ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு - குன்ஹா தீர்ப்பு விவரம் - 5

18-10-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



ஜெ.வீட்டில் சோதனையில் சிக்கிய நகைகள்

தங்கம், வைர நகைகள் போயஸ் கார்டன் வீட்டில் குவித்து வைக்கப்பட்டு இருந்ததை ஊழல் தடுப்பு போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அப்படி கண்டு​பிடிக்கப்பட்ட நகைகளில் ஜெயலலிதா 1991-ம் ஆண்டு பதவிக்கு வருவதற்கு முன் வைத்திருந்தது எவ்வளவு? பதவிக்கு வந்தபிறகு வாங்கிக் குவித்தவை எவ்வளவு? அவற்றின் மதிப்பு என்ன? என்ற விவரங்களை நீதிபதி குன்ஹா தன்னுடைய தீர்ப்பில் அரசுத் தரப்பு சாட்சிகளையும் ஆவணங்களையும் வைத்துத் தெளிவாக நிரூபித்த விதம்... இதோ..!

ஜெ. வீட்டில் 5 நாள்கள் சோதனை!

''ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில், அதிரடி சோதனை நடத்த ஊழல் தடுப்பு போலீஸாருக்கு சென்னை பெருநகர முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, 1996, டிசம்பர் 7-ம் தேதி ஊழல் தடுப்பு போலீஸார் நல்லம்ம நாயுடு தலைமையில், ஜெயலலிதாவின் வீட்டுக்குச் சென்றபோது, ஜெயலலிதா வேறு ஒரு வழக்கில் கைதாகி சென்னை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, நல்லம்ம நாயுடு உடனடியாக சென்னை மாநகரக் காவல் துறை ஆணையரைச் சந்தித்து, ஜெயலலிதாவைச் சிறையில் சந்திக்க அனுமதி கேட்டார். அவரைச் சிறையில் சந்தித்த நல்லம்ம நாயுடு, போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடத்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைக் காட்டி, 'சோதனை நடத்தும்போது உங்கள் தரப்பில் யாராவது இருக்க வேண்டும். அதனால் உங்களுக்கு நம்பிக்கையானவர்களை நியமியுங்கள்’ என்றார். அதன்படி, பாஸ்கரன் மற்றும் விஜயன் என்ற இருவரை ஜெயலலிதா தனது சார்பில் நியமித்தார்.

மதியம் 12.30 மணிக்கு நல்லம்ம நாயுடு தலைமையில் சென்ற ஊழல் தடுப்பு போலீஸார் மற்றும் ஜெயலலிதா சார்பில் நியமிக்கப்பட்ட பாஸ்கரன் மற்றும் விஜயன் ஆகியோர் போயஸ் கார்டன் வீட்டுக்குச் சென்று, இரவு பகலாக 5 நாட்கள் சோதனை நடத்தியுள்ளனர். 




சோதனையின்போது முத்து, பவளம், ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட தங்க வைர ஆபரணங்கள் கிலோ கணக்கில் சிக்கின. உடனே, அவற்றை போயஸ் கார்டன் வீட்டில் இருக்கும் இரண்டு அறைகளில் வைத்துப் பூட்டி லஞ்ச ஒழிப்புத் துறை சீல் வைத்தது. அறையின் சாவிகள் ஜெயலலிதா நியமித்த பாஸ்கரனிடமே ஒப்படைக்கப்பட்டன.

இதையடுத்து நல்லம்ம நாயுடு, சுங்கத் துறை கூடுதல் ஆணையரைத் தொடர்புகொண்டு நகைகளை மதிப்பீடு செய்வதற்கு அனுபவம் வாய்ந்த ஒருவரை அனுப்பும்படி கேட்டார். அதன்படி சுங்கத் துறை ஆணையர், தங்கள் துறையில் நகைகளை மதிப்பீடு செய்வதில் 10 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த வாசுதேவன் என்பவரை அனுப்பி வைத்தார். 20-ம் தேதி நகைகளை மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்றது. அப்போது, ஊழல் தடுப்பு போலீஸ் அதிகாரி நல்லம்ம நாயுடு, சிறப்பு கலெக்டர் கிருஷ்ண​மூர்த்தி, வழக்கறிஞர் சேகர், சந்திரசேகர், ஜெயலலிதாவின் அத்தை, போலீஸ்காரர்கள் கல்யாண​சுந்தரம், புருஷோத்தமன் மற்றும் நகை மதிப்பீட்​டாளர் வாசுதேவன் ஆகியோர் அங்கு இருந்துள்ளனர். பாஸ்கரன், இவர்கள் முன்னிலையில் அறைகளைத் திறக்க, வாசுதேவன் நகைகளை மதிப்பீடு செய்துள்ளார். மதிப்பீடு செய்யப்பட்ட நகைகளின் எண்ணிக்கை, அவற்றின் எடை ஆகியவற்றை நல்லம்ம நாயுடு தலைமையிலான போலீஸார் பட்டியல் போட்டு மகஜர் தயாரித்துள்ளனர். அதன்பிறகு தங்கம் மற்றும் வைர நகைகளை நந்தனம் கருவூலத்துக்கு எடுத்துச் சென்று உள்ளனர். வெள்ளிப் பாத்திரங்கள் எதை​யும் அவர்கள் எடுக்கவில்லை. அவற்றை பாஸ்கரனிடமே ஒப்படைத்து போயஸ் கார்டன் வீட்டிலேயே வைக்கச் சொல்லிவிட்டனர்.''

மகஜர் விவரம்

''1996, டிசம்பர் 21-ம் தேதியிட்டு தயாரிக்கப்​பட்ட மகஜரில் உள்ள விவரம், '20.12.1996 அன்று மதியம் 3.30 மணியில் இருந்து மறுநாள் காலை 8.30 மணி வரை 36, போயஸ் கார்டன் இல்லத்தில் நகை மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்றது. ஜெயலலிதா சார்பில் வி.பாஸ்கரனும் இவற்றைப் பார்வையிட்டார்.

அரசாங்கத்தின் சார்பில் சென்னை மாவட்ட கலெக்டரின் பி.ஏ-வான டி.ஏ.டி.​ஆபிரகாம், நகர நிலச் சீரமைப்புச் சிறப்பு தாசில்தார் பக்கிரிசாமி ஆகியோர் இருந்தனர். நகைகளை மதிப்பீடு செய்தவர் சுங்கத் துறையில் நகை மதிப்பீட்டு வல்லுநராக உள்ள வாசுதேவன். இவர் 1991-ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர். நீதிமன்ற உத்தரவுப்படி இந்த நகைகள் மதிப்பீடு செய்யப்பட்டன. அந்த மகஜரில் உள்ள விவரங்கள்படி, 468 வகைகளில் அந்த வீட்டில் நகைகள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அத்துடன், 13 வகையான தங்க நகைகள் 16, செவாலியே சிவாஜி கணேசன், தி.நகர் என்ற முகவரியில் இருந்த வீட்டில் இருந்தும் கைப்பற்றப்பட்டன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவரங்கள் அனைத்தும் சரியானவை என்பதை ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட பாஸ்கரனும் அரசுத் தரப்பினரும் கையெழுத்திட்டு உள்ளனர். இதையடுத்து பாஸ்கரனுக்கு ஒப்புகை ரசீதும் கொடுக்கப்பட்டு உள்ளது. மகஜரின்படி 468 விதமான தங்க வைர ஆபரணங்கள் ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டவை என்பது உறுதியாகிறது. அவை என்னென்ன நகைகள், அவற்றின் எடை, அதன் விலை மதிப்பு எவ்வளவு என்ற விவரங்கள் பட்டியல் போட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.

நகைகள் தன்னுடைய வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டவை என்பதை ஜெயலலிதா தரப்பு மறுக்கவில்லை. ஆனால், போயஸ் கார்டன் மற்றும் சிவாஜி கணேசன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகளின் மதிப்பையும் விலையையும் அரசுத் தரப்பு தவறாகக் கணக்கிட்டு உள்ளது என்று வாதிடுகின்றனர். அத்துடன் அரசுத் தரப்பு கைப்பற்றிய 23,113 கிராம் தங்க ஆபரணங்களும் 4,475 கிராம் எடையுள்ள மற்றொரு செட் ஆபரணங்களும் 91-க்கு முன்பாகவே தங்களிடம் இருந்தவை என்று சொல்கிறார்.''



ஜெ.விடம் இருந்த மொத்த நகைகள்

''1991-க்கு முன்பே சசிகலாவிடம் 1,802 கிராம் தங்க ஆபரணங்கள் இருந்தன என்றும் தங்களின் வாதத்தில் குறிப்பிடுகின்றனர். அ.தி.மு.க தொண்டர்களால் நினைவுப் பரிசுகளாக வழங்கப்பட்ட 3,365 கிராம் எடையுள்ள தங்க வாள், கேடயம் போன்றவற்றை தான் சம்பாதித்த சொத்துகளாகக் கருதுவது நியாயமில்லை. அ.தி.மு.க தொண்டர்கள் வழங்கிய அந்த நினைவுப் பரிசுகளைப் பாதுகாப்புக் கருதி தன்னுடைய வீட்டில் வைத்திருந்ததாகவும் ஜெயலலிதா குறிப்பிடுகிறார். மேலும் 'எனது வீட்டிலும் சிவாஜி கணேசன் வீட்டிலும் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகளை மதிப்பீடு செய்துள்ள வாசுதேவன், அவற்றை முற்றிலுமாக தவறாக மதிப்பிட்டுள்ளார். ஏனென்றால், அவர் கைப்பற்றிய வருடத்தின் மதிப்பில் நகைகளைக் கணக்கிட்டுள்ளார். ஆனால், அவை எல்லாம் பூர்வீக நகைகள். புதிய மாடல்கள் வரும்போது, அதற்கேற்ப பழைய நகைகளை அழித்து, புதிய டிசைன்களில் செய்வது எங்கள் வழக்கம். பூர்வீக நகைகளைப் புதிய வடிவத்துக்கு மாற்றும்போது அதன் மதிப்பைக் கணக்​கீடுகளில் குறிப்பிடுவது எளிதான காரியம் அல்ல. அதோடு மிக முக்கியமாக 1991-96 வரை பதவியில் இருந்த காலத்தில் புதிய நகைகள் வாங்கியதற்கு ஆதாரமாக எதையும் அரசுத் தரப்பு நிரூபிக்கவில்லை’ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.''

அரசுத் தரப்பு சாட்சியம்

''இந்த இடத்தில் அரசுத் தரப்பு சாட்சி சுப்புராஜ் நீதிமன்றத்தில் சொன்ன விவரங்கள் முக்கியமானவை. இவர் கோவை, ராஜவீதியில் உள்ள கீர்த்திலால் காளிதாஸ் அண்டு கம்பெனியின் மேனேஜராக 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பவர். அவர் நீதிமன்றத்தில் அளித்த சாட்சியத்தில், 'கீர்த்திலால் காளிதாஸ் அண்டு கம்பெனி மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற நிறுவனம். அந்த நிறுவனத்தின் நிர்வாகியும் பங்குதாரருமான சாந்தகுமாரும் நானும் சேர்ந்து, 1992-ம் வருடம் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்குச் சென்றோம். நாங்கள் அங்கு சென்ற ஐந்து நிமிடத்தில் சசிகலா வந்தார். எங்கள் முன் 4 டிரேக்களில் தங்க வைர நகைகள் கொண்டுவந்து வைக்கப்பட்டன. அந்த நகைகளை மதிப்பீடு செய்து தரவேண்டும் என்று சசிகலா எங்களிடம் கேட்டார். அத்துடன் நகைகள் வாங்கியதற்கான எந்த பில்களும் கிடையாது என்றும் சொன்னார். இதையடுத்து நாங்கள் அந்த நகைகளை மதிப்பீடு செய்து கொடுத்தோம்.

1986-87 காலகட்டத்தில் வாங்கியதாக சசிகலா சொன்ன 19 நகைகளையும், 1987-88 காலத்தில் வாங்கியதாக 44 நகைகளையும், 1988-89-ல் வாங்கியதாகச் சொன்ன 69 நகைகளையும், 1989-90-ல் வாங்கியதாகச் சொன்ன 96 நகைகளையும் எடைபோட்டு ஒரு பேப்பரில் தெளிவாகக் குறித்துக்கொண்டு கோவை திரும்பிவிட்டோம். கோவை வந்தபிறகு, அவற்றுக்கு விலை மதிப்பீடு செய்து அதுபற்றித் தனித்தனியாக நான்கு அறிக்கைகளை கொரியர்மூலம் போயஸ் கார்டன் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைத்தோம். அந்த நான்கு அறிக்கைகளும் சசிகலா பெயரில் வேண்டும் என்று கேட்டதால், அவருடைய பெயருக்கே அறிக்கை கொடுத்தோம். நாங்கள் கணக்கிட்டதில் அந்த நகைகளின் மதிப்பு ஒரு கோடியே 41 லட்சத்து 18 ஆயிரத்து 91 ரூபாய்’ என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்த நகை மதிப்பீட்டுக்காகத் தங்களுக்குத் தரவேண்டிய தொகைக்கு நான்கு பில்களையும் அனுப்பியதாகவும், இப்போது வரை அந்தத் தொகை தங்களுக்கு வரவில்லை என்றும் கூறி உள்ளனர்.

மேலும், 'ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்தி கைப்பற்றப்பட்ட 468 நகைகளில் 29 நகைகளை மட்டும்தான் தங்களால் இப்போது அடையாளம் காணமுடிகிறது. மற்றவை எல்லாம் நாங்கள் பார்க்காத புதிய ரகங்கள்’ என்று சொல்லி உள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள உம்மிடி பங்காரு செட்டி அறக்கட்டளை தங்க நகைக்கடையை நடத்துபவர் ஸ்ரீஹரி. இவர் மற்றொரு அரசுத் தரப்பு சாட்சி. வி.பி.சி.டி. (உம்மிடி பங்காரு செட்டி டிரஸ்ட்) என்று எழுத்துகள் பொறிக்கப்பட்டி​ருக்கும் நகைகள் அனைத்தும் இந்தக் கடையில் இருந்து வாங்கப்பட்டவை. இந்த ஆதாரத்தின்படி ஜெயலலிதா வீட்டில் சோதனையில் கண்டுபிடிக்கப்​பட்ட பல நகைகள் உம்மிடி பங்காரு செட்டி நகைக்கடையில் இருந்து வாங்கியவைதான். 1975-க்குப் பிறகு, ஜெயலலிதா இவரிடமும் நகைகளை வாங்கி வருகிறார் என்று ஸ்ரீஹரி தன்னுடைய சாட்சியில் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, அவர் சார்பில் ஒருவர் தன்னைத் தொலைபேசியில் அழைத்து, 'முதலமைச்சருக்கு தங்க, வைர ஆபரணங்கள் வேண்டும். கொண்டு வாருங்கள். வாங்கும் நகைகள் அனைத்துக்கும் அவர்கள் பணம் கொடுத்துவிடுவார்கள். ஆனால், பணம் செலுத்தியதற்கான பில்கள் தேவை இல்லை’ என்று சொன்னதாகத் தனது சாட்சியத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், சசிகலாவுக்கு வைர ஒட்டியாணம் செய்து கொடுத்ததையும் அதற்கான தொகையை, தான் பெற்றுக் கொண்டதையும் ஸ்ரீஹரி தனது சாட்சியத்தில் சொல்லி உள்ளார். இவர் ஜெயலலிதாவுக்காக நகைகளை மதிப்பீடு செய்து கொடுத்த சான்றிதழ்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளார். ஜெயலலிதாவின் வீட்டில் நடந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட நகைகளில் இவர், தான் பார்த்ததாக 51 நகைகளை அடையாளம் கண்டும் சொல்லி உள்ளார்.

அதன்படி ஸ்ரீஹரி 62 நகைகளை மதிப்பிட்டு சான்றிதழ் கொடுத்துள்ளார். அதன் விலைமதிப்பு ஒரு கோடியே 9 லட்சத்து 8 ஆயிரத்து 206 ரூபாய். மேலும் 1991-ம் ஆண்டு 26 நகைகளை மதிப்பீடு செய்து சான்றிதழ் கொடுத்துள்ளார். அதன் விலைமதிப்பு 19 லட்சத்து 30 ஆயிரத்து 852 ரூபாய். 1992-ம் ஆண்டு 26 நகைகளை மதிப்பீடு செய்து கொடுத்துள்ளார் அதன் விலைமதிப்பு 19 லட்சத்து 30 ஆயிரத்து 852 ரூபாய். அதே வருடம் மார்ச் மாதம் இவர் ஜெயலலிதாவுக்காக மதிப்பீடு செய்து கொடுத்த நகைகளின் மதிப்பு 23 லட்சத்து 90 ஆயிரத்து 58 ரூபாய். இதுபோன்ற மதிப்பீடுகளை அடிப்படையாக வைத்து ஜெயலலிதா 1991-ம் ஆண்டுக்கான சொத்துவரியை தாக்கல் செய்துள்ளார்.''

இதுபோல் பதவிக்கு வந்தபிறகு தாக்கல் செய்த சொத்துவரி ஆதாரங்களின் மூலம் ஜெயலலிதா சிக்கிக் கொண்ட விதம் அடுத்த இதழில்...

- ஜோ.ஸ்டாலின்

நன்றி : ஜூனியர் விகடன்

0 comments: