Showing posts with label அம்பேத்கர். Show all posts
Showing posts with label அம்பேத்கர். Show all posts

அம்பேத்கர் - சினிமா விமர்சனம்

29-12-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பாரதரத்னா டாக்டர் பாபாசாஹேப் பி.ஆர்.அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் இத்திரைப்படம் பற்றிய எனது முந்தைய பதிவுகளை இதுவரையிலும் படிக்கவில்லையெனில் இப்போதாவது படித்துப் பார்க்கவும்.

அம்பேத்கர் என்ன பாவம் செய்தார்..?

 

அம்பேத்கர் திரைப்படம் வெளியீடு - திரையரங்குகள், நேரம் மாற்றம்..!

 

 அண்ணல் அம்பேத்கரின் திரைப்படம் வெளியானது..!

 

இத்திரைப்படம் சட்ட மாமேதை என்ற அளவிலேயே அறிந்திருந்த அம்பேத்கரின் முழு வடிவத்தையும் எனக்கு உணர்த்தியது. காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பாளர். காந்தியாரின் மரியாதைக்குரிய எதிரியாகவும் திகழ்ந்தவர் என்கிற ஒரே காரணத்திற்காக சுதந்திரத்திற்கு பின் பல ஆண்டு காலம் நாட்டை ஆண்டு வந்த மத்திய காங்கிரஸ் அரசு அம்பேத்கரை பற்றிய முழு உண்மைகளை இந்திய இளைஞர்களிடம் கொண்டு போய்ச் சேர்க்காமல் தந்திரமாக மறைத்திருக்கிறது என்பதையும் இப்படமே உணர்த்தியது.

பொதுவாக வரலாற்றுத் திரைப்படங்களைப் படமாக்குவதற்கு மிகவும் மெனக்கெட வேண்டும். அதிலும் அரை நூற்றாண்டு தாண்டிய திரைப்படங்களெனில் என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டி வரும் என்பது சினிமாத் துறையில் இருக்கும் எனக்கு நன்கு தெரியும்.

பத்தாண்டுகளுக்கு முன்பாக எடுக்கப்பட்ட திரைப்படம் என்றாலும் படத்தினை பார்க்கின்றபோது மிகச் சமீபத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் போலவேதான் இருந்தது.

படத்தின் மிகப் பெரும் குறை தமிழ் வசனங்கள் வழக்கு மொழியாக இல்லாமல் தூயத் தமிழாக அமைந்திருந்ததுதான். இந்த ஏற்பாட்டைச் செய்த புண்ணியவான் யாரோ..? ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் ஒரே தந்தையான அம்பேத்கரின் திரைப்படம் இது என்பதை உணர்ந்து செய்திருந்தால் இந்தத் தவறு  நடந்திருக்காது..

அம்பேத்கரின் 65 வருட கால வாழ்க்கையை முழுமையாகக் காட்டிவிட முடியாதுதான். அதனால் முடிந்த அளவுக்கு தற்போதைய சினிமா ரசிகர்களும் ஆவலுடன் பார்க்க விரும்புகின்ற சினிமா மொழியில் சம்பந்தப்பட்டவைகளை ரத்தினச் சுருக்கமாக சுருக்கிக் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

இத்தனை படிப்புகளை படித்திருக்கும் முதல் இந்தியர் அம்பேத்கர் என்பதும், அந்த முதல் இந்தியரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்தான் என்பதும் நமக்குப் பெருமையான விஷயம்தான். சிறு வயதில் அம்பேத்கர் படும் அவமரியாதைகளின் தொடர்ச்சியாகத்தான் அவரின் எதிர்கால அரசியல் வாழ்க்கை நடந்தேறியது என்பதை திரைப்படம் பதிவாக்கியுள்ளது.

மாட்டு வண்டியில் தனது சகோதரனுடன் பேசிக் கொண்டே செல்கையில் அவர்களுடைய பேச்சை வைத்தே அவர்கள் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை உணர்ந்து வண்டிக்காரன் வண்டியைக் கவிழ்த்துவிடும் காட்சி ஒன்றே போதும்.. இந்த அவமானத்தை தன்மானமுள்ள எந்த மனிதனாலும் மறக்க முடியாது. அம்பேத்கரின் முதல் சமுதாயப் புரட்சி எண்ணத்திற்கு இந்த விஷயமே அடிகோலியிருக்கலாம்..

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அவர் படிக்கின்ற சம்பவங்கள்.. அங்கே நடைபெறும் சம்பவங்கள்.. இந்தியர்களை கேலியாகப் பார்க்கும் மேல்நாட்டு வர்க்கத்திற்கு அம்பேத்கர் கொடுக்கின்ற சூடுகள் என்று படத்தின் துவக்கமே அதிரடியாகத்தான் இருந்தன.

கல்விக்கு இந்த மனிதர் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை இத்திரைப்படம் பரிபூரணமாக பதிவு செய்திருக்கிறது. 17 வயதில் ராமாபாயை திருமணம் செய்து முடித்த கையோடு வெளிநாட்டு வந்து படிப்பில் முழு கவனத்தையும் செலுத்திய அந்த மனிதரை என்னவென்று சொல்வது..?

நாடு திரும்பியவுடன் பரோடா மன்னரின் சமஸ்தானத்திலேயே கணக்கு பார்க்கும் வேலைக்கு அமர்கிறார். அங்கே அவர் சந்திக்கும் அவமானங்கள் மிக அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கீழே வேலை பார்ப்பவராக இருந்தாலும் ஒரு டம்ளர் தண்ணியை கொண்டு வந்து கொடுக்க மனம் இடம் கொடுக்காத அளவுக்கு சாதிப் பித்துப் பிடித்த இந்தியர்கள் மத்தியில் எத்தனை நாட்கள்தான் அம்பேத்காரால் பணியாற்றியிருக்க முடியும்.. இது குறித்து பரோடா மன்னருடன் அம்பேத்கர் பேசும்போது மன்னர் “இவ்வளவுதான் என்னால் முடியும்..” என்று சொல்வது அப்போதைய இந்திய அரசியல் சூழலை தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும்போதும் இதே போன்ற சூழலை அவர் எதிர்கொள்ளும் காட்சியும் மிக அருமை. நீர் அருந்தவிடாமல் தடுத்ததையும் எதிர்த்து தனது தாகத்தைத் தீர்த்துவிட்டு, “வேணும்னா நீங்க வரும்போது உங்க வீட்ல இருந்தே தண்ணி கொண்டு வந்திருங்க..” என்று அம்பேத்கர் சொல்லும் காட்சி மிக ரசனையானது..

நன்கு படித்து, நல்ல வேலையில் இருக்கும் தனக்கே இத்தனை இடர்ப்பாடுகளும், சோதனைகளும் கிடைக்கின்றபோது படிப்பறிவில்லாத ஏழை தாழ்த்தப்பட்ட மக்கள் என்னென்ன சோதனைகளை தினம்தோறும் சந்தித்து வருவார்கள் என்று அவர் சிந்தித்த வேளையினால்தான் இன்றைக்கு இந்தியாவில் தாழ்த்தப்பட்டோர் என்ற பிரிவினரின் செயல்பாடுகள் ஓரளவுக்கேனும் உயர்ந்திருக்கிறது.

சைமன் கமிஷனை காங்கிரஸ் புறக்கணித்தபோதிலும் அம்பேத்கர் அங்கு ஆஜராகி தான் சார்ந்த மக்களுக்காக வாதிடுவது மிக அழகாகப் படமாக்கப்பட்டுள்ளது. “இந்தியாவில் உள்ள தாழ்த்தப்பட்ட வகுப்போரில் இப்போது இருக்கும் ஒரேயொரு வழக்கறிஞர் நான்தான்” என்று அம்பேத்கர் சொல்கின்ற வார்த்தைகள், அவரைப் பற்றி எதுவுமே தெரியாமல் உள்ளே நுழைந்திருக்கும் சினிமா ரசிகனை நிச்சயம் தாக்கியிருக்கும் என்றே நம்புகிறேன்.

மகாராஷ்டிராவில் கொலாபா மாவட்டத்தில் இருக்கும் மகத் என்னும் ஊரிலிருக்கும் செளதார் குளத்து நீரை தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்து அம்பேத்கர் நடத்தியிருக்கும் போராட்டம் அற்புதமானது.

மகத் நகரசபையில் செளதார் குளத்தைப் பயன்படுத்தும் உரிமை தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உண்டு என்று தீர்மானம் நிறைவேற்றிய பின்பும் சாதி இந்துக்களின் தூண்டுதலாலும், மிரட்டலாலும் அது நடைபெறாமல் இருக்கவே அம்பேத்கரின் தலைமையில் 1927 மார்ச் 20-ல் செளதார் குளத்தில் நீர் அருந்தும் போராட்டம் நடந்துள்ளது.  அந்தப் போராட்டக் காட்சி, காந்தியாரின் தண்டி உப்பு யாத்திரைக்கு ஒப்பானது. ஆனால் இதுவரையிலும் இந்த செளதார் குளம் போராட்டக் காட்சிகள் இந்தியர்களின் மத்தியில் தண்டி யாத்திரைபோல் பிரபலமாகாதது ஏன் என்றும் தெரியவில்லை..

இதைத் தொடர்ந்து நடக்கும் கலவரங்களும் அந்தச் சூழலும் அம்பேத்கரை இன்னமும் அதீத வேகத்துடன் தனது இனத்து மக்களுக்காக உழைக்க வைத்திருக்கிறது.

படம் முழுவதும் சொல்லப்படும் விஷயங்கள் அனைத்துமே சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புடையதாக இருப்பினும் நாம் புரிந்து கொள்வது அம்பேத்கர் நடத்திய சுதந்திரப் போராட்டம் பிரிட்டிஷ் ஆதிக்கத்திடம் இருந்து இந்தியா விடுதலை வேண்டி நடைபெற்ற போராட்டம் அல்ல.. ஆண்டாண்டு காலமாக கடவுள்கள், சனாதன தர்மம், வேதங்கள், சாதிகள் என்று இந்து மதத்தில் இருந்த குழப்பங்களை சாக்காக வைத்து ஆதிக்கச் சாதியினர் நடத்திய கொடுமையில் இருந்து தனது இனத்துச் சொந்தங்களான தாழ்த்தப்பட்ட மக்களை மீட்க அம்பேத்கர் நடத்திய சுதந்திரப் போராட்டமாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

உதாரணமாக காலாரம் கோவில் போராட்டக் காட்சி அம்பேத்கரின் போராட்ட உறுதியைக் காட்டுகிறது. மதம் என்பது தன்னை பின்பற்றும் அத்தனை பேருக்கும் பாகுபாடில்லாமல் வழி காட்டக் கூடியதாகத்தான் இருக்க வேண்டும். அப்படியில்லாமல் குறிப்பிட்டவர்களை மட்டும் என்னைத்தான் தெய்வமாகத் தொழ வேண்டும். ஆனால் அருகில் வந்து தொழக் கூடாது. தூரத்தே நின்று அப்படியே போய்விட வேண்டும் என்றெல்லாம் எந்தக் கடவுளாவது சொன்னாலோ.. சொல்லியிருந்தாலோ.. அதனைத் தூக்கியெறிந்துவிட்டுப் போவதுதான் சாலச் சிறந்தது.

இந்தக் கொள்கைக்காகத்தான் தாங்கள் இந்து மதத்தில் உள்ளவரையிலும் இந்துக் கோவில்களில் எங்களுக்கும் சம உரிமையுண்டு என்று போராடிய அந்த கோவில் போராட்டம் அழகுற படமாக்கப்பட்டுள்ளது.. தந்திரமாக தேரை இழுக்கும் உயர்சாதியினரின் கடைசி நேர சூழ்ச்சியைக் கண்டறியும் அம்பேத்கர் அதனை அவர்கள் பாணியிலேயே சென்று முறியடிக்க தனது மக்களை உசுப்பிவிடும் காட்சியில் திரையரங்கில் காது கிழியும் அளவுக்கு கை தட்டல்கள்..

அடக்கி வைக்கப்படும்போதுதான் சுதந்திரத்தின் அருமை தெரியும்.. இந்த அடக்குமுறையை எதிர்த்தாக வேண்டுமெனில் ஆட்சி, அதிகாரத்துக்கு செல்வதுதான் மிகச் சிறந்த வழி என்றுணர்ந்து அதற்கான வழிமுறைகளுக்குள் அம்பேத்கர் இறங்கியபோதுதான் இந்தியாவின் விடிவெள்ளியாக இருந்த காங்கிரஸின் இன்னொரு பக்கமும் அம்பேத்கருக்கு புரிந்திருக்கிறது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஹரிஜன் என்று பெயர் சூட்டி அவர்கள் கடவுளின் குழந்தைகள் என்று சொல்லி, அவர்களை அரவணைத்துச் செல்லும்படி அறிவுரை கூறிய காந்தியார் அவர்களுடைய நடைமுறை வாழ்க்கையைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காதது ஏன் என்றுதான் புரியவில்லை.

முதல் இரண்டு வட்ட மேசை மாநாடுகளிலும் அம்பேத்கர் கலந்து கொண்டு தனது இனத்து மக்களுக்காக அவர் வாதாடுவது பதிவாகியிருக்கிறது. அடுத்து வரும் தேர்தல்களில் தனது இனத்திற்காக இரட்டை வாக்குரிமை தேவை என்று கேட்டு போராடி வெற்றி பெற்று வந்த அம்பேத்கரை காந்தியார் தனது தந்திரமான போர்க்குணத்தால் வெற்றி கொண்டது இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி..

அவ்வாறு இரட்டை வாக்குரிமை தருவது அவர்களை இன்னமும் ஒதுக்குவது போலாகும். இந்து மதத்தை இரண்டாகப் பிரிப்பது போலாகும் என்று காந்தியார் மறுக்கிறார். அம்பேத்கரும் இதனை ஏற்க மறுக்கிறார். இருவரும் சம அளவிலான தலைவர்கள் என்பதை அப்போதுதான் உணர்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

ஆனால் காந்தியார் வழக்கம்போல தனது உண்ணாவிரதம் என்னும் ஆயுதத்தைக் கையில் எடுக்கிறார். பூனாவின் எரவாடா சிறையில் அவர் தொடங்கிய உண்ணாவிரதத்தின் முக்கிய நோக்கம், பிரிட்டிஷாருக்கு நான் முக்கியமா, அம்பேத்கர் முக்கியமா என்பதைச் சொல்லாமல் சொல்லியதாக நான் நினைக்கிறேன். இதுவும் ஒரு வகையில் நிச்சயமாக பிளாக்மெயில்தான்.

நான் சொல்வதைச் செய்.. இல்லையெனில் செத்துப் போவேன் என்று இன்னொரு மக்களுக்கு கிடைக்க வேண்டியதை நிறுத்துவது எப்படி அரசியல் போராட்டத்தின் கீழ் வரும் என்று தெரியவில்லை. ஆனால் அன்றையச் சூழலில்.. இந்தியாவில் காந்தியாருக்கு இருந்த தேசத் தந்தை என்ற பெரும் பெயரில் நிச்சயம் இது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பது நாம் உணரக் கூடியதே..

இது பற்றிய பேச்சுவார்த்தைக்காக ராஜாஜியும், ராஜேந்திரபிரசாத்தும், பட்டேலும் அம்பேத்கரை சந்திக்கின்ற காட்சி சுவையானது. இந்தக் காட்சியில் ராஜாஜியின் முக பாவனை மிகவும் ரசிக்கக் கூடியதாக இருந்தது.. எத்தனை தலைவர்களுக்கு அம்பேத்கர் என்பவர் எவ்வளவு பெரிய ஆபத்தானவராக இருந்திருக்கிறார்.. எதிரியாக அவரைப் பாவித்திருக்கிறார்கள் என்பதை உணர்த்த இந்த ஒரு காட்சியே போதும் என்று நினைக்கிறேன்.

இரண்டு முறை காந்தியாரை நேரில் சந்தித்து பேசும் அம்பேத்கர் இறுதியில் வேறு வழியில்லாமல் நாட்டு நலனுக்காக தனது இனத்து மக்கள் நலனை பலிகடாவாக்கும் அந்தச் சோகக் காட்சியின் பதிவு இதுவரையிலும் எந்த ஒரு வரலாற்றுத் திரைப்படத்திலும் தென்படாதது.

இதனைச் செய்துவிட்டு அம்பேத்கர் காந்தியாரிடம் தெரிவிக்கும் அந்தப் புகழ் பெற்ற வசனமான, ““காந்திஜி, உண்ணாவிரதம் ஒரு பலமான ஆயுதம்தான். ஆனால் அதை அடிக்கடி கையிலெடுக்க வேண்டாம். ஆயுதமும் மழுங்கிவிடும். நீங்களும் இருக்க மாட்டீர்கள். இந்த தேசத்துக்கு நீங்கள் இன்னமும் தேவைப்படலாம்!”  என்பது காந்திஜி பற்றிய சிந்தனையை நமக்குள் மறுபரிசீலனை செய்ய வைக்கிறது.

இந்த ஒரு வசனம்தான் என்றில்லை.. காந்தியார் பற்றிய அம்பேத்கரின் விமர்சன வசனங்கள்தான் தியேட்டரில் அதிக கைதட்டல்களைப் பெற்றன.

'மகாத்மாக்கள் வருவார்கள், போவார்கள், தீண்டாமை இன்னும் அப்படியேதானே இருக்கிறது'

'காந்தி வெளிநாட்டுத் துணிகளையெல்லாம் எரித்துப் போராட்டம் செய்கிறாராம்' என்கிறார் ஒருவர். அதற்கு அம்பேத்கர் 'அவர் எரிக்க வேண்டிய விஷயம் இன்னும் நெறைய இருக்கு" என்கிறார்.

இது எல்லாவற்றையும்விட இன்னொரு வசனம்தான் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. சொல்லியிருப்பது உண்மையென்றாலும் சென்சார் போர்டில் எப்படி இதனை அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. நிச்சயமாக இந்த ஒரு விஷயத்துக்காக சென்சார் போர்டுக்காரர்களை பாராட்டலாம். அந்த வசனம் இதுதான் :

“காந்தியை துறவி என்றோ, மகாத்மா என்றோ அழைக்காதீர்கள். அவர் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி. சீஸனுக்கு சீஸன் அவர் குணம் மாறும். ஆதரவும் மாறும். ஆனால் இந்து மதத்தில் ஒரு அடிமைகளாக தலித்துகள் காலம் முழுவதும் நீடிக்க வேண்டும் என்ற அவரது ஆசை மட்டும் மாறாது.”

இந்த சில வசனங்கள் என்றில்லை.. இத்திரைப்படத்தில் பேசப்படும் அனைத்து வசனங்களுமே அரசியல் களத்தை சூடாக்குபவைதான்.

"ஆலய பிரவேசத்தைவிட அரசியலில் முக்கியத்துவம் பெறுவதுதான் அவசியமானது.." என்று மாநாட்டு மேடையில் நின்று பேசுகின்ற காட்சி..

"நம்மை இந்துக்களும் ஏற்பதில்லை.. நாம் போட்டியாக வந்து விடுவோமோ என நினைத்து மற்ற மதத்தினரும் ஏற்பதில்லை.."

"பலர் புத்த மதமும், பொதுவுடமையும் ஒன்று என நினைக்கின்றனர்.. பொதுவுடமை என்பது ஹிம்சை. புத்த மதம் அஹிம்சை.."

"எல்லா மதத் தலைவர்களும், தான்தான் கடவுளின் அவதாரம் என சொல்கின்றனர்.. புத்த மதத்தில் மட்டும்தான் ஜாதி இல்லை." - என்று தனது நண்பர்களிடம் குமுறுவது..

"நாங்கள் ஹிந்து மதத்தை விட்டு விலகுவதற்கு வருத்தப்படாதீர்க்ள்... நாங்கள் போவதால் அது தூய்மை ஆகிறது என சந்தோசப்படுங்கள்." என்று தன்னை சமாதானம் செய்ய வரும் இந்து மதத் தலைவர்களிடம் சொல்வது..

முழுக்க, முழுக்க அம்பேத்கரின் அரசியல் வாழ்க்கையைச் சொல்வதாக இருந்தாலும், கொஞ்சம் அம்பேத்கரின் குடும்ப வாழ்க்கையையும் இடையிடையே தொட்டுத் தொடரத்தான் செய்திருக்கிறார்கள்.

அவருடைய மனைவி ரமாபாயின் ஏக்கம், பரிதவிப்பு, அம்பேத்கரின் அருகாமையை உணர்ந்து காத்திருப்பது.. சாப்பிடாமல் இருப்பாரே என்ற கவலையுடன் டிபன் பாக்ஸுடன் அலுவலகத்திற்கு ஓடி வருவது.. இரண்டாவது முறையாக கல்வி பயில அம்பேத்கர் லண்டன் கிளம்பும்போது அதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவிப்பது.. அடுத்தடுத்து தனக்குப் பிறந்த பிள்ளைகளை இழப்பது என்ற கொடூரத்தில் அம்பேத்கரின் குடும்ப வாழ்க்கையின் இன்னொரு புறத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.

படத்தின் நீளத்தைக் கருத்தில் கொண்டு சிற்சில விஷயங்களைப் பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் பார்வையாலும், காட்சியாலுமே நகர்த்திக் கொண்டு போயிருக்கிறார். அம்பேத்கருக்கு சர்க்கரை வியாதி இருப்பதை வேலைக்காரன் கேட்கின்ற கேள்விக்கு “ஏன் என்னை சீக்கிரமா சாகடிக்கணும்னு பார்க்குறியா?” என்ற பதிலின் மூலம் உணர்த்தி எந்த மாதிரியான வாழ்க்கை முறையில் இந்தத் தலைவர் தனது இனத்து மக்களுக்காக இரவு, பகலாக உழைத்திருக்கிறார் என்பதைப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். தனது சோகமான வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் வயலின் வாசிப்பதிலும் மிகத் தேர்ச்சி பெற்றவராகவும், அது ஒன்றையே தனது ஓய்வு நேர செலவழிப்பாகவும் கருதிய அம்பேத்கரின் கலை ரசனையை வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

முதல் மனைவியின் இறப்புக் காட்சியில் இருக்கும் ஒரு கவிதைத்தனம் மிக ரசிப்புக்குரியது. பதைபதைப்புடன் தன்னைக் காண ஓடி வரும் கணவனிடம் “வெளியில் மழை பெய்கிறதா..?” என்று மனைவி ரமாபாய் கேட்கின்ற கேள்வியின் தொடர்ச்சியாக அவர்களது கல்யாண தினத்தன்று கொட்டித் தீர்த்த மழையில் ஒட்டி நின்ற அவர்களது முதல் நெருக்கத்தை அப்போதும் நினைத்துப் பார்க்க முயல்வது.. மிக உச்சமான ரசனைத்தனம்.

தனது முதல் மனைவி இறந்த பின்பு மருத்துவச் சிகிச்சைக்காகச் சென்ற இடத்தில் தனது நலனையே பெரிதும் விரும்பி கவனித்துக் கொண்ட தாதியையே விரும்பி மணந்து கொண்ட அவரது இன்னொரு மணவாழ்க்கைக் கதையும் படமாக்கப்பட்டிருக்கிறது.

காந்தியார் நேருவிடம் அம்பேத்கரை அமைச்சரவையில் சேர்க்கச் சொல்லியும் சட்டத் துறையை வழங்கக் கோரியும் சிபாரிசு செய்வதை மிக நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

அம்பேத்கர் காங்கிரஸ் கட்சியில் ஒருபோதும் உறுப்பினராகக்கூட இருந்ததில்லை. அதே சமயம் காந்தியாரின் மரியாதைக்குரிய எதிரியாகவும் இருந்திருக்கிறார் நேதாஜியைவிடவும். கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், தலைவர் பதவிக்குப் போட்டியிட்டபோது நேதாஜி ஜெயிப்பதற்காக நிறைய உதவிகளையும் அம்பேத்கரே செய்திருக்கிறார்.

இவ்வளவும் இருந்தும் காந்தியாரின் இந்த சிபாரிசு கவனிக்கத்தக்கதுதான். எனது கருத்து என்னவெனில், “அவர்களுக்கு நாம் எதுவுமே செய்யவில்லையே என்று அவர்கள் நினைக்கக் கூடாது என்பது காந்தியாரின் எண்ணமாக இருக்கலாம்” என்று நினைக்கிறேன். நேரு இதனை எற்றுக் கொண்டதுகூட இந்தியத் திருநாட்டுக்குக் கிடைத்த நன்மைக்கே.

பிரிட்டிஷ் இந்திய அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்து இந்தியாவிலேயே முதல் முறையாக தொழிலாளர் நலத்துறை மூலமாக தொழிலாளர்களுக்கு பணி நேரத்தை முறைப்படுத்தி உத்தரவிட்டவர் அம்பேத்கர்தான்.

அந்த அனுபவத்தோடும் தனக்கு உதவியாக நியமிக்கப்பட்டவர்களின் உதவிகள் கிடைக்காத சூழலிலும் தனியொரு மனிதனாக இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை வடிவமைத்துக் கொடுத்திருப்பது மிகப் பெரும் சாதனை.

இது பற்றி அப்போதைய பாராளுமன்றத்தில் எடுத்துக் காட்டும்போது அம்பேத்கர் மட்டுமே இதனைச் செய்து முடித்துள்ளார் என்கிறார் ஒரு உறுப்பினர். உடனேயே அம்பேத்கர் எழுந்து, “எனது சக உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன்தான் இந்த வேலையை செய்து முடித்தேன்..” என்று பெருந்தன்மையுடன் சொல்கிறார். இதனை எத்தனை தலைவர்களிடத்தில் காண முடியும்..?

பெண்களுக்கான ஜீவனாம்சம், மறுமண உறுதிச் சட்ட விதிமுறைகளை உள்ளடக்கிய இந்துச் சட்டத் திருத்தத்தை அம்பேத்கர் 1951-ம் ஆண்டு கொண்டு வந்தபோது, அதற்கு எழும்பிய எதிர்ப்பும், இதனைக் கண்டும் காணாததுபோல் பிரதமர் நேரு நடந்து கொண்டதையும் பார்த்துதான் மனம் வெறுத்து தனது சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

ஒரு சட்ட மாமேதையின் உதவியை இந்தியப் பாராளுமன்றமும், இந்திய அமைச்சரவையும் விடுதலை பெற்ற சில ஆண்டுகளிலேயே இழந்தது மிகக் கொடுமையான விஷயம். இதில் வெற்றி பெற்றவர்கள் இந்து சனாதனவாதிகள் என்றாலும் தீவிர நாத்திகர் என்று கருதப்படும் பண்டித நேரு எதற்காக இதற்கு உடந்தையாக இருந்தார் என்பது பற்றியும் இன்னொரு பக்கம் யோசிக்க வேண்டியிருக்கிறது.

அன்றையச் சூழலில் இந்தியப் பிரதமர்வரையிலும் ஆதிக்கம் செலுத்தக் கூடியவகையில் இருந்த இந்து சனாதனிகள்தான் இன்றைக்கும் பெண்கள் இட ஒதுக்கீடு மசாதோவை வேறு பெயர்களில் மறைமுகமாக எதிர்த்து வருகிறார்கள் என்பதையும் நாம் உணர வேண்டும்.

எந்தப் பக்கம் போனாலும் தான் ஒரு இந்துவாக இருப்பதாலேயே தான் அசிங்கப்படுத்தப்படுகிறோம் என்பது அம்பேத்கருக்கு மிகப் பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் விளைவாகவே அவர் இந்து மதத்தைத் துறப்பது என்ற முடிவுக்கு வந்து பெளத்தத்தை தழுவியிருக்கிறார்.

செய்தி கேள்விப்பட்டு சமாதானத்திற்கு ஓடி வரும் இந்து மடாதிபதிகளிடம் “நாங்கள்தான் தீண்டத்தகாதவர்களாயிற்றே.. நாங்கள் உங்களுடன் இருந்தாலென்ன? போனாலென்ன..?” என்று அம்பேத்கர் கேட்கின்ற கேள்வி நியாயமானதுதான்.

கிறித்துவம், இஸ்லாம், சீக்கியம் என்று இன்னும் புகழடைந்த பெரிய மதங்கள் இருந்தும் அம்பேத்கர் உருவ வழிபாடோ, மனிதர்களிடையே எவ்வித அடையாள பாகுபாடோ இல்லாத மதம்தான் தன்னை நாடியிருக்கும் மக்களுக்குத் தேவை என்று சொல்லி பெளத்த மதத்தைத் தழுவியிருக்கிறார்.

இத்தனை நாட்கள் அரும்பாடுபட்டும் தனது மக்களின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருப்பது இந்து மதமே என்றுணர்ந்த அவரது அந்த இறுதிச் செயல்தான் இந்திய அரசியல் வரலாற்றில் அம்பேத்கரின் பெயரை இன்றைக்கும் நிலைநிறுத்தியிருக்கிறது எனலாம்.

சாதியை எதிர்ப்பேன் என்பவர்களும், சாதியை நான் ஒரு பொருட்டாக கருதுபவனில்லை என்பவர்களும், சாதியெல்லாம் நான் பார்ப்பதில்லை என்று சொல்பவர்களும் மூல காரணியான இந்து மதத்தைவிட்டு விலகுவதில்லை. அதில் இருந்து ஒதுங்கியிருக்கிறோம் என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் அதைத் தூக்கியெறிய வேண்டும் என்று சொல்லி செயலிலும் செய்து காட்டியிருப்பவர் அம்பேத்கர் மட்டுமே. இதற்காக அவர் தொடுத்திருக்கும் காரணங்கள் மிக, மிக நியாயமானவை.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வோடு திரைப்படம் நிறைவடைகிறது.. இதுதான் எனது வருத்தமும்கூட.. அவரது இறப்பு மற்றும் இறுதி ஊர்வலக் காட்சிகளையும் சேர்த்து வெளியிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

படம் முழுவதும் வியாபித்திருக்கிறார் மெகா ஸ்டார் என்னும் மம்முட்டி. எந்த இடத்திலும் கேரளாவின் முன்னணி நடிகராக அவர் தென்படவில்லை. முதல் காட்சியில் இருந்து முடிவுக்கு வருகின்றவரையிலும் அம்பேத்கரை தவிர வேறு யாரையும் நான் பார்க்கவில்லை.


காந்தியார் இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டவுடன் தன் கையில் இருந்த புத்தகத்தை நழுவவிட்டுவிட்டு தன் நெஞ்சில் கை வைத்துக் கொண்டு நிற்கும் ஒற்றை ஷாட்டிலேயே அத்தனை சோகத்தையும்  காட்டிவிட்டார் மம்மூக்கா.

மம்முட்டியின் ஆவேசமில்லாத இயல்பான இயல்பான நடிப்பு, ஜின்னாவை பாராளுமன்ற லாபியில் அவர் சந்தித்து பேசுகின்ற காட்சிதான். முதல் மாநாட்டில் அவர் கையை உயர்த்தி "கற்பி, புரட்சி செய், ஒன்று சேர்.." என்று முழுக்கத்துடன் ஆரம்பிக்கும் அவரது ஆட்சேபணையான குரல்கள் ஒன்று சேர்ந்து இறுதிவரையிலும் தொடர்ந்துள்ளன. இவரது மனைவியாக நடித்திருக்கும் சோனாலி குல்கர்ணி இந்த ஒரு திரைப்படத்தில்தான் இப்படி சாந்த சொரூபியாக நடித்திருப்பார் என்று நினைக்கிறேன். லட்சக்கணக்கான அப்பாவி இந்திய மனைவிமார்களின் ஒரு அடையாளமாக இருந்திருக்கிறார் ரமாபாய். கூடவே அம்பேத்கரின் அண்ணனுக்கும், அவருக்குமான குடும்பப் பிரச்சினைகளையும் மறைக்காமல் காட்டியிருப்பதும் நேர்மையான விஷயம்தான்.

இத்திரைப்படத்தில் காந்தியாரை காட்டியிருப்பது வேறு எந்தத் திரைப்படத்திலும் இப்படி நகைச்சுவையாக காட்டவேயில்லை.  இந்தியாவின் அடையாளம்.. அஹிம்சையின் மறு உருவம் என்றெல்லாம் புகழப்பட்ட ஒரு மனிதரை அவருடைய உடல் அசைவுகளினாலும் திருட்டு முழிகளினாலும் அப்பாவி மனிதரைப் போலவும், சில இடங்களிலும் திருட்டுத்தனக்காரர் போலவும் காட்டியிருக்கும் இயக்குநரின் தைரியத்தைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

பரோடா, நாக்பூர், பூனா, கொலம்பியா, லண்டன், டெல்லி, மும்பை என்று பல இடங்களையும் சுற்றி வந்தாலும் நிஜத்திற்கு அந்தக் கால  வாழ்க்கையை வடிவமைக்க கலை இயக்குநர் ரொம்பவே மெனக்கெட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவருக்கும் எனது பாராட்டுக்கள்.

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை மம்முட்டி பெற்றதில் பெரிய ஆச்சரியமில்லை. அதேபோல் இத்திரைப்படம் பெற்ற விருதுகளெல்லாம் நிச்சயமாகக் கொடுக்கப்பட வேண்டியவைதான். இத்திரைப்படத்தில் பங்கு கொண்ட அத்தனை கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துகளும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும்..

இத்திரைப்படம் இப்போது சென்னையில் ஆல்பர்ட் திரையரங்கில் மட்டுமே காலை காட்சியாக ஓடிக் கொண்டிருக்கிறது. அரை நாள் விடுப்பு எடுத்தாவது இத்திரைப்படத்தை குடும்பத்துடன் சென்று பாருங்கள்.. உங்களிடமிருந்து மறைக்கப்பட்ட பல வரலாற்று உண்மைகளை இத்திரைப்படம் எடுத்துச் சொல்கிறது.

தமிழில் டப்பிங் செய்யப்பட்ட பிரதிகள் மிகக் குறைவாக இருப்பதாலும் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் சோம்பலினாலும் இனிமேல்தான் சென்னையைத் தாண்டிய பகுதிகளுக்கு இப்படம் வரப் போகிறது. அப்படி வரும்பட்சத்தில் கண்டிப்பாகப் பார்க்கத் தவறாதீர்கள்.

பள்ளிப் பருவத்தில் வெறும் சட்ட மேதை, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவர் என்ற இரண்டு பிரிவுகளில் மட்டுமே நம் கண் முன்னே அம்பேத்கரை கொண்டு வந்திருக்கும் இப்போதைய அரசியல் ஆட்சியாளர்களின் முகத்திரையை இத்திரைப்படம்தான் கிழித்திருக்கிறது.

செளகார் குளத்தில் நீர் அருந்த வேண்டி அம்பேத்கர் நடத்தியிருக்கும் போராட்டமும், கோவில் நுழைவு போராட்டமும், தாழ்த்தப்பட்டோருக்கு அரசியல், வாழ்வியல் உரிமைகள் கேட்டு போராடிய அம்பேத்கரின் மிக நீண்ட அரசியல் வாழ்க்கையும் மிக மிக நன்கு திட்டமிட்டு நம்மைப் போன்ற இளைய தலைமுறைகளிடமிருந்து மறைக்கப்பட்டிருக்கிறது.

தண்டி யாத்திரையை 6-ம் வகுப்பிலேயே சொல்லிக் கொடுத்த ஆட்சியாளர்கள் இந்த செளகார் குளம் விஷயத்தை ஏன் சொல்லித் தருவதில்லை..? சைமன் கமிஷனை எதிர்த்து காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டத்தை இந்திய மக்களே எதிர்த்ததாக பொய்ப் பிரச்சாரம் செய்து நமது புத்தியில் புகுத்தியது ஏன்..? சைமன் கமிஷன் முன்பும், வட்ட மேசை மாநாட்டில் காந்தியாரின் முன்பாகவே தாழ்த்தப்பட்டோருக்கான ஒரே பிரதிநிதி நான்தான் என்ற உண்மையை முழங்கியிருக்கும் அம்பேத்கரின் உண்மைப் பேச்சை நம்மிடமிருந்து மறைத்தது ஏன்..? இப்படி நேற்றைய, இன்றைய ஆட்சியாளர்களிடம் நாம் கேட்க வேண்டிய பல கேள்விகளை இத்திரைப்படம் நமக்குள் எழுப்புகிறது.

இந்தச் சந்தேகங்களுக்கு விடை தேட வேண்டுமாயின் நாம் பள்ளிப் பருவத்தைப் புறக்கணித்து அம்பேத்கரை வெறும் புத்தகங்கள் வாயிலாக மட்டுமே அறிந்து கொள்ள வேண்டும் என்கிற சூழல் இருக்கின்றபோது இது போன்ற திரைப்படங்களை வரவேற்க வேண்டியது நமது தலையாய கடமையாகும்.

பொறுமையுடன் படித்தமைக்கு எனது நன்றிகள்..

அண்ணல் அம்பேத்கரின் திரைப்படம் வெளியானது..!

03-12-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

"நாம் யாருக்கும் அடிமை இல்லை. நமக்கு அடிமைகள் யாருமில்லை" என்கிற உயரிய மனித தத்துவத்திற்கு உத்வேகமாக விளங்கிய  அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை சரித்திரத்தை உள்ளடக்கிய திரைப்படம், பல தடைகளைத் தகர்த்தெறிந்து இன்று தமிழ்நாட்டில் வெளியாகியுள்ளது.


இன்று காலை முதல் காட்சியாக சென்னை எழும்பூர் ஆல்பர்ட் திரையரங்கில் இத்திரைப்படம் கோலாகலமாகத் திரையிடப்பட்டது. உண்மையாகவே அண்ணல் அம்பேத்கரின் மேல் பாசம் கொண்டவர்கள், உள்ளன்போடு நேரில் வந்திருந்து படத்தினை கண்டு களித்தனர்.


அம்பேத்கரை தங்களுடைய அரசியல் பொழைப்புக்காக பயன்படுத்துபவர்கள்தான் அதிகம் என்ற எனது அனுமானம் பலித்திருப்பதுதான் கொஞ்சம் சோகம் ததும்பும் விஷயம். நேற்று முளைத்த நடிகர்களுக்கெல்லாம் தோரணங்களும், கொடிகளும், போஸ்டர்களுமாக கலகலத்துப் போகும் சூழலில் நாட்டில் அரசியல் சட்டத்திற்கே ஆதிமூலமாக விளங்கிய இந்த அண்ணலுக்கு தங்களால் முடிந்த அளவுக்கான வரவேற்பை அளித்து வரவேற்றனர் அவரது எளிய பக்தர்கள்.


எந்திரன் திரைப்படத்திற்காக ரஜினியின் மாபெரும் கட்அவுட் இன்னமும் அகற்றப்படாத சூழலில், அண்ணாந்து பார்த்தால்தான் தெரியும் என்பதைப் போல அம்பேத்கர் படத்திற்காக ஒரேயொரு போஸ்டர் மட்டுமே அடையாளத்திற்கு ஒட்டப்பட்டிருந்தது. வந்திருந்த தோழர்கள்தான் தாங்கள் கையோடு கொண்டு வந்திருந்த போஸ்டர்களை ஒட்டி எண்ணிக்கையைக் கூடுதலாக்கினர்.

வடபழனியில் இருந்து எழும்பூர் சென்றடையும்வரையிலும் நான் பார்த்து மூன்றே மூன்று போஸ்டர்கள் மட்டுமே அம்பேத்கர் படத்திற்கு ஒட்டப்பட்டிருந்தது சோகமான விஷயம். அரசு அமைப்புகளின் வேலை செய்யும் லட்சணம் இதுதான் என்று நம் மனதை நாமே சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்..

விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் யாரும் வரவில்லை. அவர்களுடைய வரவேற்பும் இன்று இங்கில்லை. நாளை காலை பால அபிராமியில் நடக்கும் ஷோவில் அவர்கள் ஷோ காட்டவிருப்பதாகச் செய்திகள் சொல்கின்றன. அபிராமி தியேட்டர் வாசலில் திருமாவளவனின் பெரிய போஸ்டர் ஒன்றை வைத்து அதில் ஒரு மூலையில் அம்பேத்கர் படத்தையும் ஒட்டி வைத்து வரவேற்றுள்ளனராம் சிறுத்தைகள் அமைப்பினர். அம்பேத்கரை வைத்து ஓட்டு அரசியல் செய்பவர்கள் இதைத் தவிர வேறென்ன செய்வார்கள்..?

ஒரு பெரிய இயக்கம் என்றால் குழு, பிரிவுகள் இருப்பது சகஜமானதுதான். ஆனால் அதற்காக இது போன்ற நிகழ்வுகளில்கூட தங்களது பங்களிப்பைத் தராமல் ஒதுங்கி நிற்பதும், மேம்போக்காக விளம்பரத்திற்காக உழைப்பதும் அம்பேத்கருக்கு செய்கின்ற துரோகம். என்ன செய்வது துரோகம்தானே அரசியலின் முதல் சூத்திரம்..?

அவரவர் கட்சி மாநாடுகள் என்றால் என்னென்ன செய்வார்கள் என்பதை நாமும் நேரில் பார்த்தவர்கள்தானே..? ஊரில் எந்தப் பக்கம் திரும்பினாலும் அவர்கள்தான் இருப்பார்கள். அந்த அளவுக்கு தங்களது புகைப்படத்தை போட்டு விளம்பரம் செய்து கொள்பவர்கள், பிழைப்புக்கு வழி காட்டியிருக்கும் அண்ணலின் திரைப்படத்திற்காக துளியும் கவலைப்படாமல் இருப்பது கேவலமானது.. இவர்களது உண்மையான அரசியல் நோக்கம் என்ன என்பதை இப்போதாவது தமிழகத்து மக்களும், நடுநிலையாளர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்..

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தினரும், அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களும், இன்ன பிற அம்பேத்கர் பெயரிலான சிறு அமைப்பினரும், மத்திய அரசு தாழ்த்தப்பட்ட ஊழியர்கள் சங்கத்தினரும்தான் திரண்டு வந்திருந்தனர். நமது வலையுலகில் இருந்து நண்பர் பார்வையாளன் படம் பார்க்க வந்திருந்தார். தோழர் கும்மியும், கார்ட்டூனிஸ்ட் பாலாவும் திரைப்பட வெளியிட்டை நேரில் பார்க்க வந்ததாகவும், நாளை படம் பார்க்க டிக்கெட் ரிசர்வ் செய்திருப்பதாகவும் சொல்லிவிட்டுச் சென்றார்கள்.


வீரன் அழகுமுத்துக்கோன் சிலை அருகேயிருந்து பறை, தப்பு கொண்டாட்டத்தோடு ஒரு சிறு ஊர்வலத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். அக்கம்பக்கத்தினரே என்ன விஷயம் என்று கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய நிலைமையில்தான் அம்பேத்கர் படம் பற்றிய விழிப்புணர்வும், விளம்பரமும் இருந்தது. ஊர்வலம் திரையரங்குவரையிலும் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்தோடு வந்தது.

கூட்டத்திற்கு வந்த அமைப்பினர் சிலர் தாங்கள் கையோடு கொண்டு வந்திருந்த போஸ்டர்களையும், தட்டிகளையும் வைத்த பின்புதான் சாலையில் நின்று வேடிக்கை பார்த்தவர்களுக்கே அம்பேத்கர் படம் பற்றித் தெரிந்தது.. அந்தவரையிலும் அவர்களுக்கு நன்றி..

திரையரங்கு வாசலில் அம்பேத்கர் பற்றிய முழக்கங்களை தொடர்ந்து பத்து நிமிடங்கள் ஓங்கிய குரலில் ஒலித்துவிட்டுத்தான் கூட்டம் அரங்கத்திற்குள் நுழைந்தது. அனைவருக்கும் ஓரளவுக்கு திருப்தியளிக்கும் அளவுக்குக் கூட்டம் வந்திருந்தது. 75 சதவிகிதம் டிக்கெட்டுகள் விற்பனையானதாக படத்தின் முடிவில் நான் கேட்ட தியேட்டர் ஊழியர் ஒருவர் கூறினார்.

படத்தின் துவக்க நேரம் முன்பே குறிப்பிட்டிருந்தும் பல தோழர்கள் தாமதமாகவும் வந்து கலந்து கொண்டார்கள். அதேபோல் அக்கம்பக்கம் ரோட்டோரமாக குடியிருக்கும் விளிம்பு நிலை மக்களையும் படம் துவங்கிய சிறிது நேரம் கழித்து தியேட்டர் நிர்வாகம் உள்ளே அனுமதிக்க.. சின்னச் சின்ன வாண்டுகளெல்லாம் உள்ளே வந்து படத்தைப் பார்த்தார்கள். தியேட்டர் நிர்வாகத்திற்கு நன்றி..


இத்திரைப்படம் பால அபிராமி தியேட்டரிலும் டிசம்பர் 4,5,11,12,18,19,25,26 ஆகிய விடுமுறை தினங்களில் காலை 91.5 மணிக்கு திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்பார்ந்த பதிவர்கள் இத்தனை நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் இத்திரைப்படத்தை கண்டு களிக்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

திரைப்படமும் நம்மை துளியும் ஏமாற்றவில்லை.. மூன்று மணி நேரம் ஓடியதுகூட தெரியவில்லை. அந்த அளவுக்கு படத்தில் ஒன்றிப் போய்விட்டேன். மிக அருமையான இயக்கம்.. மம்முட்டி அம்பேத்கராகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார். விமர்சனத்தை தனிப் பதிவில் நாளை எழுதுகிறேன். இதுவொரு அறிமுகப் பதிவு மட்டுமே..

திரைப்பட ஆர்வலர்களையும் தாண்டிய நிலையில் நாம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படமாகவும் இது உள்ளது. சுதந்திரப் போராட்ட வரலாற்றில் நம்மிடமிருந்து மறைக்கப்பட்ட ஒரு வரலாற்றை இத்திரைப்படம் சொல்கிறது என்பது மட்டும் உண்மை.

இதனை நமது வாரிசுகளுக்கு நாம் எடுத்துச் சொல்ல வேண்டியது நமது கடமையாகிறது. ஆகவே வலைப்பதிவர்களே, தோழர்களே அவசியம் இத்திரைப்படத்தைச் சென்று பாருங்கள்.. பார்ப்போரிடத்தில் எல்லாம் சொல்லுங்கள். நமது வாழ்க்கையில் ஒரு முறைதான் இது போன்ற உண்மையானதொரு அனுபவத்தைப் பெற முடியும்.

அண்ணல் அம்பேத்கர் திரைப்படம் வெளியாக அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்த அத்தனை தோழர்களுக்கும், அமைப்புகளுக்கும், நிர்வாகிகளுக்கும் எனது நன்றி..

புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : கவாஸ்கர் (தீக்கதிர்)

அம்பேத்கர் திரைப்படம் வெளியீடு - திரையரங்குகள், நேரம் மாற்றம்..!

30-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
 
அம்பேத்கர் படம் பற்றிய பதிவைப் படித்துவிட்டு பின்னூட்டத்தில் வாழ்த்திய அன்பர்களுக்கு நன்றி.. தொலைபேசியில் பலரும் அழைத்து திரையரங்குகள் பற்றிய சந்தேகங்களைக் கேட்டார்கள். மேலும் ஐநாக்ஸ் திரையரங்கு பற்றி இறுதி முடிவு எடுக்காததால் தியேட்டர் நிர்வாகமும் நேற்று முன்தினம் வரையிலும் கருத்து சொல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் மேலும் நான் விசாரித்தபோது சில தகவல்கள் தெரிந்தன. பிரபல தயாரிப்பாளர் விஸ்வாஸ் சுந்தருக்குக் கொடுத்திருந்த மூன்றாண்டு தவணைக் காலம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்துவிட்டதால் தற்போது அம்பேத்கர் திரைப்படத்தின் தமிழ்ப் பதிப்பின் விநியோக உரிமை திரைப்பட வளர்ச்சிக் கழகத்துக்கே திரும்பவும் கிடைத்துவிட்டது.

தற்போது படம் திரையிடல், விளம்பரங்கள் போன்றவற்றை திரைப்பட வளர்ச்சிக் கழகமே செய்து வருகிறது. நேற்று இன்னும் கூடுதலாக சில திரையிடல் வசதிகளை திரைப்பட வளர்ச்சிக் கழகம் செய்திருப்பதாகத் தெரிகிறது.

சென்னையில் சத்யம், ஐநாக்ஸ், எஸ்கேப், அபிராமி ஆகிய திரையரங்குகளில் மதியக் காட்சியில்(Noon Show) மட்டும் அம்பேத்கர் படம் திரையிடப்படுகிறதாம். வரும் 4, 5 ஆகிய இரண்டு நாட்களில்(சனி, ஞாயிறு) மட்டும்தானாம்.

ஆல்பர்ட் திரையரங்கில் வரும் டிசம்பர் 3-ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் தினம்தோறும் ஒரு வாரத்திற்கு காலை காட்சியாக(11.30 மணிக்கு) மட்டும் அம்பேத்கர் திரைப்படம் திரையிடப்படுவதாக நேற்று மாலை முடிவான, இறுதியான செய்தியாகக் கூறினார்கள்.

இது பற்றி இன்று வெளியான 'தினத்தந்தி', 'தினகரன்' பத்திரிகைகளில் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் விளம்பரமும் வெளியிட்டுள்ளது.

அம்பேத்கர் திரைப்படத்தின் தமிழ்ப் பதிப்பின் வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 3-ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை எழும்பூர், ஆல்பர்ட் தியேட்டர் வளாகத்தில் கோலாகலமாக நடைபெறும் என்று தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் கூறுகின்றனர். சென்னைவாழ் பதிவர்களை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு அன்போடு அழைக்கிறேன்.

காலை காட்சி மட்டும்தான் என்பது நமக்கு மிகவும் சிரமமானதுதான். வார நாட்களில் செல்ல முடியாது என்றாலும்.. டிசம்பர் 4, 5(சனி, ஞாயிறு)தேதிகளில் காலை, மதியம் என இரண்டு காட்சிகள்  இருக்கின்றன. இதில் ஏதேனும் ஒரு நாளில் சிரமத்தைப் பொருட்படுத்தாமல் திரையரங்கிற்குச் சென்று படத்தினை கண்டுகளிக்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

மேற்கொண்டும் திரையிடல் சம்பந்தமாக ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அதனை இந்தப் பதிவின் பின்னூட்டத்தில் தெரிவிக்கிறேன்.

நன்றி..!

அம்பேத்கர் என்ன பாவம் செய்தார்..?

28-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அது 1982-ம் வருடம். திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஒரு பகல் பொழுதில் வகுப்பறைக்குள் நுழைந்த அலுவலக பியூனிடம் இருந்து வாங்கிய நோட்டை பார்த்துவிட்டு எனது அறிவியல் ஆசிரியர் அமல்ராஜ் இப்படி கூறினார்.. “அடுத்த வாரம் 'காந்தி' படத்துக்கு உங்களையெல்லாம் கூட்டிட்டுப் போறாங்கப்பா.. டிக்கெட் 1 ரூபாதான்.. கண்டிப்பா எல்லாரும் வந்தாகணுமாம்..” என்று சொல்லி முடிப்பதற்குள் வகுப்பறைக்குள் டெஸ்க்குகள் உடைந்துவிடுவதைப் போன்ற தட்டல்களுடன், சந்தோஷக் கூச்சல்கள். மறக்க முடியவில்லை அந்த உற்சாகத்தை..!

அதேபோல் ஒரு மதியப் பொழுதில் எனது பள்ளிக்கு எதிர் தெருவில் இருந்த 'சோலைஹால்' தியேட்டருக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் வரிசையாக அணிவகுத்து சென்று அந்தப் படத்தை பார்த்தது இன்றைக்கும் நினைவுக்கு இருக்கிறது..

'தேசத் தந்தை'யின் இந்த வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்களும் நிச்சயம் பார்த்தே தீர வேண்டும் என்று கட்டாயப்படுத்தி பார்க்க வைத்த அந்தப் புண்ணியவான் யாரோ.. அவருக்கு எனது முத்தங்கள். நன்றிகள்..!

அதுவெல்லாம் அந்தக் காலம் என்று கண்களில் ஏக்கத்தை வைத்துக் கொண்டு தொண்டையில் சொற்கள் சிக்கிக் கொண்டு பேச முடியாமல் தவி்த்தபடியே இப்போது சொல்கிறார்கள் 'பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கர்' திரைப்படத்தை வெளியிடவே முடியவில்லையென்று..!




காந்திக்கு, அம்பேத்கர் எந்தவிதத்தில் குறைந்தவர் என்று எனக்குத் தெரியவில்லை. காந்தி இந்தியாவின் பெருவாரியான மக்களால் விரும்பப்பட்டவராக இருக்கலாம். 'தேசத் தந்தை' பட்டத்துக்கு உரியவராக இருக்கலாம். ஆனால் அதே சமயம் அம்பேத்கரும் தனது இறுதிக் காலம் வரையிலும் இந்த நாட்டுக்காகத்தான் உழைத்தார். அவரைத் தெய்வமாகத் தொழுத மக்களுக்கும் அவர்களின் வாரிசுகளுக்கும் இன்றளவும் அவர்தான் தந்தை.

சுதந்திரப் போராட்ட தளகர்த்தர்களில் ஒருவர். சாதிய, சமய முரண்பாடுகளின் மூட்டையாகத் திகழும் இந்தியாவில் அடித்தட்டு மக்களுக்காக குரல் கொடுத்த புண்ணியவான்.. எல்லாம் தலையெழுத்து என்று சொல்லி ஒதுங்கிப் போகாமல், முடிந்தால் அசுத்தமான சேரியையும், சுத்தமான அக்ரஹாரமாக்கலாம் என்று முனைந்தவர்.

சுதந்திர இந்தியாவுக்கு அடிப்படைத் தேவையான அரசியல் சட்டத்தை வடிவமைத்துக் கொடுத்தவர்.. சட்ட மாமேதை என்று இன்றைக்கும் சட்ட வல்லுநர்களால் ஆச்சரியத்துடனும், பிரமிப்புடனும் பார்க்கக் கூடியவர்.. இவரது வாழ்க்கை வரலாறு இந்தியாவின் குடிமகன்கள் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய, அறிய வேண்டிய விஷயம். ஆனால் ஏன் முடியவில்லை..?

NFDC என்றழைக்கப்படும் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகமும், மகாராஷ்டிரா அரசும், மத்திய அரசின் சமூக நீதித்துறையும் இணைந்துதான் இத்திரைப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

கடந்த 1991-ம் ஆண்டே மகாராஷ்டிர அரசு இந்தப் படத்தின் தயாரிப்புக்காக 7.7 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. படத்தில் நம்முடைய மெகா ஸ்டார் மம்முட்டிதான அம்பேத்கராக வாழ்ந்து காட்டியிருக்கிறார். ஜாபர் பட்டேல் இயக்கம் செய்திருக்கிறார். ஆயிரக்கணக்கான நடிகர்களைப் பிடித்து மேக்கப் டெஸ்ட் வைத்து, சோதனை செய்து பார்த்துவிட்டு கடைசியாகத்தான் பொருத்தமான நடிகராக மம்மூட்டி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

ஆங்கிலத்தில் மட்டுமல்லாது, இந்தியாவின் பிற 9 மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட இந்தப் படத்தின் ஆங்கிலப் பதிப்பு, 1999-ம் வருடம் வெளியாகியுள்ளது. ஹிந்தி பதிப்பு 2000-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி வெளியானது.

மிகத் துல்லியமாக ஆய்வு செய்யப்பட்டு எடுக்கப்பட்ட சிறந்த படமாக பத்திரிக்கைகள் இத்திரைப்படத்தைக் கொண்டாடியிருக்கின்றன. இதனால் அந்த ஆண்டுக்கான  சிறந்த  படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த கலை இயக்கம் உள்ளிட்ட பிரிவுகளில் தேசிய விருதுகளை இப்படம் பெற்றுள்ளது. மம்முட்டி இந்தப் படத்தின் மூலம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை மூன்றாவது முறையாகப் பெற்றிருக்கிறார்.

இதற்குப் பின் மராத்தி மொழியிலும், பிற சில மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு மகாராஷ்டிராவிலும் இப்படம் திரையிடப்பட்டுள்ளது.. அத்தோடு இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட வேண்டும் என்ற நல்ல கொள்கையுடன் அதற்கான நிதியுதவிகூட மத்திய அரசால் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தத் தகவல்கூட வெளியில் தெரியாமல் போனதுதான் நமது அரசியல் நிர்வாகத்தின் லட்சணம்.

தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் இத்திரைப்படத்தை தமிழில் வெளியிடுவதற்காக முனைந்தபோது மம்முட்டி நடித்திருக்கிறார் என்பதால் ஒரு சாதாரணமான திரைப்படம் போலவே வெளியிட முயற்சி எடுத்திருக்கிறது.

இதனால் முன்னாடியே போய் வாங்கிவிடுவோம் என்ற சினிமா வியாபார தந்திரத்தின் அடிப்படையில் 'ஆஸ்கர் பிலிம்ஸ்' ரவிச்சந்திரனின் சகோதரரான 'விஸ்வாஸ்' சுந்தர் 'அம்பேத்கர்' திரைப்படத்தை தமிழில் வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறார். இது நடந்தது 2007-ம் ஆண்டு என்கிறார்கள்.

ஆனால் 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டுவரையிலும் இத்திரைப்படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிட முயற்சிகள் செய்யாமல் அப்படியே வைத்திருந்தது ஏன் என்பது மத்திய அரசுக்கும், திரைப்பட வளர்ச்சிக் கழகத்துக்குமே தெரிந்த ரகசியம்..!

திரைப்பட வளர்ச்சிக் கழகம் 3 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ்தான் 'விஸ்வாஸ்' சுந்தருக்கு அத்திரைப்படத்தை வழங்கியிருக்கிறது. அந்த ஒப்பந்தம் 2010 செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறதாம். அதற்குள்ளாக அவர் படத்தினை அவரது சொந்த செலவில் டப்பிங் செய்து எத்தனை முறை வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் திரையிட்டுக் கொள்ளலாம். இதுதான் ஒப்பந்தம்.

ஆனால் படத்தினை வாங்கிய விஸ்வாஸ் சுந்தர் இத்திரைப்படத்தை வெளியிட இன்றுவரையிலும் முன் வரவில்லை. காரணம் ஏனென்று அப்போது தெரியவில்லை. கடைசியில்தான் தெரிந்தது. அவர் ஒரு ஆர்வத்தில்தான் அந்தப் படத்தினை வாங்கியிருக்கிறார் என்று.! ஆனால் தினம்தோறும்தான் நமது திரையுலக நடைமுறை வியாபாரங்கள் மாறிக் கொண்டேயிருப்பதால் இந்த நேரத்தில் அத்திரைப்படத்தை தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் திரையிட முடியாது என்கிற யதார்த்த உண்மையைப் புரிந்து கொண்டு அமைதியாக இருந்திருக்கிறார்.

ஆனால் அம்பேத்கரின் சில தொண்டர்கள் சும்மா இருக்கவில்லை. பெரியார் திராவிடர் கழகத்தினர், வே.மதிமாறன் தலைமையிலான இயக்கம், ம.க.இ.க. இன்னும் பிற தோழமை இயக்கங்கள் எல்லாம் இது குறித்து கேள்விகளை எழுப்பிய வண்ணம் இருந்தன.  நாள்தோறும் தனக்கு நடத்தப்படும் பாராட்டு விழாவுக்கு மட்டுமே செவி கொடுக்கும் நமது அன்பு முதல்வருக்கு இதெல்லாம் கேட்கவா போகிறது..?

'அம்பேத்கர் விருதை' மட்டும் ஆர்வத்துடன் ஓடோடிப் போய் வாங்கியவர் இத்திரைப்படம் பற்றிய செய்தியை மட்டும் கண்டும், காணாததுபோல் இருந்துவிட்டார். ஒருவேளை அம்பேத்கரின் பெயருக்கு தமிழ்நாட்டில் ஓட்டு வங்கி இல்லை என்று நினைத்துவிட்டாரோ என்னவோ..? தாத்தாவுக்குத்தான் இப்போது ஓட்டுக்களைத் தவிர வேறு எதுவும் கண்ணுக்குத் தெரியாது..!

இடையில் வே.மதிமாறன் தலைமையிலான இயக்கத்தவர்கள் திரைப்பட வளர்ச்சிக் கழகத்திடம் நேரில் சென்று இது குறித்து கேட்டபோது அவர்கள் விஸ்வாஸ் சுந்தரை கை காட்டியிருக்கிறார்கள். விஸ்வாஸ் சுந்தரிடம் அவர்கள் கேட்டபோது “வாங்கி வைச்சிருக்கிறவனுக்கு படத்தை வெளியிடத் தெரியாதா..? செய்வோம்..” என்று பட்டும் படாமல் சொல்லியிருக்கிறார்.

இது குறித்து பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்டவர்கள் சிலர் போராட்டத்தில் குதித்த பின்புதான் படத்தை வெளியிட முயற்சி செய்யும்படி திரைப்பட வளர்ச்சிக் கழகத்தினர், விஸ்வாஸ் சுந்தரை வற்புறுத்தியிருக்கின்றனர்.

தமிழகச் சட்டமன்றத்தில் உறுப்பினர் செல்வப்பெருந்தகை இத்திரைப்படம் பற்றி கேள்வி எழுப்பியபோது, "இத்திரைப்படத்தின் டப்பிங் செலவுக்காக பத்து லட்சம் ரூபாயை அரசு ஒதுக்கியிருப்பதாக" பலத்த கை தட்டலுடன் சொல்லிவிட்டு அமர்ந்துவிட்டார் அமைச்சர் பரிதிஇளம்வழுதி.

  
"அதான் பத்து லட்சம் கொடுத்தாச்சே.. போய் டப்பிங் பண்ணிட்டு படத்தை ரிலீஸ் செஞ்சுக்குங்க.." என்று மறைமுகமாகச் சொல்லிவிட்டார் தாத்தா.. ஆனால் அது சாத்தியமா என்றாவது யோசித்திருக்க வேண்டாமா..? பாவம்.. அவருக்கே அடுத்த பாராட்டு விழா நடத்த ஆள் இல்லாத சோகம்..! என்ன செய்வது..? அவர் கவலை அவருக்கு..!

இந்த நிலையில் கடந்த மே மாதம் சத்தியசந்திரன் என்னும் வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றத்தில் 'அம்பேத்கர்' திரைப்படத்தை தமிழகத்தில் விரைவில் வெளியிட வேண்டும் என்று கோரி மனு செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், “அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு, ஆங்கிலத்தில் படமாக தயாரிக்கப்பட்டது. அதில், நடிகர் மம்முட்டி நடித்துள்ளார். ஜாபர் பட்டேல் இயக்கியுள்ளார். இந்தி, மராத்தி மற்றும் சில மாநில மொழிகளில் இப்படம், ‘டப்’ செய்யப்பட்டது. தமிழில் இப்படத்தை ‘டப்’ செய்ய, 10 லட்சம் ரூபாயை தமிழக அரசு வழங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின் நடவடிக்கை இல்லை. இந்த படத்தை தமிழில் வெளியிட, உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக அரசுக்கும், தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்துக்கும் மனு அனுப்பினேன். இதற்கு எந்த பதிலும் இல்லை. எனவே, அம்பேத்கர் படத்தை தமிழில் வெளியிட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று குறிப்பிட்டிருந்தார்.

மனுவை அப்போதைய தற்காலிக தலைமை நீதிபதி தர்மாராவ், நீதிபதி சசிதரன் அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ விசாரித்தது. விசாரணை முடிவில் தீர்ப்பாக, “படத்தின் வினியோக உரிமை ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது. தமிழக அரசிடம் வரிச் சலுகை பெறும் நடவடிக்கையில், வினியோகஸ்தர் ஈடுபட்டுள்ளார். வரிச் சலுகை பெற்ற உடனேயே, படத்தை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படுமென திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் வக்கீல் தெரிவித்துள்ளார்.  தமிழக அரசு டப்பிங் செலவுகளுக்காக 10 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது என்றும், படம் விரைவில் வெளியாவதில், தமிழக அரசும் ஆர்வமாக உள்ளது என்றும், அரசு பிளீடர் ராஜா கலிபுல்லா தெரிவித்துள்ளார்.

எனவே, வரிச்சலுகை குறித்து இரண்டு வாரங்களில் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும். படத்தை எவ்வளவு விரைவில் வெளியிட முடியுமோ அவ்வளவு விரைவில் வெளியிட, தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்துக்கு உத்தரவிடப்படுகிறது. எப்படியானாலும் இன்னும் நான்கு வாரங்களுக்குள் படத்தை வெளியிட வேண்டும்" என்று மே 15-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

அடுத்த ஒரு மாதத்திற்குள் படம் நிச்சயம் வெளியாகிவிடும் என்று அம்பேத்கர் பக்தர்களும், சினிமா ஆர்வலர்களும் ஆவலோடு காத்திருந்தார்கள். ஆனால் படம் வெளியாகவில்லை. படம் வெளியாக சென்னை உயர்நீதிமன்றம் விதித்திருந்த கெடு ஜூன் 16-ம் தேதி முடிவடைய இருந்தது.

அதற்குள்ளாக ஜூன் 7-ம் தேதியன்று  தமிழில் அம்பேத்கர் படத்தை வெளியிட, 90 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்க தமிழக அரசு,  மற்றும் புதுச்சேரி அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார் விநியோகஸ்தர் விஸ்வாஸ் சுந்தர்.

அவர் தாக்கல் செய்த மனுவில், “அம்பேத்கர் படத்தை ஆங்கிலத்தில் ஜபார் பட்டேல் என்பவர் இயக்கியுள்ளார். இதற்கு தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம், ஸ்பான்சர் செய்துள்ளது. 2000-ம் ஆண்டு இப்படம் வெளியானது. இப்படத்தின் தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களின் வினியோக உரிமை பெற, 2007-ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டேன். வரும் 2010, செப்டம்பர் மாதம் அந்த உரிமை முடிகிறது. தமிழ் மொழியில் அம்பேத்கர் படத்தை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளேன். இதுவரை நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்தப் படத்திற்காக 30 லட்சம் ரூபாய்வரை செலவு செய்துள்ளேன். பிரின்ட் செலவு, போஸ்டர், விளம்பரம் என, மேற்கொண்டு 90 லட்ச ரூபாய்வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. இந்தத் தொகையை அரசு வழங்கினால், படம் சுமுகமாக வெளியாகும். அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட, வாழ்க்கையை தியாகம் செய்த அம்பேத்கர் பற்றிய திரைப்படத்தை பொதுமக்கள் பார்க்க முடியும். ஏற்கனவே, தனியார் ஒருவர் தயாரித்த பெரியார் படத்துக்காக தமிழக அரசு நிதி உதவி வழங்கியுள்ளது. எனவே, தமிழில் அம்பேத்கர் படத்தை வெளியிட ஏதுவாக 90 லட்ச ரூபாய் நிதி உதவியை வழங்க தமிழக அரசு, புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட வேண்டும்.”  என்று குறிப்பிட்டிருந்தார்.

இம்மனு நீதிபதி வெங்கட்ராமன் முன் விசாரணைக்கு வந்தது. தமிழகம், மற்றும் புதுவை அரசுகள் இந்த அளவுக்குப் பணம் தர முடியாது என்று சொல்லிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

ஆனாலும் எவ்வளவு தைரியம் பாருங்க இவருக்கு..? டப்பிங் செலவுக்கே பத்து லட்சம் ரூபாயை ஆட்டைய போட்ட இவருக்கு மேலும் 90 லட்சம் கொடுத்தால் படத்தை ரிலீஸ் செய்வாராம்..? எப்படி..?

மொதல்ல இந்தப் படத்துக்கு டப்பிங் செலவே அதிகப்பட்சம் 5 லட்சம்தான் செலவாகியிருக்கும். இதில் நிறைய கதாபாத்திரங்களும், பல்வேறு மொழி பேசுபவர்களும் இருப்பதால்தான் இந்தச் செலவு. இல்லையெனில் 2 லட்சத்திலேயே முடித்துவிடலாம். 

இவர் எவ்வளவு தொகைக்கு திரைப்பட வளர்ச்சிக் கழகத்திடம் இருந்து வாங்கினார் என்றே தெரியவில்லை. இதில் இப்போதைக்கு படத்தை சுமூகமாக வெளியிடணும்னா 90 லட்சம் கொடுன்னு கிட்டத்தட்ட மிரட்டல் பாணியில்தான் கேட்டிருக்கிறார். 'சுமூகமா வெளியிடணும்'ன்னா என்ன அர்த்தம்னு இவர்கிட்ட மறுபடியும் விளக்கம் கேட்க வேண்டும். படத்தி்ன் வசூலே கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் 90 லட்சம் ரூபாயை கேட்டதே சுருட்டத்தான் என்பதை திரையுலகில் இருப்பவர்களே ஒத்துக் கொள்வார்கள். நல்லவேளை கொடுக்காதவரையிலும் சந்தோஷமே..!

அதே சமயத்தில் ஏற்கெனவே உயர்நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பை மதிக்காமல் விநியோகஸ்தர் படத்தினை வெளியிட தாமதப்படுத்துகிறார் என்று கூறி வழக்கறிஞர் சத்தியசந்திரன் நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்ததாக மீண்டும் முறையீடு செய்தார்.

இப்போது தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தினர் ஆஜராகி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்கள். “படத்தின் பிரதிகள் சிதைந்திருப்பதால், மூலப் பிரதியைப் பெற்று அதனைச் சரி செய்ய வேண்டியுள்ளது. இதற்குச் சற்று கால அவகாசம் வேண்டும்..” என்றார்கள்.

இதற்கு ஒத்துக் கொண்ட உயர்நீதிமன்றம் இறுதியாக வரும் டிசம்பர் 3-ம் தேதியன்று அப்படத்தினை எப்படியும் வெளியிட்டாக வேண்டும் என்று இறுதி உத்தரவினை வெளியிட்டார்கள்.

இந்த நேரத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் எடிட்டர் லெனின் அவர்களின் உதவியோடு தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து படத்தினை வெளியிட பெரும் முயற்சி எடுத்திருக்கிறார்கள்.

தமிழில் டப்பிங் செய்யப்பட்ட பிலிம் ரோல் பிரதிகளே 5-தான் உள்ளதாம்.  இப்போது பெரும்பாலான திரையரங்குகளில் கியூப் சிஸ்டம் கொண்டு வந்திருப்பதால் இதில் இருக்கும் டெக்னிக்கல் சிரமங்களையும் கவனிக்க வேண்டியிருப்பதாக திரைப்பட வளர்ச்சிக் கழகத்தினர் இப்போது புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இதன் பின்புதான் படத்தை வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் நடந்துள்ளன. ஆனாலும்  ஊர், ஊருக்குத் திரையரங்குகள் கிடைப்பதில்  நடைமுறைச் சிக்கல்கள் முளைத்திருக்கின்றன.

முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பாக அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல்வேறு ஊர்களில் இருக்கும் திரையரங்குகளில் இப்படத்தைத் திரையிட வேண்டி அணுகியிருக்கிறார்கள். 

“இப்ப இதையெல்லாம் யார் ஸார் பார்க்கப் போறா.. விடுங்க ஸார். தியேட்டர் வாடகைகூட கிடைக்காது..” என்று வெளிப்படையாகவே தியேட்டர் உரிமையாளர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

இன்னும் சில திரையரங்கு உரிமையாளர்கள் தங்களது திரையரங்கை லீஸுக்கு விட்டுவிட்டதாகச் சொல்லி ஒப்பந்ததாரர்களைக் கை காட்டியிருக்கிறார்கள். ஒப்பந்ததாரர்களோ மறுபடியும் ஓனர்களையே கை காட்டியிருக்கிறார்கள்.. இப்படி எந்தப் பக்கம் திரும்பினாலும் தியேட்டர்கள் கிடைக்காது என்ற பதிலே கிடைத்திருக்கிறது.

டிசம்பர் 3-ம் தேதிக்கு நாள் நெருங்கிவிட்டதால் சென்னையில் திரையரங்குகள் கிடைக்காமல் அல்லல்பட்டு கடைசியாக தற்போது சென்னை ஐநாக்ஸ் காம்ப்ளக்ஸில் ஒரு அரங்கில் மட்டும் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் திரைப்படத்தினை டிசம்பர் 3-ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு திரையிட ஏற்பாடு செய்துள்ளார்கள்.

தமிழகத்தில் 1800 திரையரங்கங்கள் நாள்தோறும் இயங்குகின்றன.  ஒரு வருடத்திற்கு சுமாராக 120 படங்கள் வெளியாகின்றன, 800 கோடிக்கும் குறையாமல் வர்த்தகமும் நடக்கிறது. ஆனாலும், இந்த இந்தியத் திருநாட்டின் விடுதலைக்கு வித்திட்ட, அரசியல் அமைப்பை உருவாக்கிக் கொடுத்தவரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை. இதென்ன கொடுமை..?

கடந்த சனிக்கிழமையன்று 4 பிரேம்ஸ் பிரிவியூ திரையரங்கில் பத்திரிகையாளர்களுக்காக அம்பேத்கர் திரைப்படம் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இத்திரைப்படத்தினை தமிழகத்து மக்களிடத்தில் எப்படி கொண்டு செல்வது என்பது பற்றி கடந்த வெள்ளிக்கிழமையன்று சென்னையில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம்.

இக்கூட்டத்திற்கு நானும் சென்றிருந்தேன். கூட்டத்தில் பேசிய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன், படத்தினை வெளியிட வேண்டி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தற்போது எடுத்து வரும் நடவடிக்கைகளை பட்டியலிட்டார். மேற்கொண்டும் என்ன செய்யலாம் என்பது பற்றிய ஆலோசனைகளை கூறுமாறு வந்திருந்தவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தில் எடிட்டர் லெனின்  பேசும்போது தான் திரைப்பட சங்கங்கள், பிரமுகர்கள் மத்தியில் இத்திரைப்படம் பற்றிய செய்திகளைக் கொண்டு செல்வதாகக் கூறினார். அடுத்த வாரம் முழுவதும் திரைப்படவுலகத்தில் இதனை பரப்புவதற்கு தான் ஏற்பாடு செய்வதாகக் கூறினார்.

பின்பு திரைப்பட இயக்குநர் மீரா கதிரவன், வழக்கறிஞர் சத்தியசந்திரன், நமது சக வலைப்பதிவர் கார்ட்டூனிஸ்ட் பாலா, மேலும் பல அம்பேத்கர் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் பேசினார்கள். ஆலோசனைகளையும் வழங்கினார்கள். தொலைக்காட்சி மூலமாக நாம் பரப்புரை செய்ய வேண்டும். இப்படியொரு திரைப்படம் வெளியாவதை நாம் மக்களிடத்தில் கொண்டு போக வேண்டும் என்றே பலரும் தெரிவித்தார்கள்.

ஒரு கட்டத்தில் மீண்டும் எழுந்து வந்து மைக்கை பிடித்த லெனில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். “ஒரு பிரதி 5 லட்சமோ, 6 லட்சமோ.. நாம கேட்டு வாங்கிருவோம். நானே என் சொந்தச் செலவுல வாங்கித் தரேன்.. ஊர், ஊருக்குக் கிடைக்கிற தியேட்டர்ல போடுவோம்.. வர்ற மக்கள்கிட்ட ஒரு ரூபா வாங்குவோம்.. அது போதும்.. தியேட்டர் கிடைக்கலைன்னா என்ன கல்யாண மண்டபம் கிடைத்தால்கூட போதும். அங்கேயே ஸ்கிரீனை கட்டி போட்டுக் காட்டுவோம்..” என்று கொந்தளித்தார்.

உண்மையாகவே லெனின் ஸாரின் இந்தச் செயலுக்கு நாம் மண்டி போட்டுத்தான் வணங்க வேண்டும். அப்படியே வணங்குகிறேன்..!

இக்கூட்ட இறுதியில் மாணவர்கள் மத்தியில் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை கொண்டு செல்லும் விதத்தில் இத்திரைப்படத்தினை தமிழகம் முழுவதும் அரசே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காகத் திரையிட வேண்டும் என்று கோரி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் எனக்குள் ஒரு கேள்வி எழுகிறது..!

காந்தி திரைப்படம் வெளிவந்தபோது அப்போது படித்துக் கொண்டிருந்த 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலுமான மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் கட்டாயமாக பார்க்க வைக்கப்பட்டது போல்  இந்த அம்பேத்கர் படத்தினை இப்போதைய மாணவர்கள் மத்தியில் கொண்டு போக இந்த மைனாரிட்டி தி.மு.க. அரசுக்கு ஏன் தோணவில்லை..?

வெறுமனே 10 லட்சம் ரூபாயை மட்டும் தந்துவிட்டு ஒதுங்கிவிட்டால் போதுமா..? பெரியார் படத்திற்கு மட்டும் 92 லட்சம் ரூபாயை தூக்கிக் கொடுத்து, படம் வெளியிடுவதற்கான அனைத்து வசதி, வாய்ப்புகளையும் செய்து கொடுத்த இந்த மைனாரிட்டி தி.மு.க. அரசு, அம்பேத்கரை மட்டும் திரும்பிப் பார்க்க மறுப்பது ஏன்..? அம்பேத்கர் என்ன பாவம் செய்தார்..? இத்தனைக்கும் அம்பேத்கரின் பிறந்த நாளைக்கு மாலை போட மட்டும் தாத்தா மறப்பதில்லை.

காந்தி திரைப்படத்தினை வெளியிட்டதுபோல இந்தத் திரைப்படத்தினையும் மொத்தமாக தமிழக அரசே வாங்கிக் கொண்டு தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யலாமே..?

ஊர், ஊருக்கு ஏதாவது ஒரு திரையரங்கை வாடகைக்கு எடுத்து அங்கே படத்தினை சலுகை விலையில் முழு வரிச்சலுகையுடன் வெளியிடலாமே..? மாணவர்களை அழைத்து வந்து காண்பிக்கலாமே..? தமிழக அரசுக்கு இந்த யோசனை ஏன் வரவில்லை..? அரசு ஒரு உத்தரவிட்டால் உடனேயே செய்துவிடலாமே..? ஏன் இந்த எண்ணம் இந்த மைனாரிட்டி அரசுக்கு உதிக்கவில்லை. பாபாசாகேப் அம்பேத்கர் மைனாரிட்டி மக்களின் தலைவனாகவும், தந்தையாகவும், காவலனாகவும் இருப்பதுதான் இந்த மைனாரிட்டி அரசுக்கு உறுத்தலாக இருக்கிறதோ என்னவோ?

இன்னும் வெளியாகாத ராடியாவின் டேப்பில் குடும்ப ரகசியங்கள் இன்னும் என்னென்ன புதைந்து கிடக்கிறதோ என்கிற குழப்பத்தில் தாத்தா இருக்கலாம். பிள்ளைகள் இருக்கலாம். இவர்களுடைய மதி கெட்ட மந்திரிகளும் இருக்கலாம்.. ஆனால் அம்பேத்கர் பெயரையும், புகைப்படத்தையும் வைத்துக் கொண்டு தமிழகத்தில் அரசியல் நடத்தி வரும் பெரிய இயக்கத்தினர்கள் என்ன செய்கிறார்கள் என்றும் எனக்குப் புரியவில்லை.

சென்னை, அண்ணா சாலையில் காலை 8 மணி முதல் மாலை 8 மணிவரையிலும் ஒரு ஓரமாக சேர் போட்டு உட்கார்ந்து போகும், வரும் டாடா சுமோ கார்களைப் பாருங்கள். அதன் முன், பின் பக்கக் கண்ணாடிகளில் எந்தத் தலைவரின் புகைப்படம் அதிகமாக ஒட்டப்பட்டிருக்கிறது என்று.. நிச்சயம் அம்பேத்கர்தான்.. ஆனால் அவரது வாழ்க்கை வரலாற்றை வெளியிடத்தான் அத்தனை அமைப்புகளுக்கும் அக்கறையில்லை..!

இப்போது இருக்கின்ற குறைவான நாள் இடைவெளியில் எப்படி இந்தப் படத்தைப் பற்றிய செய்தியை வெளியிட்டு கூட்டத்தைக் கூட்டி படத்தைப் பார்க்க வைப்பது.? இது நாம் மட்டுமே பார்க்கக் கூடியது அல்ல.. நிச்சயம் மாணவ சமுதாயத்தினர் அவசியம் பார்க்க வேண்டிய படம். அதற்கான முயற்சிகளைக்கூட இந்த அம்பேத்கர் படத்தை வைத்து புரட்சி அரசியல் பேசும் சில புண்ணாக்குகள் செய்ய முன் வரவில்லை என்பது வெட்கக்கேடானது..

சோனியாகாந்தி தன்னைத் தவறாக நினைத்துவிடப் போகிறார் என்பதற்காக டெல்லிக்கு அப்பாயிண்ட்மெண்ட் கேட்டுக் காத்திருந்த திருமாவளவனுக்கு இனி அம்பேத்கர் தேவையில்லை என்று நினைக்கிறேன்.. ஆளும் தரப்புடன் கூட்டணியில் இருப்பது தனக்கும், தன் கட்சிக்காரர்களுக்கு மட்டுமே என்று நினைத்துவிட்டார் போலும்..

அவர் நினைத்திருந்தால்கூட இதனைச் செய்திருக்கலாம். அரசுகளை கட்டாயப்படுத்தி, நிர்ப்பந்தப்படுத்தி பள்ளிக் கல்வித் துறையின் மூலமாக மாணவர்கள் மத்தியில் இத்திரைப்படத்தினை கொண்டு சென்றிருக்கலாம்.. ம்ஹூம்.. என்ன செய்வது..? நமக்கு வாய்த்த தலைவர்கள் சொந்தக் காரணங்களுக்காக அரசியல் செய்பவர்களாக வந்து தொலைத்திருப்பதால் நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்..!

டிசம்பர் 3-ம் தேதி சென்னையில் மட்டும்தான் அம்பேத்கர் திரைப்படம் வெளியிடப்படவுள்ளது. அது சமயம் அன்றைக்கு திருவிழா போல் கூட்டத்துடன் படப் பெட்டியை ஊர்வலமாகக் கொண்டு சென்று தாரை, தப்பட்டை முழங்க ஒடுக்கப்பட்ட மக்களின் தந்தையாகத் திகழும் அம்பேத்கருக்கு நன்றி செலுத்தவிருப்பதாக கூட்டத்திற்கு வந்திருந்த பலரும் தெரிவித்தார்கள்.

இதுவும் இத்திரைப்படத்தின் விளம்பரத்திற்கு பேருதவியாய் இருக்கும் என்று நினைக்கிறேன். நிச்சயம் தவறுமில்லை. யார், யாருடைய கட்அவுட்டுக்கோ பால் அபிஷேகம், பீர் அபிஷேகம் செய்யும் மூடத்தனமான ரசிகர்கள் மத்தியில் நாட்டுக்காக உழைத்த உத்தமர் ஒருவருக்கு இதுகூட செய்யவில்லையென்றால் எப்படி..?

நான் கொஞ்சம் அரசியல் ஆர்வலன்.. நிறைய சினிமா ஆர்வலன். உங்களுக்கே தெரியும். அந்த வகையில் ஒரு சினிமா ரசிகனாக மம்மூக்காவின் நடிப்பைக் காண ஆவலோடு காத்திருக்கிறேன். அம்பேத்கரின் அரசியல் வாழ்க்கை என்ன என்பதை அரசியல் ஆர்வலனாக அறிந்து கொள்ளவும் துடித்துக் கொண்டிருக்கிறேன்.

படம் மூன்று மணி நேரம் ஓடுகிறது என்கிறார்கள். இதனால் ஐநாக்ஸ் திரையரங்கில் திரையிடப்படும் நேரம் தெரியவில்லை. இது பற்றி இணையத்தள வசதியுள்ளவர்கள் அன்றைக்கு இணையத்தில் பார்த்து தெரிந்து கொள்ளவும்..

நமது வலையுலகப் பதிவர்கள் அத்தனை பேரும் தயவு செய்து  இத்திரைப்படத்தினை கண்டுகளித்து இது பற்றிய விமர்சனங்களையும், செய்திகளையும் வெளியிட்டு இந்த நாட்டுக்கும், அரசியல் சட்ட மாமேதையான நமது அம்பேத்கருக்கும் நம்மால் நம் வாழ்க்கையில் முடிந்த ஒரேயொரு உதவியாக இதைச் செய்ய வேண்டுமாய் அன்போடு வேண்டிக் கொள்கிறேன்..!

இப்படத்தினை வெளியிட காரணமாகவும், ஊக்கமாகவும் இப்போதும் இருந்து வரும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும், வே.மதிமாறன் தலைமையிலான இயக்கத்தினருக்கும், பெரியார் திராவிடர் கழகத்தினருக்கும், ம.க.இ.கழகத்தினருக்கும், தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கும், வழக்கறிஞர் சத்தியசந்திரனுக்கும், எடிட்டர் லெனினுக்கும், இன்ன பிற பெயர் தெரியாத அம்பேத்கர் இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நன்றி..!

படத்தில் நடித்துள்ளவர்கள் :

Mammootty - Dr. Babasaheb Ambedkar

Sonali Kulkarni  - Ramabai Ambedkar

Mohan Gokhale - Mahatma Gandhi

Mrinal Kulkarni  - Dr. Kabir

Ma Jivan Mary - Rosa Epstein

Tirlok Malik - Lala Lajpatrai

Alisa Bosschaert

Govind Namdeo

Anjaan Srivastav

Rahul Solapurkar

Stacie Kellie  - Patron

Crew Members

Director : Jabbar Patel

Producer : Madan Ratnaparkhi

Written by : Daya Pawar, Arun Sadhu , Sooni Taraporevala

CINEMATOGRAPHER : Ashok Mehta

MUSIC_DIRECTOR : Amar Haldipur

Film Editing by : Vijay Khochikar

Set Decoration by : Sophie Newman

Art Direction by : Nitin Desai

Makeup Department : Vikram Gailkwad

Costume Design by : Bhanu Athaiya

Sound Department : Pramod Purandare

Other crew : Shyam Benegal , Dr. Y.D. Phadke

படத்தின் டிரெய்லர்