ஜித்தன்-2 - சினிமா விமர்சனம்

11-04-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

10 ஆண்டுகளுக்கு முன்பாக வந்த ‘ஜித்தன்’ படத்தின் தொடர்ச்சிதான் இந்தப் படம் என்றார்கள். முதல் பாகத்தில் வெள்ளத்தில் சிக்கி இறந்து போன ஜித்தன் ரமேஷ் இதில் திடீரென்று உயிர்த்தெழுகிறார்.

தனது அப்பாவுடன் வீடு மாறியே களைத்துப் போகிறார். வீட்டு ஓனர்களின் அடாவடி டார்ச்சரால் கடுப்பாகி அப்பாவும், மகனும் வீடு மாறிக் கொண்டேயிருக்கிறார்கள். அப்படியொரு சந்தர்ப்பத்தில் இவருடைய தந்தை திடீரென்று மரணமடைய சோகத்தில் ஆழ்கிறார் ரமேஷ்.
இதற்காகவே சொந்தமாக ஒரு வீட்டை விலைக்கு வாங்கி அதற்கு தனது அப்பாவின் பெயரைச் சூட்டி அழகு பார்க்கிறார் ரமேஷ். ஆனால் அந்த வீட்டில் ஒரு பேய் இருப்பது தெரிய வருகிறது.
ச்சும்மா புரட்டி, புரட்டி அடிக்கிறது ரமேஷை. போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிப் போய் புகார் சொல்கிறார். ஓடி வரும் இன்ஸ்பெக்டர் ரோபோ சங்கரும், நெல்லை சிவாவும் வீட்டில் இருக்கும் சோபாவையும், டிவியையும் கடத்திச் செல்கிறார்கள். ஆனால் அவைகளாலும் இன்ஸ்பெக்டர் வீட்டிலேயே ரகளையாக.. மறுபடியும் இரண்டையும் கொண்டு வந்து ஒப்படைக்கிறார்கள்.
திடீரென்று பேய் சிருஷ்டி டாங்கேயின் உருவத்தில் தோன்றி, “இது என் வீடு.. நீ வீட்டை விட்டு வெளியே போ…” என்கிறது. ரமேஷ் மறுக்க.. பல டார்ச்சர்கள் தொடர்கின்றன. கடைசியாக வேறு வழியில்லாமல் வீட்டை விற்பனை செய்யவும் முயல்கிறார் ரமேஷ்.
அந்தப் பகுதி தாதா ஒருவருக்கு வீட்டை விற்பனை செய்ய முடிவெடுக்கிறார். இந்த நேரத்தில் பேயாக இருக்கும் சிருஷ்டி டாங்கே தான் பேயான கதையைச் சொல்கிறது.
முகம் காட்டாமல் தன்னைக் காதலித்தவனை பார்ப்பதற்காக பேருந்தில் பயணம் செய்யும்போது அதே பேருந்தில் தனது காதலனும் பயணிப்பதை அறிகிறாள் சிருஷ்டி. ஆனால் காதலனின் முகத்தைப் பார்ப்பதற்குள்ளாகவே அந்த பேருந்து விபத்துக்குள்ளாக சிருஷ்டி இறக்கிறாள். ஆனால் அவளது ஆன்மா இறக்காமல் அவளுடையை வீட்டிலேயே உலா வந்து கொண்டிருக்கிறது. தனது காதலனை கொண்டு வந்து காட்டினால் தான் வீட்டைவிட்டு வெளியேறுவதாகச் சொல்கிறாள் சிருஷ்டி.
இந்த பார்க்காமலேயே காதல் என்கிற கதையைக் கேட்டு இம்ப்ரஸாகிவிட்ட ரமேஷ்,, அந்தக் காதலனைத் தேடி அலைகிறார். கூடவே வீட்டை விற்பனை செய்யும் முடிவை மாற்றிக் கொண்டதாக தாதாவிடம் சொல்ல அவன் அதை ஏற்க மறுக்கிறான்.
வீட்டை இடிக்க புல்டோசரை வரவழைக்கிறான் தாதா. அடியாட்களை இறக்குமதி செய்கிறான். அதே நேரம் இவர்களைச் சமாளிக்க ஆன்மா சாந்தியாகாமல் அங்கேயே அலைந்து கொண்டிருக்கும் பேய்களின் உதவியை நாடுகிறார் ரமேஷ்.
ஒரு பக்கம் பேய்.. இன்னொரு பக்கம் தாதா என்று இரண்டு பக்கமும் மாட்டிக் கொள்ளும் ரமேஷ், கடைசியில் என்ன ஆனார் என்பதை தியேட்டருக்கு சென்று படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன்.
கஷ்டம்தான்.. எத்தனை பேய் படம்தான் பாக்குறது..? மாசத்துக்கு 5 பேய்ப் படங்கள் வந்தால் எத்தனை புதிய கதைகளையும், திரைக்கதையையும்தான் கொடுக்க முடியும். கதை பஞ்சமேற்பட்டுவிட்டதால் முதல் 10 நிமிடங்களுக்கு பிறகு எந்தப் பக்கம் பேயை நகர்த்த வேண்டும் என்கிற குழப்பத்திலேயே திரைக்கதையை அமைத்துவிட்டார்கள் போலும். சுவாரஸ்யமே இல்லாமல் போய்விட்டது..!
ரமேஷ் ஓரளவுக்கு பயந்ததுபோல நடித்திருக்கிறார்.  சிருஷ்டி டாங்கே வசனத்தை அப்படியே பேசி ஒப்பித்திருக்கிறார். அவ்வளவுதான். பேயாக நடித்தவர்கள் பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு நடித்திருப்பது ஆச்சரியம்தான். ரோபோ சங்கர், நெல்லை சிவா கூட்டணியுடன் முதற்பாதியில் கொஞ்ச நேரம் பொழுது போனது.. இரண்டாம் பாதியில் அதற்கும் வேட்டுவைத்துவிட்டதால் தாங்க முடியலை..!
ஒளிப்பதிவும், படத் தொகுப்பும் மட்டுமே சொல்லக் கூடிய ஒன்றாக இருக்கிறது. இசை வீணான விஷயம். பின்னணி இசைகூட பயமுறுத்தவில்லை என்றால் எப்படிங்க..?
வின்சென்ட் செல்வாவின் திரைக்கதை பலனளிக்கவில்லை என்பதோடு புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் பெரிய அளவுக்கு சிறப்பில்லை என்பதால் படத்தைப் பற்றியும் எதையும் சொல்ல முடியவில்லை..!
பேய்ப் படம்தான். ஆனால் பேயில்லாதது..

0 comments: