சென்னையில் அடுத்த மாதம் உலகத் திரைப்பட விழா..!

06-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வருடாவருடம் சென்னைவாழ் திரைப்பட ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலகத் திரைப்பட விழாவுக்கான அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது.


கடந்த ஏழாண்டுகளாக இந்தத் திரைப்பட விழாவை நடத்தி வரும் சென்னையைச் சேர்ந்த International Cine Appreciation Forum அமைப்பு 8-வது ஆண்டாக இந்த முறையும் தொடர்ந்து இந்தத் திரைப்பட விழாவை நடத்துகிறது.

வரும் டிசம்பர் 15-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 9 நாட்கள் இந்த விழா நடைபெற இருக்கிறது. இதில், 43 நாடுகளை சேர்ந்த 130 படங்கள் திரையிடப்படுகின்றன. இதில், 14 தமிழ்ப் படங்களும் அடங்கும்.


முதல் படமாக அர்ஜென்டினாவில் தயாரான `பசில்` என்ற படம் திரையிடப்படுகிறதாம். இந்தாண்டும், சென்ற ஆண்டும் கேன்ஸ், பெர்லின், வெனீஸ் ஆகிய சர்வதேச பட விழாக்களில் பங்கேற்ற சில படங்கள் இந்தப் பட விழாவில் திரையிடப்பட உள்ளதாகத் தெரிகிறது.

உட்லண்ட்ஸ், உட்லண்ட்ஸ் சிம்பொனி, ஐநாக்ஸ், பிலிம் சேம்பர் ஆகிய தியேட்டர்களில், படங்கள் திரையிடப்பட உள்ளன.

இந்த அமைப்பில் துணைத் தலைவராக இருப்பவர் நடிகர் எஸ்.வி.சேகர். சென்ற ஆண்டு அதிமுகவுடன் உரசலில் இருந்ததால் தி.மு.க.வுடன் மிக நெருக்கத்தில் இருந்தார் சேகர். அதனால் துவக்க விழாவுக்கு மு.க.ஸ்டாலினை அழைத்து வந்ததில் சேகருக்கு பெரும் பங்கு இருந்தது. ஆனால் சென்ற ஆண்டு இந்த நிகழ்வை நடத்துவதற்கு 50 லட்சம் ரூபாய் நிதியுதவி கேட்டிருந்தார்கள். அந்தப் பணம் ஏனோ அப்போது கிடைக்கவில்லை.

தற்போது எஸ்.வி.சேகருக்கும், தி.மு.க. தலைமைக்கும் டெர்ம்ஸ் சரியில்லாத சூழல் இருப்பதால் எஸ்.வி.சேகர் ஒதுங்கிக் கொள்ள பி.வாசுவையும், குஷ்புவையும் துணைக்கு அழைத்துப் போய் முதல்வரிடம் சென்று 50 லட்சம் ரூபாய் வழங்கும்படி கோரி்க்கை வைத்தார்கள்.

எஸ்.வி.சேகர் வராததாலோ என்னவோ கலைஞர் இந்த முறை மனமிரங்கி 25 லட்சம் ரூபாயை அள்ளிக் கொடுத்துள்ளார். பாவம் எஸ்.வி.சேகர்.. தனக்கு மரியாதை இவ்ளோதானா என்று இப்போது நினைத்துப் பார்த்து குமுறியிருப்பார் என்று நினைக்கிறேன்.

போதாக்குறைக்கு சென்ற ஆண்டு நடந்த திரைப்பட விழாவில் அவருடைய மகன் ஹீரோவாக நடித்த வேகம் படத்தை தமிழ்ப் படங்கள் பிரிவில் திரையிட்டு பலரது சாபத்தையும் வாங்கிக் கட்டிக் கொண்டார்.

இந்தாண்டும் 14 தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. எந்தெந்த படங்களை அரசியல் காரணங்களுக்காகத் திரையிட்டு நம் வயித்தெரிச்சலைக் கொட்டிக் கொள்ளப்  போகிறார்களோ தெரியவில்லை. கண்டிப்பாக “பெண் சிங்கம்” இடம் பெறும் என்றே நினைக்கிறேன். இது ஒன்றே போதும் எனக்கு..! எப்படியெல்லாம் திட்டியெழுதுவது என்று பதிவர்கள் ஐடியா கொடுத்தால் எனக்குப் பெரும் உதவியாக இருக்கும்..!!!

தனியார் அமைப்பு நடத்தும் இந்த விழாவுக்கு தமிழக அரசு மக்கள் பணத்தில் இருந்து 25 லட்சம் ரூபாயைத் தூக்கிக் கொடுத்திருக்கின்ற காரணத்தால் நுழைவுக் கட்டணத்தைக் குறைப்பார்களா? நீக்குவார்களா? என்றெல்லாம் நீங்கள் கேள்வி கேட்கக் கூடாது.. அப்படியெல்லாம் செய்தால் அது அவர்களது தொழிலை பாதிக்கும்.. இந்தாண்டும் நுழைவுக் கட்டணம் 500 ரூபாய் நிச்சயம் உண்டு.

இந்தாண்டு புதிய விஷயமாக திரையுலக பிரமுகர்களுக்காக மட்டும், ஐநாக்ஸ் தியேட்டரில் தினமும் இரவு 9 மணிக்கு உலக அளவில் பேசப்பட்ட 7 படங்கள் திரையிடப்படுகின்றனவாம்.

சென்ற ஆண்டு இத்திரைப்பட விழாவில் துணை இயக்குநர்களுக்கு பாஸ் கொடுத்த விவகாரத்தில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கமும், பெப்ஸியும் கடுமையான அதிருப்தியில் இருந்தன. அதனால் இந்த முறை மிகவும் கவனமாக ஏற்பாடுகளைச் செய்து அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் விழா அமைப்பாளர்கள்.

பட விழாவை சிறப்பாக நடத்துவதற்காக, தமிழ் பட உலகை சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களை கொண்ட ஆலோசனை குழுவை  முதல் முறையாக அமைத்திருக்கிறார்கள்.


இந்த ஆலோசனை குழுவில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், டைரக்டர் பி.வாசு, நடிகைகள் ராதிகா சரத்குமார், சுஹாசினி, ரேவதி, ரோகிணி, குஷ்பு, பிலிம் சேம்பர் தலைவர் கல்யாண், இந்திய திரைப்பட சம்மேளன தலைவர் எல்.சுரேஷ், எடிட்டர் லெனின், பி.கண்ணன், ரவி கொட்டாரக்கரா, காட்ரகட்ட பிரசாத், நடிகர்கள் யூகிசேது, மோகன், டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


இதனால் இந்தாண்டு விழாவில் துணை இயக்குநர்களுக்கு நுழைவுக் கட்டணத்தில் சலுகை இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

நிறைவு விழாவில், 2 சிறந்த படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல் பரிசு பெறும் படத்துக்கு ரூ.2 லட்சமும், இரண்டாவது பரிசு பெறும் படத்துக்கு ரூ.1-1/2 லட்சமும் வழங்கப்பட இருக்கிறதாம்.

பத்து நாட்கள் தொடர்ந்து நடக்கும் இந்த விழாவில் அனைத்துப் படங்களையும் பார்த்து மனதில் ஏற்றிக் கொண்டோ அல்லது தினம்தோறும் அவைகளைப் பற்றிப் பதிவு போட்டுக் கொண்டோ டென்ஷனில் பைத்தியம்போல் அலைய வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன்..!

நிஜமாகவே பைத்தியம் பிடித்துவிடாமல் இருக்க, எல்லாம்வல்ல என் அப்பன் முருகனை இப்பொழுதே வேண்டிக் கொள்கிறேன்..!

18 comments:

Indian Share Market said...

தங்களின் இந்த முயற்சி வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்

எஸ்.கே said...

நல்ல படியாக விழாக் கட்டுரைகளை எழுதி முடிக்க கடவுள் அருள்புரிவார்!

எஸ்.கே said...

வழக்கம்போல் இந்த பதிவும் மிகச் சிறப்பாக உள்ளது!

ஜோதிஜி said...

நடிகர் மோகனின் தற்போதைய நிலைமை என்ன அண்ணே?

மதுரை சரவணன் said...

நல்லபடியாக எழுத வாழ்த்துக்கள்.. தங்களின் உழைப்புக்கு வாழ்த்துக்கள்.

உண்மைத்தமிழன் said...

[[[Indian Share Market said...
தங்களின் இந்த முயற்சி வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்.]]]

ஆஹா.. என்னை எழுத வைத்தே தீருவதென்று முடிவு செய்து விட்டீர்களா..? நல்லது.. நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[எஸ்.கே said...
நல்லபடியாக விழாக் கட்டுரைகளை எழுதி முடிக்க கடவுள் அருள் புரிவார்!]]]

நிச்சயமாக ஸார்..! முருகன் அருள் இல்லாவிடில் எதுவுமில்லையே..?

உண்மைத்தமிழன் said...

[[[எஸ்.கே said...
வழக்கம்போல் இந்த பதிவும் மிகச் சிறப்பாக உள்ளது!]]]

நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி said...
நடிகர் மோகனின் தற்போதைய நிலைமை என்ன அண்ணே?]]]

நிம்மதியா இருக்காருண்ணே..! சில சீரியல்கள் எடுத்தார். கொஞ்சம் நஷ்டமானவுடன் அதனை நிறுத்திவிட்டார். ஒரேயொரு படம் எடுத்தார். அதுவும் நஷ்டம். அத்தோடு அமைதியாக இருப்பதாகக் கேள்வி..!

உண்மைத்தமிழன் said...

[[[மதுரை சரவணன் said...
நல்லபடியாக எழுத வாழ்த்துக்கள்.. தங்களின் உழைப்புக்கு வாழ்த்துக்கள்.]]]

நன்றி ஸார்..!

Unmaivirumpi said...

சினிமாவுக்கே தாங்களை அற்பணித்துவிட்டீர்கள் போல, கண்டிப்பா உங்களைக்கும் காக்கும் அப்பன் 130 படங்களையும் பார்த்து பதிவு போட உதவி புரிவான் , வாழ்த்துக்கள்

எஸ்.கருணா said...

nalla muyarchi..vaazthhukkal..

butterfly Surya said...

இந்த மாத கடைசியில் கோவா உலக திரைப்படவிழா.. அங்க இந்த மாதிரி பாலிடிக்ஸ் கிடையாது..

உண்மைத்தமிழன் said...

[[[Unmaivirumpi said...
சினிமாவுக்கே தாங்களை அற்பணித்துவிட்டீர்கள் போல, கண்டிப்பா உங்களைக்கும் காக்கும் அப்பன் 130 படங்களையும் பார்த்து பதிவு போட உதவி புரிவான். வாழ்த்துக்கள்.]]]

உங்க ஆசீர்வாதம்ண்ணே..! செஞ்சிருவோம்..!

உண்மைத்தமிழன் said...

[[[எஸ்.கருணா said...
nalla muyarchi. vaazthhukkal..]]]

நன்றி.. நன்றி.. நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[butterfly Surya said...
இந்த மாத கடைசியில் கோவா உலக திரைப்படவிழா.. அங்க இந்த மாதிரி பாலிடிக்ஸ் கிடையாது..]]]

அது ஏற்கனவே உலக லெவலுக்குப் போயிருச்சுங்கண்ணா. அதுனால அதுல இருக்க முடியாது..!

R.Gopi said...

தலைவா....

பெண் சிங்கம் படம் திரையிடுவார்கள் என்று சொல்லும் போதே, வயிற்றில் புளி கரைக்கிறது....

உண்மைத்தமிழன் said...

[[[R.Gopi said...
தலைவா பெண் சிங்கம் படம் திரையிடுவார்கள் என்று சொல்லும்போதே, வயிற்றில் புளி கரைக்கிறது.]]]

அங்கே மாத்திரையும் தருவார்கள் என்று நினைக்கிறேன்..!