Showing posts with label சசிகுமார். Show all posts
Showing posts with label சசிகுமார். Show all posts

கிடாரி - சினிமா விமர்சனம்

3-09-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

“இந்த சசிகுமார் கேமிரா முன்னாடி வந்து நின்னான்னா ரத்தம் பாக்காமல் ஓய மாட்டான்”னு சசிகுமார் சொல்லவில்லையென்றாலும், அதுதான் உண்மையாக இருக்கிறது.
‘சுப்ரமணியபுர’த்தில் ஆரம்பித்த ஜாதிக்குள் கலகம்.. அரிவாள் சண்டை, நம்பிக்கை துரோகம்.. கத்தியால் சாய்க்கப்படும் நட்பு… இதெல்லாம் சசிகுமாரின் ஆஸ்தான அஸிஸ்டெண்ட்டுகளாக மாறி, அவரது அடுத்தடுத்த படங்களில் தொடர்ச்சியாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.
இடையில் அவரே நல்ல பிள்ளையாக மாறி ‘பசங்க’, ‘தலைமுறைகள்’ என்று விருதுகளுக்கான படங்களை எடுத்தாலும் ‘அது ஆத்ம திருப்திக்கு’ என்கிறார். அப்படியானால் இந்த மாதிரியான ‘கத்தி’, ‘கபடா’க்களையெல்லாம் யார் கேட்டதாம்..?
இனியும் சசிகுமார் தன் படங்களில் கத்தியையோ, அரிவாளையோ தூக்கக் கூடாது என்று தமிழ்த் திரையுலகம் அவருக்குத் ‘தடா’ போட வேண்டும். அந்த அளவுக்கு கொடூரமான தாக்குதலாக இருக்கிறது இந்தப் படம்.

‘கொம்பையா பாண்டியன்’ என்னும் சுய கெளரவமும், வீறாப்பும், பிழைப்புவாதத்தனமும் தெரிந்த ஒருவரின் வாழ்க்கை வரலாறாக இந்தப் படத்தை எடுத்துக் கொள்ளலாம்.
சாத்தூரில் பலம் வாய்ந்த சாதி மனிதர்கள் கோலோச்சிய இந்தத் தலைமுறைக்கு முந்தைய தலைமுறையினர் வாழ்ந்த காலக்கட்டம்.
இளம் மீசையும் துடிப்பும், வீரமுமாக வலம் வந்து கொண்டிருந்த கொம்பையா பாண்டியன் அந்த ஊரின் பிரபல ரவுடி நெப்போலியனிடம் வலதும், இடதுமாக இருக்கிறார்.
நெப்போலியன் தனது முதலாளிக்கு காட்டும் விசுவாசத்தின் காரணமாய் தொகுதி எம்.எல்.ஏ.வையே தாக்கிவிட.. அவரைக் கைது செய்த போலீஸ் சிறையில் வைத்து நெப்போலியனின் கணுக்காலை உடைத்து அவரை நொண்டியாக்குகிறது.
தனது கால் ஊனமானதால் வேறு ஊருக்கு போய்விட தீர்மானிக்கிறார் நெப்போலியன். இதனால் தங்களது அடாவடி தொழில் பாதிக்கப்படுமே என்று நினைக்கும் நெப்போலியனின் அல்லக்கையான கொம்பையா பாண்டியன், நெப்போலியனின் முதலாளியிடம் நெப்போலியனை அழைத்துப் போய் அவர்கள் இருவருக்குமிடையில் சண்டையை மூட்டிவிடுகிறார்.
இது விவகாரமாகிவிட.. ஒரு இரவு நேரத்தில் தனியே வரும் முதலாளியை கொம்பையா பாண்டியன் கொலை செய்கிறார். கூடவே நெப்போலியனையும் சேர்த்தே. இதற்கெல்லாம் ஒரே சாட்சி பாண்டியனின் கூடவே இருக்கும் அவரது நண்பர் மு.ராமசாமி.
அப்பனை இழந்த நெப்போலியனின் மகன் கிடாரியை தன் கூடவே தன் வீட்டில் வைத்து வளர்க்கிறார் கொம்பையா பாண்டியன். கிடாரியும் வளர்கிறான். இப்போது வளர்ந்த பின்பு கொம்பையா பாண்டியனின் அடிமையாக.. பெத்த மகனைவிடவும் தீவிர விசுவாசியாக மாறுகிறான் கிடாரி.
சாத்தூரில் ஆட்டுச் சந்தை, காய்கறி சந்தை என்று அனைத்தையும் மிரட்டி தானே மேற்கொள்கிறார் கொம்பையா பாண்டியன். கட்டப் பஞ்சாயத்து, ரவுடியிஸம் என்று தனது வீரத்தைக் காட்டி ஜில்லாவே பயப்படும் ஆளாக வளர்ந்திருக்கிறார். இதனால், சொந்த ஊரில் மட்டுமன்றி, அக்கம்பக்கமெல்லாம்.. திரும்பிய இடமெல்லாம்… எதிரிகளை சம்பாதித்து வைக்கிறார் கொம்பையா பாண்டியன்.
இடையில் தனது அந்தியந்த நண்பரான மு.ராமசாமியின் மூத்த மகளை தான் பெற்ற மகனான உடைய நம்பிக்கு திருமணம் செய்து வைக்கிறார் கொம்பையா பாண்டியன். பாண்டியனின் உறவுக்காரப் பெண்ணான ஹீரோயின் நிகிலாவுக்கும், சசிகுமாருக்கும் இடையில் இப்போது காதலும் ஓடிக் கொண்டிருக்கிறது.
தன்னுடைய அப்பாவை படுகொலை செய்தது கொம்பையா பாண்டியன்தான் என்பது தெரியாமலேயே, ‘உப்பு சாப்பிட்ட வீட்டுல கத்தியை தூக்கக் கூடாதுன்னு எங்கப்பா சொல்லியிருக்காரு ‘என்று சொல்லிச் சொல்லியே விசுவாசமாக வாழ்கிறார் சசிகுமார்.
இந்த அதி தீவிர விசுவாசத்தினால் பாண்டியனின் சொந்த மகனான உடைய நம்பிக்கு, கிடாரி மீது பொறாமை வருகிறது. கோபம் வருகிறது. ஆத்திரத்தில் கிடாரிக்கு எதிராக சதி செயல்களைச் செய்கிறார்.
யார், யாரை தாக்குகிறார்கள்..? எதற்கு அழிக்க வருகிறார்கள்..? யார் அடியாட்களை ஏற்பாடு செய்தது என்றெல்லாம் தெரியாத ஒரு சூழலில் ஒரு ராத்திரியில் கொம்பையா பாண்டியன் தன்னுடைய வீட்டில் கத்துக்குத்து காயத்துடன் மீட்கப்படுகிறார்.
அவசரமாக சாத்தூர் அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். கொம்பையா தாக்கப்பட்டார் என்ற செய்தி கிடைத்தவுடன் சாத்தூரே கொதித்துப் போய் ஊரடங்கு உத்தரவு போல அமைதியாய் கிடக்க..
அவரை கொலை செய்ய முயற்சித்தது யார் என்று சசிகுமார் ஆராய்கிறார். அதில் அவருக்குக் கிடைக்கும் தகவல்கள் அவரைத் திடுக்கிட வைக்க.. நூல் பிடித்தபடியே முன்னேறுகிறார். கடைசியில் என்னவாகிறது என்பதுதான் இந்தக் ‘கிடாரி’யின் கதை.
ஒட்டு மொத்தமாக பார்க்கப் போனால் மிக நீட்டான திரைக்கதை. மிக அழகான இயக்கம். அற்புதமான நடிப்பாக்கம்.. அந்த சாத்தூர் பகுதியின்.. கந்தகத் தன்மை வாய்ந்த மண்ணின் மணம் கமிழும் பழக்க வழக்கங்கள்.. கிராமிய பேச்சுக்கள்.. ரெளடியிஸம் எப்படி ஒரு ஆணாதிக்க உணர்வாக வளர்கிறது என்பதை புள்ளி வைத்து கோலம் போட்டு விளக்கமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
தென் மாவட்டங்களில் கொலை செய்வதையே குலத் தொழிலாகவும், கவுரவம் மிக்க தொழிலாகவும் மேற்கொள்பவர்கள் அதனை ‘சம்பவம்’ என்றுதான் குறிப்பிடுவார்கள். ‘சம்பவம் செஞ்சுட்டாங்களாமே’ என்று சொன்னால் ‘அங்கே ஒரு கொலை அரங்கேறியிருக்கிறது’ என்றுதான் அர்த்தம்.
இந்த ‘சம்பவம்’ என்கிற ஒரு வார்த்தையை வைத்து முன்பாதியில் காட்சிகளை வீரியமாக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர். அதிலும் கூடவே ‘துஷ்டி கேக்கணும்.. பையனை கூப்பிடு’ என்று கே.என்.காளை வந்து சொல்வதில் காட்டும் சூட்சுமம், படத்தின் அப்போதைய திரைக்கதையை வேகமெடுக்க வைத்திருக்கிறது.
வருடக்கணக்கான அந்தப் பகுதியில் சண்டியராக இருந்து வருபவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இருக்கும் தொடர்புகள்.. அவர்களே சம்பவத்தை செய்ய விடாமல் தடுப்பதும்.. சம்பவம் செய்ய வைப்பது.. குற்றவாளிகளை புதிய டி.எஸ்.பி. பிடிக்க முனைந்தாலும் அவருக்குக் கீழேயுள்ளவர்கள் ரவுடிகளுக்கு சாதகமாக பேசி கேஸை திசை திருப்புவது.. என்று தமிழகத்தின் இன்றைய யதார்த்த நிலைமையையும் விரிவாகவே காட்டியிருக்கிறார் இயக்குநர்.
திடீர், திடீரென்று புதிய புதிய வில்லன்களை அறிமுகப்படுத்தி அவர்களது கதையையும் பிளாஷ்பேக் உத்தியில் கொடுப்பதென்பது திரைக்கதைக்கு உகந்ததுதான். ஆனால் படம் முழுக்க கடைசிவரையிலும் கொடுத்துக் கொண்டேயிருந்தால் எப்படி இயக்குநரே..!? பிளாஷ்பேக்கும், நிகழ் காலமுமாக படம் வந்து போய்க் கொண்டேயிருப்பதால்.. வேல.ராம்மூர்த்தி மீதான கரிசனமும், அச்சச்சோ உணர்வும் ரசிகர்களுக்கு ஏற்படவில்லை என்பது மிகப் பெரிய குறை.
பிளாஷ்பேக்கில் வரும் கதையில் ஓ.ஏ.கே.சுந்தர் அட்டகாசம் செய்திருக்கிறார். இதுவரையிலும் சின்னத்திரையிலேயே பெரிதாக நடித்து பெயர் வாங்கியிருப்பவர், இதில் ஹீரோவுக்கு சமமான அளவுக்கு நடிப்பைக் கொட்டியிருக்கிறார்.
கோர்ட் வாசலில் அவருடைய அண்ணனிடம் அவர் கோபப்படும்விதமும், நீதிபதியிடம் தங்களைக் காப்பாற்ற அவர் கெஞ்சும் கெஞ்சலும்.. அந்த கார் பயணத்தில் பேசும்விதமும் ஒரு அருமையான நடிகரை மீண்டும் அடையாளம் காட்டியிருக்கிறது. வெல்டன் ஸார்..!
தன்னுடைய ஆண்மைத்தனமே தன்னைப் பார்த்து நான்கு பேர் பயப்படுதலிலும், கொடுக்கும் மரியாதையிலும்தான் இருக்கிறது என்று நம்பும் கொம்பையா பாண்டியனின் அந்தக் கேரக்டருக்கு வேல.ராமமூர்த்தி மிகக் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
கிளைமாக்ஸில் வசனமே இல்லாமல் அவர் முகம் காட்டும் பயமும், வெறுப்பும், கோபமும் அந்தக் கேரக்டருக்கே உரித்தானவை. சண்டியர்த்தனத்துக்கெல்லாம் ‘ஒரு கெத்து வேண்டும்’ என்பார்கள். ‘உடல்வாகு வேண்டும்’ என்பார்கள். ‘தென்பாண்டி பக்கம் சார்ந்த மக்களுக்கான முகமும்’ தேவை.. இது எல்லாமுமாக ஒருங்கே அமர்ந்த முகமாக இருப்பதால் வேல.ராமமூர்த்திக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் இதுபோல் கிடைக்கவிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
இதேபோல் இவருடைய மகனான உடையநம்பியாக நடித்திருக்கும் கவிஞர் வசுமித்ராவும் அந்தக் கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். அந்தக் கண கோபம்.. கிடாரிக்கு எதிராக எதுவும் செய்ய முடியாத நிலைமை.. தகப்பன் பேச்சை மீற முடியாத நிலைமை.. கடைசியாக தகப்பன் மீதே கை வைக்க வேண்டிய கட்டாயம்.. இது எல்லாவற்றையும் சீரான இயக்கத்தினால் தனது நடிப்பில் குறை வைக்க முடியாமல் செய்திருக்கிறார்.
யார் இந்த புதுமுகம் என்று ‘வெற்றிவேல்’ படத்திலேயே கேள்வியை எழுப்பியவர் நிகிலா விமல். அழகும், கொஞ்சமும், கோபமும்.. நடிப்பும் இணைந்து இவர் வரும் காட்சிகளிலெல்லாம் ரசிக்க வைத்திருக்கிறார். காதலரான சசிகுமார் தான் சமைத்ததை அம்மா சமைத்ததுபோல் நினைத்து அவளை பாராட்டிவிட்டுச் செல்லும் காட்சியில் அதைக் கேள்வியெழுப்பும் நிகிலாவை பிடிக்காத ரசிகனே இருக்க முடியாது..! ‘செல்லம்’ என்று கொஞ்ச வைக்கிறார் நிகிலா.
சின்ன கேரக்டர் என்றாலும் அநியாயமாக மகன் இறந்ததை தாங்க முடியாமல் குடும்பத்திற்குள்ளேயே கால் வைத்து கூறு போடும் அளவுக்கு செல்லும் சுஜா வாருணி நடிப்பு பிரமாதம். தன் மனைவியின் இந்தக் கோபத்தை பொறுக்க முடியாமல் கடைசியில் கணவன் கத்தியைத் தூக்குவது மிக அழகான இயக்கம். குழப்பமில்லாத லாஜிக் மீறல் சொல்ல முடியாத திரைக்கதை. சுஜாவின் நடிப்பை பார்த்தால் அவரும் கவர்ச்சி ஆட்டங்களை ஒழித்துக் கட்டிவிட்டு இப்படி கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவே வலம் வரலாம்.
இவர்கள் மட்டுமில்லாமல் பாண்டியனின் நண்பராக நடித்திருக்கும் கூத்துப்பட்டறை மு.ராமசாமி, ‘ஜோக்கரு’க்கு பின்பு இதில் இன்னும் கொஞ்சம் அதிகப்படியான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். மருமகன் மற்றும் கிடாரிக்கு நடுவில் மாட்டிக் கொண்டு சங்கடத்திற்குள்ளாகும் அந்த ஒரு காட்சியே போதும் இவரது நடிப்புக்கு..!
கடைசியாகத்தான் சசிகுமாரை தொட வேண்டியிருக்கிறது. கண்மூடித்தனமான விசுவாசம்.. சோறு போட்டு வளர்த்தால் தன் உயிரைக் கொடுக்கவும் தயங்காத குணம்.. சசிகுமாருக்கு தன்  நடிப்பின் வெரைட்டி தேவையில்லை. கதையிலும், திரைக்கதையிலும் நீட்னெஸ்ஸும், புதுமையும் இருந்தாலே போதும் என்றே இப்போதுவரையிலும் எண்ணுகிறார். இந்தப் படத்திற்கும், முந்தைய படத்திற்கும் அதிகம் வித்தியாசமில்லை. அதே போன்ற நடிப்புதான். கூடவும் இல்லை. குறையவும் இல்லை. மென்மையான இந்த முகம் எப்படி அரிவாளை தூக்கி ஆக்ரோஷமாக சண்டையிடுகிறது என்பதுதான் புதிராக புதிராக இருக்கிறது..!
படத்தை கடைசிவரையிலும் பார்க்க வைத்திருப்பதற்கு ஒரே காரணம் இயக்குநர் பிரசாத் முருகேசனின் அழகான இயக்கம் மட்டும்தான். எத்தனை வன்முறைகள் இருந்தாலும் அதனை படமாக்கியிருக்கும்விதம்.. சண்டை காட்சிகளில் காட்டியிருக்கும் தீவிரமும், அகோரமும்.. பாடல் காட்சிகளில் சோகத்தை காட்டியிருக்கும்விதமும்.. சில காட்சிகளில் புத்தம்புதிய கோணமாக கேமிராவின் பங்களிப்பும்.. நடிகர்களின் அர்ப்பணிப்பான நடிப்பு.. இப்படி நிறையவே சேர்ந்து இந்தப் படத்திற்கு பெருமை சேர்த்திருக்கின்றன.
இருந்தாலும் மில்லில் பஞ்சாயத்துக்கு போகுமிடத்தில், “தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே…” பாடலை பாடி அந்தப் பஞ்சாயத்துக்கு லின்க் கொடுப்பதெல்லாம் ரொம்பவே போர் இயக்குநரே.. இதேபோல் சசிகுமார் சில நேரங்களில் பேசும் கெத்தான வசனங்களும் எரிச்சலையூட்டுகின்றன. தவிர்த்திருக்கலாம்.
எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவும், தர்புகா சிவாவின் பின்னணி இசையும்தான் படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பலம். சண்டை காட்சிகளே கரடு முரடென்றாலும் அதற்கான பின்னணியில் அடக்கி வாசித்தும், தீம் மியூஸிக்கை ரசிக்கும்படியும் படம் முழுக்க வரும்படியும் அமைத்திருக்கிறார்கள். பாராட்டுக்கள்.
எத்தனை சிறப்புகள் படத்தில் இருந்தாலும் இத்தனை வன்முறையுடன் திரும்பத் திரும்ப இதே கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமா என்ன..? ஏற்கெனவே நாட்டில் தினம்தோறும் அவரவர் சாதிப் பெயரை பெருமையாகச் சொல்வதாலேயே அடிதடிகள் நடந்து அது கொலைவரைக்கும் போய்க் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில்  நமது அடுத்தத் தலைமுறையையும் இந்த ரத்தச் சகதியில் தள்ளவிட வேண்டுமா என்ன..?
தியேட்டருக்கு வரும் இளையோர்களை இது போன்ற உண்மைத்தனமான இயக்கத்தில் வெளியாகும் படங்கள் நிச்சயம் பாதிக்கும். எனவேதான் வன்முறையை சினிமா மூலம் போதிக்க வேண்டாம் என்கிறோம். என்னதான் முடிவில் சுபமாக முடித்தாலும், இடையில் பேசப்படும் ஜாதிய ரீதியிலான பெருமை பேசும் வசனங்களும், ரத்தம் தெறிக்கும் காட்சிகளும்தான் மக்களின் மனதில் சம்மணங்கால் போட்டு உட்காரும். இதன் தொடர்ச்சி அடுத்த நாளே அதே தியேட்டர் வாசலிலேயேகூட நடக்க வாய்ப்புண்டு.
எடுக்க வேண்டிய.. எடுக்கப்படக் கூடிய கதைகள் நிறையவே இதே தென் மாவட்டங்களில் நிறையவே தேங்கிக் கிடக்கின்றன.. அண்ணன் சசிகுமார்.. இனி தனது அடுத்தடுத்த படங்களில் தனது சாதிய கலாச்சாரம் சார்ந்த கதைகளில் கவனம் செலுத்தாமல், வேறு பக்கம் சென்றால் தமிழ்த் திரையுலக ரசிகர்கள் அவருக்கு என்றும் நன்றியுடன் இருப்பார்கள்.
கிடாரி – வன்முறை களஞ்சியம்..!

வெற்றிவேல் சினிமா விமர்சனம்

25-04-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சசிகுமாரின் படத்தில் என்ன இருக்கும்..? காதல், நட்பு.. காதலை சேர்த்து வைப்பது.. அல்லது நட்புக்காக அடிவாங்குவது.. மறைமுகமாக சாதீய பிரச்சினையைத் தொடுவது.. இதுதானே..? இது அத்தனையையும் அப்படியே வைத்துக் கொண்டு புதிய பெயரில் வந்திருக்கிறார்  இந்த ‘வெற்றிவேல்’.



கதை 20 வருடங்களுக்கு முன்பு துவங்குகிறது. மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்தின் தலைவராக இப்போது இருப்பவர் பிரபு. அடுத்தத் தேர்தலுக்கு நாள் குறித்துவிட்டார்கள்.  எப்போதும் பிரபுவின் குடும்பத்தினரே பரம்பரை, பரம்பரையாக அங்கே தலைவர் பதவியில் இருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் தன் கணவர் தலைவர் பதவிக்கு நிற்க விரும்புவதாக வாயும், வயிறுமாக இருக்கும் பிரபுவின் தங்கை விஜி, அண்ணனிடம் வந்து கேட்கிறார்.
மாற்றாந்தாய்க்கு பிறந்த தங்கையாக இருந்தாலும் விஜி மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் அண்ணன் பிரபு, சட்டென பாசம் மேலிட இதற்கு ஒத்துக் கொள்கிறார். ஆனால் இதற்குப் பிறகு ஊர்க்கார்ர்கள் பிரபுவிடம் “இது தவறு..” என்கிறார்கள். “நீங்கன்னா ஊர்க்காரங்க ஓட்டுப் போடுவாங்க. உங்க மச்சான் அசலூர்.. அவருக்கு எப்படி போடுவாங்க..? அதோட ஜெயிச்ச பின்னாடி அவர் அவங்க ஊர்க்காரங்களோட ஒட்டிக்கிட்டா நம்ம ஊர் கவுரவம் என்னாகுறது..?” என்று தூண்டில் போட.. பிரபு தங்கைக்கு கொடுத்த வாக்கை மீறி தேர்தலில் நிற்க முடிவு செய்கிறார். இதற்கு மச்சானும் உடன்பட மறுத்து எதிர்த்து நிற்கிறார். தேர்தலில் பிரபு வெற்றி பெற அன்றைக்கே விஜியின் கணவன் தற்கொலை செய்து இறந்து போகிறார்.
கோடி துணியெடுத்துக் கொண்டு தங்கை கணவரின் இறப்புக்கு துக்கம் விசாரிக்க வரும் பிரபுவை தடுக்கும் விஜி, கண்ணகிபோல் பிரபு குடும்பத்துக்கு சாபம் விடுகிறார். “இதேபோல் உன் குடும்பத்தை நடுத்தெருவுக்குக் கொண்டு வராமல்விட மாட்டேன்..” என்று சவால் விடுகிறார்.
தொடர்ந்து இப்போதைய காலக்கட்டத்தில் திரைக்கதை நகர்கிறது. பிரபுவுக்கு ஒரே மகள்.. வர்ஷா. கல்லூரியில் படிக்கிறார். அதே கல்லூரியில் படிக்கும் வேறு ஊரைச் சேர்ந்த ஆனந்தை காதலிக்கிறார். ஆனந்தின் சொந்த அண்ணன் வெற்றிவேல் என்னும் சசிகுமார். சசிகுமார் ஊருக்குள் உரக்கடை வைத்து நடத்துகிறார். இவரும் ஒரு பேருந்து பயணத்தில் சந்தித்த மியா ஜார்ஜை பார்த்தவுடன் காதலிக்கத் துவங்குகிறார். சில, பல சினிமாத்தனமான தொடர் முயற்சிகளுக்குப் பின்னர் மியாவுடனான காதல் ஓகே ஆகும் சூழல் வருகிறது. இந்த நேரத்தில் கதை வேறு பக்கம் திசை திரும்புகிறது.
பிரபுவின் தங்கை விஜியின் மகனுக்கு திருமணம் நிச்சயம் செய்திருக்கிறார்கள். இந்தத் திருமண நிச்சயத்தில் கலந்து கொள்ள பிரபு சென்றபோது அவரை அவமானப்படுத்தி பேசி திருப்பியனுப்புகிறார் விஜி. இதனால் கோபமடையும் பிரபு, அந்தக் கல்யாணத்திற்கு முன்பாகவே தனது மகள் கல்யாணத்தை நடத்தத் திட்டமிடுகிறார்.
இந்த்த் தகவலை தனது காதலன் ஆனந்துக்கு பாஸ் செய்கிறார் வர்ஷா. ஆனந்த் தன் அண்ணன் சசிகுமாரிடம் இது பற்றிச் சொல்ல.. பிரச்சினையைத் தீர்க்க ஒரே வழி.. காதலர்களை சேர்த்து வைப்பதுதான் என்று நினைக்கும் ச்சிகுமார்.. வர்ஷாவை கடத்திக் கொண்டு வர ஏற்பாடு செய்கிறார். இதற்காக ‘நாடோடிகள்’ படத்தின் ‘சம்போ சிவசம்போ’ டீமை ஏற்பாடு செய்கிறார்.
எல்லாம் தயாராக இருந்தும் கடத்தும்போது பெண்ணை மாற்றிக் கடத்திக் கொண்டு வந்து விடுகிறார்கள்.  இவர்கள் கடத்தி வந்த பெண் விஜியின் மகன் திருமணம் செய்யவிருந்த மணமகளான நிகிலா. இன்னும் 3 நாளில் கல்யாணம்.. அதற்குள் பெண் ஓடிப் போய்விட்டாளே என்கிற அவமானத்தில் இந்தப் பெண்ணின் அப்பா தற்கொலை செய்து கொள்ள..
விஷயமறிந்து நிகிலாவை அவளது வீட்டில் விடுவதற்காக போன சசிகுமாரை அந்த ஊர்க்கார்ர்கள் அடித்துவிரட்டுகின்றனர். போலீஸ் ஸ்டேஷனில் தானே விருப்பப்பட்டுதான் சசிகுமாருடன் சென்றதாக அந்தப் பெண் சொன்னதால் வழக்கில்லாமல் போகிறது.
ஊருக்கும் போக முடியாமல் தனியே இருக்கும் நிகிலாவை பார்த்து உருகும் சசிகுமார் அந்த இடத்திலேயே அவள் கழுத்தில் தாலியைக் கட்டி மனைவியாக்கி வீட்டுக்கு அழைத்து வருகிறார். சசிகுமாரின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தாலும், பின்பு சமரசமாகிறார்கள்.
இதற்கிடையில் தனது மகளைத்தான் கடத்த வந்தார்கள் என்பதே தெரியாமல் பிரபு, சசிகுமாரின் அப்பாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். தனது மகனுக்காக பெண் கேட்டு வரும் அப்பா இளவரசுவிடம் ஜாதிப் பிரச்சனையைக் காட்டி பெண் தர மறுக்கிறார். “இனி வர்ஷா விஷயத்தில் யாரும் தலையிடக் கூடாது. அந்தப் பெண்ணு எங்கேயிருந்தாலும் நல்லாயிருக்கட்டும்..” என்று இளவரசு சொன்னாலும் தனது காதலை மறக்க முடியாமல் தவிக்கிறார் ஆனந்த்.
காதலர்களை சேர்த்து வைப்பதேயே குறிக்கோளாக கொண்டிருக்கும் சசிகுமாரின் கேரக்டர் ஸ்கெட்ச், அப்படியே சும்மா விட்டிருமா என்ன..? சசிகுமார் என்னும் வெற்றிவேல் காதலர்களை எப்படி சேர்த்து வைக்கிறார் என்பதுதான் திரைக்கதை.
வழக்கமாக இரு வேறு சாதிகளுக்கிடையேயான பிரச்சினையைத்தான் தொட்டுப் பேசுவார்கள் சினிமாக்காரர்கள். ஆனால் இதில் கொஞ்சம் வித்தியாசமாக மதுக்கூர், நாட்டுச் சாலை ஆகிய இரண்டு ஊர்களில் வசிக்கும் ஒரே ஜாதிக்குள் இருக்கும் இருவேறு பிரிவுகளிடையேயான பிரச்சினையை அலசி ஆராய்ந்திருக்கிறார்கள்.
இளவரசு தனது மகனுக்கு பெண் கேட்டு பிரபுவிடம் பேசும்போது பிரபு சொல்லும் வசனங்கள்தான் தமிழகத்தில் இன்றைய யதார்த்த நிலைமை. ஜாதிவிட்டு ஜாதி கல்யாணம் செய்ய பெற்றோர்கள் சம்மதித்தாலும், அவர்கள் சார்ந்த சமூகம் அனுமதிப்பதில்லை. உறவினர்களும், சுற்றத்தாரும் தங்களை ஒதுக்கி வைத்துவிடுவார்களோ என்று சிலர் பயப்படுகிறார்கள். பல அரசியல்வாதிகள் தங்களுக்கு தேர்தலில் ஓட்டு கிடைக்காமல் போய்விடுமோ என்று பயந்து சாகிறார்கள். சாதி என்னும் பிடிமானம்தான் ஒவ்வொரு சமூகத்தையும் இறுகப் பிடித்திருக்கும் சனியன் என்பதை பிரபுவின் கேரக்டர் ஸ்கெட்ச் மூலமாக உணர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
தனது மகளின் காதல் பற்றி தெரிந்ததும் மாப்பிள்ளையின் அப்பா திருமண பந்தத்தை முறித்துக் கொள்கிறார். இதன் பின்புகூட பிரபுவுக்கு தனது மகளின் காதலை வாழ வைப்போம் என்கிற எண்ணம் வரவில்லை. மாறாக தன்னை அவமானப்படுத்திய தங்கையின் வீட்டிலேயே தனது மகளை அனுப்பி வாழ வைக்கலாம் என்று எண்ணுகிறார். இப்போதும் அவரது சாதிய மனோபாவம் அவரை கீழே இறங்கி செல்ல மறுக்கிறது.
தனது தங்கை தன்னை பழி வாங்கத்தான் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக் கொண்டாள் என்கிற உண்மை பிரபுவுக்கு தெரிந்தவுடன்.. அந்த நிமிடமே மனம் மாறி மகளின் காதலுக்கு ஓகே சொல்வதுதான் படத்தின் மிகப் பெரிய டர்னிங் பாயிண்ட்.
படத்தின் முற்பாதியின் துவக்கத்தில் சசிகுமாரின் காதல் ஓகே ஆகும்வரையிலும் படம் மெதுவான ஓட்டம்தான். படத்தின் பிற்பாதியில் சசிகுமாரின் மென்மையான குடும்ப கதை.. அவரும், அவரது மனைவியும் சூழலுக்குக் காத்திருக்கும் நேரம்.. இது பற்றி திரைக்கதையெல்லாம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
கடைசியாக குட்டி, குட்டியாக காட்சிக்கு காட்சி டிவிஸ்ட் வைத்து விளையாடியிருக்கும் இயக்குநரின் திரைக்கதையாக்கம்தான், படத்தை பொறுமையாக கடைசிவரையில் பார்க்க வைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.
சசிகுமார் என்னும் வெற்றிவேலை ஹீரோவாக காட்ட வேண்டும் என்பதால் வலிந்து திணிக்கப்பட்ட கிளைமாக்ஸ் காட்சியும், அந்தக் காட்சியிலும் கொலை செய்யாமல் மன்னிப்பளிப்பதுதான் சிறந்த தண்டனை என்பதை சொல்லியிருக்கும்விதமும் ரசனைக்குரியது.
படத்தின் மிகப் பெரிய டிராஜடி.. தம்பி ராமையாவின் ‘உவ்வே’ காமெடிதான். இந்தக் காமெடியை அவ்வப்போது ஆளாளுக்கு தம்பி ராமையாவிடம் “வீட்டுக்குப் போனாலும் சும்மாதான இருக்கப் போற..?” என்று பேசியே வெறுப்பேற்றுவதெல்லாம் இந்தப் படத்தின் தன்மையைக் குறைக்கும் காட்சிகள்.. கடைசிவரையிலும் தம்பி ராமையாவின் மனைவி யார் என்று முகத்தைக் காட்டாமலேயே மறைத்திருப்பது ஏன் என்று தெரியவில்லை..
படத்தில் முதல் ஸ்கோர் பிரபுவின் தங்கையாக நடித்திருக்கும் விஜி சந்திரசேகர்தான். தனது கணவருக்காக விட்டுக் கொடுக்கும்படி பிரபுவிடம் அமைதியாக கேட்டுவிட்டுச் செல்வதும்.. பின்பு கணவரின் உடலை பார்க்க வரும் பிரபுவிடம் சீறித் தள்ளவதுமான முதல் 10 நிமிடங்களிலேயே படத்தின் கனத்தை தன் மீது ஏற்றிக் கொண்டிருக்கிறார். இவருடைய உடல் மொழியும், தீர்க்கமான வசன உச்சரிப்பும் இவர் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளிலுமே இவரை தனித்துவமாகக் காட்டுகிறது.
மகனும் தற்கொலைக்கு முயலும்போது அனைவரையும் அறையிலிருந்து வெளியேற்றிவிட்டு.. தனது கணவன் எப்படி செத்தான் என்ற கதையைச் சொல்லி மகனை வெறியேற்றுகிறார். இப்படியும் சில அம்மாக்கள் நாட்டில் இருப்பதால்தான் சில, பல கொலைகள் நடக்கின்றன என்பது உண்மைதான்.
வெற்றிவேலான சசிகுமாருக்கு ரொமான்ஸ் மட்டுமே வரவில்லையென்றாலும் மற்றவையெல்லாம் தானாகவே வந்து சேர்ந்திருக்கிறது. சோகக் காட்சிகளில் மனிதர் தலையைக் குனிந்து அமைதியாகப் பேசியே ஜெயித்துவிடுகிறார். மனைவி நிகிலாவை சட்டென திருமணம் செய்து அழைத்து வந்த குற்றவுணர்விலேயே சுற்றி வருவதும்.. இதற்கு அவ்வப்போது அவர் சொல்லும் சரியான விளக்கங்களும் பெண் ரசிகைகளை நிச்சயம் கவரும்..!
மியா ஜார்ஜையும் சசிகுமாரையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது முடியாமல்தான் இருந்தது. ஆனால் படத்தில் முடிந்திருக்கிறது. சின்னக் கேரக்டர்தான் என்றாலும் வரும் காட்சிகளிலெல்லாம் வல்ல தேசத்தை பாராட்டும்படியாகவே நடித்திருக்கிறார் மியா. உடன் நடித்திருக்கும் மற்ற இரண்டு நடிகையரான வர்ஷாவும், நிகிலாவும்கூட நன்றாகவே நடித்திருக்கிறார்கள். அதிலும் நிகிலாவின் மெளனமான பார்வை.. அமைதியான பேச்சு.. என்று நடிப்பில் ஒரு படி மேலே போய் ஸ்கோர் செய்திருக்கிறார்.
எல்லார் வீட்டிலும் நடப்பதுபோல அம்மா பிள்ளை.. அப்பாவிடம் பேச ஒரு இடைத்தரகர் என்று இந்தக் கதையிலும் ரேணுகாவைச் சுற்றி நகர்கிறது வெற்றிவேலின் குடும்பக் கதை. ரேணுகாவின் குளோஸ் அப் சிரிப்பில் கதையையே நகர்த்திவிடலாமே..?
தம்பி ராமையாவின் நடிப்பும் படத்திற்குக் கிடைத்த ஒரு பிளஸ்.. அவர் சம்பந்தப்பட்ட திரைக்கதைதான் ஏற்க முடியாதது என்றாலும், மனிதர் எந்த வேடம் கொடுத்தாலும் பின்னுகிறார். மியாவை பார்க்க ஜமீன்தார் தோரணையில் அவர் கல்லூரிக்குள் நடந்து வரும் காட்சியும், செல்போனில் தான் ஜமீன்தார் என்பதையே மறந்து போய் டெய்லர் கதையைப் பேசி சமாளிக்கும் நேரமும் தியேட்டர் அதிர்ந்த கைதட்டல் கிடைத்தது.. பாராட்டுக்கள் ஸார்..
‘ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது’ மெட்டில் ஒரு பாடலுக்கு இசையமைத்து அந்தப் பாடலையும் கேட்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் டி.இமான். கதிரின் ஒளிப்பதிவு படம் முழுவதிலும் வியாபித்திருக்கிறது. வயக்காடுகள்.. பச்சை பசேல் புல்வெளிகள்.. இதற்கு நடுவில் மியாவைக் காட்டியிருக்கும் அழகுக்கு ஒரு ஷொட்டு..!
அண்ணன் சசிகுமார் அடுத்தப் படத்தில் இந்தக் கதைக் களனைவிட்டு வெளியில் வந்து படம் செய்தால் நன்றாக இருக்கும். அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்தால் அவருக்கும் நல்லதல்ல.. அவரது ரசிகர்களுக்கும் ஏற்புடையதல்ல..!
வெற்றிவேல் பார்க்க முடிகிற படம்தான்..! 



பிரம்மன் - சினிமா விமர்சனம்

24-02-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஒரு நண்பன் ஜெயித்தால், சக நண்பனும் ஜெயித்த மாதிரி என்பதுதான் நட்பு பட வரிசையில் அடுத்த படமான இந்த பிரம்மனின் ஒன்லைன்..


சிறு வயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம் கொண்டவர் சசிகுமார். ஊரில் அனைவராலும் கைவிடப்பட்ட ஒரு ஓட்டை தியேட்டரை லீஸுக்கு எடுத்து பழைய படங்களாக திரையிட்டு நஷ்டத்தைச் சம்பாதித்து வந்தாலும் சினிமா ஆசையால் அதனைக் கைவிடாமல் இருக்கிறார். ஒரு நாள் வணிகவரி கட்டவில்லையென்று தியேட்டர் சீல் வைக்கப்பட.. 5 லட்சம் ரூபாயை சம்பாதிக்க வேண்டி சென்னைக்கு படையெடுக்கிறார் சசிகுமார். சென்னையில் மிகப் பெரிய இயக்குநராக இருக்கும் தனது பால்ய கால நண்பன் மதன்குமாரிடம் உதவி கேட்டு அதன் மூலம் தியேட்டரை மீண்டும் நடத்திக் காட்டுவேன் என்று சவால் விடுகிறார். இந்த சவாலில் ஜெயித்தாரா இல்லையா என்பதுதான் கதை..!

சசிகுமார் எப்படி இந்தக் கதையில் சிக்கினார் என்றே தெரியவில்லை. அவர் நடித்திருக்க வேண்டிய படமே இல்லை.. இயக்குநரோ ச்சிகுமாரை தவிர வேறு யாரையும் நினைத்து கூட பார்க்கவில்லை என்றார். நட்பு என்கிற அடையாளத்துடன் படம் வருவதால், இப்போதைக்கு அதற்கு காப்பிரைட்ஸ் வாங்கி வைத்திருக்கும் ச்சிகுமார்தான் பொருத்தம் என்று அழைத்துவிட்டார் போலும். கதையைக் கேட்டவுடன் தான் இதில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறியிருந்தார் சசிகுமார். ஒருவேளை இடைவேளைக்கு பிறகு வரும் கதையையும், கிளைமாக்ஸையும் மட்டும் சொல்லியிருப்பார் போலிருக்கிறது.

கொஞ்சம் ஹேர்ஸ்டைலை மட்டும் மாற்றியிருக்கும் சசி, நடிப்பு ஸ்டைலை மட்டும் மாற்றவில்லை. இன்னும் எத்தனை படங்களில் இதையே பார்ப்பது..? அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் மூலமாக திருட்டு விசிடி, சினிமா மூலமாக மக்களுக்கு நல்ல பொழுது போக்கு.. டிவி சீரியல்களினால் குடும்பம் கெடுகிறது.. சினிமா தொழில் சிறந்த தொழில்.. அதில் இருக்கும் தொழிலாளர்களை பார்க்க வேண்டும்.. துணை இயக்குநர்களாக இருப்பவர்களின் எதிர்காலக் கனவு.. தயாரிப்பாளர்களின் கதை கேட்கும் முறை.. பைனான்சியர்களின் அறிமுகம்.. தயாரிப்பாளர்களின் பயம்.. சக இயக்குநர்களின் பொறாமை.. நல்ல கதை கேட்டு அலைவது.. கதையைத் தன் பெயரில் போட்டு படமெடுக்கும் இயக்குநர்கள்.. என்று சினிமாவின் சகலத்தையும் சசிகுமாரின் கேரக்டர் மூலமாகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். இதுதான் படத்தின் நெகட்டிவ் ரிசல்ட்டுக்கு முதல் காரணம்..!

திரைக்கதை ஏதோ கொஞ்சம் சுவாரஸ்யத்தைத் தருமென்று பார்த்தால், 1002-வது படமாக சசிகுமாரின் காதல் உருவாகும் கதையைச் சொல்கிறார்கள். ரோட்டில் நடந்து போகையில் பார்த்தவுடன் காதல்.. பின்பு அவள் படிக்கும் கல்லூரி வாசலில் போய் நின்று முட்டாள்தனமாக லெக்சரரிடம் காதல் பற்றி பேசுவது.. அவரும் லவ் லெட்டரை பாஸ் செய்வது.. திரும்பவும் வந்து கதையைச் சொல்வது என்று அழுத்தமே இல்லாத நம்பவே முடியாத காமெடியான திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர்.

காதல் காட்சிகளில் காட்டும் ரொமான்ஸை ச்சிகுமாரால் இந்தப் படத்தில் காட்டவே முடியவில்லை. ஒருவேளை இது இயக்குநரின் தவறாக இருக்குமோ..? ஹீரோயினின் வீட்டுக்கு அவளை பார்க்கப் போய் திரும்பச் செல்லும்போது போயிட்டு வரேன் என்று சப்பையாக மழுப்பிவிட்டு கிளம்புவதை பார்த்தால் எரிச்சலாக வருகிறது.. என்ன மொக்கைத்தனமான இயக்கம்..?

இடைவேளைக்கு பின்பு சசி சென்னைக்கு வந்து அடுத்தடுத்து நடக்கும் டிவிஸ்ட்டுகள் மட்டுமே படத்துக்கு பலம் சேர்க்கின்றன. மதன்குமாரின் அஸிஸ்டெண்ட் என்று சொல்லி கதை கேட்க வைத்து அட்வான்ஸ் வாங்குவது.. மதன்குமாரே தேடி வந்து யார் நீ என்று கேட்பது.. அப்போதே நான்தான்டா பழைய பங்காளி என்று சொல்லியிருந்தால் படம் அப்போதே முடிந்திருக்கும். இழுக்க வேண்டும் என்பதால் கடைசிவரையில் சொல்லாமலேயே கொண்டு போயிருக்கிறார்கள்..

சூரியின் வாயால் ச்சியின் ஜாதகத்தை தெரிந்து கொண்டு தயாரிப்பாளர் கதையை மட்டும் கேட்டவுடன் கொடுப்பதாகச் சொல்லிவிட்டு ஊருக்கே திரும்பி வருகிறார் ச்சி. அந்தக் கதையைப் படித்தவுடன் அது தன்னுடைய கதைதான் என்ற சின்ன ஜெர்க்கூட வரவில்லையா இயக்குநர் மதன்குமாருக்கு.? நீங்க எந்த ஊர்..? என்ன பேக்கிரவுண்ட் என்று சசிகுமாரிடம் அவர் கேட்டிருந்தால்..?

தங்கச்சிக்கு ஒரு பையன் லவ் லெட்டர் கொடுத்திருக்கான்னு சொன்னா.. அதை வாங்கப் போறாருன்னு பார்த்தா.. திருட்டு டிவிடியை பார்த்துட்டு ஒரு கதையடிச்சிட்டு கிளம்புறார் சசி. கல்யாணத்தன்று தங்கையின் பழைய காதலன் தேடி வர.. பொறுப்பாக அவனை தங்கையிடம் கொண்டு வந்து நிறுத்திவிட்டு கொன்னிரு என்று சொல்லி கத்தியை எடுத்துக் கையில் கொடுத்துவிட்டுப் போகிறார்.. என்ன மாதிரியான கேரக்டர் ஸ்கெட்ச் என்றே புரியவில்லை. ஆனால் இது சைக்காலஜிக்கலா ரெண்டு பேருக்கும் சமாதானம் செஞ்சு வைக்கிறாராம். நிஜத்தில் நம்ப முடிகிறதா இதை..?

சென்னைக்கு வந்த பின்பு காதலியை இவர் மறந்துவிடுகிறார். ஆனால் சந்தர்ப்பவசமாக சென்னை வரும் ஹீரோயின் இவரைத் தேடி வருகிறார். பார்க்க முடியவில்லை. இவர் தேடியலைகிறார். இதனை கண்டறிந்த பின்பும் ஊர் திரும்பும் ஹீரோயின் வேறு திருமணத்திற்கு ஒத்துக் கொள்கிறார். திரைக்கதையின் இந்த போங்காட்டத்தில் கதையின் மீது ஈர்ப்பே இல்லாமல் போய்விட்டது..

கிளைமாக்ஸ் எதிர்பார்த்தது போலவேதான்.. சில விஷயங்களை இது நடந்துவிட்டது என்று குறிப்பால் உணர்த்திவிட்டு தனது நண்பனை தேடி வந்து பார்க்கும் மதன்குமார், தான் இயக்குநராக ஜெயித்தவுடனேயே தன் நண்பனை தேடி வந்திருக்கலாமே..? இப்போ யார் அவரைத் தடுக்கப் போகிறார்..? ம்ஹூம்.. திரைக்கதையில் இருந்த ஓட்டைகள் படத்தை சுவாரஸ்யமாக்கத் தவறிவிட்டன..!

சசிகுமாரின் நட்பு குறித்த டயலாக்குகள், காதல் குறித்த டயலாக்குள்.. அப்பா-மகன் மோதல் இப்படி சில விஷயங்களை மட்டுமே ரசிக்க முடிந்த்து.. எப்போதும் உவமையுடன் காமெடி டயலாக் பேசுவதை சந்தானம் எப்போது நிறுத்தப் போகிறார் என்று தெரியவில்லை..? அவ்வப்போது சிரிக்க வைத்திருக்கிறார். இடைவேளைக்கு பின்பு சூரி குத்தகைக்கு எடுத்து கதையை நகர்த்த பெரிதும் உதவியிருக்கிறார்.

தேவிஸ்ரீபிரசாத்தின் இசை. பாடல்கள் முரசு கொட்டி ஒலித்தன. மெலடிகளை திரும்பக் கேட்கும் ஆசையில்லை. ஆனால் ஒரேயொரு ஆறுதல் பத்மபிரியாவின் குத்தாட்டம்.. எத்தனை நாளாச்சு அம்மணிய பார்த்து..? நல்ல நடிகை. ஆனால் தமிழ் ஹீரோக்களுக்குத்தான் தங்களைவிட நல்லா நடிச்சா பிடிக்காதே.. பாவம்.. மலையாளம் தத்தெடுத்துக் கொண்டுவிட்டது.. வாழ்க வளமுடன்..!

மிகப் பெரிய பொருட்செலவில் தயாரித்திருக்கிறார் கன்னட தயாரிப்பாளரான கே.மஞ்சு. தமிழகம் முழுவதும் மிகுந்த ரிஸ்க் எடுத்து சொந்தமாகவே ரிலீஸ் செய்திருக்கிறாராம். மதுரை, ராமநாதபுரம் ஏரியாவை சசிகுமாரே வாங்கி வெளியிட்டிருக்கிறார்கள். எந்தச் சேதாரமும் இல்லாமல் போட்ட காசாவது கிடைக்க வேண்டும் என்று என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..!

அநேகமாக இயக்குநர் சாக்ரடீஸின் சொந்தக் கதையாக இது இருக்கலாம் என்று நான் யூகிக்கிறேன். அதனால்தான் விடாப்பிடியாக இந்த ஒரு கதையை வைத்துக் கொண்டு 3 வருடங்களாக தயாரிப்பாளரை விரட்டியிருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் இதனைவிட நல்லவிதமாக படங்கள் செய்ய சாக்ரடீஸுக்கு வாழ்த்துகள்..!

சுந்தரபாண்டியன் - சினிமா விமர்சனம்

15-09-2012



என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வழக்கமான சசிகுமாரின் “நட்பு” கேட்டகிரி படம்தான்..! ஆனால் சக்ஸ்ஸில் நாடோடிகளைத் தொடும் என்றே நினைக்கிறேன்..!



வீட்டில் அப்பத்தா, இரண்டு அம்மாக்களின் செல்லம்.. மற்றும் ஊரில் இருக்கும் பல்லு போன கிழவிகளுக்கும், பல்லு போகக் காத்திருக்கும் ஆண்ட்டிகளுக்கும் லவ்வர் பாய்தான் இந்த சுந்தரபாண்டி. வாயைத் திறந்தால் கேலி, கிண்டல், நக்கல்.. இதில் ஊர்க்கார பெண்கள், உறவுக்காரப் பெண்கள் என்றில்லாமல் எப்பவும், எல்லா விஷயத்துலேயும் நான் ஒப்பனா இருப்பேன்னு சொல்ற கேரக்டர்.. நண்பர்களுக்கு உதவுவதென்றால் இன்னும் கொஞ்சம் கூடுதல் ஆர்வம்..!

நெருங்கிய நண்பனின் காதலுக்கு உதவப் போய்... அது இவருக்கே காதலாக மாறி.. இதனால் ஏற்படும் சிறு சண்டையில் ஒரு மரணம் நிகழ்ந்து கொலைக்குற்றத்துக்கு ஆளாகி நிற்கும் சசிகுமார், இறுதியில் காதலியை மணந்தாரா..? இல்லையா? என்பதுதான் கதை..!

சிறிதளவு கடுகாக சுப்பிரமணியபுரம்.. வெங்காயமாக நாடோடிகள்.. பூண்டுவாக தூங்கா நகரம்.. மற்றபடிக்கு ஆங்காங்கே மிச்சம் மீதியிருந்த தனது படங்களையே காப்பி பேஸ்ட் செய்து கொடுத்திருந்தாலும், வழங்கல் துறையினர் புதிய ஆளுகளாக இருந்ததால் இறுதி வரையிலும் ரசிக்கவே முடிந்தது..!

முதல் 20 நிமிடங்களுக்கு யார் பேசுவதற்கு சிரிப்பது என்ற யோசனையில் மூழ்கியிருந்த நமக்கு, ஆபத்வாந்தனாக வந்து வாய்க்கிறார் இனிகோ இளங்கோ.. இவரது காதல் கதையின் ஒரு டிவிஸ்ட்டை ஏற்படுத்த  சசிகுமார் களத்தில் குதித்த பின்புதான் பரோட்டா சூரி, சசி, இனிகோவின் தப்பாட்டம் துவங்கிறது.. சிறிது நேரத்தில் அப்புக்குட்டியும் சேர்ந்து கொள்ள இடைவேளை வரையிலும் படம் ஜிவ்வுதான்..!

சசிகுமாருக்கு ஏற்ற கேரக்டர்தான்.. நடிப்பதே தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்கு இப்போதைக்கு தமிழ்ச் சினிமாவில் அண்ணனைவிட்டால் வேறு யாரும் இல்லை..! எந்த இடத்திலும் இவர் நடித்திருக்கிறார் என்று யாரும் சொல்ல முடியாது.. இயல்பாக எப்படி இருப்பாரோ அப்படித்தான் கடைசிவரையிலும் இருக்கிறார்.. 

தாடியுடன் தான் நடிப்பதும்.. இது போன்ற அசால்ட்டாக வந்து போவதிலும் இதுதான் கடைசி படம் என்று பிரஸ் மீட்டில் சொல்லியிருக்கிறார் சசி.. இதனை உடனே நடைமுறைக்குக் கொண்டு வந்தால் நல்லது என்றே நினைக்கிறேன்..! என்னதான் தலையில் இடி மாதிரி அந்த அடியை வாங்கிக் கொண்டும், காணாமல் போகும் காட்சியெல்லாம் கொஞ்சம் ஓவராகவே இருக்கிறது..! ஹீரோயிஸம் தேவைதான்.. ஆனால் இந்த அளவுக்குத் தேவைதானா..? 



லட்சுமி மேனன் அசத்தல்.. எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அழகு.. குறைவில்லாமல் நடிக்கவும் செய்திருக்கிறார்.. தான் பள்ளியில் படிக்கும்போது சசிகுமார் தன்னிடம் பேசிய அதே டயலாக்கை இப்போது திருப்பிச் சொல்லிவிட்டு போகும் அந்த ஒரு காட்சியிலேயே மொத்த ஆடியன்ஸையும் கவர்ந்துவிட்டார்..! பாடல் காட்சிகளின் மாண்டேஜ்களிலும், அப்பாவிடம் காட்டும் மெளனம்.. சசி அண்ட் கோவிடம் பேருந்தில் காட்டும் முறைப்பு.. தோழியிடம் காட்டும் அலட்சியப் பார்வை.. சிடுசிடுப்பு.. சசியின் அப்பாவை பார்த்தவுடன் படும் சந்தோஷம்.. கல்யாணத்தை எதிர்பார்த்து அவர் காட்டும் ரியாக்ஷன்ஸ்.. இன்னுமொரு அழகுடன் கூடிய நடிப்பு தேவதை தமிழ்ச் சினிமாவுக்குக் கிடைத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்..!

இனிகோ, சூரியைவிடவும் அப்புக்குட்டிதான் என்னை பெரிதும் கவர்ந்திருக்கிறார்.. மன்னாரு போன்ற படங்களில் தனி ஹீரோவாக ஆக்ட் செய்து கொண்டே இது போன்ற படங்களில் தனி கேரக்டரில் நடிக்க துணிந்திருக்கும் அவருடைய ஆர்வத்திற்கு பாராட்டுக்கள்..! ஒரு மாசம் நீங்க.. ஒரு மாசம் அவங்க என்ற டீலிங்கிற்கு ஒத்துக் கொண்டு ஹீரோயினை கவர அவர் செய்யும் சாகசங்கள் அனைத்தும் செமத்தியான ஜோக்ஸ்..!  அதேவேகத்தில் லட்சுமியை பார்த்து பஸ்ஸின் கீழேயிருந்து கோபத்துடன் உதிர்க்கும் பேச்சுக்களும் சரவெடி.. 

இவருடைய எதிர்பாராத திடீர் முடிவைத்தான் எதிர்பார்க்க முடியவில்லை..! அதிலும் படத்தில் பல இடங்களில் வைத்திருக்கும் இது போன்ற டிவிஸ்ட்டுகள்தான் படத்தின் வெற்றியை இப்போது தீர்மானித்திருக்கிறது..! சசிகுமாரின் லவ் டிராக்ஸ்.. இனிகோவுக்காக சசி ஏற்றுக் கொண்ட பழி.. இனிகோவின் கிளைமாக்ஸ் பழிவாங்கல்.. விஜய் சேதுபதியின் கிளைமாக்ஸ் ருத்ரதாண்டவம் என்று அனைத்துமே சற்றும் எதிர்பார்க்காதவை.. ஆனால் இது சுப்பிரமணியபுரத்தை நினைத்துப் பார்க்க வைத்தாலும், அடுத்தது என்ன என்றுதான் ஏங்க வைத்தது..!

சின்னச் சின்ன கேரக்டர்கள் மூலமாகவும் இந்தப் படத்தின் சுவாரஸ்யம் குன்றாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர்.. சசியின் முறைப் பெண்ணாக வருபவர்.. லட்சுமியின் சித்தியாக வரும் சுஜாதா.. கல்லூரிக்கு எதிரில் தச்சு வேலை செய்யும் நண்பர்.. லட்சுமி அப்பாவின் மீசைக்கார நண்பர்.. அப்புக்குட்டியின் உறவினர்கள்.. விஜய் சேதுபதி மற்றும் அவரது அண்ணன்.. என்று பல இடங்களிலும் இவர்களது கேரக்டர் ஸ்கெட்ச்சே சுவாரஸ்யமாக இருந்தது..!

தென்மேற்குப் பருவக் காற்றில் காற்றாய் ஒலித்த ரகுநந்தனின் இசையில் கொண்டாடும் மனசும், ரெக்கை முளைத்ததேனும் பாடல்கள் பார்க்கவும், கேட்கவும் இனித்தன..! ரோஜா படத்திற்குப் பிறகு கிழவிகளும் ஒரு தப்பாட்டத்தில் ஆடியது இந்தப் படத்தில்தானோ..? பாடல் காட்சிகளின் மாண்டேஜ் சீன்ஸ்களை ரம்மியமாக எடுத்திருக்கிறார் இயக்குநர்..! அதிலும் பேருந்தின் வாசலில் நின்று கொண்டு சசியும், லட்சுமியும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து நிற்கும் அந்த ஒரு ஷாட்.. பிரமாதம்..! 

காதல் என்ற கத்திரிக்காயை தமிழ்ச் சினிமா இயக்குநர்கள் விதம், விதமாக சமைத்துக் கொடுத்தாலும் அது ருசிக்கத்தான் செய்கிறது.. காதலிக்கப்படும் பெண்களும், காதலிக்கத் துடிக்கும் ஆண்களும் என்னென்ன பாடுபடுவார்கள் என்பதை முதல் பாதியில் சசிகுமார் செய்து காட்டுவது அத்தனையும் சூப்பர்..! இந்த வித்தைக்காகவே இந்தப் படம் நிச்சயம் தலையில் தூக்கி வைக்கப்படும் என்றே நினைக்கிறேன்.. காதலில் டாக்டரேட் பட்டம் வாங்கியதுபோல் பேசும் சசி, லட்சுமியின் கண்களை வைத்தே உண்மையைக் கண்டுபிடித்துவிட்டு தான் திரும்பிக் கொள்வதும்.. லட்சுமி சொல்லி “அதை” கேட்டவுடன், அவர் காட்டும் ரியாக்ஷனும் காதலர்களுக்கு நிச்சயம் பிடித்தமானதுதான்..!

புதிய இயக்குநர் பிரபாகரன் தனது குருவுக்கு நல்லதொரு படத்தைக் காணிக்கையாக்கியிருக்கிறார். தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் காதலர்களுக்கும், காதலுக்கும் ஜே சொல்லும் விதமாகவே காட்சிகளை வைக்க பிரம்மத்தனம் செய்யும் சசிகுமார், முதல் மூன்று நாட்களில் தியேட்டர்களுக்கு வந்து குவியும் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கும், ஆர்வத்தோடு தேடி வரும் தன்னுடைய ரசிகர்களுக்கும் எந்தவிதத்திலும் ஏமாற்றம் தரக் கூடாது என்பதற்காகவே மெனக்கெட்டு இந்தப் படத்தின் திரைக்கதை விவாதத்தில் பெருமளவில் பங்கெடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது..! வாழ்க அவரது தொழில் பக்தி..!

“குத்துனவன் நண்பனா இருந்தா, அவன் குத்துனதை, செத்தாலும் வெளிய சொல்லக் கூடாது...” - இதுதான் கிளைமாக்ஸில் சசிகுமார் சொல்லும் பஞ்ச் டயலாக்.. இனி வரும் காலங்களில் நட்புக்கு உதாரணமாக இதனை பலவிதங்களில் நாம் பார்க்கலாம்.. நட்புக்கும், காதலுக்கும் மீண்டுமொரு முறை மரியாதை தந்திருக்கும் சசிகுமாருக்கும், இயக்குநர் பிரபாகரனுக்கும் எனது வாழ்த்துகள்..!

போராளி - சினிமா விமர்சனம்

04-12-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!





‘நாடோடிகள்’ கொடுத்த கன்னாபின்னா ஹிட்டால் இந்தப் படமும் அதிக எதிர்பார்ப்பைக் கொடுத்திருந்த்து. சினிமாவில் நீண்ட நாள் அனுபவம் உடையவர் சமுத்திரக்கனி என்பதால் வருகின்ற ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்கிற ஒரேயொரு கொள்கையோடு திட்டமிட்டு படத்தினை ‘நாடோடிகள்’ டைப்பிலேயே எடுத்திருக்கிறார். முன்னதில் உறவுகள் இருந்தும் நட்பும் முக்கியம் என்பதை பறை சாற்றியது. இந்தப் படம் “சொந்த, பந்தங்கள் வேஸ்ட்டு.. நட்புதான் கடைசிவரையில் கை கொடுக்கும்” என்பதை அழுத்தந்திருத்தமாகச் சொல்லியிருக்கிறது..!

சசிகுமார் தாயை இழந்தவர். தந்தை இன்னொரு திருமணம செய்து கொள்கிறார். அவருக்கும் ஒரு பையன் பிறக்க.. சசிகுமாரின் திருமணமாகாத பெரியப்பா மூலம் கிடைக்கவிருக்கும் சொத்துக்கள் அனைத்தும் தன் பிள்ளைக்கே கிடைக்க வேண்டும் என்று திட்டம் போடுகிறார் சித்தி. மனைவி மயக்கத்தில் இருக்கும் அப்பா எதற்கெடுத்தாலும் தலையை ஆட்ட, நல்ல புத்திசாலி பையனான சசிகுமாரை பள்ளிக்கு அனுப்பாமல் சாணி தட்ட வைக்கிறார்கள். மனநல மருத்துவமனையில் சேர்ப்பித்து சசிகுமாருக்கு பைத்தியம் பட்டத்தையும் சூட்டி சிகிச்சை எடுப்பதாக ஊராரை நம்ப வைக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்களது வீட்டில் வேலை பார்த்த பெரியவர் மூலம் பெரியப்பா மற்றும் தனது அம்மாவை திட்டமிட்டு கொலை செய்த்து சித்தி வழி சொந்தங்கள்தான் என்பது சசிகுமாருக்குத் தெரிய வர.. அவர்களிடம் சென்று மோதுகிறார் ச்சி. இந்த மோதலில் சில கொலைகள் நடந்துவிட தனக்கு பைத்தியம் என்ற பழியை இப்போது ஏற்றுக் கொண்டு, மனநல மருத்துவமனைக்கே வந்து சேர்கிறார் சசி. 

அங்கேயும் விடாமல் சசிகுமாரை கண்காணிக்க ஒரு ஆளை சித்தி அனுப்பி வைக்க.. அவர்களிடமிருந்து தப்பிக்க அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அல்லாரி நரேஷையும் இழுத்துக் கொண்டு சென்னைக்கு வந்து கால் பதிக்கிறார் சசி. ரமேஷின் நண்பன் கஞ்சா கருப்புவின் உதவியோடு பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்க்கிறார்கள் இருவரும். அவ்வப்போது அக்கம்பக்கம் இருப்பவர்களுக்கு சமூக சேவை செய்கிறார்கள். ஓய்வாக கிடைத்த நேரத்தில் சர்வீஸ் வொர்க் எடுத்துச் செய்கிறார்கள். சசிகுமாருக்கும், நரேஷுக்கும் பார்ட் டைமாக சினிமா பாணியில் தானாகவே லவ்வும் வந்து சேர.. கஞ்சா கருப்புவின் விளம்பர வெறியில் இவர்களது புகைப்படங்கள் பிரிண்ட்டாகி பத்திரிகையில் வெளியாக.. சித்தியின் ஆட்கள் அள்ளிப் போட்டுக் கொண்டு போக டாடா சுமோவில் வந்து குவிகிறார்கள். சசியும், நரேஷும் தப்பித்தார்களா.. இல்லையா.. என்பதுதான் மிச்ச சொச்சக் கதை..! இதில் பிளாஷ்பேக் கதையை இடைவேளைக்கு பின்பும், சென்னைவாழ் கதையை இடைவேளைக்கு முன்பாகவும் சொல்லி ஒரு சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறார்கள்.     

தியேட்டரின் முன் வரிசை ரசிகர்களுக்கும், டிரவுசர் தெரிய லுங்கியை ஏத்திக் கட்டிக் கொண்டு அலப்பறையைக் கொடுக்கும் இளைஞர்களுக்கும் சசிகுமாரை ரொம்பவே பிடித்துப் போய் இருக்கிறது..! அவர் அடிக்கடி “நாங்க” “எங்களுக்கு” என்று சொல்லும்போதெல்லாம் அந்த கோஷ்டிகள்தான் தியேட்டரில் கரகாட்டம் ஆடுகிறார்கள்..!

சாதாரணமாக வந்து செல்வதே நடிப்பு என்றாகிவிட்டதால் சசிகுமாரின் நடிப்பு அவருடைய பிளாஷ்பேக் கதையில்தான் தெரிகிறது..! லேசுபாசன வசனங்களைக்கூட ரசிக்க வைக்கும் அளவுக்கு உச்சரிக்கும் சசிக்கு இந்த காதல் மூடுதான் வர மாட்டங்குது..! ஸ்வாதி அவரைக் காதலிக்கும் விதம் அக்மார்க் சுப்பிரமணியபுரம் டைப்.. “நாம ரெண்டு பேரும் காதலுக்கு அடிமையா இருக்கலாம்..” என்ற ஸ்வாதியின் கேள்விக்கு “நான் யாருக்கும் அடிமையா இருக்க மாட்டேன்.. யாரையும் அடிமையாக்கவும் மாட்டேன்” என்று அலட்சியமாக பதில் சொல்லிவிட்டுப் போவது அந்தக் காட்சிக்கு நன்றாகத்தான் இருந்த்து.. ஆனால் ரொமான்ஸ் எங்கே வருது..? எல்லாம் காமெடியாகிவிட்டது..!

நரேஷ்.. தெலுங்கு விற்பனைக்காகவும் நடிக்க வைக்கப்பட்டவர். நன்றாகத்தான் நடித்திருக்கிறார். அவ்வப்போது சோகமயத்தில் இருக்கம்போது வரும் அந்த மனநோய் வரும் காட்சியில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். இயக்கம் சூப்பர் என்றாலும், வெளிக்காட்டியிருக்கும் நரேஷும் பாராட்டுதலுக்குரியவர். அப்பாவித்தனமான அவரது கேரக்டரை நிவேதாவுடன் காதல் கொள்ள இன்ஸ்டன்ட் கவிதைகள் மூலம் சொல்ல வைத்திருப்பது காதலைவிட காமெடியாகவே அதிகம் தெரிகிறது.

படபட கேரக்டர்.. தெற்றுப் பல் தெரிய சிரிப்பது.. அடக்கம் காட்டுவது.. சிடுசிடுப்பது என்று அனைத்தையும் ஸ்வாதி கச்சிதமாகச் செய்திருக்கிறார். சசிகுமார் பேசும் காதல் பற்றிய விளக்கங்களை புரியாமல் கேட்டுவிட்டு நிமிடத்தில் உதார் விடுவது.. சசியின் காதல் ஒப்புதலை கேட்டவுடன் முகத்தில் காட்டும் அந்தப் பரவசம்.. தொட்டியை உடைத்தத்தற்காக  போடும் சண்டை, மருத்துவமனையில் சசிகுமாரின் நக்கல் பேச்சைக் கேட்டு குதறியெடுப்பது என்று ஸ்வாதியின் டாமினேட் படத்தில் அதிகம்தான்.. இந்தப் பொண்ணு ஏன் அடிக்கடி நடிக்க மாட்டேங்குது..? நல்ல கதையும் தேவைதான். அதே சமயம் வெரைட்டியாவும் நடிச்சா பெருமையும், புகழும் கிடைக்குமே..?

நிவேதா என்ற இந்த சினிமா புதுமுகம், நரேஷுக்கு ஜோடி.. கொஞ்சம் சினிமாத்தனமான பேமிலி பேக்கிரவுண்ட்டுடன் இவருடைய வாழ்க்கைக் கதை சலிப்பைக் கொடுத்தாலும், கதையின் ஓட்டத்துக்கு 2 இடங்களில் இவர்தான் முக்கியம் என்பதால் ஓகே எனலாம்..! தமிழ்ச்செல்வி என்ற பெயருடன் நரேஷுடன் பேசும் சென்னைத் தமிழும், தன் மாமனை எதிர்க்க முடியாமல் கண்ணீருடன் தவிக்கும் இன்னொரு பக்கமுமாக தனது கேரியரை துவக்கியிருக்கிறார். வாழ்த்துவோம்..!

வசுந்தரா பொண்ணு, ஆட்டுப் பட்டி நடத்தும் பெண்ணாக வந்து அதிசயமாக சண்டையெல்லாம் போட்டுவிட்டு அநியாயமாகச் செத்துப் போய்விடுகிறார்..! வந்ததே கொஞ்ச சீன்ஸ்தான் என்றாலும், இதற்கே முறுக்குப் பிழிந்துவிட்டாராம் கனி..! இவருடைய கேரியரில் இதுவுமொரு முக்கியமான படம்..! 

கஞ்சா கருப்பு வழக்கம்போலவே, ஒரே மாடுலேஷனில்தான் பேசுகிறார். ஆனாலும் சிச்சுவேஷன், எதிரணியின் பேச்சு, வசனத்தால் பல இடங்களில் கைதட்டல்கள் தூள் பறக்கிறது..! “திரும்பிப் பார்க்க வைக்க முடியுமா?” என்ற கஞ்சாவின் ஒரு கேள்விக்காக நட்ட நடு இரவில் அத்தனை அதகளத்தையும் செய்து முடித்த பின்பு கஞ்சாவின் அந்த கேள்வியையும், அவர்களுடைய பதிலையும் எதிர்பாராமல் தியேட்டரில் இடியே இடித்தது..! பெஸ்ட் ஸ்கிரீன்பிளே..!

பரோட்டா புகழ் சூரியின் அடுத்த ரவுண்ட் இந்தப் படத்தில்தான் பெரிதாகப் பேசப்படும் என்றே நினைக்கிறேன். வசுந்தரா வீசிய வேல்கம்பை பார்த்து பயந்து போய் நிற்கும் காட்சியிலும், சென்னை வந்து சித்தியின் அப்பனிடம் உதார் விடும் காட்சியிலும் மனிதர் தனி ஸ்லாங்கில் பேசியிருக்கிறார். இதையே பாலோ செய்தால் இன்னொரு கஞ்சா கருப்புவாக உலா வரலாம்..!

ஸ்வாதியின் பேக்கிரவுண்ட், பாட்டி, தங்கை கேரக்டர்களின் கதை.. கீழ் வீடு படவா கோபி மற்றும் அவருடைய மனைவி கேரக்டர், அவர்களுடைய மகளை வைத்து நம்பிக்கையூட்டும் காட்சிகள், குடிகாரனாகவே வலம் வரும் இணை இயக்குநர் குமார், எல்லாத்தையும் தானே முடிவெடுக்கும் ஞானசம்பந்தன், ஒருதலைக் காதலில் இருக்கும் அவரது பேசாமொழி மகள், வெட்டி மகன் என்று ஒரு சீரியல் எடுக்கும் அளவுக்கான நகைச்சுவை கேரக்டர்களை வைத்திருந்தும் அதிகப்பட்சம் அனைத்து காட்சிகளிலும் மெயின் கேரக்டர்களுடனேயே நடிக்க வைத்து கதையை நகர்த்தியிருக்கிறார் டிவி சீரியல் இயக்கத்தில் 12 ஆண்டு கால அனுபவம் வாய்ந்த இயக்குநர் சமுத்திரக்கனி.

சுந்தர் சி.பாபுவின் இசையில் டென்ஷனை கூட்ட வேண்டிய இடங்களில் எல்லாம் கரெக்டாகவே செய்திருந்தாலும், அதீதமான ஒலியமைப்பு பல இடங்களில் காதைக் கிழிக்கிறது..! 'சம்போ சிவசம்போ' டைப்பில் அவர் கொடுத்திருக்கும் தீம் மியூஸிக் கொஞ்சம் டல்லாகவே இருக்கிறது.. எடுத்த எடுப்பிலேயே இத்தனை உச்சஸ்தாயியில் பாடல் இருக்க வேண்டுமா என்ன..? காதலையே இன்னமும் ஏற்றுக் கொள்ளாத நிலையில் அது பற்றியே ஒரு பாடல் காட்சி என்றவுடன் சட்டென்று உள்ளுக்குள் நுழைய முடியவில்லை..!

படத்தில் அதிகம் பேசப்படுவது வசனங்கள்தான்.. சசிகுமாருக்கு அளவு வைத்து தைத்த சட்டையைப் போன்று வசனங்கள்தான் அவருக்கும் கை கொடுத்திருக்கின்றன. ஸ்வாதியை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குத் தூக்கி வரும் காட்சியில் அத்தனை வசனங்களும் அப்ளாஸ் வாங்கிவிட்டன. ரூம் போட்டு யோசிச்சுதான் எழுதியிருக்காங்க என்று உறுதியாக நம்பலாம்..!

ஏக்கர் கணக்கில் நிலம், நிலத்தில் யுரேனியம்.. ஒரே செக்காக 10 கோடி.. ஆனால் நிலத்தில் பாத்தியதை மட்டுமே சித்திக்கு. முழு உரிமை சசிகுமாருக்கு என்ற பெரியப்பாவின் உயில்.. பார்க்கும் இடத்திலெல்லாம் சித்தியின் தம்பி சசியை அடிப்பது. வீட்டிற்குள் வைத்து அடியாட்கள் மூலமாக அடிப்பது என்றெல்லாம் ஒரே ரணகளமாக இருக்கும் இந்தக் கதையின் முடிவை ஒரே ஒரு வார்த்தை.. “இப்படியே இன்னும் எத்தனை நாளைக்கு ஓடிக்கிட்டே இருக்கிறது..?” என்ற காதலியின் கேள்வியே தலைகீழாக மாற்றுகிறது என்கிற ஒரேயொரு சப்பைதான் இந்தப் படத்திலேயே எனக்குப் பிடிக்காத்தாக உள்ளது. ஆனால் இதுதான் கிளைமாக்ஸ் என்பதால் முடிவுக்கான முன்னுரையை வேறு மாதிரியாக சிந்தித்திருக்கலாம் என்று தோன்றுகிறது..!

இதேபோல் நாடோடிகள் டைப்பில் படத்தை முடிக்க விரும்பி போலீஸ் ஸ்டேஷனில் கஞ்சா கருப்புவை யார், என்ன என்று கேட்காமலேயே அடித்து உதைத்துவிட்டு ரமேஷை தேடி ஆள் வந்திருப்பதையும் காட்டுவது அக்மார்க் சினிமாத்தனம்..! 

பல பேட்டிகளில் "படத்தின் கடைசி காட்சியில்தான் கதை என்ன என்பதைச் சொல்லியிருக்குறேன்" என்று திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார் கனி. அது “சொந்த பந்தங்கள் வேஸ்ட்டு.. நட்புதான் முக்கியம். அவர்கள்தான் கடைசிவரை வருவார்கள” என்று..! இது அவருடைய பார்வையாக இருக்கிறது..

சினிமாவில் ஆடி, ஓடி, ஓய்ந்து ஊர்ப் பக்கம் போய் செட்டில் ஆனவர்களைக் கேட்டுப் பாருங்கள்.. “நட்பா..? எல்லாம் காசு இருக்கிறவரைக்கும்தான்.. கடைசில கட்டில்ல கிடக்குறப்ப பார்க்கறது நம்ம ஊர்ச்சனம்தாம்பா..” என்பார்கள்.. இப்படியும சிலருக்கு அனுபவம் கிடைத்திருக்கும்..!

கனிக்கும், சசிக்குமான நட்பில் இப்படியான அனுபவங்களே கிடைத்திருக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று நினைக்கிறேன். அதனால்தான் 2 படங்களும் இது போலவே வந்திருக்கின்றன.

இப்படி இரண்டு கலவையாகவும் நம்ம மக்கள் அனுபவித்திருப்பதால் இந்தப் படத்திற்கு ‘நாடோடிகள்’ அளவிற்கான வெற்றி கிடைக்காவிட்டாலும், வெற்றிக் கோட்டை தொட்டுவிட்ட பெருமை நிச்சயம் கிடைக்கும்..!