மாயா - சினிமா விமர்சனம்

18-09-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பேய்ப் பட வரிசையில் மிக வித்தியாசமான பேயாக மிரட்டலாக வந்திருக்கிறது இந்த ‘மாயா’.
அனைத்து வகையான பேய்ப் படங்களிலும் மிக சாதா, சாதா, மிகையான, அதிகமான, மிக அதிகான பயமுறுத்தல்களெல்லாம் அவ்வப்போது வந்து போய்க் கொண்டிருக்கும். ஆனால் இந்த ‘மாயா’ படத்தில் முதல் ஷாட்டில் இருந்து படத்தின் முடிவுவரையிலும் ஒவ்வொரு காட்சியிலும் ஒருவிதமான பயமுறுத்தல் இருந்து கொண்டேயிருக்கிறது.
அதே சமயம் தப்பித் தவறி 2 நிமிடங்கள்கூட திரையைப் பார்க்காவிட்டால் படத்தின் கதை நமக்கு அன்னியமாகிவிடும். அப்படியொரு மிகுந்த புத்திசாலித்தனமான திரைக்கதை அமைப்போடு இந்தக் கதையை வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் அஷ்வின் சரவணன்.

கதைக்குள் ஒரு கதையாக.. சினிமாவுக்குள் ஒரு சினிமாவாக இதில் வைக்கப்பட்டிருக்கும் முன் பின் நகர்த்தப்பட்ட திரைக்கதை யுக்திகள்தான் படத்தின் மிகப் பெரிய பலம். கதைக்குள் ஊடுறுவும் கதையின் மாந்தர்களும், ஏற்கெனவே கதையின் மாந்தர்களாக இருப்பவர்களும் ஒரு சேர பயணிக்கும் ஒரு கதையின் திரைக்கதையை குழப்பாமல் கொண்டு செல்வது சுலபமல்ல. இதில் அதனை அத்தனை இலகுவாக அமைத்திருக்கிறார் கதாசிரியர்.
கைக்குழந்தையுடன் கணவரைப் பிரிந்து தனியே தனது தோழியுடன் வசிக்கிறார் நயன்தாரா. கணவர் கொடுக்கும் பண உதவிகளை ஏற்க மறுக்கிறார். விளம்பரப் படங்களில் நடிக்கும் நடிகையாக இருக்கும் நயன்தாராவுக்கு கடன் பிரச்சினையும் அதிகமாக உள்ளது.
தோழி பணியாற்றும் படத் தயாரிப்பு நிறுவனத்தில் ஹீரோயின் வேஷத்திற்காக மேக்கப் டெஸ்ட்டுக்கு செல்கிறார். முடிவுக்குக் காத்திருக்கும் சூழலில் கடன்காரன் வீடு தேடி வந்து பிரச்சனை செய்ய.. பணப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டிய கட்டாயம் நயனுக்கு..
தோழியின் பட நிறுவனம், தாங்கள் தயாரித்த திகில் படத்தை தன்னந்தனியே தியேட்டரில் அமர்ந்து பார்ப்பவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு தருவதாகச் சொல்கிறது.  அந்தப் படத்தை தனியே அமர்ந்து பார்க்கும் தயாரிப்பாளர் ஜி.எம்.குமார் மாரடைப்பால் செத்துப் போக.. அவரிடத்தில் பணப் பாக்கியை பெற வரும் நயன் அதிர்ச்சியாகிறார்.
எப்படியாவது பணத்தை பெற்றாக வேண்டும் என்று துடிக்கும் நயன் அடுத்த பலியாக தான் அந்தப் படத்தைத் தனியே பார்க்க தயாராகிறார். தோழியின் எச்சரிக்கையையும் மீறி படத்தைப் பார்க்கிறார். இதன் முடிவு என்ன என்பதுதான் இந்த ‘மாயா’வின் கதை..!
படத்தின் துவக்கத்தில் சொல்லப்படும் கதையே இடைவேளைக்கு பின்பு டிவிஸ்ட்டாக வேறொரு கதையாக படத்தில் திணிக்கப்பட ‘அட’ என்று சொல்ல வைத்திருக்கிறார் இயக்குநர்.
காட்டுக்குள் ஒரு பங்களா. அங்கே சில மன நோயாளிகள்.. சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். மருந்துகள் கொடுத்து சோதிக்கப்படுகிறார்கள். ஒதில் ஒருவர் ‘மாயா’ என்றொரு பெண். அவருக்கு பெண் குழந்தை பிறந்ததும் அவரிடமிருந்து பிரிக்கப்படுகிறது. மிகுந்த துன்புறுத்தலால் ‘மாயா’ சாகிறாள். அவளுடன் அவள் அணிந்திருந்த விலை மதிப்பில்லாத வைர மோதிரமும் புதைக்கப்படுகிறது.
அந்த மோதிரம் பற்றிய ரகசியம் அறிந்து அதைக் கண்டுபிடிக்க அந்தக் காட்டுக்குள் போனவர்கள் யாரும் உயிருடன் திரும்பி வரவில்லை. அதைத் தேடி அலைகிறார்கள் சிலர். இந்த அலைச்சலுக்கு அவர்கள் ஒரு பத்திரிகையில் கதையாக எழுதி விளம்பரமும் தேடிக் கொள்கிறார்கள்.
இது கதையாகவும் வருகிறது. காட்சியாகவும் வருகிறது. இதில் நயன்தாரா என்னும் ‘மாயா’ வெளியில் நடிகையாகவும், கதையின் உள்ளே கதையின் நாயகியாகவும் உருமாறி வருகிறார்.
கொஞ்சம் பிசகினாலும் கதை புரியாது என்று சொல்வது போல சிக்கனமான வார்த்தைகளால் வசனங்களை வைத்து, பயமுறுத்தலான இயக்கத்தினாலும், மிக அமானுஷ்யமான காட்சிப்படுத்தலிலும், ஒளிப்பதிவிலும் மிரட்டியிருக்கிறார்கள்.
படம் முழுக்க ஒளிப்பதிவில் செய்திருக்கும் கலர் டோனும், பிளாக் அண்ட் ஒயிட் பேக்கிரவுண்ட் காட்சிகளும்.. நள்ளிரவு சுடுகாட்டு காட்சிகளும் பரபரப்பையும், திகிலையும் ஒரு சேர கொடுத்திருக்கின்றன.
படம் முழுக்க வியாபித்திருக்கும் திகில் போலவே நயன்தாராவும் நம்மை ஆட் கொள்கிறார். பேரழகி என்பதற்கு மிகச் சிறந்த அடையாளம் நம்ம நயன்ஸ்தான். குளோஸப் காட்சிகளில் சொக்க வைக்கிறார். திரும்பத் திரும்ப அவர் இருக்கும் ஷாட்டுகள் ஏன் வரக் கூடாது என்றும் யோசிக்க வைக்கிறார்.
“உங்களுடைய முதல் திருமண நாள். அன்றைக்கு உங்களுடைய கணவருக்கும் வேறொரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பது உங்களுக்குத் தெரிய வருகிறது. அன்றைக்குத்தான் நீங்கள் கர்ப்பம் தரித்திருப்பதும் தெரிய வருகிறது. இப்போது உங்களது ரியாக்ஷன் என்ன..?” என்கிற இயக்குநரின் கேள்வியும், அதற்கு நயன்ஸ் கொடுக்கும் ரியாக்ஷனும், ‘ஹேப்பி ஆன்னிவர்ஸரி’ என்று உச்சரிக்கும் தொனியும் ஒரு பரிதாபத்தையும், பச்சாபத்த்தையும் அவர் மேல் சுமத்துகிறது..!
அதிலிருந்து அவர் பிள்ளைக்காக படும்பாடும், கடன் தொல்லையும் நமக்கே வந்த்து போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. இதற்காக இயக்குநருக்கு ஒரு ஸ்பெஷல் ஷொட்டு..!
ஆரியின் கேரக்டரை உண்மை என்று நம்பிக் கொண்டேயிருப்பது போல காட்சிகளை நகர்த்தியிருப்பதும் செம டிவிஸ்ட்டு.. முதல் காட்சியில் பேய் போன்ற தோற்றத்தை உருவாக்குவதில் இருந்து கடைசியில் பேய்களிடமிருந்து தப்பிப்பதுவரையிலும் அவர் ஒரு கேரக்டராகவே வந்து போகிறார். கிளைமாக்ஸில் கொடுக்கும் ஒரு டிவிஸ்ட்டும் செம.. ஆரிக்கு நெடுஞ்சாலையின் தொடர்ச்சியாக இந்தப் படமும் முக்கியமான படமாக இருக்கும்.
லட்சுமிபிரியா, மைம் கோபி, ரேஷ்மி மேன்ன், ரோபோ சங்கர் என்று அனைவருமே அவரவர் கேரக்டர்களில் அளந்து நடித்திருக்கிறார்கள். வெறுமனே தனது உடல் மொழியால் மட்டுமே தியேட்டரில் சிரிப்பலையை ஏற்படுத்தியிருக்கிறார் ரோபோ சங்கர். அவருடைய முடிவிலும் ஒரு டிவிஸ்ட்டை வைத்திருப்பது நல்ல டிவிஸ்ட்.. இவர்களையும் தாண்டி அந்த ஆட்டோ டிரைவர் வேடத்தில் நடித்தவருக்கும் ஒரு மிகப் பெரிய பாராட்டு.
இயக்குநரின் திறமை, பின்னணி இசையின் திடுக் உணர்வு, எடிட்டரின் கச்சிதமான எடிட்டிங்.. இது எல்லாவற்றையும் தாண்டி நடிப்பவர்கள் காட்டும் மிரட்சிதான் திகில் படங்களுக்கு வெற்றியைக் கொடுக்கும். இதை அந்த ஆட்டோ டிரைவர் கேரக்டர் கச்சிதமாகச் செய்திருக்கிறார். பாராட்டுக்கள்..!
படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் ஷாட் பை ஷாட் மிரட்டலாகப் படம் பிடித்திருக்கும் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியனுக்கு ஒரு மிகப் பெரிய பாராட்டு.  துவக்கத்தில் ஆரி வரும் காட்சிகளுக்கு ஒரு கலர் டோன், அடுத்து நயன்தாரா வரும் காட்சிகளுக்கு வேறொரு கலர் டோன் என்று வித்தியாசத்தைக் கொடுத்தாலும் அதனை உணராத வண்ணம் செய்திருப்பதுதான் இவருடைய திறமையைக் காட்டுகிறது.
ரான் ஏதன் யோகனின் இசையில் பின்னணி இசை திகிலைக் கூட்டியிருக்கிறது. பட்டென்று பயமுறுத்தும் காட்சிகளுக்கு பொருத்தமான இசையும் இது போன்ற படங்களில் இடம் பெறும் பாடல்களுக்கென்றே இருக்க வேண்டிய இசையையும் கொடுத்து பேலன்ஸ் செய்திருக்கிறார்.  டி.எஸ்.சுரேஷின் கச்சிதமான எடிட்டிங் படத்திற்கு இன்னமும் மிகப் பெரிய பலத்தைக் கொடுத்திருக்கிறது.
வெறும் மேக்கப்பும், ஸ்லோமோஷன் ஆக்சன்களும், ஸ்டெடிகேம் ஷாட்டுகளும், அதீத காட்டுக் கத்தல் பின்னணி இசையுமே ஒரு பேய்ப் படத்திற்கான உணர்வினை தந்துவிடாது. அதையும் தாண்டி கதையும் நமக்கு ஒரு உணர்வினைத் தர வேண்டும். அதை இந்தப் படம் கொடுத்திருக்கிறது.
படத்திற்குத் தேவையில்லாமல் எந்த ஷாட்டும் இல்லை. தேவையில்லாமல் ஒரு வசனமும் இல்லை. எல்லாமே அளந்து, அளந்துதான் வைத்திருக்கிறார்கள். 2 மணி 20 நிமிட படத்தில் பயம் இல்லாத காட்சியே இல்லை என்பதே இந்தப் படத்தின் தனிச் சிறப்பு..
‘மாயா’ மிரட்டியிருக்கிறாள்.

0 comments: