ஜிப்பா ஜிமிக்கி - சினிமா விமர்சனம்

28-09-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஆணுக்குரிய ஜிப்பாவையும், பெண்ணுக்குரிய ஜிமிக்கையும் பெயர் பொருத்தத்திற்காக மட்டுமே தலைப்பாக வைத்திருக்கிறார்கள். மற்றபடி வழக்கமான ஆண், பெண் ஈகோத்தனமும், கொஞ்சம் செயற்கையான சினிமாத்தனமும் கலந்து எடுக்கப்பட்ட படம் இது.

சின்ன வயதில் இருந்தே சண்டை கோழிகளாக இருந்து வருகிறார்கள் ஹீரோ கிரிஷ்க் திவாகரும், ஹீரோயின் குஷ்பு பிரசாத்தும்.. பள்ளியில் படிக்கும்போதும், கல்லூரியில் படிக்கும்போது இது தொடர்ந்து இப்போது ஒரே கம்பெனியில் வேலை பார்க்குமிடத்திலும் இதே அக்கப்போர்தான்..
ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாமலேயே எதற்காக சண்டை போடுகிறோம் என்பது தெரியாமலேயே ஒருவரை மற்றவர் வெறுக்கிறார்கள். இவர்கள் இப்படியிருக்க.. இவர்களது அப்பாக்களோ நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள்.
இருவருக்கும் திருமணம் செய்து வைத்து இதுவரையில் நண்பர்களாக இருந்த நாம் சம்பந்திகளாகிவிடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் இந்தக் கல்யாணத்திற்கு ஹீரோயின் ஒப்புக் கொள்ள மறுக்கிறார். ஹீரோயின் அழைத்து வருவது எனது பொறுப்பு என்று அவரது பாட்டி சொல்ல அதை நம்பி நிச்சயத்தார்த்தத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள். கடைசிவரையிலும் ஹீரோயின் அசைந்து கொடுக்காமல் போக.. அவர் இல்லாமலேயே நிச்சயத்தார்த்தம் நடந்தேறுகிறது.
இடையில் இவர்களது கம்பெனியில் வேலை செய்யும் ஒருவரது திருமணம் கர்நாடக மாநிலம் கூர்க்கில் நடைபெறுவதால் இருவருமே அங்கே புறப்படுகிறார்கள். “அவங்க டூர் போயிட்டு வரட்டும். அப்புறமா நாம பேசி சரி பண்ணலாம்…” என்று பெற்றவர்கள் தங்களைச் சமாதானப்படுத்திக் கொள்கிறார்கள்..
இவர்கள் இருவரின் பயணம் தொடர்ந்ததா..? காதல் உருவானதா..? கல்யாணம் நடந்ததா என்பதெல்லாம் திரையில் மட்டுமே பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் திரையிடப்பட்ட பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவு பின்னியெடுத்திருந்தது. ‘இவ்வளவு கலர்புல்லாக எடுத்திருக்கிறாரே.. படத்தில் ஏதோ ஒன்று இருக்கும்’ என்று நினைத்து படம் பார்க்க உட்கார்ந்தால்.. இப்படியா இயக்குநரே ஏமாற்றுவீர்கள்..?
இசை வெளியீட்டு விழாவில் காட்டிய கலர்புல் பிரதி படத்தில் இல்லாததால் படம் முழுவதுமே டிஐ செய்யப்படாமல் ஒளிப்பதிவின் வீரியம் தெரியாமல் மங்கிப் போய் இருந்தது.. வன்மையான கண்டனங்கள்..
ஹீரோ கிரிஷ்கிற்கு இதுதான் முதல் படம் என்பது நன்றாகவே தெரிகிறது.. இவர் இன்னும் போக வேண்டிய உயரம் நிறையவே இருக்கிறது. நல்ல இயக்குநர்கள் கிடைத்து இன்னும் சிறப்பான கதை கிடைத்து நடிப்பில் தேர்ந்தால் நிச்சயம் ஜெயிக்கலாம்..
ஹீரோயின் சின்ன குஷ்புவாக வருவார் என்று அனைவரும் சொல்லிக் கொண்டிருக்க.. படத்தில் ஏமாற்றம்தான்.. குஷ்பு போல அழகாக இருப்பது முக்கியமல்ல.. கொஞ்சம் நடிக்கணும் தாயி.. அடுத்தத் தடவை நல்ல வேடம் கிடைத்து நடிப்புக்கு தீனி கொடுத்து நம்மை காப்பாற்றுவாராக..!
‘ஆடுகளம்’ நரேனும், ‘தாயுமானவன்’ ஆதியும்தான் இயக்குநரின் பெயரைக் காப்பாற்றியிருக்கிறார்கள். நல்ல நடிப்பு. இளவரசு மற்றும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரனின் கேரக்டர் ஸ்கெட்ச்சுகள் திடுக்கிட வைத்தன. நெகிழ வைத்தன.. இளவரசு தனது மனைவி பற்றி சொல்லும் கதை ஒரு சிறுகதைக்குச் சம்மானது.. அதேபோல் ‘நான் கடவுள்’ ராஜேந்திரனின் கதையும்தான்..! படத்தில் குறிப்பிட வேண்டிய விஷயங்கள் இந்த இரண்டும்தான்..!
ஒரு காட்சியில் அனாதை பையனை அணைத்து ஆறுதல் சொல்லும் ஹீரோவிடம் அந்தப் பையன் ‘என்னை இதுவரைக்கும் யாரும் இப்படி கட்டிப் பிடிச்சதில்லை’ என்று சொல்லி கண் கலங்கும் காட்சியில் இயக்குநர் பாராட்டைப் பெறுகிறார்.
அதேபோல் கர்நாடக, தமிழக காவிரி பிரச்சினையை வைத்து ஒரு காட்சியில் கர்நாடக மக்களுக்கு அறிவுரை சொல்லியிருக்கிறார் இயக்குநர். பாவா லட்சுமணனின் அந்த ‘மாமா’ வேலை படத்திற்கு எந்த உதவியையும் செய்யவில்லை. நீக்கியிருக்கலாம்..
ஏற்கெனவே சொன்னதுபோல ஒளிப்பதிவாளரின் உழைப்பு டிஐ செய்யாமல் விட்டதினால் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது.. இசையும், பாடல்களும் கேட்கும்படி இருக்கின்றன என்பது ஒரு ஆறுதல்..
பழைய கதைதான்.. புதிதாக சொல்ல வந்தால் இன்னும் புதிதாக சிந்தித்து வேறு திரைக்கதையில் சொல்லியிருக்க வேண்டும். சுவாரஸ்யமில்லாத திரைக்கதையினால் படம் பல இடங்களில் நொண்டியடிக்கிறது..
கதை, திரைக்கதை, இயக்கத்தில் இயக்குநர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் படத்தை குறிப்பிடத்தக்க படமாகக் கொண்டு வந்திருக்கலாம்..!
இயக்குநர் அடுத்த முறை ஜெயிக்க வாழ்த்துகிறோம்..!

0 comments: