உனக்கென்ன வேணும் சொல்லு - சினிமா விமர்சனம்

25-09-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வாரம் ஒரு பேய்ப் படம் வெளியாகி தமிழ்ச் சினிமா ரசிகர்களுக்கு அலுப்பு தட்டும் நிலையில் இருந்தாலும், படத்திற்கு படம் விதம்விதமான பேய்கள் காட்டும் சுவாரஸ்யங்களும் குறைவில்லாமல்தான் இருக்கின்றன.
இந்தப் படமும் அந்த வரிசையில் ஒன்று. மூன்றுவிதமாக அணுகக்கூடிய வகையிலான கதை. ஆனால் கச்சிதமாக பொருத்தியிருக்கிறார்கள். இதுவரையிலும் இல்லாததுபோல் புதுமையாக.. கவனிப்பாரின்று இறந்து போன ஒரு குழந்தை தனது கொலைக்கான நியாயத்தை தன்னைப் பெற்றவர்களிடம் கேட்கிறது.. மிக நெகிழ்ச்சியான இந்த ஒரு வரிக் கதையை திகிலுடனும், பயத்துடனும் கொடுத்திருக்கிறார்கள்.

குணாளன் மோகனும், ஜாக்லினும் சிங்கப்பூரில் வாழ்ந்து கொண்டிருக்கும் தம்பதிகள். இவர்களது எட்டு வயது மகன் ஒரு இனம் புரியாத நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறான். அவனது சிகிச்சைக்காக சென்னை வர வேண்டிய கட்டாயம். ஜாக்குலினுக்கு சென்னைக்கு வருவதற்கு தயக்கமாக இருக்கிறது.. ஆனால் வந்தே தீர வேண்டிய கட்டாயம் வரவே.. வந்துவிடுகிறார்கள்.
ஜாக்குலினின் குடும்ப கெஸ்ட் ஹவுஸில் தங்குகிறார்கள். அந்த வீட்டில் இருக்கும் ஒரு அறையில் அமானுஷ்யமாக இருக்கும் ஒரு சக்தி அவர்களை விரட்டுகிறது.. ஏதோ ஒன்று இந்த வீட்டில் இருப்பதை உணர்கிறார்கள் இருவரும். இந்தப் பிரச்சினையைப் போக்க பேயோட்டியை தேடி வருகிறார்கள்.
பேயோட்டி நிலைமையைப் புரிந்து கொள்கிறார். பேயின் சக்தியையும் தெரிந்து கொள்கிறார். ஏதோ ஒரு விஷயம் இந்த வீட்டில் நடந்துள்ளது என்பதை யூகிக்க.. ஜாக்குலினே முன் வந்து தனது வாழ்க்கையில் மறைவாக உள்ள ஒரு கதையைச் சொல்கிறாள்.
குணாளனுடனான கல்யாணத்துக்கு முன்பாகவே தீபக்குடன் உறவு ஏற்பட்டு திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் தரித்து குழந்தையையும் பெற்றெடுத்திருக்கிறாள். ஆனால் அந்தக் குழந்தையை வளர்க்க விருப்பமில்லாமல் தனது தோழி ஸ்வேதா மூலமாக அனாதை ஆசிரமத்தில் விட்டுவிடுகிறாள். ஆனால் அந்தக் குழந்தை இரண்டே நாட்களில்  குழந்தையில்லாத ஏக்கத்தினால் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் அனிதாவின் கைகளுக்கு போய் பரிதாபமாக இரண்டே நாட்களில் இறந்து போகிறது.
இதற்கிடையில் அதே தீபக் இதே அனிதாவுடன் எதிர்பாராமல் பேசிப் பழகி சந்தித்து வருகிறான். அனிதா திடீரென்று தாக்குதலுக்குள்ளாகி மருத்துவமனையில் இருக்க அங்கேதான் அனிதாவின் சுயரூபம் தீபக்கிற்கு தெரிகிறது.
பேயோட்டி மைம் கோபி, ஜாக்குலினிடம் தீபக்கை தேடும்படி சொல்ல.. அவளும் தேடிப் பிடிக்கிறாள். இப்போது பெற்றோர்களை வைத்து குழந்தையின் ஆன்மாவை சாந்தப்படுத்தி அந்த வீட்டில் இருந்து ஆவியை அப்புறப்படுத்த மைம் கோபி திட்டமிடுகிறார்.. இது முடிந்ததா இல்லையா என்பதுதான் இந்தத் திகிலூட்டும் பின்னணி கொண்ட கதை..!
படத்தின் முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் படத்தில் ஒருவித சஸ்பென்ஸும், திகிலும் கலந்தே இருக்கிறது. பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படம் முழுக்கவே இணைந்து பணியாற்றி ரசிகர்களை பயமுறுத்தியிருக்கின்றன.
ஜாக்குலினாக நடித்தவர்தான் படத்தின் பெரும் பகுதியை ஆக்ரமித்திருக்கிறார். தீபக்கிடம் அவரது வேலை பறி போன பின்பு “உனக்கு பொறுப்பே இல்லையா?” என்று கண்டித்து பொறுமித் தீர்க்கும் காட்சியில் சபாஷ் போட வைக்கிறார். மென்மையான பெண்மையை சீண்டிப் பார்த்தால் எது நடக்குமோ, அதை அப்படியே கண் முன்னால் கொண்டு வந்திருக்கிறார்.
தீபக்கிடம் சென்று தனது பிரச்சினைக்காக ஒத்துழைப்பு கொடுக்கும்படி கேட்குமிடத்தில் சட்டென்று சுண்டிவிடப்படும தனது தன்மானத்திற்காக கோபப்பட்டு பேசும் வசனமும், நடிப்பும் அவரையொரு பண்பட்ட நடிகை என்று சொல்ல வைத்திருக்கிறது. வெல்டன் மேடம்..!
மென்மையான நடிப்போடு தனது மகனுக்காக மனைவியின் முன்னாள் காதல் வாழ்க்கையைக்கூட மிக எளிதாக எடுத்துக் கொண்டு மருத்துவமனையில் மகனுக்காக அல்லல்படும் குணாளன் மோகன் பரிதாபப்பட வைத்திருக்கிறார்.
மைம் கோபிதான் பாவம்.. படத்திற்கு படம் ஆவிகளுடன் மல்லுக்கட்டி தனது உயிரை இழந்து கொண்டிருக்கிறார். இதில் கெஸ்ட் ஹவுஸிற்குள் முதலில் நுழைந்துவுடன் ஆவியை கண்டறியும் காட்சியிலும் ஆவி, தான் அந்த வீட்டில் இருப்பதை நிரூபிக்கும் காட்சியிலும் கேமிராவும், பின்னணி இசையும், மைம் கோபியின் நடிப்பும் படத்தை அந்த நிமிடத்திலேயே தூக்கி நிறுத்திவிட்டன. இதன் பின்பு கவனித்ததெல்லாம் அடுத்தது என்ன என்கிற ஆர்வத்துடன்தான்..!
மைம் கோபியின் வசன உச்சரிப்பும், அவருக்கான குளோஸப் காட்சிகளும் வித்தியாசமாக இருக்கவே பெரிதும் கவரப்படுகிறார். பெரும்பாலும் இந்துக்களாக இருக்கும் பேயோட்டிகள் அதிகம் உலா வந்து கொண்டிருக்க.. இந்தப் படத்தில் கிறித்துவராகக் காட்டப்படுகிறார் பேயோட்டி. கூடவே ஆவிகளை பாதிரிமார்களும் நம்புகிறார்கள் என்பதை அழுத்தமாகச் சித்தரித்திருக்கிறார் இயக்குநர். அவருடைய மரணத்திற்கு அச்சாரமாக பாதிரியாரின் வசனத்தை ரிப்பீட் செய்திருப்பது சாலப் பொருத்தம்.
தீபக் பரமேஷின் கேரக்டர் ஸ்கெட்ச் கொஞ்சம் குழப்பத்தைக் கொடுத்தாலும்.. இறுதி காட்சியில் அத்தனை பேரின் மனதையும் தொட்டுவிட்டார். அலட்சியமாக “இப்போ புள்ளை பெத்துக்கலாம்…” என்கிறார். அதே அலட்சியத்துடன் டெலிவரி டைமில் மனைவியைவிட்டுவிட்டு “சிங்கப்பூர் போய்விட்டு வருகிறேன்…” என்கிறார். சிங்கப்பூரில் இருந்து டாய்ஸ்களையெல்லாம் வாங்கி வந்த நிலையில் “எங்க என் புள்ளை..? எங்க என் மகள்..?” என்கிறார்.. இதில் இவர் ஐடி ஊழியர் என்கிறார்கள். நம்பத்தான் முடியவில்லை.
இதே தீபக்குதான் கிராஸ்டாக்கில் கிடைக்கும் ஒரு பெண்ணின் அறிமுகத்தை கப்பென்று பிடித்துக் கொண்டு அதை வைத்தே பெண்ணை மடக்க நினைக்கிறார். ஆக இவரது கேரக்டரே ஸ்பாயிலாக இருக்கும் நிலையில் இவரது மகள் பாசம் மட்டுமே இவரை நாம் விரும்புவதற்குக் காரணமாக இருக்கிறது..!
குழந்தையில்லாத ஏக்கத்தில் மனநிலை பாதிப்பு நிலையில் இருக்கும அனிதாவின் நடிப்பும் நம்ப முடியாத அளவுக்குத்தான் இருக்கிறது. அனிதா, ஜாக்குலினுக்குள் நடக்கும் போரும், குழந்தையின் கடைசி அந்திம எரிப்பும் ஒரு மரணத்தைத் தொட்டுக் காட்டுகின்றன.
கவிதை எழுதுவதற்குச் சமமானது குழந்தையிடம் சிரிப்பை வரவழைப்பது என்பார்கள். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ்தான் இதற்கு பொருத்தமான காட்சி. அற்புதமான கற்பனை.. இயக்குநரை எத்தனை பாராட்டினாலும் தகும்.
ஹிப்னோதெரபி மூலமாக தனது மகளுடன் உரையாடும் தீபக்கின் வசனங்கள் அதுவரையில் திகிலான மனநிலையில் இருக்கும் ரசிகர்களின் மனதை கொஞ்சம் கரைத்து இளசாக்குகிறது. எந்தவொரு கதை புத்தகத்திலும் இந்த பாசப் போராட்டத்தைப் வாசித்திருக்கவே முடியாது. வெளியில் மருத்துவரின் எச்சரிக்கையையும் மீறி தீபக், மெல்ல மெல்ல தனது மகளுக்கு அடிமையாகி கடைசியில் அவளுடன் கை கோர்த்து வெளியேற.. ஒரு பாச காவியமே நடந்தேறுகிறது.. இந்த கிளைமாக்ஸுக்காகவே இயக்குநரை வெகுவாகப் பாராட்ட வேண்டும்..!
டெய்ஸி என்கிற அந்த சின்னப் பெண்ணின் முகமும், பேச்சும், நடிப்பும், கேமிராவின் பார்வையும், டிஐ செய்திருக்கும் கலரும், கரெக்ஷனும், இயக்கமும் சேர்ந்து அந்தக் காட்சிகளை சொக்க வைத்திருக்கின்றன. 
மனீஷ் மூர்த்தியின் ஒளிப்பதிவில் படம் முழுவதுமே திகிலைக் கொடுத்திருக்கிறது. தானும் ஒரு கேரக்டராகவே வந்திருக்கிறார். பின்னணி இசையும் இது போலத்தான்.. சிவ சரவணன் பாடல் காட்சிகளில் மென்மையைக் கையாண்டு பின்னணி இசையில் இறங்கி அடித்திருக்கிறார். சட்டென்று பேயின் ஆட்டங்கள் தோன்றும் காட்சிகளிலெல்லாம் பின்னணி இசைதான் நம்மை அதிகம் பயமுறுத்துகிறது.
அமெரிக்காவில் சினிமா கற்றுக் கொண்டு வந்திருக்கும் இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கத்திற்கு டெக்னாலஜியை எந்த அளவிற்குப் பயன்படுத்தலாம்.. எந்தெந்த கதையில் பயன்படுத்தலாம் என்பதெல்லாம் தெள்ளத் தெளிவாகவே தெரிந்துதான் இருக்கிறது.. அதை கச்சிதமாகவே பயன்படுத்தியிருக்கிறார்.
கருவில் இருக்கும் குழந்தையை கொல்வதும்.. குழந்தைகளை குழந்தைகளாக இருக்கும்போதே கொல்வதும் மிக கொடூரமான குற்றம் என்பதை சமூகம் இன்னமும் அறிந்தபாடில்லை.. ஆனால் சூழ்நிலை மக்களை திசை திருப்புகிறது. இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்கிறார்கள் அலட்சியமாக..!
ஆனால் சாகடிக்கப்படும் குழந்தைகளுக்கும் ஒரு மனது இருக்கிறது என்பதையும், அவர்கள் தங்களது பெற்றோரிடம் கேட்கவும், பேசவும் நிறைய கேள்விகள் இருக்கின்றன.. விஷயங்கள் இருக்கின்றன என்பதையும் மனோதத்துவ ரீதியாக இந்தப் படத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
“என்னய்யா இதுவும் பேய்ப் படமா..?” என்றெண்ணி சலிப்போடு பேசுவர்கள்கூட இந்தப் பட்த்தைப் பார்த்தால் படம் ஆவிகளைப் பற்றியதல்ல.. குழந்தைகளின் உரிமைகள் பற்றியது என்பதைப் புரிந்து கொள்வார்கள்..!
தரமான படம்.. அவசியம் பாருங்கள்..!

0 comments: