என்னுள் ஆயிரம் - சினிமா விமர்சனம்

25-04-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நடிகர் டெல்லி கணேஷின் மகன் மஹா ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் படம் இது. இந்தப் படத்தை டெல்லி கணேஷே தயாரித்திருக்கிறார்.
“படத்தில் பணியாற்றிய யாருக்கும் ஒரு பைசாகூட பாக்கியில்லை. இந்தப் படத்தைத் தயாரிக்கும் பணம் முழுக்க, முழுக்க எனது சொந்தப் பணம். எனவே படம் ஓடவில்லையென்றால்கூட எனக்குக் கவலையில்லை. நான் மட்டுமேதான் இதில் பாதிக்கப்படுவேன். அதுகூட என் மகனைப் பெற்ற கடமைக்கு அவனுக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க ஆன செலவாக இதனை எடுத்துக் கொள்கிறேன். ஆனால் இந்தப் படத்தில் பல புதியவர்களை இந்த்த் தமிழ்த் திரையுலகத்திற்கு நான் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். அந்த ஒரு பெருமையே எனக்கு போதும்…” என்று இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பட்டவர்த்தனமாகத் தெரிவித்தார் டெல்லி கணேஷ்.
சொன்னதுபோலவே செய்திருக்கிறார். இப்போதும் டெல்லி கணேஷ் பெருமிதப்பட்டுக் கொள்ளலாம். சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவாளர், சண்டை பயிற்சியாளர் என்று இந்தப் படத்தின் மூலம் வெளியில் வந்திருக்கும் புதியவர்கள் அனைவருமே சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்கள். தங்களது திறமையை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்..

அசோக் என்கிற மஹா ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டல் பாரில் சப்ளையர். சென்னையில் ஒண்டுக் குடித்தன வீட்டில் குடியிருக்கிறார். அப்பா, அம்மா இல்லை. கிட்டத்தட்ட அனாதை.
ஒரு நாள் இரவில் பேருந்து நிறுத்தத்தில் ஒரு பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில் அவளது அழகில் மயங்குகிறார். அதே நேரம் ஆர்த்தி என்கிற அந்தப் பெண்ணும் திருமணமாகி தனது கணவன் அமெரிக்கா போய்விட்டதை நினைத்து ஏக்கத்தில் இருப்பவர்.  ஒரு ஸ்பரிசத்திற்கு ஏங்கிக் கொண்டிருக்கிறார். ஒரு இடியின் சப்த்த்தில் இருவரும் நெருங்கி நிற்க.. தொடுதலும், படரலும் தொடர.. அவளைப் பின் தொடர்ந்து அவளது வீட்டுக்கே சென்று விடுகிறான் மஹா. அங்கே இள வயதின் மயக்கத்தில் இருவருமே விரும்பி உறவு கொள்கிறார்கள். மறுநாள் காலை தூக்கம் கலைந்து தப்பித்தோம்,, பிழைத்தோம் என்ற நிலையில் வீடு வந்து சேர்கிறார் மஹா. இந்தச் சம்பவம் அவனுக்குள் ஒரு உறுத்தலாகவே இருந்து வருகிறது.
இதே நேரம் ஹீரோயின் சுஹாசினி என்னும் மெரீனா மைக்கேலை பார்த்து ஜொள்ளாகிறார் ஹீரோ. அவள் பின்பாகவே நடந்து, அலைந்து, திரிந்து, ஓடி ஒரு வழியாக தனது காதலைச் சொல்கிறார். அவரும் ஏற்றுக் கொள்ள காதல் அலைபாய்கிறது.
இந்த நேரத்தில ஆர்த்தி,. சுஹாசினியின் வீட்டுக்கு எதிர் பிளாட்டிலேயே குடி வருகிறாள். இதையறிந்து ஹீரோ பரபரப்பாகிறார். இனிமேல் எப்படி சுஹாசினியின் வீட்டுக்கு வந்து செல்வது என்று யோசிக்கிறார்.
இதற்கிடையில் சுஹாசினியின் வீட்டில் அவளது பெற்றோர் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கத் துவங்க.. இந்த இக்கட்டில் இருந்து தப்பிக்க நினைத்து ஓடிப் போலாமா என்று கேட்டு ஹீரோவை தயார் செய்கிறாள் சுஹாசினி.
அதே நேரம் 2 வருடங்களுக்கு முன்பு தற்செயலாக சுடுகாட்டில், சுடுகாட்டு வாட்ச்மேன் தன்னால் இறந்து போனதை நினைத்து இன்னமும் வருத்தப்படுகிறான் ஹீரோ. அதே நேரம் ஆர்த்தியுடனான அந்த ஒரு நாள் தொடர்பும் அவனது மனதை அரித்துக் கொண்டேயிருக்கிறது.
சுஹாசினியுடன் ஓடிப் போகும் நாளைக்கு முதல் நாள் இந்தப் பாவத்திற்காக சர்ச்சுக்கு சென்று பாவ மன்னிப்பு கேட்டு தனது மன பாரத்தை இறக்கிவைத்துவிட்டு செல்வதாக தனது நண்பனிடம் சொல்லிவிட்டு சர்ச்சுக்குள் செல்கிறார் ஹீரோ.
அங்கே நடக்கும் ஒரு அசம்பாவிதம் அனைத்து விஷயங்களையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட அடுத்து என்ன நடக்கிறது என்பதை விறுவிறுப்பான திரைக்கதையிலும், அழுத்தமான தனது இயக்கத்திலும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கிருஷ்ண குமார்.
ஹீரோ மற்றும் இரண்டு ஹீரோயின்களும் அறிமுகங்கள்தான். ஆனால் படத்தில் அப்படி தெரியவில்லை. ஆர்த்தியாக நடித்திருக்கும் ஸ்ருதியுகல் கண்ணைக் கவரும் வண்ணத்தில் இருக்கிறார். அந்த மழைக் காட்சியில் இவரது நடிப்பு படம் பார்ப்பவர்களையும் சேர்த்தே உணர்ச்சிவசப்பட வைத்திருக்கிறது. அந்த அளவுக்கு உண்மைத்தனத்தை அந்தக் காட்சியில் இயக்குநர் கொண்டு வந்திருக்கிறார்.
விடிற்காலையில் காலிங்பெல் சப்தம் கேட்டு எழுந்து தன் நிலை உணர்ந்து அவர் படும் பதட்டம்.. அதிர்ச்சியை தனது கண்களில் காட்டியிருக்கும் அந்தப் படபடப்பு எல்லாமே சிம்ப்ளி சூப்பர்ப்..! தமிழுக்கு நல்லதொரு ஹீரோயின் கிடைச்சிருக்காங்கப்பா..!
இன்னொரு ஹீரோயினாக சுஹாசினியாக நடித்த மரீனா மைக்கேல். மிக இயல்பாக இவரிடத்தில் வேலை வாங்கியிருக்கிறார் இயக்குநர். வசனங்கள் மிக எளிமையாக.. இன்றைய இளைஞர்களையும் கவரும்வகையில் வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டாக இருப்பதால் இவர் பேசும் வசனங்களை பெரிதும் ரசிக்க முடிந்திருக்கிறது. ஆனாலும் பின்னணியில் பிராம்ட்டரில் வசனத்தை சொல்லி உதவியிருப்பதுபோல தெரிகிறது. அத்தனை தாமதமாக வசனங்களை டெலிவரி செய்திருக்கிறார்கள் சில இடங்களில்.. தவிர்த்திருக்கலாம்..! ஒரு பாடலின் லீடாக “உன் உதட்டில் இருக்கும் ரேகைகளையெல்லாம் எண்றதுக்கு ஒரு வருஷம் ஆகும்..” என்று ஹீரோ சொல்லும் காட்சியில் கவிதைத்தனம் சொட்டியிருக்கிறது.
மஹா முதல் படம் போலவே தெரியாத அளவுக்குத்தான் நடித்திருக்கிறார். இயக்குநரின் இயக்கத் திறமையினால் நடிப்பு, முக பாவனைகள்.. வசன உச்சரிப்பு, சண்டை காட்சிகள் என்று அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார் மஹா. அதிலும் கடைசி காட்சியில் தன்னைச் சுட்டுக் கொல்ல முயலும் வின்சென்ட் அசோகனிடம் “கொல்ல வேண்டாம்.. கைது செய்யுங்கள்…” என்று சைகையிலேயே சொல்லும் காட்சியில் நிஜமாகவே உருகவும் வைத்திருக்கிறார். வாழ்த்துகள் மஹா..!
“இயக்குதல் என்றால் என்ன..?” என்று கேட்டவர்களுக்கு இந்தப் படத்தில் அஸிஸ்டெண்ட் கமிஷனரான வின்சென்ட் அசோகன், ஹீரோவின் நண்பனை விசாரணை செய்யும் அந்த ஒரேயொரு காட்சியை மட்டும் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும். வின்சென்ட் அசோகனின் இதுவரையிலான நடிப்பின் சாயல்கூட இல்லாமல் புதிய வின்சென்ட்டை அந்தக் காட்சியில் காட்டியிருக்கிறார் இயக்குநர். வின்சென்ட்டுக்கும் நமது வாழ்த்துகள்.
கோபி சுந்தரின் இசையில் வரும் பாடல்களும் படத்திற்கு மிகப் பெரிய வேகத் தடையாக இருக்கின்றன. அதிலும் பாடல்கள் எல்லாம் பிட்டு, பிட்டாக அவ்வப்போது ஒலித்துக் கொண்டேயிருப்பதெல்லாம் இந்தக் காலத்தில் பார்க்கக் கூடியதா..? ஆனால், பாடல் காட்சிகளை படமாக்கியவிதம் அற்புதம் என்பதால்தான் பாடல் காட்சிகளின்போது யாரும் எழுந்து வெளியில் போகாமல் இருந்தார்கள்.
ஒளிப்பதிவாளரும், படத் தொகுப்பாளரும் கண்டிப்பாக பாராட்டத்தக்கவர்கள். முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் ஒளிப்பதிவாளரின் பங்களிப்பு படத்தில் சிறப்பானதாக இருக்கிறது. அதேபோல் படத்தொகுப்பாளரும் பல காட்சிகளை அடுத்தடுத்த காட்சிகளின் லீடிங்காகவே வருவதைப் போல தொகுத்திருப்பது ரசனைக்குரியதாக இருந்தது. படத்தொகுப்பாளரின் உதவியில்லாமல் படம் இந்த அளவுக்கு பேசப்பட்டிருக்காது என்பது உண்மை.
எல்லாம் இருந்தும்.. எல்லாம் இருந்தும்.. ஏதோ ஒன்று குறைகிறதே என்பார்களே.. அது இந்தப் படத்திற்கும் பொருந்தும்..!
முதற்பாதியில் கதை எதை நோக்கிப் போகிறது என்பதே புரியாமலேயே அமர்ந்திருப்பது மகா கொடுமை. ஆனால் இயக்குநர் தனது இயக்கத் திறமையால்தான் படத்தைக் கடைசிவரையிலும் பார்க்க வைத்திருக்கிறார் என்பது படம் முடிந்த பின்புதான் நமக்குப் புரிந்தது.
ஆர்த்தியின் கதையை ஏன்.. எதற்காக இதில் வைத்திருக்கிறார்கள் என்பதே புரியவில்லை. ஹீரோவின் மனசாட்சியை வருத்தும் செயலாக சுடுகாட்டு சாவு ஒன்றையே வைத்திருக்கலாம். ஆர்த்தியின் கதை, படத்தின் தன்மையையே மாற்றிவிட்டது. படத்தின் பிற்பாதி கதை ஆர்த்தி-சுஹாசினி-ஹீரோ மூவரின் சந்திப்பில் ஏற்படும் பிரச்சனையாகப் போகிறது என்று நினைத்திருந்த நேரத்தில் திடீரென்று சுடுகாட்டு பிரச்சனையைக் காட்டி போக்குக் காட்டிவிட்டார் இயக்குநர். அதுகூட எந்தவொரு காரணமும் இல்லாமல் திடீரென்று “தனக்கு மனச்சஞ்சலம்…” என்கிறார் ஹீரோ.. இது சட்டென்று ஏற்கக் கூடியதாக இல்லையே..?
வின்சென்ட் அசோகனுக்கு ஒரு முன்னோட்டம் கொடுக்க வேண்டும் என்பதற்காக நடு இரவில் ஒரு என்கவுண்ட்டர் நடப்பதாக காட்சி வைத்திருக்கிறார் இயக்குநர். இத்தனை பேர் நடுத் தெருவில் நிற்கும்போது.. இவர்களைத் தாண்டி போய் கொலை செய்துவிட்டு வழியில் நிற்பவர்களைக் கண்டுகொள்ளாமல் திரும்பிப் போகும் போலீஸை உலகத்தில் எங்காவது நீங்கள் பார்த்ததுண்டா..? இயக்குநரின் சொதப்பல் திரைக்கதையில் இதுவும் ஒன்று..
படத்தின் திரைக்கதையாக்கத்திற்கு எத்தனையோ வழிகள் இருந்தும், அதைப் பற்றி யோசிக்காமல் தான் நினைத்ததையே எடுத்துக் காண்பித்திருக்கிறார் இயக்குநர். கொஞ்சம் டிஸ்கஷன் நாட்களைக் கூட்டியிருக்கலாம் இயக்குநரே..?!
திரைக்கதையில் சில மாற்றங்களை மட்டும் செய்திருந்தால் இந்தப் படம் நிச்சயம் இதைவிடவும் அதிகமாகவும் பேசப்பட்டிருக்கும். ஜஸ்ட் மிஸ்ஸிங்.. ஆனாலும் இந்தப் படத்தின் இயக்குநர் வரும் காலங்களில் குறிப்பிடத்தக்க இயக்குநராக வருவார் என்பதில் சந்தேகமில்லை. இயக்குநர் கிருஷ்ண குமார் அடுத்தடுத்த படங்களில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறோம்..!

1 comments:

Seshadri said...

ayyoooo.....padam pappdamma............delhi sir missed the bus....