29-09-2015
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
மூன்று நண்பர்களின் முதல் எழுத்தை சேர்த்தால் விசிடி என்று வரும். இதுதான் படத்தின் தலைப்புக்கு பொருத்தம். மூன்று பேருமே திருடர்கள் என்பதும் ஒரு காரணம். படத்தின் கதையும் ஹாலிவுட்டில் இருந்து சுட்டது என்பதால் இன்னும் பொருத்தமாகிறது..!
சென்னையில் வேலை வெட்டியில்லாமல், பணம் இரட்டிப்பு, கடன் கொடுக்க முன் பணம், மேலும் சதுரங்க வேட்டை பாணியில் சில வேலைகளையெல்லாம் செய்து பிழைப்பை நடத்தி வருகிறார் ஹீரோ பிரபா. இவரிடம் ஒரு பெரிய அஸைன்மெண்ட் ஒப்படைக்கப்படுகிறது.
தூத்துக்குடியில் இருந்து போதைப் பொருட்கள் அடங்கிய வேனை சென்னைக்கு கொண்டு வர வேண்டும் என்பதே அந்த வேலை. ஒத்துக் கொள்ளும் பிரபா, இதற்குத் தனக்குத் துணையாக தனது முன்னாள் கூட்டாளிகளான காதல் சுகுமார், மற்றும் மனோவையும் அழைத்துக் கொள்கிறார்.
மேலும் மனோவின் ஏற்பாட்டின்படி சின்னத்திரை நடிகையான தேவதர்ஷினியையும், ரீத்துவையும் குறும்பட படப்பிடிப்பு என்று பொய் சொல்லி தூத்துக்குடிக்கு அழைத்து வருகின்றனர். அங்கேயிருந்து சென்னைக்கு கிளம்பும்வரையில் நன்றாக இருக்கும் நேரம், கிளம்பியவுடன் காற்று வேகத்தில் சுழன்றடிக்க.. குழுவினருக்கு பலவித பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இதையெல்லாம் சமாளித்து சென்னை வந்தார்களா? இல்லையா? என்பதுதான் மிச்சம் மீதிக் கதை..!
‘We Are The Millers’ என்கிற பெயரில் 2013-ல் வெளிவந்த ஹாலிவுட் படத்தின் வாடை இந்தப் படத்தில் முதலில் இருந்து கடைசிவரையிலும் வீசுகிறது.
படத்தின் துவக்கத்தில் சினிமாத் துறையினருக்காக ஒரு நினைவஞ்சலி பாடல் ஒலிக்கிறது. பின்பு முன் கதைச் சுருக்கத்தை நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி தனது கணீர் குரலில் பேசியிருக்கிறார்.
படத்தை இயக்கியிருக்கும் காதல் சுகுமார் நல்ல நடிகர். காதல் படத்தில் பரத்தின் நண்பராக அறிமுகமானவர். அதற்குப் பின்னர் 160 படங்களில் நடித்து முடித்துவிட்டார். இயக்கம் செய்ய ஆசைப்பட்டு இப்படியொரு படத்தை இயக்கியிருக்கிறார்.
முதல் படம்.. தனது இயக்கம் என்பதால் காமெடி இல்லையேல் வொர்க் ஆகாது என்பதை உணர்ந்து அதற்கேற்றாற்போல் திரைக்கதை அமைத்திருக்கிறார். ஆனால் அழுத்தமில்லாத காட்சிகளாலும், திறமையில்லாத இயக்கத்தினாலும் படம் பல இடங்களில் டிவி சீரியல் போல காட்சியளிக்கிறது.
தேவதர்ஷினி மட்டும் இல்லையெனில் படம் என்னாகியிருக்குமோ என்ற கவலையும் ஏற்படுகிறது. அப்படியொரு நடிப்பை கொட்டியிருக்கிறார் தேவதர்ஷினி. இன்னொரு பக்கம் விச்சு அண்ட் கோ-வின் காமெடி காமெடியாகவே இருந்தாலும், சில இடங்களில் ரசிக்க முடிந்த்து..!
செந்திலின் கேரக்டர் சுத்த வேஸ்ட். அந்தக் காட்சிகளெல்லாம் நம்மை சோதனைக்குள்ளாக்குகின்றன. படத்திற்காகவே ஹீரோயின் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். 2 டூயட்டுகளில் பாடிவிட்டு அக்கடா என்று கடைசியில் துப்பாக்கியுடன் வந்து மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களின் கிளைமாக்ஸை நினைவுபடுத்துகிறார்.
இயக்கம் ஏனோ தானோவென்று இருந்தாலும், நடிகர்களின் சொந்த நடிப்புத் திறமையினால் கொஞ்சம், கொஞ்சம் சமாளித்து கடைசிவரையிலும் படத்தை பார்க்க வைத்திருப்பதே இந்தப் படத்தின் இயக்குநரின் சாமர்த்தியம்..!
சின்ன பட்ஜெட்.. புதிய இயக்குநர், புதிய தொழில் நுட்பக் கலைஞர்கள்.. புதிய தயாரிப்பாளர்.. தங்களால் முடிந்ததை படமாக உருவாக்கியிருக்கிறார்கள். இதனாலேயே படம் நன்றாக இருக்கிறது.. சூப்பர். அட்டகாசம்.. என்றெல்லாம் வாழ்த்திவிட முடியாது.. இருந்தாலும் இன்னும் திறமையை வளர்த்துக் கொண்டு படமெடுங்கள் என்று வாழ்த்தினால் ஏற்றம் பெறுவார்கள் என்பதால் அடுத்தப் படத்தை வெற்றிப் படமாக்க வாழ்த்துகிறோம்..!
|
Tweet |
0 comments:
Post a Comment