யான் - சினிமா விமர்சனம்

08-10-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஒளிப்பதிவாளர்கள் பலருக்குள்ளும் ஒரு தீராத ஆசையிருக்கும். அதுதான் இயக்குநராவது. இயக்குநர்கள் தங்களுடைய படைப்பு குறித்து அதிகம் கலந்துரையாடுவது  ஒளிப்பதிவாளர்களுடன்தான்.. அதிகம் சண்டையிட்டுக் கொள்வதும் அவர்களுடன்தான்.. அதனாலேயே இந்த இயக்கத் திறன் மீது அவர்களுக்கு அலாதி பாசம்..
ஏற்கெனவே தங்கர்பச்சான், கே.வி.ஆனந்த் இருவரும் இயக்குநர்களாக ஒரு ரவுண்டு வந்துவிட்டார்கள். இவர்களுக்கு முந்தைய ஜெனரேஷனில் ஒரு டீம் வலம் வந்திருக்கிறது. அது இப்போது நமக்குத் தேவையில்லை..
ரவி கே.சந்திரன் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர்தான்.. ஒத்துக் கொள்ளலாம். இயக்கம் செய்ய ஆசை பிறந்திருக்கிறது.. வரவேற்கத்தக்கதுதான்.. ஆனால் அதற்காக யாரிடமும் கலந்தாலோசிக்காமலேயே ஒரு கதையை தயார் செய்து.. ஒரு முறை யோசித்தவுடன் எது வருகிறதோ அதை அப்படியே பேப்பரில் எழுதி.. அதைத்தான் திரைக்கதை என்று சொல்லி ஷூட்டிங்கிற்கு கிளம்பிவிட்டார் போலும்..!
இந்தக் கதையை ஒரு நாள் இரவில் ஜீவாவுக்கு சொல்லப் போய்.. அவர் அப்படியே இந்தக் கதையைக் கேட்டு முடித்தவுடன் அசந்து போய் அந்த நள்ளிரவில் தயாரிப்பாளரின் அலுவலகத்திற்கு வந்து உட்கார்ந்து பேசி படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டதாக பிரஸ்மீட்டில் ஜீவாவே சொல்லியிருந்தார்.. இந்தக் கதைக்கா ஸார்..?

படிச்சது எம்.பி.ஏ. ஆனால் எந்த வேலைக்கும் போகாமல் மும்பையில் தனது பாட்டி வீட்டில் ஜாலியாக பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார் ஜீவா. ஹீரோயின் துளசி அதே மும்பையில் கார் டிரைவிங் ஸ்கூல் நடத்துகிறார்.
ஒரு ஏடிஎம் அருகே நடக்கும் போலீஸ் என்கவுண்டரில் துளசி சிக்குகிறார். அந்த சம்பவத்தில் இருந்து துளசியை காப்பாற்றுகிறார் ஜீவா. அவர் விட்டுச் செல்லும் விசிட்டிங் கார்டை விரட்டு விரட்டென்று விரட்டிப் பிடித்து அதை அவரிடம் ஒப்படைக்கப் போய் காதலாசி, கசிந்துருகி கடைசியில் தன்னையே துளசியிடம் ஒப்படைக்க சித்தமாகிறார் ஜீவா.
இந்த ஒன் சைடு லவ்வையும் ஒரு நாள் சொல்லியாகணுமே..? அப்பா நாசருடன் துளசி வரும்போது, ‘ஐ லவ் யூ’ சொல்லிவிடுகிறார் ஜீவா. கோபமான அப்பா நாசர், ஜீவாவை வரவழைத்து பேசுகிறார். அப்போதுதான் தெரிகிறது ஜீவா ஒரு தண்டச் சோறு என்று.! நல்லா நாலு வார்த்தைல நறுக்குன்னு கேட்டு ஜீவாவை திருப்பியனுப்பி வைக்கிறார் நாசர்.
இதனால் ரோஷப்படும் ஜீவா அப்போதுதான் மறந்து போயிருந்த தனது எம்.பி.ஏ. சர்டிபிகேட்டுக்களை எடுத்துக் கொண்டு வேலை தேடும் படலத்தை ஆரம்பிக்கிறார். அவர் எதிர்பார்க்கும் வேலை கிடைக்கவில்லை.. வேறு என்னதான் செய்வது என்று யோசிக்கும்போது வெளிநாட்டில் வேலை தேடி போனால் என்ன என்ற கேள்வியோடு குறுக்கே வருகிறார் வெங்கட் போஸ்.
அவரது உதவியால் பலுஸிஸ்தான் நாட்டிற்கு வேலைக்காக செல்கிறார். இந்தியாவில் கிடைக்காத வேலையாம்.. அங்கே போய் கால் வைத்தவுடன் போதை மருந்து கடத்தி வந்ததாகச் சொல்லி அந்த நாட்டு போலீஸ் ஜீவாவை கைது செய்கிறது. போதை மருந்து கடத்தலுக்கு அந்த நாட்டு சட்டப்படி மரண தண்டனையாம். அதிலும் தலையை வெட்டித்தான் எடுப்பார்களாம்.
என்னடா இது சோதனையென்றால் திரைக்கதை ஆசிரியர் தனக்கு வசதியாக ஒரு கேரக்டரை அந்த சிறையிலேயே சிற்பித்திருக்கிறார். அவர்தான் அதே ஜெயிலில் இருக்கும் சிறைக் கைதி தம்பி ராமையா. ஜீவா சிறையில் தம்பி ராமையாவை சந்தித்து தனது சோகக் கதையைச் சொல்கிறார்.
இதைக் கேட்டு வருத்தப்படும் தம்பி ராமையா தன்னுடைய சிறை தண்டனை முடிந்து நாடு திரும்பியவுடன் மும்பை சென்று ஜீவா குடும்பத்தாரிடம் நடந்ததைச் சொல்கிறார். இதைக் கேட்டு காதலி துளசி துடித்துப் போகிறார். “என்னை கல்யாணம் செய்யணும்னுதானே வேலை தேடி அங்க போனார்.. நானே போய் என் காதலரை மீட்டு வருகிறேன்”னு சொல்லி இவரும் பலுசிஸ்தானுக்கு விமானம் ஏறுகிறார்.
துளசி அங்கே போய் எப்படி காதலரை காப்பாற்றுகிறார் என்பதுதான் மிச்சம் மீதிக் கதை..!
இந்தப் படத்தின் திரைக்கதையை கேண்டீனில் வேலை பார்க்கும் சின்னப் பையன்கூட சொல்லிவிடுவான். அடுத்த காட்சி இதுவாகத்தான் இருக்குமென்று.. அப்படியொரு டெம்ப்ளேட் ஸ்டோரி, ஸ்கிரீன்பிளே.. இதனை எப்படி ஜீவா ஒத்துக் கொண்டார் என்றே ஆச்சரியமாக இருக்கிறது..!
அதிலும் டன் கணக்கில் லாஜிக் ஓட்டைகளை வைத்துக் கொண்டு என்னதான் கதை எழுதினார்களோ தெரியவில்லை..? ஜீவா பயன்படுத்தும் ஐ போனின் விலையே எப்படியும் ஐம்பதாயிரம் ரூபாய் இருக்கும். அவர் இருக்கும் வீடோ அரண்மனை மாதிரியிருக்கு.. அப்புறம் எதுக்கு வேலைக்கு போகணும்..? அவருடைய இப்போதைய பேக்கிரவுண்ட் என்னன்னுகூட சொல்லலை.
இதுவே இப்படின்னா.. இடைவேளைக்கு பின்னாடி ஜெயில்ல இருந்து தப்பிக்கிறார் பாருங்க ஒரு காட்சில.. அதி அசூரத்தனமான திரைக்கதை.. அவ்ளோ பெரிய ஜெயில்ல சிறைக்கதவை பூட்டலையாம்பா.. இவர் தப்பிச்சு ஓடும்போது யாருமே பாக்கலையாம்பா.. முடியல..!
படத்தில் குறிப்பிடத்தக்க ஒரேயொரு விஷயம். போட்டோகிராபி.. ஒளிப்பதிவில் பின்னியிருக்கிறார் மனுஷ் நந்தன். தமிழில் ஒளிப்பதிவாளராக இவர் பணியாற்றியிருக்கும் 2-வது படம் இது. தற்போது ஷாரூக்கான், தீபிகா படுகோனே நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘ஹேப்பி நியூ இயர்’ படத்திற்கும் இவர்தான் ஒளிப்பதிவு. ரவி.கே.சந்திரனின் சீடரான இவர் தன் குருவின் பெயரைக் காப்பாற்றியிருக்கிறார். பாடல் காட்சிகளிலும், வெளிநாட்டு லொகேஷன்களிலும் கண்களை கவரும்விதத்தில் படமாக்கியிருக்கிறார்.
ஜீவா முற்பாதியில் துளசியை விரட்டி விரட்டி காதலிப்பதில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. ஆனால் ஜீவா மட்டும் அழகாக இருக்கிறார். கொஞ்சம் ரசிக்கவும் முடிகிறது. இடைவேளைக்கு பின்பு ஆக்சன் காட்சிகளில் கூடுதல் சிரத்தையெடுத்து நடித்திருப்பது போல தெரிகிறது..! இந்தப் படத்திற்காக ஒரு வருடத்திற்கும் மேலாக உழைத்திருக்கிறார்கள் என்று சொன்னார்கள். அதன் பலன் படத்தில் தெரிகிறது..!
துளசி நாயரை ‘கடல்’ படத்தில் பார்த்தவர் போல தெரியவில்லை. இப்போது கொஞ்சம் மெச்சூரிட்டியாக.. பேரிளம் பெண் போல கவர்ந்திழுக்கிறார்.. அப்படியே கொஞ்சம் நடிப்பைக் காட்டுற மாதிரியும் படங்கள் அமைந்தால் நல்லாத்தான் இருக்கும்.. இன்னிக்கு ரேஞ்ச்சுக்கு துளசி மாதிரியான ‘கட்டுடல்’ வேறெந்த சின்ன வயது நடிகைகளுக்கும் இல்லை.. பாடல் காட்சிகளில் இலை மறைவு காய் மறைவாக காட்டியிருக்கும் கவர்ச்சி, அடுத்த பட வாய்ப்பை எதிர்பார்த்துதானோ என்னவோ..?
நாசரின் அப்பா கேரக்டர்.. அவர் நடித்திருக்க தேவையே இல்லை.. வேறொன்றும் சொல்வதற்கில்லை.. தீவிரவாதி நவாப் ஷா கவனிக்க வைத்திருக்கிறார். தம்பி ராமையா, வெங்கட் போஸ், கருணாகரனெல்லாம் ஒரு சில காட்சிகள் வந்தாலும் நினைவில் நிற்கிறார்கள்.
சுத்தமாகவே பீல்டு அவுட் ஆன நிலையில் இருக்கும் ஹாரிஸ் ஜெயராஜால் இந்தப் படத்திற்கு எந்த புண்ணியமும் இல்லை.. ஒரு பாடலை தவிர மிச்சத்தை மறுபடியும் கேட்கவே தோணவில்லை.. பின்னணி இசையில் மட்டும் அடித்து ஆடியிருக்கிறார். ரசிகர்களின் கவனத்தை கொஞ்சம் படத்தின் பக்கம் திசை திருப்பியிருக்கிறார் ஹாரிஸ்.
ஒரு வருடத் தயாரிப்பு.. வெளிநாட்டு லொகேஷன்கள்.. 30 கோடிக்கும் மேலான செலவு என்கிறார்கள்.. ம்ஹூம்.. இப்படியொரு கதையை வைத்து எப்படி இந்தத் தயாரிப்பாளர் இதற்கெல்லாம் ஒத்துக் கொண்டார் என்பதை விசாரணை கமிஷன் போட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்..!
இந்தப் படத்திற்கு ஆன செலவில் நிச்சயமாக 10 சின்ன பட்ஜெட் படங்களை தயாரித்திருக்கலாம்.. தமிழ்த் திரையுலகத்தினருக்கு ஆபத்து என்பது தியேட்டருக்கு வரவழைக்காத சின்ன பட்ஜெட் படங்கள் மட்டுமல்ல.. தியேட்டருக்கு வரவழைத்து இப்படி கும்மாங்குத்தை கொடுத்து திருப்பியனுப்பும் இது போன்ற பெரிய பட்ஜெட் படங்களும்தான்..! புரிந்து கொண்டால் சரி..!
யான் – ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது..!