பேருந்து, அவ்வப்போது ஓரமாக நிற்கும், அல்லது செல்லும் அப்போதைய அம்பாசிடர் கார்கள்.. சோமுவின் கார், டெலிபோன், கொள்ளையடிக்கப் போகும் மளிகைக் கடையில் தொங்கும் காலண்டர், அக்கால டயனோரா பிளாக் அண்ட் ஒயிட் டிவி, அரை வட்ட வடிவ சேர்கள்..’ என்று ஒன்றுவிடாமல் பார்த்து பார்த்து செய்து, மொக்கைச்சாமி நுழையும் அந்த சவுண்ட் சர்வீஸ்காரனின் வீடு வரையிலும் விடாமல் செய்திருப்பதற்கு கண்டிப்பாக ஒரு சல்யூட் அடித்தே தீர வேண்டும்.
மாவட்டச் செயலாளரை போட்டுத் தள்ளிவிட்டு கோர்ட்டுக்கு வந்து சரண்டராகும் காட்சியில், அந்தப் பழைய முன்சீப் கோர்ட்டை முன் நிறுத்தி கோர்ட்டில் குத்த வைத்து அமருவதுவரையிலும் நுணுக்கத்தைத் தவறவிடாமல் இருக்கிறார் இயக்குநர்.

80-களின் துவக்கத்தில் வெளி வந்து தமிழ்ச் சினிமாவில் ஒரு புதிய அலையைத் துவக்கி வைத்த திரைப்படமான ‘முரட்டுக்காளை’யின் ரிலீஸ் ஷோவை காட்டுவதற்கு மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர். அதே சென்ட்ரல் தியேட்டரில் ஏகோபித்த ரசிகர்களின் கூட்டத்தையும், இன்றைக்கும் மாநகரங்களைத் தவிர மற்ற இடங்களில் தலைக்கு மேலே பறந்து சென்று டிக்கெட் வாங்கும் தீவிர ரசிகர்களில் ஒருவனாக காசி செய்து காட்டுவதும் ரசிகப் பெருமக்களை கவரத்தான் செய்கிறது.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை அப்போதைய தோற்றத்தின்படியும், சிறைக்குள் இருக்கும் சில இடங்களை முதல்முறையாக வெளிக்காட்டியிருப்பதும் இயக்குநர் எதற்கும் சோர்ந்து போகவில்லை என்பதைக் காட்டுகிறது.

* * * * *

செவிக்கினிய இசையெனில் தலைமுறை கடந்தும் நம் தலையசையும் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு ‘கல்லுக்குள் ஈரம்’ திரைப்படத்தின் ‘சிறுபொன்மணி’ பாடலே சான்று. இப்பாடல் காட்சிக்கு கிடைக்கின்ற கை தட்டல்களை இசைஞானியிடம் நிச்சயம் சேர்ப்பிக்க வேண்டும். நல்ல இசையை எப்போதும் ரசிகர்கள் விரும்பத்தான் செய்வார்கள். இனி வருபவர்களும் இதைக் கவனித்தில் கொண்டால் நல்லதுதான்..

இசையில் புதுமுகம் ஜேம்ஸ் வசந்தன் தனது நீண்ட நாள் கனவை இதன் மூலம் நிறைவேற்றியிருக்கிறார் என்றே சொல்லலாம். இப்போதெல்லாம் வருகின்ற பாடல்கள் நின்று கேட்டுவிட்டுப் போக வேண்டும் என்ற உணர்வைத் தோற்றுவிக்கவில்லையே தவிர, ஒரு முறை கேட்கலாம் என்கிற அளவிலேயே வருகின்றன.

அந்த வகையில் 'கண்கள் இரண்டில்' பாடல் இசை ரசிகர்களின் பெருத்த ஆதரவைப் பெற்றுள்ளது படம் பார்க்கும்போதே தெரிகிறது. அதிலும் அந்தப் பாடல் படமாக்கப்பட்டுள்ளவிதமும் அருமைதான். நாயகின் கண் விளையாட்டை மையமாக வைத்து இயக்குநர் கையாண்டிருக்கும் இயக்கத்தில் அதிகமாக ஜெயித்தது நாயகிதான்.. நாயகி தனது கண்களாலும், நேர் நோக்கிய, விழிகளை உருட்டியும், விழித்தும், வெட்கப்பட்டும் செல்கின்ற அந்த ஓரங்க நாடகத்தில் காதல் ஜெயித்தேவிட்டது. பத்து திரைப்படங்களில் நடிக்கவிருக்கும் நடிப்பை, இந்த ஒரே திரைப்படத்தில் அந்த நாயகி முடித்திருக்கிறார்.

நாயகன் தனது பரட்டைத் தலையின் பின்புறம் அடிக்கடி கையை வைத்து ஸ்டைல் செய்யும்விதமும், நாயகியின் வெட்கப்படுதலும் பாடலின் மீதான ஈர்ப்பை அதிகப்படுத்திவிட்டது. காதலுக்கு கண்ணில்லை என்று எதை வைத்துச் சொல்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒன்று வேண்டும் என்று மட்டும் தெரிகிறது. அந்த ஒன்று இந்தப் பாடலின்போது படம் பார்க்கும் காதலர்களுக்கு கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறேன்.


அழகனின் ரெளடித்தனத்தை நேரில் பார்த்து பதைபதைக்கும்போதும், அவனை அத்தொழிலை விட்டுவிடும்படி கெஞ்சுவதிலும் காதல் பெருக்கெடுத்து ஓடுகிறது. கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு எதிர்கால வாழ்க்கை பற்றி பயமிருக்காதா என்ன? ‘முரட்டுக்காளை’ பட காட்சியில் அழகரின் ஆட்டத்தைப் பார்த்து க்ளூக்கென்று ஒரு சிரிப்பு சிரிக்கிறாரே.. காதலுக்கு ஏதோவொன்று வேண்டும். அது இதுவாகக்கூட இருக்கலாம்.

அவளது சித்தப்பாவை கொலை செய்யத்தான் காத்திருக்கிறேன் என்பதை கடைசி நிமிடத்தில் சொல்வதால்தான் அவர்களுடைய பிணைப்புக்கான ஒரு கவனம் நமக்கு கிடைக்காமல் போய்விட்டது. கனகு பற்றி நாயகிக்கு ஏற்கெனவே அனைத்தும் தெரியும் என்பதைப் போல் காட்சியமைப்புகள் போய்விட்டதால் சராசரி பார்வையாளனுக்கு அது ஒரு குறையாகத் தெரிகிறது.

இறுதியாக அழகனை பார்க்க வந்து அழுது கொண்டிருக்கும் காட்சியில் மருத்துவமனையில் ‘மாஞ்சா வெட்டால்’ அடிபட்டுக் கிடக்கும் தனது அப்பாவுக்கான அழுகையா அல்லது அடுத்த சில நிமிடங்களில் சாகப் போகும் தனது காதலனை நினைத்து வந்த அழுகையா என்பதை யூகிக்க விடாமல் செய்திருக்கும் இயக்குநரின் குறிப்பறிதல் பாராட்டுக்குரியது.

நாயகியின் அழுகையைப் பார்க்கின்றபோது. அவளுக்குத் தெரிந்தே கனகு தனது அடியாட்களுடன் வந்திருக்கிறான் என்பதாக எனக்குத் தெரிகிறது.

* * * * * * *

பரமன் எவ்வளவு சொல்லியும் கேளாமல் “அவ என்னைக் காதலிக்கிறாடா.. பாருடா.. என்னைத் தேடுவா பாரு.. சுத்தி முத்தி பார்ப்பா பாரு..” என்று உற்சாகக் குரலோடு சொல்லித் தன்னை வெளிப்படுத்தி நாயகியின் காதலை வெளிக்கொணருவது அழகனின் அசல் நடிப்பு.

அவசரத்தனமாக கனகுவிடம் தலையாட்டிவிட்டு வெளியே வந்து பரமனிடம் கொலை செய்யத் தூண்டுவதிலும், சிறைக்குள் இருவரும் சண்டையிட்டுக் கொள்ளுவதிலும் அழகன் ஒரு பதட்டப்படக் கூடிய ஆனால் அரவணைக்கப்பட வேண்டியவன் என்பதை உணர்த்துகிறது.

அழகனையும், காசியையும் அடியாட்கள் அரிவாளுடன் துரத்தி செல்லும் காட்சியில் கேமிரா புகுந்து விளையாடியிருக்கிறது.. பாராட்டுக்கள்..

தன்னைத் துரத்தி வந்தவர்களிடமிருந்து தப்பிக்க ஒரு வீட்டில் ஒளிந்து கொண்டு அந்த வீட்டுக்காரம்மாவின் காலில் விழுந்து தன்னைக் காப்பாற்றும்படி கெஞ்சும்போது அவனுக்கான ஆதரவு பரிதாபமாகி மேலும் மேலும் கதையில் தீவிரம் கிடைத்துவிடுகிறது.

இறுதியில் அவனது மரணத்தின்போதும் தனது காதலியைப் பார்த்த திக்கிலேயே கண் இருக்க.. ரத்தம் சொட்டச் சொட்ட உயிர் போன நிலையில் இழுத்துச் செல்வதுவரையிலும் காட்டப்படுவது காதல் சார்ந்த வன்முறையை உணர்த்துவதாக உள்ளது.

இறுதியான அந்த நீண்ட சிங்கிள் ஷாட்டில் காசியாக நடித்திருக்கும் கஞ்சா கருப்பு தன்னால் பேசாமலும் நடிக்க முடியும் என்பதனை நமது இயக்குநர்களுக்காக செய்து காட்டியிருக்கிறார். நமது இயக்குநர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

காசியின் வெக்கு, வெக்கென்ற நடையுடன் பருந்து பார்வையில் பரமனின் உயிர் கொஞ்சம், கொஞ்சமாக போவதுடன் ஓரமாக நின்று கொண்டிருக்கும் காரில் அமர்ந்திருக்கும் சோமுவிடம் வந்து பணத்தை வாங்கித் தனது சட்டைக்குள் தள்ளிவிட்டு எல்லைக் கல்லின் மீதமருந்து பீடியை பற்ற வைத்து பெருமூச்சுவிடும்போது அவனுக்குள் இருப்பது எது என்று எனக்குத் தெரியவில்லை. படம் முடிந்த பின்புதான் புரிந்தது.

* * * * *

இத்திரைப்படத்தின் பல காட்சிகளில் நான் முன்பே சொன்னது போல் நடந்ததை காட்டுவது, அல்லது இப்படியும் நடக்குமோ என்று காட்டுவது என்கிற பருந்து பார்வையில் ஆணாதிக்கமும் கொஞ்சம் சேர்ந்துவிட்டது எனலாம்.

அரசியல்வாதி சோமு பதவி இல்லாவிட்டால் யாரும் மதிக்க மாட்டார்கள் என்பதில்கூட மிகப் பெரிய குறையாக “வீட்டுப் பொம்பளைங்ககூட மதிக்க மாட்டாளுங்க..” என்று பொறுமுகிறார். நிஜமாகவே வீட்டுக்காரம்மா அவரை கிண்டல் செய்து பேசுகின்ற பேச்சுதான் படத்தின் கீ பாயிண்ட். அண்ணியை அடிக்கும் அண்ணனைத் தடுக்கும் கனகவுக்கு அப்போதைய நிகழ்வின் பெரும் காரணம், அந்த புதிய மாவட்டத் தலைவர்தான் என்பதாகப் போய் ஹோட்டலில் ரூம் போட்டு யோசித்து கதையை நகர்த்தும் அளவிற்குச் சென்று முடிகிறது.

கனகவும் அதையேதான் சொல்கிறார். “வீட்ல பொம்பளைங்ககூட மதிக்க மாட்டேங்குறாளுக.. எப்படி வீட்ல இருக்கிறது..?” என்கிறார். இது காலம் காலமான ஆணாதிக்கச் சிந்தனையை வளர்த்துவிடும் நோக்கில் வீட்டுக்கு வீடு பேசப்படும் வார்த்தைகள்தான். இதன் விளைவுதானே கொலையும் அதைத் தொடர்ந்த பெரும் கொலைகளும்.

தூண்டிவிடப்படும் வஸ்துவாக, போதை மருந்தாக உசுப்பிவிடப்பட்டு பிடறி மயிரைப் பிடித்து உலுக்கி அனுப்புகிறது ஆண் என்னும் திமிர்த்தனம்.. வேறென்ன சொல்ல..?

அழகன், பரமனிடம் “ஒரு பொட்டச்சிகிட்ட போய் கெஞ்ச விட்டுட்டாங்கடா....” என்று பொருமித் தள்ளி, அன்றிரவே அவர்களைப் போட்டுத் தள்ளும் காட்சியும் வன்முறைக் கும்பலின் எதேச்சதிகாரம் ஆண் என்னும் பால்நோக்கிலேயே செல்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

படம் நெடுகிலும் கிடைத்த இடங்களிலெல்லாம் பரமன் அழகனிடம் "அவளை நம்பாத.." என்று சொல்லும்போது சொல்லப்படுகின்ற தொனி "அவளுக அப்படித்தான்" என்று பெண்கள் மீதான நம்பிக்கையை சந்தேகக் கண்ணுடனேயே பார்ப்பது புலனாகிறது. உச்சக்கட்டத்தில் கனகுவின் தலையை சணல் பையில் கொண்டு வந்து அழகன் வெட்டப்பட்ட இடத்தில் வீசிவிட்டு அய்யனாராக காட்சியளிக்கும் இடத்தில்கூட "பொட்டச்சியை நம்பாத.. நம்பாதன்னு சொன்னேன்.. கேட்டானா அவன்..?" என்று தனது உயிர்த்தோழன் மீதான பாசத்தில் பொருமும் பரமனின் பேச்சில் இருப்பதும் காலம், காலமாக நம்மிடையே இருந்துவரும் ஆணாதிக்கத் தோற்றத்தில்தான்..!

* * * * *
தமிழ்த் திரைப்படங்களின் தற்போதைய போக்கு ரவுடியை கல்லூரி மாணவி காதலிப்பது, அவனைத் திருத்த முயல்வது, முடியாமல் அவன் செய்த தவறுக்குத் தான் பலியாவது என்பதாகவே போய்க் கொண்டிருப்பதாக நிறைய விமர்சகர்கள் எழுதுகிறார்கள். இதில் உண்மையும் உண்டு.

வன்முறையும், பாலியல் காட்சிகளும் படத்திற்கு படம் மலிந்து கிடக்கின்ற காலக்கட்டத்தில் இது போன்ற திரைப்படங்களின் வெற்றி எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. மாறாக மெல்ல, மெல்ல பயத்தை தோற்றுவிக்கிறது.

அடுத்த வீட்டுப் பையன் கீழே விழுந்து ரத்தம் சிந்தினால்கூட நமக்கு மனம் சங்கடப்படும்போது திரையில் ஓடும் ரத்தம் தெறிக்கும் காட்சிகளின்போது மட்டும் “இவனுக்கு வேணுன்டா.. என்ன ஆட்டம் ஆடினான்.. நல்லா வேணும்..” என்பதாக நமக்குள் எந்த எழவு ரசாயனத்தையோ ஏன் தோற்றுவிக்க வேண்டும் என்று தெரியவில்லை.

இத்திரைப்படத்தில் பரமன், கனகுவின் தலையை ஆட்டோவிற்குள் வைத்து அறுத்து பையில் போட்டு எடுத்துச் செல்லும் காட்சியில் தியேட்டரில் எழுந்த கைதட்டல்கள் எனக்கு ஆச்சரியத்தையும், திகைப்பையும் ஏற்படுத்தியது. எப்படி இந்த உணர்வு இவர்களுக்குள் வந்தது? இது எங்கிருந்து ஆரம்பித்தது? என்பதும் புரியவில்லை.

முன்பெல்லாம் நேரத்தைப் போக்க என்று ஒரு சிலரும், சும்மா ஜாலிக்கு என்று பலரும் வந்து போய்க் கொண்டிருந்த திரைப்படங்கள் இன்றைய அதீத நுகர்வுக் கலாச்சாரத்தில்கூட மக்களின் மனதை ஊடுறுவும் அளவுக்கு இன்னமும் இருப்பது நல்லது என்று சொன்னாலும், இந்த அளவிற்கு வன்முறையை ஊக்குவிக்கும் மனப்பான்மை ரசிகனுக்குள் ஏற்படுவது நல்லதா என்பது விவாதிக்கக் கூடியதுதான் என்று மட்டும் தெரிகிறது.

இதே நேரத்தில் நண்பர் பத்ரி தனது http://thoughtsintamil.blogspot.com/2008/07/blog-post_28.html இந்தப் பதிவில் இத்திரைப்படத்தில் காணப்பட்ட சில குறைகளையும் பட்டியலிட்டுள்ளார். இதையும் படித்துக் கொள்ளுங்கள். முழுக்க, முழுக்க இனிப்பையே சாப்பிடக் கூடாது.. கொஞ்சம் காரமும் வேண்டும்.

எது எப்படியிருந்தாலும், தமிழ்ச் சினிமாவின் மிக முக்கியமான ஒரு திரைப்படத்தினை தனது முதல் படைப்பிலேயே கொடுத்து திரையுலகில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறார் இயக்குநர் சசிகுமார்.

அவருக்கு வாழ்த்துச் சொல்லி வரவேற்கிறேன்.

படம் உதவி : http://www.indiaglitz.com/