மனம் திறந்த மடல்-பெறுநர் 'மேதகு ஜனாதிபதி திரு.A.P.J.அப்துல்கலாம்'-1

19-06-2007

இந்தியாவின் முதல் குடிமகன் மேன்மை தாங்கிய திரு.A.P.J.அப்துல்கலாம் அவர்களுக்கு

வணக்கம். நலம்தானே.. நலமாகத்தான் இருப்பீர்கள்.. இருக்கிறீர்கள்.. நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். என்றாலும் உங்களை நலம் விசாரிப்பது இந்தியத் திருநாட்டையே விசாரிப்பது போல.. ஆகவேதான் விசாரித்தேன்..

ஐந்தாண்டுகளுக்கு முன்பாக, நீங்கள் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போகிறீர்கள் என்ற செய்தியைக் கேட்டவுடனேயே நாட்டில் அரசியல் என்றால் என்னவென்று தெரியாத குஞ்சுகள் எல்லாம் கோலாகலமாகிவிட்டன. ஏதோ தங்கள் வீட்டுக் கோழிக்குஞ்சு ஒன்று சாயுபு கடையில் இருந்து தப்பித்துவிட்டதைப் போல் அவர்களுக்கு ஒரு சந்தோஷம்..

ஆனால் உண்மையில் நடந்தது என்ன?

10, ஜன்பத் ரோட்டின் முன்னாள் விசுவாசியும், தன் மாமியாரின் நம்பிக்கைக்குரியவருமான திரு.அலெக்ஸாண்டரை ஜனாதிபதியாகத் தேர்வு செய்யக் கூடாது என்ற இந்தியாவின் திடீர் 'அன்னை'யான, மேல் நாட்டு மருமகள் சோனியாவின் ராஜதந்திரத்தால், 'ஒரு சிறுபான்மை குடிமகன் முதல் குடிமகனாக வர முடியவில்லை..' என்று பத்திரிகைகள் புலம்பித் தள்ளின.

இதற்கு பதிலடி தரும் நினைப்பில், 'பார்.. பார்.. சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவரைத்தான் நாங்களும் தேர்ந்தெடுத்திருக்கிறோம்' என்று சொல்லி அன்னையின் காங்கிரஸ் கட்சியே, உங்களது பெயரை ரகசியமாக அப்போதைய ஆளும்கட்சியான பாஜக வட்டாரத்தில் பரப்பிவிட்டது.

இதில் சிக்கிய பா.ஜ.க., கோழியைத் தாங்கள் பிடித்து சாயுபுவிடம் உரித்துக் கொடுத்து தொடைக் கறியை 'புக்' செய்ய நினைத்து உங்கள் பெயரை அறிவித்துவிட்டார்கள். தங்களது வேட்பாளருக்குக் கிடைத்த திடீர் ஆதரவால் திக்குமுக்காடிப் போன காங்கிரஸ் வேறு வழியில்லாமல் ஒருமித்தக் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து உங்களுக்கு பொக்கேயை அனுப்பிவைத்தது.

நின்றீர்கள்.. ஜெயித்தீர்கள்.. ஜெகஜோதியாக அண்ணா யுனிவர்ஸிட்டியின் இரண்டு பெட்ரூம் கொண்ட அறையில் இருந்து, இருநூறு அறைகள் கொண்ட ஜனாதிபதி மாளிகைக்கு பால் காய்ச்சி குடியேறிவிட்டீர்கள்..

இனி என்ன நடக்கும் என்று எதிர்பார்த்திருந்த என்னைப் போன்ற பாமரனின் கண்களுக்கு நடந்ததெல்லாம் என்ன?

'நாளையில் இருந்து இந்தியாவின் தலைவிதியே மாறப் போகிறது..' என்று ஒரு குரூப்பும், 'அரசியல்வாதிகள் பயந்து போய் இருக்கிறார்கள். அவரவர் எங்கெங்கே பணம் போட்டு வைத்திருக்கிறார்களோ அந்தந்த நாடுகளுக்கே பிளைட் ஏறப் போகிறார்கள்..' என்று இன்னொரு குரூப்பும் அடித்துக் கொள்ளாத குறையாக வார்த்தைகளால் சண்டையிட்டுக் கொண்டன.

வாஜ்பாய் பிரதமராக இருக்கின்றவரையில் உங்களுக்கும் பிரச்சினையில்லை. அவருக்கும் பிரச்சினையில்லை. மக்களுக்குத்தான் பிரச்சினை இருந்தது. 'பொடா' கொண்டு வந்தார்கள். கருமமே கண்ணாக கையெழுத்திட்டீர்கள். நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பேர் கைதானார்கள்.. சிறை சென்றார்கள். வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றது. தீர்ப்புகள்தான் இன்னமும் வந்தபாடில்லை.

அடுத்தத் 'திருடர்களைத்' தேர்ந்தெடுக்க தேர்தல் திருவிழாவும் வந்தது. 'முதல் குடிமகன்' என்ற முறையில் ஜோராக ஓட்டுப் போட ஓட்டுச் சாவடிக்கு வந்தீர்கள். பிளாஷ் மழையில் நனைந்து நீங்கள் ஓட்டளித்த போது, 'அவரை மாதிரியே நாங்களுந்தாம்ப்பூ ஓட்டுப் போட்டோம்..' என்று உங்களை நினைத்தே புல்லரித்துப் போனார் குரும்பபட்டி குடிமகன் ஒருவர்..

தேர்தல் எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் நினைத்தது போலவே அனைவரின் பார்வையும் உங்கள் மீதுதான் இருந்தது. 'அன்னையா? கவிஞரா?' என்றபோது அன்னையின் கட்சி முன்னிலை பெற்றது. அன்னை உங்களைச் சந்திக்க வந்தார். பதவியேற்க தன்னை முன்னிலைப்படுத்தப் போகிறார் என்று நாங்கள் நினைத்தோம்.

"நான் பதவியேற்கப் போவதில்லை. ஆனால் காங்கிரஸ் நிச்சயம் அரியணை ஏறும்.." என்று காங்கிரஸின் அன்னை திடீர் அணுகுண்டை வீசினார். அனைவரும் தலையைப் பிய்த்துக் கொள்ளாத குறை.. அப்படியென்ன வித்தியாசம்? காங்கிரஸ்க்கும், அன்னைக்கும்.. இதுதான் அன்றைக்கு எழுந்த கேள்வி..

வெளியில் மெல்லக் கசிந்த விஷயம் என்னவெனில், தங்களை அன்னை சந்தித்த பிறகுதான் இந்த 'ஞானதோயம்' அவருக்குக் கிடைத்திருக்கிறது. அந்த ஞானதோயத்திற்குத் தாங்கள் அவருக்கு உபதேசித்த ஏதோ ஒரு 'ஸ்லோகம்'தான் காரணம் என்பது பிற்பாடு எங்களுக்குத் தெரிய வந்தது.

'அன்னை அவர்களே.. தாங்கள் அயல் நாட்டில் பிறந்தவர்' என்று மறந்து போயிருந்த 'அன்னை' அவர்களுக்கே லேசாக கோடு போட்டு காட்டியிருப்பீர்கள் என்று நாங்கள் துளிக்கூட நம்பவில்லை ஐயா... ஆனால், அப்படி ஒரு எண்ணத்தை இந்திய-அயல் நாட்டு அன்னையின் மனதில் திணிக்கும் அளவிற்கு உங்களுடைய 'அட்வைஸ்' இருந்தது என்று நினைத்தபோது எங்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி.

இதுவும் கொஞ்ச நாட்கள்தான். இந்தியாவின் சொர்க்கபுரி பீகாரின் 'பெஸ்ட் கண்ணா பெஸ்ட்' புகழ் உச்சத்திற்குப் போய்க் கொண்டிருப்பதாக வடக்கே காஷ்மீரில் இருந்து தெற்கே கன்யாகுமரிவரைக்கும் காற்றோடு காற்றாகப் பரவியிருந்தது.

பொதுத் தேர்தலுடன் நடந்த பீகார் சட்டசபைத் தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. முன்னேற்பாட்டு நடவடிக்கையாக தேர்தலில் தோற்றுப் போய் வீட்டில் இருந்த ஆஜானுபாகுவான பூட்டாசிங், உங்கள் கையெழுத்துடன் ஏற்கெனவே பாட்னா கவர்னர் மாளிகையில் குந்த வைக்கப்பட்டிருந்தார். காங்கிரஸ்க்கும் கவர்னர்களுக்கும் அப்படி ஒரு பொருத்தம். காங்கிரஸ் கட்சிக்கு இப்போது இருக்கும் நிறைய கெட்டப் பெயர்களை உருவாக்கித் தந்தவர்களில் முதன்மையானவர்கள் கவர்னர்கள்தான்.

யாருக்கும் மெஜாரிட்டி இல்லை என்றவுடன் 'பேசிப் பார்ப்போம்..' 'கூப்பிட்டுப் பார்ப்போம்..' 'கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்வோம்' என்று சொல்லி உங்களது ஆட்சியை மாநிலத்தில் அமல்படுத்தினார்கள். தொடர்ந்து குதிரை பேரத்தில் வல்லவர்களான காங்கிரஸாலேயே, நரியையும், மானையும் ஒரே கூட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

லாலுவும், ராம்விலாஸ் பாஸ்வானும் மத்தியில் கேபினட் மந்திரிகளாகி சிரித்துக் கொண்டு, பாட்னா விமான நிலையத்தில் கால் வைத்தவுடன் பரம எதிரிகளாகி கையில் கத்தியில்லாமல் சண்டையிட்டார்கள். எப்பாடுபட்டாவது காங்கிரஸ் தலைமையில் ஆட்சியை அமைத்தே தீர வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறாது என்ற நிலையில் பாஸ்வான் திடீர் குண்டைத் தூக்கிப் போட்டார்.

தான் நிதிஷ்குமாருடன் கூட்டணி சேர்வதாகச் சொல்லி ஆதரவுப் பட்டியலை கவர்னரிடம் கொடுத்தார். கவர்னர் கருமமே கண்ணாக டெல்லிக்குப் போன் செய்து, "என்ன செய்ய?" என்று தன் விசுவாசத்தைத் காட்டினார். 'டெல்லி' என்ன ஓதியதோ தெரியவில்லை.. 'இது நிச்சயமாக குதிரை பேரம்தான்..' என்று சொல்லி சட்டப்பேரவையைக் கலைக்க மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தார்.

இதில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், பாட்னாவில் இருந்து கிளம்பிய இந்த சிபாரிசை அடுத்த அரை மணி நேரத்தில் டெல்லியிலிருந்த மத்திய மந்திரி சபை ஏற்றுக் கொண்டு அர்த்தராத்திரியாகியிருந்த அந்த நேரத்தில் ரஷ்யாவின், பீட்டர்ஸ்பர்க்கில் தூங்கிக் கொண்டிருந்த உங்களை எழுப்பி கையெழுத்துக் கேட்க, "அந்த நேரத்தில் நீங்க என்ன கேட்டிருப்பீர்கள்?" "அவர்கள் என்ன பதில் சொல்லியிருப்பார்கள்..?" என்றெல்லாம் சாதாரண பிச்சைக்காரனாகிய என்னால யோசிக்க முடியல சாமி.. ஆனால் நீங்கள் கையெழுத்துப் போட்டீர்கள். இங்கே எங்களது பணத்தில் 250 கோடி ரூபாய் பணால்...

விஷயம் உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது. அதற்குள் அடுத்த தேர்தல் அறிவிப்பும் வந்து.. தேர்தல் பிரச்சாரமும் துவங்கிவிட்டது. தீர்ப்பும் தொடர்ந்து வந்தது.. "சட்ட சபையைக் கலைத்தது தவறு.. கவர்னர் ரம்மி விளையாடிவிட்டார்.." என்று..! கடைசியில் உங்களது அர்த்த ராத்திரித் தூக்கமும் கெட்டு.. பேரும் கெட்டுப் போனது இது முதல் முறை.

அடுத்து அரசியலில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வருவோம் என்று அநேகமாக எல்லா சுயேச்சைகளும்கூட தேர்தலில் வாக்குறுதி கொடுத்திருந்தார்கள். ஆனால் ஜெயித்த பிறகு சுயேச்சைகளே சினிமா ஹீரோயின்களைப் போல் திடீரென்று மாயமனார்கள். நீங்களாவது குரல் கொடுத்து பெண்களைக் காப்பீர்கள் என்று நினைத்தோம். தங்கள் காதுக்கு இதுவரையிலும் அது வரவில்லை என்ற நினைப்பில் இருக்கிறீர்கள்.

ஒருவரே ஒரு சமயத்தில் இரண்டு ஆதாயம் தரும் பதவிகளை வகிக்கக்கூடாது என்று சொல்லி 'இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் காதல் மனைவி' என்கிற ஒரே தகுதியில் பாராளுமன்றத்தில் நுழைந்த ஜெயாபச்சனுக்கு எதிராக கேள்வி எழுப்பினார்கள் காங்கிரஸார். அது பூமராங்காக அவர்கள் கழுத்துக்கே திரும்பியது.

அதுவும், அவர்கள் கட்சித் தலைவியும் இந்தியாவின் அன்னையுமான சோனியாவின் கழுத்துக்குக் குறி வைத்து வர.. மின்னல் வேகத்தில் ராஜினாமா, தேர்தல் அறிவிப்பு. பின்னர் பிரச்சாரம்.. அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி என்று மீண்டும் எங்கள் பணம் கொஞ்சூண்டு ஸ்வாகாவாகி அன்னையும் வெற்றிகரமாக பாராளுமன்றத்திற்குள் நுழைந்துவிட்டார்.

பொறுப்பார்களா நம்ம அரசியல்வாதிகள்? தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முதலில் சட்டத்தைத் திருத்துவதுதான் தம்முடைய 'வாரிசு அரசியல்வாதிகளுக்கு' நல்லது என்று நினைத்து ஒரு அவசரச் சட்டத்தை இயற்றிவிட்டார்கள். கையெழுத்து கேட்டு உங்களிடம் வந்தபோது மென்மையாக மறுத்து திருப்பி அனுப்பிவிட்டீர்கள். பாராட்டுக்கள். எங்கள் மனதில் எங்கயோ போய்விட்டீர்கள் அடுத்த இரண்டு மாதங்கள் வரும்வரை..

மீண்டும் அதே சட்டம் எந்தத் திருத்தமும் இல்லாமல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உங்கள் டேபிளுக்கு வந்தது. 'எல்லா ஜனாதிபதிகளும் இதைத்தான் செய்வார்கள்' என்று நீங்களும் சொல்லாமல் சொல்லி, அதில் கையெழுத்திட்டு உங்களது மனசாட்சியை சமாதியாக்கி உங்கள் மீது நான் வைத்திருந்த நம்பிக்கைக்கு கருமாதி கொண்டாடிவிட்டீர்கள்.

இந்த நான்கரை வருடங்களாக நீங்களும் ஊர், ஊராக சென்று "மாணவர்களே தூங்காதீர்கள்.. விழித்திருங்கள்.. படியுங்கள்.. கற்றுக் கொள்ளுங்கள்.. கேள்வி கேளுங்கள்.." என்று தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

இதோ நாங்களும் கேள்வி கேட்கிறோம்.. இந்த ஆதாயம் தரும் பதவி தொடர்பான மசோதா நேர்மையானதா? இதனால் யாருக்கு லாபம்? கேடு கெட்ட அரசியல்வாதிகளுக்குத்தானே..

"மாணவர்களையும், மக்களையும் புதிய உலகத்துக்கு அழைத்துப் போகப் போகிறேன். இதற்கு முதல்படியாக கேள்விகளை எழுப்புங்கள்.. வினவுங்கள்.. கேளுங்கள்.." என்றெல்லாம் சொன்ன நீங்கள் வழக்கமான ஜனாதிபதியைப் போல் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி இரண்டாவது முறையாக ஒரு மசோதா ஜனாதிபதியிடம் சென்றால் அவர் கையெழுத்திட்டுத்தான் தீர வேண்டும் என்று சொல்லாமல் சொல்லிக் கையெழுத்திட்டுவிட்டீர்கள். இது சரிதானா?

கேள்வி கேட்க வேண்டிய ஒரு உயரிய நிலையில் இருந்து அதைச் செய்யாமல் இதுநாள்வரையில் உங்களுக்கென்று இருந்த உரிமையையும் இழந்துவிட்டீர்களே..

ஐயா.. அக்னிச் சிறகுகள் தந்த முதல்வரே.. கொண்ட கொள்கை கசாப்புக் கடையில் வெட்டப்படும் கறித்துண்டுகள் மாதிரி வெட்டப்பட்டுக் கொண்டிருக்க.. இவ்வளவையும் தாங்கிக் கொண்டு நீங்கள் அங்கயே இருந்திருக்க வேண்டுமா?

மசோதாவில் கையெழுத்திடாமல் டெல்லியில் இருந்து வெளியேறி இருந்தீர்கள் என்றால், இந்தியாவின் கோடிக்கணக்கான இளைஞர்களின் இதயத்தில் நீங்கள் குடியேறி இருப்பீர்கள்..

ஆனால் இப்போது, இந்தியாவின் இன்னொரு ஜனாதிபதி வந்தார்.. பேசினார்.. போனார்.. என்ற நிலையில் உங்களது பெயரும் எங்களால் எங்களுடைய வாரிசுகளுக்குச் சொல்லப்படும் துர்ப்பாக்கிய நிலைக்கு எங்களைத் தள்ளிவிட்டீர்கள்.

இரண்டாம் பகுதி இங்கே

9 comments:

Anonymous said...

என்ன கொடுமை சரவணன் இது? :(

உண்மைத்தமிழன் said...

//உங்கள் தமிழன் said...
என்ன கொடுமை சரவணன் இது? :(//

ஆரம்பமே இப்படியா தமிழா.. கமெண்ட்ஸ் போட பேரு பொருத்தம்தான்.. ஆனா லின்க்கை புடிச்சா எங்கேயோ போகுதே தமிழா.. 'தமிழனு'க்கு இது நல்லாயில்லையே..

Unknown said...

//"மாணவர்களையும், மக்களையும் புதிய உலகத்துக்கு அழைத்துப் போகப் போகிறேன். இதற்கு முதல்படியாக கேள்விகளை எழுப்புங்கள்.. வினவுங்கள்.. கேளுங்கள்.." //

தனது கொள்கைகளுக்கு பங்கம் வரும்போது விலகிவிடுவதுதான் சிறந்தது. கலாம் பல இடங்களில் அவர் அரசியல்வாதிகளைக் கேள்வியே கேட்காமல் மரபு/வழக்கு/நடை முறை என்று ரப்பர் ஸ்டாம்ப் ஆக இருந்திருக்கிறார்.என்னதான் இவர் குழந்தைகளைக் கேள்வி கேட்கச் சொன்னாலும் இவர் கேட்கவில்லை.5 வருடங்களில் கொஞ்சம் அரசியல்வாதிகளைச் சுளுக்கு எடுத்து இருக்கலாம். வாயுப்பை தெரிந்தே தவற விட்டிவிட்டார். :-(((( அவருக்கு என்ன பிரச்சனையோ?

மக்கள் MP, MLA க்களைத் தேருவு செய்கிறார்கள். அந்த MP, MLA க்கள்தான் இந்த முதல் குடிமகனையும் தேர்வு செய்கிறார்கள். இப்படியிருக்க பாராளுமன்றம் போட்ட சட்டத்தை இரண்டாவது முறை திருப்பி அனுப்பமுடியாது என்பது என்ன நடைமுறையோ? ஒரு வேளை இந்த நடைமுறையால்தான் நமது நாட்டில் முஷாராப்கள் உருவாக வில்லையோ?

கலாம் எனக்குப் பிடித்தவர் என்றாலும் பிரச்சனையான விசயங்களில் கருத்து ஏதும் கூறாமல் 90% வழக்கமான ஜனாதிபதிகளையே பிரதிபலித்தார். என்ன இவரின் எளிமையும் மக்களிடம் பழகும் விதமும் அனைவரையும் கவர்ந்தது. என்னையும் சேர்த்து.

Anonymous said...

உலகமே கலாம் ஒரு புனிதபிம்பமாக எழுதிக் கொண்டிருக்கும் வேளையில், உண்மைகளை கேள்விகளாகத் தொடுக்கும் உண்மைத் தமிழா - உங்கள் எண்ணங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

ஜனாதிபதி பதவிக்கு முற்றிலும் பொருத்தமானவர் ஒருவர் இரு தேர்தல்களுக்கு முன் போட்டியிட்டார், தோற்றார். இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மதிப்பை ஏற்படுத்தியவர். ஒவ்வொரு அரசியல்வியாதியும் பேரைக் கேட்டாலே நடுங்கச் செய்தவர் - டி.என்.சேஷன். எனக்குத் தெரிந்து அவரால் மட்டுமே அதிரடியாக நடவடிக்கைகள் எடுத்து, ஜனாதிபதி பதவியின் இழந்த பெருமையை மீட்டுத் தர முடியும் என்று நம்புகிறேன்.

ஆனாலும் பிரதீபாவை ஒப்பிடும் போது ஷெகாவத் மிகவும் நல்ல தேர்வாகத் தெரிகிறார். கலாம் அண்ணா பல்கலைகழகத்திற்கு செல்ல வேண்டிய தருணம் இது.

உண்மைத்தமிழன் said...

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...
//தனது கொள்கைகளுக்கு பங்கம் வரும்போது விலகிவிடுவதுதான் சிறந்தது. கலாம் பல இடங்களில் அவர் அரசியல்வாதிகளைக் கேள்வியே கேட்காமல் மரபு/வழக்கு/நடை முறை என்று ரப்பர் ஸ்டாம்ப் ஆக இருந்திருக்கிறார்.என்னதான் இவர் குழந்தைகளைக் கேள்வி கேட்கச் சொன்னாலும் இவர் கேட்கவில்லை.5 வருடங்களில் கொஞ்சம் அரசியல்வாதிகளைச் சுளுக்கு எடுத்து இருக்கலாம். வாயுப்பை தெரிந்தே தவற விட்டிவிட்டார். :-(((( அவருக்கு என்ன பிரச்சனையோ?//

இல்லை பலூன் மாமா.. அவர் ஊரோடு ஒத்துப் போவது என்ற கொள்கையைத் தேர்ந்தெடுத்து அதில் தேறிவிட்டார். அனைத்து பெரிய மனிதர்களும் செய்வதைத்தான் இவரும் செய்திருக்கிறார்.

//மக்கள் MP, MLA க்களைத் தேருவு செய்கிறார்கள். அந்த MP, MLA க்கள்தான் இந்த முதல் குடிமகனையும் தேர்வு செய்கிறார்கள். இப்படியிருக்க பாராளுமன்றம் போட்ட சட்டத்தை இரண்டாவது முறை திருப்பி அனுப்பமுடியாது என்பது என்ன நடைமுறையோ? ஒரு வேளை இந்த நடைமுறையால்தான் நமது நாட்டில் முஷாராப்கள் உருவாக வில்லையோ?//

ஜனாதிபதி ரப்பர் ஸ்டாம்ப்.. சும்மா பேருக்கு அப்படீன்னு ஒருத்தர் இருந்தால் போதும். மிச்சத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்ற உயர்ந்த கொள்கையில் அரசியல்வாதிகள் வகுத்த அரசியல் சட்டம். அப்படியே பிரிட்டன் நாடாளுமன்றத்தை காப்பியடித்தது. அங்கே ராணி.. இங்கே ஜனாதிபதி.. அவ்வளவுதான்..

//கலாம் எனக்குப் பிடித்தவர் என்றாலும் பிரச்சனையான விசயங்களில் கருத்து ஏதும் கூறாமல் 90% வழக்கமான ஜனாதிபதிகளையே பிரதிபலித்தார். என்ன இவரின் எளிமையும் மக்களிடம் பழகும் விதமும் அனைவரையும் கவர்ந்தது. என்னையும் சேர்த்து.//

உங்களுக்குப் பிடித்த இது ஒண்ணுதான் எனக்கும் அவர்கிட்ட பிடிச்சது.. வேற எதுவுமில்லை..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
ஜனாதிபதி பதவிக்கு முற்றிலும் பொருத்தமானவர் ஒருவர் இரு தேர்தல்களுக்கு முன் போட்டியிட்டார், தோற்றார். இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மதிப்பை ஏற்படுத்தியவர். ஒவ்வொரு அரசியல்வியாதியும் பேரைக் கேட்டாலே நடுங்கச் செய்தவர் - டி.என்.சேஷன். எனக்குத் தெரிந்து அவரால் மட்டுமே அதிரடியாக நடவடிக்கைகள் எடுத்து, ஜனாதிபதி பதவியின் இழந்த பெருமையை மீட்டுத் தர முடியும் என்று நம்புகிறேன்.//

அதனால்தான் அவரைத் தோற்கடிக்க அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் அண்டர்கிரவுண்ட்டில் வேலை பார்த்து தோற்கடித்தார்கள்..

//ஆனாலும் பிரதீபாவை ஒப்பிடும் போது ஷெகாவத் மிகவும் நல்ல தேர்வாகத் தெரிகிறார். கலாம் அண்ணா பல்கலைகழகத்திற்கு செல்ல வேண்டிய தருணம் இது.//

ஷெகாவத்தோ அல்லது பிரதீபாவோ யார் வந்தாலும் அவர்கள் அந்தந்த கட்சிக்காரர்களாகத்தான் அங்கே இருக்க முடியும்.. மக்களுடைய பிரதிநிதியாக, உண்மையான முதல் குடிமகனாக இருக்க முடியாது என்பது. கலாமே வந்தால் மனதளவில் ஒரு திருப்தி மக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கு ஒரு தடைக்கல்லும் இருக்கும் என்பது எனது கருத்து..

மிக்க நன்றி அனானி.. உங்களுடைய இது போன்ற கருத்து கேள்விகளால்தான் அனானிகளுக்கு பெருமை..

வெ. ஜெயகணபதி said...

/ *

மீண்டும் அதே சட்டம் எந்தத் திருத்தமும் இல்லாமல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உங்கள் டேபிளுக்கு வந்தது. 'எல்லா ஜனாதிபதிகளும் இதைத்தான் செய்வார்கள்' என்று நீங்களும் சொல்லாமல் சொல்லி, அதில் கையெழுத்திட்டு உங்களது மனசாட்சியை சமாதியாக்கி உங்கள் மீது நான் வைத்திருந்த நம்பிக்கைக்கு கருமாதி கொண்டாடிவிட்டீர்கள்.

* /

ஜனாதிபதியின் அதிகாரம் அப்படி... இது விசயத்தில் அவரை குறை கூற முடியாது. விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பியதை மறு முறை அப்படியே எவ்வித மாற்றமின்றி அனுப்பினாலும் அவர் கையெழுத்து போட்டு தான் ஆக வேண்டும் என்று எங்கோ படித்த நினைவு.

உண்மைத்தமிழன் said...

//Jeyaganapathi said...
ஜனாதிபதியின் அதிகாரம் அப்படி... இது விசயத்தில் அவரை குறை கூற முடியாது. விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பியதை மறு முறை அப்படியே எவ்வித மாற்றமின்றி அனுப்பினாலும் அவர் கையெழுத்து போட்டு தான் ஆக வேண்டும் என்று எங்கோ படித்த நினைவு.//

உண்மைதான்.. உண்மையைத் தவிர வேறில்லை.

நமது நாட்டில் ஜனாதிபதி பதவி என்பது வெறும் ரப்பர் ஸ்டாம்ப்தான் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இந்த சட்ட விதிமுறைதான்.

என் ஆதங்கம்.. இதை எதிர்த்து அவர் கருத்து சொல்லியிருக்கலாம். அல்லது கையெழுத்திடாமல் வெளியேறியிருக்கலாம் என்பதுதான்..

abeer ahmed said...

See who owns tradekey.com or any other website:
http://whois.domaintasks.com/tradekey.com