எங்கே இருக்கிறான் இறைவன்?-100-வது சிறப்புப் பதிவு

04-06-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

"உனக்கு அறிவு இருக்கிறதா.. இல்லையா..?" என்ற கேள்விக்குக்கூட தமிழகத்து இளைஞர்கள் கோபப்படமாட்டார்கள். ஆனால், "உனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா..? இல்லையா..? என்று கேட்டால்தான் கோபம் என்ற உணர்வே இளைஞர்களுக்கு பொங்கி வருகிறது. காரணம், இன்றைய இளைஞர்களில் பெரும்பாலோர், எவர் ஒருவர் நேரில் வந்து அவர்களுக்கு ‘சிவாஜி' படத்திற்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்தால் மட்டும்தான் அவரை ‘கடவுள்’ என்று நம்புவோம் என்ற மனச்சூழலில் இருக்கிறார்கள்.

இறைவன் அவர்கள் எதிர்பார்ப்பதைப் போன்ற மனிதத் தோற்றத்தில் நேரில் வந்து பேச வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவர்களிடம் தினமும் பேசுகின்ற, அவர்களைத் தினமும் சந்திக்கின்ற இறைவனை அவர்கள் உணர்வதே இல்லை.

தாய், தந்தையர் காட்டும் அன்பு, பாசம், சகோதர, சகோதரிகள் காட்டும் நேசம், பிற நண்பர்கள், மனிதர்கள் காட்டும் சிநேகம் இவற்றுக்கெல்லாம் எப்படி உருவம் இல்லையோ.. அது போலத்தான் இறைவன் என்பவனும் உருவமற்றவன் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

'அன்பே சிவம்' என்பது இதைத்தான் உணர்த்துகிறது. ஆனால் இந்த வாதம், 'தர்க்கம் செய்து உண்மையை அறிய முயல்வதே இளைஞரின் சுபாவம்' என்ற உண்மைக்குள் மாட்டிக் கொண்டு முழிக்கிறது.

இந்த உண்மைத்தமிழனும் ஒரு காலத்தில், இப்படிப்பட்ட போலித்தனமான ஒரு கடவுள் எதிர்ப்புக் கொள்கையில் மாட்டிக் கொண்டு முழித்தவன்தான். இந்தக் கொள்கையில் இருந்தபோதுதான் அவனது எதிர்கால வாழ்க்கை என்னவாகப் போகிறது என்ற நோக்கமே அவனுக்குள் இல்லாமல் இருந்தது. எதை எடுத்தாலும் அது என்ன? அது எதற்கு? ஏன்? எப்படி? என்று தன்னை நேசித்தவர்களிடமும், தன் மீது அக்கறை கொண்டு விசாரித்தவர்களிடம் குறுக்குக் கேள்வி கேட்டு அவர்களிடமிருந்து தன்னைத் தள்ளிக் கொண்டே சென்று விட்டான்.

ஒரு கட்டத்தில் 'சோதனைகள்தான் தினமும் நான் பார்க்கும் நிகழ்வுகள்' என்று வந்தபோதுதான், ஒரு புத்தகம் எனது அறிவுக் கண்ணைத் திறந்தது. அது கவியரசர் கண்ணதாசனின் 'அர்த்தமுள்ள இந்து மதம்'. அதனைப் படித்த பிறகுதான் இறைவன் என்பவன் எங்கேயிருக்கிறான்? எப்படி இருக்கிறான்? தனது பக்தர்களிடம் எவ்வாறு தன்னைக் காண்பிப்பான் என்ற 'பகுத்தறிவு' பிறந்தது.

இப்போது நான் எனது கடந்த கால வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கின்ற போது எத்தனை முறை இறைவன் எனது வாழ்க்கையில் விளையாடியிருக்கிறான்? எத்தனை முறை காப்பாற்றியிருக்கிறான்? எத்தனை முறை துணையாய் இருந்திருக்கிறான்? என்பதெல்லாம் எனக்குப் புரிந்தது..

நான் ஆறு மாதக் கைக்குழந்தையாக இருந்தபோதே எனக்கு சுவாசிப்பதில் நிறைய பிரச்சினைகள் இருந்ததாம். தொட்டிலில் போடப்பட்டிருந்தால், அப்படியே ஆடாமல், அசையாமல் கண் விழிகள் சொருகிப் போய் கிடப்பேனாம்.. அப்படியொரு முறை நடு ராத்திரியில் நான் பேச்சு, மூச்சில்லாமல் கிடந்தபோது, என் தாய் என்னைத் தூக்கிக் கொண்டு மருத்துவரிடம் ஓடியிருக்கிறார்.

அந்த மருத்துவமனை திண்டுக்கல் டவுன் மார்க்கெட் தெருவில் உள்ளது. மருத்துவரின் பெயர் டாக்டர் வீரமணி. அவருடைய உதவி டாக்டர் திரு.ஜெய்சங்கர். எனது வீடு திண்டுக்கல்லில் ஒய்.எம்.ஆர்.பட்டியில் குமாரசாமி கோனார் சந்தில் இருந்த மோசஸ் நாடார் குடியிருப்பில்.. அங்கிருந்து மருத்துவனை 6 கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.

எனது அம்மா டாக்டரின் வீட்டிற்குச் சென்ற அந்த இரவில், டாக்டர் வெளியூர் போய்விட்டதாக வீட்டில் உள்ளவர்கள் சொல்ல.. வேறு டாக்டரைத் தேடியிருக்கிறார். நேரமாகிவிட்டதால் அனைத்து கிளினிக்குகளும் பூட்டியிருக்க..

அழுது கொண்டே பெரியாஸ்பத்திரி என்றழைக்கப்படும் அரசு மருத்துவனைக்கு திரும்பியிருக்கிறார் எனது தாய். அங்கே அன்றைக்கு பார்த்து இரவு நேர மருத்துவர் வரவில்லையாம். நர்ஸ்கள் மட்டுமே இருந்திருக்கிறார்கள். அவர்களும் சொன்ன பதில்.. "உடனேயே மதுரைக்கு கொண்டு போயிருங்க.." என்று.

வெளியே வந்த எனது அம்மா திண்டுக்கல் பஸ்ஸ்டாண்ட்டை நோக்கி ஓட.. தற்செயலாக எதிரிலே வந்திருக்கிறார் டாக்டர் வீரமணி. எனது அம்மா அங்கேயே என்னை அவருடைய கையில் போட்டுவிட்டு கதறி அழுதிருக்கிறார். ஒரு சைக்கிள் ரிக்ஷாவைப் பிடித்து அதில் என்னையும், எனது அம்மாவையும் ஏற்றி தனது கிளினீக்கிற்கு அழைத்து வந்து எனக்கு சிகிச்சையளித்தாராம் டாக்டர் வீரமணி.

"நீ கையையும், காலையும் இழுத்துக்கிட்டு இப்பவா, அப்பவான்னு இருக்குறப்போ இந்த மவராசன்தான் தெய்வம் மாதிரி வந்து காப்பாத்தினாருடா..." என்று அதற்குப் பின் பல முறை டாக்டர் வீரமணி முன்பாகவே என்னிடம் சொல்லி அழுதிருக்கிறார் எனது தாய்.

இப்போது என் பார்வையில் டாக்டர் வீரமணி யார்..?

பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது எனக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க முயன்ற முத்து என்கின்ற நண்பன், "நான்தான் முதல்ல குதிப்பேன்.." என்று சொல்லி குதிக்க.. அந்த இடத்தில் ஏதோ ஒரு பாறைக்கல் எமனாக இருக்க.. அதில் அவன் தலை மோதி ரத்தச் சகதியில் பிணமாகத்தான் வெளியே எடுக்கப்பட்டான்.

இப்போது அந்த நண்பன் முத்து எனக்கு யார்?

திண்டுக்கல் சப்-கலெக்டர் அலுவலகத்தில் கிரிக்கெட் விளையாடச் சென்றபோது அங்கே கல், மண்களுக்கிடையில் இருந்த ஒரு வஸ்துவை விளையாட்டாக நான் எடுத்து கையில் வைத்திருக்க, "அதை என்கிட்ட கொடுடா.. நான் பார்த்திட்டுத் தர்றேன்.." என்று வாங்கிய என் தெருப்பையன்.. அதை நசுக்கிப் பார்க்க.. அது கணப்பொழுதில் வெடித்துச் சிதற அவனுடைய கண்கள் பாதிக்கப்பட்டு, அந்தக் குடும்பம் ஊரை விட்டே போனது..

அந்தப் பெயர் கூடத் தெரியாத நண்பன், எனக்கு என்ன வேண்டும்?

மதுரையில் குடியிருந்தபோது அரசரடி, பொன்மேனிப்புதூர் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. அதில் அன்றைக்கு மதுரை நகரின் மிகச் சிறந்த பாட்டுக் கச்சேரி குழுவான சுந்தர்-ஜெகன் கச்சேரி.. அதைப் பார்ப்பதற்காக வீட்டில் சண்டை போட்டு அனுமதி வாங்கிச் சென்ற நான்.. தெரு நண்பர்களுடன் ரோட்டை சிறுபிள்ளைத்தனமாக வேகமாக கிராஸ் செய்ய.. எதிரில் வந்த ஒரு லாரி சடன் பிரேக் போட்டு நிற்க.. அது சுமந்து வந்த விறகுக் கட்டைகளைக் கட்டியிருந்த கயிறு அறுந்து விழ.. அத்தனை விறகுக் கட்டைகளும் ரோட்டில் சிதறி விழுந்தது அந்தச் சாலையில் போக்குவரத்தே நின்று போனது. லாரியின் டிரைவர் கீழே இறங்கி அத்தனை கோபத்திலும் என்னிடம், "இனிமே இப்படி குறுக்க ஓடி வராத தம்பி.." என்று சொல்லிவிட்டுப் போனதை இன்றைக்கும் என்னால் மறக்க முடியவில்லை.

இப்போது இந்த டிரைவர், எனக்கு என்ன வேண்டும்?

திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் கடைசி நாளான வரலாறு தேர்வின்போது, பின்பக்கம் அமர்ந்திருந்த ஒரு அவசரக்குடுக்கை மாணவன் எனது பேப்பரையே உருவி காப்பியடிக்க ஆரம்பிக்க, எனக்கு வியர்த்து ஊத்தி விட்டது. ரவுண்ட்ஸ் வந்த ஆசிரியர் எனது முழிப்பைப் பார்த்து தவறைக் கண்டுபிடித்தவர், ஒரு வார்த்தை கூட பேசாமல் எனது பேப்பரை அவனிடமிருந்து வாங்கி, எனது கைக்குள் திணித்து விட்டுப் போனார். கண்காணிப்பாளராக வந்த இந்த ஆசிரியர், ஏன் அப்படிச் செய்தார் என்று இன்றைக்கும் எனக்கு குழப்பம் உண்டு.

அப்படியானால் இவர் யார்?

திண்டுக்கல் ஐடிஐயில் டீசல் மெக்கானிக் படித்துக் கொண்டிருந்தபோது NVGB தியேட்டரில் 'பாவம் கொடூரன்' மலையாளப் படம் பார்க்கும் அவசரத்தில் கிளாஸை கட் அடித்துவிட்டு ஒரே சைக்கிளில் மூவராக டிரிபுள்ஸ் சென்று கொண்டிருந்தோம். ரயில்வே ஸ்டேஷனுக்கு முன்பான இறக்கத்தில் வரும்போது, சைக்கிளின் முன் பக்க கேரியரே கையோடு வர.. முன்னால் அமர்ந்திருந்த நான் தூக்கி வீசப்பட்டு ஒரு வேனின் முன்புறத்தில் மோதி.. அப்படியே கீழே விழ.. சைடாக வந்த மோட்டார் சைக்கிள்காரர் என் தலை மீது மோதிவிடக்கூடாது என்பதற்காக பைக்கை திருப்பி அவர் கீழே விழுந்து மண்டை உடைந்து ரத்தம் சிந்தி மயக்கத்தில் கிடந்தார்.. அன்று எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் யார் அவரைத் தூக்கிச் சென்றது? அவர் என்ன ஆனார் என்பதெல்லாம் எனக்கு இன்றுவரையிலும் தெரியாது..

ஆனால் அவர் யார்?

மதுரை ஒத்தக்கடையைத் தாண்டியிருக்கும் டிராக்டர் ஒர்க்ஷாப்பில் டீசல் மெக்கானிக் அப்ரண்டீஸ் பயிற்சியில் இருக்கும்போது, திண்டுக்கல்லில் இருந்து தினமும் டிரெயினில் மதுரை சென்று வருவேன். அப்படியொரு நாள் ஓடிக் கொண்டிருந்த டிரெயினில் வாலிப முறுக்கில் தொற்ற முற்பட்டபோது, கால் ஸ்லிப்பாகி கீழே விழப் போன என்னை கிட்டத்தட்ட பிச்சைக்காரன் கோலத்தில் வித்தவுட் டிக்கெட்டில் வந்த ஒரு பரதேசி, பேயாய் உள்ளே இழுத்து விட்டுக் கதவைச் சாத்தியதை என்னால் எப்படி மறக்க முடியும்?

எவ்வளவோ கேட்டும் மேலேயும், கீழேயுமாக பார்த்து தனது பத்து வருட நீண்ட தாடியை வருடிக் கொண்டு எங்கயோ பார்த்தபடியிருந்து, விளாங்குடியில் இறங்கி திரும்பிப் பார்க்காமல் சென்ற அந்த பரதேசியோ, பிச்சைக்காரரோ,

அவர் யார்? அவர் எனக்கு என்னவாக வேண்டும்?

1995-ஜனவரி-1 அன்று காலை முதல் முறையாக சென்னையில் கால் பதித்தேன். கிண்டி சிப்பெட் பஸ் ஸ்டாப்பில் இறங்கி சென்று கொண்டிருந்தபோது, பஸ்ஸின் ஒரு பக்க கண்ணாடியை விலக்கிவிட்டு தலையை வெளியே நீட்டிய ஒருவர் "ஸார்.. ஸார்.." என்று என்னை அழைத்து, "என்ன 'பேக்'-ஐ மறந்து வைச்சிட்டீங்க...?" என்று சொல்லி எனது சர்டிபிகேட்ஸ் அடங்கிய 'பேக்'-ஐ சிரித்தபடியே என்னை நோக்கித் தூக்கிப் போட்டதை இப்போது நான் நினைத்தாலும் ஒரு கணம் என்னைத் தூக்கி வாரிப் போடுகிறது. அன்று மட்டும் அது பஸ்ஸோடு பஸ்ஸாக போயிருந்தால்..

அந்த நபருக்கு ஏன் அப்படியொரு உதவும் எண்ணம்? அவர் யார்?

சென்னையில் அயர்ன் செய்த பேண்ட், சட்டை போட்டுக் கொண்டு டீஸண்ட்டாக தெருத்தெருவாகச் சென்று பிச்சையெடுத்துக் கொண்டிருந்தபோது, வேலை கேட்டு போய் நின்ற ஆபீஸில், தற்செயலாக மேசையில் கிடந்த ஒரு பேப்பரைப் படித்து, "அதில் உள்ள தமிழ் கட்டுரையில் நிறைய எழுத்துப் பிழைகள் உள்ளன.." என்று யாரோ ஒருவரிடம் சொன்னதை ஒட்டுக் கேட்ட அந்த பத்திரிகையின் உதவி ஆசிரியர் என்னை தனியே அழைத்து, "இங்க ப்ரூப் ரீடர் வேலை இருக்கு.. பண்றீங்களா?" என்று கேட்டு நான் கேட்காமலேயே அதற்கு முன்பிருந்த பணியில் நான் வாங்கியிருந்த பிச்சைக்காசு சம்பளத்தைப் போல் இரு மடங்கு சம்பளத்தையும் சொன்னபோது என்னால் நம்ப முடியவில்லை. அங்கே துவங்கியதுதான் எனது எழுத்துப் பணி.. இவர் ஏன் அதை ஒட்டுக் கேட்க வேண்டும்? என்னை அழைத்து வேலை கொடுக்க வேண்டும்?

அப்படியானால் இவர் யார்?

கொடுக்கின்ற பேப்பரில் இருக்கின்றவற்றை டைப் செய்வதுதான் எனது வேலை.. அதற்குத்தான் சம்பளம் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு வேலை பார்த்த இடத்தில், "இது இப்படியிருந்தால் நன்றாக இருக்குமே.. அப்படியிருந்தால் நன்றாக இருக்குமே.." என்று ஆர்வக் கோளாறில் அலுவலக நண்பர்களிடம் சொல்லப் போய் அதை அவர்கள் கனகச்சிதமாகப் முதலாளியிடம் சென்று 'போட்டுக்' கொடுக்க அது அவரிடம் வேறுவிதமான எண்ணத்தைத் தோற்றுவித்துவிட்டது.

தொடர்ந்து இந்த உண்மைத்தமிழனின் பெயரை
'எழுத்து' என்ற பெயரின் கீழ் வரவழைத்துப் பெருமைப்படுத்தியது, நானே எதிர்பாராதது. இவருக்கு ஏன் இந்தக் கவலை? "நீ எழுதுடா.. உனக்கு அது நல்லா வருது.. தயவு செஞ்சு எழுத்தை மட்டும் விட்ராத.. எழுதிக்கிட்டே இரு.." என்று இன்றைக்கும் எனக்கு ஆக்ஸிஞன் ஊட்டிக் கொண்டிருக்கும்...

அவரை நான் யாரென்று சொல்வது?

சிறிது காலம் பெரியமேட்டில் இருக்கும் ரயில்வே குவார்ட்டர்ஸில் இருந்து மயிலாப்பூர் ஆபிஸிற்கு வந்து கொண்டிருந்த நான், ரயில்வே கிராஸிங்கை கடக்கும்போது காதில் மெஷின் மாட்டாமல் வந்ததால் ரயில் பின்னால் வருவதைக் கவனிக்காமல் வந்து.. சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் கொய்யாப்பழம் விற்ற ஒரு பெண்மணி தனது மார்பில் அடித்தபடி வந்து என்னை இழுத்துவிட்டதை நான் எந்தக் காலத்தில் மறப்பது?

இந்தப் பெண்மணிக்கு என் மேல் என்ன அக்கறை..?

நான் மேலே குறிப்பிட்ட இவைகளையும் தாண்டி அவ்வப்போது திடீர், திடீரென்று உதவி செய்கிறேன் என்று அவதாரம் எடுத்து என்னை அணுகிய நண்பர்களை “அது எப்படிய்யா.. இப்படி திடீர் திடீர்னு வந்து உதவி பண்றீங்க..?” என்று என்னை அறியாமல் கேட்கிறேன்..

ஆனால் அனைத்திற்குமான விடை எனக்குள்ளேயே இருக்கிறது..

அது, நிச்சயமாக இவர்கள் எனது இறைவன்கள்தான்.. கடவுள்கள்தான்.. எனக்குச் சந்தேகமில்லை.

இவர்களில் ஒருவர் 'பிழை' செய்திருந்தாலும் இந்த உண்மைத்தமிழன் இப்போது இருக்கும் வலைத்தள சூழலுக்கு வந்திருக்கவே முடியாது.. என் ‘கதை’ எப்போதோ முடிந்து போயிருக்கும்.. அல்லது திசை திரும்பி எப்படியோ போயிருக்கும்.

ஆனால் நான்கு பேர் பார்க்கும்விதமாக, பேசும் விதமாக, படிக்கும் விதமாக எனது வாழ்க்கையைத் திசை திருப்பிய அந்த இறைவன், ஒவ்வொரு முறையும் பல ரூபத்தில் என்னை அனுபவ ரீதியாக அணுகும்போதுதான் எனக்கு இறைவனின் ஆசி கிடைத்த அனுபவம் கிடைக்கிறது.

இதைத்தான் கண்ணதாசன் தனது கவிதைத் தொகுப்பில் சொல்லியிருக்கிறான். கண்ணதாசனை நான் தேடித் தேடிப் படித்தபோது இந்தக் கவிதை சிக்கியது.. எனது வாழ்க்கை மட்டுமல்ல. நம் அனைவரது வாழ்க்கையின் உண்மையையும் இந்த ஒரு கவிதையில் செதுக்கியிருக்கிறான் கவியரசன் கண்ணதாசன்.

நான் படித்து, அனுபவித்து, உணர்ந்த அந்தக் கவிதையை வலைத்தமிழர்களுக்காக இங்கே வைக்கிறேன். இதோ நீங்களும் சுவைத்துப் பாருங்கள்..

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!

படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!

அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!

அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!

முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!

இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!

'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!

ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

புரிந்து கொள்ளுங்கள் வலைத்தமிழர்களே..

இறைவனே அனுபவம்.. அனுபவமே இறைவன்.. அவன் எங்கேயும் போகவில்லை. நம்மில்தான் இருக்கிறான். நம்முடனேயே எப்போதும் இருக்கிறான். உணர்வோம்.. ஒன்றுபடுவோம்..

வாழ்க வளமுடன்..!

71 comments:

Unknown said...

வரிக்கு வரி நிதானமாக அனுபவித்து படித்தேன்.

இம்மாதிரி சிறந்த படைப்புகளை பாராட்ட 'அருமை, அற்புதம்' என்பதைத்தவிர வேறு வார்த்தைகள் தமிழில் இல்லை.

வேறு மொழிகளில் இருப்பதாகவும் தெரியவில்லை.

வடுவூர் குமார் said...

அதுக்குள்ள நூறா?
வாழ்த்துக்கள்.
படிக்க ஆரம்பித்தா 20 நிமிடங்களுக்கு மேல் ஆகிவிடும்,பிறகு வருகிறேன்.

Anonymous said...

செல்வன் சொல்வது போல நானும் ரசித்து பொறுமையாக படித்தேன்...

இந்த பதிவு நூறடிக்க வாழ்த்துக்கள்...!!!

நீர் (பதிவுகளில்) ஆயிரம் அடிக்க வாழ்த்துக்கள் !!

Anonymous said...

//இம்மாதிரி சிறந்த படைப்புகளை பாராட்ட 'அருமை, அற்புதம்' என்பதைத்தவிர வேறு வார்த்தைகள் தமிழில் இல்லை.//

repeatuuu

வெங்கட்ராமன் said...

100-வது சிறப்புப் பதிவு

சிறப்பான பதிவு

Radha Sriram said...

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை, அனுபவித்து படித்தேன்.உங்கள் பெயரில் மட்டும் உண்மையில்லை .உங்கள் எழுத்திலும்தான்.....

எல்லோருக்கும் ஒரு , 'guarding angel' உண்டு என்று சொல்ல்வார்களே அதுபோல...கஷ்ட்டத்தில் இருக்கும் போது உதவி இந்த guarding angels களிடமிருந்து வந்துவிடுகிறது...

இங்கு அமெரிக்காவில் மிக ப்ரபலமான ஒரு கார் நம்பர் ப்லேட் வாக்யம்,'Dont drive faster than your guarding angels can fly" என்பது

நூறு இறுனூராக வாழ்த்துக்கள்!!!

துளசி கோபால் said...

இந்த நூறுக்கும், இனி வரப்போகும் பல நூறுகளுக்கும் வாழ்த்து(க்)கள்.

'அனுபவம்தான் இறைவன்' கலப்படமே இல்லாத ஒரிஜனல்
'அக் மார்க்'அப்பட்டமான உண்மை.

ஒவ்வொருவரும் ஆண்டு அனுபவித்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.

NambikkaiRAMA said...

தங்கள் படைப்பு பாராட்டுதலுக்கு உரியது. செல்வன் மூலமாக இப்படைப்பை அறியப்பெற்றேன்.
வாழ்த்துக்கள்.
positiverama@gmail.com

மெளலி (மதுரையம்பதி) said...

மிக அருமை....செல்வன் மற்றும் பலர் சொல்லியது போல, வேறு வார்த்தைகள் தெரியவில்லை.

தங்களது 100 பதிவுகளில் ஒரு 50-70 பதிவுகள் நான் படித்திருப்பேன் என நினைக்கிறேன். பதிவுகள் பெரிதானாலும் தங்களது பல கருத்துக்களில் எனக்கு ஒப்புதல் உண்டு....

நீங்கள் மேலும், மேலும் சிறக்க இறைவனருளட்டும்.

Mohandoss said...

"பூஜ்ஜியத்துக்குள் ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு எவருக்கும் புரியாமல் இருப்பான் ஒருவன். அவனை புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்."

அப்படின்னு கண்ணதாசன் சொல்வார். உங்களுக்கு பூஜ்ஜியம் கைக்குள் அடங்கிருச்சுன்னு நினைக்கிறேன்.

இது மாதிரி பதிவுக்கு பெரும்பாலும் நாஸ்தீகவாதிகள் பின்னூட்டம் போட மாட்டாங்க அப்படிங்கிற மாயையை நான் உடைக்கிறேன். (இது சும்மா ஜல்லி)

திராவிட கழகங்களால் பரவலாக அறிமுகம் ஆன நாஸ்தீகம் எப்போ கொல்லப்பட்டதுன்னா, "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" அப்படிங்கிற தத்துவத்தை முன்மொழிஞ்சப்பதான்.

இவைகள் அனைத்தும் நம்பிக்கை சார்ந்தவை; கடவுள் நம்பிக்கையும் சரி, நாஸ்தீகமும் சரி.

அவைகள் மூடநம்பிக்கையாக ஆகும் வரையிலும், மற்றொருவருடைய நம்பிக்கையை கேலிக்குள்ளாக்காத வரையிலும் பொறுத்துக் கொள்ளக் கூடியவை.

//இன்றைய இளைஞர்களில் பெரும்பாலோர், எவர் ஒருவர் நேரில் வந்து அவர்களுக்கு ‘சிவாஜி' படத்திற்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்தால் மட்டும்தான் அவரை ‘கடவுள்’ என்று நம்புவோம் என்ற மனச்சூழலில் இருக்கிறார்கள்.//

ஒரு "நச்" பதிவில் இதுபோன்ற பக்வாஸ்கள் தேவைதானா. இது சும்மா எழுதப்பட்டதென்றால் ஓக்கே. தெரிஞ்சே எழுதினீர்கள் என்றால் இளைஞர்கள் நீங்கள் இன்னும் படிக்கவில்லை என்றே சொல்வேன்.

நாமக்கல் சிபி said...

சூப்பர்!

100க்கு வாழ்த்துக்கள்!

கும்மி அடிக்க வாய்ப்பில்லாம டச்சிங்கா எழுதிட்டீங்க!

Anonymous said...

//'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!//

ஹாஹா! இப்பொழுதாவது எம்மை புரிந்து கொண்டீரே!

:)

மேலும் உன் அனுபவங்களை 1000 ஆவது பதிவில் காண விழைகிறேன்!

அப்போது இதனினும் பக்குவப் பட்டவராக உம்மை நீர் உணர்வீர்!

கதிரவன் said...

100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்; ரொம்ப அருமையான பதிவு சரவணன் ! என் அனுபவங்களையும் நினைத்துப்பார்க்கச் செய்துவிட்டீர்கள்.

கண்ணதாசனின் கவிதையைச் சுட்டிக்காட்டியதற்கும் நன்றி

உண்மைத்தமிழன் said...

//செல்வன் said...
வரிக்கு வரி நிதானமாக அனுபவித்து படித்தேன். இம்மாதிரி சிறந்த படைப்புகளை பாராட்ட 'அருமை, அற்புதம்' என்பதைத்தவிர வேறு வார்த்தைகள் தமிழில் இல்லை. வேறு மொழிகளில் இருப்பதாகவும் தெரியவில்லை.//

முதல் பின்னூட்டமிட்டதற்கும், பல நண்பர்களிடம் இந்தப் பதிவைப் பற்றிச் சொல்லி படிக்க வைத்ததற்கும் உங்களுக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை செல்வன் ஸார்.. வாழ்க வளமுடன்..

உண்மைத்தமிழன் said...

//வடுவூர் குமார் said...
அதுக்குள்ள நூறா? வாழ்த்துக்கள். படிக்க ஆரம்பித்தா 20 நிமிடங்களுக்கு மேல் ஆகிவிடும்,பிறகு வருகிறேன்.//

இப்படிச் சொல்லிட்டுப் போய் நாலு மணி நேரமாச்சு.. குமார் ஸார்.. சீக்கிரம் வாங்க.. படிக்க ஆரம்பிச்சா 20 நிமிஷமா? இருக்காதே.. இப்பத்தான் 35 நிமிஷம்னு ஒரு பார்ட்டி போன் போட்டு திட்டித் தீர்த்துச்சு.. குறைச்சு சொல்றீங்களே ஸார்..

உண்மைத்தமிழன் said...

//செந்தழல் ரவி said...
செல்வன் சொல்வது போல நானும் ரசித்து பொறுமையாக படித்தேன்... இந்த பதிவு நூறடிக்க வாழ்த்துக்கள்...!!!
நீர் (பதிவுகளில்) ஆயிரம் அடிக்க வாழ்த்துக்கள்!!//

தம்பி ரவி.. முழுசையும் படிச்சியா கண்ணு.. சந்தோஷம்ப்பூ.. உன் ஆசியால ஆயிரமாவது பதிவையும் இந்த வருஷத்துக்குள்ள போட்டே தீருவேன்.. நன்றி.. நன்றி..

உண்மைத்தமிழன் said...

//வெங்கட்ராமன் said...
100-வது சிறப்புப் பதிவு
சிறப்பான பதிவு//

ராஜபாட்டை ஸார்.. உங்களுடைய முதல் வருகை இது.. நன்றிகள்.. உங்களைத் தேடி ஆட்டோ ஏதும் வரலியா? வந்தா கொஞ்சம் சொல்லுங்க ஸார்.. நான் தப்பிச்சுக்கிறேன்..

வடுவூர் குமார் said...

உண்மைத்தமிழன்
இப்போது புரிந்தது...இப்படிப்பட்ட எழுத்து எப்படி வருகிறது என்று.
படிக்கப்படிக்க எனக்கு பின்னாலும் ரயில் வருவது கூட தெரியாமல் படித்துக்கொண்டிருக்கிறேனே என்ற எண்ணம் வருகிறது.
எல்லாவற்றையும் சொல்லனும் என்றால் உங்கள் பதிவையே திரும்ப எழுதவேண்டியிருக்கும்.

உண்மைத்தமிழன் said...

//Radha Sriram said...
எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை, அனுபவித்து படித்தேன்.உங்கள் பெயரில் மட்டும் உண்மையில்லை .உங்கள் எழுத்திலும்தான்.....
எல்லோருக்கும் ஒரு , 'guarding angel' உண்டு என்று சொல்வார்களே அதுபோல...கஷ்டத்தில் இருக்கும் போது உதவி இந்த guarding angels களிடமிருந்து வந்துவிடுகிறது...
இங்கு அமெரிக்காவில் மிக ப்ரபலமான ஒரு கார் நம்பர் ப்லேட் வாக்யம்,'Dont drive faster than your guarding angels can fly" என்பது
நூறு இறுனூராக வாழ்த்துக்கள்!!!//

மிக்க நன்றிகள்.. முதல் வருகையும், முதல் கமெண்ட்டுமே அருமை.. இந்த 'காக்கும் தேவதைகள்' அனைத்து மனிதர்களையும் தேடி வருகிறார்கள். உதவி செய்கிறார்கள். அந்த உதவியைப் பயன்படுத்திக் கொள்பவர்கள்தான் மிகவும் குறைவு. புரிந்து கொண்டவர்கள் பயன் பெறுகிறார்கள். இயலாதவர்கள் மீண்டும், மீண்டும் முயல்கிறார்கள். அவரவர் அனுபவங்கள்தான் அனைவரையும் வழி நடத்தும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. தங்களது மேலான தகவலுக்கும் எனது நன்றிகள்.. வாழ்க வளமுடன்..

உண்மைத்தமிழன் said...

//துளசி கோபால் said...
இந்த நூறுக்கும், இனி வரப்போகும் பல நூறுகளுக்கும் வாழ்த்து(க்)கள். 'அனுபவம்தான் இறைவன்' கலப்படமே இல்லாத ஒரிஜனல் 'அக் மார்க்'அப்பட்டமான உண்மை. ஒவ்வொருவரும் ஆண்டு அனுபவித்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.//

டீச்சர் உங்களுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்களுக்கும், இப்போதைய வாழ்த்துக்களுக்கும் எனது நன்றிகள்.. வலைப்பதிவில் நான் நுழைந்ததிலிருந்தே எனது ஒவ்வொரு பதிவிற்கும் வந்து சரியோ, தவறோ உங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு என்னை உற்சாகப்படுத்திக் கொண்டே வருகிறீர்கள்.. இதுவும் ஆண்டவன் எனக்குக் கொடுத்திருக்கும் அனுபவக் கதை என்றுதான் நான் நினைக்கிறேன்.. இதனைப் புரிந்து கொண்டால் அனைவருக்குமே நல்லது. வாழ்க வளமுடன்..

நந்தா said...

டாப் க்ளாஸ் பதிவி. அதுக்குள்ள 100வது பதிவா? சும்மா ஜெட் வேகத்துல போறீங்களே.

உங்களுடைய பதிவோட ப்ள்ஸ் பாயிண்டே, எவ்ளோவ் பெரிய்ய பதிவா இருந்தாலும், சலிப்படைய விடாம எங்களை கட்டிப் போடற மாதிரி எழுதுவதுதான்.

ஆனால் இந்த பதிவில் நீங்கள் சொல்லி இருக்கிற விஷயம் ரொம்ப ஆழமான விஷயம்.

"மனிதாபிமானத்தை விட சிறந்த ஆன்மீகம் இல்லை என்பதை அழகாக சொல்லியுள்ளீர்கள்....."

வாழ்த்துக்கள்.

உண்மைத்தமிழன் said...

//PositiveRAMA said...
தங்கள் படைப்பு பாராட்டுதலுக்கு உரியது. செல்வன் மூலமாக இப்படைப்பை அறியப்பெற்றேன்.
வாழ்த்துக்கள். positiverama@gmail.com//

நானும் இப்போதுதான் தங்களது தளத்திற்குள் நுழைந்து ஸ்ரீஇராமபிரானின் ஆசிகளைப் பெற்றேன்.. நன்றிகள் ராமா ஸார்.. செல்வன் ஸாருக்கும் எனது நன்றிகள்..

Anonymous said...

அன்பே சிவம் என்பதை மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கை அனுபவங்கள் திடுக்கிடச் செய்கின்றன.

தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன் நன்றி.
http://www.desipundit.com/2007/06/04/iraivan/

ஜோ/Joe said...

மிக நல்ல பதிவு..ரசித்தேன் .நன்றி!

Sridhar V said...

100-க்கு வாழ்த்துக்கள்.

அனுபவங்களை இவ்வளவு கோர்வையாக அழகாக எழுதுவது ஒரு கலைதான். சிறு விஷயங்களையும் கவனமாக எழுதியிருக்கிறீர்கள். நல்ல ஒரு வாசிப்பனுபவம்.

//சந்தோஷம்ப்பூ.. உன் ஆசியால ஆயிரமாவது பதிவையும் இந்த வருஷத்துக்குள்ள போட்டே தீருவேன்.. //

உங்கள் பதிவுகளின் நீளத்தை கணக்கு பண்ணிப் பார்த்தா இப்பவே நீங்க ஒரு 500 கிட்டக்க வந்திருப்பீங்க :-))

எண்ணிய வண்ணம் ஆயிரம் அடிக்க வாழ்த்துக்கள்.

Hariharan # 03985177737685368452 said...

எதார்த்தமான அனுபவப் பகிர்வு.
வாழ்த்துக்கள் உண்மைத்தமிழன்.

தெய்வம் (/இறைவன்/பகவான்) மனுஷ ரூபேன - என்று சொல்வார்கள்.

இறைவன் உண்மையில் நமக்கு உள்ளே இருக்கிறான்.

நீங்கள் சொன்ன அத்தனை பேரும் அவர்களுக்குள் இருக்கும் இறைத்தன்மையை வெளிப்படுத்தி இருக்கின்றார்கள்.

நமக்குள் இருக்கும் இறைத்தன்மையை வெளிப்படுத்த இயலாமல்/ உணராமல் செய்வது புலன் இச்சையில் திளைத்தல்-பொருள்சார் விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருதல் என்கிற சுயநலம்-பொறாமை-ஈகோ குணாதிசயங்கள்.

ஒளியாய் நமக்கு உள்ளே ஜொலிக்கும் இறைத்தன்மையைப் கெட்ட குணாதிசய போர்வையைப் போட்டு மூடிவைத்து இறைவனை இருட்டில் தேடுவதில் பலனில்லை.

எங்கே இருக்கிறான் இறைவன் - நமக்கு உள்ளே தான் இருக்கிறான். தனிப்பட்ட நபர்களாகிய நாம் நமது மெய்யான இயல்பாகிய இறைத்தன்மையை வெளிப்படுத்தினால் சமூகத்தில் எங்கும் காணப்படுவான் - எளிதாக அனைவராலும்!

100க்கு வாழ்த்துக்கள்!

Anonymous said...

உண்மைத் தமிழரே!
கடவுளைக் காட்டிய உங்கள் பாணி வெகு அற்புதம்.
கடவுள் வேறு காப்பவர் வேறு அல்ல என்பதையும்,
உருவங்கள் பல ஆனாலும் உள்ளிருப்பவர் ஒருவர் என்பதையும்
உங்கள் அனுபவச் சாறுகள் மூலம்
மிக அழகாக உணர்த்தியுள்ளீர்கள்.
வாழ்த்துகள்!

CVR said...

மிக அழகான பதிவு !!
வாழ்த்துக்கள்! :-)

அது ஒரு கனாக் காலம் said...

excellent ..keep it up. உனக்குள் (ம்) கடவுள் உண்டு....each and every person has a godly quality ( and some other side )...

Very positive blog, all the very best.

Sundar
Dubai

Anonymous said...

Simply Superb!


Congrats for your centurysrinivas from dubai

தென்றல் said...

சிறப்பு பதிவு ரொம்ப சிறப்பா இருந்தது, உண்மைத் தமிழன்!

சச்சின் சாதனையை முறியடிக்க வாழ்த்துக்கள்! ;)

ACE !! said...

உங்க பதிவு எல்லாமே பொறுமையா, ஆழ்ந்து படிக்க வேண்டியவை..

இந்த பதிவு டாப் கிளாஸ்.. 2 முறை படித்தேன்.. :D :D..

அனுபவமே இறைவன்னு நச்சுன்னு சொல்லி இருக்கீங்க..

சிறிய வேண்டுகோள் : எங்களுக்கு படிக்க நேரம் கொடுங்க.. இத்தனை வேகமா இத்தனை பெரிய பதிவு போட்டா எப்படி எல்லாத்தையும் படிக்கறது??

ACE !! said...

மறந்துட்டேன்.. சதத்துக்கு வாழ்த்துக்கள்.. சகத்திரத்துக்கும் வாழ்த்துக்கள் :D :D

சிறில் அலெக்ஸ் said...

இவர்களை கடவுள் என்றால் கடவுள் மனிதர் என்றால் மனிதர். இதையே கண்ணதாசனும் தெய்வமென்றால் அது தெய்வம் சிலையென்றால் வெறும் சிலைதான் என்றிருப்பார்.

நாத்திகத்துக்கும் ஆத்திகத்துக்கும் 'ந'தான் வித்தியாசம் அந்த 'ந' நம்பிக்கை.

இது இருந்தே ஆகவேண்டும் என்பதுமில்லை இருப்பது மூடத்தனம் என்பதுமில்லை. கடவுளின் பெயரில் மனிதன் செய்யும் அக்கிரமங்களை எதிர்ப்பதும் சுட்டிக்காட்டுவதுமே நாத்திகத்தின் அடிப்படை நோக்கமாயிருக்கக்கூடும்(வேண்டும்).

100க்கு வாழ்த்துக்கள்.

உண்மைத்தமிழன் said...

//மதுரையம்பதி said...
மிக அருமை....செல்வன் மற்றும் பலர் சொல்லியது போல, வேறு வார்த்தைகள் தெரியவில்லை.
தங்களது 100 பதிவுகளில் ஒரு 50-70 பதிவுகள் நான் படித்திருப்பேன் என நினைக்கிறேன். பதிவுகள் பெரிதானாலும் தங்களது பல கருத்துக்களில் எனக்கு ஒப்புதல் உண்டு....
நீங்கள் மேலும், மேலும் சிறக்க இறைவனருளட்டும்.//

மதுரையம்பதி ஸார்.. எனது பதிவுகளிலேயே நிறைய படித்திருக்கிறீர்கள். கேட்பதற்கும், இதைப் படிப்பதற்குமே எனக்குச் சந்தோஷமாக உள்ளது.. உங்களைப் போன்றவர்களின் ஊக்குவிப்பினால்தான் இந்த உண்மைத்தமிழனின் எழுத்து ஆர்வம் கூடிக் கொண்டே செல்கிறது.. நன்றிகள்.. நன்றிகள்..

Sundar Padmanaban said...

100-வது பதிவுக்கு வாழ்த்துகள். மேன்மேலும் நிறைய எழுதிச் சிறக்கவும் வாழ்த்துகிறேன்.

சம்பவக் கோர்வைகள் அருமையான அனுபவப் பகிர்வுகள். ஓடிக்கொண்டிருப்பதை நிறுத்திவிட்டுச் சற்றே ஆசுவாசப்படுத்திக்கொண்டு யோசித்தால் எல்லாருக்கும் இதுபோன்று நிறைய அனுபவங்கள் நிறைய இருக்கும். அடையாளம் கண்டுகொள்ளவும் முடியும். என்ன - ஓட்டத்தை நிறுத்தி யோசிக்க முயல்வதில்லை.

நல்ல (தப்பித்த) சம்பவங்களை மட்டும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதே போல துர்சம்பவங்களையும் சற்றே யோசித்தால் எங்காவது 'கொஞ்சம் கவனமா இருங்க' என்று லேசாகவாவது யாராவது கோடி காட்டியிருப்பார்கள். அதுவும் இறை-தான். ஆனால் 'விதி' என்று சொல்லிவிட்டுப் போகிறோம்! :-)

மனமார்ந்த பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.

உண்மைத்தமிழன் said...

//மோகன்தாஸ் said...
"பூஜ்ஜியத்துக்குள் ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு எவருக்கும் புரியாமல் இருப்பான் ஒருவன். அவனை புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்." அப்படின்னு கண்ணதாசன் சொல்வார். உங்களுக்கு பூஜ்ஜியம் கைக்குள் அடங்கிருச்சுன்னு நினைக்கிறேன்.//

ஐயையோ மோகனு.. எனக்குத் தோணுறதைத்தான் எழுதுறேன்.. இந்தக் கவிதையையும் நான் படிச்சிட்டேன். அர்த்தமுள்ள இந்து மதம் நூலில்தான் இது உள்ளது.

//இது மாதிரி பதிவுக்கு பெரும்பாலும் நாஸ்தீகவாதிகள் பின்னூட்டம் போட மாட்டாங்க அப்படிங்கிற மாயையை நான் உடைக்கிறேன். (இது சும்மா ஜல்லி) திராவிட கழகங்களால் பரவலாக அறிமுகம் ஆன நாஸ்தீகம் எப்போ கொல்லப்பட்டதுன்னா, "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" அப்படிங்கிற தத்துவத்தை முன்மொழிஞ்சப்பதான். வைகள் அனைத்தும் நம்பிக்கை சார்ந்தவை; கடவுள் நம்பிக்கையும் சரி, நாஸ்தீகமும் சரி. அவைகள் மூடநம்பிக்கையாக ஆகும் வரையிலும், மற்றொருவருடைய நம்பிக்கையை கேலிக்குள்ளாக்காத வரையிலும் பொறுத்துக் கொள்ளக் கூடியவை.//

இதை நானும் ஒத்துக் கொள்கிறேன் மோகா.. நாத்திகம் என்பதே ஆத்திகத்தை பரப்பவதற்காக, வளர்ப்பதற்காக உடன் இணைந்து வரும் ஒரு இயக்கம் என்றே நான் எண்ணுகிறேன்.

///இன்றைய இளைஞர்களில் பெரும்பாலோர், எவர் ஒருவர் நேரில் வந்து அவர்களுக்கு ‘சிவாஜி' படத்திற்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்தால் மட்டும்தான் அவரை ‘கடவுள்’ என்று நம்புவோம் என்ற மனச்சூழலில் இருக்கிறார்கள்.//

ஒரு "நச்" பதிவில் இதுபோன்ற பக்வாஸ்கள் தேவைதானா. இது சும்மா எழுதப்பட்டதென்றால் ஓக்கே. தெரிஞ்சே எழுதினீர்கள் என்றால் இளைஞர்கள் நீங்கள் இன்னும் படிக்கவில்லை என்றே சொல்வேன்.///

இல்லை மோகன். நீங்கள் படித்தவர். நான் உங்க லெவலுக்கு இல்லையென்றாலும் சுமாராகப் படித்தவன்.. ஆனால் சினிமா தியேட்டரில் 10 ரூபாய் டிக்கெட்டில் படம் பார்க்க போலீஸ் அடியையும் வாங்கிக் கொண்டு நிற்பவனிடம் போய் கடவுளைப் பற்றிக் கேளுங்கள்.. அவன் இதைத்தான் சொல்வான்.. இவர்களுக்குத்தான் கோவில் என்பது பொழுதைப் போக்கும் இடமாகத் தெரிகிறது.

உண்மைத்தமிழன் said...

//நாமக்கல் சிபி said...
சூப்பர்! 100க்கு வாழ்த்துக்கள்! கும்மி அடிக்க வாய்ப்பில்லாம டச்சிங்கா எழுதிட்டீங்க!//

கும்மியா? ஏம்ப்பா ஏதோ டீ குடிக்க வர்றியான்னு கேக்குற மாதிரி கேக்குற..? மனுஷன் இந்த ஹெல்மெட் பிரச்சினையால எம்மாம் கஷ்டப்பட்டுக்கின்னு இருக்கான் தெர்யுமா? இப்ப போய் தலைல ஆணி பிடுங்கணும்னா எப்படி? செத்த பேசாம இரு.. அதுக்கெல்லாம் ஒரு வாய்ப்பு வரும்.. அப்பால அதுல ஜமுக்காளத்தைப் போட்டு கும்மியடி.. யாரும் கேக்க மாட்டாக.. சரியா?

உண்மைத்தமிழன் said...

//நாமக்கல் சிபி said...
சூப்பர்! 100க்கு வாழ்த்துக்கள்! கும்மி அடிக்க வாய்ப்பில்லாம டச்சிங்கா எழுதிட்டீங்க!//

கும்மியா? ஏம்ப்பா ஏதோ டீ குடிக்க வர்றியான்னு கேக்குற மாதிரி கேக்குற..? மனுஷன் இந்த ஹெல்மெட் பிரச்சினையால எம்மாம் கஷ்டப்பட்டுக்கின்னு இருக்கான் தெர்யுமா? இப்ப போய் தலைல ஆணி பிடுங்கணும்னா எப்படி? செத்த பேசாம இரு.. அதுக்கெல்லாம் ஒரு வாய்ப்பு வரும்.. அப்பால அதுல ஜமுக்காளத்தைப் போட்டு கும்மியடி.. யாரும் கேக்க மாட்டாக.. சரியா?

உண்மைத்தமிழன் said...

//கதிரவன் said...
100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்; ரொம்ப அருமையான பதிவு சரவணன் ! என் அனுபவங்களையும் நினைத்துப்பார்க்கச் செய்துவிட்டீர்கள். கண்ணதாசனின் கவிதையைச் சுட்டிக்காட்டியதற்கும் நன்றி//


நன்றி கதிரவன்.. உங்களுக்கும் இதே அனுபவங்களா? நல்லது.. அனுபவமே கடவுள்.. நான்கு பேரிடம் சொல்லுங்கள்.. புரிந்து கொண்டவன் ஒருவன் என்றாலும் அந்தப் புண்ணியம் உங்களைச் சேரும்..

உண்மைத்தமிழன் said...

//வடுவூர் குமார் said...
உண்மைத்தமிழன் இப்போது புரிந்தது...இப்படிப்பட்ட எழுத்து எப்படி வருகிறது என்று. படிக்கப்படிக்க எனக்கு பின்னாலும் ரயில் வருவது கூட தெரியாமல் படித்துக்கொண்டிருக்கிறேனே என்ற எண்ணம் வருகிறது.
எல்லாவற்றையும் சொல்லனும் என்றால் உங்கள் பதிவையே திரும்ப எழுதவேண்டியிருக்கும்.//

வடுவூர் ஸார்.. பதிவையே திருப்பிச் சொல்ல வேண்டாம்.. உங்களுடைய சில நிகழ்வுகளை வெளியில் சொல்லுங்கள். படிக்கின்றவர்களுக்கு பாரம் குறையும். நம்மைப் போலவே ஒருவரும் இருக்கிறாரே என்று.. தவறில்லை.. நாம் அனைவருமே கடவுளின் பிள்ளைகள்தானே.. சொல்லி வைத்தாற்போல் வந்து நின்றமைக்கு எனது நன்றிகள்..

Anonymous said...

யார் நீ எங்கிருக்கிறாய்?

1

2

ஓகை said...

எல்லாரும் பாராட்டிட்டதால நான் கொஞ்சம் கலாய்ச்சுக்கிறேன்.

இத்தன பேரு உங்கள காப்பாத்தியிருக்காங்க அதான் உங்களுக்கு சுளுவா கடவுள் நம்பிக்கை வந்திருச்சி. நமக்கு வர்ர நல்லதெல்லாம் கடவுள் குடுத்ததுன்னு நினைச்சா பக்தி தன்னால வருது. இல்லல்ல அது நம்ம தெறமன்னு நெனைக்கிறவங்களுக்கு சாமியாவது பூதமாவது!

ஓகை said...

///இன்றைய இளைஞர்களில் பெரும்பாலோர், எவர் ஒருவர் நேரில் வந்து அவர்களுக்கு ‘சிவாஜி' படத்திற்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்தால் மட்டும்தான் அவரை ‘கடவுள்’ என்று நம்புவோம் என்ற மனச்சூழலில் இருக்கிறார்கள்.//

ஒரு "நச்" பதிவில் இதுபோன்ற பக்வாஸ்கள் தேவைதானா. இது சும்மா எழுதப்பட்டதென்றால் ஓக்கே. தெரிஞ்சே எழுதினீர்கள் என்றால் இளைஞர்கள் நீங்கள் இன்னும் படிக்கவில்லை என்றே சொல்வேன்.///

உங்களால் படிக்கப்பட்ட இளைஞர்களை விட படிக்கப்படாத இளைஞர்கள் ரொம்ப குறைவு என்று சொல்லலாம்.

உண்மைத்தமிழன் said...

நன்றி நந்தா, டுபுக்கு, ஜோ, ஸ்ரீதர் வெங்கட், சிவிஆர் ஐயா மற்றும் துபாயிலிருந்து அவ்வப்போது வரும் சுந்தர், சீனிவாஸ் ஆகியோருக்கு.. கடைசி வரைக்கும் படித்த முடித்த உங்களுடைய பொறுமைக்கு எனது இதயங்கனிந்த நன்றிகள் பல.. பல..

உண்மைத்தமிழன் said...

//Hariharan # 03985177737685368452 said...
எங்கே இருக்கிறான் இறைவன் - நமக்கு உள்ளே தான் இருக்கிறான். தனிப்பட்ட நபர்களாகிய நாம் நமது மெய்யான இயல்பாகிய இறைத்தன்மையை வெளிப்படுத்தினால் சமூகத்தில் எங்கும் காணப்படுவான் - எளிதாக அனைவராலும்! 100க்கு வாழ்த்துக்கள்!//

உண்மைதான் ஹரிஹரன் ஸார்.. இப்போது நாத்திகம் என்பது பேஷன் என்கிற அளவுக்குத்தான் இளைஞர்களிடத்தில் பரவி வருகிறது. ஒரு பாடம் பயின்ற பிறகுதான் உண்மையை உணர்ந்து பக்தி மார்க்கத்திற்குத் திரும்புகிறார்கள். அந்த இடைவெளியில் அவர்கள் அனுபவிக்கின்ற துன்பங்களே அவர்களின் கடைசிக் காலம்வரைக்கும் வாழ்க்கையை அமைதியாகச் செல்ல உதவும் ஒரு பாடம் என்றே நான் நினைக்கிறேன். தங்களது வருகைக்கும், கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் எனது நன்றிகள்..

உண்மைத்தமிழன் said...

//சிங்கம்லே ACE !! said...
உங்க பதிவு எல்லாமே பொறுமையா, ஆழ்ந்து படிக்க வேண்டியவை..
இந்த பதிவு டாப் கிளாஸ்.. 2 முறை படித்தேன்.. :D :D..//

2 முறையா..? என் பதிவு ஒன்றை 2 முறை படித்தேன் என்று வெளியில் சொன்ன சிங்கம்லே அவர்களுக்கு என்ன தண்டனை என்பதை சக வலைப்பதிவர்கள் முடிவு செய்வார்கள்.

//அனுபவமே இறைவன்னு நச்சுன்னு சொல்லி இருக்கீங்க..
சிறிய வேண்டுகோள் : எங்களுக்கு படிக்க நேரம் கொடுங்க.. இத்தனை வேகமா இத்தனை பெரிய பதிவு போட்டா எப்படி எல்லாத்தையும் படிக்கறது??//

வேகமா? ரொம்ப ஸ்லோன்னு நினைச்சுக்கிட்டிருக்கேன் சிங்கம்.. வேகம்ன்னுறீங்க..? சரி சரி.. இனிமே தினத்துக்கு நாலு போடுறேன்.. ஓகேவா..

//மறந்துட்டேன்.. சதத்துக்கு வாழ்த்துக்கள்.. சகத்திரத்துக்கும் வாழ்த்துக்கள் :D :D//

நானும் மறந்திட்டேன்.. இப்பச் சொல்லிர்றேன்.. வந்ததுக்கும், கருத்துச் சொன்னதுக்கும் நான்கு முறை நன்றிகள்.. நன்றிகள்.. நன்றிகள்.. நன்றிகள்..

உண்மைத்தமிழன் said...

//சிறில் அலெக்ஸ் said...
இவர்களை கடவுள் என்றால் கடவுள் மனிதர் என்றால் மனிதர். இதையே கண்ணதாசனும் தெய்வமென்றால் அது தெய்வம் சிலையென்றால் வெறும் சிலைதான் என்றிருப்பார்.
நாத்திகத்துக்கும் ஆத்திகத்துக்கும் 'ந'தான் வித்தியாசம் அந்த 'ந' நம்பிக்கை.
இது இருந்தே ஆகவேண்டும் என்பதுமில்லை இருப்பது மூடத்தனம் என்பதுமில்லை. கடவுளின் பெயரில் மனிதன் செய்யும் அக்கிரமங்களை எதிர்ப்பதும் சுட்டிக்காட்டுவதுமே நாத்திகத்தின் அடிப்படை நோக்கமாயிருக்கக்கூடும்(வேண்டும்).
100க்கு வாழ்த்துக்கள்.//

சிறில் ஸார்.. ஒத்துக்குறேன்.. நெஜந்தான்.. ஒரு எழுத்து வித்தியாசம்னாலும் உலகம் முழுக்கு எத்தனை வருஷமா அக்கப்போர் நடக்குது பாருங்க..

நாத்திகம், ஆத்திகத்தின் அடிப்படையையே தகர்க்க முயன்றதால்தான் இப்போது பிரச்சினையே..

கடவுள் என்ற ஒன்றையே நாத்திகம் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லையே.

ஆத்திகத்தின் அடிப்படை நோக்கம் ஆத்திகம் மூலம் மனிதர்களை மனிதப்படுத்துதலாக இருக்க வேண்டும்.

நாத்திகத்தின் நோக்கம் ஆத்திகத்தின் பெயரால் நடத்தப்படும் முட்டாள்தனங்களை எதிர்க்க வேண்டும். இதில் எனக்கும் முழு ஒப்புதல் சிறில் ஸார்..

நேற்றே பதில் போட்டிருக்க வேண்டும்.. ஆனால்.. அலுவலகத்தில் பெரிய்யயயயயயயயயய வேலை.. ஸாரி ஸார்..

உண்மைத்தமிழன் said...

//"வற்றாயிருப்பு" சுந்தர் said...
100-வது பதிவுக்கு வாழ்த்துகள். மேன்மேலும் நிறைய எழுதிச் சிறக்கவும் வாழ்த்துகிறேன்.
சம்பவக் கோர்வைகள் அருமையான அனுபவப் பகிர்வுகள். ஓடிக்கொண்டிருப்பதை நிறுத்திவிட்டுச் சற்றே ஆசுவாசப்படுத்திக்கொண்டு யோசித்தால் எல்லாருக்கும் இதுபோன்று நிறைய அனுபவங்கள் நிறைய இருக்கும். அடையாளம் கண்டுகொள்ளவும் முடியும். என்ன - ஓட்டத்தை நிறுத்தி யோசிக்க முயல்வதில்லை.
நல்ல (தப்பித்த) சம்பவங்களை மட்டும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதே போல துர்சம்பவங்களையும் சற்றே யோசித்தால் எங்காவது 'கொஞ்சம் கவனமா இருங்க' என்று லேசாகவாவது யாராவது கோடி காட்டியிருப்பார்கள். அதுவும் இறை-தான். ஆனால் 'விதி' என்று சொல்லிவிட்டுப் போகிறோம்! :-)
மனமார்ந்த பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.//

நன்றி சுந்தர் ஸார்.. தப்பித்த சம்பவங்களும் எனது வாழ்க்கையில் உண்டு. நீங்கள் சொல்வது போலவே விதி என்ற பெயரால் மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டோம். ஏனெனில் பகுத்தறிவைப் பயன்படுத்திக் காரண கர்த்தாவை கண்டுபிடித்து தண்டிக்க முயன்றால் நாட்டில் ஒரு குடும்பத்தில்கூட அமைதி நிலவாது.. இது எனது கருத்து.. உங்களது மனமார்ந்த பாராட்டுக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

உண்மைத்தமிழன் said...

//ஓகை said...
எல்லாரும் பாராட்டிட்டதால நான் கொஞ்சம் கலாய்ச்சுக்கிறேன். இத்தன பேரு உங்கள காப்பாத்தியிருக்காங்க அதான் உங்களுக்கு சுளுவா கடவுள் நம்பிக்கை வந்திருச்சி. நமக்கு வர்ர நல்லதெல்லாம் கடவுள் குடுத்ததுன்னு நினைச்சா பக்தி தன்னால வருது. இல்லல்ல அது நம்ம தெறமன்னு நெனைக்கிறவங்களுக்கு சாமியாவது பூதமாவது!//

திறமைன்னு நினைக்கிறவனும் ஒரு நாள் மண்டி போட்டுத்தான் ஸார் ஆகணும்.. இப்படிப்பட்ட திறமைசாலிகளை நானும் பார்த்திருக்கிறேன். தோல்வியடைந்த பிறகுதான் அனைவரும் கோயில், குளம் என்று சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

///இன்றைய இளைஞர்களில் பெரும்பாலோர், எவர் ஒருவர் நேரில் வந்து அவர்களுக்கு ‘சிவாஜி' படத்திற்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்தால் மட்டும்தான் அவரை ‘கடவுள்’ என்று நம்புவோம் என்ற மனச்சூழலில் இருக்கிறார்கள்.//
ஒரு "நச்" பதிவில் இதுபோன்ற பக்வாஸ்கள் தேவைதானா. இது சும்மா எழுதப்பட்டதென்றால் ஓக்கே. தெரிஞ்சே எழுதினீர்கள் என்றால் இளைஞர்கள் நீங்கள் இன்னும் படிக்கவில்லை என்றே சொல்வேன்.//
உங்களால் படிக்கப்பட்ட இளைஞர்களை விட படிக்கப்படாத இளைஞர்கள் ரொம்ப குறைவு என்று சொல்லலாம்.///

உங்களுக்குப் புரிந்தது இனி சகோதரர் மோகன்தாஸ்க்கும் புரியும் என்று நினைக்கின்றேன்.. தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் எனது நன்றிகள்..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
யார் நீ எங்கிருக்கிறாய்?
1
2//

அனானி தெய்வமே.. கனெக்ஷனுக்கு நன்றி.. இப்ப தலைக்கு மேல லைட் எரியுது.. வெளிச்சத்துல எல்லாத்தையும் படிச்சிட்டேன். வாழ்க வளமுடன்..

MSATHIA said...

உணமைத்தமிழன்,
அருமையான எழுத்து நடை உங்களுக்கு.உங்களின் பல பதிவுகள் படித்திருந்தாலும் பின்னூட்டம் போட்டதில்லை.

\\முன்னால் அமர்ந்திருந்த நான் தூக்கி வீசப்பட்டு ஒரு வேனின் முன்புறத்தில் மோதி.. அப்படியே கீழே விழ.. சைடாக வந்த மோட்டார் சைக்கிள்காரர் என் தலை மீது மோதிவிடக்கூடாது என்பதற்காக பைக்கை திருப்பி அவர் கீழே விழுந்து மண்டை உடைந்து ரத்தம் சிந்தி மயக்கத்தில் கிடந்தார்.. அன்று எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் யார் அவரைத் தூக்கிச் சென்றது? அவர் என்ன ஆனார் என்பதெல்லாம் எனக்கு இன்றுவரையிலும் தெரியாது.. ஆனால் அவர் யார்?\\

\\சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் கொய்யாப்பழம் விற்ற ஒரு பெண்மணி தனது மார்பில் அடித்தபடி வந்து என்னை இழுத்துவிட்டதை நான் எந்தக் காலத்தில் மறப்பது?\\
காட்சிகளை கண்முன்னால் கொண்டு வருகிறீர்கள். உண்மையில் நடந்தவை எனும் போது நெஞ்சு உறைகிறது.

நூறு பதிவுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் நூறாண்டு காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

parameswary namebley said...

ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க ஐயா.. எங்கே கடவுள் என தேடுபவர்களுக்கு அவர் நம்மில் தான் இருக்கிறார் என்று உணர்த்தியிருக்கிறீர்கள்...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நூறான பதிவுகளும் - நல்ல
சாறான பதிவுகளும் மேன்மேலும் தாருங்கள். வாழ்த்துக்கள்.

அனுபவம் இறைவன் ஆகிறது!
இறைவனும் அனுபவம் ஆகிறான்!
ஆபிசில் முன் "அனுபவம்" இருக்கான்னு கேட்கறாங்க!
அதே சமயம் ஆன்மீகத்திலும் இறை "அனுபவம்"-ன்னு தான் சொல்றாங்க! :-)

//லாரியின் டிரைவர் கீழே இறங்கி அத்தனை கோபத்திலும் என்னிடம், "இனிமே இப்படி குறுக்க ஓடி வராத தம்பி.."//

சில சமயங்களில் மெத்தப் படித்ததாகச் சொல்லிக் கொள்ளும் நாமே, நம் வாயில் இருந்து என்ன வார்த்தைகள் வரும் என்று அறிய மாட்டோமா என்ன? :-)

இப்படி பல சம்பவங்கள் எல்லார் வாழ்விலும் பாரபட்சம் இல்லாது(படித்தவன்/பணக்காரன்/ஏழை/கோழை...) நிகழத் தான் செய்கின்றன.
ஆனால் அவை வெறும் சம்பவங்களாகவே நின்று போகின்றன!

சம்பவத்துக்குள் மறைந்து நிற்பது தான் அனுபவம்!
பாலில் படுநெய் போல் மறைய நின்றுளான் என்பது பதிகம்!

"சம்பவங்களை", "அனுபவம்" ஆக்கிக் கொள்ளும் போது தான் மேன்மை அடைய முடிகிறது! இறையும் தெரிகிறது!

நல்ல பதிவுங்க, உண்மைத் தமிழன்!

உண்மைத்தமிழன் said...

//Sathia said...
உணமைத்தமிழன்,
அருமையான எழுத்து நடை உங்களுக்கு.உங்களின் பல பதிவுகள் படித்திருந்தாலும் பின்னூட்டம் போட்டதில்லை.
காட்சிகளை கண்முன்னால் கொண்டு வருகிறீர்கள். உண்மையில் நடந்தவை எனும் போது நெஞ்சு உறைகிறது.
நூறு பதிவுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் நூறாண்டு காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.//

சத்யா ஸார்.. உங்களுடைய ஆசிகளுக்கும், பாராட்டுக்களுக்கும் எனது நன்றிகள்.. சோகங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன. ஆனால் நெஞ்சைவிட்டு கீழே இறங்க மறுக்கின்றன. வரிசையாக வரும் என்று நினைக்கிறேன். நூறாண்டு காலம் வாழ வாழ்த்தியிருக்கிறீர்கள். அதை நான் உங்களுக்கும் திருப்பித் தருகிறேன்.. அப்போதும் சத்யா உடனிருக்க வேண்டும்..

உண்மைத்தமிழன் said...

//parameswary namebley said...
ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க ஐயா.. எங்கே கடவுள் என தேடுபவர்களுக்கு அவர் நம்மில் தான் இருக்கிறார் என்று உணர்த்தியிருக்கிறீர்கள்...//

நன்றி மேடம்.. அருகில் இருக்கும் கடவுளை.. நம்மைத் தேடி வந்த கடவுளை நாம் கண்டு கொள்ளாமல் கோவிலுக்குச் சென்று தேடுவதுதான் மனிதனின் செயல்.. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அனைவரின் வாழ்க்கையிலும் இதே போல் ஒரு விளையாட்டை விளையாடியிருப்பான் இறைவன்.. தங்களுடைய முதல் வருகைக்கு எனது நன்றிகள்..

உண்மைத்தமிழன் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
நூறான பதிவுகளும் - நல்ல
சாறான பதிவுகளும் மேன்மேலும் தாருங்கள். வாழ்த்துக்கள்.
அனுபவம் இறைவன் ஆகிறது!
இறைவனும் அனுபவம் ஆகிறான்!
ஆபிசில் முன் "அனுபவம்" இருக்கான்னு கேட்கறாங்க!
அதே சமயம் ஆன்மீகத்திலும் இறை "அனுபவம்"-ன்னு தான் சொல்றாங்க! :-)
//லாரியின் டிரைவர் கீழே இறங்கி அத்தனை கோபத்திலும் என்னிடம், "இனிமே இப்படி குறுக்க ஓடி வராத தம்பி.."//
சில சமயங்களில் மெத்தப் படித்ததாகச் சொல்லிக் கொள்ளும் நாமே, நம் வாயில் இருந்து என்ன வார்த்தைகள் வரும் என்று அறிய மாட்டோமா என்ன? :-)
இப்படி பல சம்பவங்கள் எல்லார் வாழ்விலும் பாரபட்சம் இல்லாது(படித்தவன்/பணக்காரன்/ஏழை/கோழை...) நிகழத் தான் செய்கின்றன.
ஆனால் அவை வெறும் சம்பவங்களாகவே நின்று போகின்றன!
சம்பவத்துக்குள் மறைந்து நிற்பது தான் அனுபவம்!
பாலில் படுநெய் போல் மறைய நின்றுளான் என்பது பதிகம்!
"சம்பவங்களை", "அனுபவம்" ஆக்கிக் கொள்ளும் போது தான் மேன்மை அடைய முடிகிறது! இறையும் தெரிகிறது!
நல்ல பதிவுங்க, உண்மைத் தமிழன்!//

நன்றிகள் ஐயா.. தங்களைப் போன்றவர்களின் ஆசியும் கிடைத்துவிட்டதே.. இதுவும் இறைச் செயல் என்றே நினைத்துக் கொள்கிறேன்.. அனுபவத்தில் கடவுளை இன்னமும் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன்.. பாலில் படுநெய் போல் மறைய நின்றுளான் என்ற பதிகமும் அவன் பாடி வைத்ததுதான்.. தங்களைப் போன்றவர்களின் ஊக்கங்கள் என்னைப் போன்ற இளைஞர்களை மென்மேலும் ஊக்கப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. மிக்க நன்றி ஐயா..

G.Ragavan said...

இறைவன் எங்கே இருக்கிறான்? எங்கும் இருப்பவனை எங்கேயென்று தேடுவது? நோக்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்தவனை நோக்கல் நன்றே.

உண்மைத்தமிழன் said...

//G.Ragavan said...
இறைவன் எங்கே இருக்கிறான்? எங்கும் இருப்பவனை எங்கேயென்று தேடுவது? நோக்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்தவனை நோக்கல் நன்றே.//

உண்மைதான் ஜி.ரா. ஸார்.. எங்கும் நிறைந்திருந்திருக்கிறான் இறைவன்.. எதற்குத் தேட வேண்டும்? ஏன் தேட வேண்டும்? நமக்கொன்றென்றால் அவனே நம்மைத் தேடி வர மாட்டானா? வருவான்.. நிச்சயம் வருவான்.. இதைப் புரிந்து கொள்ளத்தான் கொஞ்சம் பக்குவம் வேண்டும்.. பக்குவம் அனுபவத்தினால் வருவது. நமது இளைஞர்களுக்கு அனுபவம் குறைவு.. பட்ட பின்பு ஏற்படும் பக்குவத்தினால்தான் அவர்கள் இறைவனை அணுக முடியும்.. அணுகிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.. வாழ்வார்கள் என்றே நானும், நீங்களும் நம்ப வேண்டும்..

மடல்காரன்_MadalKaran said...

மனதுக்கு இதம் அளிக்குது உங்களோட இந்த பதிவு..
நெஞ்சு நிறைந்தது.. நன்றி..

Subbiah Veerappan said...

உங்களின் இந்தப் பதிவைப் படிக்கும் வாய்ப்பை இன்றுதான் எனக்கு இறைவன் நல்கினார்.நன்றி அவருக்கு உரித்தாகுக!
பதிவில் மனதைத் தொட்ட வரிகளை எடுத்துப் பின்னூட்டத்தில் எழுதலாம் என்றால் எல்லா வரிகளுமே மனதைத் தொடுகின்றன!
"எழுத்து என்பது தவம்" - என்று கவியரசர் ஒருமுறை சொன்னார்
அதை உங்களின் இந்தப்பதிவில் காணகிறேன்.
கடவுளுக்குச் சொன்ன நன்றியை உங்களுக்கும் சொல்கிறேன்
நன்றி நண்பரே!

cheena (சீனா) said...

பின்னூட்டம் இட பெட்டியைத் திறந்துவிட்டேன் - என்ன எழுதுவது ?? - எதை எழுதுவது - எதை விடுவது - தங்கள் வாழ்வில் இறைவன் தங்களைப் பின்தொடர்ந்தே வந்திருக்கிறான். தங்களுக்குத்தான் புரியவில்லை - குறளரசன் கூறுவான் -
உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

இதில் நண்பனாக வருவதே இறைவன்தான்

ஆண்டவன் கூறினான் - அனுபவம் என்பதே நான்தான் - வைரவரிகள் - கவியரசின் வைர வரிகள்

முன்பின் தெரியாதவர்களிடமிருந்து எதிர்பாராத உதவிகள் வரும்போது கடவுள் கண்ணுக்குத் தெரியாமல் மனதில் நிற்பார்.

Anonymous said...

கடவுள் என்று நாம் சொல்வது ஒரு "priciple". அல்லது ஒரு "law". மட்டுமே!
Gravitational law போன்று!
புவிஈர்ப்பு விசை அதன் 980cm/sec/sec வேகத்தில் பூமியின் மையம் நோக்கி எல்லா பொருளையும் இழுக்கும். நான் ஹிந்து என்பதற்காகவோ அல்லது முஸ்லிம் என்பதற்காகவோ இழுக்காமல் விட்டு விடாது!
அந்த விசையை நாம் கும்பிடத் தேவையில்லை. அதைக் கும்பிடாததால் நம்மை நரகம் செல்ல சபிக்காது.இந்த பிரபஞ்சம் மற்றும் அண்டசராசரங்களையும் கட்டுபடுத்தும் பவுதீக விசை (Law of Physics தான் 'கடவுள்'!
அந்த கடவுளூக்கு நாம் பயப்பட வேண்டாம்; அதை கை கூப்பியோ அல்லது மண்டியிட்டோ தொழவும் வேண்டாம். இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் செயல்கள் அனைத்தும் தற்செயல் நிகழ்வுகளே! சுனாமி வருவதும் தற்செயல். மர்ம வைரஸ் தோன்றி மருத்துவம் கற்கும் மாணவியையே இறக்கச் செய்வதும் தற்செயல்தான். நாம் மனிதர்களாக வாழ வேண்டும் என்பது மட்டுமே முக்கியம்.
The whole creation is the result of accidents. Take for example the pollination of flowers. Millions of pollens are carried by the wind and accidentally some of them fall on the stigma and fertilize it. The same lottery is played when millions of human sperms are released and only one has the chance to hit the ovum. What happens to the rest of the sperms? What was their destiny? Why they were created? If there was a teleological design, why so much waste? Why so much fatality?

இப்படி யோசிக்கப் பழகினால் belief system என்னும் மூடிய மனம் திறந்து கொள்ளூம், enlightenment என்ற சுகமான தென்றலை, சுதந்திரக் காற்றை அனுபவித்து மகிழலாம். சக மனிதனை அவன் எந்த மதமாயினும் சரி எந்த ஜாதியாயினும் சரி அவனை நேசிக்கும் பக்குவம் பெறலாம். என் மதம்தான் உயர்ந்தது, என் மதத்துக்காரனுக்குத்தான் சொர்கத்தில் இடம் பிடிப்பான் என்ற குறுகிய கண்ணோட்டம் தொலையும்.
அன்பே சிவம் என ஆகும்!
வாழ்க!
வளர்க!!

ஜீவி said...

திண்டுக்கல் ஒய்.எம்.ஆர். பட்டி என்றால், மேட்டுராஜப் பட்டியா?..
என் சிறுவயதில், அங்கு வசித்து
திண்டுக்கல் செயிண்ட் மேரிஸில் படித்ததால் கேட்டேன்.
போகட்டும்..
கவியரசரின் அர்த்தமுள்ள இந்துமதம் படித்து கடவுள் நம்பிக்கை ஏற்பட்டது
என்று எழுதியிருக்கிறீர்கள். ஒரு விடைகாணா விஷயத்தைக்கான அந்த
மாற்றம் உங்களில் ஏற்பட்டது, ஒரு நல்ல திருப்புமுனை. மனசின் குரலுக்கு மதிப்புக்கொடுத்த உங்களைப் பாராட்ட வேண்டும்.
அதே நேரத்தில் உங்களில் கொஞ்சம் ஜாக்கிரதை உணர்வு கூடியிருக்கும் என்று நினைக்கிறேன். இல்லையெனில் அது வேண்டும்.
வாழ்த்துக்கள்.

உண்மைத்தமிழன் said...

//SP.VR. SUBBIAH said...
உங்களின் இந்தப் பதிவைப் படிக்கும் வாய்ப்பை இன்றுதான் எனக்கு இறைவன் நல்கினார்.நன்றி அவருக்கு உரித்தாகுக!
பதிவில் மனதைத் தொட்ட வரிகளை எடுத்துப் பின்னூட்டத்தில் எழுதலாம் என்றால் எல்லா வரிகளுமே மனதைத் தொடுகின்றன!
"எழுத்து என்பது தவம்" - என்று கவியரசர் ஒருமுறை சொன்னார்
அதை உங்களின் இந்தப்பதிவில் காணகிறேன்.
கடவுளுக்குச் சொன்ன நன்றியை உங்களுக்கும் சொல்கிறேன்
நன்றி நண்பரே!//

வாத்யாரே.. இதென்ன புது பழக்கம்..? நான் என்றைக்கும் உங்களுக்கு மாணவன்தான்.. கவியரசரை ஆழ்ந்து படித்தவர்கள் யாரும் தப்பான பாதைக்குப் போகவே முடியாது வாத்தியாரே.. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள்..

உண்மைத்தமிழன் said...

//cheena (சீனா) said...
பின்னூட்டம் இட பெட்டியைத் திறந்துவிட்டேன் - என்ன எழுதுவது ?? - எதை எழுதுவது - எதை விடுவது - தங்கள் வாழ்வில் இறைவன் தங்களைப் பின்தொடர்ந்தே வந்திருக்கிறான். தங்களுக்குத்தான் புரியவில்லை - குறளரசன் கூறுவான் -
உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு
இதில் நண்பனாக வருவதே இறைவன்தான்.
ஆண்டவன் கூறினான் - அனுபவம் என்பதே நான்தான் - வைரவரிகள் - கவியரசின் வைர வரிகள்.
முன்பின் தெரியாதவர்களிடமிருந்து எதிர்பாராத உதவிகள் வரும்போது கடவுள் கண்ணுக்குத் தெரியாமல் மனதில் நிற்பார்.//

இதைத்தான் நாத்திகவாதிகள் உணர்வதில்லை. அல்லது தெரிந்திருந்தும் உணர மறுக்கிறார்கள் சீனு ஸார்..

அனுபவமே வாழ்க்கை என்பது அனுபவப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். தெரியாதவர்களுக்கும் நிச்சயம் புரிய வைப்பான்.

நன்றி சீனு ஸார்..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
கடவுள் என்று நாம் சொல்வது ஒரு "priciple". அல்லது ஒரு "law". மட்டுமே!
Gravitational law போன்று!
புவிஈர்ப்பு விசை அதன் 980cm/sec/sec வேகத்தில் பூமியின் மையம் நோக்கி எல்லா பொருளையும் இழுக்கும். நான் ஹிந்து என்பதற்காகவோ அல்லது முஸ்லிம் என்பதற்காகவோ இழுக்காமல் விட்டு விடாது!
அந்த விசையை நாம் கும்பிடத் தேவையில்லை. அதைக் கும்பிடாததால் நம்மை நரகம் செல்ல சபிக்காது.இந்த பிரபஞ்சம் மற்றும் அண்டசராசரங்களையும் கட்டுபடுத்தும் பவுதீக விசை (Law of Physics)தான் 'கடவுள்'!//

நாங்கள் அந்தக் கடவுளை வணங்குவதுகூட எங்களுக்குள் ஒரு மனித நேயத்தை வளர்க்கும் நோக்கில்தான்.

சக மனிதர்கள் மத்தியில் நன்றி என்ற உணர்வு இருப்பது அனைத்து மனிதர்களும் சக வாழ்வு வாழ வழி வகுக்கும் என்ற உயரிய நோக்கில்தான்.

//அந்த கடவுளூக்கு நாம் பயப்பட வேண்டாம்; அதை கை கூப்பியோ அல்லது மண்டியிட்டோ தொழவும் வேண்டாம்.//

இல்லை அனானி. இந்த வாதம் ஏற்பதற்கில்லை. மனிதர்கள் யாரோ ஒருவருக்கு பயப்பட்டே ஆக வேண்டும். பயம் இல்லாதபோதுதான் மனிதன் தனது இயல்பை மீறி தவறுகளைச் செய்ய முற்படுகிறான்.

//இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் செயல்கள் அனைத்தும் தற்செயல் நிகழ்வுகளே! சுனாமி வருவதும் தற்செயல். மர்ம வைரஸ் தோன்றி மருத்துவம் கற்கும் மாணவியையே இறக்கச் செய்வதும் தற்செயல்தான்.//

ஆம்.. இல்லை என்று மறுக்கவில்லை. வந்துவிட்ட ஒன்றைக் காரணம் காட்டி மனிதர்கள் தங்களுக்குள் மோதலை வளர்த்துக் கொள்ளக் கூடாது என்று எங்களின் இறையுணர்வு சொல்வதால்தான் எல்லாம் இறைவன் செயல் என்கிறோம்..

//நாம் மனிதர்களாக வாழ வேண்டும் என்பது மட்டுமே முக்கியம்.//

உண்மை. வழிமொழிகிறேன்..

//சக மனிதனை அவன் எந்த மதமாயினும் சரி எந்த ஜாதியாயினும் சரி அவனை நேசிக்கும் பக்குவம் பெறலாம். என் மதம்தான் உயர்ந்தது, என் மதத்துக்காரனுக்குத்தான் சொர்கத்தில் இடம் பிடிப்பான் என்ற குறுகிய கண்ணோட்டம் தொலையும்.
அன்பே சிவம் என ஆகும்!
வாழ்க! வளர்க!!//

அன்பே சிவம்தான்.. இந்த சிவத்தைத்தான் நாங்கள் கடவுள் என்கிறோம். கடவுளின் மூலமே அன்புதான்.. நாங்கள் அவனிடம் கேட்பதும் அவனுடைய அன்பு ஒன்றைத்தான்.. அவ்வளவுதான்..

உண்மைத்தமிழன் said...

//ஜீவி said...
திண்டுக்கல் ஒய்.எம்.ஆர். பட்டி என்றால், மேட்டுராஜப் பட்டியா?..
என் சிறுவயதில், அங்கு வசித்து
திண்டுக்கல் செயிண்ட் மேரிஸில் படித்ததால் கேட்டேன்.//

ஆமாம் ஜீவி.. அதே மேட்டுராஜாக்காப்படட்டிதான்.. நானும் செயிண்ட் மேரிஸ் பள்ளியில்தான் படித்தேன். வாழ்த்துக்கள்.. வணக்கங்கள்.. நெருங்கிவிட்டோம்..

//கவியரசரின் அர்த்தமுள்ள இந்துமதம் படித்து கடவுள் நம்பிக்கை ஏற்பட்டது
என்று எழுதியிருக்கிறீர்கள். ஒரு விடை காண விஷயத்தைக்கான அந்த
மாற்றம் உங்களில் ஏற்பட்டது, ஒரு நல்ல திருப்புமுனை. மனசின் குரலுக்கு மதிப்புக்கொடுத்த உங்களைப் பாராட்ட வேண்டும். அதே நேரத்தில் உங்களில் கொஞ்சம் ஜாக்கிரதை உணர்வு கூடியிருக்கும் என்று நினைக்கிறேன். இல்லையெனில் அது வேண்டும்.
வாழ்த்துக்கள்.//

நன்றி ஜீவி.. கவியரசரின் அந்த நூல்தான் இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானோரை ஆத்திகத்தின் பக்கம் இழுத்து வந்திருக்கிறது. அந்த வகையில் கவியரசரும் ஒரு இறை அடியார்தான்..

நீங்கள் சொல்வதைப் போலவே இப்போது கொஞ்சம் ஜாக்கிரதை உணர்வோடுதான் இருக்கிறேன்.. இனி எது நடந்தாலும் அது இறைவனின் விருப்பம்தான்..

முரளிகண்ணன் said...

congratulations

காதர் அலி said...

தல ஒவ்வரு மனிதனும் எதாவது ஒரு நம்பிக்கைக்கு போவாங்க,வருவாங்க இது எல்லாம் சகசம்.அதனால நீங்க ரொம்ப உருகாம உங்கள் கலைப்பணியை தொடருங்கள்.வாழ்த்துக்கள் .

Sivamjothi said...

பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்,
அவனைப் புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்.

கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம்

அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!

ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

- கவிஞர் கோ கண்ணதாச

Read more: http://truetamilans.blogspot.com/2007/06/100.html#ixzz1dgYyy2xU


திருவடி தீக்ஷை(Self realization)

இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.
நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.


Please follow

(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk

http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

http://www.youtube.com/watch?v=FOF51gv5uCoOnline Books
http://www.vallalyaar.com/?p=409http://sagakalvi.blogspot.com/


Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454

அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி