21-09-2015
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இப்படியொரு படத்தைத் தயாரிக்க துணிந்த தயாரிப்பாளருக்கு நமது வந்தனங்கள். எந்த ஹீரோவும் செய்யத் துணியாத ஒரு கேரக்டரை செய்து காட்டி இப்போதும் தான்தான் நாயகன் என்பதை நிரூபித்திருக்கிறார் நகைச்சுவை அரசர் கவுண்டமணி. அவருக்கும் நமது சல்யூட்..
மூணு டூயட்டுகள்.. ஒரு சோகப் பாட்டு, ஹீரோவின் பில்டப்புக்கென்று ஒரு பாட்டு.. ஒரு குத்துப்பாட்டு. ஒரு இடைவேளை.. சில காமெடி காட்சிகள் என்று எப்போதும்போல எழுதப்படும் கதை, திரைக்கதையை முற்றிலுமாக சிதைத்து.. இந்த மண்ணில்.. சினிமா என்னும் மீடியத்தின் மூலமாக இப்படியும் செய்ய முடியும்.. இதையும் சொல்ல முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆரோக்கியதாஸ். இவர் எல்லா ஆரோக்கியத்தையும் பெற்று பெறுவாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.
உலகம் முழுவதிலும் இரண்டாம் தரம் மற்றும் மூன்றாம் தர நாடுகளில் கட்டவிழித்துவிடப்பட்டிருக்கும் பொருளாதார சீர்த்திருத்தங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது விவசாயத் தொழில்தான். கனரகத் தொழில், ஐ.டி, விஞ்ஞானம், மருத்துவம், சேவை என்று அனைத்து துறைகளுமே நான்கு படிகள் தாண்டி மேலேறிக் கொண்டிருக்க.. விவசாயத் துறை மட்டுமே சீரழிந்து கொண்டிருக்கிறது. காரணம் அரசுகளின் பாரமுகமும், அவைகள் விவசாயப் பெருங்குடி மக்களின் மீது திணித்திருக்கும் பொருளாதார சுமைகளும்தான்..!
ஒரு ஐடி நிறுவனம் அமைக்க நிலத்தையும், கடன்களையும் தாராளமாக வாரி வழங்கும் இந்த அரசுகள்தான் ஒரு விவசாயியின் பயிர்க் கடனுக்கு வட்டியைக் குறைக்க மறைக்கிறது. தானியங்கள் வாங்கவோ, உரம் பெறவோ கடன் கொடுக்கவே மறுக்கின்றன. ஆனால் நிலத்தை விவசாயத்திலிருந்து நீக்குவதாக இருந்தால் இரண்டே நாட்களில் செய்து முடிக்கிறது அரசு. இதுதான் விவசாயத்தின் மீது இந்த அரசுகள் கொண்ட அக்கறை..
ஒரு பக்கம் நிலத்தடி நீர் மட்டும் குறைந்து கொண்டே போவது.. இன்னொரு பக்கம் சாயக் கழிவுகளால் நதி நீர் மாசுபட்டு மூணு போகம் விளைந்த வயல்காடுகள் இன்றைக்கு ஒரு போகத்திற்குக்கூட தண்ணீர் இல்லாமல் தவிக்கும் நிலைமை. ஆறுகள் தேசிய மயமாக்கப்படாமல் அந்தந்த மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அரசியல் சூழ்ச்சிகளால் அங்கும் தண்ணீர் தட்டுப்பாடு. வாகனங்களின் மாசு புகையினால் ஓசோன் படலம் கெட்டுப் போய் பருவ மழையே பொய்த்துப் போகும் நிலைமை. மழை நீர் இல்லாமல் நீர் ஆதாரங்கள் வற்றி வரண்டு போய் இருக்கும் கொடுமை.
இந்த லட்சணத்திலும் தங்களுக்கு இருக்கும் நிலத்தில் தங்களுக்குத் தெரிந்த விவசாயத்தைச் செய்யத் துணியும் விவசாயிகளை அடித்துப் புரட்டியெடுக்கும் அரசியல் அடாவடிகள்.. இடுப்பில் கோவணமும் வியவர்வையைத் துடைக்க துண்டு மட்டுமே அணிந்திருக்கும் அந்த ஏழை விவசாயி எத்தனை துயரத்தைத்தான் தாங்குவான்..?
அவர்களின் ஒரு துயரக் கதையை துயரமாகவே சொன்னால் தியேட்டரில் மக்கள் ரசிக்க மாட்டார்கள் என்பதால் யார் சொன்னால் நடக்குமோ.. கேட்பார்களோ.. அவரையே பேசி நடிக்க வைத்து வெற்றி காண வைத்திருக்கிறார்கள்.
தஞ்சை மாவட்டம் திருகோணம் கிராமத்தில் சுற்றிலும் வயல்காடு. அனைவருமே விவசாயிகள். நெல் விளைகிறதோ இல்லையோ.. தெரிந்த தொழிலை செய்வோம் என்றெண்ணி விவசாயத் தொழிலை இன்னமும் கைவிடாத மக்கள்..
அந்த ஊரின் அருகிலேயே புதிய புகைவண்டி நிலையமும், பேருந்து நிலையமும், தொழில் பூங்காவும் வரப் போவதை அறிகிறார் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ஜெயபாலனின் மகனான திருமுருகன். அத்திட்டம் வந்துவிட்டால் அருகிலிருக்கும் நிலங்களின் விலைகளெல்லாம் உயர்ந்துவிடும். அதற்குள்ளாக நாமளே அதை விலைக்கு வாங்கி அதன் பின்பு வேறொருவருக்கு நல்ல விலைக்கு விற்று காசு பார்க்கலாம் என்கிற உயரிய எண்ணத்தில் விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு கேட்கிறார்கள்.
அதே ஊரில் இருக்கும் சுவுரி என்னும் விவரமான விவசாயி இதை மறுத்து சக விவசாய மக்களுக்கு அறிவுரை சொல்கிறார். ஆனால் விதி வேறாக இருக்க.. விவசாயிகள் தங்களது குடும்பச் சூழலுக்காக நிலத்தினை விற்கும் பவர் ஆஃப் அட்டர்னியை திருமுருகன் கோஷ்டிக்கு விற்பனை செய்கிறார்கள்.
குறைந்த அளவு பணத்தைக் கொடுத்துவிட்டு மீதியை தர முடியாது என்று சொல்லி அவர்களை ஏமாற்றுகிறார்கள். இதையறிந்து சவுரி தன் மக்களுக்காக களத்தில் இறங்கி போராடுகிறார். நேர்மையாகச் சென்றால் இவர்களை வெல்ல முடியாது என்பதால் தானும் புதிய திரைக்கதையோடு களத்தில் குதிக்கிறார். அவை இரண்டுமே படத்திற்கு சுவாரஸ்யம் கூட்டியிருக்கின்றன.
திடீரென்று சட்டமன்ற உறுப்பினரான ஜெயபாலன் இறந்துவிட்டதால் வரவிருக்கும் இடைத்தேர்தலில் மக்களின் வாக்குகளை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து நிலத்தை மீட்கலாம் என்று ஐடியா போடுகிறார் சவுரி. ஆனால் இது நடக்காமல் போகிறது.
அடுத்து அந்த ஊர் மக்களுக்காக தனது நிலத்தினை விற்பனைக்குத் தயார் என்று சொல்லி அங்கு ‘ஆறடி தாய் மடித் திட்டம்’ என்கிற பெயரில் சுடுகாட்டனை கட்டி விற்பனை செய்கிறார். ஏற்கெனவே விற்பனைக்குத் தயாராக இருக்கும் மனைகளுக்கு நடுவில் சுடுகாடும் இருப்பதால் நிலத்தை வாங்கி விற்பனை செய்யும் கும்பலுக்கு இது பெரும் இடைஞ்சலாகிறது. இருந்தும் மேற்கொண்டும் சிக்கல் தீராமல் இருக்க.. வேறொரு வழியைக் கையாள்கிறார் சவுரி.
அத்தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தலை நடக்காமல் செய்ய ஒரு திட்டம் தீட்டுகிறார். ஊர் மக்கள் அனைவருமே தேர்தலில் வேட்பாளர்களாக நின்று ‘நமக்கு நாமே திட்டத்தின் கீழ் எங்களுக்கு நாங்களே ஓட்டுப் போட்டுக் கொள்கிறோம்’ என்கிறார்கள். அரசும், அதிகார வர்க்கமும் ஸ்தம்பிக்கிறது. அதிர்ச்சியாகிறது..
மீடியாக்கள் மூலமாக உண்மை தெரிந்து இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் இந்த ‘49-ஓ’-வின் மீதிக் கதை..!
‘40-ஓ’ என்பது தேர்தல் கமிஷனின் சட்டத் திருத்தத்தின் ஒரு பகுதி. ஒரு தேர்தலில் யாருக்குமே வாக்களிக்க விருப்பமில்லை என்று சொல்லி தனியே பதிவு செய்வதற்குப் பெயர்தான் ‘49-ஓ’. ஆனால் இந்த சட்டப் பிரிவினால் ஜனநாயகத்திற்கு எந்த பலனும் இல்லை என்பதை அழுத்தம்திருத்தமாகச் சொல்கிறது இந்தப் படம்.
அரசாளும் அரசுகள் வழி தவறிப் போனால் அவர்களின் கவனத்தை ஈர்க்கவும், அவர்களைத் தண்டிக்கவும் ஜனநாயக வழியிலேயே இது போன்று அனைத்து மக்களுமே முன் வந்து தேர்தலில் போட்டியிடத் துவங்கினால் என்ன நடக்கும் என்பதை கொஞ்சம் யோசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். இதுவும் நல்ல யோசனைதான்.
முகத்தில் வயதின் தாக்கம் தெரிந்தாலும், வசன உச்சரிப்பிலும், நடிப்பிலும், எகத்தாளத்திலும் இன்னமும் பழைய கவுண்டமணியாகத்தான் தெரிகிறார். படத்தின் மிகப் பெரிய பலமே வசனங்கள்தான். விவசாயத்தை ஊக்கப்படுத்தும் வசனங்களும், அரசியல் சாட்டையடி வசனங்களும் எக்கச்சக்கம். ‘எவன் நல்லவன்னு மக்களுக்கும் தெரியலை.. நல்ல அரசியல்வாதியா எப்படி நடந்துக்கணும்னு அவனுக்கும் தெரியலை’ என்று சாட ஆரம்பித்து, கடைசிவரையிலும் ஒருவர்விடாமல் அனைவரையும் வெளுத்துக் கட்டியிருக்கிறார் கவுண்டர்.
கவுண்டரை வைத்து கதை சொன்னால் இப்படித்தான் செய்ய முடியும் என்பதாகவே அந்த ‘ஆறடி தாய் மடித் திட்ட’த்தை திரைக்கதையாக்கியிருக்கிறார்கள். அதுவே சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. அதற்கு கவுண்டர் கொடுக்கிற ஒவ்வொரு பஞ்ச்சும் சிரிக்க வைக்கிறது. இப்படி குடியிருப்புப் பகுதிகளுக்குள் சுடுகாடுகளை அமைத்தாவது விவசாய நிலங்களை காப்பாற்ற வேண்டும் என்கிறார் இயக்குநர். குட் ஐடியா.
இன்றைய இளம் நடிகர்கள் யார் தமிழை அழகாக உச்சரிக்கிறார்கள்..? பாடல் காட்சிகளில் உதட்டை அசைக்கிறார்கள் அவ்வளவுதான். ஆனால் இந்தப் படத்தில் கவுண்டரோ பாடல் காட்சிகளில் ஒரு வரிகூட மிஸ் ஆகாமல் இருக்க நினைத்து அழகாக பாடலுடன் கூடவே பாடியிருக்கிறார். நடிப்பை பணம் சம்பாதிப்பதற்காக இல்லாமல், தொழிலாக இல்லாமல், அதையொரு விருப்பமாக செய்பவர்களால்தான் இது முடியும்..!
நான்கு பாடல்களுமே கேட்கக் கூடியவையாகத்தான் இருக்கின்றன. அதிலும் ‘அம்மா போல’ பாடலும், நடனமும் அழகு. கவுண்டர் இத்தனை வருட நடிப்பு சேவையில் அதிகமாக நடனமாடியிருப்பது இந்தப் படத்திற்காகத்தான் இருக்கும். கலக்கிட்டீங்க கவுண்டரே..!
படத்தில் ஒரு சில குறைகள் இருந்தாலும், படத்தின் ஒட்டு மொத்தக் கருவை மனதில் கொண்டு அவைகளையெல்லாம் விட்டுவிடலாம். அதுவும் அதிகம் உறுத்தாத டெக்னிக்கல் தவறுகள்தான். அடுத்தப் படத்தில் ஆரோக்கியதாஸ் அதையெல்லாம் சுத்தம் செய்துவிடுவார் என்று நம்புகிறோம்..!
ஒளிப்பதிவு, எடிட்டிங் என்று எந்த டெக்னாலஜிக்கும் அதிகம் வேலை கொடுக்காமல் கொடுத்த பட்ஜெட்டிற்குள் கச்சிதமான, பெயர் சொல்லும் படமாக தயாரித்திருக்கிறார் தயாரிப்பாளர் டாக்டர் சிவபாலன்.
“யாருக்குமே இல்லாத அக்கறை உங்களுக்கெதுக்கு டாக்டர்…?” என்று சிலர் சொல்லும் அளவுக்கு இந்தப் படம் ஒரு குற்றவுணர்வை பல இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கம் நிச்சயம் ஏற்படுத்தியிருக்கும். இதையே இந்தப் படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக கருதலாம்..!
இந்தப் படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு விவசாயியும் தனது விளைநிலத்தை விற்பனை செய்யும் தருணத்தில் ஒரு நிமிடமாவது யோசித்துப் பார்த்தால் அதுவே கவுண்டருக்குக் கிடைத்த வெற்றியாகவும் இருக்கும்..!
கவுண்டரின் இது போன்ற அடுத்தடுத்த அதிரடிகளை எதிர்கொள்ள தமிழ்த் திரையுலகம் காத்துக் கொண்டிருக்கிறது..!
49-ஓ – அவசியம் பார்த்தே தீர வேண்டிய திரைப்படம். மிஸ் பண்ணிராதீங்க..!
|
Tweet |
0 comments:
Post a Comment