பாயும் புலி - சினிமா விமர்சனம்

06-09-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘பாண்டிய நாடு’ வெற்றிக்குப் பிறகு விஷால், சுசீந்திரன் கூட்டணி அமைத்துள்ள படம். பெரிய பேனர்.. பெரிய நடிகர், நடிகைகள் என்று கச்சிதமாக தயாரிக்கப்பட்ட படம். சர்ச்சைகளுக்கு இடையே வெளியாகியுள்ளது.

இந்தக் கதையின் களமும் மதுரைதான். மதுரையின் பெரிய, பெரிய தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கிறது ஒரு கும்பல். பணம் தர மறுப்பவர்களை தூக்கி வந்து திருச்சி ராமஜெயத்தை கொலை செய்தது போல செய்து, ஓரிடத்தில் பாயுக்குள் சுருட்டி கட்டி வைத்துவிட்டுப் போகிறார்கள். இதனாலேயே பயந்து போன தொழிலதிபர்களெல்லாம் 2 கோடி ரூபாயை தட்சணையாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் கும்பலின் தலைவனான பவானியையும், அவனது அடியாட்களையும் பிடிக்க இன்ஸ்பெக்டர் ஆனந்த்ராஜ் தலைமையில் போலீஸ் ஸ்கெட்ச் போடுகிறது. ஒரு தொழிலதிபர் போலீஸுக்கு தகவல் சொல்ல.. போலீஸ் கடைசி நிமிடத்தில் களத்தில் குதித்து ஆட்டையைக் கலைக்கிறது.
தப்பிப் போகும் கூட்டாளிகளில் பவானியின் தம்பியை சுட்டுத் தள்ளுகிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரீஷ் உத்தமன். இதனால் கோபமடையும் பவானி, இன்ஸ்பெக்டர் ஹரீஷை நட்ட நடுரோட்டில் வைத்து வெட்டி கொலை செய்கிறார். போலீஸ் டிபார்ட்மெண்ட் அதிர்ச்சியாகிறது. இந்தக் கொலை வழக்கில் பவானியே கோர்ட்டில் சரண்டராகி ஜெயிலுக்கு போகிறார்.
இந்த நேரத்தில் சைலண்ட்டாக போலீஸ் காய் நகர்த்துகிறது. திருச்சியில் அசிஸ்டெண்ட் கமிஷனராக இருக்கும் ஹீரோ விஷாலை என்கவுண்ட்டருக்காகவே மதுரைக்கு டிரான்ஸ்பர் செய்கிறது. மதுரை வரும் விஷால் யாருக்கும் தெரியாமல் பவானியின் ஆட்கள் ஒவ்வொருவரையும் போட்டுத் தள்ளுகிறார்.
என்கவுண்ட்டர் வேலையுடன் கூடவே காஜலை எதிர்பாராத இடத்தில் சந்தித்து.. வழக்கமான சினிமா போல் பார்த்தவுடன் காதலாகி, அவருடன் காதலையும் வளர்த்து வருகிறார் விஷால்.
இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் சாட்சிகள் இல்லாத காரணத்தினால் விடுதலையாகிவரும் பவானிக்கு தனது ஆட்களின் படுகொலை சந்தேகத்தை கிளப்புகிறது.
விஷால் போலீஸ் என்று தெரியாமல் தன்னைக் காப்பாற்ற வந்த இடத்தில் பவானியின் கூட்டாளியை விஷால் போட்டுத் தள்ளியதை போலீஸிடம் போய் உளறி வைக்கிறார் காஜல். இந்த நேரத்தில் காஜலை பவானியின் ஆட்கள் தூக்கிச் செல்ல.. விஷயம் விஷாலுக்கு தெரிந்து அவர் பறந்து போய் பவானியையும் சேர்த்து ஒட்டு மொத்த தாதா கும்பலையும் என்கவுண்ட்டரில் கொலை செய்கிறார்.
ஆனால் மறுநாளே இன்னுமொரு தொழிலதிபரும் அதே பாணியில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். அதிர்ச்சியில் ஆடிப் போகிறார் விஷால். பவானி சாகும்போது தனக்கும் மேலே ஒருவன் இருக்கிறான் என்பதை சொல்ல முற்பட்டதை நினைத்துப் பார்க்கும் விஷால் அந்த முக்கியப் புள்ளி யார் என்பதை கண்டறிய முனைகிறார். கண்டுபிடித்தாரா இல்லையா..? யார் அந்த முக்கியப் புள்ளி என்பதெல்லாம் பரம ரகசியம். தியேட்டரில் பார்த்தால்தான் சுவை தெரியும்..!
படத்தின் மிகப் பெரிய பிளஸ்கள் சுவையான சில திரைக்கதை காட்சிகள்தான்.. காஜல் அகர்வாலின் கேரக்டர் ஸ்கெட்ச்.. டூவீலரை திருப்ப முடியாமல் தவிக்கும் அவரது பயம்.. ரோட்டை கிராஸ் செய்ய தயங்கும் குணம்.. பவானி அண்ட் கோ-வின் வன்முறை முகம்.. வேகமாக நகரும் காட்சிகள்.. சமுத்திரக்கனியின் பாத்திரப் படைப்பு.. இவர்களது அப்பாவான வேல ராமமூர்த்தியின் கனிவான நடிப்பும், இவரது பாத்திரமும்.. அந்தக் குடும்பத்தின் மீதான கதையாடல்.. நடு இரவு துரத்தலில் வக்கீல் பிடிபடுவது.. இவருக்காக விஷால் போடும் டிராமா, பின்பு வக்கீலுக்குக் கிடைக்கும் முடிவு.. சுவையான பாடல்கள்.. அமர்க்களமான ஆட்டங்கள்.. அதிரடியான சண்டை காட்சிகள் என்று பலவும் இந்தப் படத்தை ‘பாண்டிய நாடு’ படத்தோடு ஒப்பிட்டே பார்க்க வைக்கிறது..!
விஷாலுக்கு காக்கி சட்டை கம்பீரத்தைத் தரவில்லையென்றாலும் ஒரு நிகழ்கால அட்மாஸ்பியரை காட்டியிருக்கிறது. இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பதை போல அவர் செய்யும் அட்வென்ச்சர் என்கவுண்ட்டர்கள் எடுக்கப்பட்ட விதத்தில் சூப்பர்.
சமுத்திரக்கனியின் உண்மை நிலையை கொஞ்சம், கொஞ்சமாக தெரிந்து கொண்டு அதற்கேற்ப அவர் மாறுவதும், கிளைமாக்ஸில் அந்த அசத்தல் சண்டை காட்சியிலும் ஒரு நடிகனாகவே உருமாறியிருக்கிறார் விஷால். பாராட்டுக்கள்..! ரொமான்ஸில் காஜலுடன் பின்னிப் பிணைந்திருக்கிறார். பாடல் காட்சிகளில் ஆடும் ஆட்டமும், பாட்டும் தியேட்டரை அதிர வைக்கும்..
காஜல் தன் பாட்டுக்கு நடித்திருக்கிறார். மருத்துவமனையில் சூரியை அடித்துவிட்டு வெளியேறும் காட்சியிலேயே சிரிக்க வைத்திருக்கிறார். பாடல் காட்சிகளில் சேலையை அணிந்திருக்கிறாரா..? அல்லது ச்சும்மா சுத்தியிருக்காரா என்பதை பட்டிமன்றம் வைத்துத்தான் கண்டுபிடிக்க வேண்டும். அப்படியொரு கிறக்கத்தை தனது ஸ்டைலில் காட்டியிருக்கிறார். அசத்தல் டான்ஸ்.
படத்தின் முற்பாதியில் சூரியும், பிற்பாதியில் சமுத்திரக்கனியும் படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள். சூரியின் காமெடி இந்தப் படத்தில் மிகப் பெரிதாகப் பேசப்படுவது நிச்சயம். சமுத்திரக்கனியின் நடிப்பும் மிகையில்லாத்து.. அவர் சொல்லும் அரசியல் சல்ஜாப்புகள் மீது நமக்கு கருத்து வேறுபாடுகள் அவர் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு குறையில்லாதது..!
‘பாண்டிய நாடு’ படத்தில் பாரதிராஜாவின் பாத்திரப் படைப்பு எப்படி ரசிகர்களின் மனதில் அமர்ந்த்தோ அது போல இருக்க வேண்டும் என்று நினைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது விஷாலின் அப்பாவான வேல ராமமூர்த்தியின் கேரக்டர்.  ஆனால் திரைக்கதையின் கோளாறால் அதிகம் ரசிக்க முடியவில்லை. இருந்தும் ‘அவனை போட்ரு. போட்டுத் தள்ளிரு’ என்று விஷாலிடம் சொல்லுமிடத்தில் தியேட்டரில் கைதட்டலை பெற்றுவிட்டது வேல ராமமூர்த்தியின் நடிப்பு..!
டி.இமானின் இசையில் ‘யார் இந்த முயல் குட்டி’, ‘மருதக்காரி’, ‘புலி புலி பாயும்புலி’, ‘சிலுக்கு மரமே’, ‘நா சூடான மோகினி’ என பாடல்கள் அனைத்துமே கேட்கும்படியாகத்தான் இருக்கின்றன.
‘சிலுக்கு மரமே’ பாடல் காட்சியும், ‘நா சூடான மோகினி’ பாடல் காட்சியும் அசத்தல்.. மிக, மிக வித்தியாசமான முறையில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர். இதற்கு உறுதுணையாக இருந்திருக்கும் ஒளிப்பதிவு இயக்குநர் வேல்ராஜின் கேமிராவுக்கும், நடன இயக்குநர் ஷோபிக்கும் நமது பாராட்டுக்கள்.. அடிக்கடி மதுரையின் ஏரியல் வியூ காட்சிகளைக் காட்டி தொலைதூரத்தில் இருக்கும் மதுரைக்கார மக்களை ஏங்க வைத்திருக்கிறார் வேல்ராஜ்.
எடிட்டர் ஆண்ட்டனியின் அளவான கத்திரிக்கோலால் முதல் சிறப்பாக படத்தில் தெரிவது படத்தின் சண்டை காட்சிகள்தான். அனல் அரசுவின் அனல் தெறிக்கும் சண்டை காட்சிகளில் பயங்கரமோ, ரத்தக் களறியோ இல்லாமல் பார்த்துக் கொண்டதும் பாராட்டுக்குரியது.
சுசீந்திரனின் இயக்கத் திறமை குறைவில்லாதது. இதனால்தான் படம் இத்தனை வேகமாக ஓடியும் அலுப்புத் தட்டாமல் இருக்கிறது.. எடிட்டரின் கைவண்ணத்தினால் படத்தின் இறுக்கமான இயக்கத்தில் அமைந்திருக்கும் காட்சிகளை கச்சிதமாக இணைத்து கமர்ஷியலுக்கு ஏற்றவடிவில் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
எல்லாம் இருந்தும்.. எல்லாம் இருந்தும்.. என்று சொல்வார்களே.. அது போலத்தான் இன்னும் ஏதோ ஒன்று குறைவது போல தோன்றுகிறது. அந்த ஒன்று ‘பாண்டிய நாடு’ படத்தினால் வந்த ஒப்பீட்டளவின் விளைவோ என்கிற பயமும் உண்டு.
எப்படியிருந்தாலும் ஒரு என்கவுண்ட்டரை நியாயப்படுத்துவது போலவும்.. போலீஸாரை தாக்கினால் அவன் உயிரோடு இருக்கவே முடியாது என்பது போலவும் வசனங்களை வைத்திருப்பது நியாயமா இயக்குநர் ஸார்..?
நீங்கள் சொல்வதை பார்த்தால் நாட்டில் இருக்கும் அத்தனை போலீஸ்காரர்களும் ஹீரோ விஷால் போல் நீதிவான்களாக இருப்பார்கள் போலிருக்கிறது. இப்படியிருந்துவிட்டால்தான் பிரச்சினையில்லையே..? ஊருக்கு ஒரு விஷால்தானே இருக்கிறார். பின்பு போலீஸுக்கு சல்யூட் மட்டுமே செய்யவேண்டுமென்று எதிர்பார்த்தால் எப்படி..?
இந்த நாட்டில் அனைத்துக் குற்றங்களுக்கும் மூல காரணமே அரசியலும், அதிகார வர்க்கமும்தான்.. இதை உணர்ந்து இதைவிட சிறப்பாக இன்னொரு படத்தினை கொடுப்பீர்கள் என்று நம்புகிறோம்..!
இந்தப் ‘பாயும் புலி’யில் சீற்றம் இருக்கிறது..! நிச்சயம் பார்க்கலாம்..!

0 comments: