கல்கண்டு சினிமா விமர்சனம்

02-11-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நகைச்சுவை சக்கரவர்த்தி நாகேஷின் பேரனும், நடிகர் ஆனந்த்பாபுவின் மகனுமான நடிகர் கஜேஷ் இந்தப் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். அந்த வகையில் மட்டுமே இதுவொரு முக்கியமான படம்..!

ஹீரோவின் அப்பா தனது மூத்த மகனை டாக்டருக்கு படிக்க வைத்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கிறார். இளைய மகனையும் அதேபோல் டாக்டருக்கு படிக்க வைத்து லண்டனுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதன்படி மூத்த மகன் அமெரிக்கா போய்விட்டான். இளைய மகனான ஹீரோ பிளஸ் டூவில் பெயிலாகிவிட்டார்.
ஆனால் வீட்டில் அனைவருக்கும் தெரிந்தால் மனசு கஷ்டப்படுவார்களே என்று நினைத்து ‘பாஸ்’ என்று பொய் சொல்கிறார்கள் சகோதரர்கள் இருவரும். அண்ணனின் ஆலோசனைப்படி போலி மார்க்சீட்டை தயார் செய்து.. கூடவே 50 லட்சம் ரூபாய் பணத்தையும் தம்பியிடம் கொடுத்தனுப்பி ஒரு மந்திரியிடம் அனுப்பி அவருடைய மருத்துவக் கல்லூரியில் சீட் கேட்க வைக்கிறார் அண்ணன் அகில்.
மந்திரி பணத்தை பார்த்தவுடன் மெடிக்கல் சீட் தருவதாகச் சொல்லி அவனது பெயரையும், நம்பரையும் எழுதித் தரும்படி கேட்கிறார். ‘Karthik ka’ என்று பெயரையும் ‘10015’ என்ற உண்மையான நம்பரை தவறுதலாக ‘1015’ என்று மாற்றியும் எழுதித் தருகிறார் ஹீரோ. இதனாலேயே இவருக்கு சீட் கிடைக்காமல் போகிறது.. பணத்தையும் திரும்ப வாங்க முடியவில்லை.
ஊரிலும் எல்லாரிடமும் டாக்டருக்கு படிக்கப் போகிறேன் என்று சொல்லியாகிவிட்டது. வேறென்ன செய்வது..? டிராமா போடுவோம் என்று நினைத்து சென்னையில் ஒரு மேன்ஷனில் தங்கியிருந்து டாக்டருக்கு படிப்பதுபோல நாடகமாடி வருகிறார் ஹீரோ.
இந்த நேரத்தில் மேன்ஷன் மேனேஜர் கஞ்சா கருப்புவும், அதே மேன்ஷனில் இருக்கும் அரியர்ஸ் டாக்டர் சாமிநாதனும், டவுட் செந்திலும் நண்பர்களாகிறார்கள். ஹீரோவின் சோகக் கதையைக் கேட்டு பீலான அவர்கள்.. ஹீரோவின் இடத்தில் கல்லூரியில் படிப்பவனை பிடித்து அவனிடம் உண்மையைச் சொல்லி அந்த 50 லட்சம் ரூபாயை அவனிடமிருந்து பிடுங்குவோம் என்று பிளான் போடுகிறார்கள்.
கல்லூரிக்குச் சென்று தேடினால் ஹீரோவின் சீட்டில் படிப்பது கார்த்திகா என்ற பெண். ஹீரோயினை பார்த்தவுடன் வந்த நோக்கத்தைவிட்டுவிட்டு காதலில் விழுகிறார் ஹீரோ. ஹீரோவின் முகத்தைப் பார்த்து உவ்வே என்று சொல்லும் ஹீரோயினை மடக்குகிறார் ஹீரோ. இப்ப நான் போய் காலேஜ்ல உண்மையைச் சொன்னா உன்னைத் தூக்கிருவாங்க என்று மிரட்டுகிறார். உடன் படிக்கும் தோழியின்  அட்வைஸ்படி படிப்பு முடியும்வரையில் காதலிப்பதாகச் சொல்லி நடிக்கிறாள் ஹீரோயின்.
படிப்பு முடிந்தவுடன் எஸ்கேப்பாக.. அவளை ஹீரோவும் நண்பர்களும் தேடுகிறார்கள். இன்னொரு பக்கம் ஊரிலிருந்து அழைப்பு வருகிறது. அங்கே போனால் படிப்பு முடிந்து பையன் டாக்டராயிட்டான் என்று சொல்லி வீட்டுக்கு எதிரிலேயே கிளினிக் வைத்து கொடுக்கிறார் அப்பா.
அங்கேயும் ஒரு பொய் சொல்லிவிட்டு எஸ்கேப்பாகும் ஹீரோ ஹீரோயினைத் தேடி ஓடுகிறார். கடைசியில் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் கதை..!
கொஞ்சம் சுவாரஸ்யமான கதைதான்.. ஆனால் சிரிப்பு வரும்படியான இயக்கமும், நல்ல நடிகர்களும் இல்லாததால் ஏனோதானோவென்று இருக்கிறது..
ஹீரோ கஜேஷ்.. இருக்கிறார்.. நன்கு நடனமாடுகிறார்.. ரொம்ப சின்ன வயதாகத் தெரிகிறது.. இதனை வைத்து இந்தக் காலத்தில் எதுவும் செய்ய முடியாது.. ஆனாலும் வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்வோம். ஹீரோயின் டிம்பிள் சாப்டே.. முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்குக் கொஞ்சம் நடித்திருக்கிறார். வெல்டன்..
முத்துராமனும், டி.பி.கஜேந்திரனும்தான் வருகின்ற காட்சிகளில் இயக்கம் என்றால் என்னவென்பதை காட்டியிருக்கிறார்கள். கஞ்சா கருப்பு, சாமிநாதன் அலப்பறையில் கொஞ்சம் சிரித்தாலும் நிறைய போரடிக்கிறது..  மயில்சாமியை விரட்டிச் செல்லும் அந்த ஒரு காட்சி முழுக்கவே செம காமெடிதான்..! மயில்சாமியுடனான காட்சிகளும் அதைத் தொடர்ந்த ஹீரோயினை பிடிக்கும் காட்சிகளும் சுவாரஸ்யமானவை. இதில் இடைவேளைக்கு பின்புதான் படத்தை ரசிக்கவே வைத்திருக்கின்றனர்..!
ஏகப்பட்ட டிவிஸ்ட்டுகளை அடுத்தடுத்து நகர்த்தியபடியே செல்வதால் இரண்டாம் பாதி ரசிக்க வைக்கிறது. அகிலின் வருகை.. அவருக்கு பெண் பார்க்க போகுதல்.. ஹீரோயினே அண்ணியாக வரப் போவது.. அந்தக் கல்யாண கலாட்டா.. சிசிடிவி காமெடிகள்.. குண்டர்கள் விரட்டுவது.. ஆண்ட்டி கிளைமாக்ஸாக மணமேடையில் நடக்கும் அந்த டிவிஸ்ட்டு.. எல்லாமும் சேர்ந்த இடைவேளைக்கு பின்பு படத்தை ரசிக்கும்வகையில் கரை சேர்த்திருக்கின்றன.
‘மனம் கொத்தி மனம் கொத்தி’.. ‘மீனே வாஸ்து மீனே’ ஆகிய பாடல்கள் கேட்க வைத்தன. பாடல்களை படமாக்கியவிதமும், நடனமும் பலே.. டிம்பிள் சாப்டேவுக்கு மாடர்ன் டிரெஸ் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. இதை வைத்தே பாடல் காட்சிகளை கலர்புல்லாக்கியிருக்கிறார் இயக்குநர் ஏ.எம்.நந்தகுமார்..!
குடும்பப் பாசம், சென்டிமெண்ட், நகைச்சுவை எல்லாம் கலந்து ஓரளவுக்கு இந்த வாரத்தில் வெளிவந்த படங்களில் உருப்படியான படமாக இது வந்திருக்கிறது.. இதுவரைக்கும் இயக்குநர் நந்தகுமாருக்கு ஒரு பாராட்டு..!

3 comments:

Yarlpavanan said...

சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்

SK said...

ஹீரோயின் டிம்பிள் சாப்டே.. முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்குக் கொஞ்சம் நடித்திருக்கிறார். வெல்டன்..

i think she has already acted at 'Yaaruda Mahesh" please check sir.

Unknown said...

ஹீரோயின் டிம்பிள் சாப்டே ஏற்கனவே மாற்று மொழி படங்கள் சிலவற்றில் நடித்திருக்கிறார். தமிழில் மேலே SK சொன்னது போல்தான். அண்ணனுக்கு இதையெல்லாம் கவனிக்க நேரமில்லை போலும்.