25-09-2015
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
பாம்புக்கு பால் வார்ப்பதும் போலீஸுக்கு துணை போவதும் ஒன்றுதான் என்பார்கள். இது இந்திய மக்களுக்கு மட்டுமல்ல.. உலக மக்களுக்கே பொருத்தமானதுதான்.
அதிகாரம் இருக்குமிடத்தில் ஆசையும், ஆணவமும் அதிகம் இருக்கு. எப்படியாவது பதவியைப் பயன்படுத்தி சமூகத்தில் பெரிய ஆளாக வர வேண்டும் என்று நினைப்பதற்கு போலீஸ் அதிகாரிகளும் விதிவிலக்கல்ல. இந்தியா மாதிரியான ஜனநாயகம் என்கிற கேலிக்கூத்தான அரசியல் அமைப்பை வைத்திருக்கும் நாட்டில் காவல்துறையின் ஒட்டு மொத்த பிம்பமும் சிதைந்து போயிருப்பது கண்கூடு.
இதனால்தான் ஒரு கொலையோ, சட்ட விதி மீறலோ.. பொதுமக்கள் புகார் அளிக்கவும், சாட்சியம் அளிக்கவும் முன் வருவதில்லை. சட்டத்திற்குட்பட்டு நடக்கின்ற அதிகாரிகளை பூதக்கண்ணாடி வைத்துதான் தேடி வேண்டியிருக்கிறது.. சட்டத்தை அமல்படுத்த போலீஸுக்கு உதவுபவர்களை பாதுகாக்க காவலர்களே முன் வருவதில்லை என்பதால்தான் காவல்துறைக்கும், பொதுமக்களுக்குமான இடைவெளி அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
இந்தியாவில் போலீஸ் அமைப்பே ஒரு குறு நில மன்னர்கள் கொண்ட அமைப்பாகத்தான் இருக்கிறது. அதன் அதிகாரிகள் அவரவர் தகுதிக்கேற்ப தாங்கள் கோலோச்சும் பகுதிக்கு சிற்றரசர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கின்ற மரியாதை அரசியல்வாதிகளுக்கும், மற்ற துறை அதிகாரிகளுக்குக்கூட கிடைப்பதில்லை. காரணம் இன்னமும் நாம் பயன்படுத்திவரும் உளுத்துப் போன இந்திய அரசியமைப்புச் சட்டம்தான்..!
மிகப் பெரிய மரியாதை.. உடனடி பணம்.. இது இரண்டையும் தேடியலையும் வாழ்க்கையில் அனுபமில்லாத ஒரு இளைஞன் திடீரென்று தனக்குக் கிடைக்கும் தேன் தடவிய வார்த்தைகளையும், போலி மரியாதையையும் நம்பி காவல்துறையினருக்கு எடுபிடி வேலை செய்யத் துவங்கி.. அவனைப் பயன்படுத்திக் கொண்ட நாடகம் முடிந்ததால் அவனை துரத்தியடிக்க நினைக்கும் போலீஸை புரிந்து கொள்ள முடியாமல் மாட்டிக் கொண்டு தவிக்கும் கதைதான் இந்த ‘கிருமி’ திரைப்படம்.
22 வயதிலேயே திருமணமாகி ஒரு குழந்தைக்கு தந்தையுமான ஹீரோ தனது சொந்த அக்கா மகளையே மணந்திருக்கிறார். பாதி நாட்கள் வீட்டுக்கு வராமல் நண்பர்களின் அறையில் தங்கிக் கொண்டு பொழுதைக் கழித்து வருகிறார். ஏதோ கிடைக்கிற வேலையை பார்த்து அதில் கிடைக்கும் பணத்தையும் சூதாட்டத்தில் விட்டு குடி, கும்மாளம் என்று அலையும் ஒரு நல்ல தமிழ்நாட்டு குடிமகன்.
தன்னுடைய நெருங்கிய நண்பர்களின் அவமரியாதையான ஒரு வார்த்தை அவருக்குள் வண்டாய் துளைக்கவே.. தான் எப்படியாவது வெகு சீக்கிரத்தில் அவர்கள் மதிக்கக் கூடிய அளவுக்கு பெரிய ஆளாகிவிட வேண்டும் என்று துடிக்கிறான்.
அவனுடைய குடும்ப நண்பரான சார்லி போலீஸுக்கு துப்பு கொடுக்கும் கூலியாளாக வேலை பார்த்து வருகிறார். அவருடைய உதவியால் இவனும் போலீஸுக்கு உதவும் கருங்காலியாக மாறுகிறான்.
போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் டூவிலர்களை அகற்றுவது.. இரவு நேரத்தில் குடித்துவிட்டு வருபவர்களை கண்டுபிடித்து ஒப்படைப்பது என்று சின்னச் சின்ன வேலைகளைச் செய்துவிட்டு போலீஸ் கொடுக்கின்ற டிப்ஸ்களை வைத்து தான் ஒரு ராஜா என்பதை போல நினைத்துக் கொள்கிறான் ஹீரோ.
தன்னை ஒரு சமயத்தில் அடித்து அவமானப்படுத்திய சூதாட்ட கிளப்பின் ஓனரை சிக்கலில் மாட்டிவிட விரும்பி அந்த கிளப்பில் அனுமதியே இல்லாமல் சூதாட்டம் நடப்பதாக இன்ஸ்பெக்டருக்கு துப்புக் கொடுக்கிறான் ஹீரோ. இவனது தயவால் சூதாட்ட கிளப்பை முற்றுகையிடும் போலீஸ் அந்த கிளப்பில் இருந்து 25 லட்சம் ரூபாய் பணத்தையும் அபகரித்துவிட்டுச் செல்கிறது.
மாமூலெல்லாம் மாதாமாதம் சரியாகத்தானே ஸ்டேஷனுக்கு போகிறது என்று நினைத்து சூதாட்ட கிளப் ஓனர் குழம்பிப் போய் நிற்க… வந்த்து லிமிட் தாண்டிய வேறு ஸ்டேஷன் போலீஸ் என்பது தெரிய வந்து தனது பணத்தை மீட்க முட்டி மோதுகிறார். இவருடைய முயற்சியால் நகர போலீஸ் கமிஷனர், இரண்டு ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்களையும் அழைத்து கண்டிக்கிறார். ஒருவரை சஸ்பெண்ட் செய்கிறார்.
இந்த நேரத்தில் ஒரு நள்ளிரவில் சார்லியும், ஹீரோவும் டூவிலரில் வீடு திரும்பும்போது ரவுடிகளால் தாக்கப்படுகிறார்கள். ஹீரோ தப்பித்து ஓட.. சார்லி பரிதாபமாக உயிரைவிடுகிறார். யார் அவரை கொலை செய்தது..? ஏன் செய்தார்கள்..? என்பது தெரியாமல் ஹீரோ தவிக்க.. முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழ்கின்றன..
காவல்துறையின் அரசியல் சதுரங்கத்தில் தான் வெட்டுவதற்காகவே நகர்த்தப்படும் சாதாரண சிப்பாய் என்பதை தாமதமாகப் புரிந்து கொள்ளும் ஹீரோ அதிலிருந்து விலகி ஓட நினைக்கிறான். அவனால் அதனை செய்ய முடிந்ததா.. இல்லையா.. என்பதுதான் மிச்சம் மீதியான கதை.
சில ஆண்டுகளுக்கு முன்பாக ‘போலீஸ் நண்பர்கள் குழு’ என்கிற பெயரில் சில தடிப் பசங்களின் கைகளில் தடியைக் கொடுத்து பல அக்கிரமங்களை செய்து வந்த போலீஸின் உண்மைக் கதையை இங்கேயும் உண்மையாக்கியிருக்கிறார் இயக்குநர்.
தங்களுக்குப் பிடிக்காதவர்களை நாலு தட்டு தட்ட போலீஸ் டிரெஸ்ஸில் இல்லாத முட்டாள் மூடர்களை பயன்படுத்திக் கொண்டது அப்போதைய போலீஸ் அரசு. சென்னை தி.நகரில் ஒரு நகைக் கடையில் மாமூல் வாங்கச் சென்றபோது, “யாருக்கும் மாமூல் கொடுக்கக் கூடாது என்பது எங்களது கொள்கை…” என்கிற நகைக் கடை உரிமையாளர்களின் வார்த்தையைக் கேட்டு முகம் சுழிக்காமல் சிரித்தபடியே வந்த போலீஸ் கூட்டம்.. அன்றைய நாள் இரவிலேயே தங்களது நண்பர்கள் குழுவை வைத்து கடையையே வாரிச் சுருட்டியது.. இன்றுவரையிலும் அவர்கள் யார் என்று தெரியவில்லை. பாவம் அந்த கடைக்கார்ர். கடை திறந்து 10 நாட்கள்தான் ஆனது. நகைகளை இன்ஸூரன்ஸும் செய்யாமல்விட்டதால், பல கோடிகளை ஒரே நாள் இரவில் இழந்தார்.
இதையெல்லாம் தட்டிக் கேட்பதற்குக்கூட அப்போதெல்லாம் ஆட்கள் இல்லை. போலீஸ் டிபார்ட்மெண்ட்டிலேயே டிரான்ஸ்பர் என்கிற உயர்ந்த பனிஷ்மெண்ட் ஒன்றுதான் இருக்கிறது. வேறு இடத்திற்கு போனாலும் இதையேதானே செய்வார்கள் என்று மீடியாக்கள் கேட்டால் உயரதிகாரிகள் சிரிப்பார்கள். அவர்களால் முடிந்தது அவ்வளவுதான்..!
படத்தில் யாருக்கும் மேக்கப் இல்லை. மிக யதார்த்தமான நடிப்பை அனைவரிடத்தில் இருந்தும் வெளிக்கொணர்ந்திருக்கிறார் இயக்குநர். மதயானைக் கூட்டத்தில் பார்த்த கதிர்தான் இதில் ஹீரோ. இந்தக் கேரக்டருக்கு மிகப் பொருத்தமானவராகவே இருக்கிறார். அப்பாவித்தனத்துடன் வலைய வந்தபடியே இருப்பவரை பார்த்தால் கடைசியில் நமக்கே கோபம்தான் வருகிறது. இப்படியொரு பிரதிபலிப்பை ரசிகனிடத்தில் ஏற்படுத்துவதே இயக்குநருக்குக் கிடைத்த வெற்றிதான்.
போலீஸ் வாகனத்தில் இடம் பிடித்துவிட்ட கெத்தில் அவர் காட்டும் பெருமிதம்.. நண்பர்களிடத்தில் சிறிது உதார்விட்டுவிட்டு பின்பு அவர்களை இன்ஸ்பெக்டரிடத்தில் இருந்து காப்பாற்றும்போது அவர் காட்டும் கெத்து.. இன்னொரு ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் தன்னை லாக்கப்பில் வைத்துவிட்டதை தனது ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரிடம் விகல்பம் இல்லாமல் போட்டுக் கொடுத்துவிட்டு அப்பாவியாய் பார்ப்பது என்றெல்லாம் அவரது வயதுக்கே உரித்தான நடிப்பைக் காட்டியிருக்கிறார்.
5 நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்துவிட்டு தனது மனைவியிடம் பெர்மிஷன் போடும்படி கெஞ்சி.. ஒரு மணி நேரம்.. கடைசியாக 10 நிமிடமாக குறைந்து நிற்கும் அந்த வாலிப முறுக்கில்கூட ரசிக்க முடிகிறது ஹீரோ கதிரை..! இறுதியில் அலட்சியமாக ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு பையனைத் தூக்கிக் கொண்டு நடந்து செல்லும்போது அவர் காட்டும் சிரிப்புக்கு ஆயிரம் அர்த்தங்கள். அது பற்றி நமக்கு கருத்து வேறுபாடுகள் இருப்பினும் அவரைப் பொறுத்தவரையில் அது சரியே..!
ஹீரோயின் என்றில்லாமல் ஒரு லீடிங் கேரக்டரில் ரேஷ்மி மேனன். எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஒரு மனைவியாக.. கணவனுக்காக வருத்தப்படும் ஒரு மனைவியாக.. தனது கேரக்டரை நிறைவாகவே செய்திருக்கிறார். இவரைவிடவும் சார்லியும், அவரது மனைவியாக நடித்தவர்களின் கேரக்டர் ஸ்கெட்ச்சு ரசிகர்களை வெகுவாக பாதித்திருக்கிறது.
இவர்களுக்கு குழந்தை இல்லை என்கிற விஷயத்தை ஹீரோவும், அவனது மனைவியும் எதிர்கொண்டு அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்ற முன் முயற்சிகள் பலே.. “நான் மனசு மார்றதுக்குள்ள வந்திரு…” என்று சார்லி அழைக்கின்ற அந்த அழைப்பையும், நொடியில் முகம் மலர நிற்கும் அவருடைய மனைவியின் முகமும் இன்னும் மனதில் நிற்கிறது. சார்லியின் கொடிய மரணம் அத்தனையையும் புரட்டியெடுக்க அதன் பின் இவருக்கு குழந்தை பிறக்க.. அந்தச் சோகம் இவரது காட்சிகள் முழுவதிலுமே வந்து கொண்டேயிருக்கிறது..!
இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் டேவிட் சாலமன் நல்லவரா, கெட்டவரா என்பதே தெரியாத அளவுக்கு நடித்திருக்கிறார். இவரும் இன்னொரு இன்ஸ்பெக்டரான மாரிமுத்துவும் காட்டியிருக்கும் சில எக்ஸ்பிரஷன்கள் படத்தை மிக யதார்த்தவாத படமாக சொல்ல வைக்கிறது..!
கமிஷனர் இருவரையும் நிற்க வைத்து பேசும் அந்த வசனத்திற்கு தியேட்டரே அதிர்வதாக செய்திகள் வருகின்றன. “ஒருத்தன்கிட்ட அஞ்சு மாட்டைக் கொடுத்து மேய்ஞ்சிட்டு வாடான்னா சொன்னா.. அதுல நாலை வித்திட்டு.. ஒரு மாட்டை அடிச்சு தின்னு ஏப்பம் விட்டுட்டு அஞ்சுமே காணாப் போச்சுன்னு சொல்றவங்கய்யா நீங்க..” என்ற வசனம் போலீஸ் துறையினரை அடையாளப்படுத்தியிருக்கும் அற்புதமான வசனம்..!
போலீஸ் ஸ்டேஷன் செட்டை த்த்ரூபமாக அமைத்து சபாஷ் போட வைத்திருக்கிறார் கலை இயக்குநர். அருள் வின்சென்ட்டின் ஒளிப்பதிவு ஒரு தனி கேரக்டராகவே படம் முழுக்க வந்திருக்கிறது. இரவு நேர காட்சிகளில் ஒளிப்பதிவும், இயக்குநர் அமைத்திருக்கும் ஷாட்டுகளின் கோணமும் பலே போட வைக்கிறது. இவர்களுக்கு இணையாக இசையமைப்பாளர் கே பல இடங்களில் இசையை மெளனப்படுத்தி உதவியிருக்கிறார். இந்தப் படத்திற்கு பாடல் காட்சிகளே தேவையில்லை என்றே சொல்லலாம். அந்த 4 நிமிடங்கள்தான் பிரேக்காக இருந்தன.
104 நிமிடங்களே இருந்த இந்தப் படத்தை இறுக்கமாக அமைத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநரும் எடிட்டருமான அனுசரண். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி எடிட்டிங் செய்து தனது பணியை கச்சிதமாகச் செய்திருக்கிறார் இயக்குநர் அனுசரண். ‘காக்காமுட்டை’ படத்தின் இயக்குநர் மணிகண்டனும் இந்தப் படத்தின் கதாசிரியர்களில் ஒருவர் என்கிற ரீதியில் பாராட்டுக்குரியவராகிறார்.
படத்தின் இறுதிக் காட்சிதான் படம் பார்க்கும் பல விமர்சகர்களுக்கும் விமர்சனங்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. படமோ கருத்து சொல்கிறது. ஆனால் இறுதியில் “எதைப் பற்றியும் கவலைப்படாதே. நீ உன் வேலையை பார்த்துவிட்டு போய்க் கொண்டேயிரு..” என்று சொல்வது எந்தவிதத்தில் சரியாக இருக்கும் என்கிறார்கள்.
ஒரு சாமான்யனால் இந்த அரசியல் அமைப்பையும், நிர்வாக அமைப்பையும் ஒரே நாளில் தூக்கி நிமிர்த்திவிட முடியாது. இப்போதுதான் ‘தனி ஒருவன்’ படத்தில் ஒரு இன்ஸ்பெக்டர் நல்லது செய்ய நினைத்தும் தனது நண்பர்கள் துணையோடுதான் அதனை செய்கிறார். அது போல ஹீரோவும் செய்திருக்கலாமே என்கிறார்கள். கேட்பது நல்ல கேள்விதான்.. இதற்கு இயக்குநர்தான் பதில் சொல்ல வேண்டும்.
அதோடு படத்தின் ஆரம்பத்தில் இருந்தே ஹீரோ மீது பரிதாபம் வரக்கூடிய அளவுக்கு ஒரு காட்சிகூட இல்லை. மாறாக ‘பொறுப்பற்ற பயல்’ என்ற கண்டனத்தைச் சுமத்தக் கூடிய அளவுக்குத்தான் அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் இருக்கிறது. கடைசியில் இவருக்குக் கிடைத்திருக்கும் தண்டனை நியாயமானதுதான் என்று சொல்லும் அளவுக்கு அவருடைய செயல்கள் இருக்கின்றன. இவர் எப்படி போலீஸை குறை சொல்லும் அளவுக்கும், கேலியாகச் சிரிக்கும் அளவுக்கும் பெரிய ஆளானார் என்பதையும் நாம் இயக்குநரிடம்தான் கேட்க வேண்டும்..!
இரண்டு திருடர்களிடையே நடைபெற்ற மோதலில் ரத்தக் காயம் ஏற்பட்டு.. பின்பு இருவருக்குள்ளும் சமாதானம் ஏற்பட்டு இருவரும் அவரவர் வழியில் திரும்பிப் பார்க்காமல் போகிறார்கள். இந்த இருவரில் இந்தச் சமூகத்தின் கிருமி யார் என்பதை இயக்குநர் சொல்லாமல் விட்டுவிட்டது ஏன் என்றுதான் தெரியவில்லை..!
படத்தின் உருவாக்கம் தரமானதாகவும், மிக உயர்வானதாகவும் இருந்தாலும் கதையோட்டத்தில் விமர்சகர்களுக்கு பிரச்சினையைக் கொடுக்கும் படமாக இது அமைந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
104 நிமிடங்கள் நேரம் போனதே தெரியாமல் படத்தினை உருவாக்கியிருப்பதன் மூலம் இயக்குநர் அனுசரனின் இயக்கத் திறமை பளிச்சிடுகிறது. கோடம்பாக்கத்திற்கு புதிதாக நல்லதொரு இயக்குநர் கிடைத்திருக்கிறார் என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம்..!
கிருமி அவசியம் பார்க்க வேண்டிய படம்..!
|
Tweet |
0 comments:
Post a Comment