குன்ஹா தீர்ப்பு விவரம் - 7 - "முதலமைச்சருக்கு கொடுக்கப்படும் அன்பளிப்பும் லஞ்சம்தான்...!"

25-10-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஜெயலலிதா, தனக்கு பிறந்த நாள் பரிசாக 2 கோடியே 92 லட்சத்து 52 ஆயிரத்து 71 ரூபாய் வந்தது என்றும், அதை முறைகேடான வழியில் தான் சம்பாதிக்கவில்லை என்றும் இந்த வழக்கில் குறிப்பிட்டார். ஆனால், பொது ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் எல்லா அன்பளிப்பும் லஞ்சம்தான். அதுவும் ஊழல் கணக்கில்தான் சேர்க்கப்படும் என்று நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா தனது தீர்ப்பில் எடுத்துக்காட்டி உள்ளார்.



 பரிசாக வந்தது எவ்வளவு?

''ஜெயலலிதா தரப்பு இந்த நீதிமன்றத்தில் எடுத்து வைக்கும் வாதம் என்னவென்றால், 'ஜெயலலிதா அவருடைய 44-வது பிறந்த நாளை, 1992-ம் வருடம், பிப்ரவரி 24-ம் தேதி கொண்டாடினார். ஜெயலலிதா மீது அன்பும் மரியாதையும் வைத்துள்ள அவருடைய கட்சித் தொண்டர்கள், பிறந்தநாள் பரிசாக ஏராளமான பொருள்களை வழங்கினார்கள். அவர்களில் பலர், பிறந்த நாள் பரிசாக ஜெயலலிதாவுக்கு லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்தனர். சிலர் ரொக்கமாக கொடுத்தனர். சிலர் செக் மற்றும் டி.டி-யாகக் கொடுத்தனர். அந்த வகையில் 2 கோடியே 15 லட்சத்து 12 ரூபாய் ஜெயலலிதாவுக்குக் கிடைத்தது. அதுபோல, வெளிநாட்டில் வசித்த ஒருவர் ஜெயலலிதாவுக்கு 77 லட்சத்து 52 ஆயிரத்து 59 ரூபாய்க்கான டி.டி-யை பிறந்தநாள் பரிசாக அனுப்பி இருந்தார். 

ஜெயலலிதா, 1992-93-ம் ஆண்டு வருமான வரி மற்றும் சொத்துக் கணக்கை தாக்கல் செய்தபோது, இந்த விவரங்களைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அதை ஏற்றுக்கொண்ட வருமானவரித் துறை அதிகாரிகள், வெளிநாட்டில் இருந்து வந்த பணத்துக்கும், பரிசாகக் கிடைத்த தொகைக்கும் தனியாக வரி விதித்தனர். அதையும் ஜெயலலிதா சரியாகக் கட்டி உள்ளார். ஆனால், லஞ்ச ஒழிப்புத் துறை இதை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் குற்றம் சாட்டி உள்ளது’ என்பதுதான்.

இதை நிரூபிக்க ஜெயலலிதாவின் வழக்கறிஞர், இந்த வழக்கின் விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடுவிடம் நடத்திய குறுக்கு விசாரணையில் பதிவு செய்யப்பட்ட விவரங்களைக் கோடிட்டுக் காட்டி உள்ளார். 

மேலும், 'தமிழக அரசியலில் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் தாங்கள் சார்ந்த கட்சியின் தலைவருடைய பிறந்தநாளுக்கு பலவிதமான பரிசுகளை, பொருள்களாகவும் பணமாகவும் கொடுப்பது வழக்கம். அதன்படி ஜெயலலிதாவுக்கும் கொடுக்கப்பட்டது. அதை 75 சாட்சிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். 112 ஆவணங்கள் இதற்கு ஆதாரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன’ என்று தன்னுடைய வாதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

'அமெரிக்க டாலரில் டி.டி-யாக வந்த 77 லட்சத்து 52 ஆயிரத்து 591 ரூபாய், 1992-93-ம் ஆண்டு தாக்கல் செய்த வருமானவரிக் கணக்கில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதுபோல, அதே ஆண்டில் சசிகலாவுக்கு அமெரிக்க டாலரில் டி.டி-யாக கிடைத்த 51 லட்சத்து 47 ஆயிரத்து 951 ரூபாய் பற்றியும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது’ என்றும் வாதிட்டுள்ளார்.

உளுந்தூர்பேட்டை மணிராஜ்!

ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர், தன்னுடைய வாதத்துக்கு வலு சேர்க்கும் வகையில் சாட்சிகளையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளார். ஜெயலலிதா தரப்புக்கு ஆதரவாக சாட்சி சொன்ன, மணிராஜ், 'நான் ஒரு வழக்கறிஞர். உளுந்தூர்பேட்டையில் வசித்து வருகிறேன். 1992-ம் ஆண்டில் இருந்து தென்னாற்காடு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணிச் செயலாளராக இருக்கிறேன். எங்கள் கட்சியின் பொதுச் செயலாளரான ஜெயலலிதாவின் பிறந்த நாளை நாங்கள் ஒவ்வொரு வருடமும் சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம். அவருடைய 44-வது பிறந்த நாளையும் சிறப்பாகக் கொண்டாட நினைத்து, அதற்காக நான் பொறுப்பு வகிக்கும் இளைஞரணி உறுப்பினர்கள் 110 பேர்களிடம் பணம் வசூல் செய்து, அதில் வந்த 1 லட்சத்து 65 ஆயிரத்து 200 ரூபாயைக் கொடுத்தேன். அந்தத் தொகையை ஜெயலலிதாவின் பெயரில் டி.டி-யாக எடுத்தேன்’ என்று சொல்லி உள்ளார்.

மணிராஜ் சொன்ன சாட்சியம் உண்மைதான் என்று கோதண்டபாணி, சுந்தரபாண்டியன் என்ற இரண்டு சாட்சிகள் உறுதி செய்துள்ளனர். இவர்களில் கோதண்டபாணி 1,500 ரூபாயையும், சுந்தரபாண்டியன் 2,000 ரூபாயையும் ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்காக, மணிராஜிடம் கொடுத்ததாகவும் சொல்லி உள்ளனர்.

விழுப்புரம் இந்தியன் வங்கி!

ஜெயலலிதா தரப்பின் மற்றொரு சாட்சி, ஆர்.பி.பரமேஸ்வரன். இவர் 2 லட்சத்து 16 ஆயிரத்து 500 ரூபாயைத் தன்னுடைய கட்சிக்காரர்களிடம் இருந்து வசூலித்து, அதை டி.டி-யாக மாற்றி ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்பளிப்பாகக் கொடுத்ததாகக் கூறி உள்ளார். இவரிடம் பணம் கொடுத்த அ.தி.மு.க தொண்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் பி.எம்.எஸ்.மணி ஆகியோர் இதை உறுதிப்படுத்தி உள்ளனர். இவர்கள் தங்கள் பங்காக முறையே 3,000 மற்றும் 1,000 ரூபாயைக் கொடுத்ததாகவும், இதற்காக, கட்சிக் கூட்டம் போடப்பட்டு, அதில் ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு பரிசளிக்க வசூல் நடத்த முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மற்றொரு சாட்சி அ.தி.மு.க தொண்டர் டி.கே.மூர்த்தி. இவர் தன்னுடைய கட்சிக்காரர்களிடம் இருந்து பணம் வசூலித்து, 2 லட்சத்து 96 ஆயிரத்து 800 ரூபாய் கொடுத்ததாகச் சொல்லி உள்ளார். இதை, தங்கராஜ், ராமச்சந்திரன் என்ற சாட்சிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். மேலும், வசூல் தொகையை டி.கே.மூர்த்தியும் தங்கராஜும் சேர்ந்து இந்தியன் வங்கியினுடைய விழுப்புரம் கிளையில் டி.டி எடுத்ததாகவும் சொல்லி உள்ளனர். ஆனால், அதற்கான ரசீது நகல் தற்போது தங்களிடம் இல்லை என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.

சேலம் நடேசன்!

சேலம் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் நடேசனும், தன்னுடைய அணி சார்பில், ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கியும், தன்னுடைய கட்சித் தொண்டர்களிடம் பணம் வசூல் செய்து 3 லட்சத்து 42 ஆயிரத்து 300 ரூபாய்க்கு சேலம் இந்தியன் வங்கியில் டி.டி எடுத்து ஜெயலலிதாவுக்கு அனுப்பியதாகவும் சொல்லி உள்ளார்.



தகவல் தர முடியாத ஆடிட்டர்!

ஜெயலலிதா தரப்பின் தற்காப்பு சாட்சி ஆடிட்டர் சண்முகம், பாரா 48-ல், ''ஜெயலலிதாவின் 44-வது பிறந்த நாளுக்கு வரைவோலை மூலமாக 2 கோடியே 15 லட்சத்து 12 ரூபாய் அவருடைய கட்சித் தொண்டர்கள் வகையில் வந்தது'' என்று குறிப்பிட்டு உள்ளார். மேலும், வெளிநாட்டில் இருந்து, 77 லட்சத்து 52 ஆயிரத்து 591 ரூபாய் கிடைத்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார். இவற்றை எல்லாம் ஜெயலலிதா தன்னுடைய வருமானவரிக் கணக்கில் முறையாகக் காட்டி உள்ளதாகவும் கூறி உள்ளார். 

இந்த சாட்சிகள் அத்தனை பேரும் மேலும் ஒரு விஷயத்தையும் நீதிமன்றத்துக்கு தெளிவுபடுத்தி உள்ளனர். அது என்னவென்றால், ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்காக பணம் வசூல் செய்து அனுப்ப வேண்டும் என்று, தங்கள் கட்சியின் தலைமையிடம் இருந்தோ அல்லது மாவட்டத் தலைமையிடம் இருந்தோ எந்த உத்தரவும் வரவில்லை. இதையெல்லாம் ஜெயலலிதாவின் மீது உள்ள மரியாதை மற்றும் அன்பின் காரணமாக தாங்களே செய்ததாகவும் சொல்லி உள்ளனர்.

ஆனால், ஆடிட்டர் சண்முகத்தை அரசுத் தரப்பு குறுக்கு விசாரணை செய்தபோது, 1991-92 முதல் 1995-96 வரை ஜெயலலிதாவுக்கு வருமானவரிக் கணக்குகளை சண்முகம் தாக்கல் செய்யவில்லை. மாறாக, ஆடிட்டர் ராஜசேகர் என்பவர்தான் தாக்கல் செய்தார் என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது. அதனால், இந்த வழக்கில் சர்ச்சைக்குரிய வருடமாக சேர்க்கப்பட்டுள்ள 1991 முதல் 96 வரையில் ஜெயலலிதாவின் சொத்துகள் பற்றியோ, அப்போது அவருக்கு வந்த வருமானம் பற்றியோ ஆடிட்டர் சண்முகத்தால் சரியான தகவல்களை நீதிமன்றத்துக்குக் கொடுக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்த அன்பளிப்புகள் விவகாரத்தில் ஒரு முடிவுக்கு வரலாம். தற்போது, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களில் 2145-வது ஆவணத்தின்படி, ஜெயலலிதா 1987-88 முதல் 1992-93 வரையிலான வருமானவரிக் கணக்கை, 1992-ம் ஆண்டு நவம்பர் மாதம் மொத்தமாக தாக்கல் செய்துள்ளார். அப்படி தாக்கல் செய்த ஆவணங்களில், எந்த இடத்திலும் தனக்குப் பிறந்த நாள் பரிசாக டி.டி-க்களாக கோடிக்கணக்கில் பணம் வந்தது என்ற விவரத்தை சொல்லவில்லை.

அண்ணாநகர் மதுரா வங்கி!

அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து, 1991-ம் ஆண்டுக்கான சொத்துக் கணக்கை தாக்கல் செய்யும்போது, '1990-க்குப் பிறகு தங்க வைர ஆபரணங்களின் விலை, சந்தையில் இயல்பாகக் கூடியுள்ளது. மேலும், நான் 1990-க்கான வருமானவரியைத் தாக்கல் செய்தபோது, எனக்கு அன்பளிப்பாக தங்க வைர ஆபரணங்கள் மற்றும் வெள்ளிப் பொருள்கள் நிறையக் கிடைத்தன. மேலும், அண்ணாநகரில் உள்ள மதுரா வங்கியின் சேமிப்புக் கணக்கு எண்.5158-ல் தனக்கு அன்பளிப்புகளாக செக் மற்றும் டி.டி-யில் பணம் வந்துள்ளன. எனவே, அதற்கான மதிப்பு அறிக்கையை தற்போது தாக்கல் செய்கிறேன்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். 

அதுபோல், 18.03.1994 அன்று வருமானவரித்துறைக்கு எழுதிய கடிதத்தில், ''தனக்கு அன்பளிப்புகளாக ரொக்கப் பணம், டி.டி மற்றும் தங்க வைர ஆபரணங்கள், வெள்ளிப் பொருட்கள் போன்றவை வெவ்வேறு எண்ணிக்கையில் வெவ்வேறு ஆண்டுகளில் கிடைத்தன என்றும் கூறி உள்ளார்.

நகைகள்... நகைகள்... நகைகள்!

இதில் இருந்து என்ன தெரியவருகிறது என்றால், 1992-நவம்பரில் மொத்தமாக தாக்கல் செய்த வருமானவரிக் கணக்குகளில், பிறந்த நாள் அன்பளிப்புகள் பற்றி ஜெயலலிதா குறிப்பிடவில்லை. ஆனால், அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து தனக்குப் பிறந்த நாள் அன்பளிப்புகள் கிடைத்தன என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், அப்போதும்கூட எந்தப் பிறந்த நாளில் எவ்வளவு அன்பளிப்புகள் கிடைத்தன. அதற்கு முந்தைய பிறந்த நாட்களில் கிடைத்தது எவ்வளவு, அதற்கடுத்து வந்த பிறந்த நாட்களில் கிடைத்த அன்பளிப்புகள் எவ்வளவு என்பது பற்றிய விவரங்களை ஜெயலலிதா தெளிவாகக் குறிப்பிடவில்லை. 

1991-ல் தொடங்கி முதல் மூன்று ஆண்டுகளில் அன்பளிப்புகளாகக் கிடைத்தவை எல்லாம் நகைகள்... நகைகள்... நகைகள்தான் என்று குறிப்பிட்டுள்ளார். அதில் ரொக்கமாகக் கிடைத்தவை என்று எதுவும் காட்டப்படவில்லை. காசோலை கணக்குகளும் இல்லை.. வரைவோலை கணக்குகளும் இல்லை. ஆனால், அதன் பிறகு பல வருடங்கள் கழித்து முந்தைய ஆண்டுகளுக்கான சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்யும்போது, தனக்கு அன்பளிப்புகளாக செக், டி.டி மற்றும் ரொக்கமாகப் பணம் வந்தது என்று ஜெயலலிதா சொல்கிறார். 

இந்த வருமானங்களை, வருமானவரித்துறை ஆணையர், அவர்களுடைய சட்டப்படி, எந்த வழியில் வந்தது என்று தெரியாத வருமானம் என பதிவு செய்து வைத்துள்ளனர். இதை எதிர்த்துக்கூட ஜெயலலிதா, தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அதுவும் இப்போதுவரை நிலுவையில் உள்ளது. 

இதுபோல், ஒரு பொது ஊழியர் தன்னுடைய வருமானத்துக்கு அதிகமாகத் தன்னிடம் இருக்கும் சொத்துகளை அன்பளிப்புகளாக வந்தவை என்று சொன்னால், அதை ஏற்றுக்கொண்டு அந்த வருமானத்தை நியாயமான வழியில் சம்பாதித்த வருமானமாகக் கருத முடியாது.

எது உண்மையான வருமானம்...?

மத்தியப் பிரதேச மாநில அரசு - அவாத் கிஷோர் குப்தா வழக்கின் தீர்ப்பு இதற்குச் சிறந்த உதாரணமாக உள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பில், 'பொது ஊழியரின் தகுதிப்படி, அவருடைய வருமானம் என்பது அவரது அலுவலகத்தின் மூலம் வரும் ஊதியம் மற்றும் ஊக்கத் தொகை மட்டுமே. 
அந்த அளவுகோலை மீறி, ஒரு பொது ஊழியரின் கையில் இருக்கும் மற்ற வருமானங்களைச் சரியான வருமானமாகக் கொள்ள முடியாது. எதிர்பாராமல் ஒருவருக்குக் கிடைக்கும் பணம், ஊழல்கள் மூலம் வரும் லாபங்கள், குற்றங்கள் அல்லது முறைகேடான செயல்களில் ஈடுபடுவதன் மூலம் கிடைக்கும் ஆதாயங்கள் போன்றவற்றை நல்ல வருமானமாகக் கருத முடியாது.

அதன்படி பார்த்தால், இரண்டு கோடிக்கும் அதிகமான பணமும், வெளிநாட்டில் இருந்து வந்த 77 லட்சத்தையும் தனக்கு பிறந்த நாள் அன்பளிப்பாகக் கிடைத்ததாக ஜெயலலிதா கூறுவதை ஏற்கமுடியாது. 

இவை எல்லாம் அவர் முதலமைச்சராக இருந்ததால்தான் அவருக்கு வந்துள்ளன. அவர் அந்தப் பதவியில் இல்லாதபோது இந்த அன்பளிப்புகள் அவருக்கு வந்ததா..? இல்லையே. ஜெய​லலிதாவின் கட்சித் தொண்டர்கள், அவரிடம் அன்பைப் பெறுவதற்கும் கட்சியில் அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் இவ்வளவு பெரிய தொகையை பிறந்த நாள் பரிசாகக் கொடுத்தார்கள் என்றால், அதற்குப் பிறகு வந்த பிறந்த நாட்களின்போது, அவர்கள் ஏன் இவ்வளவு அன்பளிப்புகளைக் கொடுக்கவில்லை?

'அன்பளிப்புகளுக்கும் தடை!’

ஆனாலும், ஜெயலலிதாவின் கட்சிக்காரர்கள் ஜெயலலிதாவுக்கு அன்பளிப்புகளை கொடுத்தது உண்மை என்று சொல்லி, அதற்கான ஆதாரங்களை கொடுத்துள்ளனர். அந்த ஆதாரங்களில் சில ஓட்டைகள் இருந்தாலும் அவற்றை இந்த நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. 

ஆனால், முதலமைச்சராக இருப்பவர் அன்பளிப்புகளை வாங்கி, அவற்றைத் தனது உரிமையாக்கிக் கொள்வது ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி தவறாக இருக்கும்போது, அவருடைய கட்சிக்காரர்கள் அன்பளிப்புகளை நாங்கள்தான் கொடுத்தோம் என்று சொல்லும் சாட்சியால் என்ன பயன்..?

இதை உச்ச நீதிமன்றம் தெளிவாக வரையறுத்துச் சொல்லி உள்ளது. 'பொது ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது எப்படி தடை செய்யப்பட்டுள்ளதோ, அதுபோல் அன்பளிப்புகள் வாங்குவதும் தடை செய்யப்படுகிறது. 

ஏனென்றால், பொது ஊழியராக இருப்பவர் அன்பளிப்புகளை பெற்று கொள்ளலாம் என்று சொல்லிவிட்டால், லஞ்சம் வாங்குவதற்கு சட்டம் உருவாக்கி வைத்துள்ள தடைகளை 'அன்பளிப்பு' என்ற வழியில் எளிமையாகக் கடந்துவிடுவார்கள். அதனால், லஞ்சம் வாங்க விதிக்கப்பட்டுள்ள தடையும், அதற்கான தண்டனையும் அர்த்தமற்றதாகிவிடும். 

அதனால்தான், லஞ்சம் பெறுவதும் லஞ்சம் கொடுப்பதும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 161 மற்றும் 165 சட்டப்படி குற்றமாக்கப்பட்டு உள்ளது. ஏனென்றால், வாங்குவது மட்டுமல்ல, லஞ்சம் கொடுக்க முன் வருவதும், அரசு இயந்திரத்தின் சீரான போக்கை பழுதடையச் செய்துவிடும். 

எனவேதான், ஒருவர் பொது ஊழியருக்கு லஞ்சம் கொடுப்பதும், அதை பொது ஊழியர் பெற்றுக் கொள்வதும் என்ற இரண்டுமே குற்றமாகிறது. மேலும் இந்திய தண்டனைச் சட்டம், 161 மற்றும் 165-ல் பிரிவு எஸ்.5 ஊழலற்ற அரசு நிர்வாகத்தையும் பொது ஊழியரின் பொது வாழ்வின் துய்மையையும் உறுதி செய்கிறது. 

எனவே, பரிசுப் பொருள்களாக வந்திருந்தாலும், அவற்றுக்குச் சரியான ஆதாரங்கள் இருந்தாலும்கூட , அவற்றை ஜெயலலிதா பெற்று தனது உடைமையாக்கிக்கொண்டது ஊழல் தடுப்புச் சட்டப்படி குற்றம்தான்!''

- என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ஹைதராபாத் திராட்சைத் தோட்ட வருமானம் பற்றி தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள்  அடுத்த இதழில்...

- ஜோ.ஸ்டாலின்

நன்றி : ஜூனியர்விகடன் 

0 comments: