07-09-2015
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
ஹீரோ அசோக் செல்வன் தன் அப்பாவின் விருப்பத்திற்கெதிராக விஷுவல் கம்யூனிகேஷன் படித்து முடித்துவிட்டு டிவி சேனலில்தான் வேலை பார்க்க வேண்டும் என்கிற ஒற்றைக் குறிக்கோளோடு இருப்பவர். அதே சமயம் நல்ல அழகான பெண்கள் கிடைத்தால் உடனேயே அவர்களுடன் பழக வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் காதலிக்க வேண்டும் என்கிற ஆசையும் உடையவர்.
டாப் டிவி என்கிற மொக்கை சேனலில் சம்பளம் கேட்காத டிரெயினராக வேலைக்குச் சேர்கிறார். அங்கே அந்தரங்க கேள்விகளுக்கு பதிலளிக்கும் நிகழ்ச்சியை நடத்தினாலும் சேனலின் ஆல் இன் ஆலாக இருக்கும் ஜெகனின் துணை கிடைத்து அவரை வைத்தே தனது டிவியின் மூலம் பிரபலமாகும் கனவை நிறைவேற்றிவிடலாம் என்று எண்ணி காத்திருக்கிறார் அசோக்செல்வன்.
தனது தங்கை ஸ்வாதியின் தோழியாக வீட்டுக்கு வரும் பிந்து மாதவினின் கண்களை பார்த்தவுடன் அசோக்செல்வனுக்கு காதல் உணர்வு பீறிட்டு எழ.. காதலிக்கத் துவங்குகிறார். எப்படியாவது பிந்துவை காதலிக்க வைத்துவிட வேண்டும் என்று பல டிராமாக்களை போட்டு கடைசியாக அதிலேயே சிக்கிக் கொள்கிறார்.
இன்னொரு பக்கம் டாப் டிவியின் ஓனரான கருணாஸ் தான் பட்ட கடனை அடைக்க முடியாமல் தற்கொலைக்கு முயற்சி செய்து கடைசியாக காப்பாற்றப்படுகிறார். தனது டிவியை முன்னுக்குக் கொண்டு வர எந்த வழியும் இல்லையே என்று புலம்புகிறார்.
இந்த நேரத்தில் சின்சியராக யோசனை செய்யும் அசோக்செல்வனும், கருணாஸும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ தொடரினை போல காதல் ஜோடிகளை சேர்த்து வைக்கும் ஒரு நிகழ்ச்சியைத் துவக்குகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியை நடிகை ஊர்வசி தொகுக்கு வழங்க ஒப்புக் கொள்கிறார். இயக்குநர் மனோபாலா இயக்கம் செய்து கொடுக்க வருகிறார். இந்த ரியலிட்டி என்ற பெயரில் நடத்தப்படும் செட்டப் ஷோவை மிக, மிக திட்டமிட்டு அழகாக ஏற்பாடு செய்கிறார்கள் இருவரும்.
கடைசியாக இரண்டு பரம்பரை எதிரிகளின் பிள்ளைகளின் உண்மையான காதலுக்கு உதவ நினைத்து அதற்கான வேலைகளைத் துவக்க சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் பிற்பாதியின் திரைக்கதை.
‘கழுகு’ படத்தை எழுதி, இயக்கிய சத்யசிவானின் அடுத்த படம் என்கிற எதிர்பார்ப்போடு போனால் பல்பு வாங்கித்தான் வருவீர்கள். அந்தப் படத்திற்கு முற்றிலும் அன்னியமான ஒரு கதையைத் தேர்வு செய்து அதில் முக்கால்வாசி வெற்றியும் பெற்றிருக்கிறார்.
முதல் பாதியில் சலிப்பும், அலுப்புமாக காட்சிகள் நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் ஊர்வசி, மனோபாலாவின் அட்டகாசத்தால் நேரம் போவதே தெரியாத அளவுக்கு ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.
இதற்கு முந்தைய படங்களின் அசோக் செல்வன் வேறு. இதில் வேறு என்பதை பல காட்சிகளில் உணர முடிகிறது. இறுக்கமான முகத்துடன் சாதா ஹீரோவாக நடிப்பது வேறு. நடிப்பது வெளியில் தெரிய வேண்டும் என்பதுபோல் நடிப்பதென்பது கஷ்டம்தான். இதில் கொஞ்சம் சிரமப்பட்டு நடித்திருக்கிறார் அசோக்செல்வன். இன்னும் கொஞ்சம் நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் நிச்சயம் மெருகேற்றிக் கொள்வார்.
பிந்து மாதவிக்கு உருக்குற மாதிரியான காட்சிகளெல்லாம் இல்லையென்றாலும் ஹீரோவுடனான தனது காதலை வெளிப்படையாகச் சொல்ல வரும்போது, ஹீரோவோ மைக்ரோ வயரை காதில் மாட்டிக் கொண்டு தொடரின் உருவாக்கத்தில் மாட்டிக் கொண்டு டயலாக்கை மாற்றி மாற்றிப் பேசும்போது… இருவரின் தவிப்பும் நல்ல நடிப்பு. பாடல் காட்சிகளில் பிந்துவை ரசிக்க முடிகிறது.. ஆனாலும் இப்படியே வந்து போய்க் கொண்டிருந்தால் எப்படி அம்மணி..? ஏதாவது ஒரு படமாவது அழுத்தமா நடிச்சிருங்களேன்.. பெயராவது கிடைக்குமே..?
பல படங்களில் நமக்கு பேதிவரும் அளவுக்கு பேசியே கொன்ற ஜெகன்.. இந்தப் படத்தில் அடக்கி வாசித்திருப்பது பாராட்டுக்குரியது. அவருடைய வசனங்கள் அனைத்துமே கதைக்கும், கேரக்டர்களுக்கும் பொருத்தமாகவும், ஒரு வசனம்கூட எல்லை மீறாமலும், காட்சியைத் தாண்டாமலும் இருக்கிறது. இருந்தும் டபுள் மீனிங் எப்படி உள்ளே நுழைந்தது என்று தெரியவில்லை. அவற்றை முழுவதுமாக கட் செய்திருக்கலாம். உண்மையில் ஜெகன் இந்தப் படத்தில் பல காட்சிகளில் சிரிக்க வைத்துவிட்டார்.
அடுத்த்து சந்தேகமேயில்லாமல் ஊர்வசிதான்.. ஊர்வசி நடிப்பில் ராட்சஸி என்பார் கமல். அது உண்மைதான். நிமிடத்திற்கு நிமிடம் தனது முக பாவனையை மாற்றி காமெடியும், குணச்சித்திரமுமாக வந்த கூட்டத்தை அவர் சமாளிக்கும் அழகும், அந்த தொடரின் படப்பிடிப்புத் தளக் காட்சிகளும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துவிட்டன.
நாசர், எம்.எஸ்.பாஸ்கர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் வைத்திருக்கும் சஸ்பென்ஸ் டெக்னிக்கலுக்கு ஒரு சபாஷ் போட வேண்டும். இந்த கிளைமாக்ஸ் காமெடிதான் படத்துக்கு மிகப் பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
செல்வக்குமாரின் ஒளிப்பதிவும், தமனின் இசையும் இந்தப் படத்திற்கு உதவியிருக்கின்றன. ‘ஆம்பளைங்க’ பாடலுக்கு ஐஸ்வர்யா ஆடும் ஆட்டமும், பாடலும் அழகு. இறுதிக் காட்சிகளில் எடிட்டரின் பங்களிப்பு பிரதானமாக இருக்கிறது. தெரிகிறது. அவருக்கும் நமது பாராட்டுக்கள்..!
வெறுமனே சிரிப்புப் பட்டாசாக இல்லாமல் கதையுடன் கூடிய இயல்பான நகைச்சுவையுடன், நடிகர்களின் நடிப்பினால் உருவாகியிருக்கும் பலமான நகைச்சுவையுடன் முடிந்திருக்கும் இந்தப் படம் காமெடி பிரியர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்..!
சவாலே சமாளி – போட்டியை ஏத்துக்கிட்டு போய் படத்தைப் பாருங்க..! சிரிச்சுக்கிட்டே வரலாம்..!!!
|
Tweet |
0 comments:
Post a Comment