ஓய் - சினிமா விமர்சனம்

11-04-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘ஓய்’ என்கிற வார்த்தையில் துவங்கும் பேச்சு காதலாகி, கடைசியில் அதே ‘ஓய்’ என்கிற வார்த்தையில் முடிவதால் அதே ‘ஓய்’ என்கிற வார்த்தையை டைட்டிலாக வைத்திருக்கிறார்கள்.

சிறையில் தண்டனை கைதியாக இருக்கும் கதாநாயகி ஈஷா தனது அக்காவின் திருமணத்திற்காக பரோலில் வெளியே வருகிறார். சிறையில் இருந்து வெளியில் வந்த ஹீரோயினை கொலை செய்யவும் முயற்சிகள் நடக்கிறது.  அவருக்கே இது தெரியாமல் இருக்க.. தப்பித்துவிடுகிறார்.
சென்னை செல்லும் பேருந்தில் ஏறும் ஈஷா, எதிர்பாராதவிதமாக அதே பேருந்தில் பயணிக்க இருக்கும் ஹீரோ கீதனை அடித்துவிடுகிறார். பின்பு உண்மை தெரிந்து மன்னிப்பும் கேட்கிறார்.
கீதன் பிஸ்கட் பாக்கெட் வாங்க கடைக்குச் செல்லும்போது இரண்டு திருடர்கள் அவரது கழுத்து செயினை அறுத்துக் கொண்டு ஓடுகிறார்கள். பேருந்தில் இருந்து இதைப் பார்த்துவிடும் ஹீரோயின் ஈஷா கீழேயிறங்கி அவர்களைத் துரத்திச்  சென்று பிடித்து சண்டையிட்டு செயினை மீட்டு வருகிறாள். ஆனால் அதற்குள் பேருந்து சென்றுவிடுகிறது. அந்த பேருந்துக்குள் ஈஷாவின் கைப்பை சிக்கிக் கொள்கிறது.
ஹீரோ பேருந்தில் அமர்ந்திருக்கும்போது தன்னுடைய சொந்த ஊர் சின்னாளப்பட்டி என்றும், அந்த ஊர் பண்ணையாரின் மகன் என்றும் பக்கத்தில் இருப்பவரிடம் சொல்கிறார். இதைக் கேட்டிருந்த ஈஷா ஹீரோவின் நகையைத் திருப்பிக் கொடுக்க நினைத்து சின்னாளப்பட்டிக்கு செல்கிறார்.
அங்கே ஹீரோவின் தங்கை வந்திருப்பது தனது அண்ணன் காதலிக்கும் பெண் என்று நினைத்து வரவேற்கிறாள். ஈஷாவை பேசவே விடாமல் இவர்கள் அன்பையும், ஆதரவையும் காட்ட.. ஹீரோ வரும்வரையில் இங்கதான் இருக்கணும் என்கிற பண்ணையாரின் கட்டளைக்கு கட்டுப்பட்டாக வேண்டிய சூழலில் இருக்கிறாள் ஈஷா.
தன்னுடைய வீட்டுக்கு போன் செய்து பேசுகிறாள் ஈஷா. அங்கேயோ தன் கல்யாணத்துக்கு அவள் வரவே வேண்டாம் என்றும், அவளைக் கொலை செய்ய ஒரு கும்பல் முயல்வதாகவும், வீடு தேடி வந்து மிரட்டிவிட்டுச் சென்றதையும் ஈஷாவின் அக்கா சொல்ல.. பரோல் முடியும்வரையில் தான் ஒரு பாதுகாப்பான இடத்தில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது ஹீரோயினுக்கு.
இந்த நேரத்தில் ஹீரோ சென்னையில் நிஜமாகவே இன்னொரு ஹீரோயினான காயத்ரியை காதலித்து வருகிறான். காயத்ரி விரைவில் அமெரிக்காவில் வேலை கிடைத்து போகப் போகிறாள். அங்கேயே ஹீரோவையும் வரச் சொல்கிறாள். அவனும் வருவதற்கு ஒத்துக் கொள்கிறான்.
இந்த நேரத்தில் ஹீரோவின் அப்பா அவனை உடனடியாக புறப்பட்டு வரச் சொல்கிறார். ஹீரோ ஊருக்கு வர இங்கே அவனது காதலி தன் வீட்டில் காத்திருக்கும் செய்தி சொல்லப்படுகிறது. யாராக இருக்கும் என்று நினைத்து வருபவனுக்கு ஈஷாவை அங்கே பார்த்த்தும் அதிர்ச்சியாகிறது.
என்னுடையை கைப்பையைக் கொடுத்தால் நான் சென்றுவிடுகிறேன் என்கிறாள் ஈஷா. அது பஸ்ஸோடு போய்விட்டது என்கிறான் ஹீரோ. இவள் என் காதலி இல்லை என்கிறான் ஹீரோ. ஆனால் ஈஷாவோ தான்தான் அவனது காதலி என்று டிராமா போடுகிறாள். ஏதோ மனஸ்தாபத்தில் சண்டையிடுகிறார்கள் என்று நினைத்து அவர்களின் குடும்பத்தினர் இதைக் கண்டு கொள்ளாமல்விட.. ஹீரோ கீதன் கொதிக்கிறான்.
இந்த நேரத்தில் திடீரென்று காயத்ரியும் கீதனைத் தேடி ஊருக்கே வந்துவிடுகிறாள். அவளை தன்னுடைய நண்பி என்று சொல்லி வீட்டில் தங்க வைக்கிறான் ஹீரோ. ஆனால் ஈஷாவைத்தான் ஹீரோ கல்யாணம் செய்து கொள்ளப் போவதாக தெரிய வர காயத்ரி கொதிக்கிறாள். ஹீரோ அவளை சமாதானம் செய்ய பெரும்பாடு படுகிறான்.
இந்த நேரத்தில் ஊர்த் திருவிழா வருகிறது. அதில் வருடா வருடம் நடத்தப்படும் சிலம்பாட்டம் தொடர்பாக பண்ணையார் குடும்பத்திற்கு எதிரணிக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. தன் வீட்டில் இருந்து சிலம்பாட்டம் ஆட ஒருவர்கூட இல்லை என்பது அவமானமாகவும், கேவலமாகவும் இருப்பதாக பண்ணையார் வருந்துகிறார்.
இந்த நேரத்தில் ஈஷா, ஹீரோவிடம் ஒரு ஒப்பந்தம் செய்கிறாள். இந்த சிலம்பாட்டத்தில் கலந்து கொண்டு ஜெயித்துவிட்டால் தான் உடனேயே ஊரைவிட்டு போய்விடுவதாக வாக்குறுதி அளிக்கிறாள். இதற்காகவே சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொண்டு மோதலுக்குத் தயாராகிறான் ஹீரோ..
ஜெயித்தாரா..? இல்லையா..? எந்த ஹீரோயினை கல்யாணம் செய்தார்..? ஈஷா திரும்பவும் ஜெயிலுக்கு போனாரா என்பதெல்லாம் மீதியான திரைக்கதை.
ஒரு காதல்.. சந்தர்ப்பவசத்தால் பொய் சொல்லித் தப்பிக்க நினைக்கும் பெண்.. உண்மையான காதலியின் எதிர்ப்பு. இதைச் சமாளிக்க முடியாமல் திணறும் ஹீரோ.. எல்லாவற்றையும் நம்பித் தொலைக்கும் குடும்பத்தினர் என்று அட்சரச்சுத்தமாக தெலுங்கு படவுலகில் ஹிட்டாகக் கூடிய ஒரு கதையை தமிழுக்கு மிக சாதாரணமாக கொடுத்திருக்கிறார்கள். பெரிய ஹீரோ.. ஹீரோயின் என்று நட்சத்திரங்கள் நடித்திருந்தால் இந்தப் படத்தின் ரிசல்ட் வேறாகத்தான் இருந்திருக்கும்.
ஹீரோவான கீதனும், ஈஷாவும்தான் படத்தைத் தாங்கியிருக்கிறார்கள். இருவருக்குமிடையே ஏற்படும் மோதல்.. மெல்ல மெல்ல காதலாக மாறுவதை கொஞ்சமும் அநியாயம் என்று சொல்ல முடியாத அளவுக்கு காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
கீதன் புதுமுகம் என்றாலும் நன்றாகவே நடித்திருக்கிறார். ஈஷாவுடனான மோதல்.. குடும்பத்தினரை சமாளிக்கத் திணறுவது.. காயத்ரியை சமாளிப்பது.. அப்பாவுடன் மோதலைத் தொடர்வது.. இறுதியாக சண்டையிட்டாவது காதலை ஜெயிக்க வைக்க போராடுவது.. என்று அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் குற்றமும் இல்லை.. குறையுமில்லை..
ஈஷாவின் அழகைவிடவும் நடிப்பு ஏ ஒன். பொய் சொல்கிறார் என்பதே தெரியாத அளவுக்கு பொய் நடிப்பு நடித்திருக்கிறார். இதுவே ரசிகர்களை நிச்சயம் கவரும்.. ஆள் பாதி ஆடை பாதி என்பார்களே அது போல பாடல் காட்சிகளில் இவருடைய காஸ்ட்யூம்ஸ் மேலும் அழகைக் கூட்டி காண்பித்திருக்கிறது.
இன்னொரு நாயகி காயத்ரியும் ஓகே ரகம்தான்.. அப்பாவியாக டிரவுசர் அணிந்து கொண்டு டைனிங் டேபிளுக்கு வந்து அனைவருக்கும் வணக்கம் வைக்கும் காட்சி ஒன்றே போதும்..
இடையிடையே கலகலப்புக்கு அர்ஜூனும், சென்ட்மெண்ட் கதை நகர்த்தலுக்கு சங்கிலி முருகனும் உதவியிருக்கிறார்கள்.
படத்திற்கு மிகப் பெரிய பலமே இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசைதான். ஆனால் ராப் பாடல் ஒன்றை போட்டு ஏமாற்றியிருக்கிறார் இசைஞானி. மற்ற பாடல்களும் இளையராஜாவுக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை என்பது வருத்தமான செய்தி. யுகாவின் ஒளிப்பதிவு சண்டை காட்சியிலும், பாடல் காட்சிகளிலும் தெரிகிறது.
வசனங்களும் படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம். பாஸ்கரன் எழுதியிருக்கும் பல வசனங்கள்தான் படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பலம். வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
ஹீரோயின் ஈஷா எதற்காக ஜெயிலுக்கு போனார்.. எத்தனை வருட தண்டனை போன்ற விஷயங்களை கடைசிவரையிலும் சொல்லாமலேயே படத்தை முடித்திருக்கும் இயக்குநருக்கு நமது வன்மையான கண்டனங்கள்.
சிறந்த இயக்குநர்தான். ஆனால் இன்னமும் கூடுதல் சிறப்பாக கேரக்டர் ஸ்கெட்ச்சுகளை வைத்தும் இயக்கியிருந்தால் ஓய் என்று விசிலடித்துக் கொண்டாடியிருக்கலாம்..!
ஓய்.. பார்க்க முடிகிற படம்தான்..! 

0 comments: