நடராசன் மூலமாக இவ்வளவு நகைகள் கிடைத்திருக்குமா? – குன்ஹா தீர்ப்பு விபரம் – 6

20-10-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நீதிபதி குன்ஹா வழங்கிய பரபரப்பான தீர்ப்பின் தொடர்ச்சி…

சசிகலா 1990-91-ம் ஆண்டுக்கான சொத்துக் கணக்கை 1993-ம் ஆண்டு தாக்கல் செய்துள்ளார். அதில், அவர் தன்னிடம் தங்க வைர ஆபரணங்களின் மதிப்பு 12 லட்சத்து 95 ஆயிரத்து 704 ரூபாயும் 5 கிலோ வெள்ளிப் பொருட்களின் மதிப்பு 27 ஆயிரத்து 468 ரூபாய் என்றும் கணக்குக் காட்டியுள்ளார்.

ஆனால், 1991-92-ம் ஆண்டுக்கான சொத்துக் கணக்கை அவர் தாக்கல் செய்தபோது, தன்னிடம் இருக்கும் தங்க வைர ஆபரணங்களின் மதிப்பு ஒரு கோடியே 10 லட்சத்து 13 ஆயிரத்து 946 ரூபாய் என்றும் வெள்ளிப் பொருள்களின் மதிப்பு 70 லட்சத்து 61 ஆயிரத்து 400 ரூபாய் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



ஒரு வருடத்துக்குள் சசிகலாவுக்கு 1 கோடியே 67 லட்சத்து 52 ஆயிரத்து 174 ரூபாய்க்கு தங்க, வைர ஆபரணங்கள் உயர்ந்துள்ளன.

ஜெயலலிதா, சசிகலா தரப்பில் இதற்குக் காரணமாக, 1991-ம் ஆண்டில் இருந்து 1992-ம் ஆண்டுக்குள் தங்க வைர ஆபரணங்களின் விலை கூடியதாகவும் மேலும் அந்தக் காலத்தில் தங்கம், வைரம் மற்றும் வெள்ளி ஆகியவற்றால் செய்யப்பட்ட ஆபரணங்கள், வாள்கள், கேடயங்கள் போன்றவை அன்பளிப்புகளாகவும் பரிசுகளாகவும் தங்களுக்குக் கிடைத்தன என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த இடத்தை நாம் கவனமாகப் பார்க்க வேண்டும். 1991-ம் ஆண்டுக்கான சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்தபோது, அவர்களுக்கு வராத பரிசுப் பொருள்கள், 1991-க்குப் பிறகுதான் வந்திருக்கின்றன என்பதை அவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார், நகைகளை மதிப்பிட்ட சுங்கத் துறை அதிகாரி வாசுதேவன் அந்தத் துறையில் நிபுணத்துவம் குறைந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் நகைகளின் மதிப்புகளைத் தவறாகக் கணக்கிட்டு அவற்றுக்கு விலை நிர்ணயம் செய்துள்ளதாகத் தன்னுடைய வாதத்தில் சொல்கிறார்.

ஆனால், வாசுதேவன் 10 ஆண்டுகள் இந்தத் துறையில் அனுபவம் வாய்ந்தவர் என்பது அரசுத் தரப்பாலும் சுங்கத் துறையின் மூலமும் நிரூபிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஜெயலலிதா, சசிகலாவிடம் இருந்த நகைகளை மதிப்பீடு செய்தபோது, அதற்கு மெட்லர் எலெக்ட்ரானிக் என்ற பிரத்தியேக தராசை வாசுதேவன் பயன்படுத்தியிருக்கிறார்.

எடை போடுவதற்கு முன்பு, தராசின் இரண்டு பக்கங்களும் சரியான அளவில் நின்றதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். அதை ஊழல் தடுப்பு அதிகாரி நல்லம்ம நாயுடு, ஜெயலலிதா தரப்பில் இருந்த பாஸ்கரன், வழக்கறிஞர்கள் சேகர் மற்றும் சந்திரசேகர், கலெக்டர்(சிறப்பு) கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஜெயலலிதாவின் அத்தை ஆகியோர் ஒப்புக்கொண்டு உள்ளனர்.

மேலும், நகைகளின் தரத்தை அறிய, பொற்கொல்லர்கள் பயன்படுத்தும் உரைகல்லை வாசுதேவன் பயன்படுத்தியுள்ளார். வைரங்களின் தரத்தை 10 S என்ற லென்ஸைப் பயன்படுத்தி கணக்கிட்டுள்ளார். அவருடைய மதிப்பீட்டின்படி, அந்த வைரங்கள் 4-சி எடை கொண்டவை என்பது தெரியவந்துள்ளது.

மேலும், அந்த வைரங்களில் தீட்டப்பட்டு இருந்த பட்டைகள், அதன் தூய தன்மை, வைரங்களின் நிறம் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டுதான் வாசுதேவன் அவற்றின் மதிப்பைக் கணக்கிட்டுள்ளார். அப்படி அவர் கணக்கிட்டதன்படி, ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் எடை அளவு 23 கிலோ 113 கிராம் என்பது தெரியவந்தது.

அதன்விலை அன்றைய தேதியில் 91 லட்சத்து 57 ஆயிரத்து 253 ரூபாய். வைரத்தின் விலை அன்றைய தேதியில் இரண்டு கோடியே 43 லட்சத்து 92 ஆயிரத்து 790 ரூபாய். மொத்தமாக தங்க வைர ஆபரணங்களின் மதிப்பு 3 கோடியே 35 லட்சத்து 50 ஆயிரத்து 43 ரூபாய் என்று கணக்கிட்டுள்ளார்.

இது தவிர்த்து போயஸ் கார்டன், வீட்டில் நடத்திய சோதனையில் 42 நகைப் பெட்டிகள் கைப்பற்றப்பட்டு, அவற்றிலும் நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. அதில் சில பெட்டிகளில் கைக்கடிகாரங்களும், மற்றவற்றில் 131 நகைகளும் இருந்தன.

அதன் எடை 4 கிலோ 475 கிராம். அதன் மதிப்பு அன்றைய விலையில் 17 லட்சத்து 37 ஆயிரத்து 266 ரூபாய். வைரம் பதிக்கப்பட்ட தங்கக் கம்மல் விலை 47 லட்சத்து 61 ஆயிரத்து 816 ரூபாய் என்று கணக்கிட்டுள்ளார். அதேசமயம், குறுக்கு விசாரணையில், வாசுதேவன் மதிப்பீட்டாளர் மட்டும்தான் என்பதும் விலை நிர்ணயம் செய்யும் வேலையில் அவருக்கு அனுபவம் இல்லை என்பதும் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞரால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாசுதேவன் எடை போட்ட நகைகளுக்கு விலையைக் கணக்கிடும்போது, 1996-ம் ஆண்டு விலையில் அவற்றைக் கணக்கிட்டு உள்ளார் என்பதும் தெரியவருகிறது. எனவே, வாசுதேவன், கணக்கிட்ட எடையை மட்டும் நாம் எடுத்துக்கொள்ளலாம். விலையின் மதிப்பீட்டில் குளறுபடி உள்ளதால், அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மேலும், ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார், தன்னுடைய வாதத்தில், ‘அரசுத் தரப்பு பட்டியலிட்டு உள்ள நகைகளில், வரிசை எண் 284 மற்றும் 285-ல் உள்ள நகைகள், முதலமைச்சர் பொறுப்புக்கு வருவதற்கு முன்பே ஜெயலலிதாவிடம் இருந்தவை’ என்றும் ‘அவற்றையும் அரசுத் தரப்பு சேர்த்து சொத்து மதிப்பைக் கணக்கிட்டு குற்றம்சாட்டுகிறது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த இடத்தில் நாம் கவனமாக ஆதாரங்களைப் பரிசீலித்து முடிவுக்கு வர வேண்டும்.

ஜெயலலிதாவைப் பொறுத்தவரையில், அவர் 1965-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து வருமானவரி மற்றும் சொத்துவரி செலுத்தி வந்துள்ளார். 1987-ம் ஆண்டில் இருந்து 1990 வரையிலான கணக்குகளை அவர் 1992-ம் ஆண்டு செலுத்தியுள்ளார். அப்போது அவரிடம் இருந்த நகைளை கீர்த்திலால் காளிதாஸ் அண்ட் கம்பெனியைச் சேர்ந்த சுப்புராஜ், சாந்தகுமார் ஆகியோர் மதிப்பிட்டுக் கொடுத்துள்ளனர்.

அந்த மதிப்பீட்டில் 7,040 கிராம் வைரம் இடம்பெற்றுள்ளது. இதைத்தான் அவர் பதவிக்கு வருவதற்கு முன்பே அவரிடம் இருந்த வைரங்களாக ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் பி.குமார் குறிப்பிடுகிறார். ஆனால், இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், 1987-ல் இருந்து அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான வருமானவரியை மொத்தமாக 1992-ல் தாக்கல் செய்துள்ளார்.

1992-ம் ஆண்டுக்கான வருமானவரியை 1993-ம் ஆண்டு மார்ச் 26-ம் தேதி செலுத்தி உள்ளார். அடுத்தடுத்த ஆண்டுகளில் செய்யப்பட்ட இந்த வருமானவரி கணக்குத் தாக்கலில் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

அது பற்றி வருமானவரித் துறை கேள்வி எழுப்பியபோது, ஓர் ஆண்டில் தங்க வைர ஆபரணங்களின் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டதாகவும், மேலும், தங்களுக்கு இந்தக் காலத்தில் அதிக எண்ணிக்கையில் பரிசுப் பொருள்கள் கிடைத்ததாகவும் காரணம் சொல்லியுள்ளனர்.

இதையடுத்து வருமானவரித் துறை உதவி ஆணையர், ‘கடந்த ஆண்டில் உங்களுக்கு அன்பளிப்பாக 19 புதிய ஆபரணங்கள் கிடைத்துள்ளன என்றும் அவற்றின் எடை 7,040 கிராம் என்றும் 101.49 சி எடையுள்ள வைரங்களும் கிடைத்துள்ளன என்றும் சொல்லியுள்ளீர்கள். ஆனால், அவற்றை முறையாகப் பட்டியல் இடவில்லை’ என்று சொல்லி நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அந்த ஆதாரங்கள் நீதிமன்றத்தில் தெளிவாக சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் பரிசுப் பொருள்கள் மற்றும் புதிய நகைகள் 1992-க்குப் பிறகே வந்துள்ளன என்பதும் நிரூபணமாகிறது.

மேலும், கீர்த்திலால் காளிதாஸ் அண்ட் கம்பெனி நிர்வாகி சாந்தகுமாரின் சாட்சியத்தில் இருந்து நமக்குத் தெரியவருவது என்னவென்றால், 1992-ம் ஆண்டில்தான் ஜெயலலிதா, சசிகலா ஆகிய இருவரும் நகைகளைத் தரம் பிரிப்பதற்காக இவர்களை அழைத்துள்ளனர்.

இவர்களிடம் கிலோ கணக்கில் நகைகளை மட்டும் கொடுத்து, எந்தெந்த நகைகள் 1987, 1988, 1989, 1990 ஆகிய ஆண்டுகளில் வாங்கப்பட்டவை என்ற விவரங்களை ஆண்டுவாரியாக சசிகலாவே சொல்லி உள்ளார். ஆனால், அவை எல்லாம் உண்மையிலேயே அந்த ஆண்டுகளில்தான் வாங்கப்பட்டவை என்பதற்கான ரசீதுகள் சாந்தகுமாரிடம் காட்டப்படவில்லை. அவற்றை நீதிமன்றத்திலும் அவர்கள் சமர்ப்பிக்கவில்லை. ஒருவேளை 1992-க்கு முன்பே முறையாக ஒவ்வோர் ஆண்டும் வருமான வரி தாக்கல் செய்து, அவற்றில் அந்த நகைகளை ஜெயலலிதா கணக்குக் காண்பித்து இருந்தால், அதுவாவது நம்பும்படியாக இருந்திருக்கும்.

ஆனால், அவசர அவசரமாக 1992-ல் கடந்த மூன்று ஆண்டுகளுக்கான வருமானவரியைத் தாக்கல் செய்து, அவற்றில் நகைகளைப் பிரித்துக் காண்பித்து இருப்பது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. மேலும், அவற்றின் தரத்தை தற்போது மதிப்பிடுவது வருமானம் மற்றும் சொத்து வரி செலுத்துவதற்காக மட்டுமே என்று சசிகலா, சாந்தகுமாரிடம் கூறியுள்ளார்.

இதிலிருந்து நமக்குத் தெரியவருவது என்னவென்றால், 1991-க்குப் பிறகு அவர்களிடம் குவிந்த நகைகளை பழைய தேதியிட்டுக் கணக்குக் காட்டி வருமான வரியைத் தாக்கல் செய்துள்ளனர். அப்படி வரி கட்டியதால் மட்டுமே ஒரு வருமானம் நல்ல வழியில் வந்த வருமானமாக ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த வருமானம் எந்த வழியில் வந்தது என்பதை ‘பொது ஊழியர்’ சொல்லியாக வேண்டும். ஆனால், இவ்வளவு ஆயிரக்கணக்கான கிலோ தங்கமும் வைரமும் தனது வீட்டுக்கு எப்படி வந்தது என்பதை ஜெயலலிதாவால் கடைசிவரை சொல்லவே முடியவில்லை. இவை அனைத்தும் சசிகலாவின் பெயரில் இருப்பதை மூத்த வழக்கறிஞர் பி.குமார் நமக்கு நினைவூட்டுகிறார்.

அப்படியானால் சசிகலாவுக்கு இவ்வளவு நகைகள் எப்படி வந்தன? அவர் அதை நிரூபிக்க வேண்டும் அல்லவா? அவர் இந்த நகைகளை எங்கு வாங்கினார்? எப்படி வாங்கினார்? எந்தத் தேதியில் வாங்கினார்? என்ற விவரங்களையும் சொல்ல முடியவில்லை. ஆனால், சசிகலாவின் பெயரில் நகை மதிப்பீட்டு அறிக்கையை மட்டும் ஆண்டுக்கு ஆண்டு தயாரித்து வைத்துள்ளனர். ஒருவேளை அவர் வாங்கவில்லை என்றாலும், அவர் கணவர் நடராசன் மூலமாக இவ்வளவு நகைகள் அவருக்குக் கிடைத்திருக்குமா என்றால், அதற்கும் வாய்ப்பே இல்லை என்பதை அரசுத் தரப்பு சரியாக நிரூபித்துள்ளது.

ஏனென்றால், 1991-ம் ஆண்டு வரை அவருடைய கணவர் ஓர் அரசு ஊழியராகத்தான் இருந்துள்ளார். ஒரு ஸ்கூட்டர் வாங்குவதற்கே அரசாங்கத்திடம் இருந்து 3,000 ரூபாய் முன்பணமாக அவர் பெற்றுள்ளார். எனவே, அவர் மூலமாக இவ்வளவு நகைகள் வந்திருக்க வாய்ப்பில்லை.

இந்த ஆதாரங்களின் மூலம் தங்கமும் வைரமும் ஜெயலலிதாவால் சசிகலாவின் பெயரில் வாங்கிக் குவிக்கப்பட்டன என்பதை அரசுத் தரப்பு நிரூபித்துள்ளது. ஆனால், இதை மறுப்பதற்கு ஜெயலலிதா, சசிகலா ஆகிய இருவரிடமும் ஆதாரங்கள் இல்லை. எனவே, குற்றச்சாட்டு நிரூபணமாகிறது.

நீதிமன்றம் போட்டுக் காட்டிய கணக்கு

வாசுதேவனுடைய மதிப்பீட்டில் குளறுபடி இருப்பதாலும், சாந்தகுமாரின் மதிப்பீடு முன்தேதியிட்டு நடந்திருப்பதாலும், நகைகளின் எடைகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு, அவற்றின் விலையை இந்த நீதிமன்றமே தீர்மானிக்கிறது.

ஜெயலலிதாவிடம் இருந்து அரசுத் தரப்பு கைப்பற்றிய நகையின் எடை 27 ஆயிரத்து 588 கிராம். ஆனால், அதில் ஜெயலலிதா பதவிக்கு வருவதற்கு முன்பே அவரிடம் இருந்த நகைகளாக, தற்காப்புச் சாட்சிகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட அளவு 7 ஆயிரத்து 40 கிராம். எனவே, அவற்றை இந்த வழக்கில் இருந்து தள்ளுபடி செய்துவிடுகிறேன்.

அப்படிச் செய்தால், மீதம் இருக்கும் 20 ஆயிரத்து 548 கிராம் எடை தங்கம், ஜெயலலிதாவின் பதவிக் காலத்தில் சம்பாதித்தவை என்றாகிறது. இதற்கு விலையாக, ஜெயலலிதா தரப்பு மற்றும் அரசுத் தரப்பு என இருவருமே ஏற்றுக்கொண்ட, 1992-ம் ஆண்டின் தங்க விலை நிலவரப்படி கணக்கிடுவது என்று நீதிமன்றம் முடிவு செய்கிறது.

அதன்படி, அந்தக் காலத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 4 ஆயிரத்து 334 ரூபாயாக இருந்துள்ளது. அப்படியானால் ஒரு கிராம் தங்கத்தின் விலை 433 ரூபாய் 40 பைசாவாகிறது. அந்த விலையில் 20 ஆயிரத்து 548 கிராம் தங்கத்தைக் கணக்கீடு செய்தால், 20548ஜ்433.4=8905503.20 என்ற விலை வருகிறது.

மேலும், ஜெயலலிதாவிடம் இருந்த வைரங்களின் மதிப்பு 1 கோடியே 62 லட்சத்து 61 ஆயிரத்து 820 ரூபாய் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. அந்தத் தொகையை தங்க நகையின் மதிப்போடு சேர்த்துக் கணக்கிட்டால், 2 கோடியே 51 லட்சத்து 59 ஆயிரத்து 144 ரூபாய் வருகிறது. இத்தனை மதிப்புடைய தங்கத்தாலும் வைரத்தாலும் இழைக்கப்பட்ட நகைகள் அனைத்தும் ஜெயலலிதாவால் முறைகேடான வழியில் சம்பாதிக்கப்பட்டதாக நீதிமன்றம் அறிவிக்கிறது.

அடுத்த இதழிலும் தொடரும்…

நன்றி : ஜூனியர்விகடன்

1 comments:

Anonymous said...

Read my epic story

http://vetrumurasu.blogspot.sg/