வலைப்பதிவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

தலைவலி வந்தா தைலம் தேய்க்கலாம். போனாலும் போயிரும்.. கால்வலி வந்தாலும் இதே மாதிரி தைலத்தைத் தடவலாம். ஒரு கால் வலியாச்சும் போகும்.. வயித்து வலி வந்தா.. அதுக்கும் 'தைலம்தான் தடவுவேன்'னு அடம் புடிச்சா என்ன ஆகும்? உண்மைத்தமிழன் நிலைமைதான் ஆகும்..

இந்த வலை உலகத்துக்குள்ள காலெடுத்து வைக்கும்போதே சின்னப் புள்ளைக்குப் படிச்சுப் படிச்சுச் சொல்றாப்புல சொன்னார் நம்ம 'தல' பாலபாரதி.
"ஒரு மூணு மாசத்துக்கு யாருக்கும் பின்னூட்டம் போடாதீங்க தலைவா.. உள்ள என்ன நடக்குது? என்ன பண்றாங்கன்னு பாருங்க.. இது ரத்த பூமி.. எசகுபிசகா எங்கிட்டாச்சும் கால் வைச்சீங்கன்னா போச்சு, யானைக் கால் மாதிரி வீங்கிப் போயிரும்.. ஜாக்கிரதை.. பேசாம உங்க பதிவுல மட்டும் உங்களுக்குப் பிடிச்சமானதைப் போட்டுக்கிட்டே போங்க.. யாரு வூட்டுக்குள்ளேயும் போய் சவுண்டு விடாதீங்க.. இங்கன இருக்குறவுக அல்லாரும் சக்கரைப்பாகுல இருந்தே சக்கரையைத் தனியாப் பிரிச்சு எடுக்குற ஆளுக.. பாட்டிலை பார்த்தே கிக் எம்புட்டுக்கு ஏறும்னு அலம்புற ஆளுக.. அம்புட்டுத்தான்.. சொல்லிப்புட்டேன்.. அப்புறம் உங்க இஷ்டம்.."

- அப்படின்னு கிளிப்பிள்ளைக்கு பாடம் சொல்லிக் கொடுக்குற மாதிரி கொடுத்தாரு. கேட்டனா? கேட்டானா இந்த உண்மைத்தமிழன்.. என்னமோ போன பிறவில அரிச்சந்திரன் பரம்பரைல பொறந்த மாதிரி 'நான் நினைச்சதைத்தான் பேசுவேன்.. பேசுறதைத்தான் எழுதுவேன். யாருக்கும் பயப்பட மாட்டேன்'னு ஏறுக்கு மாறா குதிச்சுப்புட்டு.. போகக்கூடாத இடத்துலேல்லாம் நுழைஞ்சு இப்போ பாருங்க..

பேச வேண்டியவங்ககிட்டல்லாம் சண்டை.. பார்க்கப் போறவங்ககிட்டேயெல்லாம் பிரச்சினை.. எந்தப் பக்கம் பார்த்தாலும் "எவன்டா அவன் உண்மைத்தமிழன்?"னு அக்கறையா விசாரிக்குறாக.. என்னத்துக்குன்னுதான் தெரியலை..

இவனை இப்படியே விட்டா சரிப்பட்டு வராதுன்னுட்டு நம்மாளுக வழக்கம்போல சூனியம் வைச்சிட்டாக.. ஒண்ணா, ரெண்டா..?

நான் போக முடியாத இடத்துக்கெல்லாம் போய் அங்கன என் பேர்ல, ஒரு ஸ்பெஷல் அர்ச்சனைத் தட்டை வாங்கி 108 தேங்கா உடைச்சு சாஷ்டாங்கமா பூஜையே நடத்தியிருக்காக..

எம்புட்டு பேருங்குறீங்க.. "மடத்தமிழன், பொய்த்தமிழன், சிங்காரத்தமிழன், செத்ததமிழன், சாகப் போறத் தமிழன், உண்மைத்தமிழன்-1, உண்மைத்தமிழன்-2, போலி உண்மைத்தமிழன், உண்மைத்தமிழன்-1, உண்மைத்தமிழன்-2, உங்கள் தமிழன், உ.தமிழன், ஊ.தமிழன்..." அப்படி, இப்படின்னு பொளந்து கட்டிருக்காங்க..

ஒவ்வொரு இடத்துக்கும் பின்னாடியே ஓடிப் போய் "அது பொய்யி.. நான்தான் நெசமான உண்மைத்தமிழன்"னு கத்திக் கத்தி.. இந்த வேகாத வெயில்ல என் அழகு மூஞ்சி, இன்னும் கொஞ்சம் கருத்துப் போச்சு கண்ணுகளா..

இதை இப்படியே விட்டா என் கலரையே மாத்திருவாகன்னுட்டு ஆலோசனை கேட்டேன்.. மொதல் போலிக்காக அங்கன போய் ஒரு ஒப்பாரி வைச்சனே.. அந்த மவராசனே இதுக்கு ஒரு ஐடியா கொடுத்தாரு. அவர் உங்களுக்கெல்லாம் ரொம்பப் புடிச்சமானவருதான்.. 'டோண்டு ராகவன்' அப்படீன்னு பேரு.

அவர் சொன்னாரு.. "உண்மைத்தமிழன்.. இதெல்லாம் இந்த வலைத்தளம்ன்ற போர்க்களத்துல ரொம்ப சகஜம்.. நான் எத்தனை விழுப்புண், அம்புக் காயங்கள்லாம் பட்டிருக்கேன்னு நோக்குத் தெரியுமோ..? என் வலைத்தளத்துல வந்து படிச்சுப் பாரு.. அப்ப புரிஞ்சுக்குவ.. அவுங்க நாலு ஸ்டெப் எடுத்தா நாம பதினாறு ஸ்டெப் எடுக்கணும். அப்பத்தான் இந்த யுத்த பூமில ஜெயிக்க முடியும்.. மொதல்ல உங்க பேரோட டிஸ்பிளே நம்பரையும், போட்டோவையும் போட்டுக்கோங்கோ.. அதான் நல்லது. அப்படி போட்டா சுலபத்துல யாரும் உங்களை ஏமாத்தி உங்க பேர்ல நாமத்தை அவன் போட முடியாது.. நீங்க ஒருத்தர் மட்டும்தான் நாமத்தைப் போட முடியும்னு. என் 'எலிக்குட்டி' சோதனையும் நீங்களா இல்லையான்னு காட்டிக் கொடுத்திரும்..." இப்படி அக்கறையா, பொறுப்பா, ஒரு பெரிய மனுஷன் தோரணைல அட்வைஸ் செஞ்சாரு..

"சரிங்கய்யா.. ஆகட்டும்ய்யா.. அப்படியே செஞ்சுப்புடறேன்" அப்படின்னு நானும் சொல்லி ரெண்டு நாளாச்சு.. மறுபடியும் கொஞ்சுண்டு சோம்பேறித்தனம். இடைல நம்ம 'தல' பாலபாரதிகிட்ட இதைச் சொல்லிப் புலம்பினேன்.. வேற யார் நம்ம போனை எடுப்பாக? 'போட்டோ போட்டிருங்க தலைவா'ன்னு சொன்னார். போட்டோவுக்கு எங்கன கனெக்ஷன் கொடுக்கிறதுன்னு தெரியலைன்னு சொன்னேன்.. "அல்வா கிண்டறதுல இருந்து அண்டார்டிகாவரைக்கும் நல்லா வக்கனையாப் பேசுங்க.. உருப்படியா ஒண்ணு தெரிஞ்சு வைச்சுக்காதீங்க.." அப்படின்னு கொஞ்சுண்டு கோபத்தோட பாலபாரதி ஒரு லின்க் செஞ்சு அனுப்பி வச்சாரு..

நம்ம நேரம் பாருங்க.. அது வொர்க் ஆகலை.. "அப்துல்கலாமே வந்தாலும் இப்படித்தான் சாமி செய்யோணும்.. அதிசயமா உங்களுக்குத்தான் வர மாட்டேங்குது.. மொதல்ல உங்களையே டோட்டலா ஆபரேஷன் பண்ணணும்னு நினைக்கிறேன்.. வேற வழியிருக்கான்னு பார்க்கலாம்.." அப்படின்னாரு பாலா. சரி.. 'அப்புறம் பார்த்துக்கலாம்'னு நானும் விட்டுட்டேன்..
ஒரு நாள் முழுக்க பின்னூட்டம் போடலியா? நம்மாளுக புரிஞ்சுக்கிட்டாக.. 'பய ஆ•ப் ஆயிட்டான் போலிருக்கு'ன்னுட்டு.. மறுபடியும் என் பேர்ல ஒரு இடத்துல தாலியக் கட்டிட்டாங்க. கட்டின இடமாச்சும் நல்ல இடமா இருக்கக்கூடாதா?

நம்ம வரவனையான் செந்தில் வூட்டுக்குள்ள போய் வூடு கட்டிருக்கானுக.. என்னத்த சொல்றது? நானே அவரைப் பார்த்து பயந்து போய் ஒரு ஓரமா ஒதுங்கிப் போய் நின்றுக்கேன்.. இப்படியா பண்ணுவாக..?
அவருக்கும் ஒரு போனை போட்டு விஷயத்தைச் சொன்னேன்.. "தலைவா.. இதெல்லாம் ஒண்ணும் செய்ய முடியாது.. நீங்க நிறைய எழுதிறீங்கன்னு பார்த்துட்டுத்தான் போடுறாங்க.. வேண்ணா உங்க போட்டோவையும், டிஸ்பிளே நம்பரையும் சேர்த்துக்குங்க.. வேற வழியில்லை.. இல்ல.. டெய்லி இது மாதிரியே ஒவ்வொருத்தனுக்கும் போன் போட்டு புலம்பிக்கிட்டேத்தான் இருக்கணும்... உங்க பொழைப்ப பார்க்க முடியாது.."ன்னாரு..

"போட்டோவே ஏறலையே சாமி.."ன்னேன்.. "நெட்ல போட்டோ ஏத்துறதுக்கு ஏகப்பட்ட சைட் இருக்கு தலைவா. அங்கன எதுக்குள்ளயாவது போய் உங்க போட்டோவை ஏத்துங்க.. அங்கேயிருந்து லின்க் கொடுங்க"ன்னாரு வரவனையான்.. "நான் யூஸ் பண்ற சிஸ்டத்துல வெப் பில்ட்டரிங் போட்டதுல இருந்து நம்ம படம் காட்டுற மச்சான், 'ஓசை செல்லா' சைட்ல இருக்குற 'இதய தெய்வம்' நமீதா போட்டோகூட இப்ப கொஞ்ச நாளா தெரியமாட்டேங்குது ஸார்.."னு புலம்பினேன்.. "அப்ப ஒண்ணும் பண்ண முடியாது.. சூனியத்தை முழுசா நீங்களே வாங்கிக்குங்க.." அப்படீன்னு சொல்லி முடிச்சிட்டாரு.

சரிதான்.. வேற வழியில்லை.. போட்டிருவோம்.. அப்படீன்னு நினைச்சு நேரம் இல்லாததால கொஞ்சம் ரெஸ்ட்ல இருந்தேன்.. அதுக்குள்ள மறுபடியும் வரவனையான்கிட்டயே போய் வேலையைக் காட்டிட்டான் 'பொய்த்தமிழன்'. சரி இதுக்கு மேல தாங்காதுப்பான்னுட்டு 'தல' பாலபாரதிக்கு போனை போட்டேன்.

மனுஷன் பாவம்.. என்கிட்ட இருந்து போன் வந்தாலே 'ஐயையோ.. வந்துட்டானா பாவி'ன்னுவாரு. அம்புட்டு நல்ல பேரு நமக்கு அவர்கிட்ட.. மேட்டரைச் சொன்னேன்..

"மாப்ளை சைட்லயே போட்டுட்டானுகளா.. சரி தலைவா.. கூட்டிட்டு வந்த பாவத்துக்குக் கடைசியா ஒரு உதவி பண்ணித் தொலையறேன்.." அப்படின்னுட்டு என்னோட டிஸ்பிளே நம்பரை அவரே மெயில் அனுப்பினாரு.(உண்மைத்தமிழன் எவ்வளவு அப்பிராணின்னு பார்த்துக்குங்க.. அதைக்கூட பார்க்கத் தெரியலை).

அதை வைச்சு என் பேருக்குப் பக்கத்துல டிஸ்பிளே நம்பரை வைச்சு அட்டாச் பண்ணியாச்சு.. ஆசைக்கு, நம்ம இனமானப் பேராசிரியர் திரு.தருமி அவர்களின் வீட்டுக்குள்ள போய் ஒரு வம்பிழுத்து வைச்சிட்டு வந்துட்டேன்.

திருப்திக்கு மறுபடியும் வரவனையான் ஸார் வீட்ல போய் 'பொய்த்தமிழனைப்' பத்தி ஒரு புகாரை பதிவு செஞ்சு வைச்சேன்.

ஆனாலும் நம்ம டோண்டு ஸார் விடலை. அவருக்குத் திருப்தியாகலையாம். மறுபடியும் போனை போட்டார்.

"உண்மைத்தமிழன் இதெல்லாம் என்னோட 'எலிக்குட்டி' சோதனைக்குப் பத்தாதாக்கும். போட்டோ போட்டே ஆகணுமாக்கும்.. இல்லேன்னா இதையே காப்பி, பேஸ்ட் பண்ணி போட்டு உங்களை பல் விளக்க வைச்சிருவாங்கோ.. அனுபவஸ்தன் சொல்றேன். கேளுங்கோ.." அப்படின்னு இன்னும் கொஞ்சம் பொறுப்பா அட்வைஸ் பண்ணார்(கண்ணுல தண்ணி வருது ஸார்.. உண்மைத்தமிழன் மேல எம்புட்டு பாசம் பாருங்க..)

சரி.. இவ்ளோ பெரிய மனுஷன்.. நம்மளையும் ஒரு மனுஷனா மதிச்சு போன் பண்ணி அக்கறையா சொல்றாருன்னு அதையும் கேட்டுத்தான் செய்வோமே.. என்ன காசா? பணமா? அப்படின்னுட்டு மறுபடியும் என் போட்டோவை எப்படியோ ஒரு இடத்துல வைச்சு அட்டாச் பண்ணிப்புட்டேன்..

போட்டோவைத் திறக்கும்போது பக்கத்துல சின்னப்புள்ளைக யாரும் இல்லாம பார்த்துக்குங்க.. "உன் படத்தைப் பார்த்து குளிரடிச்சுப் போச்சு.. ஜனனி கண்டுபோச்சுன்னு" அப்பால யாரும் புலம்பக் கூடாது. அதான் முன்னாடியே சொல்லிட்டேன்..

போட்டோவை பாருங்க.. 'குவாலியர் இளவரசன்' மாதிரியில்லே..? சொல்ல மாட்டீகளே.. எல்லாம் பொறாமை.. பொறாமை.. தெரியுது.. தெரியுது..
இப்ப இதையெல்லாம் எதுக்காகச் சொல்ல வந்தேன்னா..?

வலையுலகத் தெய்வங்களா..
இனிமே உங்களுக்கு 'உண்மைத்தமிழன்'னு பேர் போட்டு எதுனாச்சும் கடுதாசி வந்தா.. அதுல என்னோட டிஸ்பிளே நம்பர், இந்த குவாலியர் ராஜகுமாரனின் 'அழகு' போட்டோ இருக்கான்னு செக் பண்ணிப்புட்டு.. அப்புறமா அதுக்கு பெர்மிஷன் கொடுங்க.. இல்லேன்னா பட்டுன்னு மூஞ்சில அடிச்சாப்புல 'முடியாது'ன்னு சொல்லி வெளிலேயும் சொல்லிருங்க.. அப்பத்தான் நானும் தெரிஞ்சுக்குவேன்ல பாசக்காரப் பயலுக எத்தனை பேர் இருக்காங்கன்னு..?

'இதுக்கேண்டா இப்படி ஒப்பாரி வைக்கிற மாதிரி, இருபத்தொரு பாரால எழுதித் தொலைஞ்சிருக்க. நாலு லைன்ல எழுதித் தொலைய வேண்டியதுதான..?' அப்படீன்னு நீங்க அல்லாரும் மனசுக்குள்ள திட்டுறது இந்த உண்மைத்தமிழனின் மனசுக்கும் கேட்குது.. ஆனா என்ன செய்ய?

கீபோர்ட்ல கை வைச்சா நிக்க மாட்டேங்குது சாமி.. சதாப்தி எக்ஸ்பிரஸ் மாதிரி கை போய்க்கிட்டே இருக்குது.. என்னத்த செய்றது..?

அதுனால..

வேணாம்.. போதும்..

இத்தோட முடிச்சுக்குறேன்..

38 comments:

Anonymous said...

உண்மைத் தலைவா...இந்த மேட்டருக்கு இவ்வளவு பெரிய பதிவு ரொம்ப கொடுமை.....

சந்திப்பு said...

அலாவுதீன் அற்புத விளக்கு, சிந்துபாத் கதை மாதிரி இருக்கு!

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
உண்மைத் தலைவா...இந்த மேட்டருக்கு இவ்வளவு பெரிய பதிவு ரொம்ப கொடுமை.....//

கொடுமைதான்.. என்ன செய்றது?

அவனுக செய்யறது இதைவிடக் கொடுமையா இருக்கே..??

மாசிலா said...

ஐய்யோ பாவம்! உங்களுக்கு இந்த கதியா? இதிலிருந்து என்ன தெரியுது? நீங்க ரொம்ப பிரபலம்னுதான் தெரியுது. உங்களுக்காக இத்தன போலிகளா? அப்ப அவங்களூக்கு எல்லாம் நீங்கதான் ஆதம தலைவன்னு சொல்லுங்க. கூடிய சீக்கிரம் உங்க பேரைச் சொல்லி சங்கம் அமைக்கப் போறாங்க பாருங்க... அப்படித்தானே?


//கீபோர்ட்ல கை வைச்சா நிக்க மாட்டேங்குது சாமி.. சதாப்தி எக்ஸ்பிரஸ் மாதிரி கை போய்க்கிட்டே இருக்குது..// அதே வேகத்திலேதான் நானும் உங்க இடுகையையும் படிச்சி முடித்தேன். செம ஸ்பீட்ல போறீங்களே. இந்த எழுத்து நடை ரொம்ப பிடிச்சிருக்கு சார்.

பகிர்ந்தமைக்கு நன்றி.

எதுக்கும் பாதுகாப்பான இடத்தில இருங்க. இல்லைன்னா உங்கள உசுரோட தள்ளினு போயிடுவாங்க.
;-)

dondu(#11168674346665545885) said...

இந்தப் பிரச்சினை தலைவிரித்தாடிய தருணத்தில் நான் ஒரு தடவை சொன்னது இதோ.

//என் பெயரில் உங்கள் பதிவுகளில் ஏதேனும் பின்னூட்டம் வந்தால் அதற்கு பதிலளிக்கு முன் அதை எழுதியது நான்தானா என்று பாருங்கள். கீழ்கண்டவற்றை மனதில் நினைவு கொள்ளுங்கள்.

1. என் பின்னூட்டங்கள் ப்ளாக்கர் பதிவுகளில் என் போட்டோவுடன் வரும்.
2. அப்படியே போட்டொவுடன் வந்தாலும் எலிக்குட்டியின் உதவியால் ப்ளாக்கர் எண்ணை சரி பாருங்கள். உண்மை டோண்டுவின் எண் 4800161. அதாவது போட்டொ மற்றும் ப்ளாக்கர் எண் இரண்டும் சரியாக இருக்க வேண்டும்.
3. நான் எங்கு பின்னூட்டமிட்டாலும் என் பிரத்தியேகப் பதிவில் நகலிடுவேன்.
4. அங்கும் இந்தப் போலி போட்டோவுடன் நகலிடும் அபாயம் உள்ளது. ஆகவே அங்கும் எலிக்குட்டியார்தான் துணை.
5. நான் கவலைப் படுவதெல்லாம் ஒரு விஷயத்துக்குத்தான். போலியின் பின்னூட்டத்தைப் பார்த்து என்னை பற்றி தவறாக நினைத்து அதனால் சம்பந்தபட்டவருடன் நான் கொண்டிருக்கும் நட்புக்கு பங்கம் வரக்கூடாது என்பதே அது. நண்பனின் மரணத்தைக் கூட தாங்கிக் கொள்வேன். நட்பின் மரணத்தை அல்ல.//

அன்புடன்,
டோண்டு ராகவன்

உண்மைத்தமிழன் said...

//மாசிலா said...
சீக்கிரம் உங்க பேரைச் சொல்லி சங்கம் அமைக்கப் போறாங்க பாருங்க...//

பத்துப் பேரையே என்னால தாங்க முடியலை.. சங்கமா?

கீபோர்ட்ல கை வைச்சா நிக்க மாட்டேங்குது சாமி.. சதாப்தி எக்ஸ்பிரஸ் மாதிரி கை போய்க்கிட்டே இருக்குது..//

அதே வேகத்திலேதான் நானும் உங்க இடுகையையும் படிச்சி முடித்தேன். செம ஸ்பீட்ல போறீங்களே. இந்த எழுத்து நடை ரொம்ப பிடிச்சிருக்கு சார்.///

ஆஹா.. எனக்கொரு ஸ்பீடு பிரெண்ட் கிடைச்சிட்டாரு.. பழகிப் போச்சு ஸார்.. விட முடியலை.. பாராட்டுக்கு நன்றி ஸார்..

பகிர்ந்தமைக்கு நன்றி.

எதுக்கும் பாதுகாப்பான இடத்தில இருங்க. இல்லைன்னா உங்கள உசுரோட தள்ளினு போயிடுவாங்க.;-)///

இப்பவே அப்படி இடத்துலதான் ஸார் இருக்கேன். ஆனா என்ன? இங்கயே இவுங்களே போட்டுத் தள்ளிருவாங்களோன்னு பயமா இருக்கு..

வடுவூர் குமார் said...

ஆழ்ந்த அனுதாபங்கள்.
நம்பரை பார்த்த போதே ஏதோ விபரீதம் என்று நினைத்தேன்.

உண்மைத்தமிழன் said...

///dondu(#11168674346665545885) said...
இந்தப் பிரச்சினை தலைவிரித்தாடிய தருணத்தில் நான் ஒரு தடவை சொன்னது இதோ.

//என் பெயரில் உங்கள் பதிவுகளில் ஏதேனும் பின்னூட்டம் வந்தால் அதற்கு பதிலளிக்கு முன் அதை எழுதியது நான்தானா என்று பாருங்கள். கீழ்கண்டவற்றை மனதில் நினைவு கொள்ளுங்கள்.

1. என் பின்னூட்டங்கள் ப்ளாக்கர் பதிவுகளில் என் போட்டோவுடன் வரும்.
2. அப்படியே போட்டொவுடன் வந்தாலும் எலிக்குட்டியின் உதவியால் ப்ளாக்கர் எண்ணை சரி பாருங்கள். உண்மை டோண்டுவின் எண் 4800161. அதாவது போட்டொ மற்றும் ப்ளாக்கர் எண் இரண்டும் சரியாக இருக்க வேண்டும்.
3. நான் எங்கு பின்னூட்டமிட்டாலும் என் பிரத்தியேகப் பதிவில் நகலிடுவேன்.
4. அங்கும் இந்தப் போலி போட்டோவுடன் நகலிடும் அபாயம் உள்ளது. ஆகவே அங்கும் எலிக்குட்டியார்தான் துணை.
5. நான் கவலைப் படுவதெல்லாம் ஒரு விஷயத்துக்குத்தான். போலியின் பின்னூட்டத்தைப் பார்த்து என்னை பற்றி தவறாக நினைத்து அதனால் சம்பந்தபட்டவருடன் நான் கொண்டிருக்கும் நட்புக்கு பங்கம் வரக்கூடாது என்பதே அது. நண்பனின் மரணத்தைக் கூட தாங்கிக் கொள்வேன். நட்பின் மரணத்தை அல்ல.//

அன்புடன்,
டோண்டு ராகவன்///

டோண்டு ஸார் தங்களுடைய அறிவுரைக்கும், ஆலோசனைக்கும் மிக்க நன்றி..

நட்பைப் பற்றிக் கவலைப்படும் அளவுக்கு இனிமேல் எதுவும் நடக்காது என்றே நம்புவோம்..

உண்மைத்தமிழன் said...

//வடுவூர் குமார் said...
ஆழ்ந்த அனுதாபங்கள்.
நம்பரை பார்த்த போதே ஏதோ விபரீதம் என்று நினைத்தேன்.//

அனுதாபங்களுக்கும், என்னைப் பற்றிய நினைப்பிற்கும் எனது நன்றிகள்..

இப்ப நம்பர் இல்லாம வலம் வரும் வலைப்பதிவர்களைப் பார்க்கும்போது, எனக்கு பொறாமையா இருக்கு ஸார்..

இப்ப புலம்பி என்ன புண்ணியம்ன்றீங்களா?

உண்மைத்தமிழன் said...

//சந்திப்பு said...
அலாவுதீன் அற்புத விளக்கு, சிந்துபாத் கதை மாதிரி இருக்கு!//

சந்திப்பு ஸார்..

அலாவுதீன் அற்புத விளக்கைத் தேய்த்தால் பூதம் வரும்.. சிந்துபாத் கதையிலும் ஜீபூம்பா பூதம் வரும்.. போட்டால எம்மூஞ்சி அப்படியா இருக்கு? ம்.. சரி.. சரி..

சென்ஷி said...

பேசாம நான் அவன் இல்லைன்னு சொல்லிடுங்க... சிம்பிள் :)

சென்ஷி

dondu(#11168674346665545885) said...

//இப்ப நம்பர் இல்லாம வலம் வரும் வலைப்பதிவர்களைப் பார்க்கும்போது, எனக்கு பொறாமையா இருக்கு ஸார்..//

தேவையே இல்லை அந்தப் பொறாமை. இப்ப எலிக்குட்டியை வச்சு சோதிக்கும்போது அடைப்புக் குறிக்குள் இருக்கும் அதே நம்பர் கீழே தெரிஞ்சு, உங்க போட்டோவும் இருந்தா ஆச்சு காரியம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

உண்மைத்தமிழன் said...

//சென்ஷி said...
பேசாம நான் அவன் இல்லைன்னு சொல்லிடுங்க... சிம்பிள் :)
சென்ஷி//

மாளவிகாவும், நமீதாவும் சேர்ந்து வந்து சொன்னாத்தான் நம்புவோம்னு அடம் புடிப்பாகளே தம்பி. அதுக்கென்ன செய்யறது?

உண்மைத்தமிழன் said...

//dondu(#11168674346665545885) said...
//இப்ப நம்பர் இல்லாம வலம் வரும் வலைப்பதிவர்களைப் பார்க்கும்போது, எனக்கு பொறாமையா இருக்கு ஸார்..//

தேவையே இல்லை அந்தப் பொறாமை. இப்ப எலிக்குட்டியை வச்சு சோதிக்கும்போது அடைப்புக் குறிக்குள் இருக்கும் அதே நம்பர் கீழே தெரிஞ்சு, உங்க போட்டோவும் இருந்தா ஆச்சு காரியம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

நான் பொறாமைன்னு சொன்னது அவுகளுக்கு இந்த டெஸ்ட்டிங் பண்றே வேலையெல்லாம் இல்ல பாருங்க. அதுனால சொன்னேன்..

வருவதையெல்லாம் ஒரிஜினல்தானான்னு செக் பண்ணிக்கிட்டிருந்தா இங்கன வேலை ஓடாது ஸார்.. சீக்கிரமே வெறுப்புதான் வரும்..

Anonymous said...

வருவியா.. வரமாட்டியா..
வரலேன்னா உன் பேச்சு கா...

உண்மைத்தமிழன் said...

//நமீதா said...
வருவியா.. வரமாட்டியா..
வரலேன்னா உன் பேச்சு கா...//

இப்படி வலைத்தளத்துல வந்து கூப்பிட்டா எப்படி வர்றது? பின்னாடியே நாலு பேர் வந்திட்டா.. தனியா வந்து கூப்பிடு கண்ணு..

Anonymous said...

சீ யூ அட் 9
ராத்திரி மீட் பண்ணுவோம்

உண்மைத்தமிழன் said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
டோண்டு ராகவனை நம்பி போண்டி ஆயிடாதீங்கய்யா.. போண்டி ஆனாலும் பரவாயில்லை போண்டா ஆயிடாதீங்க..//

இப்படியெல்லாம் பேசக்கூடாது உண்மைத்தமிழா..

ஏன்னா இப்படி அல்லாரும் பேசிப் பேசித்தான் அல்லாரும் போண்டா தேடி அலையுறீங்க..

போங்கப்பா..

Anonymous said...

அய்யோ...
இந்த உண்மையின் போலியை புரிந்து கொள்ளாமல் உன் புகைப்படத்தை விட்டு விட்டாயே...

இனி என்ன ஆகுமோ?

Anonymous said...

ம்ஹூம் எனக்கு இட்லிவடைதான் பிடிக்கும்.

உண்மைத்தமிழன் said...

//மாளவிகா said...
சீ யூ அட் 9
ராத்திரி மீட் பண்ணுவோம்//

எங்கன? கூட யாரையாச்சும் துணைக்குக் கூட்டிக்கின்னு வரலாமா?

Anonymous said...

ஆனாலும், குவாலியர் இளவரசன்றது கொஞ்சம் ஓவராத்தான் இருக்குது.....

உண்மைத்தமிழன் said...

//உண்மையின் போலி said...
அய்யோ...
இந்த உண்மையின் போலியை புரிந்து கொள்ளாமல் உன் புகைப்படத்தை விட்டு விட்டாயே...

இனி என்ன ஆகுமோ?//

உண்மையின் போலியா? அது ஆரு.. நமக்குத் தெரியாம?

'உண்மைத்தமிழன்'னு பேரை வைச்சுக்கின்னு போலி போட்டோவை போட மனசு வரலை. அதான்.. போட்டுட்டேன். எப்படி ராசா மாதிரி இருக்கேன்ல..?

உண்மைத்தமிழன் said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ம்ஹூம் எனக்கு இட்லிவடைதான் பிடிக்கும்.//

எப்படி ராசா இப்படி கரீக்ட்டா சொல்றே..? எனக்கும் இட்லி, வடைதான் பிடிக்கும்..

உண்மைத்தமிழன் said...

//வெயிலான் said...
ஆனாலும், குவாலியர் இளவரசன்றது கொஞ்சம் ஓவராத்தான் இருக்குது.....//

ஓவர்தான்.. யார் இல்லேன்றா..?

சாதாரணமா புதுக்கோட்டை மன்னர் பரம்பரைன்னா எவன் திரும்பிப் பார்ப்பான்?

அதான் கொஞ்சம் பில்டப்பு.. ஹி..ஹி..

உங்கள் நண்பன்(சரா) said...

சரி சரி, ரகளை பண்ணாம மட்டன் சாப்புடுங்க! எனக்கும் ஒரு இலையப் போடுயா!
ஸ்ஸ்ஸ் ... என்னா வெயிலு!


அன்புடன்...
சரவணன்.

உண்மைத்தமிழன் said...

//உங்கள் நண்பன்(சரா) said...
சரி சரி, ரகளை பண்ணாம மட்டன் சாப்புடுங்க! எனக்கும் ஒரு இலையப் போடுயா!
ஸ்ஸ்ஸ் ... என்னா வெயிலு!
அன்புடன்...
சரவணன்.//

சரவணன் ஸார்.. மட்டன்னா எலும்பைக் கடிச்சு சாப்பிட்டு முடிக்க நிறைய நேரம் ஆகுமே? அம்புட்டு ப்ரீயா நீங்க?

உங்கள் நண்பன்(சரா) said...

//மட்டன்னா எலும்பைக் கடிச்சு சாப்பிட்டு முடிக்க நிறைய நேரம் ஆகுமே? அம்புட்டு ப்ரீயா நீங்க? //

நாங்க எலும்பில்லாத கறி சாப்பிட்டுகுறோம்! மட்டன்னு சொன்னதும் இப்போ ரெண்டு லாரில அமுக ஆளுங்க எங்கே எங்கேனு வந்துக்கிட்டு இருக்கிறாங்க! அவங்களுக்கு இலை போட நீங்க ப்ரீய இருங்க!

அன்புடன்...
சரவணன்.

Anonymous said...

லாரி வந்தாச்சு! எங்க கொட்டுறது,

Anonymous said...

ம்ம்ம்ம்ம்... உண்மைத்தமிழன் தலைல கொட்டு

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

உங்கள் போட்டோவுடன் பல வலைப்பூக்களில் போலி உண்மைத் தமிழன் கமெண்டுகளை பார்த்தேன். போட்டோவும், நம்பரும் அதர் ஆப்ஷனில் போடுவது பெரிய டெக்னிக்கல் டீல் இல்லை என்பதால் நானும் அதே பாணியில் உங்கள் போட்டோவுடன் இங்கே பின்னூட்டம் போடுகிறேன்.

உண்மைத்தமிழன் said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
உங்கள் போட்டோவுடன் பல வலைப்பூக்களில் போலி உண்மைத் தமிழன் கமெண்டுகளை பார்த்தேன். போட்டோவும், நம்பரும் அதர் ஆப்ஷனில் போடுவது பெரிய டெக்னிக்கல் டீல் இல்லை என்பதால் நானும் அதே பாணியில் உங்கள் போட்டோவுடன் இங்கே பின்னூட்டம் போடுகிறேன்.//

என்னதான்ய்யா செய்யச் சொல்றீங்க..?

dondu(#11168674346665545885) said...

//போட்டோவும், நம்பரும் அதர் ஆப்ஷனில் போடுவது பெரிய டெக்னிக்கல் டீல் இல்லை என்பதால் நானும் அதே பாணியில் உங்கள் போட்டோவுடன் இங்கே பின்னூட்டம் போடுகிறேன்.//
சும்மா அதே நம்பரை அடைப்புக் குறிக்குள் போட்டால் என்ன பிரயோசனம்? எலிக்குட்டி உங்கள் உண்மை நம்பரை காண்பித்து கொடுத்து விட்டதே (04330845515232444148).

நீங்க சொல்றதை உண்மைத்தமிழன் வேண்டுமானால் நம்புவார். ஆனால் இந்த டோண்டு ராகவனிடம் செல்லாது. மேலும் நீங்கள் அதர் ஆப்ஷனை உபயோகிக்கவில்லை என்று எந்த கோவிலில் வேண்டுமானாலும் கற்பூரம் அணைத்து சத்தியம் செய்வேன். ஏனெனில் அதர் ஆப்ஷனில் போட்டோ வரவே வராது. அவ்வளவுதான் விஷயம்.

இப்போது உண்மைத் தமிழனுக்கு ஒரு ரொம்ப சீரியஸ் வார்த்தை. இதை என்னவோ விளையாட்டாக எடுத்து கொள்கிறீர்கள். அது வினையில்தான் முடியும். இதை ஏற்கனவே தொலைபேசியில் உங்களிடம் கூறியாகி விட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

புது புரோபைல் போட்டோ
புதுசா பிளாகர் நம்பரு

வலைபதிவர்களுக்கு வேண்டுகோளு

கலக்கற உண்மைத் தமிழா கலக்கற

துளசி கோபால் said...

உங்க பேருக்குப் பின்னாலே இருக்கற எண்களின் (ரகசியம்)விவரம்
இப்பப் புரிஞ்சுபோச்சு.

நான் அது 'இந்தியாவின் மக்கள் தொகை'யோன்னு
நினைச்சுக்கிட்டு இருந்தேன்.

உண்மைத்தமிழன் said...

//உண்மை ரசிகன் said...
புது புரோபைல் போட்டோ
புதுசா பிளாகர் நம்பரு

வலைபதிவர்களுக்கு வேண்டுகோளு

கலக்கற உண்மைத் தமிழா கலக்கற//

நன்றி உண்மை ரசிகரே..

பின்ன யாராச்சும் எதுனாச்சும் வில்லங்கமா எங்கனயாது போய் எழுதித் தொலைஞ்சிட்டா வாங்கிக் கட்டிக்கப் போறது நான்தான.. அதான்..

உண்மைத்தமிழன் said...

//துளசி கோபால் said...
உங்க பேருக்குப் பின்னாலே இருக்கற எண்களின் (ரகசியம்)விவரம்
இப்பப் புரிஞ்சுபோச்சு.

நான் அது 'இந்தியாவின் மக்கள் தொகை'யோன்னு
நினைச்சுக்கிட்டு இருந்தேன்.//

டீச்சர் மேடம்.. நீங்க கணக்கு டீச்சரா? சொல்லவே இல்லையே..?

இதுநாள்வரைக்கும் நீங்க வரலாறு, புவியியல் டீச்சர்ன்னுதான் நினைச்சுக்கிட்டிருந்தேன்..

சரி.. சரி.. எங்க மக்கள் தொகை எம்புட்டு இருந்து என்ன புண்ணியம்?

நீங்க காட்டுற படத்துல இருக்குற மாதிரி இங்கன ஒரு இடம் இல்லையே டீச்சர்..

அல்லாம் ஆட்டு மந்தை மாதிரி அடைச்சுக்கிட்டுல்ல இருக்கு..

abeer ahmed said...

See who owns docsdrive.com or any other website:
http://whois.domaintasks.com/docsdrive.com