03-10-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
விளையாட்டிலும் ஜாதி அரசியல் கலந்திருக்கிறது என்பதை வழக்கமான காதல் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் சுந்திரன்.
‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்படத்தில் கபடி விளையாட்டை எந்த அளவுக்கு முன் வைத்தாரோ அதே அளவுக்கு இதில் கிரிக்கெட்டையும் முன் வைத்திருக்கிறார். ஆனால் வேறு கோணத்தில்..!
ஹீரோ ஜீவாவுக்கு சிறுவயதில் இருந்து கிரிக்கெட்டுதான் உயிர். இவரது தந்தை பஸ் டிரைவர். தாய் இறந்துவிட்டார். பக்கத்து வீட்டில் வசித்து வரும் சார்லியின் வீட்டிலேயே அவர்களது மகன்களில் ஒருவராகவே இவரும் வளர்ந்து வருகிறார்.
பள்ளி கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து விளையாடும் ஜீவா படிப்பில் கோட்டை விடுகிறார். அவரது அப்பா கண்டிக்கிறார். ஆனால் வளர்ப்பு அப்பா சார்லியோ கிரிக்கெட்டில் ஜீவாவின் வளர்ச்சி கண்டு ஆச்சரியப்பட்டு பேசுகிறார். உற்சாகப்படுத்துகிறார்.
ரீஜினல் டோர்ணமெண்ட்டில் ஜீவாவின் உதவியால் அவரது பள்ளி சாம்பியனாகிறது. ஜீவாவின் விளையாட்டை பார்க்கும் பீனிக்ஸ் கிரிக்கெட் கிளப்பின் கோட்ச் தங்களது அணிக்காக வந்து விளையாடும்படி கேட்கிறார். அவரது அப்பா இதனை மறுத்து படிப்பில் கவனம் செலுத்தும்படி கண்டிக்கிறார்.
இந்த நேரத்தில் ஜீவாவின் வாழ்க்கையில் காதலும் கை கூடுகிறது.. பக்கத்து வீட்டில் புதிதாக குடிவரும் ஜெனி ஜீவாவை மிகவும் டிஸ்டர்ப் செய்ய.. பள்ளி காலத்துக்கே உரித்தான சேட்டைகளுடன் ஜெனியை காதலிக்கத் துவங்குகிறான் ஜீவா. இந்தக் காதல் வீட்டுக்குத் தெரிய வர.. அந்தத் தெருவே அதகளமாகிறது.
ஜெனி குடும்பத்தினர் வீட்டை காலி செய்துவிட்டு கிளம்ப.. ஜெனி நினைவிலேயே மூழ்குகிறான் ஜீவா. குடிக்கவும் செய்ய.. அவனது அப்பா வருத்தப்படுகிறார். எதைச் செய்தால் இவன் ஜெனி நினைவில் இருந்து திரும்புவான் என்று யோசிக்கிறார். கிரிக்கெட்டே என்று சார்லி சொல்ல.. அதே பீனிக்ஸ் கிளப்பில் சேர்க்கப்படுகிறான் ஜீவா.
அதே கிளப்பில் விளையாடி வரும் சூரி, ரஞ்சித்துடன் பிரெண்ட்ஸாகிறான். அந்த கிரிக்கெட் வாழ்க்கை அவனுக்கு மாநில அணியில் இடம் பிடித்துக் கொடுக்கிறது. ரஞ்சி டிராபியில் விளையாட தேர்வானாலும் சப்ஸ்டியூட்டாகவே இருக்கிறான் ஜீவா. அடுத்த மேட்ச்சில் இடம் கிடைக்க அதில் தனது அதிரடி ஆட்டத்தை ஆடி காட்டுகிறான் ஜீவா.
இந்த நிலைமையில் ஜெனியும் சென்னையில் ஒரு கல்லூரியில் படிப்பதை அறிந்து அவளை பார்க்க வருகிறான். மீண்டும் இருவரும் சந்திக்கிறார்கள். பேசுகிறார்கள்.. பழகுகிறார்கள்..
இதற்கடுத்த வருடம் ஜீவாவும், ரஞ்சித்தும் ஜாதி அரசியல் காரணமாக ரஞ்சி டிராபிக்காக தேர்வாகாமல் போகிறார்கள். இதனால் மனம் நொந்து போன ரஞ்சித் தற்கொலை செய்து கொள்ள.. ஜீவா அதிர்ந்து போகிறான்..
இந்த நேரத்தில் ஜெனி-ஜீவா காதலை தெரிந்து கொண்ட ஜெனியின் அப்பா, ஜீவா கிரிக்கெட்டை விட்டுவிட்டு வந்தால் தான் கல்யாணம் செய்து வைப்பதாகக் கூறுகிறார். காதலா, கிரிக்கெட்டா என்ற இக்கட்டு நிலையில் நிற்கிறான் ஜீவா. கடைசியில் என்ன முடிவெடுக்கிறான் என்பதுதான் மீதிக் கதை..!
ஜீவாவாக விஷ்ணு விஷால் நடித்திருக்கிறார். பள்ளி மாணவன் மேக்கப்புதான் ஒத்துவரவில்லை என்றாலும், படம் முழுக்கவே அமைதியாக தனது நடிப்பை ஆழமாக பதிவு செய்திருக்கிறார். இயக்கம் மிகச் சிறப்பாக இருந்தாலே போதும்.. அனைத்துமே நன்றாக வரும் என்பார்கள். அதுபோலத்தான் சுசீந்திரனால் தப்பித்தார் விஷ்ணு.
விஷ்ணுவுக்கு நன்றாக கிரிக்கெட் விளையாட வரும் என்பதால் அவரையே நடிக்க வைத்த்தாகச் சொல்கிறார் இயக்குநர் சுசீந்திரன். அதுவும் சரியானதுதான்.. கிரிக்கெட் விளையாட்டு காட்சிகளில் பந்து மிஸ் ஆகாமல் அடித்து விரட்டுகிறார்.. மிகச் சிறப்பான எடிட்டிங்கை செய்திருக்கிறார்கள் இந்தக் காட்சிகளில்.. வெல்டன் எடிட்டர் ஸார்..!
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் தமிழகத்து வாலிபர்களை சுத்தவிட்ட ஸ்ரீதிவ்யா, இதில் ஜெனியாக வருகிறார். முதல் படம் வில்லேஜ் சப்ஜெக்ட். இதில் சிட்டி என்பதோடு கூடுதலாக கலாச்சார ஷாக்காக ஒரு பெக் அடிக்கும் பொண்ணாகவும் வருகிறார்.. அந்தக் காட்சிகள் ரசனையோடு அமைக்கப்பட்டிருந்தாலும் வீட்டில் இருந்து கிளாஸ்.. பாட்டில்களை கொண்டு வந்து கொடுத்து பிளஸ் டூ பையன்களையும் குடிக்க வைப்பது போல காட்சிகளை வைத்திருப்பது அநியாயம்.. சுசீந்திரன் ஸார் இது ரொம்பவே அதிகம். டூ மச்சான கற்பனை..!
இதைவிடவும் கொடுமையான கற்பனை.. ஹீரோயின் முதலில் அண்ணா என்று சொல்லி விஷ்ணுவிடம் பழகுகிறார்.. பின்பு காதல் வந்தவுடன் அண்ணாவை மறந்துவிடுகிறாராம். இனிமேல் சொல்ல மாட்டேன் என்றுகூட சொல்கிறார். இது என்ன வகையான யூத்துகளின் பேச்சோ..? பேட் டேஸ்ட்..
ஸ்ரீதிவ்யா முதல் படத்தைவிடவும் இதில் கொஞ்சம் கூடுதல் அழகுடனும், நடிப்புடனும் வந்திருக்கிறார். கையில் 4 படங்கள் இருக்கிறது. அந்தப் படங்களும் இது போலவே பேசப்பட்டும், வெற்றியடைந்தும் போனால்.. ஸ்ரீதிவ்யா ஒரு ரவுண்டு கோடம்பாக்கத்தில் வலம் வருவார் என்று எதிர்பார்க்கலாம்..!
ரஞ்சித்தாக நடித்த லஷ்மண் நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார். அன்னக்கொடி படத்தில் ஹீரோவாக நடித்தவர்.. நாமத்தை நெற்றியில் பூசிக் கொண்டு வீர்ர்களுக்கு நாமம் போட்டுவிடும் கிரிக்கெட் போர்டு தலைவரை பார்த்து கேட்கும் அவரது பட்டாசு கேள்விகளுக்கு தியேட்டரில் கைதட்டல்கள் நிச்சயம்..!
சூரியின் உதவியால் சில இடங்களில் சிரிக்க முடிந்தது.. “ஒரு நல்ல டீமுக்கு அழகு.. கடைசி பேட்ஸ்மேன்களை கிரவுண்ட்டுக்குள்ள கூப்பிடாமலேயே இருக்கிறதுதான்.. நீங்கள்லாம் நல்லா இருங்கடா..” என்று சபித்துவிட்டு கிரவுண்ட்டுக்குள் இறங்கும்போது கலகலக்கிறது தியேட்டர்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு சார்லிக்கு ஒரு அழுத்தமான கதாபாத்திரம். சிம்ப்ளி சூப்பர்.. பேட் வாங்க காசு கொடுத்த சார்லியிடம் காசை திருப்பிக் கொடுத்துவிட்டு வரும்படி அப்பா மாரிமுத்து சொல்ல.. அதை சார்லியிடம் கொடுத்து.. அதை அவர் வாங்க மறுத்து.. பட்டு, பட்டென்று மாறும் அந்தக் காட்சிகளில் நிறைவாக சார்லியின் நட்புணர்வையும், பாசத்தையும் ரசிக்க முடிகிறது..
விஷ்ணுவின் அப்பாவாக வரும் மாரிமுத்து.. சார்லியிடம் வந்து சண்டை போட்டு போனவர்.. போன வேகத்தில் திரும்பி வந்து மன்னிப்பு கேட்டு அழுவதில் ஒரிஜினல் அப்பாவாகிவிட்டார். டச்சிங்கான காட்சி அது.. தனது மகன் விளையாடுவதை பார்க்க வந்து அவன் தண்ணீர் கொண்டு போய் கொடுப்பதை பார்க்கச் சகிக்காமல் பாதியிலேயே எழுந்து செல்லும் வேகம்.. ஒரு நல்ல அப்பாவை பார்த்திருக்கிறார் ஜீவா..
தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக நடிகராக உருமாறியிருக்கிறார். ஸ்ரீதிவ்யாவின் அப்பாவாக நடித்திருக்கிறார். கோலிவுட்டுக்கு இன்னொரு அப்பா தயார் என்றுதான் சொல்ல வேண்டும்.
மதியின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். கிரிக்கெட் விளையாட்டு காட்சிகளில் கேமிராவும் பரபரப்பாக மைதானத்தில் இறங்கி விளையாடியிருக்கிறது. டி.இமானின் இசையில் ஒரு ரோசா, ஒருத்தி மேல பாடல்கள் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் பொருத்தமில்லாத சிச்சுவேஷனில் இணைக்கப்பட்டிருப்பதால் மனதோடு ஒட்டவில்லை.. பாடல்களே இருக்கக் கூடாது என்கிற உதாரணப் படத்திற்கு இந்தப் படமும் ஒரு சாட்சி.
தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தில் பிராமணர்களின் ஆதிக்கம் அதிகளவில் இருப்பதாக கடந்த சில ஆண்டுகளாகவே செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு ஆதாரமாக தமிழகத்தில் இருந்து தேசிய கிரிக்கெட் அணிக்கும், ரஞ்சி கிரிக்கெட் அணிக்கும் தேர்வான வீர்ர்களின் பட்டியலில் பெரும்பாலோர் பிராமணர்களாகவே இருப்பதை சுட்டிக் காட்டுகின்றனர்.
முன்னாள் தலைவர் ஏ.சி.முத்தையா காலத்திலும் இதேதான் தொடர்ந்தது. இப்போதைய தலைவர் சீனிவாசனின் காலத்திலும் இதே கதைதான்.. பிற ஜாதியினர் நன்கு விளையாடினாலும் அதை நிரூபிப்பதற்கான கால அவகாசம் அவர்களுக்குக் கொடுக்கப்படாமலேயே திறமையில்லை என்று சொல்லி பல வீரர்கள் திருப்பியனுப்பட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் இதுவரையில் எந்த சினிமாவிலும் ஒருவரி கூட உச்சரிக்கப்பட்டதில்லை. ஆனால் முதல் முறையாக.. தைரியமாக இந்தப் படத்தில் குறிப்பிட்டுச் சொன்னதற்காக இயக்குநர் சுசீந்திரனுக்கு நமது வாழ்த்துகள்..!
ஆனால் சொல்ல வந்ததை காதல் கலக்காமல் சொல்லியிருந்தால் இன்னமும் காட்சிகள் கூடுதலாக இந்த கிரிக்கெட் சீஸனுக்குக் கிடைத்திருக்கும்.. தமிழ்ச் சினிமாவை பிடித்த மிகப் பெரிய சாபக்கேடே காதல், பாடல்கள் இல்லாமல் படமெடுக்க இயக்குநர்கள் தயங்குவதுதான். இது போன்ற படங்களுக்கு இது இரண்டுமே தேவையில்லாததுதான்..!
இப்போது பிராமணர்கள் அல்லாதவர்கள் வெறும் கிரிக்கெட் ரசிகர்களாகவும், தெருவோர கிரிக்கெட் வீர்ர்களாகவும் மட்டுமே இருக்கிறார்கள். மிகப் பெரிய ஊர்களில் கிரிக்கெட் கிளப் இருக்கிறது என்கிற விஷயம்கூட அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழ்நாடு கிரிக்கெட் டீமில் இடம் பெற என்ன செய்ய வேண்டும்..? இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற தகவல்கள்கூட அவர்களுக்குத் தெரியாது.. கிரிக்கெட் சோறு போடாது என்பதை பல தாய், தகப்பன்மார்கள் வீட்டில் சொல்லி சொல்லியே திட்டி வருவதால் முக்கால்வாசி இளைஞர்கள் டிவி முன் அமரும் ரசிகர்களாகவே மாறிவிட்டார்கள்.
இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் வசனங்கள் மூலமாக கிரிக்கெட் விளையாட்டில் இருக்கும் ஜாதி பாசத்தை மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். இதற்காகவே இவர் என்றென்றும் பேசப்படுவார்..!
ஜீவா – பரபரப்பாக முடியாமல் சாதாரணமாக முடிந்து போன டெஸ்ட் மேட்ச்..!
|
Tweet |
1 comments:
What you said about songs and love portion is correct.this movie doesnt require songs and love portion....he could have shown some more details about how to get into Ranji and Indian cricket team.it is not a complete sports movie....
Post a Comment