யட்சன் சினிமா விமர்சனம்

13-09-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஆனந்தவிகடனில் எழுத்தாள இரட்டையர்களான சுபா எழுதிய ‘யட்சன்’ கதையையே கொஞ்சம் டிங்கரிங் வேலை செய்து திரைப்படமாக்கியிருக்கிறார்கள்.
வேறு வேறான நோக்கத்துடன் பயணிக்கும் இருவர் எதிர்பாராமல் சந்திக்கும் நேரத்தில் நடக்கும் அசம்பாவிததால் தொடரும் திரைக்கதையின் தொகுப்பு என்று இந்தப் படத்தைச் சுருக்கமாக சொல்ல்லாம்.

பரம்பரை பரம்பரையாக பழனியில் பஞ்சாமிர்த தொழிலைச் செய்து வரும் குடும்பத்தில் பிறந்த கிருஷ்ணாவுக்கு கோடம்பாக்கத்தில் குடியேறி இன்றைய சூப்பர் ஸ்டார்களையெல்லாம் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்கிற வெறி. இவருக்கு ஒரு காதலி. காதலனைவிடவும் காதலி புத்திசாலியாகவும், அனுபவசாலியாகவும் இருக்கிறாள்.  தன் வீட்டில் தனக்காக வைத்திருக்கும் நகைகள், பணம் எல்லாவற்றையும் காதலனிடம் கொடுத்து சென்னைக்கு பஸ் ஏற்றி அனுப்புகிறாள்.
இன்னொரு பக்கம் தூத்துக்குடியில் சின்னச் சின்ன அடிதடி செய்யும் சின்னா என்னும் ரவுடியான ஆர்யா.. தற்செயலாக ஒரு கொலையைச் செய்துவிட்டு அந்த குரூப்பிடமிருந்து தப்பிக்க நினைத்து சென்னைக்கு வண்டியேறியிருக்கிறார். சென்னையைவிட்டும் வேறு ஏதாவது ஒரு நாட்டுக்கு போய்விடலாம் என்று நினைக்கிறார். அதற்கு 2 லட்சம் பணம் வேணுமே என்கிற தவிப்பில் இருக்கிறார்.
பிறவியிலேயே அனாதை இல்லத்தில் வளர்ந்து வரும் இன்னொரு ஹீரோயினான தீபா சந்நதி, திடீரென்று மின்னல் தாக்கி தூக்கி வீசப்படுகிறாள். உயிர் பிழைத்தாலும் அன்றிலிருந்து யாராவது ஒருவரை உற்றுக் கவனித்தாலே அவருக்கு அடுத்து என்னென்ன நடக்கும் என்பது தெரிய ஆரம்பிக்கிறது.
ஈ.எஸ்.பி. எனப்படும் இந்த எதிர்காலத்தைக் கணிக்கும் ஆற்றல் ஒரு நேரத்தில் தீபாவுக்கு சிக்கலை உருவாக்க.. தீபாவை கொலை செய்ய லோக்கல் கட்சிப் பிரமுகர் திட்டமிடுகிறார். அந்தக் கொலையை செய்யும் பணி ஆர்யாவுக்குக் கிடைக்கிறது. லட்சத்தில் பணம் கிடைக்குமே என்றெண்ணி இதற்கு ஒத்துக் கொண்டு ஒரு நல்ல நாள் குறித்துக் கொடுக்கிறார் கொலைச் சம்பவத்திற்கு..
இன்னொரு பக்கம் கிருஷ்ணா அரும்பாடுபட்டு எஸ்.ஜே.சூர்யாவின் கண்ணில்பட்டு தல அஜீத்திற்கு தம்பியாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். அதற்கான அறிவிப்புக் கூட்டமும் அதே நல்ல முகூர்த்த நாளில்தான் நடைபெறுகிறது.
திருவல்லிக்கேணியின் அருகருகே இருக்கும் லாட்ஜ்களில் தங்கியிருக்கும் கிருஷ்ணாவும், ஆர்யாவும் தங்களை அழைக்க வந்த கார்களில் மாறி உட்கார்ந்து பயணிக்க படமும் வேறு திசையில் பயணிக்கிறது. அவரவர் வேலையை செய்து முடித்தார்களா? இல்லையா? என்பதுதான் மிச்சம் மீதிக் கதை.
ஒரு கதையாகப் படித்தபோதும், இப்போது திரும்பவும் வாசிக்கின்றபோதும் அதில் கிடைத்த ஒரு சுவாரஸ்ய அனுபவமே படத்தை பார்த்தே தீர வேண்டும் என்கிற ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஆனால் எதிர்பார்த்தது முழுமையாக கிடைக்கவில்லையே என்கிற அதிருப்தியும் நமக்குண்டு.
இது போன்ற படங்களை சீரியஸாகத்தான் அணுகியிருக்க வேண்டும். பாதி சீரியஸாகவும், மீதியை காமெடியாகவும் நகர்த்தியிருப்பதால் கடைசியில் ஒரு பக்கா கமர்ஷியல் படம் பார்த்த திருப்தியை மட்டுமே படம் நமக்குக் கொடுத்திருக்கிறது.
ஆர்யாவின் கெட்டப்பிலும், செட்டப்பிலும் எந்த மாற்றமுமில்லை. இப்படியே இன்னும் எத்தனை படங்களில்தான் நடிக்க முடியும்..? இயக்குநரையும் தாண்டி நம்மை ரசிக்க வைக்க நடிகர்கள்தான் எதையாவது செய்ய வேண்டும்..? இதில் அவர் என்ன செய்திருக்கிறார் என்று ஆர்யாதான் சொல்ல வேண்டும். பட் ஒன் கின்க்.. தீபா சந்நதியை நினைத்து நினைத்து உருகுவதை மாற்றி மாற்றிப் பேச இதற்கு சென்ட்ராயனின் குயில்கள் விளக்கம் கொடுக்கும் காட்சி ரம்மியம்.. ஆர்யாவின் நடிப்பும், துடிப்பும் ரசிக்க வைக்கிறது..! மற்றபடி சண்டை காட்சிகள், நடனக் காட்சிகளின் ஆர்யாவின் பங்களிப்பு அதே வழக்கம்போலத்தான்..
கிருஷ்ணா இரண்டாவது ஹீரோவாக நடித்திருக்கிறார். நிறைவாகவே இருக்கிறது. திரைக்கதையின் வேகத்திலும், அடுத்து என்ன என்கிற எதிர்பார்ப்பிலும் இருப்பதால் இதையெல்லாம் யோசிக்கவே நேரமுமில்லை. தோணவும் இல்லை. கிருஷ்ணாவிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.
சந்தேகமே இல்லாமல் நடிப்பில் முதலிடம் ஸ்வாதி ரெட்டிக்குத்தான். இவ்வளவு தேர்ந்த நடிப்பைக் காட்டும் இவர் ஏன் இன்னமும் தமிழ்த் திரையுலகில் முன்னணிக்கு வரவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. கிருஷ்ணாவின் வீடு தேடி வந்து மிரட்டுவதில் இருந்து கிருஷ்ணாவை தேடி வந்து மாட்டிக் கொண்டு கடைசியில் அவரைக் கண்டுபிடித்து லெப்ட் அண்ட் ரைட் வாங்குவதுவரையிலும் பின்னியிருக்கிறார். வெல்டன் மேடம்..
தீபா சந்நதி. இவரை அதிகமாக அழுக வைத்தே கதையை முடித்திருக்கிறார் இயக்குநர். பாடல் காட்சியொன்றில் மட்டுமே அழகாக சிரித்திருக்கிறார். ஆனால் தமிழ் தகிரத்தாளம் போடுவதால் பல குளோஸப் ஷாட்டுகளில் இழுத்து, இழுத்து பேசவது அப்பட்டமாகத் தெரிகிறது.
ஆர்.ஜே.பாலாஜியின் காதல் எபிசோடுகள் சுவாரஸ்யம்.. இடையிடையே இவர் உதிர்க்கும் ஜோக்குகள் திரைக்கதைக்கு சுவாரஸ்யத்தைக் கொடுத்திருக்கின்றன.  தங்கமணியாக வரும் தம்பி ராமையா வழக்கம்போல.. ஏற்ற இறக்கத்துடன் வசனங்களை பிய்ச்சு, பிய்ச்சு பேசி பிரித்து மேய்ந்திருக்கிறார். அடக்கமான அரசியல்வியாதியாக ஒய்.ஜி.மகேந்திரா.. கண்டிப்பான அரசியல்வாதியா.. அல்லது தட்டிக் கொடுக்கும் அண்ணனா என்பதே புரியாத அளவுக்கு வசனத்தை பேச வைத்து இயக்கியிருக்கிறார் இயக்குநர். இவருடைய கேரக்டர் ஸ்கெட்சுன்னால் கடைசியில் ஒரு சிறிய குழப்பம்..  இவரை கொலை செய்தால் அப்படியே போலீஸ் விட்டுவிடுமா..?
ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவிற்கு ஒரு பெரிய கும்பிடு. அடுத்தடுத்த பல காட்சிகளிலும் கலர் காம்பினேஷனை மாற்றி, மாற்றி காட்டி கண்களை குளிர வைத்திருக்கிறார். தூத்துக்குடியின் கடல் பரப்பு.. சென்னையின் வான் பரப்பு.. பாடல் காட்சிகளில்  அத்தனை கலர்புல்.. மழை காட்சிகளில்கூட ஏதோ ஒருவித பயம் கொண்ட சூழலை கேமிராவிலேயே காட்டியிருக்கிறார். பாராட்டுக்கள் ஸார்..! இறுதியான கிளைமாக்ஸில் கேமிராவின் பரபரதான் ரசிக்க வைத்திருக்கிறது.
யுவனின் இசையில் ‘காக்கா பொண்ணு’ பாடலும், ‘கொஞ்சலை’யும் கேட்க வைத்திருக்கிறது. பின்னணி இசை தேவையே இல்லை என்கிற ரீதியில்தான் படத்தில் இருக்கிறது. யுவன் எப்போதுமே இதற்கு மெனக்கெட மாட்டார். இதில் மட்டும் செய்துவிடுவாரா என்ன..?
விஷ்ணுவர்த்தின் இயக்கம் தனி ஸ்டைல் கொண்டது. இதில் அதற்கான பல காட்சிகள் உண்டு என்றாலும் கதையின் முடிச்சு வலுவில்லாமல் இருப்பதாலும், யூகிக்க முடிந்த திரைக்கதையினாலும் விஷ்ணுவர்த்தனுக்கு இந்தப் படத்தில் பெயர் கிடைப்பதென்பது சந்தேகம்தான்..
ஆர்யாவின் சென்னை அறையில் அவரை தனித்து காட்டும் பல ஷாட்டுகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதது. ஆனால் அத்தனையும் அருமை. பஸ்ஸ்டாண்டில் பொன்வண்ணனின் அடியாட்களின் ரகளை.. இதில் கிருஷ்ணன் மாட்டுவது.. டீக்கடையில் கிருஷ்ணனும், ஆர்யாவும் எதேச்சையாக சந்திப்பது.. ஸ்வாதியும், கிருஷ்ணாவின் அப்பாவும் வரும்போது உள்ளே தம்பி ராமையா இருப்பது.. பொன்வண்ணனின் கேரக்டர் ஸ்கெட்ச். அவரது அறிமுகம்.. வில்லனின் பிளாஷ்பேக் கதை.. என்றெல்லாம் சில சில விஷயங்கள் படத்தினை பேச வைத்திருக்கின்றன.
ஆனால் ஒரு விஷயம்.. ஈ.எஸ்.பி. எனப்படும் முன்கூட்டியே அறியும் சக்தியை கொண்ட தீபாவால் இறந்து போனது வெற்றியா அல்லது அவர் தம்பி செல்வமா என்பதை சொல்ல முடியவில்லையா..? செத்தது செல்வம்தான் என்று தீபா சொல்வது உண்மையெனில் கிளைமாக்ஸில் வெற்றி சொல்வது பொய்யாக அல்லவா இருக்கும். ஏன் இந்தக் குழப்பம்..?  
‘யட்சன்’ என்றால் ‘காப்பவன்’ என்றும் சொல்லலாம். ஆர்யாவுக்கு இந்த டைட்டில் பொருத்தமில்லை.. கிருஷ்ணாவுக்கும் இந்த டைட்டில் பொருத்தமில்லை.. தீபாவுக்கும் டைட்டிலில் வேலையில்லை. ஆனால், கச்சிதமான பொருத்தம் ஸ்வாதி ரெட்டிக்குத்தான்..!
அவர்தான் சவுண்டோடு ஜீப்பில் ஆட்களைக் கூட்டி வந்து தன் காதலனையும் மற்றவர்களையும் காப்பாற்றுகிறார். ஆக,, இந்த அடாவடி பொண்ணை ரசிக்கணும்னே இந்தப் படத்தைப் பார்க்கலாம்..!

0 comments: