கிடா பூசாரி மகுடி - சினிமா விமர்சனம்

10-04-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘கோடை மழை’க்கு பின்பு மறுபடியும் ஒரு கிராமத்து அத்தியாயம். இதயம் தொடும் கதை.

நாயகனான தமிழ், கிராமத்திலேயே பிறந்து வளர்ந்தவர். இவருடைய அக்காவுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் கழித்து ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. தனது அக்காளுக்கு பெண் குழந்தைதான் பிறக்க வேண்டும் என்று ஊர் ஐயனார் சாமியை அந்த சின்ன வயதிலேயே வேண்டிக் கொள்கிறார் ஹீரோ. அக்கா மீது அத்தனை பாசமாம்.
அந்தப் பெண் இப்போது வளர்ந்து பெரிய மனுஷியாகிவிட்டார். ஹீரோயின் மலர் மீது அதீத பாசம் வைத்திருக்கும் தமிழ், அவளை திருமணம் செய்ய ஆசைக் கனவை கட்டியிருக்கிறார். ஆனால் ஹீரோயின் மலருக்கு அப்படியொரு எண்ணமில்லை.
இந்த நேரத்தில் அதே ஊருக்கு இன்னொரு நாயகனான ராம்தேவும் தனது தாத்தா, பாட்டியுடன் சேர்ந்து வாழ வருகிறார். வந்த இடத்தில் பல முறை ஹீரோயினுடன் முட்டல், மோதலாகி கடைசியில் அது காதலாகிறது.
இவர்களின் காதல் வாழ்க்கை முறை மாமனான தமிழுக்குத் தெரிய வர பொங்கியெழுகிறார். ஊரையே கூட்டி மந்தையில் வைத்து அவர்கள் முன்பாகவே ஹீரோயினின் கழுத்தில் தாலியைக் கட்டி மனைவியாக்கிவிடுகிறார்.
இந்த நேரத்தில் வெளியூர் போயிருக்கும் ராம்தேவ் இதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியாகிறார். ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியாத சூழல். ஹீரோயினே சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு மாமனுக்கு மனைவியாகிறாள்.
எதிர்பாராத இந்த காதல் தோல்வியால் ராம்தேவ் சென்னைக்கு சென்று விடுகிறார். அங்கே வேலை பார்த்து தன் காதலை மறக்கடிக்க முயலும் நேரத்தில் இங்கே ஹீரோயினுக்கு ஆண் குழந்தையே பிறந்து விடுகிறது. இவர்களின் வாழ்க்கையும் சந்தோஷமாக போய்க் கொண்டிருக்க.. திடீரென்று ராம்தேவ் ஊருக்கு வரும் சூழல் வருகிறது. அவருடைய தாத்தா திடீரென்று மரணமடைய.. வேறு வழியில்லாமல் ஊர் திரும்புகிறார் ராம்தேவ்.
வந்த இடத்தில் ஹீரோயினையும் பார்க்கிறார். ஹீரோயினும் அவரை பார்க்கிறார். இவர்கள் இருவரையும் ஊராரும் பார்க்கிறார்கள். கிசுகிசுக்களுக்கு ரெக்கை கட்டி பறக்கத் துவங்க.. விஷயம் கணவனுக்குத் தெரிய வருகிறது. இதன் பின்பு அவர்களிடையே என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் இரண்டாம் பாதியின் சுவையான திரைக்கதை.
படத்தின் ஒரு நாயகனாக நடித்திருக்கும் தமிழ்தான் படத்தின் தயாரிப்பாளர் என்பதால் தனக்கேற்ற கதையாகத் தேர்வு செய்திருக்கிறார். இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சில் செய்திருக்கும் குழப்பம் காரணமாய் கொஞ்சம் நெருடல் இருந்தாலும் நடிப்பில் மனிதர் குறை வைக்கவில்லை. மிக இயல்பாக நடித்திருக்கிறார்.
இன்னொரு ஹீரோவான ராம்தேவுக்கும் இதே நிலைதான். புதுமுக நடிகர் என்றாலும் நல்ல இயக்கம் என்பதால் அனைத்துக் காட்சிகளிலும் ரசிக்க வைத்திருக்கிறார். அனைத்து கைதட்டல்களையும் அள்ளிக் கொண்டு போயிருப்பவர் ஹீரோயினாக நடித்திருக்கும் நட்சத்திராதான்.
பொதுவாக இது போன்ற மொட்டையடிக்கும் கேரக்டரில் நடிக்க எந்த ஹீரோயினும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் தைரியமாக கதைக்காக முன் வந்து மொட்டையடித்து நடித்திருக்கிறார். அந்தக் காட்சியிலும் மிக உருக்கமாக நடிப்பையும் காட்டியிருக்கிறார். இவருடைய நடிப்பே பல காட்சிகளைக் காப்பாற்றியிருக்கிறது. படத்தையும் பேச வைத்திருக்கிறது.
சிங்கம் புலி, பவர் ஸ்டார் சீனிவாசன், செவ்வாழை ராசு, சுப்புராஜ் என்று ஆளாளுக்கு காமெடி கொத்து புரோட்டா போட்டிருக்கிறார்கள். ஆனால் அனைத்துமே வீண்தான். காமெடி காட்சிகளை முழுமையாக நீக்கியிருந்தால்கூட நன்றாகத்தான் இருந்திருக்கும்.
படத்திற்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய பலம் இசைஞானி இளையராஜாவின் இசை. இவருடைய இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணியை இசையிலும் தனது நீண்ட வருட அனுபவத்தைக் காட்டியிருக்கிறார். ரவி சீனிவாசின் ஒளிப்பதிவில் கிராமத்து காட்சிகள் கண்களுக்கு விருந்து.
குறைந்த பட்ஜெட்டில் ஒரு சிறந்த கதையோட்டத்தில் தரமான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஜெயக்குமார். ஹீரோ தமிழின் கேரக்டர் ஸ்கெட்ச் மட்டுமே குழப்பம் தருகிறது. அவர் கொஞ்ச நாள் நல்ல மன நிலையிலும், திடீரென்று மனப்பிறழ்வு நிலை கொண்டவராகவும் காட்டப்படுவதால் அவர் செய்வதையெல்லாம் பைத்தியக்காரத்தனமான அதீத அடக்குமுறைகளாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
மற்றவர்களெல்லாம் தன் மனைவியை திரும்பிப் பார்க்கிறார்கள் என்பதற்காக அவருக்கு மொட்டை அடித்துவிட்டு அதையும் ஒரு சென்டிமெண்ட் வசனத்தின் மூலம் நியாயப்படுத்த நினைப்பது எந்த வகையில் நியாயம் இயக்குநர் ஸார்..? இதுதான் அந்தக் கணவரின் எண்ணம் என்றால் அவர் அப்போதே ஒரு மன நோயாளியாச்சே..? கிளைமாக்ஸில் ஜெயில் தண்டனையை பூர்த்தி செய்துவிட்டு வீடு திரும்பியவரிடம் “அந்தக் கொலை செய்த அன்னிக்கே நீ என் மனதில் இருந்து வெளில போயிட்ட.. இப்போ என் மனசு முழுக்க ராம்தேவ்தான் இருக்கான்…” என்று ஹீரோயின் சொல்வது அக்மார்க் காதல் கவிதை..! இதற்காக தமிழ் தனக்குத்தானே கொடுத்துக் கொள்ளும் தண்டனையும் ரசிகர்களை உச்சுக் கொட்ட வைத்திருக்கிறது. இதுதான் படத்தின் பலமும்கூட..!
‘கிடா பூசாரி மகுடி’ – நிச்சயம் பார்க்க வேண்டிய படம்தான்..!

0 comments: