ஹலோ நான் பேய் பேசுறேன் - சினிமா விமர்சனம்

04-04-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பேய்ப் பட வரிசையில் இந்த வாரம் நல்லா கல்லா கட்டும் படம் இதுதான்.

ஹீரோவான வைபவ் இன்னிக்கு இந்தத் திருட்டு.. இன்னிக்கு இந்த ஏரியா.. இன்றைக்கு இந்த மாதிரி திருட்டு என்று சார்ட் போட்டு திருட்டுத் தொழிலை ஒரு கார்பரேட் நிறுவனம் போல செய்து வருபவர்.
ஹீரோயின் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்செயலாக அனாதை குழந்தைகளுக்கு நிதி வேண்டி ஹீரோ வைபவுக்கு போன் செய்ய.. அவரோ தானே ஒரு அனாதை என்றும், கையில் காசில்லாமல் அல்லாடுவதாகவும் புலம்பி வைக்கிறார்.
இதை உண்மை என்று நம்பிய ஐஸ்வர்யா, ஹீரோ வைபவுக்கு தன்னுடைய நிறுவனத்திலேயே ஒரு வேலையை ஏற்பாடு செய்து தருகிறார். அந்த நிறுவனம் தயாரிக்கும் உடற்பயிற்சி உபகரணங்களை வீடு, வீடாகச் சென்று விற்பனை செய்யும் வேலைதான் அது. அன்றைக்கே.. அப்போதே பைக் மற்றும் உபகரணங்களுடன் எஸ்கேப்பாகிறார் வைபவ்.
இதனால் இதற்கான நஷ்டஈட்டை ஐஸ்வர்யாதான் தர வேண்டும் என்று முதலாளி சொல்லிவிட வைபவை தேடியலைகிறார் ஐஸ்வர்யா. கடைசியாக அடகுக் கடையில் வைபவை பிடித்து கண்ணீர்விட்டுக் கெஞ்சுகிறார் ஐஸ்வர்யா. வைபவ்வும் மனமிரங்கி பணத்தைக் கொடுத்து ஐஸ்வர்யாவுக்கு உதவுகிறார். கூடவே வழக்கமான காதலும் பிறக்கிறது.  
ஐஸ்வர்யாவின் அண்ணனான வி.டி.வி.கணேஷ் சாவு வீட்டில் குத்தாட்டும் ஆடும் குழுவை வைத்திருக்கிறார். அந்தக் குழுவில் சேர்ந்து குத்தாட்டம் ஆடுபவனுக்குத்தான் தன் தங்கையை கல்யாணம் செய்து வைப்பேன் என்கிறார். இதனால் வைபவ் காதலுக்காக இந்தக் குத்தாட்டத்தையும் கற்றுக் கொண்டு வந்து காதலுக்கு ஓகே வாங்குகிறார்.
இந்த நேரத்தில் ஒரு நாள் வைபவ் ரோட்டில் நடந்து வரும்போது இன்னொரு ஹீரோயினான ஓவியா செல்போனில் பேசியபடியே டூவீலரை ஓட்டிக் கொண்டு வர  விபத்துக்குள்ளாகி.. தலையில் அடிபட்டு இறந்து போகிறார் ஓவியா. அவருடைய செல்போனை யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்துவிடுகிறார் வைபவ்.
அந்த போனில் இருந்து அடிக்கடி போன் அழைப்பு வர.. இதையடுத்து அந்த வீட்டில் அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. பேய் உருவத்தில் ஓவியாவும் வைபவ்வின் கண்ணுக்குத் தெரிய வர.. களேபரமாகிறது.
உடனேயே பயந்து போன வைபவ் விடிந்ததும் வருங்கால மச்சான் விடிவி கணேஷ் வீட்டுக்கு ஓடிப் போய் விஷயத்தைச் சொல்கிறார். கணேஷ் தனது உதவியாளருடன் அந்த வீட்டுக்கு வந்து இன்றைக்கு பேயை விரட்டிவிடுவோம் என்று திட்டம் போடுகிறார்கள்.. பேயை விரட்டினார்களா..? இல்லையா..? என்பதுதான் மீதிக் கதை.
ஒரு பேய்ப் படத்திற்கு என்ன வேண்டும்..? பயமுறுத்தல்.. அடுத்தது என்ன என்கிற ஆர்வத்தைத் தூண்டும் திரைக்கதை.. நிறைய நகைச்சுவை.. நடிகர்களின் பயம் கலந்த நடிப்பு.. இது எல்லாமே இந்தப் படத்தில் சம அளவில் கலந்து தரப்பட்டிருக்கிறது. இதுதான் இந்தப் படத்தின் அமோக வெற்றி அறுவடைக்குக் காரணங்கள்.
நாயகன் வைபவுக்கு முதல் வெற்றியே இதுதான். இதுவரைக்கும் 4 படங்களில் நடித்திருந்தாலும் தனித்து நின்று முதல் வெற்றியை ருசித்திருக்கும் அவருக்கு நமது வாழ்த்துகள். பேயைப் பார்த்து பயப்படும் காட்சிகளில்தான் நகைச்சுவையையும், பயத்தையும் ஒரு சேர அளித்து திகிலை ஊட்டியிருக்கிறார் வைபவ். நடிப்பெனப்படுவது என்னவெனில், என்பதை இந்தப் படத்தின் இயக்குநரிடம் வைபவ் கற்றுக் கொண்டிருப்பார் என்றே நம்புகிறோம்.
நாயகிகள் ஐஸ்வர்யா ராஜேஷ் அடக்கமாகவும், ஓவியா அகோரமாகவும் நடித்திருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராஜேஷின் அடக்கவுணர்வில் நளினமும், அழகும் மிளிர.. ஓவியாவின் அதகளத்தில் பேயாட்டம் ஆடுகிறது.. ஐஸ்வர்யாவின் அதீத மேக்கப் சிற்சில காட்சிகளில் பயமுறுத்தினாலும், ஓவியா அளவுக்கு இல்லை என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும்.
படத்தின் மிகப் பெரிய பலமே வி.டி.வி. கணேஷ் அண்ட் கோ-வின் காமெடி தர்பார்தான். இவருடன் நடித்திருக்கும் சிங்கப்பூர் தீபன், யோகி பாபு ஆகியோரின் நடிப்பு வயிறு குலுங்க சிரிக்க வைத்துவிட்டது. இவர்கள் வைபவ்வின் வீட்டுக்குள் பேயுடன் மல்லுக் கட்டும் ஒவ்வொரு காட்சியிலும் சிரித்து மாளவில்லை. கொஞ்சம் சிரித்து ஓய்வதற்குள் அடுத்த சிரிப்பை வரவழைத்துவிடுகிறார் இயக்குநர். இப்படியே இது தொடர்ந்து தியேட்டர்கள் ரகளையாகியிருப்பது உண்மைதான்.
வி.டி.வி. கணேஷ், குத்தாட்டத்தில் டிஸைன், டிஸைனாக இருக்கும் அனைத்துவித குத்தாட்டத்தையும் ஆடிக் காட்டி அத்தனைக்கும் பெயர்க் காரணம் சொல்கிறார் பாருங்கள்.. ஆட்டத்தை பார்த்தே சிரிக்க வைத்துவிட்டார்கள். இறுதியில் வரும் கருணாகரன் சம்பந்தப்பட்ட டிவிஸ்ட்டும் எதிர்பாராதது..  கதை, திரைக்கதை ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் போலிருக்கிறது.
என்ன ஒரேயொரு குறை.. டபுள் மீனிங்.. டிரிபுள் மீனிங் என்றெல்லாம் இல்லாமல் சிங்கிள் மீனிங்லேயே அனைத்தையும் பட்டென்று பேசியிருப்பதுதான். வி.டி.வி. கணேஷின் சில பேச்சுக்களுக்கு இயக்குநரே கத்திரி போட்டிருக்கலாம்..!
வீட்டுக்குள் நடப்பவைகள் அனைத்துமே கச்சிதமான ஒளிப்பதிவில் பதிவாகியுள்ளன.  மேக்கப்மேனுக்கு அதிக வேலை வைத்திருந்தாலும் ஓவியாவின் மாடுலேஷனும், பின்னணி இசையும் சேர்ந்து திகிலையும், பயமுறுத்தலையும் அதிகமாக்கியிருக்கின்றன.
சித்தார்த் விபினின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். அந்தக் குத்துப் பாடல் முன் வரிசை ரசிகர்களை நிச்சயம் ஆடவும் வைக்கும். பின்னணி இசையையிலும் கலக்கியிருக்கிறார் விபின். கூடவே சேட்டு கேரக்டரில் நடித்து தனது நடிப்பார்வத்தையும் பூர்த்தி செய்துள்ளார் விபின்.
காமெடிக்கு பெயர் பெற்ற சுந்தர்.சியே இந்தப் படத்தை தயாரித்திருப்பதால், அவர் பாணியிலேயே படத்தை இயக்கியிருக்கிறார் இவருடைய சீடர் பாஸ்கர். திரைக்கதை ஒரு நிமிடம்கூட மெயின் கதையில் இருந்து விலகிச் செல்லாமல் ஒன்று போலவே பயணிப்பதும் படத்தின் டெம்போவை மென்மேலும் ஏற்றியிருக்கிறது. வெறும் 117 நிமிடத்தில் இப்படியொரு நான்ஸ்டாப் காமெடி படத்தைக் கொடுக்க முடிந்திருக்கிறது என்றால் இயக்குநர் பாஸ்கர் தனது ஆசான் சுந்தர் சி.யின் பெயரைக் காப்பாற்றிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.
‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ – பயப்படாமல் பார்த்து சிரித்துவிட்டு வரலாம்..!

0 comments: