பூஜை சினிமா விமர்சனம்

24-10-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
வரும் காலத்தில் டிஜிட்டல் கேமிரா இல்லாமல் செல்போனிலேயே படம் எடுக்கும் காலம் வந்தாலும் வரலாம். ஆனால் ஹரி தனது படத்தில் அரிவாள், கத்தி இல்லாமல் படமெடுக்க மாட்டார் என்று பதினெட்டுப்பட்டி கருப்பசாமி மீது சத்தியம் செய்து சொல்லலாம்..!

வழக்கமான ஹரி படம்தான்.. ஒரு பாடல்.. தொடர்ந்து காமெடி.. சண்டை.. ரொமான்ஸ்.. பாடல்.. காமெடி.. சண்டை.. ரொமான்ஸ்.. என்று ஒரு வட்டமாகவே படம் செல்கிறது..! யார் மாறினாலும் தான் மாறுவதற்குத் தயாராக இல்லை என்று மீண்டுமொரு முறை சொல்லியிருக்கிறார் ஹரி.
கோயம்புத்தூர் மார்க்கெட்டில் வட்டிக்கு பணம் கொடுக்கும் பிஸினஸை செய்து வருகிறார் ஹரி. இவருடைய துணைக்கு சூரியும் மணிகண்டனும். அதே ஊரில் இருக்கும் மிகப் பெரிய பைனான்ஸ் கம்பெனியான அன்னம் பைனான்ஸின் உரிமையாளர் அன்னதாண்டவம்.. வெளியில்தான் பைனான்ஸ் கம்பெனி. உள்ளுக்குள் ஒரு தாதா. அடியாட்களை வைத்து கமுக்கமாக ஆளை போட்டுத் தள்ளும் தொழிலைச் செய்து வருகிறார்.
மால் ஒன்றில் ஹீரோயின் ஸ்ருதிஹாசனை பார்க்கிறார் விஷால். பார்த்தவுடன் காதல் தொற்றிக் கொள்கிறது.. வழக்கம்போல மோதலில் துவக்குகிறார்கள்.. பின்பு உண்மை தெரிந்து நட்பாகிறார்கள்.. ‘கிராவிட்டி’ சினிமா பார்க்கச் செல்கிறார்கள் இருவரும். அதே நேரம் அதே தியேட்டரில் படம் பார்க்கவரும் அடிஷனல் எஸ்.பி.யான சத்யராஜை போட்டுத் தள்ள ஆட்களை அனுப்பியிருக்கிறான் அன்னதாண்டவம்.
இது தியேட்டருக்கு வெளியில் இருக்கும் ஸ்ருதிஹாசனுக்கும் தெரிய வர, அவரது அழைப்பின் பேரில் தியேட்டரைவிட்டு வெளியே வரும் விஷால், சத்யராஜை தாக்க ரவுடிகள் வருவதை பார்த்து அவர்களை அடித்து உழைத்து சத்யராஜையும், அவர் மனைவியையும் காப்பாற்றுகிறார். ஆனால் சத்யராஜின் கண்ணில் படாமல் எஸ்கேப்பாகிறார்.
வில்லன் அன்னதாண்டவம் யார் அந்த ஹீரோ என்று ஒரு பக்கம் தேடுகிறார். தன்னைக் காப்பாற்றிய வல்லவன் யார் என்று சத்யராஜும் ஒரு பக்கம் தேடுகிறார். இந்த நேரத்தில் தன்னுடைய காதலை ஸ்ருதிஹாசனிடம் சொல்கிறார் விஷால். “உன் ஸ்டேட்டஸ் என்ன.. என் ஸ்டேட்டஸ் என்ன..?” என்று ஸ்ருதி கேட்டுவிட விஷால் மூட் அவுட்.
இந்த நேரத்தில் விஷால் யாரென்று சூரியே சொல்கிறார். ஊரிலேயே மிகப் பெரிய நிறுவனமான கோவை குரூப்ஸின் மூத்தவரின் மகன் விஷால். வீட்டில் அத்தை மகளின் திருமணத்திற்கு முதல் நாள் ஒரு சம்பவம் நடந்துவிட.. அதில் தெரியாத்தனமாக மாட்டிக் கொண்ட விஷாலை அவரது அம்மா ராதிகா அடித்து வீட்டை விட்டு வெளியேற்றிவிடுகிறார். அதனால் இங்கே கோவை மார்க்கெட்டுக்கு வந்து பைனான்ஸ் பிஸினஸ் செய்கிறாராம்..!
இப்போது கட் செய்தால் விஷாலின் குல தெய்வக் கோவிலுக்காக விஷால் குடும்பத்தினர் கொடுத்திருந்த கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வில்லன் அன்னதாண்டவம் ஆட்டைய போட பார்க்கிறார். இதனைத் தடுத்து முறைப்படி அந்த நிலத்தை கோவிலுக்கே எழுதி வைக்கிறார்கள் விஷாலின் குடும்பத்தினர்.
இந்த நேரத்தில் விஷாலை தேடி வரும் ஸ்ருதிக்கு விஷால் யாரென்பது தெரிய வர உள்ளம் உருகுகிறது.. காதல் தானாய் பிறக்கிறது.. அங்கே கிராமத்தில் கோவிலின் புதிய அறங்காவலாக பதவியேற்க வந்த சித்தப்பா ஜெயபிரகாஷை ஆள் வைத்து அடித்து அவமானப்படுத்துகிறார் வில்லன் அன்னதாண்டவம்.
இதனால் கோபப்படும் ராதிகா தனது மகன் விஷாலை போனில் அழைத்து “சித்தப்பனை அடிச்சவனை கையை ஒடிச்சிட்டு வாடா…” என்கிறார். மகனும் சொன்னதை செய்துவிட்டு வருகிறார். ஆனால் போன வேகத்தில் மெயின் வில்லன் அன்னதாண்டவத்தையும் புரட்டியெடுத்துவிட்டு வந்திருக்கிறார்.
வில்லனும் கொதிக்க.. விஷால் அவனைவிட கொதிக்கிறார். ஊரில் வைத்து வெளுத்தது போதாதென்று பொள்ளாச்சியில் நடுரோட்டில் வைத்தும் வில்லனை அடித்து உதைக்கிறார். இதை பேருந்தில் பயணம் செய்யும் ஸ்ருதி வீடியோ எடுத்து தோழிக்கு அனுப்ப… அவள் “அதை யூடியூபில் போட்டுவிட லட்சம் பேர் பார்த்து மகிழ்கிறார்கள். தன் மானம், மரியாதை போச்சே என்று வெறியாகிறார் வில்லன்.
இனி விஷாலின் குடும்பத்தை அழிப்பதுதான் தனது முதல் வேலை என்கிறார். நான் இருக்குறவரைக்கும் அது நடக்காதுடா என்கிறார் விஷால். ஏதாச்சும் நடந்துச்சா..? விஷால் என்ன செஞ்சாருன்றதுதான் இடைவேளைக்கு பின்னான சவால் விட்ட காட்சிகள்.. இதைத் தெரிஞ்சுக்கணும்னா தியேட்டருக்கு போயே பார்த்துக்குங்களேன்..!
பொள்ளாச்சி, அவினாசி, கோயம்புத்தூர், கிராமம் என்று நான்கு புறமும் சர்.. சர்ரென்று பறக்கின்றன கார்களும், ஜீப்புகளும்.. விஷாலின் கட்டுமஸ்தான உடம்பினால் அடிதடி காட்சிகளில் லாஜிக்கையெல்லாம் பார்க்கவே தேவையில்லை என்றாகிவிட்டது.. படம் மொத்தமுமே பரபர.. சரசரவென ஓடுவதால் எதையும் உள்ளே யோசிக்கவும் நேரமில்லை. ஒரு லாஜிக் மறைவதற்குள் அடுத்த லாஜிக் வந்துவிடுகிறதா.. அதான் எல்லாமே மறந்து போச்சுன்னுதான் சொல்லணும்..!
விஷால் பறந்து பறந்து அடிக்கிறார்.. ஸ்ருதிஹாசனை கொஞ்சுகிறார். கெஞ்சுகிறார்.. சூரியை மிரட்டுகிறார்.. வில்லனிடம் கோபப்படுகிறார். சத்யராஜிடம் சோகப்படுகிறார். அம்மா ராதிகாவை பார்த்தவுடன் கண்ணீர் விடுகிறார். அவர் என்ன செய்தாலும் நமக்கு எதுவும் ஆகவில்லை என்பதுதான் உண்மை..!
ஆட்களை பறக்க வைத்தது போதாதென்று கார்களையும், ஜீப்புகளையுமே பறக்க விட்டிருக்கிறார் இயக்குநர். சண்டை காட்சிகளுக்குத்தான் பட்ஜெட் கூடியிருக்குமென்று நினைக்கிறோம்.
ஸ்ருதிஹாசனின் உடைகள் சிக்கென்று இருக்கின்றன. அழகு கூடிக் கொண்டே செல்கிறது.. ‘வாசு’, ‘வாசு’ என்று அவர் அழைக்கையில் காதுக்கு இனிமையாகத்தான் இருக்கிறது. ஆனால் அந்தக் குரல்..? லட்சுமியின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் இதே குரல்தான்.. ஒரு புல் பாட்டிலை ராவா அடிச்சிட்டு பேசுற மாதிரியிருக்கும் இந்தக் குரல் அந்த அழகான முகத்திற்கு கொஞ்சமும் தோதாக இல்லை. ஸ்ருதி கொஞ்சம் கோபித்துக் கொள்ளாமல் அடுத்த படத்தில் இருந்து இரவல் குரல் வைத்துக் கொள்வது நலம்..!
டபுள் மீனிங்கெல்லாம் கேட்டு ரொம்ப நாளாச்சுன்னு ஒரேயொரு டயலாக்கை அதுவும் அம்மா, அப்பாவிடம் ஸ்ருதி பேசுவதுபோல காட்டியிருக்கிறார்கள். நல்ல முன்னேற்றம்..!
நடிகர் சங்க தேர்தலை ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே நடத்திவிடலாம் என்று நினைக்குமளவுக்கு நட்சத்திரப் பட்டாளத்தை குவித்திருக்கிறார் ஹரி. அத்தனை பேருக்கும் ஒரு அளவுக்கான காட்சிகளை கொடுத்திருக்கிறார். ரேணுகா அந்த ஒரேயொரு காட்சியிலேயே ஸ்கோர் செய்துவிட்டார். சித்தாரா, கவுசல்யா என்று ஓல்டு இஸ் கோல்டு பார்ட்டிகள்.. ஆனால் ஸ்கோர் ஏதும் இல்லை..
ஆனாலும் வன்முறையை குடும்பமே தூண்டிவிடும் வசனங்களை இந்தப் படத்துலதான்யா அதிகமாக கேட்டிருக்கோம்.. குடும்பத்தில் ஒருத்தர் பாக்கியில்லாமல் அனைத்து பெண்களும் “வெட்டிட்டு வா.. குத்திட்டு வா…” என்கிறார்கள். என்ன கொடுமை சரவணா இது..?
இன்னொரு பக்கம் ஆண்ட்ரியா.. ஒரு பாடலுக்கு மட்டும் ஆடியிருக்கிறார். ஆடுகின்ற 4 நிமிடங்களுமே தன்னைத் தவிர வேறு யாரையும் பார்க்கக் கூடாது என்பதற்காகவே ‘ஆட்டம் காட்டியிருக்கும்’ ஆண்ட்ரியாவுக்கு ஒரு ஷொட்டு..! ஆனால் பாட்டுதான் ஒரே மெட்டு..!
இன்றைய தமிழ்ச் சினிமாவில் கவுண்டமணி, செந்தில் ஜோடிக்கு இருக்கும் டிமாண்டை பயன்படுத்தி இந்தப் படத்தில் ஒரு புதிய ஜோடியை அறிமுகப்படுத்தியிருக்கிறார் ஹரி. சூரி-பிளாக் பாண்டி காமெடி ரசிக்கும்படிதான் இருக்கிறது. கூடவே  இதையே தொடர்ந்தால் அவர்களுக்கும் நல்லது. தமிழ்ச் சினிமாவுக்கும் நல்லதுதான்..!
சத்யராஜ், ஐஸ்வர்யா ஜோடிக்கு அதிக வேலையில்லை. ஆனால் சத்யராஜின் அந்த  போலீஸ் டிரெஸ்ஸும், ஆக்சனும்.. அன்னதாண்டவத்திடம் வந்து எச்சரிக்கை செய்யும் காட்சியும் படத்திற்கு விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது..!
நினைத்த நேரத்திற்கெல்லாம் பாடல்கள்.. வெளிநாட்டு லொகேஷன்கள்.. கேட்டு கேட்டு சலித்த மெட்டுக்களாக இருந்தாலும் கேட்க வைத்த வரிகள்.. தலைவலி வராத சண்டை காட்சிகள்.. வேகமான இயக்கத்திறு ஈடு கொடுத்திருக்கும் பிரியனின் கேமிரா.. கொஞ்சம் சஸ்பென்ஸ் கலந்த பீகார் மாநில காட்சிகள்.. லாஜிக் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவுக்கு இருக்கும் பல காட்சிகள்.. இதையெல்லாம் தாண்டித்தான் இப்படியொரு விறுவிறு சுறுசுறு படத்தை வழங்கியிருக்கிறார் இயக்குநர் ஹரி.
விஷாலுக்கு இதற்கு முந்தைய இரண்டு படங்களும் வெற்றி பெற்றாலும் பெயர் வாங்கிக் கொடுத்த படங்கள்.. ‘பாண்டிய நாடு’, ‘நான் சிகப்பு மனிதன்’ படங்களில் விஷால் தனித்து தெரிந்தது அதன் கதை மற்றும் சிறந்த இயக்கத்தினால்தான்.
கமர்ஷியல் படங்கள் தேவைதான். ஆனால் மேற்சொன்ன இரண்டு படங்களை போன்ற அழுத்தமான மனதைத் தொடும் கதையுடனும், சிறப்பான இயக்கத்துடன் வந்தால்தான் அந்த கமர்ஷியலுக்கே ஒரு மரியாதை..!
‘பூஜை’ இன்னமும் சரியான ஒரு கதையுடன் வந்திருந்தால் ‘பாதபூஜை’யே செய்திருக்கலாம்..!

1 comments:

Anonymous said...

http://vetrumurasu.blogspot.com/