கத்தி - சினிமா விமர்சனம்

22-10-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தியாவில் தினம் தோறும் நடைபெறும் தற்கொலைகளில் பெரும்பாலானது விவசாயிகளின் தற்கொலை என்கிறது புள்ளி விவரங்கள். கடந்த 15 ஆண்டுகளில் மக்களின் உணவு பழக்க முறை மாறிவிட்டது ஒரு புறமிருந்தாலும், விவசாயத் துறை பின்னோக்கி போக ஆரம்பித்திருப்பதை அதி நவீன அரசியல்வியாதிகளாய் மாறிப் போன நமது ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.. 

இல்லாவிடில் உள்நாட்டு கோதுமை உற்பத்தியை குறைத்துவிட்டு வெளிநாட்டில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்வார்களா..? உள்நாட்டில் தயாராகும் சர்க்கரைக்கான லெவி கொள்முதல் விலையைக் குறைத்துவிட்டு, வெளிநாட்டில் இருந்து சர்க்கரையை இறக்குமதி செய்வார்களா..? ஊழலும், லஞ்சமும் ஒரு பக்கம் விவசாய விளைபொருட்களுக்கான விலையைக் குறைத்து மதிப்பிட வைத்தது ஒரு பக்கம்.. இன்னொரு பக்கம் அதிகரித்து வரும் நகர்ப்புறங்களால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு அவையெல்லாம் குடியிருப்புகளாக மாறிவிட்டன.

இத்தனையையும் மீறி விவசாயத்தைத் தவிர தனக்கு வேறெதுவும் தெரியாது என்று சொல்லும் இந்திய விவசாயிகள், விவசாயத் தொழிலில் இறங்கினால் அவர்களுக்கு இயற்கையும் கை கொடுக்கவில்லை.. மழையே இல்லாமல்.. தண்ணீர் பாசனமே இல்லாமல் எந்த பயிரையும் சாகுபடி செய்ய முடியாமல்.. வருடந்தோறும் அதிகரித்துவரும் பருவ மழை பொய்த்தலில் விவசாயத் தொழில் அடியோடு நாசமான நிலைமையில் இருக்கிறது..

மூன்றாம் உலகப் போரென்று ஒன்று மூண்டால் அது நிச்சயம் பெட்ரோலுக்காக இருக்கலாம்.. அல்லது தண்ணீருக்காக இருக்கலாம் என்று இப்போதே அறிவியல் ஆய்வாளர்கள் அழுத்தம் திருத்தமாகச் சொல்லி வருகிறார்கள்.. 

கேரளாவில் கோக் நிறுவனம் தனது கிளையை நிறுவியபோது அது ஒரு நாளைக்கு 10000 காலன் தண்ணீரை உறிஞ்சுவதால் நிலத்தடி நீர் மட்டும் குறைந்து, விவசாயத்தை பாதிக்கும் என்று சொல்லி கேரள மக்கள் போராடி அந்த கோக் ஆலையை துரத்தினார்கள்.

ஆனால் தமிழ்நாட்டில்.. நெல்லை அருகேயிருக்கும் கோக் நிறுவனம் இன்றைக்கும் பல ஆயிரம் காலன் தண்ணீரை தினந்தோறும் உறிஞ்சியெடுத்து அதனை கோக் குளிர்பானமாக்கி நம்மிடமே விற்று பணம் சம்பாதித்து வருகிறது.. இத்தனை வறட்சியிலும் தண்ணீர் இருக்கும் ஏரியாவாக பார்த்து அது ஆலை அமைத்திருக்கிறது எனில் அந்த கார்பரேட் நிறுவனத்தின் செல்வாக்கையும், புத்திசாலித்தனத்தையும் நம்மால் உணர முடிகிறது..!அது போன்று அதே நெல்லை மாவட்டத்தில் தென்னூத்து என்ற கிராமத்தில் இருக்கும் நீராதாரத்தை அறிந்து கொண்டு அங்கே குளிர்பான ஆலை அமைக்க ஒரு கார்பரேட் நிறுவனம் முயற்சிக்கிறது.. இதனை படத்தின் ஹீரோ எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் இந்தக் கத்தி படத்தின் கதை..!

இரட்டை வேடத்தில் கச்சிதமாக  பொருந்தியிருக்கிறார் விஜய். ஒருவர் ஜீவானந்தம். எம்.எஸ்.ஸி. ஹைட்ராலஜி படித்த சமூகப் போராளி. பொருத்தமான பெயர்.. இன்னொருவர் வழிப்பறி திருடன் கதிரேசன். இந்தக் கதிரேசன் கொல்கத்தா ஜெயிலில் இருந்து தப்பித்து சென்னைக்கு ஓடி வருகிறார். வந்த இடத்தில் ஜீவானந்தம் துப்பாக்கியால் சுடப்படுவதை பார்க்கிறார். அவரைக் காப்பாற்றும் நேரத்தில் கதிரேசனை தேடி மேற்கு வங்காள போலீஸ் சென்னைக்கு வந்துவிட.. அவர்களை ஏமாற்ற வேண்டி ஆஸ்பத்திரியில் இருக்கும் ஜீவானந்தத்தை கதிரேசன் போல செட்டப் செய்துவிட்டு தப்பிக்கிறார்.

ஆனால் அடுத்த நாளே ஜீவா நடத்தி வரும் அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் சிக்கிக் கொள்கிறார். அடுத்தடுத்து போனஸாக எதற்கென்று தெரியாமலேயே லட்சம், கோடி என்று கைக்குக் கிடைக்க இதையெல்லாம் சுருட்டிவிட்டு ஓடிப் போகலாம் என்று பிளான் செய்கிறார். ஆனால் சரியான சமயத்தில் அந்த ஜீவானந்தத்தின் உண்மை முகம்.. இந்த கதிரேசனுக்குத் தெரிய வர.. கொஞ்சம் உணர்ச்சிவசப்படுகிறார். வாங்கிய பணத்தை வில்லனிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு தப்பித்து போக நினைக்கையில் முதியோர் இல்லத்தில் இருந்த பெரியவர்களை வில்லனின் அடியாட்கள் அடித்த்தை பார்த்துவிட்டு சட்டென்று மனம் மாறி தான் இனிமேல் ஜீவானந்தமாக நடித்து நியாயத்தை நிலை நாட்ட முடிவெடுக்கிறார். இதை எப்படி செய்கிறார் என்பதுதான் மிச்சம் மீதிக் கதை..!

மிகச் சாதாரணமாக அறிமுகமாகிறார் விஜய். எந்த பில்டப்பும் இல்லாமல் இருக்கும் இந்த அறிமுகமே ஆச்சரியம்தான்.. பெரிய இயக்குநர்களின் படங்களில் மட்டுமே இது சாத்தியம்..! முற்பாதியில் தென்னூத்து கிராமத்துக் கதை வரும்வரையிலும் காட்சிகளெல்லாம் எங்கோ இழுத்துக் கொண்டு போகின்றன.. பார்த்தவுடன் காதல் என்கிறவகையில் சமந்தாவை பார்த்தவுடன் காதலிக்கிறார். சட்டென்று பாடல்கள்.. அரைலூஸுத்தனமான ரொமான்ஸ் காட்சிகள்.. பணத்துக்காக எதையும் செய்வார் என்பதையே சொல்லும்விதமான திரைக்கதை.. இப்படியே போய் அந்த தென்னூத்து கிராமத்துக் காட்சிகள் திரையிடும்வரையிலும் கொண்டு போயிருக்கிறார்கள். 

தென்னூத்து கிராமம் பற்றிய தொகுப்புரையை மிக அழகாக படமாக்கியிருக்கிறார்கள். உள்ளத்தைத் தொடுகிறது.. அந்த இடைவேளை பிரேக்கில் சதீஷிடம் பாட்சா பாணியில் ‘பெட்டியை தூக்கி உள்ள வை’ என்கிறார்.. திரும்பவும் துப்பாக்கி ஸ்டைல் டயலாக்.. ‘ஐ ஆம் வெயிட்டிங்’ என்கிறார். 

இதற்கு பிறகுதான் அடுத்தக் கட்ட பரபரப்பு..! மீடியாக்களை வாரி வதைத்திருக்கிறார் முருகதாஸ்.. ஒவ்வொரு பத்திரிகையும் எந்த மாதிரி செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை அந்தந்த பத்திரிகைகளில் வேலை பார்ப்பவர்களே சொல்வது போலவும், டிவி சேனல்கள் எதற்கெல்லாம் கேமிராவை தூக்கிக் கொண்டு வருவார்கள் என்பதையும் வெளிப்படையாகச் சொல்லி மீடியாக்களை இந்த ஒரேயொரு படத்திலேயே அநியாயத்திற்கு முறைத்துக் கொண்டுள்ளார் இயக்குநர் முருகதாஸ். ஏனென்று தெரியவில்லை..

ஆனால் உண்மையில் மீடியாக்கள் முன்பு போல இல்லை. போட்டிகள் அதிகமாகிவிட்டதால் எங்கடா நியூஸ் கிடைக்குது என்று தேடி தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். ‘புதிய தலைமுறை’ சேனல் வந்த பிறகு அனைத்து சேனல்களின் பிரசண்டேஷனும் மாறியிருக்கிறது. மக்களுடைய பிரச்சினைகளை அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்றெல்லாம் தினந்தோறும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் இது போன்ற பிரச்சினைகளெல்லாம் இப்போது பத்திரிகைகளிலும், டிவிக்களிலும் சொல்லப்பட்டும், விவாதிக்கப்பட்டும்தான் வருகிறது.. இயக்குநர் முருகதாஸுக்கு மீடியாக்கள் மீது என்ன கோபமா தெரியவில்லை..!

படத்தின் இறுதியில் விஜய் பேசும் அந்த 10 நிமிட வசனங்களை கிளிப்பிங்ஸாக கொடுத்தால் நிச்சயமாக அனைத்து தொலைக்காட்சிகளிலும் இதுதான் இந்த வாரத்திய ஹாட்டஸ்ட் நியூஸாக இருக்கும்.. ஆனால் தங்களை பற்றிய கமெண்ட்டுகளை நிச்சயம் நீக்கிவிட்டுத்தான் ஒளிபரப்புவார்கள். பரவாயில்லை.. மிச்சம் இருக்கிறதே..?

“5000 கோடி கடனை வாங்கிய பீர் கம்பெனி அதிபர் கடனை கட்ட முடியலைன்னு கூலா சொல்லிட்டு உயிரோட இருக்கார்.. ஆனா 5000 ரூபா கடன் வாங்கிய விவசாயி அதுக்கான வட்டி மேல வட்டி சேர்ந்து கட்ட முடியாததால தற்கொலை செஞ்சுக்குறான்.. இதுதான இந்த நாட்டுல நடக்குது..” என்கிறார் இயக்குநர் முருகதாஸ்..

2-ஜி வழக்கையும் விடவில்லை.. “தண்ணியெல்லாம் ஒரு பிரச்சினையா..?” என்று ஒரு நிருபர் கேட்க.. அதற்கு “2-ஜின்றது அலைக்கற்றை.. காற்றில் இருந்து பவரை எடுத்து பயன்படுத்தும் அந்த தொழில் நுட்பத்துலதான இத்தனை கோடி ரூபாய் ஊழல் செஞ்சிருக்காங்க..” என்று சொல்லியிருக்கிறார் இயக்குநர் முருகதாஸ். 

முருகதாஸே, 2-ஜி கேஸில் ஊழல் நடந்திருக்கிறது என்று சொல்லிவிட்டதால் அவரையும் நமது கூட்டாளியாக்க எதிரணி இனி முயலலாம். ஊழல் இல்லை என்று சொல்பவர்கள் இயக்குநர் முருகதாஸிடம் கேள்வி மேல் கேள்வி கேட்கலாம்..!

“தாமிரபரணி ஆற்றில் கோகோகோலா நிறுவனம் இன்னமும் தண்ணீரை உறிஞ்சி எடுப்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்...?” என்கிறார் முருகதாஸ். இந்த வசனத்தை பேசியிருப்பது விஜய். ஆனால் இதே விஜய்யே அந்த நிறுவனம் தமிழகத்தில் கால் பதித்தபோது கோடிகளை சம்பளமாகப் பெற்றுக் கொண்டு கோகோகோலா குளிர்பானத்தின் விளம்பர ஏஜென்டாக இருந்தார் என்பதையும் நாம் மறக்கக் கூடாது..!

விஜய்க்காக பல லாஜிக் எல்லை மீறல்களையும் வைத்துக் கொண்டு இந்தப் படத்தை கமர்ஷியல் படம் போலவும் மாற்றியிருக்கிறார் முருகதாஸ். சிறைச்சாலையில் ஒரு கைதி தப்பியோடிய வழியைக் கண்டறிய இன்னொரு கைதியிடம் ஆலோசனை கேட்கிறார்களாம் சிறைத்துறை அதிகாரிகள். அவரும் அதற்கு உடன்பட்டு வழி காட்டுகிறாராம். அவரையும் சிறையில் இருந்து வெளியேற அனுமதித்து அவருடனேயே ஓடிச் சென்று ஓடியவனை பிடிக்கிறார்களாம். இந்தக் களேபரத்தில் விஜய் தப்பிக்கிறாராம்.. இப்படியொரு ஸ்டோரியை நம்ப முடிகிறதா..? 

முதலில் சிறைத்துறை அதிகாரிகளிடம் துப்பாக்கி இருக்குமா..? ஒரு கைதியை ஆவணம் இல்லாமல் வெளியில் அழைத்துச் செல்ல முடியுமா..? காவல்துறையில் புகார் செய்யாமல் இவர்களே தேட முடியுமா..? ம்ஹூம்.. இதைவிட கொடுமை.. கொல்கத்தா மத்திய சிறை அதிகாரிகளே தமிழ் பேசுவதுதான். அவர்களை வங்க மொழியில் பேசவிட்டு சப் டைட்டிலாக தமிழில் வசனங்களை போட்டிருக்கலாம்..!
கொல்கத்தாவில் இருந்து தப்பித்து மறுநாள் காலையிலேயே சென்னை வந்துவிட்டார் விஜய். வந்தவுடன் சதீஷிடம் இருந்து பணத்தைச் சுட்டுவிட்டு அந்தக் காசில் “பேஸ்ட், பிரஷ், சோப்பு வாங்கிட்டு வரேன்...” என்கிறார்.. என்னே கொடுமை இது..? 

கதிரேசன், ஜீவானந்தமாக மாறும் சூழலை மெல்ல மெல்ல வெகு இயல்பாக மாற்றி நம்மை நம்ப வைத்திருக்கிறார். இது நிச்சயம் சூப்பர்தான்.. எந்த இடத்திலும் இடறல் இல்லை.. திரைக்கதையில் குழப்பமில்லாமல் கொண்டு போயிருக்கிறார். 

தென்னூத்து கிராமத்தில் நடப்பதும் சமீபத்தில் நடந்த கதையாகத்தான் இருக்கிறது. முந்தின தினம் இரவில் இறந்தவர்களின் கை விரல்களில் விரல் ரேகைக்கான மையின் அடையாளம் இருக்கிறது. இது ஒன்றே போதுமா.. நிலத்தை பதிவு செய்தாகிவிட்டது என்பதைக் காட்டுவதற்கு..? இப்போதெல்லாம் ரிஜிஸ்தரர் அலுவலகத்தில் நேரடியாகச் சென்றுதான் பதிவு செய்தாக வேண்டும்.. ரேகை பதிய வேண்டும்..

அதுவும் விஜய் யார், யாருடைய நிலத்திலெல்லாம் நீராதாரம் செல்கிறது என்று சோதனை செய்து சொல்கிறாரோ அந்தப் பெயர்களையெல்லாம் அந்த நேரத்திலேயே அருகிலுக்கும் புரொபஸர் ஒருவர் செல்போன் மெஸேஜில் வில்லனுக்கு பாஸ் செய்ய.. அடுத்த நொடியே அவர்களைத் தேடிப் பிடித்து கொலை செய்கிறார்கள் வில்லனின் ஆட்கள். அந்தச் சோதனை செய்து கொண்டிருக்கும்போதே விஜய்யை தேடி வந்து சம்பந்தப்பட்ட விவசாயிகள் கொலையானதையும் சொல்கிறார்கள்.. ம்ஹூம்.. இயக்குநர் முருகதாஸ் இன்னும் கொஞ்சம் திரைக்கதையை செப்பன்னிட்டிருக்கலாம்..!

விவசாயிகள் 6 பேர் எடுக்கும் அந்த பகீர் முடிவுக்கு ‘நாட்டு மக்களுக்கு தங்கள் மீது கவனமில்லை.. மீடியாக்கள் தங்களது பிரச்சனையை காது கொடுத்து கேட்கவில்லை’ என்பதையே காரணமாகச் சொல்கிறார்கள். கொஞ்சம் சின்னப்புள்ளத்தனமாக இருக்கிறது. இப்போதெல்லாம் சின்ன சின்ன பிரச்சினைக்கெல்லாம் நீதிமன்றங்களுக்கு போய்க் கொண்டிருக்கிறார்கள்.. கதையில் ஒரு அழுத்தம் வேண்டும் என்பதற்காகவும், நம் கண்கள் சில நொடிகள் கலங்க வேண்டும் என்பதற்காகவும் வலுக்கட்டாயமாக அவர்களை பலி கொடுத்திருக்கிறார் இயக்குநர். ஆனாலும் இந்தக் காட்சியை படமாக்கியவிதம் சூப்பர்..!

நீதிபதிகளே லஞ்சம் வாங்குகிறார்கள் என்கிற குற்றச்சாட்டெல்லாம் இப்போதும் நடப்பதுதான். வெளிப்படையாக பேசப்பட்டும் வருகிறது. சரிதான்.. ஆனால் அதற்காக விசாரணை கமிஷன் நீதிபதியை விஜய் மிரட்டுவதெல்லாம் டூ மச்சாக இருக்கிறது.. ஆனால் வில்லன்-நீதிபதி சந்திப்பின்போது விஜய் போன் செய்து பேசுவது படு திறமையான திரைக்கதையாகவும், டிவிஸ்ட்டாகவும் இருக்கிறது. ரசிக்க முடிந்தது.. 

வெளிநாடுகளில் இருப்பவர்களின் உண்மையான சர்டிபிகேட்டுகளை வைத்து கோர்ட்டில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருப்பதை முறியடிக்க வேறு ஐடியாக்களா கிடைக்கவில்லை..? “வெளிநாட்டில் இருந்து கொண்டு அவர்களால் எப்படி இந்த வழக்கு விசாரணையை அறிந்திருக்க முடியும்..? முடிந்தால் அவர்களை நேரில் வரச் சொல்லுங்கள்..” என்றெல்லாம் எதிர் மனுக்களை தாக்கல் செய்திருந்தாலே போதுமே..? 

இப்படி செய்தால் இயக்குநர் முருகதாஸின் புத்திசாலி மூளையை தமிழகத்து மக்கள் எப்படி அறிவது..? செம பிரில்லியண்ட் டிவிஸ்ட்டு அது..! “தண்ணியை பிளாக் செய்.. சென்னைல இருக்கிறவன் ரெண்டு நாள் தண்ணியில்லாமல் சாகட்டும். அப்பத்தான் நம்மள பத்தி கவலைப்படுவான்..” என்கிற இயக்குநர் முருகதாஸின் அந்த எண்ணம் இதுவரையிலும் திரையில் காணாதது..!

இதற்கான திட்டம் போடுவதும்.. திட்டத்தைச் செயல்படுத்துவதும்.. இதற்கடுத்த காட்சிகளும் பரபரவென்று திரையில் ஓடுகின்றன. ஒரு மாபெரும் குடியிருப்பில் தண்ணிக்காக மக்கள் காலி குடங்களுடன் அடித்துக் கொள்ளும் அந்த ஏரியல் வியூ காட்சியே, இயக்குநர் முருகதாஸின் இயக்கத் திறமைக்கு ஒரு சான்று..!

சென்னைவாசிகளுக்கே இந்தப் படத்தைப் பார்த்துதான் தங்களுக்கு நீராதாரம் தரும் ஏரிகளைப் பற்றி தெரியுமென்று நினைக்கிறேன். ஆனால் இந்தப் போராட்டத்தின் விளைவால் நீதிமன்றத்தில் தீர்ப்பு எந்தவிதத்தில் மாறியது என்பது மட்டும் புரியவே இல்லை..! மக்கள் வெளியில் பேசுவதையும், மீடியாக்கள் எழுதுவதையும் வைத்து நீதிமன்றங்கள் சந்தேகப்படும். வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றும். ஆனால் இது போன்ற கொள்கை முடிவெடுக்கும் விஷயத்தில் அதுவும் அந்த 2500 பட்டதாரிகளின் ஆவணங்கள் பொய் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இவர்களது வாதம், கடைசி நாளில் எப்படி இருந்தது என்பதையும் கொஞ்சம் காட்டியிருக்கலாம்..!

மேற்கு வங்க போலீஸாரும் தமிழ்நாட்டிற்கு தங்களது போலீஸ் டிரெஸ்ஸோடயே வந்து கதிரேசனை தமிழில் பேசி தேடுவதும்.. இறுதியில் அவரை அழைத்துச் செல்வதுமான காட்சிகளெல்லாம் போலீஸுக்கே சிரிப்பை கொடுக்கும்..!

இதில் இடம் பெற்றிருக்கும் சண்டை காட்சிகள் அவரது ரசிகர்களை திருப்திபடுத்தவே வைக்கப்பட்டிருக்கிறது.. நம்புவது போலவும் இல்லை.. காசை போடுவாராம்.. சுவிட்ச்சை ஆஃப் செய்வாராம். கிடைத்த இடைவெளியில் இவர் அடிப்பாராம்.. மறுபடியும் இது தொடருமாம்.. இப்படியே இந்த 2014-லிலும் ஏமாற்றினால் எப்படி..? கிளைமாக்ஸ் சண்டை காட்சியிலும் குறைந்தபட்ச உண்மைத்தன்மை இல்லை என்பதையும் சொல்லியாக வேண்டும்..!  ‘காதலுக்கு மரியாதை’, ‘நினைத்தேன் வந்தாய்’ போல சண்டை காட்சிகள் இல்லாமல், காதல் காட்சிகளை மட்டுமே வைத்து படத்தை நகர்த்தியிருக்கலாம்..!

நடிப்பைப் பொறுத்தவரையில் விஜய்யை குறையே சொல்ல முடியாது.. ஜீவானந்தத்தைவிடவும் அதிகக் காட்சிகளில் வரும் கதிரேசன்தான் கவர்கிறார்.. முதல் காட்சியில் சமந்தாவை பார்த்தவுடன் ஜொள்ளுவிட்டு பின்னாலேயே அலையும் காட்சியில் துவங்கி, காதல் காட்சிகளில் மட்டும் இன்னமும் உதடு பிரிக்காமலேயே பேசுவதைத்தான் ஏற்க முடியவில்லை..

ஆனால் கிளைமாக்ஸில் மொத்த மீடியாக்களுக்கும் பேட்டி கொடுக்கையில் என்னா பேச்சு..? உணர்ச்சிகரமாக இருந்தது..! சில, சில இடங்களில் தனது வழக்கமான மேனரிஸத்தையும், ஸ்டைல்களையும் அமைத்து இந்தப் படம் வெற்றிப் படமாக அமைவதற்காக அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார் விஜய். பாராட்டுக்கள். வாழ்த்துகள்..! விஜய்க்கு சோகக் காட்சிகளில் நடிப்பே வராது என்று சொல்பவர்களுக்கு வில்லனின் கம்பெனி தனது வேலையை நிலத்தில் துவங்கியவுடன் ஏமாற்றப்பட்டோம் என்று தெரிந்து அவர் கதறியழுகும் அந்தக் காட்சியில் ரசிகர்களின் கண்களிலும் சட்டென பொங்கி வரும் கண்ணீரே பதில்  சொல்லும்..!

வில்லனாக நடித்திருக்கும் நீல் நிதின் முகேஷ்தான் படத்தில் அடுத்த ஹீரோ என்பது போல நடித்திருக்கிறார். சமந்தா சிரிக்கும்போது கொள்ளை அழகுதான்.. உயரம் குறைவு.. எடை குறைவு.. ஆனால் அழகு கூடுதல் என்கிற நிலையில் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடலாம்தான்.. பாடல் காட்சிகளில் விஜய்க்கு ஈக்குவலாகவே ஆடியிருக்கிறார். ஆனால் வசனங்கள் குறைவுதான்.. கொஞ்சமே ஆனாலும் நிறைவாய் செய்திருக்கிறார்.

‘செல்பி புள்ளை’ பாடலின் இசையும், பாடலும், ஆட்டமும் அவரது ரசிகர்களுக்கு புல்லரிப்பை கொடுத்திருக்கும்..! பின்னணி இசையில் அனிருத்தின் இசை முதன்முதலாக நம்மை ரசிக்க வைத்திருக்கிறது.. ‘கத்தி’ தீம் மியூஸிக்கும் சூப்பர்.. ஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகளில் மட்டும் கலர் கலராக காட்டி கண்ணைக் கட்டியிருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சிகள்.. சண்டை காட்சிகள்.. பாடல் காட்சிகளில் கேமிராமேனின் பங்களிப்பு நிறைய..! பாராட்டுக்கள் ஸார்..! 

முதலில் இது போன்ற தேசிய பிரச்சினைகளை விஜய் போன்ற மாஸ் ஹீரோக்களை வைத்து எடுக்கவே கூடாது. எடுத்தால் இப்படித்தான் இடையிடையே டூயட்டுகள், கன்றாவி காமெடிகள்.. அடிதடிகள்.. அனல் பறக்கும் சண்டை காட்சிகள்.. பஞ்ச் வசனங்களை வைத்து படத்தின் தன்மையை நாமே மாற்றிவிட வேண்டியிருக்கும்..! இதைத்தான் இயக்குநர் முருகதாஸ் இதில் செய்திருக்கிறார்.

சிறந்த திரைப்படத்திற்கான பிரிவில் இந்தாண்டுக்கான தேசிய விருதினை பெறும் தகுதியுள்ள கதை இது. ஆனால் விஜய் போன்ற பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகருக்கான கதையாக இதனை மாற்றியதால் அந்தப் பெருமையை படம் இழந்துவிட்டது என்பதுதான் வருத்தமான செய்தி..! இந்தப் படம் அதிக நாள் ஓடினால் சிறந்த ஜனரஞ்சமான திரைப்படம் என்ற பிரிவில் விருது பெற வாய்ப்புண்டு..!

ஏதோவொரு கமர்ஷியல் படத்தில் நடித்தோம் என்றில்லாமல் நாட்டுக்குத் தேவையான ஒரு மெஸேஜை தாங்கிய ஒரு படத்தில் நடித்திருக்கிறோம் என்பதில் நடிகர் விஜய் நிச்சயம் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்..!

படத்தில் கார்பரேட் நிறுவனங்களை புரட்டியெடுத்திருக்கும் இயக்குநர் முருகதாஸ், இந்தப் படத்தைத் தயாரித்திருப்பதே ஒரு மல்டி நேஷனல் கார்பரேட் நிறுவனம்தான் என்பதை எப்படி மறந்தார்..? 

பலவித சர்ச்சைகளுடன் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான லைகா நிறுவனமே, ஈழத்தில் பல லட்சம் மக்களை கொலை செய்த ஒரு கொடுமையான போருக்கு இப்போதுவரையிலும் வக்காலத்து வாங்குகிறது; துணை நின்றது; நிற்கிறது என்கிற உண்மையை உணர்ந்தும், இந்த நிறுவனத்தை கடைசிவரையிலும் விட்டுக் கொடுக்காமல் படத்தை இயக்கி, வெளியிட உதவியிருக்கும் இயக்குநர் முருகதாஸ் இந்தப் படத்தில் தான் சொல்லியிருக்கும் கருத்துரிமை ‘இது நான் பின்பற்றுவதற்காக இல்லை’ என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்..!  

அதேபோல், நீராதாரத்தைத் திருடி விவசாயத்தை அடியோடு அழிக்க முன் வந்த அந்த நிறுவனத்தை போலவே, இந்தக் ‘கத்தி’ படமும் ஒரு ஊரில் இருக்கும் அனைத்து தியேட்டர்களையும் பிடித்துக் கொண்டு, இந்த வருடம் தயாரிக்கப்பட்டு இன்னமும் வெளியாகாமல் இருக்கும் சின்ன பட்ஜெட் படங்களுக்கு வசூல் கிடைக்கக் கூடிய இந்தத் தீபாவளி பண்டிகை நாளில் தியேட்டர்கள் கிடைக்காமல் செய்ததை இயக்குநர் முருகதாஸ் உணர்வாரா..? சின்ன பட்ஜெட், மீடியம் பட்ஜெட் படங்களை நசுக்கி வரும் இந்த பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரிக்கும் சினிமா கார்பரேட்டுகளை என்ன செய்வது என்று அடுத்தப் படத்தில் இயக்குநர் முருகதாஸ் நமக்குச் சொல்வார் என்று நம்புவோமாக..!

மற்றபடி படத்தைப் பொறுத்தவரையிலும் இந்தக் ‘கத்தி’ பளபளப்பானதுதான்..!

8 comments:

Sriram Easwar said...

yow ungalukelam ena padam eduthalum kora than pa soluvinga . Poi arambam Mangatha anjann rajapaati nu parunga . Dont review any movies herafter .

Ramji said...

நல்லதொரு விமர்சனம். நன்றி!

www.tamilviduthy.blogspot.in said...

Ok nice review but cocacola vilamparathula nadichu kodi kodiya samparicha VIJAY ithai purunchikitta rompa santhosam.
vivasayam panna mudiyama thavikkura vivasayikalukku etho oru vakaiyile VIJAYum karama irukkaru inime antha mari vilamparathulellam nadikka rompa rompa santhosam

www.tamilviduthy.blogspot.in said...

Ok nice review but cocacola vilamparathula nadichu kodi kodiya samparicha VIJAY ithai purunchikitta rompa santhosam.
vivasayam panna mudiyama thavikkura vivasayikalukku etho oru vakaiyile VIJAYum karama irukkaru inime antha mari vilamparathulellam nadikka rompa rompa santhosam

Anonymous said...

http://vetrumurasu.blogspot.com

ராமுடு said...

Its good to know that AR Murugadoss talked about 'stealing water'... Can he take a movie with a concept of 'Stealing somebody's story'.. Its hard to digest & understand the pain of Mr.Gopi who is the real hero for the story..

k.rahman said...

//Its good to know that AR Murugadoss talked about 'stealing water'... Can he take a movie with a concept of 'Stealing somebody's story'.. Its hard to digest & understand the pain of Mr.Gopi who is the real hero for the story..//

repeat

எனது அகப்புற காட்சிகள் எழுத்து said...

ஐயா நிலை மாறி நீராதாரம் காக்க பட அரசு ஆவண சே.குவேரா மற்றும் பிடல் காஸ்ட்ரோ போன்று ஏதாவது தேச நலன் வேண்டி செய்யாதா...?
Jai Hind.
நன்றி


Facebook/தேசியநதிநீர் இணைப்பு திட்டம்