வெற்றிவேல் சினிமா விமர்சனம்

25-04-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சசிகுமாரின் படத்தில் என்ன இருக்கும்..? காதல், நட்பு.. காதலை சேர்த்து வைப்பது.. அல்லது நட்புக்காக அடிவாங்குவது.. மறைமுகமாக சாதீய பிரச்சினையைத் தொடுவது.. இதுதானே..? இது அத்தனையையும் அப்படியே வைத்துக் கொண்டு புதிய பெயரில் வந்திருக்கிறார்  இந்த ‘வெற்றிவேல்’.



கதை 20 வருடங்களுக்கு முன்பு துவங்குகிறது. மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்தின் தலைவராக இப்போது இருப்பவர் பிரபு. அடுத்தத் தேர்தலுக்கு நாள் குறித்துவிட்டார்கள்.  எப்போதும் பிரபுவின் குடும்பத்தினரே பரம்பரை, பரம்பரையாக அங்கே தலைவர் பதவியில் இருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் தன் கணவர் தலைவர் பதவிக்கு நிற்க விரும்புவதாக வாயும், வயிறுமாக இருக்கும் பிரபுவின் தங்கை விஜி, அண்ணனிடம் வந்து கேட்கிறார்.
மாற்றாந்தாய்க்கு பிறந்த தங்கையாக இருந்தாலும் விஜி மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் அண்ணன் பிரபு, சட்டென பாசம் மேலிட இதற்கு ஒத்துக் கொள்கிறார். ஆனால் இதற்குப் பிறகு ஊர்க்கார்ர்கள் பிரபுவிடம் “இது தவறு..” என்கிறார்கள். “நீங்கன்னா ஊர்க்காரங்க ஓட்டுப் போடுவாங்க. உங்க மச்சான் அசலூர்.. அவருக்கு எப்படி போடுவாங்க..? அதோட ஜெயிச்ச பின்னாடி அவர் அவங்க ஊர்க்காரங்களோட ஒட்டிக்கிட்டா நம்ம ஊர் கவுரவம் என்னாகுறது..?” என்று தூண்டில் போட.. பிரபு தங்கைக்கு கொடுத்த வாக்கை மீறி தேர்தலில் நிற்க முடிவு செய்கிறார். இதற்கு மச்சானும் உடன்பட மறுத்து எதிர்த்து நிற்கிறார். தேர்தலில் பிரபு வெற்றி பெற அன்றைக்கே விஜியின் கணவன் தற்கொலை செய்து இறந்து போகிறார்.
கோடி துணியெடுத்துக் கொண்டு தங்கை கணவரின் இறப்புக்கு துக்கம் விசாரிக்க வரும் பிரபுவை தடுக்கும் விஜி, கண்ணகிபோல் பிரபு குடும்பத்துக்கு சாபம் விடுகிறார். “இதேபோல் உன் குடும்பத்தை நடுத்தெருவுக்குக் கொண்டு வராமல்விட மாட்டேன்..” என்று சவால் விடுகிறார்.
தொடர்ந்து இப்போதைய காலக்கட்டத்தில் திரைக்கதை நகர்கிறது. பிரபுவுக்கு ஒரே மகள்.. வர்ஷா. கல்லூரியில் படிக்கிறார். அதே கல்லூரியில் படிக்கும் வேறு ஊரைச் சேர்ந்த ஆனந்தை காதலிக்கிறார். ஆனந்தின் சொந்த அண்ணன் வெற்றிவேல் என்னும் சசிகுமார். சசிகுமார் ஊருக்குள் உரக்கடை வைத்து நடத்துகிறார். இவரும் ஒரு பேருந்து பயணத்தில் சந்தித்த மியா ஜார்ஜை பார்த்தவுடன் காதலிக்கத் துவங்குகிறார். சில, பல சினிமாத்தனமான தொடர் முயற்சிகளுக்குப் பின்னர் மியாவுடனான காதல் ஓகே ஆகும் சூழல் வருகிறது. இந்த நேரத்தில் கதை வேறு பக்கம் திசை திரும்புகிறது.
பிரபுவின் தங்கை விஜியின் மகனுக்கு திருமணம் நிச்சயம் செய்திருக்கிறார்கள். இந்தத் திருமண நிச்சயத்தில் கலந்து கொள்ள பிரபு சென்றபோது அவரை அவமானப்படுத்தி பேசி திருப்பியனுப்புகிறார் விஜி. இதனால் கோபமடையும் பிரபு, அந்தக் கல்யாணத்திற்கு முன்பாகவே தனது மகள் கல்யாணத்தை நடத்தத் திட்டமிடுகிறார்.
இந்த்த் தகவலை தனது காதலன் ஆனந்துக்கு பாஸ் செய்கிறார் வர்ஷா. ஆனந்த் தன் அண்ணன் சசிகுமாரிடம் இது பற்றிச் சொல்ல.. பிரச்சினையைத் தீர்க்க ஒரே வழி.. காதலர்களை சேர்த்து வைப்பதுதான் என்று நினைக்கும் ச்சிகுமார்.. வர்ஷாவை கடத்திக் கொண்டு வர ஏற்பாடு செய்கிறார். இதற்காக ‘நாடோடிகள்’ படத்தின் ‘சம்போ சிவசம்போ’ டீமை ஏற்பாடு செய்கிறார்.
எல்லாம் தயாராக இருந்தும் கடத்தும்போது பெண்ணை மாற்றிக் கடத்திக் கொண்டு வந்து விடுகிறார்கள்.  இவர்கள் கடத்தி வந்த பெண் விஜியின் மகன் திருமணம் செய்யவிருந்த மணமகளான நிகிலா. இன்னும் 3 நாளில் கல்யாணம்.. அதற்குள் பெண் ஓடிப் போய்விட்டாளே என்கிற அவமானத்தில் இந்தப் பெண்ணின் அப்பா தற்கொலை செய்து கொள்ள..
விஷயமறிந்து நிகிலாவை அவளது வீட்டில் விடுவதற்காக போன சசிகுமாரை அந்த ஊர்க்கார்ர்கள் அடித்துவிரட்டுகின்றனர். போலீஸ் ஸ்டேஷனில் தானே விருப்பப்பட்டுதான் சசிகுமாருடன் சென்றதாக அந்தப் பெண் சொன்னதால் வழக்கில்லாமல் போகிறது.
ஊருக்கும் போக முடியாமல் தனியே இருக்கும் நிகிலாவை பார்த்து உருகும் சசிகுமார் அந்த இடத்திலேயே அவள் கழுத்தில் தாலியைக் கட்டி மனைவியாக்கி வீட்டுக்கு அழைத்து வருகிறார். சசிகுமாரின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தாலும், பின்பு சமரசமாகிறார்கள்.
இதற்கிடையில் தனது மகளைத்தான் கடத்த வந்தார்கள் என்பதே தெரியாமல் பிரபு, சசிகுமாரின் அப்பாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். தனது மகனுக்காக பெண் கேட்டு வரும் அப்பா இளவரசுவிடம் ஜாதிப் பிரச்சனையைக் காட்டி பெண் தர மறுக்கிறார். “இனி வர்ஷா விஷயத்தில் யாரும் தலையிடக் கூடாது. அந்தப் பெண்ணு எங்கேயிருந்தாலும் நல்லாயிருக்கட்டும்..” என்று இளவரசு சொன்னாலும் தனது காதலை மறக்க முடியாமல் தவிக்கிறார் ஆனந்த்.
காதலர்களை சேர்த்து வைப்பதேயே குறிக்கோளாக கொண்டிருக்கும் சசிகுமாரின் கேரக்டர் ஸ்கெட்ச், அப்படியே சும்மா விட்டிருமா என்ன..? சசிகுமார் என்னும் வெற்றிவேல் காதலர்களை எப்படி சேர்த்து வைக்கிறார் என்பதுதான் திரைக்கதை.
வழக்கமாக இரு வேறு சாதிகளுக்கிடையேயான பிரச்சினையைத்தான் தொட்டுப் பேசுவார்கள் சினிமாக்காரர்கள். ஆனால் இதில் கொஞ்சம் வித்தியாசமாக மதுக்கூர், நாட்டுச் சாலை ஆகிய இரண்டு ஊர்களில் வசிக்கும் ஒரே ஜாதிக்குள் இருக்கும் இருவேறு பிரிவுகளிடையேயான பிரச்சினையை அலசி ஆராய்ந்திருக்கிறார்கள்.
இளவரசு தனது மகனுக்கு பெண் கேட்டு பிரபுவிடம் பேசும்போது பிரபு சொல்லும் வசனங்கள்தான் தமிழகத்தில் இன்றைய யதார்த்த நிலைமை. ஜாதிவிட்டு ஜாதி கல்யாணம் செய்ய பெற்றோர்கள் சம்மதித்தாலும், அவர்கள் சார்ந்த சமூகம் அனுமதிப்பதில்லை. உறவினர்களும், சுற்றத்தாரும் தங்களை ஒதுக்கி வைத்துவிடுவார்களோ என்று சிலர் பயப்படுகிறார்கள். பல அரசியல்வாதிகள் தங்களுக்கு தேர்தலில் ஓட்டு கிடைக்காமல் போய்விடுமோ என்று பயந்து சாகிறார்கள். சாதி என்னும் பிடிமானம்தான் ஒவ்வொரு சமூகத்தையும் இறுகப் பிடித்திருக்கும் சனியன் என்பதை பிரபுவின் கேரக்டர் ஸ்கெட்ச் மூலமாக உணர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
தனது மகளின் காதல் பற்றி தெரிந்ததும் மாப்பிள்ளையின் அப்பா திருமண பந்தத்தை முறித்துக் கொள்கிறார். இதன் பின்புகூட பிரபுவுக்கு தனது மகளின் காதலை வாழ வைப்போம் என்கிற எண்ணம் வரவில்லை. மாறாக தன்னை அவமானப்படுத்திய தங்கையின் வீட்டிலேயே தனது மகளை அனுப்பி வாழ வைக்கலாம் என்று எண்ணுகிறார். இப்போதும் அவரது சாதிய மனோபாவம் அவரை கீழே இறங்கி செல்ல மறுக்கிறது.
தனது தங்கை தன்னை பழி வாங்கத்தான் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக் கொண்டாள் என்கிற உண்மை பிரபுவுக்கு தெரிந்தவுடன்.. அந்த நிமிடமே மனம் மாறி மகளின் காதலுக்கு ஓகே சொல்வதுதான் படத்தின் மிகப் பெரிய டர்னிங் பாயிண்ட்.
படத்தின் முற்பாதியின் துவக்கத்தில் சசிகுமாரின் காதல் ஓகே ஆகும்வரையிலும் படம் மெதுவான ஓட்டம்தான். படத்தின் பிற்பாதியில் சசிகுமாரின் மென்மையான குடும்ப கதை.. அவரும், அவரது மனைவியும் சூழலுக்குக் காத்திருக்கும் நேரம்.. இது பற்றி திரைக்கதையெல்லாம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
கடைசியாக குட்டி, குட்டியாக காட்சிக்கு காட்சி டிவிஸ்ட் வைத்து விளையாடியிருக்கும் இயக்குநரின் திரைக்கதையாக்கம்தான், படத்தை பொறுமையாக கடைசிவரையில் பார்க்க வைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.
சசிகுமார் என்னும் வெற்றிவேலை ஹீரோவாக காட்ட வேண்டும் என்பதால் வலிந்து திணிக்கப்பட்ட கிளைமாக்ஸ் காட்சியும், அந்தக் காட்சியிலும் கொலை செய்யாமல் மன்னிப்பளிப்பதுதான் சிறந்த தண்டனை என்பதை சொல்லியிருக்கும்விதமும் ரசனைக்குரியது.
படத்தின் மிகப் பெரிய டிராஜடி.. தம்பி ராமையாவின் ‘உவ்வே’ காமெடிதான். இந்தக் காமெடியை அவ்வப்போது ஆளாளுக்கு தம்பி ராமையாவிடம் “வீட்டுக்குப் போனாலும் சும்மாதான இருக்கப் போற..?” என்று பேசியே வெறுப்பேற்றுவதெல்லாம் இந்தப் படத்தின் தன்மையைக் குறைக்கும் காட்சிகள்.. கடைசிவரையிலும் தம்பி ராமையாவின் மனைவி யார் என்று முகத்தைக் காட்டாமலேயே மறைத்திருப்பது ஏன் என்று தெரியவில்லை..
படத்தில் முதல் ஸ்கோர் பிரபுவின் தங்கையாக நடித்திருக்கும் விஜி சந்திரசேகர்தான். தனது கணவருக்காக விட்டுக் கொடுக்கும்படி பிரபுவிடம் அமைதியாக கேட்டுவிட்டுச் செல்வதும்.. பின்பு கணவரின் உடலை பார்க்க வரும் பிரபுவிடம் சீறித் தள்ளவதுமான முதல் 10 நிமிடங்களிலேயே படத்தின் கனத்தை தன் மீது ஏற்றிக் கொண்டிருக்கிறார். இவருடைய உடல் மொழியும், தீர்க்கமான வசன உச்சரிப்பும் இவர் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளிலுமே இவரை தனித்துவமாகக் காட்டுகிறது.
மகனும் தற்கொலைக்கு முயலும்போது அனைவரையும் அறையிலிருந்து வெளியேற்றிவிட்டு.. தனது கணவன் எப்படி செத்தான் என்ற கதையைச் சொல்லி மகனை வெறியேற்றுகிறார். இப்படியும் சில அம்மாக்கள் நாட்டில் இருப்பதால்தான் சில, பல கொலைகள் நடக்கின்றன என்பது உண்மைதான்.
வெற்றிவேலான சசிகுமாருக்கு ரொமான்ஸ் மட்டுமே வரவில்லையென்றாலும் மற்றவையெல்லாம் தானாகவே வந்து சேர்ந்திருக்கிறது. சோகக் காட்சிகளில் மனிதர் தலையைக் குனிந்து அமைதியாகப் பேசியே ஜெயித்துவிடுகிறார். மனைவி நிகிலாவை சட்டென திருமணம் செய்து அழைத்து வந்த குற்றவுணர்விலேயே சுற்றி வருவதும்.. இதற்கு அவ்வப்போது அவர் சொல்லும் சரியான விளக்கங்களும் பெண் ரசிகைகளை நிச்சயம் கவரும்..!
மியா ஜார்ஜையும் சசிகுமாரையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது முடியாமல்தான் இருந்தது. ஆனால் படத்தில் முடிந்திருக்கிறது. சின்னக் கேரக்டர்தான் என்றாலும் வரும் காட்சிகளிலெல்லாம் வல்ல தேசத்தை பாராட்டும்படியாகவே நடித்திருக்கிறார் மியா. உடன் நடித்திருக்கும் மற்ற இரண்டு நடிகையரான வர்ஷாவும், நிகிலாவும்கூட நன்றாகவே நடித்திருக்கிறார்கள். அதிலும் நிகிலாவின் மெளனமான பார்வை.. அமைதியான பேச்சு.. என்று நடிப்பில் ஒரு படி மேலே போய் ஸ்கோர் செய்திருக்கிறார்.
எல்லார் வீட்டிலும் நடப்பதுபோல அம்மா பிள்ளை.. அப்பாவிடம் பேச ஒரு இடைத்தரகர் என்று இந்தக் கதையிலும் ரேணுகாவைச் சுற்றி நகர்கிறது வெற்றிவேலின் குடும்பக் கதை. ரேணுகாவின் குளோஸ் அப் சிரிப்பில் கதையையே நகர்த்திவிடலாமே..?
தம்பி ராமையாவின் நடிப்பும் படத்திற்குக் கிடைத்த ஒரு பிளஸ்.. அவர் சம்பந்தப்பட்ட திரைக்கதைதான் ஏற்க முடியாதது என்றாலும், மனிதர் எந்த வேடம் கொடுத்தாலும் பின்னுகிறார். மியாவை பார்க்க ஜமீன்தார் தோரணையில் அவர் கல்லூரிக்குள் நடந்து வரும் காட்சியும், செல்போனில் தான் ஜமீன்தார் என்பதையே மறந்து போய் டெய்லர் கதையைப் பேசி சமாளிக்கும் நேரமும் தியேட்டர் அதிர்ந்த கைதட்டல் கிடைத்தது.. பாராட்டுக்கள் ஸார்..
‘ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது’ மெட்டில் ஒரு பாடலுக்கு இசையமைத்து அந்தப் பாடலையும் கேட்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் டி.இமான். கதிரின் ஒளிப்பதிவு படம் முழுவதிலும் வியாபித்திருக்கிறது. வயக்காடுகள்.. பச்சை பசேல் புல்வெளிகள்.. இதற்கு நடுவில் மியாவைக் காட்டியிருக்கும் அழகுக்கு ஒரு ஷொட்டு..!
அண்ணன் சசிகுமார் அடுத்தப் படத்தில் இந்தக் கதைக் களனைவிட்டு வெளியில் வந்து படம் செய்தால் நன்றாக இருக்கும். அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்தால் அவருக்கும் நல்லதல்ல.. அவரது ரசிகர்களுக்கும் ஏற்புடையதல்ல..!
வெற்றிவேல் பார்க்க முடிகிற படம்தான்..! 



1 comments:

நம்பள்கி said...

[[[மனைவி நிகிலாவை சட்டென திருமணம் செய்து அழைத்து வந்த குற்றவுணர்விலேயே சுற்றி வருவதும்.. இதற்கு அவ்வப்போது அவர் சொல்லும் சரியான விளக்கங்களும் பெண் ரசிகைகளை நிச்சயம் கவரும்..!]]

தமிழ் நாட்டுக்கு அடுத்த முதல் அமைச்சர் பார்சல்!