தெறி - சினிமா விமர்சனம்

15-04-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழ் சினிமாவின் இளைய சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான இளைய தளபதி விஜய் நடித்திருக்கும் 59-வது படம் இது. ‘ராஜாராணி’ என்கிற ஒரேயொரு சூப்பர் ஹிட் படத்தின் மூலமே ஒரே நாளில் உச்சாணிக் கொம்புக்கு போன இயக்குநர் அட்லீயின் இரண்டாவது படம்..
விஜய் கடைசியாக நடித்த ‘புலி’ படம் சரியாகப் போகவில்லை என்பதால் இந்தப் படத்தை பேண்டசி இல்லாமல் அதே நேரம் குழந்தைகளை மையப்படுத்தி அவர்களை கவரும்விதத்தில் கதை, திரைக்கதை எழுதி உருவாக்கியிருக்கிறார்கள். குடும்பத்தோடு பார்க்கக் கூடிய வகையில் வந்திருக்கும் விஜய் பட லிஸ்ட்டில் இதுவும் இடம் பிடித்திருக்கிறது.

கேரளாவில் தனது மகள் நைனிகாவுடன் அமைதியாக வாழ்க்கை நடத்தி வருகிறார் ஜோஸப் குருவில்லா என்னும் விஜய். மகள் நைனிகா யு.கே.ஜி. படிக்கிறாள். விஜய் அந்த ஊரிலேயே பேக்கரி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்குத் துணையாக இருப்பவர் மொட்டை ராஜேந்திரன். நைனிகாவின் டீச்சர் எமி ஜாக்சன். இவர்கள் மூவருக்கும் அறிமுகமாகிறது.
இந்த நேரத்தில் சர்ச்சுக்கு சென்றிருக்கும்போது ஒரு ரவுடி எமி ஜாக்சனுடன் வம்புக்கு போக எமி அவனை அடித்துவிடுகிறார். மறுநாளே எமியும், நைனிகாவும் விபத்துக்குள்ளாகிறார்கள். முந்தின நாள் தான் அடித்த ரவுடிதான் இப்போது தங்களை ஆள் வைத்து கொல்லப் பார்த்ததாக எமி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கிறார்.
இதைக் கேட்டு பதறும் விஜய் சட்டென்று போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகாரை வாபஸ் வாங்குகிறார். இந்த நேரத்தில் அங்கே வரும் ஒரு போலீஸ் உயரதிகாரி விஜயை “விஜய்குமார் ஐ.பி.எஸ்.” என்று கூப்பிட.. விஜய் தான் அவனில்லை என்று சொல்கிறார். ஆனால் அந்த போலீஸ் அதிகாரிக்கு விஜய் மீது சந்தேகம் வருகிறது. இதே சந்தேகம் எமிக்கும் வந்துவிட்டது.
ஆனாலும் புகார் கொடுத்துவிட்டதையே மரியாதைக் குறைவாக எடுத்துக் கொள்ளும் அந்த ரவுடிக் கும்பல் இரவு நேரத்தில் விஜய்யின் வீடு புகுந்து அவரைத் தாக்க முயல.. விஜய் அவர்களைப் பின்னியெடுக்கிறார்.
இந்த நேரத்தில் எமி கூகிளாண்டவர் துணையுடன் விஜய்குமார் ஐபிஎஸ்ஸின் ஜாதகத்தையே தோண்டி எடுத்து படித்துவிட்டு அவசரமாக விஜய்யை சந்திக்க ஓடி வருகிறார். இதற்கு மேலும் மறைத்து பலனில்லை என்பதால் விஜய் தன் முன் கதைச் சுருக்கத்தைச் சொல்கிறார்.
நேர்மையான போலீஸ் அதிகாரியான விஜய்குமார் ராதிகாவுக்கு ஒரே மகன். திருமணத்திற்காக பல பெண்களை பார்த்தும் இன்னமும் யாரையும் தேர்வு செய்யாமல் டபாய்க்கிறார் விஜய்.
ரோட்டில் சிறுவர்களை பிச்சையெடுக்க வைத்து காசு சம்பாதிக்கும சில ரவுடிகளை அடித்து உதைத்து ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கிறார் விஜய். அங்கே அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் ஹீரோயின் சமந்தாவுடன் விஜய்க்கு பழக்கமாகி இது காதலாகிறது. இந்தக் காதல் திருமணத்தில் முடியும் நிலையில் இருக்கிறது.
இந்த நேரத்தில் ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றிய இளம் பெண் ஒருவர் 3 நாட்களாக காணவில்லை என்று புகார் வர இதனை தானே விசாரிக்கிறார் விஜய். முடிவில் அந்தப் பெண்ணை குற்றுயிரும், குலையிருமாக ஓரிடத்தில் கண்டுபிடிக்கிறார்கள். அந்தப் பெண்ணிடம் வாங்கப்படும் மரண வாக்குமூலத்தின்படி அந்தக் குற்றத்தை செய்திருப்பவர் அமைச்சர் வானமாமலை என்னும் மகேந்திரனின் மகன் என்று தெரிய வருகிறது.
மகேந்திரனோ தன் மகன் 3 நாட்களாக காணவில்லை என்றும் அவனைத் தேடி கண்டுபிடித்து ஒப்படைக்கும்படி விஜய்யிடமே சொல்கிறார். ஆனால் விஜய் மிக கோபப்பட்டு மகேந்திரனின் மகனை ரகசியமாக கொலை செய்துவிடுகிறார். ஆனால் அவரது போதாத நேரம்.. ஒரு கெத்தாக இருக்கட்டுமே என்று நினைத்து நான்தான் அந்தக் கொலையை செய்தேன் என்று மகேந்திரனிடமே சொல்லிவிடுகிறார்.
இதனால் கோபப்படும் மகேந்திரன் விஜய்யையும், சமந்தா குடும்பத்தினரையும் கொலை செய்ய முயற்சிக்கிறார். இதில் தப்பிக்கும் விஜய் மகேந்திரனுக்கு எச்சரிக்கை கொடுக்கிறார். இதை பெரிய அவமானமாக கருதும் மகேந்திரன் “விஜய்க்கு சாகுறதுக்கும் மேலான ஒரு தண்டனையை கொடுக்கணும்…” என்று கர்ஜிக்கிறார்.
இடையில் விஜய்க்கும், சமந்தாவுக்கும் திருமணமாகி பெண் குழந்தை பிறக்கிறது. அவள் 6 மாத குழந்தையாக இருக்கும்போது ஒரு நாள் வீட்டுற்குள் ரவுடிகளுடன் வரும் மகேந்திரன் சமந்தாவையும், ராதிகாவையும் கொலை செய்துவிட்டு விஜய்யை துப்பாக்கியால் சுட்டுவிட்டு “முடிந்தால் தப்பித்துக் கொள்…” என்று சொல்லிவிட்டுப் போகிறார். சமந்தா தனது குழந்தையையும், விஜய்யையும் காப்பாற்றி தனது உயிரை விடுகிறார். அந்த வீடும் சமையல் கேஸ் லீக்கில் வெடித்துச் சிதறுகிறது. ஆனால் விஜய் தனது குழந்தையுடன் தப்பிக்கிறார். இருந்தாலும் அந்த தீவிபத்தில் விஜய் இறந்துவிட்டதாகவே போலீஸ் டிபார்ட்மெண்ட் இப்போதுவரையிலும் நினைத்து வருகிறது.
அங்கிருந்து தப்பித்த விஜய் கேரளாவுக்கு வந்து இப்போது அமைதியாக பேக்கரி ஓனராக வாழ்ந்து வருகிறார். இதை எமி ஜாக்சனிடம் விஜய் சொல்கிறார். அதே நேரம் விஜய்யின் புகைப்படத்தை பார்த்துவிட்டு அவர் உயிருடன் இருப்பதை அறியும் மகேந்திரன் விஜய்யை கொலை செய்யப் போவதாக சூளுரைக்கிறார்.
அடுத்து என்ன நடந்தது என்பதை வெள்ளித்திரையில் பார்க்கலாமே..?
விஜய்யின் இந்த திடீர் மாற்றம் வரவேற்கத்தக்கதுதான். எப்போதும் தனது ரசிகர்களை மகிழ்விப்பது மட்டுமே தனது நோக்கம் என்று இருந்தவர், இன்றைக்கு அதற்கு அடுத்தக் கட்டத்தை நோக்கி பாய்ந்திருக்கிறார். குழந்தைகளை கவர்ந்து அதன் மூலமாக ஒட்டு மொத்த குடும்பத்தினரையும் ஈர்ப்பதுதான் தனது பாணி என்பதை இந்தப் படத்தின் மூலம் உணர்த்தியிருக்கிறார்.
விஜய்யின் அறிமுக்க் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் அவரது ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த ஸ்டைலிஸ் அலப்பறைகளுக்கு அளவே இல்லை. அதிலும் கிளாஸ் ரூமில் ரவுடிகளுக்கு கேள்வி கேட்டே சுளுக்கெடுக்கும் காட்சியில் கைதட்டல்கள் நிற்கவே நிற்காது.  இது மட்டுமில்லை.. பாடல் காட்சிகளிலும் சமந்தாவுடனான காதல் காட்சிகளிலும் தனது டிரேட் மார்க் ஸ்டைலுடன் விஜய்யின் லுக் அசத்தல்..
நடிப்பில் படத்திற்குப் படம் தேறுவதை போலவே இந்தப் படத்திலும் அவர் கண் கலங்கிய காட்சிகளிலெல்லாம் ரசிகர்களும் உச்சுக் கொட்டுகிறார்கள். அவரது அளவு கடந்த பிள்ளை பாசம்.. ‘பேபி’, ‘பேபி’ என்று தந்தையும், மகளும் ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்ளும் அந்தப் பாசமும் நேசமும் அனைவரையும் கவர்ந்திருக்கிறது.
கிளைமாக்ஸில் அவருடைய அதகள ஸ்டண்ட் காட்சிகளும், நடனக் காட்சிகளில் காட்டியிருக்கும் ஸ்பீடான ஸ்டெப்ஸுகளும் விஜய்யை நடனத்தில் அடித்துக் கொள்ள இப்போவும் கோடம்பாக்கத்தில் ஆளில்லை என்பதையே காட்டுகிறது.
விஜய்க்கு பின்பு பெரிய அளவுக்கு ஸ்கோர் செய்திருப்பது குழந்தை நட்சத்திரமான நைனிகாதான். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்பதை போலவே நடிப்பு, டயலாக் டெலிவரி… ‘ஸாரி கேளு’ என்று ரவுடியிடம் தெனாவெட்டாக பேசும்விதம்.. மகேந்திரன் ‘ஸாரி சொல்ல மாட்டேன்’ என்று சொன்னவுடன் ‘ச்சீ போ’ என்று கோபத்துடன் விலகும் நடிப்பு என்று நைனிகா சின்ன மீனாவை அப்படியே ஞாபகப்படுத்தியிருக்கிறார். காலம் இவர் ஹீரோயினாக நடிக்கும் படத்தையும் நம்மை விமர்சனம் எழுத வைக்கும் என்று நம்புவோமாக..!
பாரதிராஜா நடித்திருக்க வேண்டிய வில்லன் கேரக்டர் மகேந்திரனுக்குக் கிடைத்திருக்கிறது. தனது அரசியல்தனம் வாய்ந்த குணத்துடன் அவர் பேசும் ஒவ்வொரு டயலாக்கும் படத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த்து. கைகளை ஆட்டி ஆட்டி அவர் பேசும் ஸ்டைலும், டயலாக் டெலிவரியும் மகேந்திரன் என்றொரு நடிகரையும் நமக்குக் கொடுத்திருக்கிறது. அண்ணன் தொடர்ந்தும் நடிக்கலாம்.
எமிக்கு அதிகம் வேலையில்லை. ஆனால் டீச்சர் கேரக்டருக்கு பொருத்தமாக்த்தான் இருக்கிறார். இவருடனான டூயட் பாடலை நேரமில்லாத காரணத்தினால் சேர்க்காமல் கடைசி டைட்டிலின்போது பிட்டாக சேர்த்திருக்கிறார்கள். ஆனால் சமந்தா.. வெரி க்யூட்.. குழந்தைத்தனம் இன்னமும் அவரது முகத்தில் இருந்து மறையவில்லை. அதிகமான குளோஸப் காட்சிகளில் அவரது நடிப்பை வெகுவாக ரசிக்க முடிகிறது. விஜய்யுடன் அறிமுகமாகும் காட்சிகளில் வேகமாக கேள்வியைக் கேட்டுவிட்டு பின்பு பதிலைக் கேட்டு கோபத்துடன் டிஞ்சர் பஞ்சை அடியாட்களின் முகத்தில் வைத்து தேய்க்கும் கோபத்தை ரசிக்க முடிகிறது. ஆட்டோவில் போனவர் சட்டென்று இறங்கி திரும்பி வந்து விஜய்யைக் கட்டிப் பிடித்து ‘ஐ லவ் யூ’ சொல்லி ஒரு டூயட்டுக்கு வழி வகுத்தாலும் அந்தக் காட்சி உயிர்ப்புடன் இருக்கிறது.
ரெஸ்ட்டாரெண்ட்டில் சமந்தாவின் அப்பாவை பார்க்க வந்த விஜய், சமந்தாவுடனான தனது காதல், கல்யாணம், குடும்பம், அன்பு, பண்பு, பாசம், மருமகனின் கடமை.. இதையெல்லாம் விலாவாரியாக எடுத்துரைப்பது டச்சிங்கான காட்சி. இந்தக் காட்சியை தினசரி 2 வேளை அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பினால் மருமகன்களுக்கு ஒரு பாடமாகவும், மாமனார்களுக்கு ஒரு கருத்தாகவும் இருக்கும்..!
படத்தின் இடைவேளை பிளாக்கில் மொட்டை ராஜேந்திரன் சொல்லும் ஒரு டயலாக்குதான் படத்தின் டர்னிங் பாயிண்ட். அதையும் கனகச்சிதமாக ராஜேந்திரன் சொல்லும் ஸ்டைலே தனி. அதற்கு விஜய்யின் கவுண்ட்டர் பாயிண்ட் அட்டாக்கும் படத்தின் முற்பாதியை சூப்பர் என்று சொல்ல வைத்திருக்கிறது.
மேலும் ராதிகா சரத்குமார், சுனைனா, கரிகாலனாக நடித்தவர்.. காளி வெங்கட், டி.ஜி.பி.யாக வரும் பிரபு, மகேந்திரனின் நண்பனாக வந்திருக்கும் இயக்குநர் அழகம் பெருமாள் என்று அனைவருமே நடிப்பில் குறை வைக்காமல் நடித்திருக்கிறார்கள். கடைசியான டிவிஸ்ட்டு சற்றும் எதிர்பாராத்து.. ஆனால் லாஜிக் மீறல்தான்..
ஒரு மினிஸ்டரின் மகனை கொலை செய்துவிட்டேன் என்று ஒரு டெபுடி கமிஷனர் அவரிடமே சொல்வதெல்லாம் எந்த அளவுக்கான ஹீரோயிஸம் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள். ஆனால் அப்படிச் சொல்வதில் லாஜிக் இல்லை என்பதையும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஒரு சாதாரண வட்டச் செயலாளர் நினைத்தாலே இன்றைக்கு ஒரு கமிஷனரையே மாற்றிவிட முடியும். அப்படித்தான் இப்போதைய நமது அரசியல் உலகம் இருக்கிறது. அப்படியிருக்க.. ஹீரோ அத்தனை தெனாவெட்டாக “நான்தான் கொலை செஞ்சேன்.. உன்னால என்ன பண்ண முடியும்..?” என்று கேட்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்தானே இயக்குநர் ஸார்..!?
வில்லன்களுக்கு ‘வானமாமலை’, ‘கரிகாலன்’ என்று பெயர் வைத்துவிட்டு, மற்ற கேரக்டர்களுக்கு விஜய்குமார், தர்மேஷ்வர், மித்ரா, நிவேதிதா என்று மாடர்னாக பெயர் வைத்திருப்பதன் உள்ளர்த்தம் புரியவில்லை. எந்தக் காரணமும் இல்லை என்றால் சந்தோஷம்தான். அதேபோல் ஒரு காட்சியில் “நாட்டுக்காக போராடியவர்களில் காணாமல் போன லிஸ்ட்டில் நேதாஜி இல்லையா..?” என்று சொல்லி அடுத்து பிரபாகரன் பெயரைச் சொல்லப் போய் நிறுத்திக் கொண்டு முன்னெச்சரிக்கை முத்தண்ணாவாக இருந்த இயக்குநர் அட்லீக்கு நமது பாராட்டுக்கள்.
தனது 50-வது படம் என்பதால் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் கொஞ்சம் முனைப்புடன்தான் இசையமைத்திருக்கிறார். ஈனா மீனா டீக்கா பாடல் காட்சியில் ஒரு குடும்ப குதூகுலத்தையே கொண்டு வந்திருக்கிறார்கள். இதற்கு பாடலும் உறுதுணையாக இருக்கிறது. பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த ‘தாய்மை’ பாடல் உள்ளத்தை உருக வைத்திருக்கிறது. ‘ஜித்து ஜில்லாடி’யும், ‘செல்லக்குட்டி’யும் விஜய்யின் ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது. பின்னணி இசையில் அதிகம் ஆதிக்கம் செலுத்தாமல் வசனங்களை கேட்கும் அளவுக்கு விட்டுவைத்ததற்கு இசையமைப்பாளருக்கு நமது நன்றி.
ஜார்ஜ் சி.வில்லியம்ஸின் ஒளிப்பதிவுதான் படம் முழுவதிலும் நம்மை விஜய்யுடன் கூடவே பயணிக்க வைத்திருக்கிறது. கேரளப் பகுதிகள்.. பாடல் காட்சிகளில் காட்டியிருக்கும் செட்டுகள்.. பாடல் காட்சிகளின் நடனங்கள்.. சென்னை என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் நடக்கும் சண்டை காட்சிகள்.. சமந்தாவின் அழகு முகம்.. அவருடைய சின்னச் சின்ன முக பாவனைகளின் அழகு.. விஜய்யின் அழகு மிளிரும் வீடு.. பாடல் காட்சிகளில் போட்டிருந்த செட்டிங்குகள்.. என்று பலவற்றிலும் ஒளிப்பதிவாளர் தனது முத்திரையை ஆழமாகப் பதித்திருக்கிறார். இத்தனை பணம் செலவழித்து எடுக்கும் படத்திற்குரிய மரியாதையை ஒளிப்பதிவாளரும் செய்திருக்கிறார். பாராட்டுக்கள்..
முந்தைய படமான ராஜாராணியில்கூட குடும்பத்தின் ஒற்றுமை.. அன்பு பாசத்தை பகிர்தல் என்பதையெல்லாம் கோனார் நோட்ஸ்போல கிளாஸ் எடுத்துச் சொன்ன இயக்குநர் அட்லீ இந்தப் படத்தில் பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்கச் சொல்லி பெற்றவர்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார். இதுதான் இந்தப் படம் சொல்லும் பாடம்..!
இதைப் புரிந்து கொண்டால் நன்மை நமக்கு..! இல்லாவிட்டால் நமது வாழ்க்கையே தெறித்துவிடும்..!
தெறி – பார்க்க வேண்டிய படம்தான்..!

1 comments:

Yarlpavanan said...

சிறந்த திரைக் கண்ணோட்டம்

இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்