30-04-2016
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
ரெட்ஜெயன்ட் மூவிஸ் வரலாற்றிலும், உதயநிதி ஸ்டாலின் நடித்த படங்களிலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான, தமிழ்ச் சினிமாவின் வரலாற்றில் இடம் பிடித்திருக்கும் படமும் இதுதான்..!
"முந்தைய ‘மனிதன்’ திரைப்படம் ரஜினியின் திரைப்பட வாழ்க்கை கேரியரில் ஒரு வெற்றிப் படமாகவும் அமைந்திருந்ததால் அந்த ‘மனிதன்’ என்ற டைட்டிலின் கவுரவம் குறையாமல்தான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம்…" என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருந்தார் தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின். இதனை செய்தும் காட்டியிருக்கிறார். அந்த வகையில் அவருக்கு நமது நன்றி..!
இந்தியாவில் ஏழைக்கு ஒரு நீதி.. பணக்காரர்களுக்கு ஒரு நீதி என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான். அந்த உண்மைக்கு இன்னுமொரு உதாரணம் இந்த ‘மனிதன்’ திரைப்படம்.
2013 மார்ச் 15-ம் தேதியன்று ஹிந்தியில் ரிலீஸாகி இந்தியாவெங்கும் பெரும் வெற்றி பெற்ற ‘ஜாலி எல்.எல்.பி’ என்கிற ஹிந்தி திரைப்படத்தின் தமிழாக்கம்தான் இது. இதுவும் ஒரு உண்மைக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதுதான்.
டெல்லி சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி. படித்துக் கொண்டிருந்தவர் பிரியதர்ஷினி மட்டூ. அதே கல்லூரியில் படித்து வந்த சந்தோஷ் குமார் சிங், பிரியதர்ஷினிக்கு பல்வேறு வகைகளில் பாலியல் தொந்தரவினை செய்து வந்துள்ளார். இது குறித்து டெல்லி போலீஸில் பல முறை பிரியதர்ஷினி புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவே இல்லை.
கடைசியில் 1996 ஜனவரி 23-ம் தேதி பிரியதர்ஷினியை அவரது வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து கொலையும் செய்துவிட்டார் சந்தோஷ் குமார் சிங். இந்த சந்தோஷின் தந்தை ஜெ.பி.சிங் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி. புதுவை மாநிலத்தில் போலீஸ் ஐ.ஜி.யாக பணி புரிந்து கொண்டிருந்தவர்.
இந்தச் செல்வாக்கால் வழக்கு டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும்போது சாட்சியங்களை முன் நிறுத்தாமல்.. ஏனோதானோ என்ற அரசுத் தரப்பு வக்கீலும் வாதாட.. கடைசியாக சந்தோஷின் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி விடுதலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கும், தீர்ப்பும் இந்தியாவெங்கும் எதிரொலித்தது. மீடியாக்கள் தினம்தோறும் இது குறித்து செய்திகளை வெளியிட.. வழக்கு சி.பி.ஐ.யின் கைக்கு சென்றது. சி.பி.ஐ. இந்த வழக்கை விசாரித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. அந்த அப்பீலில் இந்த வழக்குக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து 42 நாட்கள் தொடர்ச்சியாக விசாரித்த டெல்லி உயர்நீதி மன்ற நீதிபதிகள் சந்தோஷ் குமாருக்கு மரண தண்டனை கொடுத்தார்கள். இதை எதிர்த்து சந்தோஷ் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய.. அங்கே அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இப்போது டெல்லி திஹார் ஜெயிலில் கம்பியெண்ணி கொண்டிருக்கிறார் சந்தோஷ் குமார் சிங்.
இந்தச் சட்டப் போராட்டத்தை முன் நிறுத்திதான் இந்த ‘ஜாலி எல்.எல்.பி.’ படம் உருவாக்கப்பட்டது. கிட்டத்தட்ட 13 ஆண்டு காலம் கழித்து அந்தச் சம்பவத்தை நினைவுபடுத்திய படம் என்றாலும் இந்திய நீதித் துறையிலும், காவல்துறையிலும் புரையோடியிருக்கும் ஊழல், லஞ்சம் என்ற விஷக் கிருமிகளை வெளிப்படுத்தியதால் இந்தப் படம் இந்தியாவெங்கும் சக்கைப் போடு போட்டது. இந்தப் படத்தை தமிழாக்கம் செய்ய நினைத்த தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு நமது நன்றிகள்..
இதேபோல் மணப்பாறையில் ஒரு டாக்டர் தம்பதிகள் தங்களுடைய மருத்துவமனையில் ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்தபோது தங்களுடைய மகனையும் அருகில் இருக்க வைத்து அவனுக்கு ஆபரேஷன் செய்வது எப்படி என்று சொல்ல கொடுத்து.. அவனையே ஆபரேஷன் செய்ய வைத்து.. இதனை ஒரு பெரிய சாதனையாக்க முயன்ற கதை நாம் அனைவரும் அறிந்ததே.. அந்தக் கதையும் இந்தப் படத்தில் இணைக்கப்பட்டிருப்பது சாலப் பொருத்தம்தான்..!
உதயநிதி பொள்ளாச்சியில் வக்கீல் தொழில் செய்து வருகிறார். ஆனால் அதிகம் பிரபலமாகவில்லை. ஒண்ணே ஒண்ணு.. கண்ணே கண்ணுவாக கிடைத்த இந்த டாக்டர் கேஸிலும் சரியாக வாதாட முடியாமல் திணற, குற்றவாளிக்கு ஜாமீன் கிடைக்காமல் போகிறது.
கூடவே ஹன்ஸிகாவையும் காதலித்துக் கொண்டிருக்கிறார். தான் ஒரு வழக்கிலாவது ஜெயித்த பின்பு ஹன்ஸிகாவின் அப்பாவிடம் வந்து பெண் கேட்பதாக சொல்கிறார். ஆனால் அதற்கான வாய்ப்பே வராமல் போக.. ஒரு நாள் ஹன்ஸிகாவே ‘நீ எதற்கும் லாயக்கில்லை’ என்று சொல்லிவிட பெரிதும் மனம் புண்படுகிறார்.
உடனேயே சென்னைக்கு கிளம்பி வருகிறார் உதயநிதி. சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது தாய் மாமனான விவேக் வழக்கறிஞராக இருக்கிறார். அவருடன் சேர்ந்து தானும் பெரிய வக்கீலாக வேண்டும் என்ற நினைப்புடன் சென்னையில் கால் வைக்கிறார் உதயநிதி.
ஆனால் இங்கேயோ விவேக்கே உயர்நீதிமன்ற வளாகத்தில் ஊறுகாய் பாட்டிலை விற்று வருகிறார். அவருக்கே கேஸ்கள் கிடைக்கவில்லை. இப்போதும் எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் நாம் பார்க்க்க் கூடிய காட்சி வக்கீல்கள் கேஸ் தேடி அலைவதைத்தான். இதேபோல் அலைந்து, திரிந்து பார்க்கிறார் உதயநிதி. கேஸ் கிடைப்பதாக இல்லை.
இங்கு வந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. வீட்டு வாடகை தர முடியவில்லையே என்றெல்லாம் நினைத்து வருத்தத்தில் இருக்கிறார். அப்போதுதான் சுப்ரீம் கோர்ட் வக்கீலான ஆதிசேஷன், ஒரு வழக்கில் ஆஜராக சென்னை வருவது தெரிகிறது. அந்த வழக்கு பற்றிய விஷயங்களை தெரிந்து கொள்கிறார் உதய்.
பிரபல தொழிலதிபரான ராகுல், ஒரு இரவு நேரத்தில் ஓவர் ஸ்பீடில் செல்லும்போது அவரது கார் விபத்துக்குள்ளாகி அருகில் இருக்கும் பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருப்பவர்கள் மீது ஏறி இறங்கி நிற்கிறது. இந்த விபத்தில் இரண்டு வயது குழந்தை உட்பட 4 பேர் ஸ்தலத்திலேயே இறந்து போகிறார்கள்.
இந்த வழக்கில் உடனடியாக களத்தில் குதித்த தொழிலதிபர் குடும்பம், தங்களது மகனை பத்திரமாக மீட்கிறது. வழக்கு நீதீமன்றத்திற்கு வருகிறது. வழக்கில் சாட்சிகளே இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்கள் போலீஸார். நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் எந்தக் குறுக்குக் கேள்வியும் கேட்காமல் அமைதியாகிறார். ராகுல் தரப்பு வக்கீலோ ஏதோ ஒரு லாரி மோதியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், ராகுல் இந்த வழக்கில் குற்றவாளியல்ல.. அந்த வழியாக அவரும் காரில் வந்தார்.. சம்பவத்தை பார்த்துவிட்டு காரை நிறுத்தி விசாரித்திருக்கிறார். இதுதான் அவர் செய்த தவறு என்றும் வாதிடுகிறார்.. அரசுத் தரப்பு வக்கீல் வாயே திறக்காத்தால் ராகுலுக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாகிறது.
இந்தச் செய்தியை கூர்ந்து படித்த உதயநிதிக்கு சட்டென ஒரு எண்ணம் தோன்ற.. பொதுநலன் கருதி ராகுல் வழக்கில் செஷன்ஸ் கோர்ட் அளித்த தீர்ப்புக்கெதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்கிறார். ஆதிசேஷன் மீண்டும் இந்த வழக்குக்காக ஆஜராக வருகிறார்.
வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் நீதிபதி ராதாரவி அடுத்தக் கட்ட விசாரணையின்போது சாட்சிகள், ஆதாரங்களை கொடுக்கும்படி உதயநிதியிடம் சொல்கிறார். இந்த நேரத்தில் இந்த வழக்கை நேரில் பார்த்த சாட்சி நான்தான் என்று சொல்லி கேரளாவில் இருந்து மது என்பவர் உதயநிதியிடம் வந்து சொல்கிறார். உடனேயே சந்தோஷமாகும் உதயநிதி, மதுவை வைத்தே இந்த வழக்கை நடத்த முடிவெடுக்கிறார்.
நாளை நீதிமன்றத்தில் வழக்கு வரவிருக்கும் சூழலில் முதல் நாள் உதயநிதியை சந்திக்கும் மது, நாளைய கோர்ட் விசாரணையில் தான் ராகுலை பார்க்கவில்லை என்று சொல்லப் போவதாகவும் இதற்காக ஆதிசேஷன் தரப்பில் தனக்கு பணம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், இதில் ஒரு பங்கை உதயநிதிக்கு தருவதாகவும் சொல்கிறார்.
எதிர்பாராமல் பணம் கிடைக்கிறதே என்றெண்ணிய உதயநிதி தான் ஆதிசேஷனிடம் மேலும் பேசி கூடுதல் தொகையை வாங்குவதாக மதுவிடம் சொல்கிறார். ஆனால் மதுவோ, தனக்கும் இந்த வழக்கிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும், தன்னை இப்படி சொல்ல வைத்த்தே ஆதிசேஷன்தான் என்கிற உண்மையைச் சொல்கிறார். உதயநிதிக்கு அட்வான்ஸ் லஞ்சத் தொகையாக ஐம்பதாயிரத்தைக் கொடுத்துவிட்டுப் போகிறார் மது.
மறுநாள் நீதிமன்றத்தில் ராகுலை பார்க்கும் மது தான் பார்த்தது இவரில்லை என்று சொல்லிவிட.. இதற்கு உதயநிதியும் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் இருக்கிறார். விசாரணை மறுபடியும் ஒத்தி வைக்கப்படுகிறது.
இதையறிந்த ஹன்ஸிகா உதயநிதியை திட்டித் தீர்க்கிறார். “லஞ்சம் வாங்கி பிழைக்கும் நீயெல்லாம் ஒரு மனுஷனா..?” என்று கேள்வியெழுப்ப.. அது உதயநிதிக்கு சுரீரென்கிறது. தன்னுடைய தவறை உணர்கிறார். அதே நேரம் ராகுல் ஏற்கெனவே ஒரு இளம் பெண்ணை கற்பழித்து கொலை செய்துவிட்டு அந்த வழக்கில் இருந்து தப்பித்திருப்பதும் தெரிய வர.. இந்த வழக்கில் இனிமேல் உண்மையாக செயல்பட்டு ராகுலுக்கு தண்டனை வாங்கித் தருவதாக முடிவெடுக்கிறார்.
இந்த முடிவை எப்படி செய்து காட்டுகிறார் என்பதுதான் இந்த ‘மனிதன்’ படத்தின் சுவாரஸ்யமான திரைக்கதை.
இதேபோன்ற கதை தமிழ்நாட்டில், சென்னையிலும் நடந்தேறியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி அருகே ஒரு வெளிநாட்டு காரை வேகமாக ஓட்டி வந்த சென்னையின் புகழ் பெற்ற அகர்வால் குடும்பத்து பேரன் காரை பிளாட்பாரத்திலும் ஓட்டிவிட.. அந்த விபத்தில் 3 பேர் அந்த இடத்திலேயே மரணமடைந்தார்கள்.
இந்தியாவெங்கும் சங்கிலி தொடர்போல பல வியாபார நிறுவனங்களை நடத்திவரும் மிகப் பெரிய கோடீஸ்வர குடும்பத்தின் பிளஸ் டூ படிக்கும் பேரனான அந்த அகர்வாலை போலீஸ் கைது செய்து அந்த நள்ளிரவிலேயே ஸ்டேஷன் ஜாமீனில் விடுவித்தது. தமிழ்நாடு போலீஸ் இல்லையா..? அதனால் மரியாதையாக தங்களது போலீஸ் ஜீப்பிலேயே அந்தப் பையனை அவர்களது வீட்டிற்கு கொண்டு போய்விட்டுவிட்டு வந்தார்கள்.
பின்பு இறந்தவர்களின் உறவினர்களிடத்தில் பேசி “ஒரு நஷ்டஈட்டுத் தொகையை பெற்றுத் தருகிறோம்.. சாட்சி சொல்லாமல் போய்விடுங்கள்..” என்று பஞ்சாயத்து பேசி ஒரு தொகையை வாங்கி சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கும், இந்த பஞ்சாயத்துக்காக தங்களுக்கென்று ஒரு பெரும் தொகையையும் பெற்றுக் கொண்டு அந்தக் கொலை குற்றவாளியான அகர்வாலை பத்திரமாக கொல்கத்தாவுக்கே அனுப்பி வைத்தது சென்னை மாநகர காவல்துறை. எவ்வளவு பெருமையான விஷயம்.? அந்த வழக்கு என்ன ஆனது என்று இப்போதுவரையிலும் யாருக்கும் தெரியாது..!
இதேபோல் இந்தியாவின் திரையுலக சூப்பர் ஸ்டார்களின் ஒருவரான சல்மான்கான் நள்ளிரவில் குடி போதையில் காரை ஓட்டி பிளாட்பாரத்தில் இருந்த 2 பேரை படுகொலை செய்தார். ஆனாலும் பல ஆண்டுகள் வழக்கினை நடத்தி.. சட்டத்தின் சந்து பொந்துகளையெல்லாம் தேடிப் பிடித்து கடைசியில் தான் குற்றவாளி இல்லை என்ற தீர்ப்பினை எழுதி வாங்கிக் கொண்டு இப்போதும் ஜாம், ஜாமென்று சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்தச் சம்பவங்களையெல்லாம் மனதில் வைத்திருக்கும் இன்றைய தமிழக மக்கள் இந்தப் படத்தை நிச்சயம் விரும்பிப் பார்ப்பார்கள். படத்தின் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட்டே கதாபாத்திர தேர்வுகள்தான். ஹிந்தி படத்தில் ஸ்வரூப் சுக்லா நீதிபதியாகவும், பொம்மன் இரானி வக்கீலாகவும் நடித்திருப்பார்கள்.. அத்தனை சுவையான வாதங்களும், ஆக்ரோஷமான நடிப்பையும் கொட்டியிருந்தார்கள் இருவரும்.
இதே கேரக்டர் ஸ்கெட்ச்சில் தமிழுக்கு மிக மிக பொருத்தமாக ராதாரவியும், பிரகாஷ்ராஜும் அந்தந்த கேரக்டர்களாகவே வாழ்ந்து படத்திற்கு உயிரூட்டியிருக்கிறார்கள்.
நீதிமன்றக் காட்சிகளில் பேசப்பட்ட வசனங்களை தனக்கே உரித்தான பாணியில் உச்சரித்து அதன் மூலமாக அந்த வசனங்களுக்கே உயிருட்டீயிருக்கிறார் ஆதிசேஷனாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ். ‘சிட் டவுன்’ என்கிற வார்த்தையை பலவிதங்களில் பிரயோகப்படுத்தி தனது கோபத்தை வெளிப்படுத்தும், அந்தக் காட்சியில் அவரது நடிப்பை பார்க்க வேண்டுமே.. சிம்ப்ளி சூப்பர் ஸார்..
இதேபோல் இவருக்கு இணையாக தனது அழுத்தமான, ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பால் அனைவரையும் கவர்ந்துவிட்டார் ராதாரவி. முதலில் சாதாரண வழக்காக இதனை எடுத்துக் கொண்டு விசாரணைக்கு உத்தரவிட்டவர், ஆதிசேஷனிடம் வீடு வாங்கும் விஷயத்தையும் பேசிவிடுவதால் ஒருவேளை இவரும் அவர் கூட்டாளியாகிவிடுவாரோ என்கிற பதைபதைப்புக்கு நம்மை ஆளாக்குகிறார்.
பின்பு உதயநிதி “இதுவரைக்கும் இதை விளையாட்டா நினைச்சேன்.. ஆனால் இப்போ இந்த வழக்கை உண்மையா நடத்தப் போறேன் ஸார்..” என்று தன்னிடம் சொன்னவுடன் தானும் மனம் மாறும் காட்சியில் யதார்த்தமான நடிப்பைக் கொட்டியிருக்கிறார் ராதாரவி.
கோப ஆவேசத்தில் கையில் இருக்கும் பேப்பர் வெயிட்டைத் தூக்கிக் காட்டி “இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுன.. நடக்குறதே வேற..” என்று எச்சரிக்கும் வேகமும்.. அதேபோல் அடுத்த நொடியே, “அவருக்கு காபி வேணாமாம்…” என்று பிரகாஷ் ராஜ் ஆங்கிலத்தில் சொன்னதை தமிழாக்கம் செய்து தனது உதவியாளரிடம் சொல்லிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கும் வேகத்திலும் கைதட்டல்கள் மொத்த்த்தையும் வாங்கிக் கொண்டார் நடிகவேளின் புதல்வர் இளையவேள்.
இந்தப் படத்தின் ஒரிஜினலில் நீதிபதியாக நடித்த ஸ்வரூப் சுக்லா அந்த நடிப்புக்காகவே அந்தாண்டுக்கான சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருந்தார். இந்த முறை ராதாரவிக்கு அது கிடைத்தால் சந்தோஷம்தான். நிச்சயம் தகுதியான விருதாகத்தான் இருக்கும்..!
உதயநிதி இந்தப் படத்தில்தான் முதல்முறையாக நடிப்பு என்று சொல்லும் அளவுக்கு வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறார். தன்னை அவமானப்படுத்துகிறார்கள் என்பது தெரியாமலேயே மாமனார் அண்ட் கோ.விடம் அவமானப்பட்டுவிட்டு பின்பு ஹன்ஸிகா அதனைச் சுட்டிக் காட்டியவுடன் உண்மையை உணர்ந்து வெட்கப்படுகின்ற காட்சியில் உண்மையாகவே அச்ச்ச்சோ என்கிற உணர்வை வரவழைத்திருக்கிறார். வெல்டன் ஸார்..
பிரகாஷ்ராஜ் போன்ற நடிப்பு பிசாசுகளின் முன்பாக உதயநிதியெல்லாம் சின்ன கொசுவாகத்தான் தெரிகிறார். ஆனால் அந்த கேரக்டர் நமக்குப் பிடித்தமானதாக இருப்பதால் எல்லாவற்றையும் கடந்து அவரை பெரிதும் ரசிக்க முடிந்திருக்கிறது.. ‘கெத்து’ என்று சொல்லப்படும் ஹீரோயிஸத்தை மட்டும் கொஞ்சம் கற்றுக் கொண்டால் அடுத்தடுத்த படங்களில் நன்றாகவே இருக்கும்.
ஹன்ஸிகா வழக்கம்போல.. பாடல் காட்சிகளுக்காக மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனாலும், உதயநிதிக்கு வார்த்தைகளில் சூடு ஏற்றும் இரண்டு காட்சிகளில் மனதைத் தொடும் அளவுக்கு கொஞ்சமேனும் நடித்திருக்கிறார். அவரது அழகை காட்டுவதில் ஒளிப்பதிவாளர் மதி ஏனோ தவறிவிட்டார். அவர் வரும் அனைத்து காட்சிகளிலுமே மங்கலாகவே தெரிந்தார் ஹன்ஸிகா. என்ன ஆச்சோ..?
விவேக், செல் முருகன் காமெடியில் கொஞ்சம் கொஞ்சம் சிரிக்கவும் முடிந்த்து. சங்கிலி முருகன் உதயநிதியின் கன்னத்தில் அறைந்து தனது கோபத்தைக் காட்டும் காட்சியில் அவரையும் ரசிக்க முடிந்திருக்கிறது. ராகுலின் தாத்தாவாக நடித்திருக்கும் அந்தப் பெரியவர் காட்டும் ஆக்ரோஷமும், இதைப் பார்த்து பிரகாஷ்ராஜ் மிரள்வதும்.. இயக்குநரின் இயக்கத் திறமைக்கு இதுவும் ஒரு சான்று.
கோர்ட் காட்சிகளின் வேகத்திற்கு எந்தத் தடைக்கல்லும் போடாத அளவுக்கு படத்தொகுப்பாளர் கச்சிதமாக நறுக்கியிருக்கிறார். படத்தின் பிற்பாதியில் இருக்கும் நீதிமன்றக் காட்சிகள்தான் படத்தின் உயிர்நாடியே.. இது எந்தவிதத்திலும் பாதிக்காத அளவுக்கு படத்தொகுப்பாளர் கடுமையாக உழைத்திருப்பது தெரிகிறது..
படத்தின் இன்னொரு மிகப் பெரிய பலம் வசனங்கள்தான். எழுத்தாளர் அஜயன் பாலா சித்தார்த்தின் வசனங்கள் பிரகாஷ்ராஜுக்கும், ராதாரவிக்கும் மிகப் பொருத்தமாக இருக்கிறது. ஆங்காங்கே கோர்ட் நடைமுறை வார்த்தைகளுடன் ஆங்கிலக் கலப்பு அதிகமாக இருந்தாலும் அது படத்தைப் பாதிக்காத வண்ணம் கையாண்டிருக்கிறார்கள். இயக்குநருக்குக் கிடைத்த மிகப் பெரிய உதவி வசனகர்த்தாவின் எழுத்தாற்றல்தான்..!
படத்தின் மிகப் பெரிய பலவீனமே பாடல் காட்சிகள்தான். இது மாதிரியான மக்கள் பிரச்சினைகளை முன் வைக்கும் படங்களுக்கு பாடல் காட்சிகளே தேவையில்லை எனலாம். இந்தப் படத்தில் பாடல்களே இல்லாமல் இருந்திருந்தால்கூட நன்றாகத்தான் இருந்திருக்கும். அதிலும் சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்களும் கேட்கும் ரகமில்லை. பின்னணி இசையும் அசத்தலாக இல்லை. மாறாக கொஞ்சம் தொந்தரவைத்தான் கொடுத்தது. தவிர்த்திருக்கலாம்..!
நீதிமன்றங்களில் நியாயம் கிடைக்கும் என்று கோடிக்கணக்கானோர் காத்திருக்கும் சூழலில் பணக்காரர்களுக்கு மட்டும் மிக எளிதாக அவர்களும் விரும்பும் நீதி அவர்களாலேயே வாங்கப்படுகிறது என்பதை நினைக்கும்போது நீதிமன்றத்தில் நீதி தேவதையின் கண்களில் கட்டப்பட்டிருக்கும் துணி நிரந்தரமானதுதான். அதனை நீதிமன்றம்கூட களையவில்லை என்கிற உண்மைதான் புலனாகிறது.
இது போன்ற திரைப்படங்கள் பொதுமக்களிடையே ஒரு விழிப்புணர்வு ஊட்டக் கூடியவை. நீதியும், சட்டமும் யாருக்கும் வளைந்து கொடுக்காமல் செல்வதும். இருப்பதும்தான் உண்மையான ஜனநாயகம். அது நமது நாட்டிற்கு எப்போது கிடைக்கும் என்பதுதான் இத்திரைப்படம் நமக்குள் எழுப்பியிருக்கும் கேள்வி..!
‘மனிதன்’ அனைவரும் நிச்சயம் பார்த்து ரசிக்க வேண்டிய திரைப்படம். மிஸ் பண்ணிராதீங்க..!
|
Tweet |
1 comments:
Paid review
Post a Comment